Posted by: மீராபாரதி | January 3, 2022

யுபி- உத்தரப் பிரதேசம் (UP)83

யுபி 83 – யுபி பயிற்சி

உதயனின் U P 83, – Noelnadesan's Blog

எனது பதின்மங்களின் இறுதியில் பத்தாம் வகுப்பு பரிட்சை எடுத்தபின் கழத்துடன் இணைந்து வேலை செய்தபோது பிஎல்லோ பயிற்சி, யுபி பயிற்சி, இந்தியப் பயிற்சி, உள்ளூர் பயிற்சி என்பன அதிகம் கேட்ட சொற்கள் எனலாம். இவற்றில் முதல் இரண்டும் பிரபல்யமானவை. எங்களை இந்தியப் பயிற்சிக்கு அனுப்புங்கள் எனப் பொறுப்பாளரை வற்புறுத்தியபோதும் அவர் உடன்டிபடவில்லை. இறுதியாக கொஞ்ச நாள் உள்ளூர் பயிற்சி தந்தார்கள். பில்லோ பயிற்சி பெற்றவர்கள் கொஞ்சப் பேர்தான். அவர்கள் பிரபல்யமாக இருந்தார்கள். அடுத்தது யுபி பயிற்சி பெற்றவர்கள் பலர் இருந்தார்கள். அன்று எங்கள் கனவுகள் கூட இவை தொடர்பாகவே இருந்தன.

பின்பு உயரத் தரம் முடித்தவுடன் அன்றைய நிலையில் ஈரோசுடன் சேர்வது என முடிவெடுத்தேன். அவர்களின் மாணவர் அமைப்புடன் என்னை இணைத்துவிட்டார்கள். எங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் யுபி பயிற்சி எடுத்தவர். இந்த இரண்டு அனுபவங்கள் தொடர்பாகவும் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். இப்பொழுது இவற்றைப் பற்றிக் குறிப்பிட காரணம் எஸ்.ஏ. உதயன் எழுதிய யுபி 83   உத்தர பிரதேசம் என்ற அனுபவப் பதிவாகும். நாவல் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஆகவே இதற்குள் புனைவுகளும் இருக்கலாம் என நம்புகின்றேன். அனுபவப் புனைவாக இருக்கலாம்.

இந்தப் படைப்பில் முதலில் எவ்வாறான சூழ்நிலைகளில் எப்படி இயக்கங்களில் சேர்கின்றார்கள் என்பதைக் கூறுகின்றார். இரண்டாவது யுபி பயிற்சி பெறுகின்ற இடத்தில் நடைபெற்ற அனுபவங்களைப் பகிர்கின்றார். அதுவே பிரதானமாக இருக்கின்றது. மூன்றாவது இந்திய இராணுவம் எவ்வாறு பயிற்சிகளை வழங்கியது என்பதையும் அவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகளையும் பதிவு செய்கின்றார். நான்காவது  ஈரோஸ் இயக்கம், அதன் தோழர்கள் தொடர்பான அனுபவங்களை, நினைவுகளை, விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இவை எனது நேரடியான அனுபவங்களாக இல்லாவிட்டாலும் அன்றை காலத்தின் எமது மனநிலைகளுடனும் செயற்பாடுகளுடனும் தொடர்பு பட்டவை என்பதுடன் இப் படைப்பில் வருகின்ற சிலர் நாம் அறிந்தவர்கள் என்பதாலும் நெருக்கமானதாக உணரக்கூடியதாக இருக்கின்றது. மேலும் யுபி பயிற்சி தொடர்பாக வெளிவந்த அல்லது நான் வாசித்த முதலாவது நூல் இது எனலாம்.  இப்படி பல காரணங்களால் எனக்கு இது முக்கியமான ஒரு படைப்பாக இருக்கின்றது.

போராடுவதற்கு பலதரப்பட்டவர்களும் சென்றார்கள். புரிந்து சென்றவர்கள், உணர்ந்து சென்றவர்கள். உணர்ச்சியில் சென்றவர்கள்,  சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சென்றவர்கள். தமது யதார்த்த வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் அதிலிருந்து தப்பிக்க சென்றவர்கள், மற்றும் முளைச்சலவை செய்தமையினால் இணைந்தவர்கள். என இயக்கங்களுக்குச் சேர்ந்தவர்களைப் பலவகையாகப் பிரிக்கலாம். இந்தப் படைப்பில் மேற்குறிப்பிட்ட அனைவரும் இருக்கின்றார்கள். ஆனால் அன்று கட்டாயப்படுத்தி சேர்த்தவர்கள் என்ற பிரிவு மட்டும் இருக்கவில்லை.  இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட ஒரு வாழ்க்கை இருந்தது. அதைப் பற்றிய நினைவுகளுக்கு அப்பால் இவர்கள் பயிற்சிகளின் போது எதிர்கொண்ட கஸ்டங்களும் தண்டனைகளும் துன்புறுத்தல்களும் துஸ்பிரயோகங்களும் மற்றும் எதிர்கால நோக்கங்களும் கனவுகளும் என பயிற்சிக் காலங்கள் கடக்கின்றன. இந்த அர்ப்பணிப்பு விலைமதிக்க முடியாதது. பல்வேறு காரணங்களால் போராட்டம் தோற்றுப் போயிருக்கலாம் ஆனால் போராடப் போனவர்கள் தம்மை அர்ப்பணித்த காலம் ஒன்று இருந்தது என்பதை நாம் மறக்கவோ புறக்கணிக்கவோ முடியாது.

ஆயுதப் பயிற்சி என்பது கஸ்டமானதுதான். ஒரு இராணுவ கட்டமைப்பிற்குள் பயிற்சிகள் நடைபெறும்போது பல்வேறுவிதமான  தண்டனைகள் துஸ்பிரயோகங்கள் இடம்பெறலாம். ஆனால் போராளிகளாகப் பயிற்சி பெறுகின்றவர்களுக்கு இவ்வாறான தண்டனைகளும் துஸ்பிரயோகங்களும் அவசியமா என்ற கேள்வி எழுந்தது. இவற்றை ஏன் பொறுத்துக் கொண்டார்கள்? ஏன் எதிர்க்க முடியவில்லை? இவர்களின் பொறுப்பாளர்களுக்கு இவர்களில் அக்கறை இருக்கவில்லையா? பொறுப்பாளர்களும் பொறுப்பின்றி எப்படி இருந்தார்கள்? வர்க்க குணாம்சமா? இந்தப் படைப்பை வாசிக்கும் போது இப்படிப் பல கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது. அதேநேரம் நல்ல நேரம் நமது பொறுப்பாளர் நம்மை பயிற்சிக்கு அனுப்பவில்லை என மகிழ்ச்சி கொள்ளுமளவிற்கு பிரச்சனைகளையும் கஸ்டங்களையும் அனுபவித்திருக்கின்றார்கள். இவர்களைப் போராளிகளாக உருவாக்குவதற்குப் பதிலாக சாதாரண இராணுவ சிப்பாய்களாகத்தான் உருவாக்கியுள்ளார்கள் என்பதை போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் உறுதி செய்கின்றன. சுய தேடலும் சிந்தனையும் உள்ளவர்கள் மட்டுமே இதிலிருந்து தம்மை முறித்துக் கொண்டு சரியான பாதையை தேடிச் சென்றுள்ளார்கள் என நினைக்கின்றேன்.

ஒவ்வொரு மனிதர்களுக்கு ஒவ்வொரு பண்புகள் வர்க்க சாதிய சமூக குணாம்சங்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் கடந்து ஒருவர் சமூக விடுதலைக்காகப் போராட வருவது என்பது ஆழமான அர்ப்பணிப்பையும் பொறுப்பையும் கொண்டதுடன் நீண்ட பயணத்தையும் வேண்டி நிற்பதாகும். ஆனால் சிலருக்கு இயல்பாகவே இவை ஏற்பட்டுவிடும். சிலர் தம் முயற்சினாலும் தேடலினாலும் உணர்ந்து மாற்றிக் கொள்வார்கள். ஆனால் பலருக்கு அப்படியல்ல. எவ்வளவுதான் அறிவூட்டினாலும் அனுபவப்பட்டாலும் வர்க்க சாதிய ஆணாதிக்க குணாம்சங்கள் அவர்களையும் அறியமால் எட்டிப்பார்க்கும். சிலருக்கு இவை நியாயமானவைகூட. இருப்பினும்  இவர்கள் தேசிய விடுதலைக்காகப் போராடும் ஆர்வத்தையும் அக்கறையையும் கொண்டிருப்பார்கள். இவ்வாறான பல்வேறு பண்புகளும் சிந்தனைகளும் எண்ணங்களும் கொண்ட பல மனிதர்களை இப் படைப்பில் நாம் தரிசிக்கலாம். இதில்  மனிதத்துவத்துடன் கூடிய தலைமைத்துவ பண்புகள் கொண்ட முக்கியமான பாத்திரம் தேவகுமார். இவர் இறுதிப் போரில் காணமல் போனது கவலைக்குரிய விடயம் என்பதையும் படைப்பாளர் பதிவு செய்கின்றார்.

இவருக்கு எதிர்மாறான பாத்திரப்படைப்பாக உண்மையான பெயரிலையே சங்கர் ராஜி அவர்கள் வருகின்றார். இவர் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுகின்றார். பயிற்சிக் காலத்திலையே இவர் தொடர்பாக மட்டுமல்ல இந்தியா, இந்திய அரசு, இந்திய இராணுவம் தொடர்பாக தெரிந்து கொண்ட இவர்கள் புரிந்து கொண்ட இவர்கள் 90ம் ஆண்டுவரை என்ன செய்தார்கள் என்பதுதான் பெரும் கேள்வி. எல்லா இயக்கங்களையும் விட ஜனநாயகப் பண்பு அதிகம் கொண்ட இயக்கமாக ஈழப் புரட்சி அமைப்பை சொல்வார்கள். (இது ஒரு மாணவர் அமைப்பல்ல. இவர்களுக்கு கைஸ் என ஒரு மாணவர் அமைப்பு இருந்தாலும் இப்பொழுதும் ஈழப் புரட்சி மாணவர் அமைப்பு என்றே பலரும் அழைப்பது எந்தளவு அறியாமையிலும் அக்கறையீனமாகவும் இருக்கின்றோம் என்பதற்கு நல்ல உதாரணமாகும்.). ஆனால் ஆரம்பத்திலையே தவறான தலைமைத்துவத்தை இவர்கள் கண்டு கொண்டபோதும் இறுதிவரை  தலைமையை மாற்ற முடியாமைக்கு காரணம் என்ன? எந்த இயக்கத்தின் அரசியல் தவறு என்று புரிந்திருந்தார்களோ அவர்களுடன் எப்படி சங்கமாகினார்கள்? விடை தேட வேண்டிய கேள்விகள்.

இறுதியாக இந்த நூல் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டதால் எழுதப்பட்டது 2009ம் ஆண்டுக்குப் பின்பாகவே இருக்கலாம். இதில் கூறப்படுகின்ற பல விடயங்கள் தொடர்பான விமர்சனங்கள் புரிந்துணர்வுகள் 83ம் 84ம் ஆண்டுகளிலையே ஏற்பட்டதா? அல்லது பிற்காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு அக் காலத்திற்கு பொருத்தப்பட்டதா என்ற கேள்வி வாசிக்கும் போது எழுகின்றது. ஏனெனில் இந்த நூலில் குறிப்பிட்டவாறான விமர்சனங்களும் புரிந்துணர்வுகளும் அந்தக் காலத்திலையே இருந்திருந்தால்; பயிற்சி முடிந்து தளத்திற்கு (ஈழத்திற்கு) வந்த பின்பு என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்பது கேள்வி. அவ்வாறான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என்பதை அதன் பின் நடைபெற்றவற்றைக் கொண்டு நாம் புரிந்துகொள்ளலாம். பிற்கால அனுபவங்களை இதில் சேர்த்திருந்தால் அவற்றை சேர்க்காமல் இந்தப் படைப்பை உருவாக்கியிருந்தால் உண்மைத்தன்மையும் அன்றைய யதார்த்தத்தையும் கொண்ட ஒர் படைப்பாக இருந்திருக்கும். இல்லை இவை எல்லாம் அப்பொழுதே எழுந்த எண்ணங்கள் என்றால் அதன் பின் என்ன செய்தீர்கள் என்ற கேள்வி எழும்? மேலும் படைப்பாளரிடம் தனிப்பட கி.பி அரவிந்தன் மீதான மதிப்பு அதிகமாக இருப்பதால் அவரின் அரசியல் பார்வையுடன் ஒத்துப்போகும் தன்மைகளும் இருக்கின்றன என இப் படைப்பே கூறுகின்றது. இந்தப் படைப்பை மேலும் மெருகூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் முக்கியமான நல்லதொரு படைப்பு. அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு படைப்பு. இந்திய பயிற்சி அனுபவம் தொடர்பாக வந்த அல்லது நான் வாசித்த முதல் படைப்பு இது எனலாம்.

வைதேகி இந்த நூல் தொடர்பாக எழுதிய சிறிய குறிப்பு இப் படைப்பாளரைத் தேடி அவரிடமே இந்த நூலை வாங்க வைத்தது. அந்தவகையில் வைதேகிக்கு நன்றி பல. நூலை அனுப்பிய எஸ். ஏ. உதயன் அவர்களுக்கும் நன்றி. இவரின் இன்னுமொரு படைப்பான லோமியா சிறப்பானது என நண்பர்கள் கூறினார்கள். அதைத் தேடி வாசிக்க வேண்டும்.

மீராபாரதி
2022
புதிய ஆண்டின் முதல் நாளில் ஒரே மூச்சில் வாசித்த முதல் நூல் இது. 


Leave a comment

Categories