தம்மைப் பற்றி அநேகமானவர்களுக்கு ஒரு சுயவிமர்சனம் இருக்கும், இருந்தாகவேண்டும். அதனைச் சுய பிரக்ஞைக்குக் கொண்டு வருபவர்கள் தெளிவான கருத்துக்களால் தாம் சார்ந்த சமூகத்துக்குக் தன்னிலைக் கருத்துக்களையும் புரிதலையும் கூறவருகின்றனர். அதே நேரம் சுயவிமர்சனமும் சுய பிரக்ஞையும் இல்லாதவர்கள் மூன்றாந்தர மனிதர்களாகவே வாழ்நாள் முழுவதிலும் வாழ்கின்றனர். இந்த மூன்றாந்தரத்தில் செல்வந்தர்கள், கற்றவர்கள், அதிகாரமுள்ளவர்கள் என்று பலரும் அடங்குகின்றனர். “பால், பாலியல், காமம், காதல், பெண், பெண்ணியம்” என்ற மீராபாரதியின் கட்டுரை நூல் மேற்சொன்ன இரண்டு பகுதியாலும் ஆனது. தன்னை அவ்விரண்டாலும் பாதிக்கப்பட்டவராகவும், தான் சந்தித்த அநேகரை அதற்குள் வராதவர்களாகவும் பிரஸ்தாபிக்கின்றது.

தமிழ்ச்சமூகத்தின் பற்றாக்குறையான அல்லது சீர்திருத்தப்படாத அடிப்படைவாத பண்பாட்டு விடயங்கள் பெண்களின் சுதந்திரத்தைப் பறித்து ஆணாதிக்க நிலைக்குள் வைத்திருப்பதையே இந்நூல் அநேக இடங்களில் பேசுகிறது. இன்றைய தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு பட்ட பிரச்சனைகளை குறுக்குவெட்டாக ஆராய்கிறது அல்லது அபிப்பிராயப்படுத்துகிறது என்றும் சொல்லலாம். பல இடங்களில் அவை மேலைத்தேய நிலைப்பாடுகளுடனும் ஒப்பிட்டுச் செல்கின்றது.

மொத்தமாக 32 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூலில் முன்வந்த பல விடயங்கள் பின்னும் எடுத்தாளப்பட்டுள்ளன. வேறு வேறு காலப்பகுதிகளில் எழுதப்பட்டவை என்பதனால் அவற்றினை நூலாசிரியரால் தவிர்க்கமுடியாது போயுள்ளது. என்னைப் பொறுத்த வரையில் இந்நூலைத் தமிழ்ச் சமூகம் மாத்திரமின்றி இலங்கைச் சமூகமும் வாசித்தாகவேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. காமம், சமபாலுறவு, பெண்ணியம் பற்றிய சுயவிளக்கங்கள் இல்லாமலே சமகாலத்தில் வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றது. இந்த வன்முறைகளின் ஒட்டுமொத்தமான பார்வை என்பது இயலாதவர்களை, அதாவது சமூக மன ரீதியில் தம்மைவிடப் பலம் குறைந்தவர்கள் என்று நினைப்பவர்கள் மீது செய்யப்படும் வன்முறைகள் பற்றிய சுயதெளிவாக இதனைக் கருதலாம்.

அநேக இடங்களில் இந்நூலின் மொழிநடை கத்துக்குட்டித்தனமாக இருக்கிறது. குறிப்பாக இன்னொருவரின் கருத்துக்களைச் சுட்டிக்காட்ட முனையும்போது கட்டுரைக்கான அடிப்படை சீர்குலைவதை அவதானிக்க முடிகிறது. அவற்றுள் இடப்படுகிற விடய முன்மொழிவுகளுக்காக இந்நூலைப் புறக்கணித்துவிட முடியாது.

இந்நூலில் பேசப்பட்ட இன்னொரு முக்கியமான விடயம் பெண் போராளிகள் பற்றிய விடயங்கள். அவர்கள் சமூகத்தில் எவ்வாறு விடுதலைப்புலிகள் இருந்தபோது கவனிக்கப்பட்டார்கள். இன்று எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற சமூகப் பார்வை மிக முக்கியமாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரக்ஞை பேரழிவுகளைச் சந்தித்த தமிழ்ச் சமூகத்துக்குக் கிடைக்கவில்லை. வரட்டுக் கௌரவங்களுக்காக தமது சுயலாப நோக்கை மீளவும் கட்டியெழுப்புகிறார்கள். கண்ணெதிரே கஸ்ரப்படும், பாலியல் வசைகளுக்கு உள்ளாகும் போராளிப் பெண்கள் பற்றிய கருத்துக்களைத் தார்மீக தோக்குடன் சமூகத்தின் மீது மீராபாரதி முன்வைத்துள்ளார். அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பெண் போராளிகளின் உடல் அரசியல் (Body Politics) பேசப்படுகிறது. உலகத்திலேயே கேவலமான இரண்டு எண்ணங்கள் உண்டு,

01 கீழ்ச்சாதியைச் சார்ந்தவர்கள் மேல் மட்டுத்துக்கு வருவதை விரும்பாத மனம்.

02 உடலை மலினப்படுத்தும் நோக்கு.

இந்த இரண்டுமே நமது தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் துரதிஷ்டவசமான ஒன்று. இதில் முதல் குறிப்பிட்டது நமது சமூக பண்பாட்டு அடிப்படைவாதங்களால் உந்தப்பட்ட ஒரு காரணி. இரண்டாவதாகச் சொல்லப்பட்டது தமிழ் அரசியலை மையப்படுத்திச் சிதைக்கப்பட்டதும் அவள் “பெண்” என்று பொதுப்புத்தியில் நின்று அலங்கோலமாக்கப்பட்டதுமாகும். இதனைக் “காமம்” என்ற வஸ்துவுடன் வரலாற்று நோக்கில் புடம் போட்டுள்ளது கட்டுரை. இவை இன்றைய இலங்கைச் சமூகம் அறிந்து கொள்ளவேண்டிய சின்னத்தனங்களாகவே பார்க்கமுடிகிறது.

“பால்” என்பதன் இயல் பாலியலாகவும், “பெண்” பற்றிய இயம் பெண்ணியமாகவும் அறியப்படுகிறது. இங்கு நூலாசிரியர் “காமம் என்பதிலிருந்து தோன்றியதுதான் காதல்” என்ற வழக்கமான சமூக பிரக்ஞையை உடைக்க முனைகிறார். கிட்டத்தட்ட அவர் சொல்வதுதான் உண்மை. இதனை நமது நவீன இலக்கியப்பக்கம் போய்ப் பார்த்தால் இது புலப்படும். காமம் ஒருவனுக்குள் கிளர்ந்த பின்புதான் அது காதலாக நாகரிக வெளிப்பாடாக அறியப்படுகிறது. “குறத்தி முடுக்கு” என்ற நாவலில் ஜி.ராகராஜனின் கதை சொல்லி இவ்வாறு சொல்கிறார்,

‘திருமணம் ஒரு விசித்திரமான விசயம். திருமணம்தான் தங்கள் காதலின் குறிக்கோள் என்று சொல்லாத காதலர்கள் இல்லை. “நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறோம்; அதுவே போதும். இதற்கு மேலாகக் கல்யாணம் என்று ஒன்று வேண்டாம்,” என்று சொன்ன காதலர்கள் இல்லை. உண்மைதான், கள்ளக் காதலர்கள் உள்ளனர். அவர்கள் கல்யாணத்தைப் பற்றி நினைப்பதில்லை. காரணம் அசாத்தியமாகி விட்டதாலே. (ஒருவேளை கல்யாணம் சாத்தியமாக இருந்தால் அவர்கள் ஒருவரையொருவர் காதலிப்பார்களோ என்னவோ!) எப்படியிருந்தாலும் திருமணத்தின் மூலம்தான் தங்கள் காதலை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். நிலைபெற்று வைத்திருக்கமுடியும் என்பதுதான் காதலர்களின் பல்லவி. காரணம், பொறாமை இல்லாத காதல் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. திருமணம் ஒருத்தியை அவளை நேசிக்கும் ஒருவனுக்காக மற்றவரிடமிருந்து பாதுகாக்கின்றது. இப்பாதுகாப்பை எல்லாப் பெண்களும் விரும்புகின்றனர். எல்லா ஆண்களும் விரும்புகின்றனர்….,

சமுதாயம் தன்னுடைய நலனுக்காகவே தனிமனிதன் மீது சுமத்தும் கட்டுப்பாடுகளில் திருமணமும் ஒன்று. இதைக் காதலில் தோன்றச் செய்து, காதலில் நிலை பெற்றிருப்பதாக ஆக்கும் அளவுக்கு மனிதன் ஒரு கட்டுப்பாட்டினை தன்னுடைய சுதந்திரமான ஒரு இச்சையின் மறுபுறமாக மாற்றமுடியும்.’

இதுவும் ஒருபக்க உண்மைதான். காமம் என்பதன் இயல்தான் காதல். அதனைப் பல புனைவுகளில் நம் நவீனஇலக்கியங்களும் பண்டைஇலக்கியங்களும் எமக்கு அடையாளம் காட்டியுள்ளன. அவற்றை மனவுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தே வாசிக்க முடிந்தது. ஆனால் இந்நூலின் அநேக இடங்கள் அறிவுபூர்வமாக ஆராய்கிறது. தனியே காதல் காமம் என்றில்லாமல் பெண்கள் பற்றிய சுயபுரிதலும் விளக்கமும் வந்தடைகிறது.

இலக்கியம், யுத்தம், திருமணம், உறவுமுறைகள், பயண அனுபவங்கள், சுய அனுபவங்கள் என்று பல விடயங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அகப்புற விமர்சனங்கள் பெண்கள் மீதான ஆண்களின் பார்வையையும், காதல் பற்றிய முற்றொருமையையும் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் ஆண்நிலை நோக்கு என்பதனால் இலங்கைச் சமூகத்தின் இருபாலாரும் வாசித்துத் தமது சுயபுரிதலை நிகழ்த்த வேண்டிய ஒரு நூலாக அமைகிறது. பொதுவெளியில் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய பல தளங்களை இக்கட்டுரைகள் நமக்களித்துள்ளது. வருங்காலங்களில் இதன்மீதான கவனக்குவிப்பைக் கொணர்ந்து சமூக நம்பிக்கைகளின் பின்னணியையும் பெண் என்ற தொன்மத்தையும் பற்றிய புரிதல் நிகழ்த்த வேண்டியது நமது கடமையாகும்.

சுயாந்தன் -இலங்கை

நன்றி – நடு


கோமகன்
சுயாந்தன்