Posted by: மீராபாரதி | April 23, 2016

சிவகாமி: மீண்டும் கூர்வாளின் நிழலில்! – பகுதி ஒன்று

தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் தொடர்பான எனது பார்வைக்கும் விமர்சனத்திற்குமான ஒரு முன்னுரை இது.  இந்த நூல் மற்றும் தமிழினி தொடர்பாக இதுவரை முன்வைக்கப்பட்ட சில விமர்சனங்கள் தொடர்பாக எனது பார்வைகள் சிலவற்றை இங்கு முன்வைக்கின்றேன்.

11781607_1131099483581253_3139693221160005534_nமுதலாவது தமிழினி என்கின்ற சிவகாமியின் துணைவர் ஜெயன்தேவா என்கின்ற ஜெயக்குமரன் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள். ஒருவர் மீது விமர்சனங்களை முன்வைக்கும் பொழுது அடிப்படை நேர்மை ஒன்றை எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். முன்பு ஈழத் தமிழ் தேச விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய போராளிகள் பலர் இன்று தமது வாழ்வை எதிர்கொள்ளப் போராடுகின்றனர் என்பதைப் பரவலாக வெளிவரும் செய்திகள் மூலம் நாம் அறியலாம். குறிப்பாக பெண் போராளிகளின் நிலைமை மேலும் கவலைக்கிடமானது. பெண் போராளிகளை ஆண் போராளிகள் கூட இன்று மட்டுமல்ல போராட்ட காலத்திலையே திருமணம் செய்வதற்கு தயங்கியுள்ளார்கள் என தமிழினியின் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஈழத் தமிழ் சூழலில் ஜெயக்குமரன் அவர்கள் புலம் பெயர்ந்த தேசத்திலிருந்து சென்று தமிழினியை திருமணம் செய்தமை மிகப் பெரிய விடயம் மட்டுமல்ல முக்கியமானதும் முன்னுதாரணமுமாகும். இரண்டு எதிர் எதிர் கருத்து நிலைகளில் இருந்தவர்கள் செயற்பட்டவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பது பெரிய கேள்விதான். ஆச்சரியம்தான். இக் கேள்விற்கும் ஆச்சரியத்திற்கும் அப்பால் ஜெயக்குமரன் முன்பு திருமணம் செய்தவராக இருப்பினும் விவாகரத்து பெற்றவராக இருப்பினும் தமிழினியை திருமணம் செய்ததை வரவேற்கின்றேன். அதற்காக அவரை வாழ்த்துகின்றேன். மதிக்கின்றேன். இதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கின்றது. அது ஜெயக்குமரனுடன் தமிழினி இருக்கின்ற படத்தில் தமிழினியின் முகத்தில் வெளிப்படும் அந்த மலர்ந்த மகிழ்ச்சியான முகத்திற்காக மட்டுமே. மற்ற எந்தப் படங்களிலும் (அவர் கம்பீரமாக இருந்தாலும் கூட) மகிழ்ச்சியாக இல்லை. கம்பிரமான 20-1445314246-thamizhini-ltte34வெளிப்பாடு பெண்ணுக்கு அவசியமே. ஆனால் பல படங்கள் மன அழுத்தமும் மனச் சுமையும் நிறைந்த அதிகாரத்துவ பண்புகளை வெளிப்படுத்தும் உணர்வையே வெளிப்படுகின்றன. 20 வருடங்களாக ஒரு தலைவரை முழுமையாக நம்பி தமிழ் தேச விடுதலை கிடைக்கும் என்ற கனவுடன் தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட ஒருவருக்கு இறுதியில் கிடைத்தது பெரும் ஏமாற்றம். பெரும் சுமை. இவற்றிலிருந்து அவரை இத் திருமணம் நிச்சயமாக ஒரளவாவது விடுதலை செய்திருக்கும் என நம்புகின்றேன். மேலும் தமிழினி இறந்த பின்பும் அவர் எழுதிய பதிவைப் புறந்தள்ளாமல் அதை நூலாக வெளியிடுவதை தனது முதல் பணியாக எடுத்து செயற்பட்ட ஜெயக்குமரன் பாராட்டப்பட வேண்டியவரே. இந்த ஒரு காரணத்தினாலையே ஜெயக்குமரன் மீது மேற்கொள்ளப்படுகின்ற தனிநபர் தாக்குதல்களும் நூலில் அவர் தலையிட்டார் என்ற விமர்சனங்களும் அர்த்தமிழந்து போகின்றன. thamiliniஇவற்றை இவர்களின் இயலாமையின் வெளிப்பாடுகளாகவே பார்க்கின்றேன். இவ்வாறு கூறுவது ஜெயக்குமரனின் அரசியல் நிலைப்பாடுகளுடன் உடன்படுவதல்ல. அதற்கான விமர்சனங்கள் வேறு ஒரு தளத்தில் முன்வைக்கப்படவேண்டும். இதுவல்ல அதற்கான களம். ஆனால் ஜெயக்குமரனைப் போல வாழ்வதற்காகப் போராடும் ஈழ விடுதலைப் போராளிகளின் வாழ்வில் மகிழ்வை ஏற்படுத்த (புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தில் வாழ்கின்றவர்களில்) எத்தனை பேர் தயார்?

book_thamiliniஇரண்டாவது இந்த நூலின் இலங்கை இந்தியப் பதிப்புகள் வெளிவந்திருக்கின்றமை பாராட்டவும் வரவேற்கப்படவும் வேண்டிய செயற்பாடாகும். இலங்கைப் படைப்புகளின் முதல் பதிப்பு இலங்கையில் வெளிவருவதே பொருத்தமானதும் சரியானதுமாகும். அப்பொழுதுதான் இலங்கையில் பதிப்புத் துறையை ஊக்குவிக்கலாம். இந்த நூல்களின் இரண்டாவது பதிப்புகள் இந்தியாவில் தமிழகத்தில் வெளிவரலாம் என்பதே எனது நிலைப்பாடு. இந்தடிப்படையில் காலச்சுவடு தமிழினியின் கூர்வாளின் நிழலில் நூலை தமிழகத்தில் வெளியிட்டமை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதில் குற்றம் கண்டுபிடிப்பதற்கு ஒன்றுமில்லை. மேலும் இவ்வாறான நூல்களை வெளியிடுவதால் பெரிதாக இலாபம் கிடைக்காது என்பதை நாம் அறிவோம். இவ்வாறான சூழலில் காலச்சுவடு தமது தொழிலில் மிகவும் நேர்த்தியாகவும் பதிப்புத்துறைசார் புலமைத்துவத்துடனும் செயற்படுவது மட்டுமல்ல அதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு செயற்படுவது பெரும் பணி. கஸ்டமான பணியும் கூட. இதையெல்லாம் புரிந்து கொள்ளக்கூடிய நண்பர்களே காலச்சுவட்டின் உரிமையாளரும் பதிப்பாளருமான கண்ணனைக் “காசுக் கண்ணன்” எனப் பட்டம் கூறி அழைக்கின்றனர். 12729351_1024379040969342_2882615215426262599_nஇது பொருத்தமற்ற பொறுப்பற்ற கூற்றாகும். (இது தொடர்பாக நண்பர்களிடம் விளக்கம் கேட்டு எழுதினேன். ஆனால் இதுவரை ஒரு பதிலுமில்லை.) இவ்வாறு குறிப்பதன் அர்த்தம் கண்ணனுடன் இருக்கின்ற (ஏதாவது) கருத்து முரண்பாடுகளை மறுப்பதாகாது. கண்ணன் அவர்கள் குறிப்பிட்ட ஆதிக்க சமூகத்தை மற்றும் சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காக அவர் முற்போக்காளராக இருக்கமாட்டார் என்று கொள்ளத்தேவையில்லை. அதேவேளை அவரை அறியமால் அவருக்குள் ஆதிக்க சமூகத்தின் கருத்துகளும் இருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நாம் ஒவ்வொருவரும் இவ்வாறன முரண்பாடுகளுடன்தான் வாழ்கின்றோம். அண்மையில் கண்ணன் அவர்களது ஒரு கருத்துத் தொடர்பாக எனது விமர்சனத்தையும் விளக்கத்தையும் முன்வைத்திருந்தேன். அதற்கு கண்ணன் அவர்கள் என்னை நையாண்டி செய்து பதிலளித்திருந்தார். அதற்கு நமது நண்பர்களும் ஓடிவந்து “லைக்” செய்திருந்தனர். எனக்கு எதிரான கருத்துகளில் நண்பர்களுக்கு அவ்வளவு விருப்பம். இருப்பினும் இதை மனதில் கொண்டு கண்ணன் செய்கின்ற முக்கியமான பணிகளை மறுப்பதோ புறக்கணிப்பதோ நேர்மையான செயற்பாடல்ல. (இவ்வாறு நான் எழுதுவதற்கும் எனக்கு ஏதாவது நலன்கள் இருக்கும் என சிலர் தேடலாம்.) ஆனால் நமது சூழல்களில் எல்லாம் இவ்வாறுதான் நடைபெறுகின்றன. இது ஒரு நச்சு சூழல். இவ்வாறான சூழலில் மனநிலையில் நாம் எந்தவகையிலும் எவ்வளவு பெரிய இலக்கிய தத்துவார்த்தப் படைப்புகளை படைத்தாலும் பயன்தாராது. இதை நாம் புரிந்து கொள்ளாதவரை நாம் விரும்பும் இலக்குகளை அடையமுடியாது. புகழும் பெரிய இடத்து உறவுகளும் தான் நோக்கமாயின் இவ்வாறான போக்குகளை தவிரக்க முடியாது. ஆனால் சமூக அக்கறை உள்ளவர்கள் இதை உணர்ந்து மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. அதுவே தனிமனித மற்றும் சமூக மாற்றத்திற்கான வழியாகும். ம்! இதுவும் ஒரு கனவே!

Thamilini-akka-2மூன்றாவது தமிழினியின் நூல் தொடர்பாக முன்வைப்பட்ட விமர்சனங்களில் மிக மோசமானது அவரை பாலியல் அடிப்படையில் வசைபாடியதாகும். இவ்வாறான எழுத்துக்கள் நமது மனநிலையின் வெளிப்பாடுகள் என்றால் மிகையல்ல. இதையெல்லாம் எழுதுகின்றவர்கள் முன்பு போராடிய போராளிகளாக இருப்பதும் கவலைக்குரியதாகும். அதேநேரம் இவர்கள் நமக்கிருக்கும் ஒரு சந்தேகத்தை உறுதி செய்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் கருணாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக அதாவது “கிழக்குப் புலிகளுக்கு” எதிராக “வன்னிப் புலிகள்” சண்டை செய்தபோது பெண் போராளிகளை வண்புணர் செய்தார்கள் அல்லது பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொலை செய்தார்கள் என்பதை நிறுவுவதாகவே இவர்களது எழுத்துகள் உள்ளன. இவர்கள் தமிழினி என்கின்ற சிவகாமி போன்று இப்பொழுதும் வாழ்கின்ற பல பெண் போராளிகளின் வாழ்வுடன் பொறுப்பற்றதனத்துடன் விளையாடுகின்றார்கள். இவர்களின் இச் செயற்படானாது தம் அனுபவங்களையும் கேள்விகளையும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் எழுத விரும்புகின்ற பல போராளிகளை முடக்குவதாகும். இது இன்னுமொருவகையான அக அடக்குமுறையே. ஆகவே இவ்வாறான மோசமான விமர்சனங்களுக்கு எதிராக நமது குரலை உயர்த்தி எழுத விரும்புகின்ற போராளிகளுக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளிப்பதே நமது பொறுப்பாகும்.

Tamilini-death-1இன்று நாம் செய்ய வேண்டியது இவ்வாறான நூல்களை வரவேற்பதாகும். இவற்றை எந்தளவு வரவேற்கின்றோமோ அந்தளவிற்கு தமது அனுபவங்களையும் சந்தேகங்களையும் கேள்விகளையும் தமக்குள் வைத்துக் கொண்டு மனச் சுமையுடன் கஸ்டப்படுகின்ற போராளிகளை எழுதத்துண்டலாம். ஒருவர் புலத்தில் இருந்தும் அல்லது புலம் பெயர்ந்து எழுதுவதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. இரண்டு இடங்களிலும் போராடியவர்கள் கூர்வாளின் நிழலில் தான் இருக்கின்றார்கள். ஆனால் புலம் பெயர்ந்த தேசங்களைவிட புலத்தில் அந்த நிழலின் அடர்த்தியும் பரப்பளவும் அதிகமானதாகும். ஆகவே அவர்களின் வரையறைகளைப் புரிந்து கொண்டு இவ்வாறான எழுத்துக்களை ஊக்குவிப்பதே நமது பொறுப்பு. அவை ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைக்கு எதிராக இருந்தாலும் வரவேற்பதே ஜனநாயக மரபாகும். அப்பொழுதான் ஈழத் தேச விடுதலைக்கு ஆதரவான எழுத்துகள் வெளிவருதையும் உறுதிசெய்யலாம். இதற்கு மாறாக போராட்டத்தை விமர்சித்து எழுதுகின்றவர்கள் மீது முத்திரைகளைப் பதித்து தடைசெய்ய முயற்சிப்போமாயின் கடந்த கால வரலாற்றிலிருந்து கற்பதற்கான சந்தர்ப்பங்களை இழந்தவர்களும் நாமாகவே இருப்போம். இது இரட்டிப்பு இழப்பு மட்டுமல்ல ஆயுதப் போராட்டத்தின் தோல்வியைவிட பல மடங்கு ஆபத்தானாதாகும். ஆயுதப் போராட்டத்தின் தோல்வி வெளிப்படையானது. ஆனால் இவ்வாறான தடைகளாலும் எதிர்ப்புகளாலும் ஏற்படும் தோல்வி வெளிப்படையானதல்ல. மாறாக நாம் உள்ளார்ந்து புரிந்து கொள்ளவும் உணரவும் மட்டுமே முடியும். இதைக் காலமே நமக்கு கற்பிக்கும். ஆனால் அப்பொழுது காலம் கடந்து சென்றிருக்கும். ஆகவே காலம் கடந்து வருந்துவதைவிட இப்பொழுதே விழித்துக் கொள்வோம். ஆகவே விமர்சனங்களை ஆரோக்கியமாகவும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் முன்வைத்து முன்னேறுவோம். போராளிகள் மீது படரும் கூர்வாளின் நிழலிற்கு ஒளிபாச்சி அவர்களைச் சுற்றியிருக்கும் இருளை நீக்க மட்டுமல்ல அந்த வாள்களை அடையாளங் காணவும் முயற்சிப்போமாக.

13083095_10156932644855637_76107795059733847_nஇன்று சிவகாமி எனும் தமிழினியின் பிறந்தநாள். ஆகவே இன்றைய நாளை அவருக்காக சமர்ப்பித்து அவரது நூல் தொடர்பாக எழுத ஆரம்பித்த எனது பதிவை நிறைவு செய்ய முயற்சிக்கின்றேன். ஏற்கனவே தெரிந்திருந்தால் இன்று முழுப் பதிவையும் பதிவு செய்ய முயற்சித்திருக்கலாம். இவ்வாறு செய்வதன் இன்னுமொரு நோக்கம் சிவகாமி போன்று வாழ்கின்ற பல பெண் போராளிகளின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துவதுமாகும். இவர்கள் இறந்த பின் நாம் அவர்களை மறக்கவில்லை என நினைவு கூறுவதாகும். ஏனெனில் இவர்கள் இறந்த பின்பும் கூட அவர்களின் வாழ்வு பெறுமதியானது என்பதை உணரவைப்பதற்கான சிறு முயற்சி இதுவாகும்.ltte-220x350

தமிழினி: மீண்டும் கூர்வாளின் நிழலில்! – பகுதி இரண்டு
அரசியல், உளவியல், மற்றும் பெண்ணியப் பார்வைகள்.
நாளை பதிவு செய்ய முயற்சிக்கின்றேன்.

மீராபாரதி
23.04.2016


Responses

  1. […] மீண்டும் கூர்வாளின் நிழலில்! – பகுதி ஒன்று ஈழப் போராட்டம் – ஐயர் அகாலம் முதல் […]

    Like

  2. […] தேசியங்களுக்கு இடையில் பெண்கள் ஐயர் சிவகாமி 1 தமிழினி […]

    Like


Leave a comment

Categories