Posted by: மீராபாரதி | August 5, 2011

புலம் பெயர்ந்த மனிதர்களின் பொறுப்பு என்ன? – ஒரு முன்மொழிவு!

புலம் பெயர்ந்த மனிதர்களின் பொறுப்பு என்ன? – ஒரு முன்மொழிவு!

புலம் பெயர்ந்த அல்லது பெயர்க்கப்பட்ட தமிழ் பேசும் மனிதர்களே…….

இன்றைய புலத்தின் அதாவது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் நிலைமை என்ன? அந்த மண்ணில் சகல இடங்களிலும் சிறிலங்கா இராணுவத்தின் பிரசன்னம். தமது நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதற்காக அரசாங்கத்திடமும் அதன் இராணுவத்திடமும் அரசியல்வாதிகளிடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் கையேந்தி நிற்கின்ற மனிதர்களின் கையறுநிலை. தமது வாழ்வுரிமைக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கமுடியாத, போராட முடியாத இராணுவ மயப்பட்ட சுழல். ஜனநாயகமின்மை நிலவுகின்ற அதிகாரமயப்பட்ட சூழல். இவ்வாறான பயம் நிறைந்த சூழலில் வாழ்கின்ற குழந்தைகள் மற்றும் மாணவர்களின் அச்சம் கொண்ட நிச்சயமற்ற வாழ்வு. இதைவிட புலிகள் இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த முன்னால் அங்கத்தவர்கள்;, மற்றும் புலி ஆதரவாளர்கள் மட்டுமல்ல புலிகளின் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் என்பதனாலையே தம் வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் ஒவ்வொரு யுகங்களாக சிறிலங்காவின் சிறைகளிலும், வதை முகாம்களிலும் கழிக்கின்ற பல்லாயிரக்கணக்கான மனிதர்கள்.
இவர்கள் அனைவரின் விடுதலைக்காக சுதந்திரத்திற்காக புலம் பெயர்ந்த மனிதர்களாகிய நாம்; என்ன செய்கின்றோம்?

புலிகளின் தலைமையின் அரசியல் மற்றும் இராணுவ நிலைப்பாடுகளின் தவறுகளால் அவர்கள் அழிக்கப்பட்டதனால், அதன் பல அங்கத்தவர்கள் குறிப்பாக தலைமை படுகொலை செய்யப்பட்டதனால், அல்லது கைது செய்யப்பட்டதனால் அல்லது சரணடைந்ததனால், எனப் பல காரணங்களால் புலிகள் இயக்கமும் அதன் ஆதிக்கமும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இல்லாதுபோய் இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன.; புலிகளின் தலைமை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டதை நேர்மையாக முன்னெடுத்தார்களா என்ற கேள்வி இருந்தபோதும் உரிமைகளை பேரம் பேசுவதற்கான சக்திiயையும் அதிகாரத்தையும் தம்மிடமே கொண்டிருந்தனர். இதனால் புலிகளை இல்லாது செய்ததன் மூலம் தமிழ் பேசும் மனிதர்களின் உரிமைகளுக்கான போராட்டம் முடக்கப்பட்டுவிட்டமை மிகவும் தூர்ப்பாக்கியமானதே.

புலிகள் இயக்கததை அழித்தன் பெயரில் நடைபெற்ற நிகழ்வுகளும்;, இதன் பின்பான நிகழ்வுகளும் வடக்கு கிழக்கில் என்ன நடைபெறுகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவ்வாறான மோசமான சூழலில் தான் இலங்கை அரசாங்கம் பல தேர்தல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன்மூலம் இலங்கை அரசாங்கமானது வடக்கு கிழக்கில் நிலைமை சீரடைந்து விட்டது என்பதையும் தாம் ஜனநாயகபூர்வமாக செயற்படுவதாகவும் சர்வதேசத்திற்கு காண்பிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது. ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த தேர்தல் செயற்பாடுகளையும் அதன் முடிவுகளையும் புலம் வாழ் மனிதர்களின் நன்மைக்காகவும்;, விடுதலைக்கும் எவ்வாறு சாதகமாக பயன்படுத்துவது என்பதைப் பற்றி சிந்தித்து செயற்படுகின்றார்களா? இல்லை என்பது துரதிஸ்டமே உண்மையே. ஆனால் நாம் இவற்றினடிப்படையில் செயற்படுவது இக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதுமான அவசியமானதுமான தேவையாகும். 
இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள், சிறிலங்கா இராணுவம் தம்மைச் சுற்றி நிலைகொண்டிருந்தபோதும், தமது அரசியல் கட்சிகளாலும் போராட்ட இயக்கங்களாலும் மற்றும் புலம் பெயர் சமூகத்தாலும் அநாதரவாக கைவிடப்பட்டபோதும், எந்தவித தயக்கமுமின்றி, பயமுமின்றி, துணிவுடன் தாம் விரும்புகின்ற கட்சிக்கு அல்லது சிறிலங்கா அரசுக்கு எதிரான தமது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக தமது வாக்குகளை இந்தத் தேர்தல்களினுடாக பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஊள்ளுராட்சி தேர்தல்கள் வரை, இவர்கள் தமது வாக்குகளை குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே பெரும்பான்மையாக அளித்து அவர்களை வெற்றி பெற செய்துள்ளனர். இந்த செயற்பாடானது, நமது (போராட்ட இயக்கங்களினதும் அரசியல் கட்சிகளினதும்) தவறுகளாலும், மற்றும் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளாலும் அவர்களுக்கு கிடைத்த பிராந்திய மற்றும் சர்வதே ஆதரவாலும் முடக்கப்பட்ட அல்லது அடக்கப்பட்ட தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு  மீளவும் நம்பிக்கை அளிக்கின்ற செய்ற்பாடு என்றால் மிகையல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது விமர்சனங்கள் இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்தும் ஜனநாய வழிகளில் நம்பிக்கை வைத்து செயற்படுவதும், குரலற்ற வடக்கு கிழக்கு மனிதர்களை ஜனநாயக வழியில் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களின் குரலாக ஒலிப்பதும் சர்வதேசளவில் முக்கியமானதும்
கவனிக்கப்படுவதுமாகும். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பல்வேறு அரசியற் கட்சிகளும் மற்றும் இயக்கங்களின் அரசியல் கட்சிகளும் இணைந்திருப்பது தமிழ் தேசிய உரிமைகளுக்கான கோரிக்கைகளுக்காக செயற்படுவதற்கு பலம் சேர்ப்பதே என்றால் மிகையல்ல. ( உண்மையிலையே இலங்கை வாழ் வடக்கு கிழக்கு தமிழர்கள் மீது இவர்களுக்கு அக்கறை இருக்குமாயின் இவர்கள் ஒவ்வொருவரும் தமது கடந்தகால அரசியலையும் செயற்பாடுகளையும் முழுமையான சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவதும் மிகவும் முக்கியமானது. மேலும் கரைபடிந்த தமது கட்சி மற்றும் இயக்கங்களின் அடையாளங்களிலிருந்து தம்மை விடுவித்து, அதாவது அவற்றை கலைத்துவிட்டு, பொதுவான புதிய கூட்டு முன்னணியை உருவாக்குவார்களாயின் மேலும் வரவேற்கத்தக்கதே.)
 
2009ம் ஆண்டு மே மாதத்தின் பின் இலங்கை வாழ் தமிழ் பேசும் மனிதர்கள் துணிவுடன் தேர்தலில் வாக்களிப்பது மட்டும் நடைபெறவில்லை. சிறிலங்காவின் சிறைகளில் எந்தவிதமான விசாரணைகளும் இல்லாது வாடுகின்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள்; தமது விடுதலைக்காக சிறைக்குள்ளையே உண்ணாவிரதப் போராட்டங்களை பல முறை நடாத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்கள் எல்லாம் பல்வேறு வாக்குறுதிகளால் நிறுத்தப்பட்டன. இருப்பினும் இவ்வாறான செயற்பாடுகள் நமக்கு குறிப்பாக புலம் பெயர்ந்த மனிதர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். இந்த செயற்பாடுகளிலிருந்து நாம் கற்றிருக்க வேண்டும். இப் போராட்டங்கள் தொடர்வதற்கு நமது பூரண ஆதரவை பங்களிப்பை நாம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறான ஒரு சூழலில் அவர்களால் போராட முடியுமானால், ஒரளவு ஜனநாயகமும் சுதந்திரமும் கிடைக்கின்ற புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து அவர்களின் விடுதலைக்காக அந்த மக்களின் சுதந்திரத்திற்காக போராட முடியாதா? செயற்பட முடியாதா? அவ்வாறு செயற்படுகின்றதாக கூறுகின்ற தமிழ் தேசியவாதிகள், புலம் பெயர்ந்த தேசங்கிளில் இருக்கின்றன, பயன்படுத்த கூடிய ஜனநாயக உரிமைகளையும் செயற்படக்கூடிய ஜனநாயக சூழலையும் எந்தளவிற்கு முழுமையாகவும் அதி உட்சமாகவும் பயன்படுத்துகின்றனர்;? இவர்கள் எவ்வளவு உண்மையான அக்கறையுடன் இருக்கின்றனர் அல்லது செயற்படுகின்றனர் என்பது கேள்விக் குறியானதே?

ஏனனில் புலம் பெயர்க்கப்பட்ட அல்லது பெயர்ந்த நாம், நான், எனது குடும்பம், எனது குழந்தைகள், எனது வீடு, எனது வேலை, சுற்றுலா, விடுமுறைகள், மற்றும் ஆடம்பரமான தனிப்பட்ட (திருமணம்) மற்றும் பொது விழாக்கள் என்பவற்றுக்கே முக்கியத்துவமும் முதன்மையும் அளிக்கின்றோம். இவற்றில் எந்தக் குறையும் இல்லாமல் நிறைவாக வைத்திருப்பதை முதலில் உறுதி செய்துகொள்கின்றோம். இவ்வாறு வாழ்வதில் எந்தவிதமான தவறும் இல்லை. ஆனால் இவ்வாறு எல்லாம் செய்தபின்பு நேரம் கிடைத்தால் மட்டும் அரசியல் பேசுவதும் அல்லது புலம் (இலங்கை வாழ் தமிழர்கள்) தொடர்பான அக்கறை காட்டுவதும், அந்த மனிதர்களின் துன்பங்கள் தொடர்பாக பொழுதுபோக்காக பேசுவதும் தான் தவறான செயற்பாடு. பலருக்கு இந்த அக்கறையும் இதனடிப்படையிலான செயற்பாடும் கூட ஒரு பொழுதுபோக்காக மட்டும் இருப்பது மிகத்பெரிய தவறு என்றால் மிகையல்ல. இன்னும் பலருக்கு இவ்வாறான அக்கறையும் அதன்பார்ப்பட்ட செயற்பாடும் மனித உணர்வுகளை சுரண்டுகின்ற, விற்கின்ற ஒரு தொழிலாக மட்டுமே இருக்கின்றமை மிகவும் இழிவான செயற்பாடே. ஏனனில்; நாம் அக்கறை காட்டுகின்ற, புலத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்களின் மறுவாழ்விற்காக, சுந்திரமான வாழ்விற்காக, விடுதலைக்காக காத்தரமான ஆரோக்கியமான செயற்பாடுகள் எதனையும் புலம் பெயர்ந்தது வாழும் தேசங்களில் முன்னெடுக்கின்றோமா?

 நமக்;கு, குறிப்பாக புலம் பெயர்க்கப்பட்ட அல்லது பெயர்ந்த முன்னால் இலங்கை வாழ் தமிழ் பேசும் மனிதர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக புலிகளின் தலைமைகளின் கீழ் புலம் பெயர் தேசங்களில் செயற்பட்டவர்களுக்கும், புலிகளின் தலைமையை ஆதரித்தவர்களுக்கும் மிகப் பெரிய பொறுப்பு இருக்கின்றது. ஏனனில் இவர்கள் புலம் பெயர் தேசத்தில் தம்மை, தமது குடும்பத்தை, தமது தொழிலை ….என சகலவற்றை பாதுகாத்துக் கொண்டு சிறு தொகை பணத்தை பங்களிப்பாக செலுத்திவிட்டு கூட்டங்களிலும் பங்குபற்றிவிட்டு தமது கடமை முடிந்தது என இருந்தவர்கள். ஆனால் இவர்களது செயற்பாட்டால் அங்கு ஆயிரமாயிரம் மனிதர்கள் விடுதலைப்புலிகளில் கட்டாயமாகவோ அல்லது விரும்பியோ சேர்க்கப்பட்டார்கள் அல்லது சேர்ந்தார்கள். இதனால் இன்று புலத்தில் வாழ்ந்த குழந்தைகள்; மாணவார்கள இளைஞர்கள் பலர் மரணித்துவிட்டார்கள். பலர் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். பலர் சிறையில் வதைபடுகின்றனர். ஆனால் புலம் பெயர்ந்தவர்களது தமது குழந்தைகளை இங்கு பாதுகாப்பாக தாம் (பெற்றோர்) விரும்பியவாறு இன்ஜினியர் டாக்டராக வருவதற்காக பல்கலைக்கழகங்களில் சேர்க்கின்றனர். தமது குழந்தைகளுடன் ஆனந்தமான வாழ்வை வாழ்கின்றனர். ஆனால் புலத்தில் இவ்வாறு மரணித்தவர்களின் உறவுகள் எந்தவிதமான ஆதரவும் அரவனைப்பும் இன்றி வாழ்கின்றனர் இன்று. இவர்களது வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டியது புலிகளின் தலைமையை ஆதரித்த புலம் பெயர்ந்த மனிதர்களின் பொறுப்பல்லவா? ஆனால் இன்று இவர்கள் என்ன செய்கின்றார்கள்?
 
விடுதலைப் புலிகளின் தலைமை முன்னெடுத்த தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் பணம் உழைத்தவர்கள் இப்பொழுது அந்த வழிமுறையை விட்டு விட்டு மெல்ல மெல்ல வேறு வழிகளில் பணம் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.  ஒருபுறம் இலங்கை அரசாங்கத்தின் கீழ் வேலை செய்யும் அளவிற்கு கூட சென்றுவிட்டனர். மறுபுறம் புலம் பெயர்ந்த தேசங்களில் இருக்கின்ற பிற இன மொழி நிற மனிதர்களுக்கு எதிரான, பிற்போக்குவாத கொள்கைகளுடைய, வெள்ளை இனவாதக் கன்சேவேர்ட்டி அரசாங்கங்களுக்கும் கட்சிகளுக்கும் ஆதரவளித்துக் கொண்டு தமது பணத்தை பெருக்குகின்ற அரசியல் மற்றும் சொந்த வியாபாரத்தை இலாபகரமாக செய்கின்றனர். இந்த அரசாங்கங்களும் கட்சிகளும் பிழைப்புவாத புலம் பெயர்ந்த தமிழ் அரசியல்வாதிகளும் முதலாளிகளும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்கின்றனர். இதேவேளை புலிகளின் தலைமைகளுக்காக, சர்வதேசத்தில் முன்பு இயங்கியவர்கள் எவ்வாறு புலம் பெயர்ந்த மனிதர்களிடம் சேர்த்த பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகலாம் என சிந்திக்கின்றனர். செயற்படுகின்றனர். இன்னுமொருபுறம் மேலும் சில புலம் பெயர்ந்த முன்னால் விடுதலைப் புலி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும்;;, போராட்டத்தின் தோல்விக்கு யார் காரணம்? யார் உண்மையான துரோகி? யார் உண்மையான போராளி? என்ற பட்டிமன்றங்களை பல தளங்களில் தமக்குள்ளையே நடாத்துகின்றனர். இதன் மூலம் புலத்தில் உள்ள மனிதர்களுக்கு என்ன நன்மையும் கிடைக்கப்போகின்றது?
புலி எதிர்ப்பளார்களோ புலிகள் இல்லாதுபோய்விட்டனர் என்ற திருப்பதியில், புலம் வாழ் மனிதர்கள் தொடர்பாக எந்த கவலையுமின்றி, தாம் வெற்றிகொண்ட இறுமாப்புடன் வெற்றிக்களிப்பில் வாழ்கின்றனர். ஆல்லது  மகிந்தக்களும் ராஜபக்சக்களும் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என அவர்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தோ அல்லது உறுதுiணாக இருந்து செயற்படுகின்றனர்.

இதைவிட போர்க்காலத்தில் தமிழ் பேசும் மனிதர்களுக்கும் புலிகளின் அங்கத்தவர்களுக்கும் எதிராக செய்த போர்க்கால குற்றங்களுக்காகவும் மனித உரிமை மீறல்களுக்காகவும் சிறிலங்காவின் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களுக்கு, தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக சர்வதேங்கள் மீது அழுத்தங்களை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை சிலர் செய்கின்றனர். இதனால் சிறிலங்காவின் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களுக்கு சிலவேளை தண்டணை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஆவ்வாறு கிடைப்பதாயினும் இன்னும் பத்தாண்டுகளோ அல்;லது அதற்கு மேலும் செல்லலாம். இதற்குள் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் எப்படி இருக்கும் என்பதும், அங்கு வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்களுக்கு என்ன நடக்கும் என்பதும் இன்று நடைபெறுகின்ற சம்பவங்கள் சாட்சியாக பதில் கூறுகின்றன.

ஆகவே நாம் நமது வேறுபாடுகளை ஒதிக்கிவிட்டு, கடந்த கால போராட்ட இயக்கங்களின் அடையாளங்களை தவிர்த்து, கொடிகளை தவிர்த்து, சில பொதுவான நியாயமான முக்கியமான அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து, கூட்டாக, தொடர்ச்சியான போராட்டங்களை புலம் பெயர் தேசங்களில் முன்னெடுக்கவேண்டியவர்களாக உள்ளோம். இவ்வாறன ஒரு செயற்பாடு அவசரமானதும் அவசியமானதும் என்றால் தவறுமல்ல மிகையுமல்ல. மேலும் நாம் செயற்படப் போகின்றோம் எனின் இவ்வாறன முயற்சிகளை இன்றைய சூழலில் கூட்டுழைப்பாக குறைந்தபட்ச பொதுவான அடிப்படைக் கோரிக்கைகளுக்கான உடன்பாடுகளுடன் செய்யும் பொழுது மட்டுமே குறிப்பிட்ட செயற்பாட்டிற்கான பலம் அதிகரிப்பதுடன் நமது நோக்கத்தை அடைய முடியும்;.
வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் மற்றும் இவர்கள் அனைவரும் இராணுவ மயமற்ற சூழலில் சுதந்திரமாக வாழ்க்கையை பயமின்றி வாழ்வதற்க்காகவும் புலம் பெயர்ந்த பெயர்க்கப்பட்ட தமிழ் பேசும் மனிதர்களாகிய நாங்கள் இப்பொழுது என்ன செய்கின்றோம்?
இந்த மனிதர்கள் தொடர்பாக புலம் பெயர்ந்த பெயர்க்கப்பட்ட மனிதர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது என்பதை நாம் உணர்ந்துள்ளோமா? ஏனனில் இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களின் இன்றைய நிலைமைகளுக்கு நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பொறுப்பானவர்கள் என்றால் தவறான கூற்றல்ல. ஆனால் நாம் என்ன செய்கின்றோம்?
நாம் வெளிப்படுத்துகின்ற அக்கறை எவ்வளவு உண்மையானது? ஆழமானது?
இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மனிதர்கள் தொடர்பாக நம்முன் குறைந்தது மூன்று முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. அவையாவன…

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சுழலை உருவாக்குவது.
இதற்கு முதல் அடிப்படையாக இருப்பது வடக்கு கிழக்கில் இருக்கின்ற இராணுவமயமாக்கலை இல்லாதுசெய்வது. ஆகவே சிறிலங்கா இராணுவமானது இப் பிரதேசங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை நாம் பிரதானமாகவும் உறுதியாகவும் முன்வைத்து போராட வேண்டும்.

இரண்டாவது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கனக்கான அரசியல் கைதிகள்.
இவர்களில் பலர் சந்தேகத்தின் பேரிலையே கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக எந்தவிதமான விசாரணைகளும் இல்லாது வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் நமது விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒருவகையில் பங்குபற்றியதால் கைதானவர்கள். இவர்களின் வாழ்க்கை சிறைக்குள்ளையே முடிவடையக் கூடாது. நம்மைப் போல (புலம் பெயர்ந்து வாழ்பவர்களைப்;போல) இவர்களும் சுந்திரமாக வாழ்வதற்கான சகல உரிமைகளையும் உடையவர்கள். இவர்களின் விடுதலை நமது பொறுப்பு. நாம் இவர்களை கைவிட்டுவிட கூடாது. ஆகவே இவர்களின் நிபந்தனையற்ற விடுதலைக்கு நாம் நிச்சயமாக தொடர்ச்சியாக செயற்படவேண்டும். போராடவேண்டும்;.

மூன்றாவது இன முரண்பாட்டிற்கு அடிப்படையாக இருக்கின்ற தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுகின்றமை அல்லது அதற்கான தீர்வு இழுத்தடிக்கப்படுகின்றமை என்பவற்றுக்கு எதிராகவும், தீர்வு ஒன்று ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கக்கூடிய சர்வதே அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கான போராட்டங்களை நடாத்துவது. குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கான பாதுகாப்பு, மற்றும் காணி போன்ற முக்கியமான அதிகாரங்களை அந்த மனிதர்களுக்கே வழங்கவேண்டும் என்ற முக்கியமான அடிப்படைக் கோரிக்கைகளை மட்டும் முதன்மைப்படுத்துவது போராடுவது.
• இலங்கையின் இன் முரண்பாட்டிற்கான அரசியல் தீர்வு உடனடியாக முன்வைக்கப்படவேண்டும்.
• அனைத்து அரசியல் கைதிகளையும் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்யவேண்டும்.
• வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேறவேண்டும்.

இந்த மூன்று கோரிக்கைகளும் மிகவும் அடிப்படையானவை. முக்கியமானவை. ஆவசரமானவை.
இவற்றை முன்வைத்து நாம் தொடர்;ச்சியான செற்பாடுகளை போராட்டங்களை புலம் பெயர்ந்த தேசங்களில் முன்னெடுப்பது நமது பொறுப்பு என்றே உணர்கின்றேன்.

நான் அரசியலில் இருந்து ஒதிங்கியதற்கு காரணம் ஆயுதப் போராட்டத்தின் மீது நம்பிக்கை இழந்ததே.; விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை என்றும் இருக்கவில்லை. பிற இயக்கங்களைப் பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பலவகைகளிலும் அடக்கப்பட்ட் மனிதர்களின் விடுதலை தொடர்பாக அக்கறையும் எவ்வ்hறு அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது என்கின்ற கேள்வி என்றும் எனக்குள் இருந்து வந்துள்ளது. சரியான மாற்று வழி என்ன என்பதை இதுவரை நான் அறியேன். ஆனால் அடக்குமுறைகளுக்கு எதிரானதும் விடுதலைக்கானதுமான வழிமுறை என்பது நிச்சயமாக பிரக்ஞையற்ற ஆனால் தன்முனைப்பான மனிதர்களின் ஆயுதப் போராட்டமல்ல என்பதில் மட்டும் உறுதியாக இருக்கின்றேன்.

ஆகவே நம்மிடம் இருக்கின்ற அதி உயர்  அறவழிப் போராட்டவழிமுறை உண்ணாவிரதம் மட்டுமே. இதையே நாம் ஐனநாயக வழியின் அதி ஊச்சமாக, (பிறர் மீது) வன்முறையற்ற ஒரு போராட்டமாக அமைதியான முறையில் பயன்படுத்தலாம். இந்த வழி சரியானதா அல்லது தவறான என்பதையோ காத்த்pரமானதாக தாக்கம் நிறைந்ததா என்பதையும் நான் அறியேன். ஆனால் இன்று நம்மால் சாத்தியமான ஒரு செயற்பாடு இது மட்டுமே.

வரலாற்றில் ஒவ்வொருவரும் தாம் நம்பிய பாதையை தமது பகுத்தறிவுக்கும் உள்ளுணர்வுக்கும் எது சரியானதோ அதைத் தேர்ந்தெடுத்து தம்மை முழுமையான அதில் ஈடுபடுத்தினர். இவர்கள் ஒவ்வொருவரும் தெரிவு செய்த பாதைகள் வென்றமைக்கும் தோற்றமைக்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இக் காரணங்கள் ஆய்வுக்கு உரியவை. ஆனால் மனிதர்களுக்கான பிரச்சனைகளும் அவர்கள் மீதான அடக்குமுறையும் இருக்கும்வரை அதை தீர்ப்பதற்கும் அதிலிருந்து விடுதலை பெறுவதற்கும் ஒவ்வொருவரும் பலவழிகளில் முயற்சிப்பர். இதற்கு மாறாக, ஒன்றையும் முயற்சிக்காது வெறுமனே கடந்தகால புரட்சிகர மற்றும் போராட்ட தலைவர்களை உதாரணங்கள் காட்டி அவர்களின் வீரத்தையும் செயற்பாடுகளையும் கருத்துக்களையும் மீள் மீள கூறிக் கொண்டிருப்பதும் அவர்களின் முகங்களையும் பெயர்களையும் நமது அடையாளங்களாக பயன்படுத்துவது எந்தவிதமான பயனுமற்றது. அவர்களைப் போல நாமும் நமது பொறுப்பை உணர்ந்து முடிந்த சகல வழிகளிலும் முழு முயற்சியுடன் செயற்படும்பொழுதுதான் அந்த தலைவர்கள் மீது ;நாம் வைத்திருக்கின்ற மதிப்புக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். அல்லது இவ்வாறு கூறிக்கொண்டே நமது காலங்களை கடத்துவதாகவே இருக்கும். இது பேராசிரியர் நூகுமான் அவர்கள் கூறுவதைப்போல நமது காலத்தில் இலங்கையின் இன முரண்பாட்டிற்கு தீர்வு காணமுடியாது என்பதையே உறுதிசெய்யும்.

2008ஃ2009ம் ஆண்டுகளில் புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் “சிறிலங்கா அரசாங்கத்தை போரை நிறுத்தக் கோரியும்,” “விடுதலைப் புலிகளை ஆயுதப் போராட்டத்தை கைவிடும்படிகோரியும்”, “பிரச்சனைக்கு தீர்வு ஒன்றை ஏற்படுத்தவதற்காக சர்வதேச ஆதரவைக் கோரியும்” என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து புலத்தில் வாழ்கின்ற மனிதர்களின் சார்பாக ஒரு போராட்டத்தை சர்வதேசளவில் பக்கச்சார்பில்லாம் அன்று செய்திருந்தோமேயானால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என இப்பொழுதும் நம்புகின்றேன்.. இது மட்டுமின்றி விடுதலைப் புலிகளின் தலைமையை மட்டுமல்ல அதன் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களையும் காப்பாற்றியிருக்கலாம். மேலும் போர்க்காலத்தில் நடைபெற்ற பல அநியாயங்களையும் மனித உரிமை மீறல்களையும் பாலியல் வண்புணர்வுகளையும் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் தவிர்த்திருக்கலாம். ஆனால் நாம் செய்தது என்ன?

2009ம் ஆண்டு புலம் பெயர்ந்த மனிதர்களின் (உண்ணாவிரதப்) போராட்டம் பல புலம் பெயர்ந்த நாடுகளில் மிகப் பெரும் ஆதரவுடன் நடைபெற்றது. ஆனால் புலிகளின் கொடியுடன் புலி ஆதரவு போராட்டமாக குறுக்கப்பட்டே நடைபெற்றது. இது தமிழ் தேசியத்தின் அரசியல் கோரிக்கைகளை முதன்மைப்படுத்தாது வெறும் புலிகளின் தலைமையை மட்டும் பாதுகாக்கின்ற போராட்டமாக குறுக்கப்பட்டமையால் அதன் முழுமையான பயனை இழந்தது என்றே நம்புகின்றேன். இதனால் தமது விடுதலைக்கான குரலை கூட கொடுக்கமுடியாத நிர்க்கதியான நிலை புலத்திலுள்ள தமிழ் பேசும் மனிதர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது. அவர்களை நிர்க்கதியாக்கியுள்ளது. இவ்வாறன இன்றைய நிலைமைக்கு; புலம் பெயர்ந்த தமிழ்hகள் முழுப் பொறுப்பையும் எடுக்கவேண்டியது தவிர்க்கமுடியாததும் கட்டாயமானதுமாகும்.

ஆகவே புலம் பெயர் சமூகம் அன்று விட்ட தவறை சரி செய்வதற்கு இப்பொழுதும் சந்தர்ப்பம் உள்ளது. ஏனனில் இன்றும் புலத்தில் வாழ்கின்ற மனிதர்களுக்காக, புலம் பெயர்ந்த தேசங்களில் ஒரு போராட்டத்தை மேற்கொள்வதற்கான தேவை அவசியமாக உள்ளது. புலத்தில் வாழும் மனிதர்களின் நிம்மதியான வாழ்விற்காக. தனி மனித மற்றும் அரசியல் உரிமைகளுக்காக, அவர்கள் சுதந்தரமாக காற்றை சுவாசிப்பதற்காக….புலம் பெயர்ந்த மனிதர்களாகிய நாம், நமது பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டி உள்ளது. துரதிர்ஸ்டவசமாக இன்று மாமனிதர் பட்டங்கள் அளிப்பதற்கு யாரும் இல்லை. ஆனால் போராட்டத்தின் தேவை மட்டும் உள்ளது. ஆனால் யாராலும் முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றது.
இவ்வாறான ஒரு போராட்டத்தில் எந்த பயனையும் எதிர்பாரது, புகழ் மற்றும் பணம், பட்டங்களை எதிர்பாராது செயற்பட யார் முன்வருவார்கள்?

நாடுகடந்த அரசாங்கத்தின் தலைவர்களே முன்வருவீர்களா?
மற்றும் பல்வேறு தமிழ் அவைகளினதும் அமைப்புகளினதும் போரங்களினதும் காங்கிரஸினதும் தலைவர்கள் முன்வருவீர்களா?
கல்விமான்கள் முன்வருவீர்களா?
இன்று புலிகளின் இயக்கமும் தலைமையும் இல்லாதபோதும் புலி எதிர்ப்பாளர்கள் போராட முன்வருவீர்களா?
புலம் பெயர்ந்த நாடுகளில் வீடுகளில் சும்மா இருக்கின்ற மனிதர்கள் முன்வருவீர்களா?
 
இலங்கையில் சிறிலங்காவின் சிறையில் இருப்பவர்களே தமது விடுதலைக்கான உண்ணாவிரதப்போராட்டம் நடாத்தும் போது…
எந்தவிதமான பயமுமின்றி தயக்கமுமின்றி அரசாங்கத்திற்கு எதிராக அந்த மனிதர்கள் வாக்களிக்கும் போது….
தமிழர்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் சிங்கள இளைஞர்களே இலங்கையின் தலைநகரில் குரல் கொடுக்கும் பொழுது…போராடும் பொழுது….
புலம் வாழ் மனிதர்களின் விடுதiலாக்காகவும் மற்றும் இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் வாழும் வடக்கு கிழக்கு மனிதர்களின் சுதந்திரத்திற்காகவும்,….
குறைந்த பட்ச ஐனநாயக உரிமைகளுடன் சுதந்திரமாக வாழும் புலம் பெயர்ந்த நாம் போராடா முடியாதா?

இவ்வாறு முன்னெடுப்படுகின்ற செயற்பாடானது, எந்த அமைப்பு சார்ந்த போராட்டமோ அல்லது ஒரு அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் போராட்டமோ அல்லது ஒரு கொடியின் கீழ் நடைபெறும் போராட்டமோ அல்ல என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.
இப் போராட்டமானது புலத்தில் வாழும் தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைக்காக உரிமைகளுக்காக சுதந்திரத்திற்காக புலம்பெயர்ந்த மனிதர்களின் ஒன்றனைந்த செயற்பாடாக இருக்கவேண்டும்;.
மீண்டும் ஒருமுறை இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் சர்வதேச நாடுகள் எங்கும் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மனிதர்களின் உரிமைகளுக்கான சுதந்திரத்திற்கான விடுதலைக்கான குரல்கள் அமைதியான போராட்டமொன்றினுடாக ஒலிக்கட்டும்.

இதுவே தமிழ் பேசும் மனிதர்களின் உரிமைகளுக்காக விடுதலைக்காக சுதந்திரத்திற்காக இதுவரை மரணித்த ஒவ்வொருவருக்கும் நாம் செய்யும் அஞ்சலியாகும். ஏனனில் இந்த மரணங்கள் மதிப்பற்றவையாக அர்த்தமற்றவையாக வரலாற்றில் போய்விடக்கூடாது…..

நன்றி
மீராபாரதி
26.07.2011
இதையும் வாசியுங்கள்…
என்ர நிலமையை முதலாவதா எழுது…
http://www.yarl.com/forum3/index.php?showtopic=87646


Leave a comment

Categories