Posted by: மீராபாரதி | April 16, 2024

இலக்கிய அரசியல் 2 – காணி உரிமை சொந்த வீடு கிடைக்குமா?

இலக்கிய அரசியல் 2 – காணி உரிமை சொந்த வீடு எப்பொழுது கிடைக்கும்?
மலையகா நூலை முன்வைத்து…. டொரன்டோவில் தேடகம் ஒழுங்கு செய்த நிகழ்வில் வாசித்தது.
“தெரிய மாட்டேங்குது சேர்”

நான் ஒரு தேயிலைக் கொட்டை. 1983ம் ஆண்டு நடைபெற்ற தமிழின அழிப்பைத் தொடர்ந்து நாம் யாழ் நோக்கி வந்தோம். இதனால் யாழ்ப்பாணத்தில் சில காலம் மட்டுமே ஒரு பாடசாலையில் கற்றேன். ஒரு நாள் புதிய மாணவனாக நான் பின்வாங்கில் இருந்தவாறு “தெரிய மாட்டேங்குது சேர்” எனக் கத்தினேன். அன்றிலிருந்து இன்றுவரை அந்த வகுப்பில் படித்த சக நண்பர்களுக்கு நான் “தெரியாமாட்டேங்குது” தான். இவ்வாறு  எனது மலையக பேச்சு மொழியை சொல்லித்தான் என்னை அடையாளப்படுத்துவார்கள். இன்றும் அவ்வாறுதான் என்னை அவர்கள் அறிமுகம் செய்வார்கள். அந்தளவிற்கு மலையகம் எனக்குள் ஊறி இருக்கின்றது. மலையகம் தொடர்பாக உரையாடுவதாயின் எனது கடந்த கால அனுபவத்தினுடாக உரையாடுவதே சிறப்பாக இருக்கும்.

எனது சிறுவயது முழுக்க மலையகத்திலையே கழிந்தது. 1983ம் ஆண்டுவரை அதாவது எனது 16வது வயது வரை நான் வளர்ந்த கற்ற வாழ்ந்த இடம் மலையகம். என் சிறுவயது நினைவுகள் இப் பிரதேசத்துடன் மட்டுமே உள்ளது. எனது உள்ளார்ந்த உணர்வும் மலையக அடையாளத்துடனையே நெருக்கமாக இருக்கின்றது. ஏனெனில் 1987ம் ஆண்டு உயர்தரப் பரிட்சை எடுத்தவுடன் மீண்டும் முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என விரும்பினேன். அப்பொழுது ஈரோஸ் பாலகுமார் அவர்களின் நேர்காணல் ஒன்று ஈழநாடு பத்திரிகையில் வந்தது. அதில் தாம் வடக்கு கிழக்கில் தற்சமயம் போராட்டத்தை நிறுத்தினாலும் மலையகத்தில் எமது போராட்டம் தொடரும் எனக் கூறியிருந்தார். எனது உள்ளுணர்விலும் புரிதலிலும் இலங்கையில் மலையக மக்களே மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர், பயங்கரமாக சுரண்டப்படுகின்றனர், ஒழுங்காக வாழ்விடம் இல்லாமல் இருக்கின்றனர் இவ்வாறு பல அடக்கு முறைகளை கடந்த 200 வருடங்களாக எதிர்கொள்கின்றனர். வடக்கு கிழக்கில் வேறுவிதமான அடக்குமுறைகள் இருந்தாலும் மலையகத்தில் தான் போராட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும். இந்த உணர்வுடன் ஈரோஸில் போய் இணைந்தேன். இவ்வாறான எனது பின்னனியும் இந்த நூல் அறிமுக நிகழ்வில் என்னைப் பேச அழைத்தமைக்கு  ஒரு காரணமாக இருக்கலாம். அந்தவகையில் இந்த நிகழ்வில் பேசுவதற்கு ஒரளவு பொருத்தமானவன் என்றே நானும் உணர்கின்றேன்.

ஆகவே மலையகப் பெண் எழுத்தாளர்களின் கதைகளின்   தொகு ப்பான மலையகா என்ற இந்த நூலின் அறிமுக நிகழ்வில் எனது பார்வையை முன்வைப்பதற்கான சந்தர்ப்பத்தை தந்தமைக்கு தேடகம் நண்பர்களுக்கும் வெளியிட்ட  ஊடறுவுக்கும் நன்றி பல.


இந்த நிகழ்வில் உரையாற்றுவது எனக்கு மகிழ்சியாயினும்  ஒரு முரணும் உள்ளது. அதையும் குறித்துக் கொண்டு செல்வது அவசியமானது.
மலையகத்தில் நான் வாழ்ந்தபோதும் அங்குள்ள அயலவர்களுக்கும் மலையக நண்பர்களுக்கும் நான் ஒரு பனங்கொட்டை. யாழ்ப்பாணத்தான். பிறந்த இடம் கரவெட்டியாயினும் அது நான் வாழ்ந்த வளர்ந்த இடமில்லை. மேலும் மலையகத்தில் வாழ்ந்தபோது தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்தவர்களைவிடவும் வறுமையில் நாம் வாழ்ந்திருந்தாலும் கூட நாம் பிறந்த இடமும் நமது மத்தியதர வர்க்க நிலையும் எனது தந்தையின் தொழிலும் எனக்கு ஒரு சமூக நிலையையும் சலுகைகளையும் அதிகாரங்களையும் அளித்தது. ஆகவே என்னை மலையகத்தைச் சேர்ந்தவன் என அடையாளப்படுத்தலாமோ தெரியாது. இந்த முரண்பாடுகளை பிரக்ஞையுடன் கவனத்தில் கொண்டு ஒடுக்கப்பட்ட மலையக தமிழ் மக்களுடன் குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர்களுடன் உணர்வுத் தோழமையுடன் நின்று பிரக்ஞையுடன் ஆதரவளிக்கலாம். பங்களிக்கலாம். இந்த நூலைப் பொறுத்தவரை குறிப்பாக மலையகத் தமிழ் பெண்களுடன் உணர்வுத் தோழமையுடன் நின்று எனது பார்வையை பிரக்ஞையுடன் முன்வைக்க முயற்சிக்கின்றேன்.

இந்த நூலை முழுமையாக ஒரு தரம் வாசித்து முடித்துவிட்டேன். மிக அரிதாக வாசிக்கும் எனக்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் நூல்களை முழுமையாக வாசிப்பதற்கான ஊந்துதலைத் தருகின்றது. இதற்காகவும் தேடக நண்பர்களுக்கு நன்றி கூற வேண்டும். இந்த நூலை வாசிக்கும் போது தொடர்ச்சியாக எனது நினைவுகள் அந்தக் காலத்திற்கு செல்வதையும் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களையும் அதன் உணர்வுகளையும் மீள மீட்பது தவிர்க்க முடியாது எனக் கருதுகின்றேன்.

முதலாவது மலையக மக்களின் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விடம் தொடர்பான ஒரு பார்வையை பெற்றிருப்பது அவர்களின் பல பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். பிரதானமாக மத்திய மாகாணம் மலையகத்தின் மையம் எனலாம். மத்திய மாகாணத்தின் எல்லைகளில் இணைந்திருக்கும் பல மாகாணங்களின் எல்லைப் பகுதிகளும் மலையகத்திற்குள் வரும். இந்த மாகாணங்களின் பிரதான நகரங்களில் பல்லின மத மக்களும் வாழ்கின்றார்கள். ஆனால் தேயிலைத் தோட்டத் தமிழ் தொழிலாளர்களின் வாழ்விடங்கள், லயங்கள், தோட்டங்கள், என்பன நகரங்களை இணைக்கும் பிரதான வீதிகளிலிருந்து மிகவும் உள்நோக்கியே இருக்கும். பிரதான வீதிகளிலிருந்து இந்த தோட்டங்களை ;லயங்களைப் பெரும்பாலும் பார்க்க முடியாது. மேலும் இந்த தோட்டங்களில் உள்ள லயங்களில் வாழ்பவர்கள் தமிழர்கள். பெரும்பாலும் இந்து கிருஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள். இக் கதைகளில் வருவதுபோல மிக அரிதாக ஒன்று இரண்டு முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வாழ்வார்கள். இந்த விபரங்கள் தொடர்பாக சரியான ஆய்வுகள் தேவை. இந்த லயங்களில் வாழ்கின்ற தமிழர்கள் எல்லோரும் தேயிலை பிடுங்குவது தேயிலை கன்றுகளைப் பராமறிப்பது போன்ற வேலை செய்பவர்கள். குழந்தைகள் இங்குள்ள சிறிய பள்ளிக்கூடங்களிலையே படிப்பார்கள். தேயிலைத் தோட்ட அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு அவர்களது வேலைகளுக்கு ஏற்ப சிறிய பெரிய தனி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் நகரப் பாடசாலைகளில் தான் கற்பார்கள். மாகாணங்களின் எல்லைப் புறத் தோட்டங்களில் குறிப்பாக இறப்பர் கோப்பி பயிர் செய்கையில் ஈடுபடுகின்றவர்களில் நிலைமை வேறு. இதில் குறிப்பிட்டளவில் சிங்கள மக்கள் பங்குபற்றுகின்றார்கள். இப் பகுதிகளில் வாழ்கின்ற பல தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழில் கற்க வசதி இல்லாமையினால் சிங்களத்தில் கற்கும் நிலைமைகளும் உள்ளன.


1983க்கு முன்பு இத் தோட்டங்களில்  லயங்களும் பங்களாக்களும் தேயிலைத் தொழிற்சாலைகளும் கோயில்களும் ஆலயங்களும் சிறு பாடசாலைகள் மட்டுமே இருந்தன. ஆண்கள் மது அருந்துவதற்கு நகரங்களுக்கு வர வேண்டும். தொன்னூறுகளின் ஆரம்பத்தில் சரிநிகரில் வேலை செய்த காலங்களில் சில விடயங்கள் தொடர்பான கட்டுரை எழுதுவதற்காக விபரங்களை சேகரிக்க சென்றபோது தோட்டங்களுக்குள் பொலிஸ் நிலையங்கள் புதிதாக முளைத்திருப்பதைக் கண்டேன். தோட்டத் தொழிலாளர்கள் காவல் துறையின் நேரடிக் கண்காணிப்புக்குள் இருந்தார்கள். இருக்கின்றார்கள். 2012ம் ஆண்டின் பின் மலையகம் சென்றபோது ஒவ்வொரு தோட்டங்களுக்குள்ளும் சாராய் கடைகள் முளைவிட்டிருந்தன. ஏற்கனவே குறைந்த ஊதியம் பெற்று வறுமையில் வாழ்பவர்களை குடிக்கு அடிமையாக்கி மேலும் வறுமைக்கோட்டிற்குள் தள்ளுகின்ற செயற்பாடுகள் இவை. இது எந்தவகையிலும் மதுவுக்கு எதிரான கருத்தல்ல. ஆனால் மதுவை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காதவர்களின் குடும்பங்களின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கும். இந்த நூலில் உள்ள பெரும்பாலான கதைகள் குடிக்கு அடிமையான குடும்பத்தலைவர்களால் இந்தக் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளைக் கூறுகின்றன. இதானல் எவ்வாறான பிரச்சனகள் எல்லாம் ஏற்படும் என்பதை சிறுவயதில் இருந்தே அனுபவதில் அறிந்தவன் நான். அந்தவகையில் இந்தக் கதைகளையும் அது வெளிப்படுத்தும் வேதனைகளையும் வலிகளையும் என்னால் புரிந்து கொள்ள முடியும்.

என் பார்வையில்  கடந்த 50 வருடங்களாக  தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கின்ற லயங்களிலும் அவர்களின் வாழ்க்கையிலும் எந்த மாற்றத்தையும் நான் காணவில்லை. 200 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அதே மண் குடிசை லயங்கள். ஒழுங்காக சாப்பிடவோ உடுக்கவோ வாழவோ போதாத சம்பளம். இவ்வாறான சூழலில் வாழ்நிலையில் இவர்கள் எப்படி வாழலாம்? கல்வி கற்கலாம்? அந்தக் காலங்களில்  தோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற பெரும்பான்மையாக ஆசிரியர்கள் பொறுப்புடன் அக்கறையுடன் கற்பிப்பதில்லை. ஆகவே குடும்ப வறுமையின் காரணமாகவும் பெரும்பான்மையான சிறுவர்கள் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்புடன் தமது கல்வியை நிறுத்திவிடுவார்கள். இதையும் மீறி தமது குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என விரும்பும் பெற்றோர்களும் ஆர்வமுள்ள மாணவர்களும் அருகிலுள்ள நகரங்களில் இருக்கின்ற பாடசாலைகளுக்கு பல்வேறு கடினங்களையும் சிரமங்களையும் எதிர் கொண்டு அக்கறையுடன் வருவார்கள். இப்படி வருபவர்களிலும் ஒன்று இரண்டு பேர் தான் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெறுவார்கள்.

பல நேரங்களில் இவர்களின் பசி இவர்களை வென்றுவிடும். பசிக்கும் போது படிக்க முடியுமா? எல்லோரும் அதாவது முழு சமூகமும் (உதாரணமாக அன்று முள்ளிவாய்கால் அல்லது இன்று காசா) பசியுடன் இருப்பது என்பது வேறு. இது கூட்டுப் பசி. ஆனால் அருகிலுள்ளவர்கள் அல்லது அயல் வீடுகளில் வாசனை வீசுகின்ற சமையல் நடக்கும் போதும் உணவுகளை உட்கொள்ளும் போதும் உருவாகும் பசியின் வேதனையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் அதன் வலி. மேலும் இந்த மாணவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வெள்ளை ஆடைகள் மட்டுமே இருக்கும். அவை அழுக்கானால் அல்லது கழுவி காயப்போட்டு காயாமல் போனால் பாடசாலைக்கு வர முடியாது. இதை எல்லாம் கடந்து வீதிக்கு வந்தால் வாகனம் வராது. பல மலையக மாணவர்கள் நீண்ட தூரங்கள் நடந்தே பிரதான வீதிக்கு வந்து பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பிடிக்க வேண்டும். வாகனங்கள் இல்லாமையினால் கல்வி மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மரணங்களும் நடைபெறும். இதனால் குழந்தைகள் கல்வியை இடைநிறுத்த வேண்டி ஏற்படும். இந்த மக்கள் எதிர்கொள்கின்ற இவ்வாறான பல பிரச்சனைகளை இக் கதைகள் உரையாடுகின்றன.

மலையகத்தில் வாழ்ந்தபோது குளிப்பதற்கு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கிடைக்கும். வார இறுதி நாட்களில் ஒரு நாள்  ஆறுகளைப் பீலிகளை நோக்கிச் செல்வோம். இதில் ஒரு; கதையில் வருவதைப் போல பீலிகள் சிறிய நீர் விழ்ச்சிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தபோதும் காலை வேளைகளில் குளிரில் குளிப்பது என்பது அவ்வளவு இதமான அனுபவமல்ல. காலையிலையே சாப்பிடாமல் ஒரளவு தூரம் நடந்து சென்று நல்ல குளிர் தண்ணீரில் குளிக்கும் போது உடல் நடுங்கும். அதுவும் வெய்யில் இல்லை என்றால் இன்னும் கடினமானது. நகரங்களில் வாழ்ந்த எங்களுக்கே இப்படி என்றால் தோட்டங்களில் வாழ்பவர்கள் அதிகாலையில் எழுந்து வேலைக்குப் போவதை நினைத்துப் பாருங்கள்.

2012ம் ஆண்டு மலையகம் சென்றபோது அதன் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சியுற்றேன். நாம் அங்கு கல்வி கற்ற காலங்களில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் வடபகுதியை குறிப்பாக குடாநாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்று மலையக ஆசிரியர்கள் நிறைந்து போய் இருப்பதுமட்டுமல்ல பலர் சமூக அக்கறையுடன் மலையகத்தை கல்விரீதியாக முன்னேற்றுவதற்கு தன்னலமற்று பங்களிக்கின்றார்கள். அதுவே எனது மகிழ்ச்சிக்கான காரணம். குறிப்பாக யட்டியாந்தோட்டை கருணாகரனின் தலைமையில் கந்தலோயா பாடசாலையில் நடைபெறும் மாற்றம் முக்கியமானது. இவர்களுக்கு 2012ம் ஆண்டின் பின் பார்த்தீபன் தலைமையிலான உதவி நண்பர்களின் வாழிகாட்டலும் பங்களிப்பும் இந்த மாற்றத்திற்கு முக்கியமான அடித்தளமிட்டு பங்காற்றியது எனலாம். கடந்த பத்து வருடங்களில் உயர் தரம் ஆரம்பித்து இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் முதன் முதலாகப் பல்கலைக்கழகம் சென்றுள்ளார்கள். சிலர் முதற் பட்டதாரிகளாக பட்டம் பெற்று இப் பாடாசலையின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் மீளவும் பங்களிக்கின்றார்கள். சரியான வழிகாட்டலும் பங்களிப்பும் இருந்தால் சிறப்பான முன்னேற்றம் நடைபெறும் என்பதற்கு இவர்கள் நல்லதொரு உதாரணம். இதேபோல எனது நண்பர்களான சிறிபாத ஆசிரியர் கலாசாலையின் உப அதிபர் மத்தியூவும், பொகவன்தலாவ பாடசாலை அதிபர் பொன். பிரபாகரன் அவர்களும் இவர்களைப் போன்ற பல அதிபர்கள் ஆசிரியர்கள் மலையக மாணவர்களை முன்னேற்றுவதில் அளப்பரிய பங்களிப்பை செய்கின்றார்கள். சில புலம் பெயர்ந்த ஈகல்வி போன்ற தமிழ் நிறுவனங்களும் இவர்களுக்குப் பங்களிக்கின்றமை வரவேற்க வேண்டியதும் மகிழ்ச்சியானதுமாகும்.

இவ்வாறான எனது அனுபவத்தின் பின்னனியில் வைத்து இக் கதைகளை சமூக அரசியல் பார்வைக்கூடாக அணுகுவதே பொறுத்தமானது. ஆனால் இந்த அறிமுக நிகழ்வில் இந்த நூல் தொடர்பான விமர்சனத்தைத் தவிர்க்கின்றேன். அதேநேரம் நான் ஒரு இலக்கியவாதி இல்லை. இக் ;கதைகளின் இலக்கிய சிறப்பு, மொழி ஆற்றல் என்பன தொடர்பாக இலக்கிய செயற்பாட்டாளர்களும் திறனாய்வாளர்களுமே கருத்துக் கூறுவது பொறுத்தமானதாகும். நம் மத்தியில் இருக்கின்ற பல நண்பர்கள் தொடர்ச்சியான வாசிப்பு எழுத்து என இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இவர்களைப் போன்றவர்கள் இதனை வாசித்து இதன் இலக்கியத் தரம் தொடர்பாகவும் சமூக அரசியல் பார்வைகளையும் எழுதுவார்களாயின் பயனுள்ளதாக இருக்கும்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தற்போது தனது கலாநிதிப்பட்ட ஆய்வை நிறைவு செய்திருக்கின்ற எம்.எம்.ஜெயசீலன் அவர்கள் மலையக, இலக்கிய வரலாறுகள் இரண்டையும் இணைத்து சிறப்பான விமர்சனபூர்வமான  முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார்.  இதில் இரண்டுவிடயங்கள் உரையாடலுக்கு உரியவை. ஒன்று யார் மலையக மக்கள். இரண்டாவது மலையக மக்களின் அடையாளம். மலையகம் 200வது ஆண்டு நினைவு கூரலின் பின்னர் மலையக மக்களின் அடையாளம் தொடர்பான கருத்து முரண்பாடுகள் உருவாகியுள்ளன. அல்லது உருவாக்கப்பட்டுள்ளன.  ஒரு மக்கள் கூட்டம் தொடர்ச்சியாக ஒரிடத்தில் வாழ்ந்தால் அவர்களுக்கு என அந்த இடம் சார்ந்த ஒரு அடையாளம் வந்துவிடும். அது ஒரு அரசியல் கருத்தாக்கமாகவும் உருவாகும். அவ்வாறு உருவானதுதான் இலங்கையின் மலையக மக்கள் என்ற கருத்தாக்கம். 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து  கொண்டுவரப்பட்டவர்கள் என்பதால் இன்றும் இந்திய வம்சாவளியினர் என வலிந்து அடையாளப்படுத்தப்படுவது பிராந்திய அரசியல் முரண்பாடுகளுக்குள் இவர்களை சிக்க வைக்கும் ஒரு முயற்சியாகும். ஏற்கனவே இவ்வாறு உருவான சிக்கல்களால் எழுபதுகளில் பல மலையக மக்களை கட்டாயப்படுத்தி இந்தியாவிற்கு நாடு கடத்திய போதும் அவர்கள் தமிழகத்தில் இந்தியர்களாக ஏற்றுக்கொள்ளப்படாமல்  சிலோன்காரர்கள் என்றே இப்பொழுதும் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். இந்த சம்பவங்கள் தொடர்பாக பல கதைகள் ஒப்பாரிக் கோச்சிகளாக வந்துள்ளன. இந்த நூலில் இவ்வாறான கதைகள் இல்லாமை ஒரு குறை தான். இவ்வாறான சிக்கல்கள் இந்த மக்களுக்கு தொடர்ச்சியாக ஏற்படாமல் இருக்க செயற்பட வேண்டியது இவர்கள் மீது அக்கறையுள்ள அனைவரினதும் பொறுப்பாகும். மேலும் இந்த மக்கள்; என்ன உணர்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாது அவர்கள் மீது திணிக்கப்படும் ஒரு அடையாளம் இந்திய வம்சாவளியினர் எனலாம். இருப்பினும் இறுதியாக மலையக மக்களே தமது அடையாளம் எது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தையும் உரிமையையும் பெற்றவர்கள்.


இரண்டாவது யார் மலையக மக்கள் என்பது தொடர்பாக ஜெயசீலன் அவர்கள் முரண்பாடான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்கள். இந்த நூலில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களும் எழுதியுள்ளார்கள். இவர்களை மலையக இலக்கியத்திற்குள் சேர்க்க முடியாது என்கின்றார். இதனுடன் என்னால் உடன்பட முடியவில்லை. ஆகவேதான் ஏற்கனவே மலையக நிலம் வாழ்விடங்கள் தொடர்பான ஒரு குறிப்பை குறிப்பிட்டுள்ளேன். மலையகம் என்பது ஒரு புறம் பிரதேசம் சார்ந்தது. மறுபுறம் நிலம் சார்ந்த அரசியல் அடையாளம். இப் பிரதேசங்களில் பல்லின மக்களும் வாழ்கின்றார்கள். குறிப்பாக மலையக நகரங்களில் மூவின மக்களும் பல் மதங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்கின்றார்கள். ஆனால் தோட்டங்;களில் வாழ்கின்றவர்களின் வாழ்வு இவர்களின் வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இவர்களை மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் எனக் குறிப்பிடலாம். இவர்கள் மலையக நிலங்களில் பரவலாக வாழ்ந்தபோதும் குறிப்பாக அட்டன், கொட்டக்கலை, தலாவக்கலை, மஸ்கெலியா, நுவரெலியா போன்ற பல நகரங்களை அண்மித்த தோட்டங்களில் செறிவாக வாழ்கின்றார்கள். இந்த  மலையக நகரங்களில் மூவின பல் மத மக்கள் வாழ்ந்தாலும் நுவரெலியாவைத் தவிர்த்து மற்றைய நகரங்களில் தமிழ் மணம் அதிகம் வீசும். நாவலப்பிட்டிய கம்பொல பொன்ற நகரங்களில் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக காணலாம். இதேபோல பல எல்லைப்புற மலையக நகரங்கள் சிங்கள நகரங்களாகவே உள்ளன. இதனால் இரத்தினபுரி, பதுளை போன்ற நகரங்களுக்கு அருகிலுள்ள பல தோட்டங்கள் கந்தலோயாவைப் போல சிங்களக் கிராமங்களால் சூழப்பட்டு தனிமையில் இருக்கின்றன.  இவை ஆய்பு ரீதியான முடிவல்ல. ஆனால் இவை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் போது பல தகவல்களைப் பெறலாம். இந்தவகையில் இந்த நூலை மலையக வாழ் பெண் எழுத்தாளர்களின் தொகுப்பு எனக் கூறலாம். இதற்குள் தோட்டத் தொழிலாளார்கள் மட்டுமல்ல மலையக நகரங்களில் வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற அனைத்து வர்க்க இன மத பெண்களும் உள்ளடங்குவார்கள். இக் கதைகளை வாசிக்கும் போது அதை நீங்கள் உணர்வீர்கள். ஆனாலும் தமிழில் மலையகம் என்பது இதை எல்லாம் மீறி தோட்டத் தொழிலாளர்களையே குறிப்பது அவர்களது அரசியலனதும் பண்பாட்டினதும் பலத்தை வெளிப்படுத்துகின்றது எனலாம்.

இந்த நூலிலுள்ள கதைகள் எப்பொழுது வெளியிடப்பட்டது என்பதற்கான ஆதாரமாக ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கதைகள் 1975, 1978, 1981, 1982,  1987, 1992, 1994, 1997, 1998. 1999, 2000, 2001, 2006, 2007, 2010, 2012, 2015 வெளிவந்த கதைகளே. பெரும்பாலானவை 90களிலும் 2000 ஆரம்பங்களிலும் வெளிவந்தவை. ஆனால் இக் கதைகள் எந்தப் பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்டன என்ற விபரங்கள் இல்லை. இதனையும் இணைத்திருக்க வேண்டும்.  மேலும் மலையகா என்ற பெயரை வாசித்தபோது எனக்குப் பொருத்தமாகப்படவில்லை. சிங்களப் பெயரின் வாசனை இருப்பது போன்ற ஒரு உணர்வினால் பல தமிழ் அறிஞர்களிடம் தொடர்பு கொண்டு எனது சந்தேகத்தைக் கேட்டேன். கவிஞர் சேரன் அவர்கள் பதிலளித்தபோது ‘சிங்களச் சொல்லின் சாயல் வராது. தமிழ் மரபின்படிதான் வரும். ஆ, ஏ என்பன அழைப்பு விளிச்சொல்.  சேரன் சேரா என வரும். கா என்றால் சோலை, தோப்பு, வனம் ஆகிய பொருளும் உண்டு. எனவே மலையகா என்பது சரிதான். மலையகன் மலையகை என்று இருபாலாகப் பார்த்தாலும் விளி, மலையகா என்றுதான் வரும். இது  பாற்பொதுப்பெயராகும்” என்றார். ஆனால் எஸ். கே. விக்னேஸ்வரன் அவர்கள் குறிப்பிடும்போது “தமிழில் பெண் குறித்த விழிப்புச் சொல்லாக வரும்போது மலையகை என்றே வரவேண்டும் என்பதே தமிழ் மரபு. மலையகா என்றழைப்பது ஆண்பால் விழிப்புத் தொனியைக் கொண்டிருப்பதால்  இங்கு பொருத்தமானதல்ல. பெண்ணுக்கு இப்படி அழைப்பது மரபல்ல. ஆனாலும் இப்போது பிறமொழிகளின் செல்வாக்கால் அம்பிகா, தேவிகா, சினேகா என்ற அழைப்பதுபோல இப்படி அழைக்கின்றார்கள். மேலும் இது மக்களை விழிக்கும் அர்த்தத்தில் பலர் பாற்சொல்லாகவும் அமையவில்லை. மற்றும்படி இச் சொல்லில் வேறு சிக்கல்கள் இல்லை. தமிழ் மொழி மரபைக் கொண்டதாகவும் அனைத்து மக்களையும் இணைத்து விழிப்பதாகவும் இச் சொல் அமைந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.” என்றார். இதனை தமிழ் அறிஞர்களிடம் விவாதிக்க விட்டுவிடுகின்றேன்.

பிரமேதசா என்பதுகளின் ஆரம்பத்தில் உருவாக்கிய 2000ம் ஆண்டில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் நான் அறிந்த வரையில் ஒரு திட்டம் கூட மலையகத் தோட்ட தொழிலாளர்களுக்கு அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. மலையகத்தில் மத்திய மாகாணத்தில் கட்டப்பட்ட இவ்வாறான வீட்டுத் திட்டங்கள் பெரும்பாலும் சிங்கள மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. இதன் பிறகு  ஆட்சி செய்த அரசாங்கத்தில் அங்கம்  வகித்த எந்த தமிழ் அரசியல் வாதிகளும் இது தொடர்பாக அக்கறைப் படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறிய எண்ணிக்கையிலான வீடுகளை மட்டும் கட்டிக் கொடுத்த விட்டு மார் தட்டுகின்றார்கள். இந்த மக்களை வைத்து பதிவி பெறுவது மட்டுமே இவர்கள் நோக்கம். இல்லையெனில் பிரேமதாசாவைப் போல அரசாங்கத்தில் அங்கம் வசிகத்த காலங்களில் அனைத்து லயங்களையும் இல்லாது ஒழித்து காணி வழங்கி தனி வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கலாம். இத் தமிழ் தலைவர்களுக்கு உண்மையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றுவதில் அக்கறை இருந்தால்  அடுத்த முறை பதிவிக்கு வரும் பொழுது செய்வார்கள் என நம்புகின்றேன். அடுத்த தேர்தலில் மலையகத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் தலைவர்கள் மட்டுமல்ல மலையகத்தில் அக்கறை உள்ள தலைவர்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனிக் காணி வழங்கி வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதி வழங்க வேண்டும். இவ்வாறான உறுதிகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டன. ஆனால் ஒருவரும் இன்றுவரை அதைப் பூர்த்தி செய்யவில்லை. ஆகக் குறைந்தது அடுத்த பத்து வருடங்களுக்கு உள்ளாவது மலையக மக்களுக்கு இவ்வாறான தனி வீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய  நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். பதவியிலிருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையாகும். இதனை நீங்கள் அனுபவத்தில் புரிந்து கொள்ள வேண்டுமாயின் இதுவரை நீங்கள் மலையகத் தோட்ட லயங்களுக்குப் போகவில்லை எனின் ஒரு தரம் போய் வாருங்கள். ஆகக் குறைந்தத இரண்டு நாட்கள் அவர்களுடன் தங்கியிருந்தால் உண்மை நிலையைப் புரிந்து கொள்வீர்கள்.

இறுதியாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் மலையக மக்கள் தொடர்பான விழிப்புணர்வு முன்பைவிட அதிகம் ஏற்பட்டுள்ளமை மகிழ்ச்சியானது வரவேற்கத்தக்கதுமாகும். கடந்த வருடம் பல நகரங்களில் நடைபெற்ற மலையகம் 200 என்ற நடைபவனியும் நிகழ்வுகளும் இதற்கு உதாரணங்கள். இருப்பினும் இப்பொழுதும் தோட்டக்காட்டான் எனக் கூறுபவர்கள் இருக்கின்றார்கள். மலையக மக்களுக்கு எதிரான எண்ணங்கள் வடக்கு கிழக்கிலும் மற்றும் பல இடங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களிடம் இருக்கின்றன. ஏன் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட வடபகுதி மக்களிடமும் இந்த எண்ணங்கள் இருக்கின்றன என்பதுதான் முரண்நகை. அந்தளவிற்கு யாழ் மேலாதிக்கம் என்பது நம்மை அறியாமலே நமக்குள் ஊறியுள்ளது. மேலும் 40 வருட ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் கூட இவர்களுக்கு எதிரான எண்ணங்கள் இருப்பது கவலைக்கிடமானது. மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான இவ்வாறான கருத்துருவாக்கங்களை இவ்வாறான நிகழ்வுகளையும் தொடர்ச்சியான செயற்பாடுகளையும் செய்யும் பொழுதே கட்டுடைக்கலாம் என்பதுடன் மலைய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவும் வழிவகுக்கும் என நம்புகின்றேன்.

கவாத்து வெட்டுவது போல
அடிக்கடி வெட்டிவிடுவார்கள்
வளர முடியாமல். –
மலையக மக்களின் வாழ்வு

பகுதி இரண்டு -மலையகா நூலில் வெளிவந்த சிறுகதைகள் பற்றி சிறு குறிப்புகள்.

ரோகிணி முத்தையாவின் தீபாவளி அட்வான்ஸ் (1994) கதை தோட்டத் தலைவர்கள், குடிபோதை, பணம் எப்படி வீணாகின்றது என்பதையும் தொழிலாளர்கள் எவ்வாறு நிர்வாக நெருக்கடிகளுக்குள் சிக்கிக் கொள்கின்றார்கள்? தோட்டத்தொழிலாளர்களை காவற்துறையினர் நடாத்தும் விதம் என்பவற்றை அறிந்து கொள்ளலாம். சட்டி சுட்டுவிடும் (1994) கதையில் ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போனால் கூட ஒழுங்காக சாப்பிட முடியாது இதுல வேலை நிறுத்தம் செய்தால் தொழிலாளர்களின் நிலைமை என்ன என்பதையும் தோட்ட நிர்வாகம் எப்படி இவர்களை வைத்திருக்கின்றது என்பதையும் தோட்டத் தொழிலாளர்களின் ஒற்றுமையின்மை புரிதலின்மை என்பவற்றையும் குறிப்பிடுகின்றார்.

வட்டகொடயைச் சேர்ந்த அக்னஸ் சவரிமுத்து எழுதிய செந்தாமரை (1999)என்ற கதை கொழும்பிலுள்ள முதலாளி ஒருவரின் வீட்டில் வேலை செய்கின்ற சிறுவன் ஒருவன் எவ்வாறு கல்வியில் அக்கறையுள்ள ஒரு தொழிலாளியினால் காப்பாற்றப்பட்டான் என்பதைக் கூறுகின்றது. தாய்ப்பாசம் (2012) என்ற கதை மூன்று பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தும் தனிமையில் இருக்கும் தாயைப் பற்றியது. கறுப்புப்பட்டி (2001)தோட்ட நிர்வாகத்திற்கு எதிராகப் பெண்களின் போராட்டம் பற்றியது. இதில் தோட்டத்தொழிலாளர்களாக இருந்தும் கணக்குப்பிள்ளையும் கங்காணியும் எவ்வாறு நிர்வாகத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றனர் என்பதைக் கவனிக்கலாம். உறவுக்காரன்  (2001)என்ற கதை தோட்டத்தில் திருடன் எனப் பட்டம் எடுத்தவனைக் கொழும்பில் கண்டபோது அக்கறையாக உதவி செய்தமையும் திருடன் எப்பொழுதும் திருடனாகவே இருக்கமாட்டான் என்பதையும் சொல்கின்றது.

மாத்தளையைச் சேர்ந்த பாலரஞ்சனி சர்மா எழுதிய பசி (1994) என்ற கதை தோட்டத்தில் வேலை நாட்கள் குறைய வருமானத்திற்காக கஸ்டப்படும் தொழிலாளி. களவாக தேயிலைத் தூளை எடுத்து விற்கப்போனதால் ஏற்பட்ட விளைவும் நான்கு நாள் போராட்டமும். போராட்டத்தில் குழந்தைகள் பசி என அழ போராட்டத்திற்கு என நடந்தது என்பது கதை. நெத்திக்காசு (1998) என்ற கதை தேயிலைத் தோட்டங்களை அரசாங்கம் தனியாருக்கு வழங்கியதால் ஏற்பட்ட மாற்றங்களும் முரண்பாடுகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும். குடும்பம் ஒன்றி தந்தை கேள்வி கேட்டதால் கொல்லப்படுகின்றார். தாய் நோய்வாய்ப்பட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வாகனமில்லாது இறந்துவிடுகின்றார். நன்றாகப் படிக்கும் மூன்று பெண் குழந்தைகளும் ஒன்றுமறியாத படிப்பதில் ஆர்வமுள்ள சிறுவனுக்கும் என்ன நடக்கின்றது என்பது கதை. சாஸ்திரம் மீறிய  கீர்த்தனம் (1992) ஒரு இலட்சிய கதை எனலாம். ஒரு பெண் தான் கல்வி கற்று புதிய தலைமுறையினருக்கு ஒரு ஆசிரியராக கற்பித்து சமூகத்தை மாற்ற முயற்சிப்பதும் ஆனால் கற்றவர்கள் பலர் தம் முன்னேற்றத்தில் மட்டும் அக்கறை கொண்டு இந்தச் சமூகத்தை விட்டு வெளியேறுவது தொடர்பான நிகழ்வுகளைக் கொண்டது.

புசலாவை இஸ்மாலிஹா எழுதிய கிழவியின் ஆசை (1987)பெரும்பாலான அம்மாக்களின் கதை எனலாம். குழந்தைகளுக்காகவே வாழ்ந்து இறக்கின்ற பெண்ணைப் பற்றிய கதை. அம்மாக்கள் வாழும் பொழுது பெற்ற பிள்ளைகள் பெரும்பாலும் அவர்களைக் கவனிப்பதில்லை. அவர்களது ஆசைகளை நிறைவேற்றுவதில்லை. கனவுகளுடனையே அவர்கள் வாழ்க்கை முடிந்துவிடும். ஆனால் இந்தப் பெண்களிடம் இருக்கின்ற சிறிய சொத்துக்களை மட்டும் ஏதாவது சொல்லி பெற்றுக்கொள்ள முன்னுக்கு நிற்பார்கள். அப்பாவுக்கு கலியாணம்  (1997) என்ற கதை இரண்டாவதாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்கின்ற ஆணினதும் அவரது மகனினதும் மனவைியினதும் கதை. எப்படி சமூகமும் நிர்வாகங்களும் இதற்கு ஒத்துப்போகின்றன என்பதையும் குறிப்பிடுகின்ற கதை இது.  ஆனால் மலையகத்தில் இரண்டு மனைவிகள் என்பது சாதாரண நிகழ்வல்ல. காயாம் பூவும் வாழ் மரமும் (1997) என்ற அழகான கதை வறுமையில் வாடுகின்ற ஒரு சிறுவனின் வாழைப்பழம் சாப்பிட ஆசைப்படுகின்றபோது எதிர்கொள்கின்ற பிரச்சனைகளும் அதன் விளைவுகளையும் கொண்டது. உணர்வுகளும் உணர்ச்சிகளும் கலந்தது.

ரூபராணி ஜோசப் (பிறந்த இறந்த ஆண்டுகள் மாறிவந்துள்ளது) மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட மலையகப் பெண். எழுதிய வறுமைப் பூக்களும் (1997)  சப்பாத்து (1997) என்ற இரண்டு கதைகளும் எப்படி படிக்கின்ற சிறுவர்களை வேலைக்கு அனுப்புதலும் அவர்களது கனவுகளை அழிக்கின்ற சமூகத்தின் செயற்பாடுகளையும் சொல்கின்ற கதை. சிறுவர்கள் எதிர்கொள்கின்ற கொடுமைகளும் சித்திரவதைகளும். இவ்வாறான பல்லாயிரக் கணக்கான கதைகள் அன்றிலிருந்து இன்றுவரை நடைபெறுகின்றன.. வறுமையா கல்வியா என்றால் ;வறுமையே முதலில் வந்து நிற்கும்.

அட்டன் சாந்தா ராஜ் எழுதிய தோட்டத்து மண் (1999) கதை எவ்வாறு மலையக தோட்டங்களைத் சேர்ந்த மாணவர்கள் கற்றபின் வசதி வாய்ப்புகள் சமூக மேல்நிலையாக்கம் என்பவற்றை நோக்கி செல்லுதலும் தம் கடந்த காலத்தையும் சமூகத்தையும் மறப்பதும் ஆன சுயவிமர்சனக் கதை எனலாம்.

கண்டியைச் சேர்ந்த அரபா மன்சூர் எழுதிய வேண்டும் ஒரு பதில் (1994) தேயிலைத் தோட்டத்தில் வாழும் தனித்த முஸ்லிம் குடும்பத்தின் கதை. குடிகார கணவருடனும் கல்வி கற்கும் மகளுடனும் வாழும் ஒரு பெண் இவர்களுக்கிடையிலான உறவுகளை எவ்வாறு நோக்குகின்றாள் முடிவெடுக்கின்றாள் என்பதை வாசியுங்கள்.

அட்டனைச் சேர்ந்த செ.கோகிலவர்த்தனி எழுதிய பென்சன் (2000) கதை. குடிகார கணவன் பொறுப்பில்லாத இரண்டு ஆண் மகன்கள்.  தீடிரென வயதைக் காரணங்காட்டி வேலையிலிருந்து ஓய்வு பெறச்சொல்கின்றார்கள். இதனால் கிடைக்கின்ற சிறு தொகைப் பணத்தை என்ன  செய்கின்றார்?

பதுளையைச் சேர்ந்த பிரேமிளா பிரதீபன் அவர்களின் ஐந்து கதைகள் உள்ளன. சஞ்சும்மா (2010), பீலிக்கரை (2007), பாக்குப்பட்டை (2007), பக்கி (2006), கூலி (2010). சஞ்சும்மா தான் வளர்க்கும் மாட்டைப்பற்றியும் பக்கி தான் வளர்க்கின்ற கோழி பற்றியும் பீலிக்கரை பெரும்பாலும் மலையகத்தில் உள்ளவர்கள் குளிக்கச் செல்கின்ற பீலி பற்றியும் பாக்குப்பட்டையில் விளையாடுவது கூலியில் அடுப்பெறிக்க தேயிலைச் செடிகளை வெட்டிவிட (கவாத்துப் பண்ணியவுடன்) வீழ்ந்து கிடக்கு தடிகளை (மிளாறு) பொறுக்குவதையும் இவை எல்லாவற்றுடனும் எவ்வாறான உணர்வைக் கொண்டுள்ளார் என்பதை அழகாக விபவரிக்கின்றார்.

பதுளை பிறப்பிடமாகவும் கம்பளையை வாழ்விடமாகவும் கொண்ட நயீமா சித்தீக் (எ.பஷீர்)  எழுதிய நான்கு கதைகள். நெடிதுயர்ந்த மலையில் (ஆண்டு இல்லை), தேயிலைக் கண்டு, மேகம், சவுக்கு மரம் மூன்றும் மனித ஒடுக்குமுறைகளைப்பற்றி உரையாடுகின்றன.வாழ்க்கையின் சுவடுகள் (1981)கதையில் ஏழை அண்ணன் கஸ்டப்பட்டு சகோதரங்களுக்கு திருமணம் செய்து வைத்தபின் அவர்கள் பணக்காரராக மாறி இவரை ஒதுக்குகின்றார்கள்., ஒரு கந்தூரி நடந்து முடிகிறது (1978) என்ற கதையில் ஒரு பள்ளிவாசலில் எவ்வாறு சமைத்த சாப்பாட்டை அதிகாரத்தில் உள்ளவர்களும் பணக்காரர்களும் முதலில் எடுத்து முடித்தவுடன் காத்திருந்த ஏழைகளையும் பிச்சைக்காரர்களையும் சாப்பாடு கொடுக்காமல் வெளியேற்றுகின்ற நிகழ்வைக் கூறுகின்றது., உழைக்கப் பிறந்தவள் (1982) கதையில் ஒரு பெண் சவூதிக்கு வேலைக்குப் போவதும் அங்கு கஸ்டப்பட்டு உழைப்பது அவளது கணவரும் மாமியாரும் அவள் உழைப்பில் மகிழ்ச்சியாக இருப்பதும் சொந்த அண்ணன் அவள் கஸ்டத்தை நினைத்து கவலைப்படுவதையும் சொல்கின்றது.

கண்டி தெல்தெனியாவை சேர்ந்த நளாயினி சுப்பையா எழுதிய கலங்கரை விளக்கு (1997) என்ற கதையில் மலையக ஆசிரிய மாணவர்களை கற்பித்து வழிகாட்டிய ஆசிரியரைப் பற்றிய நினைவு கூறலான கதை. சாபக்கேடு (1994)  கதை உடுப்பில்லாமல் தொடர்ந்து பாடசாலைக்கு செல்ல முடியாத இரண்டு மாணவர்களைப் பற்றியும் கல்வியில் அக்கறையில்லாத பெற்றோரும் குடிக்கு அடிமையான தந்தையும்  இவை எப்படி இந்த மாணவர்களின் முன்னேற்றத்தை தடை செய்கின்றது என்பதைக் கூறுகின்றது.

மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கொழும்பில் வாழ்கின்ற பேபி இமானுவேல் எழுதிய இது ஒன்றும் புதிதல்ல (1994) கதையில் குடிகாரக் கணவன் தோட்டத்தில் வேலைக்குச் செல்கின்ற பெண் குழந்தைகளின் கல்வியில் அக்கறையாக இருக்கின்றாரா அல்லது பாடசாலைக்குப் போவதால் உணவுக் கூப்பன் கிடைக்காதா என்ற கதை.

கண்டி கலஹாவில் பிறந்த இரா. சர்மிளாதேவியின் விதி வரைந்த பாதை வழியே (1999) என்ற கதையில் தோட்டங்களைத் துப்பரவுத் செய்கின்ற தொழிலாளியும் தனது மகன் இந்த வேலையைத் தொடரக்கூடாது என விரும்பும் ஒருவர் அவனைப் படிக்க வைக்கின்றார். பல்கலைக்கழகத்திற்கு சென்ற மகனுக்கு என்ன நடந்தது?.

மலையகத்தைச் சேர்ந்த பூரணி எழுதிய முடியாத கதைகள் பல (1975) தமிழகத்தில் தனது பெற்றோரையும் சகோதரங்களையும் விட்டுவிட்டு தனது கணவருடனும் கடைசித் தம்பியுடனும் மலையகத்திற்கு வந்து வாழ்ந்த ஒரு பெண்ணின் ;கதை. தமிழகத்தில் வாழும் தனது உறவுகளை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற கனவு பலித்ததா என்பதை அறிய வாசியுங்கள்.

கண்டியில் பிறந்த பவானி தேவதாஸ் இரண்டு கதைகள் . முதலாவத நினைவில் நீங்காதவள் (2003) 1983 இனப்படுகொலையின்போது தமிழ் குடும்பத்தின் வீட்டைகாப்பாற்ற கடையர்களுடன் சண்டைபோட்ட இளம் சிங்களப் பெண்ணிற்கு என்ன நடந்தது? சமவெளி சிகரம் (2003)என்ற இரண்டாவது கதை மலையகப் பெண்ணுக்கும் மட்டக்களப்பு பெண்ணிற்கும் இடையிலான நட்புறவு தொடர்பான  சுனாமி காலக் கதை.

மாத்தளையைச் சேர்ந்த சிவாஜினி  சதாசிவம் எழுதிய லயக் காம்பரா (1997) கதை தோட்டங்களுக்கான போக்குவரத்து வசதிகளும் அது தொடர்பாக அதிகாரத்திலுள்ளவர்களின் அசிரத்தையும் மாணவர்கள் முகம் கொடுக்கின்ற கஸ்டங்களையும் இதற்கு எதிரான போராட்டங்களையும் பேசுகின்றது. மேலும் பழைய தலைமைகள் புதிய இளம் தலைமைகளுக்கு வழிவிட வேண்டும் எனவும் கூறுகின்றது.

நுவரெலியாவில் வசிக்கின்ற மஸ்கெலியாவில் கற்ற சுந்தரி மலைசுவாமி எழுதிய தொடரும் சோகங்கள் (1997) கதை  தமது மகள் கல்வி கற்ற வேண்டும் என கஸ்டப்பட்டு ஒத்துழைக்கும் பெற்றோர் ஆனால் அதைக் கவனத்தில் எடுக்காமல் காதலில் விழுந்து அதனால் ஏற்படும் பிரச்சனைகளைக் கூறுகின்றது.

நுவரெலியா கந்தப்பளை தோட்டத்தைச் சேர்ந்த சுகந்தி வெள்ளையகவுண்டர் எழுதிய விடியல் எப்போது (1994)  கதை எப்படி தோட்டத் தொழிலாளர்களின் மத கடவுள் நம்பிக்கைகள் இவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றது என்பதை கூறுவதாகும்.

பதுளையைச் சேர்ந்த தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா எழுதிய வாக்குறுதிகள் (2011) கதை எவ்வாறு தலைமுறை தலைமுறையாக தோட்ட தொழிலாளர்களின் வேலை, ஊதியம், வாழ்விடம், மற்றும் அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக மேலிடங்களில் முறைப்பாடுகள் செய்தும் அவை கண்டுகொள்ளப்படாமல் விடுவதால் ஏற்படும் விளைவுகளை கூறியுள்ளார். தந்தை, மகன் எனத் தொடரும் இந்த வரலாற்றில் எப்படி அநியாயமாக இத் தொழிலாளர்கள் வதைக்கப்படுகின்றார்கள் கொல்லப்படுகின்றார்கள் என்பதை வெளிக்கொண்டுவருகின்றது. மேதின விடுமுறை (2010) என்ற கதையிலும் அந்த நாளில் விடுமுறை வழங்காமல் எப்படித் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றார்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் என்பதைக் கூறுகின்றது.

மாத்தளையைச் சேர்ந்த மலைமதி சந்திரசேகரன் எழுதிய அவன் விட்டில் பூச்சியல்ல (1996) என்ற கதை எவ்வாறு மலையகப் பெண்களின் வாழ்வு அதிகாரத்திலுள்ள மேலதிகாரிகளால் சிதைக்கப்படுகின்றது என்பதை வெளிக்கொண்டுவருகின்றது.
மாத்தளையைச் சேர்ந்த லறீனா அப்துல் ஹக் எழுதிய ஆத்தா (2015) கதை முதுமையான பெண் ஒருவர் தன் குடிகார மகனுடனும் பேரனுடனும் வாழ்கின்றார். அரசியல்வாதிகள் எப்படி குடிகாரர்களைப் பயன்படுத்தி தேர்தலில் ஈடுபடுகின்றார்கள் என்பதையும் இவர்களின் ஏழ்மையான வாழ்வையும் சித்தரிக்கின்றது.

பண்டாரவளையைச் சேர்ந்த சாந்தி மோகன் எழுதிய நெருப்புக்குள் வீடு கட்டி (1993) என்ற கதை ஒய்வு இல்லாது வழங்காது தோட்டத் தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகின்றார்கள் என்பதைக் கூறுகின்றது. துரைமாருக்கும் தொழிலாளர்களுக்கு இடையில் கங்காணிமார் அகப்பட்டு வாழுகின்ற வாழ்க்கை இது.

அட்டனைச் சேர்ந்த பேராதனை ஷர்புன்னிஷா எழுதிய மனதின் சுமை (1993) கதை முதியவர்களினது ஓய்வுதியக்கால கதை. முதுமையும் தனிமையும் எவ்வளவு கொடியது என்பதைக் கூறுகின்றது.


Leave a comment

Categories