Posted by: மீராபாரதி | April 23, 2012

ஐயரின் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – விமர்சனக் கருத்துக்கள் மீதான சில குறிப்புகள்! – பகுதி 2

விமர்சனக் கருத்துக்கள் மீதான சில குறிப்புகள்! – பகுதி 2

தத்துவம்… கோட்பாடு… திட்டமிடுதல்… செயற்பாடு……

ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக நூல்களாக வெளிவந்தவையும் மற்றும் இணையங்களில் வெளிவந்த அல்லது வந்துகொண்டிருக்கின்ற பல்வேறுவகையான படைப்புகளில் சில இக் கட்டுரையின் முதலாவது பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறன படைப்புகள் பற்றி ஆய்வுகள் விமர்சனங்கள் வெறுமனே தாம் சார்ந்த அரசியல் மற்றும் இயக்கங்களின் போக்குகளையும் அதன் தலைமைகளையும் நியாயப்படுத்துவதற்கு ஒரு புறம் பயன்படுத்தப்படுகின்றன. மறுபுறம் தமக்கு எதிரான அரசியல், இயக்கங்கள் மற்றும் தலைமைகளை குற்றம் சாட்டி அவர்களுக்கு பாசிச, பயங்கரவாத, துரோகப் பட்டங்கள் அளிப்பதற்கான ஆதாரங்களாகவுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறுதான் ஐயரின் நூல் தொடர்பாக வெளிவருகின்ற பெரும்பாலான பார்வைகள் அல்லது விமர்சனங்கள் இருக்கின்றன என்பது துரதிர்ஸ்டமானது. தமது தேவைக்கு ஏற்ப நியாயப்படுத்தல்களை செய்வதற்கும் குற்றங்களை சுமத்துவதற்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் சார்ந்த நிலைப்பாடுகளிலிருந்து தமக்கான தரவுகள், ஆதராங்கள் இவ்வாறான படைப்புகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இவ்வாறன நியாயப்படுத்தல்களும் குற்றச்சாட்டுக்களும் நமக்குள் ஆழந்த புரிதலைத் தருவதற்குப் பதிலாக மேலும் பிரிவினையையே தோற்றுவிக்கும்.   இதற்கு மாறாக முதற் பகுதியில் (ரகுமான் ஜான்) குறிப்பிட்டபடி, இவ்வாறான படைப்புகளை மூலப் பொருட்களாக் கொண்டு, தனி மனிதர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் சமூகத்தையும் அதன் இயக்கத்தையும் பன்முகபார்வைகளுக்குடாக ஆழமாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்பதே இன்றைய முக்கியமான அவசியமான தேவையாகும். இதுவே நமது அக்கறையாகவும் இருக்கவேண்டும். இது நம்மையும் நமது செயற்பாடுகளையும் சுய விமர்சனத்துடன் பார்ப்பதற்கும் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான திட்டமிடுதல்களை முன்வைப்பதற்கும் பங்களிக்கலாம். இந்தடிப்படையில் இவ்வாறு முன்வைக்கப்பட்ட சில விமர்சனங்களை பார்ப்போம்.

ஆய்வாளர்கள் தாம் சார்ந்த பக்கத்தின் பிரச்சாரக்காரர்களாக மாறாமல் அடக்கப்பட்ட மக்களின் நலன்களின் அடிப்படையிலிருந்து தமது கருத்துக்களை முன்வைப்பதே நேர்மறையான பார்வையாக இருக்கும். இன்னுமொருபடி மேல் சென்று, மக்களுக்கும் வெளியில் சென்று அதாவது புற நிலையிருந்து பார்க்கின்றபோது மேலும் பல விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.  ஆனால் நமது ஆய்வாளர்கள் அவ்வாறு செய்வதில்லை என்பதற்கு ஐயரின் ஈழப்போராட்டம் தொடர்பான எனது பதிவுகள் என்ற நூலுக்கு வெளிவந்த சில குறிப்புகளும் விமர்சனங்களும் ஆதாரங்களாக இருக்கின்றன.

இங்கு சசீவனின் குறிப்புகளையும் அருண்மொழிவர்மனின் ஆய்வுகளையுமே கவனத்தில் எடுக்கின்றேன். இவர்கள் இருவரின் மீதும் அவர்களது பல ஆக்கங்கள் மீதும் மதிப்பு இருக்கின்றது. இவர்களின் கருத்துக்களுடன் உடன்பாடும் முரண்பாடுகளும் இருக்கின்றன. குறிப்பாக இவர்களுடனான முரண்பாடுகள் பகை முரண்பாடுகளல்ல. மாறாக நட்பு முரண்பாடுகள் என்பதை இருவரும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றேன். குறிப்பாக தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் அடக்கப்பட்டிருக்கும் இன்றைய சுழலில் நமது முரண்பாடுகளை குறித்துக் கொண்டும் உடன்படுபவனவற்றில் ஒன்றுபட்டு செயற்படுவதுதான் பயன்மிக்கதும் பலமானதுமாகும். இவ்வாறன ஆரோக்கியமான பார்வையும் செயற்பாடுகளும் நம் மத்தியில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. விமர்சனம் ஒன்று முன்வைக்கப்பட்டவுடன் எதிரியாக பார்க்கும் மனநிலையும் அல்லது தனக்கு எதிரான முகாமைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தப்படுவதுமே பொதுவாகக் காணப்படுகின்றது. இவ்வாறன பண்புகளின் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும். அப்பொழுதுதான் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு சிந்திக்கின்றவர்கள் செயறபடுகின்ற சிறுமான்மையான நமக்கிடையில் நம்பகத்தன்மையும் புரிந்துணர்வும் உருவாகும். இதனடிப்படைகளிலையே நாம் உடன்படுகின்ற விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான சாதியப்பாடுகள் உருவாகும்.

முதலாவது, பிரபாகரனின் பல செயற்பாடுகள் அவரது நேர்மையையும் தனது நோக்கத்திலிருக்கின்ற உறுதியையும் வெளிப்படுத்துகின்றன என்றால் மிகையல்ல. ஆனால் பிரபாகரன் புலிகளின் தலைமைத்துவத்தை உமாவிடம் கொடுப்பதற்கு சிபார்சு செய்கின்ற செயற்பாட்டை ஆதாரமாகக் கொண்டு அவர் தலமைத்துவத்தின் மீது விருப்பு இல்லாதவர் என நிறுபிக்க முயற்சிக்கின்றன இவர்களது பதிவுகள். இவ்வாறன நிகழ்வுகள் தொடர்பான மேற்குறிப்பிட்டவாறான மேலோட்டமான பார்வை பயனற்றது. மாறாக இவ்வாறான விடயங்கள் விரிவான பன்முக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டும். இதற்கு, இவ்வாறான நூல்களை சமூக, மானுடவியல், பெண்ணியம் மற்றும் உளவியல் அடிப்படைகளில் ஆய்வுகளுக்கு உட்படுத்தும் பொழுது இவ்வாறான செயற்பாடுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் அடிப்படையாக இருக்கின்ற  காரணங்கள் பலவற்றை அறியலாம்.

உதாரணமாக மேற்பகுறிப்பிட்ட நிகழ்வுகளை, தமிழ் சமூகத்தில் கற்றவர்களுக்கும் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும் இருக்கின்ற மதிப்பின் பாதிப்பு எவ்வாறு சாதாரண இளம் தமிழ் இளைஞன் ஒருவரிடம் வெளிப்படுகின்றது என்பதாக காணலாம். அல்லது இவற்றின் மீதான மயக்கமாகவும் இதனை நாம் பார்க்கலாம். இவ்வாறான ஒரு எண்ணம்தான் இந்த நூலை முதன்முறையாக (இணைய வாசிப்பை தவிர்த்து) வாசித்தபோது எனக்குள் உருவானது. ஆனால் இரண்டாவது முறையாக மீண்டும் வாசித்தபோது இயக்கத்தின் தலமைத்துவத்தை செட்டியிடம் ஒப்படைப்பதற்கும் பிரபாகரன் தயாராக இருந்தமையை (ஐயர் 16) அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறன முடிவுக்கு பிரபாகரன் முன்வருவதற்கு, தமிழ் சமூகத்திலிருக்கின்ற முத்தவர்கள் (பெரியவர்கள்) மீதான மரியாதையும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது சாகாச செயற்பாடுகள் செய்பவர்கள் மீதான ஒருவரின் ஈர்ப்பாகவும் பார்க்காலாம். இவ்வாறன ஈர்ப்புகள் வெறுமனே சுயநலம் சார்ந்ததாகப் பார்க்கப்பட வேண்டியதில்லை. மாறாக, இவை தமிழ் தேசிய விடுதலை நோக்கியதாக இருந்தது என்பதே பிரபாகரனின் பக்கம் இருக்கின்ற நேர்மறைத் தன்மையாகும். இவ்வாறு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் இவ்வாறான சாகசங்களில் ஈர்க்கப்பட்டு பல உயர்ந்த அர்ப்பணிப்புகளை செய்த பல போராளிகள் இருந்தனர் என்பதை நிலாந்தன் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.

தனிமனிதர்களின் மேற்குறிப்பிட்டவாறான முடிவுகள் தத்துவம் கோட்பாடு மற்றும் அரசியல் என்பவற்றின் அடிப்படையிலானவையல்ல. மாறாக சமூகத்தின் பொதுப்புத்தி மட்டத்திலிருந்து பிரக்ஞையின்மையாக வெளிப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட முடிவுகள் என்றே பார்க்கலாம். ஆகவேதான் நமது விடுதலைப் போராட்டம் கூட அரசியலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தைவிட சாகாச செயற்பாடுகளுக்கு அளித்த முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. அனைத்து இயக்கங்களும் தமக்குள் பலரை உள்வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட பல தரம் குறைந்த முறைகளில் இதுவும் ஒன்றாக இருந்துள்ளது. ஆகவே இவை தொடர்பான விமர்சனப் பார்வைகளும் பன்முகப் பார்வைகளும் அவசியமாகின்றன. இந்தடிப்படையிலான ஒரு அறிதலும் புரிதலுமே எதிர்கால தலைமுறை தமது போராட்டத்தை ஆரோக்கியமான வழிகளில் முன்னெடுப்பதற்கு வழிகாட்டியாக இருக்கும் என்றால் மிகையல்ல.

பிரபாகரன் மீதான விமர்சனப் பார்வையானது, அவரை நியாயப்படுத்துவதையோ அல்லது குற்றவாளியாக்குவதையோ நோக்கமாகக் கொண்டு முன்வைப்பது, நமது புரிதலை மட்டுப்படுத்தவே வழிவகுக்கும். இதேபோல் தாம் சார்ந்த இயக்கங்களையும் தலைவர்களையும் நியாயப்படுத்த ஆரம்பித்தால், கடந்த கால தலைவர்களை அனைவரையும் அவர்களுக்கு சார்பானவர்கள் நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் பல இருப்பதுடன் அவற்றை நிராகரிக்கவும் முடியாததாகிவிடும். அதேபோல் கடந்த கால தலைவர்களை எதிரானவர்கள் கருதி, குற்றம் சுமத்த ஆரம்பித்தாலும் நிராகரிக்க முடியாத பல காரணங்கள் ஆதாரங்களாக இருக்கின்றன. உதாரணமாக, ஆரம்பத்தில் உமாமகேஸவரனின் நேர்மையும் அர்ப்பணிப்பும் பிரபாகரனுக்கு எந்தளவிலும் குறைவானதல்ல என்பதை ஐயரின் எழுத்துக்கள் சுட்டிக் காட்டுகின்றன. இவர்கள் இருவர் மட்டுமல்ல  ஆரம்பத்திலிருந்து பங்குபற்றிய ஒவ்வொரு தலைவர்களும் உறுப்பினர்களும் போராளிகளும் இவ்வாரான அர்ப்பணிப்புடனும் முழுமையான பங்களிப்பு செய்பவர்களாகவே இருந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களது ஒரோ நோக்கம் தேசிய விடுதலை. ஆனால் இவ்வாறு பங்களிக்க முடியாத பலர் இடையில் விட்டுவிட்டு ஓடியதையும் ஐயர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

இவ்வாறு தாம் கொண்ட கொள்கைகளில் உறுதியுடன் தொடர்ந்தும் செயற்படுபவர்களை அக மற்றும் புறக் காரணிகள் காலோட்டத்தில் மாற்றுகின்றன என்றால் மறுப்பதற்கில்லை. இதன் விளைவாக அவர்களது சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. மேலும் ஒருவருக்கு அதிகாரம் கிடைக்கும் பொழுது ஆரம்பத்தில் இருந்ததைப் போன்றே பின்பும் இருப்பார் என எதிர்பார்ப்பதும் நமது அறியாமையும் நப்பாசையுமே. ஏனெனில் முழுமையான அதிகாரம் ஒருவரை முழுமையாகவே சீரழிக்கும் என்ற கூற்றை நினைவில் கொள்வது நல்லது. இதனைக் கவனத்தில் கொள்ளாமல் ஒருவரின் ஆளுமையை பங்களிப்பை வெறுமனே நேர்மறையாக அல்லது எதிர்மறையாக மட்டும் நிறுவுவதானது ஒரு பக்க சார்பானதாகவே இருக்கமுடியும். இது குறிப்பிட்ட மனிதரையும், அவரது செயற்பாடுகளையும், அவர் சார்ந்த சமூகத்தையும் புரிந்துகொள்வதை மட்டுப்படுத்திவிடும். மாறாக, இவற்றைப் பன்முக பார்வைகளுடன் பார்ப்பதனுடாக புரிந்து கொள்வதற்கு முயற்சிப்பதே ஆழமான, ஆரோக்கியமான பார்வைகளைத் தரும். இது குறிப்பிட்ட ஒருவரை புரிந்து கொள்வதற்கு மட்டும் வழிவகுக்காது. மாறாக நம்மையும் புரிந்துகொள்ள வழிவகுக்கும் என்பதே இதிலிருக்கின்ற சாதகமான நேர்மறையம்சமாகும். இவ்வாறான ஒரு புரிதலே இனிவரும் காலத்தில் நேர்மறையான கோட்பாடுகளை உருவாக்கவும் திட்டமிடல்களை மேற்கொள்ளவும் ஆரோக்கியமான வழிகளில் செயற்பாடவும் வழியேற்படுத்தும்.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமானது மக்கள் அமைப்புகளை தோற்றுவித்து அதன் மூலமாக மக்கள் போராட்டமாக மாற்றுவதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதை ஐயர் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். இதை மறுக்கின்றவகையில் புலிகளின் தலைமையின் கீழ் பல மக்கள் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் இருந்தன எனவும் அவை போராட்டத்தில் ஈடுபட்டன எனவும் வாதிடுகின்றனர். இதேபோல், அரசாங்கத்தை சார்ந்தவர்களும், புலி எதிர்ப்பாளர்களும், தமக்கும் இவ்வாறான வெகுஜன அமைப்புகள் இருக்கின்ற என ஒரு வாதத்தை முன்வைத்து தம்மை நியாயப்படுத்துவதன் மூலமாக இவ்வாறன வாதத்தை முறியடிக்கலாம். உண்மையிலையே இவ்வாறான விமர்சனங்கள் மூன்றாம் நிலையிலிருந்து, அதாவது வெளியிலிருந்து, ஒரு  விமர்சகராக ஆய்வாளராக கருத்துக்களை முன்வைப்பதற்குப் பதிலாக, புலிகளின் தலைமையும் அவர்கள் செயற்பாடுகளையும் நியாயப்படுத்துகின்ற அந்த இயக்கத்திற்கான பிரச்சாரங்கள் போலவே முன்வைக்கப்படுகின்றன. அதாவது பிரதான (அல்லது முன்னணி) சக்தியின் அரசியல் (அல்லது இயக்கத்தின்  அல்லது கட்சியின்) பாத்திரம் குறித்த புரிதல் இன்றியே மேற்குறிப்பிட்ட நியாயப்படுத்தல்கள் முன்வைப்பதாக தோன்றுகின்றது.

பல்வேறு அக புற அடக்குமுறைகள் நிகழ்கின்ற ஒரு சமூகத்தில் தமது உரிமைகளுக்காக பல்வேறு அமைப்புகள் தோன்றுவது சதாரணமானது. அதேபோல் சிறிலங்கா அரசின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட பல்வேறு சமூகப் பிரிவினரும் இவ்வாறு தமது உரிமைகளை நிலைநாட்ட அமைப்புகளை உருவாக்குவது தவிர்க்கமுடியாததாக அன்று இருந்தது. பல அமைப்புகள் அவ்வாறு உருவாகின. இன்றும் அதற்கான தேவை இருக்கின்றது. இவ்வாறு பல மக்கள் அமைப்புகள் உருவாகின்ற நிலையில், அவை சுயாதினமாக உருவாகுவதற்கும் செயற்படுவதற்குமான வழிகாட்டுதல்களை மேற்கொள்வதும், அவற்றின் தனித் தன்மையை மதித்தும் அதேவேளை அவற்றை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து ஒரு கூட்டு முன்னணியை உருவாக்குவதுமே முன்னேறிய அரசியல் சக்தியின் பொறுப்பாகும். ஆனால் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் செயற்பட்ட இயக்கங்கள் தமது கிளைகளாகவே இவ்வாறான அமைப்புக்களை பெரும்பாலும் தோற்றுவித்தன. சுயாதினமாக உருவாகி சுதந்திரமாக செயற்பட்டவற்றையும் காலப் போக்கில் தமக்குள் உள்வாங்கிக் கொண்டன. இயக்கங்களின் இவ்வாறான செயற்பாடானது எதிர் காலங்களில் சுதந்திரமான மக்கள் அமைப்புகள் தோன்றி செயற்படுவதையும் மக்கள் போராட்டத்தில் பங்குபற்றுவதையும் இல்லாது செய்தன (ஐயர், 111, 163). இதன் விளைவாக, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் மக்கள் இறுதிவரை பார்வையாளர்களாகவும் மந்தைக் கூட்டங்களாகவுமே வழிநடாத்தப்பட்டன என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாக இருக்கின்றன. இதற்குமாறாக மக்களிடம் அக புற அடக்குமுறைகள் தொடர்பான விழிப்பு நிலையை உருவாக்கி சுதந்திரமான பிரக்ஞைபூர்வமான செயற்பாடுகளுக்கு வழிகாட்டியிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. இன்றும் இதற்கான வெளி திறந்தே கிடக்கின்றது. ஆனால் இதை முன்னெடுப்பதற்கான அரசியல் தலைமை இல்லாமல் இருக்கின்றமை மிகவும் துரதிர்ஸ்டமாகும்.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் பங்களித்தவர்கள் பலரின் பெயர்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களின் பலர் மரணமடைந்துவிட்டனர். ஆனால் இவ்வாறு பங்களித்த சிலராவது புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழகத்திலும் வாழ்கின்றனர். இவர்களின் பாதுகாப்பு தொடர்பாக எந்தளவு அக்கறை கவனப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பாக கேள்வி உள்ளது. அவர்களிடம் தமது பெயரைப் பயன்படுத்தலாமா என அனுமதி கேட்டிருக்கவேண்டும். அவ்வாறு அனுமதி கேட்டிருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் அதை நூலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவ்வாறு கேட்கவில்லையெனின் ஒரு பேப்பர் முன்வைக்கின்ற குற்றச் சாட்டுகள் நியாயமானவையாகும். அதேவேளை, இவ்வாறான தவறுகளுக்காக ஐயரைப் போன்றவர்களை துரோகிகளாகவும் காட்டிக் கொடுப்பவர்களாகவும் ஒரு பத்திரிகை அடையாளப்படுத்துவது வழமையான புலிகளின் தலைமைத்துவ பாணி அரசியலே என்றால் மிகையல்ல. இவ்வாற அரசியலிலிருந்து இவர்கள் விடுபடுவதுதான் தமிழ் சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான பாதைகளை காட்டும். இதை அவர்கள் எப்பொழுது புரிந்துகொள்ளப் போகின்றார்களோ?

இந்த நூலை வெளியிட்டவர்கள் இனியொரு இணையத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அரசியல் கோட்பாடுகளிலும் செயற்பாடுகளிலும் அக்கறைகொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த நூலில் பதிப்பாளர்களாக இவர்கள் இருந்தும் நவ சமசமாஜ கட்சியே 1971ம் ஆண்டு இலங்கை சிறிலங்காவாகவும் சிங்கள பௌத்த தேசமாகவும் மாற்றப்படுவதற்கான அரசியல் யாப்பை மாற்றுவதற்கு ஆதரவளித்தது எனக் குறிப்பிட்டமை விமர்சனத்திற்குரியது. அது இலங்கை கம்யூனிஸ் கட்சியும் (மாஸ்கோ பிரிவு), லங்கா சம சமாஜக் கட்சியும் என்பது அனவைரும் அறிந்ததே. ஆனால் விக்கிரமபாகு தலைமையில் நவ சம சமாஜக் கட்சிதான் இன்றும் தனது வாக்கு வங்கிகளை கணக்கில் எடுக்காமல் தமிழர்களின் சுயநிர்ணைய உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. ஆகவே இது தொடர்பாக இனியொரு பதிப்பாளர்கள் மிகுந்த கவனத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்த இரு கட்சிகளையும் தமது கட்டுரைகளில் தொடர்ச்சியாக குழப்பிய நிலைகளிலையே பலர் குறிப்பிட்டு வருகின்றனர். இது நமது போரட்டத்திற்கு சிறிலங்கா என்ற தேசத்தில் இருக்கின்ற சிறிய ஆதரவையும் தமிழ் மக்களுக்கு சுட்டிக்காட்டாது விடுவதாகவே அமையும். ஆகவே இனிவரும் காலங்களிலாவது அரசியல் அக்கறையும் கொண்டவர்கள் பிரக்ஞைபூர்வமாக செயற்படுவதற்கு முயற்சிப்பதனுடாக இவ்வாறன தவறுகளை விடுவதை தவிர்த்துக் கொள்ளவது நன்மையானதே.

இறுதியாக, பிரக்ஞை என்பதை நான் குத்தகைக்கு எடுத்ததாக ஒரு நண்பர் முகப்பு புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் முதன் முதலில் பிரக்ஞை என்ற சொல்லை அறிந்தது ரகுமான் ஜானின் தீப்பொறி குழுவினர் வெளீயிட்ட உயிர்ப்பு கோட்பாட்டு இதழிலிருந்தே என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். ஆனால் 2000ம் ஆண்டு பிரக்ஞை தொடர்பான எனது புரிதலில் மாற்றம் ஏற்பட்டது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததன் காரணமாக அதைப் பற்றிய தேடலும் அறிதலுமே பிரதான நோக்கமாக இருந்துவருகின்றது. மேலும் பிரக்ஞைபூர்வமான மனிதராக எவ்வாறு வாழ்வது என்பதிலும், பிரங்ஞையை என்னுள் வளர்ப்பதிலும் அக்கறையாக இருந்து வந்திருக்கின்றேன். இந்த அடிப்படையில்தான் ரகுமான் ஜான் முன்வைக்கின்ற பிரக்ஞை தொடர்பான புரிதலுக்கும் எனது புரிதலுக்குமான வேறுபாட்டை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றேன். அவரைப் பொறுத்தவரை மார்க்சியம், தத்துவம், தர்க்கம், பகுத்தறிவு என்பதைப் போலவே பிரக்ஞை என்பதையும் ஒரு சொல்லாக மட்டுமே பயன்படுத்துகின்றார் என்றே சந்தேகம் கொள்கின்றேன். உண்மையில் பிரக்ஞை என்பது ஒரு நிலை. அதை நாம் நமக்குள் படிப்படையாக வளர்த்துச் செல்ல வேண்டும், இதைச் செய்யாதவரை பிரக்ஞையின்மையே நம்மை வழிநாடாத்தும். இதன் விளைவாக தன்னியல்பான செயற்பாடுகள் வெளிப்படுகின்றன. இவ்வாறன தன்னியல்பான செயற்பாடுகளே விடுதலைப் போராட்டங்களை தவறான ஆரோக்கிய மற்ற வழிகளுக்கு கொண்டு செல்கின்றன.

ஐயரின் நூல் தொடர்பான தனது விமர்சன கட்டுரையில், பிரக்ஞைக்கும் தன்னியல்புக்கும் இடையிலான உறவு இயங்கியல்ரீதியானது எனவும் அவற்றை ஒன்றுக்கு ஒன்று முரணாக காண்பிப்பது அபத்தமானது என ரகுமான் ஜான் குறிப்பிடுகின்றார். உண்மையில் பிரக்ஞையும் பிரக்ஞையின்மையும் தான் உறவில் இருக்கின்றன. நாம் பிரக்ஞையாக இல்லாதபோது, பிரக்ஞையின்மை நம்மை வழிநாடத்துகின்றது. அப்பொழுதுதான் தன்னியல்பான செயற்பாடுகள் நம்மிலிருந்து வெளிப்படுகின்றன. ஆனால் மனிதர்களின் பிரக்ஞை நிலையில் வளர்ச்சி காணப்படுமாயின் பிரக்ஞையின்மையாக வாழ மாட்டார்கள். அப்பொழுது தன்னியல்பான செயற்பாடுகள் அவர்களிடமிருந்து வெளிவராது. ஆகவேதான் பிரக்ஞையின் முக்கியத்துவதை எப்பொழுதும் வலியுறுத்துகின்றேன். ஏனெனில் பிரக்ஞையாக இருக்கின்ற மனிதரிடம் பிரக்ஞையின்மை இருக்காது. ஆகவே இங்கு பிரக்ஞைக்கும் பிரக்ஞையின்மைக்கும் இடையில்தான் பிரதான உறவானது இருக்கின்றது. பிரக்ஞை என்பது வெளிச்சத்தில் வாழ்வது போன்றது. பிரக்ஞையின்மை என்பது இருட்டில் வாழ்வது போன்றது. ஆகவே இவை ஒன்றுக்கு ஒன்று முரணானவை என்றே கருதுகின்றேன். இதேவேளை தன்னியல்பானது பிரக்ஞையின்மையுடன் தான் உறவாக இருக்கின்றது. அதாவது ஏற்கனவே குறிப்பிட்டபடி பிரக்ஞையின்மையான செயற்பாட்டின் விளைவுதான் தன்னியல்பான செயற்பாடுகள். இதைப் புரிந்து கொள்வதற்கு பெரும்பான்மையானவர்கள் பிடிவாதமாக மறுக்கின்றமை கவலைக்கிடமான தூர்ப்பாக்கியமான ஒரு நிலையே. இதனையும் பெரும் இழப்புகளை கொடுத்துத்தான் புரிந்துகொள்வர்கள் எனின் ஒன்றுமே செய்ய முடியாது. அதுதான் வரலாற்று நியதி என ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.

முடிவாக, புலிகளது தலைமைத்துவத்தையும் அவர்களது வழிகாட்டலிலான செயற்பாடுகளையும் விமர்சிப்பது தவறல்ல. நிச்சயமாக செய்யப்படவேண்டிய ஒன்றே. ஆனால் இவ்வாறன விமர்சனைத்தை ஒரு புறம் முன்வைத்துக் கொண்டு, மறுபுறம் சிறிலங்கா அரசின் மீது எந்தவிதமான விமர்சனங்களையும் முன்வைக்காது அவர்களது தவறுகளை மன்னித்து மறந்து இணைந்து செயற்படுபட முடிவெடுப்பதை என்னவென்று கூறுவது. இது அவர்களது ஜனநாயக உரிமையாக வேண்டுமானால் இருக்கலாம்.  ஆனால் இவர்கள் ஆதிகாரத்தின் பக்கம், மக்களை சுரண்டுகின்றவர்களின் பக்கம், அரசின் அடிருடிகளாக இருக்கின்றார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது பொறுப்பாகும். அவர்களால் அவ்வாறு இருக்கமுடியுமாயின், அவர்களைப் போல அரசை விமர்சிக்காது கண்டுடித்தனமாக அரசுக்கு ஆதரவளிப்பதைப் போல நாம் செயற்பட முடியாது. மாறாக, புலிகளது தலைமைகளையும் அதன் கடந்த கால செயற்பாடுகளையும் விமர்சித்துக் கொண்டு,  அவர்கள் பக்கம் நிற்பதுவே இன்றைய நிலையில் சரயான நிலைப்பாடாகும். இது தவறல்ல. ஏனெனில் இப்பொழுதும் எப்பொழுதும் அடக்கி ஒடுக்குகின்ற அரசுக்கும் அதன் அதிகாரங்களுக்கு எதிராகவும், அடக்கி ஒடுக்கப்படுபவர்களின் சார்பாகவுமே நாம் நிற்கின்றோம். இன்றைய நிலையில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களின் சார்பாகவும் அவர்களது உரிமைகளுக்காவும் குரல் கொடுப்பதும் வடக்கு கிழக்கில் இருக்கின்ற இராணுவ பிரசன்னத்திற்கு எதிராகவும், திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு எதிராகவும், பௌத்த மயாமாக்கலுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும் செயற்படுவதுமே சரியான அரசியல் நிலைப்பாடாகும். மேலும் முன்னால் போராளிகளே இன்று மிகவும் மோசமான அடக்குமுறைகளுக்கு சிறகைளுக்குள்ளும் சமூகங்களிலும் முகம் கொடுப்பவர்கள். இவர்கள் சார்பாகவும் குரல் கொடுப்பதும் நமது பொறுப்பு. இதற்குமாறாக அரசுகளுக்கும், எந்த ஒரு அதிகாரத்திற்கும் யார் ஆதரவாக இருக்கின்றார்களோ, அவர்கள் எப்பொழுதும் தவறான பக்கமே நிற்கின்றனர். இதுவே வரலாற்று நியதி. ஆகவே நமது நிலைப்பாடுகளை சரியான தளங்களில் வகுத்து செயற்பட ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.

மீராபாரதி

ஐயரின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ நூல் வெளியீட்டில் (ரொறொன்ரோ) ரகுமான் ஜான் ஆற்றிய உரை

http://thesamnet.co.uk/?p=34531

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேசன் ஐயர்

http://www.shaseevanweblog.blogspot.ca/

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : சில குறிப்புகளும் கருத்துக்களும்

http://arunmozhivarman.com/

அப்ருவர் ஐயர்… உபயம் இனியொரு…

http://www.orupaper.com/blogs/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/


Responses

  1. […] – பகுதி ஒன்று ஈழப் போராட்டம் – ஐயர் அகாலம் முதல் உழிக்காலம் […]

    Like


Leave a comment

Categories