Posted by: மீராபாரதி | September 12, 2020

தமிழ் தேசியம்: ஸ்டாலினுக்கு ஒரு பதிலுரை

தமிழ் தேசியம்: ஸ்டாலினுக்கு ஒரு பதிலுரை

ஸ்டாலினுக்கு யாழ் மேலாதிக்கத்தை விமர்சிக்கும் உரிமை உள்ளதா?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம் அவர்கள் யாழ் மேலாதிக்கம் எவ்வாறு வரலாற்றில் செயற்பட்டது என்ற குறிப்பொன்றை நிலாந்தன் அவர்களின் ‘கிழக்கு மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போவதல்ல” கட்டுரைக்குப் பதிலாக விரிவாகவும் சரியாகவும் முகநூலில் எழுதியிருக்கின்றார். இந்த வரலாற்றுக் குறிப்புகளுடன் எந்த முரண்பாடுகளும் இல்லை.  ஆகவே முதலில் என் மீது சுமத்தப்படுகின்ற யாழ், ஒடுக்கும் சாதி, ஆண், போன்ற பல்வேறு அடையாளங்களினால் கடந்த காலங்களிலிருந்து பல மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். ஏதோவொரு வகையில் இந்த ஒடுக்குமுறைகளில் பங்காளியாக இல்லாமலிருந்தாலும் அதனால் கிடைக்கின்ற பலாபலன்களை அனுபவத்திருக்கின்றேன். இந்தடிப்படையில் இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களிடம் தனிப்பட மன்னிப்பு கேட்க வேண்டியது எனது பொறுப்பாகும். அதேநேரம் இந்த விமர்சனத்தை எழுதுவதால் என் மீது பல முத்திரைகள் குத்தப்படலாம். ஆனால் என்னிடம் பிரக்ஞையாக ஒடுக்கும் சிந்தனைகளோ செயற்பாடுகளோ இல்லை என்பேன். இருப்பினும் நானறியாமல் பிரக்ஞையின்மையாக வெளிப்படுமாயின் அவற்றை சுட்டிக்காட்டும் பொழுது அதற்காக சுயவிமர்சனம் செய்து கொண்டு அதிலிருந்து வெளிவர தயாராகவே உள்ளேன். ஏனெனில் பிரதேச மேலாதிக்க உணர்வு சிந்தனை, ஆணாதிக்க சிந்தனை, ஒடுக்கும் சாதியின் ஆதிக்க சாதி சிந்தனை எனப் பல சிந்தனைகள் எனக்குள் இருக்கலாம். இவற்றையெல்லாம் நம் வாழ் நாளில் ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக வாழ்வதனுடாக அதனிலிருந்து முறித்துக் கொண்டு வெளிவரலாம். அதற்கான முயற்சிகளையே செய்கின்றேன். அதேநேரம்  ஆணாதிக்க சிந்தனைகளுக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் பிரதேச வாதங்களுக்கும் இனவாதங்களுக்கும் எதிராக எனது குரலை பதிவு செய்தே வருகின்றேன். இந்தப் பின்னணியில்தான் ஸ்டாலின் அவர்களின் யாழ் மேலாதிக்கம் தொடர்பான பதிவை விமர்சிக்க முயற்சிக்கின்றேன்.

முதலில் யாழ் சைவ வெள்ளாள உயர் வர்க்க ஆதிக்க சக்திகளும் இவர்களைப் பிரதிநிதித்துவப்படுதிய அரசியல்வாதிகளும் பெரும்பாலும் சாதிமான்களாக, பிரதேசவாதிகளா, மதவாதிகளாக, வர்க்கவாதிகளாக, இருந்துள்ளார்கள் என்றால் மிகையல்ல. இவர்களிடமே சகல அதிகாரங்களும் இருந்தன. இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களையும் இவர்களே பிரதிநிதித்துவம் செய்தார்கள். இந்தடிப்படைகளில் ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டிய வரலாறுக் குறிப்புகள் முக்கியமானவை. ஏன் இந்த முரண்பாடுகள் போராட்ட காலத்திலும் தொடர்ந்தன. போர் முடிந்த பின்பும் தொடர்கின்றன. இதன் ஒரு விளைவுதான் விடுதலைப் புலிகளிலிருந்து கருணா பிரிந்து சென்றது எனலாம்.  வடபகுதியைச் சேர்ந்தவன் என்றடிப்படையில் ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டிய நம் தலைவர்கள் கடந்த காலங்களில் இழைத்த பெறும் தவறுகளுக்காக முதலில் மன்னிப்பு கேட்கின்றேன். இப்பொழுது நம் தமிழ் ;தலைவர்களின் தவறுகளை ஏற்றுக் கொண்டு ஸ்டாலின் அவர்கள் முன்வைக்கின்ற அரசியலை விமர்சனபூர்வமாக அணுக முயற்சிக்கின்றேன்.

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஆணாதிக்கவாதிகளாக இருந்தால் என்ன ஒடுக்கப்படுகின்றன பெண்களாக இருந்தால் என்ன, ஒடுக்கும் சாதிகளாக இருந்தால் என்ன, ஒடுக்கப்படுகின்ற சாதிகளாக இருந்தால் என்ன, யாழ் மேலாதிக்க சக்திகளாக இருந்தால் என்ன, புறக்கணிக்கப்படுகின்றன மற்ற (வன்னி, கிழக்கு) பிரதேச மக்களாக இருந்தால் என்ன, பணக்காரர்களாக இருந்தால் என்ன, ஏழைகளாக இருந்தால் என்ன, முதலாளிகளாக இருந்தால் என்ன, தொழிலாளர்களாக இருந்தால் என்ன இருபால் உறவு கொண்டவர்களாக இருந்தால் என்ன, ஒரு பால் உறவு கொண்டவர்களாக இருந்தால் என்ன, ஆண்களாக இருந்தால் என்ன, பெண்களாக இருந்தால் என்ன, வேறு பால் வகையினராக இருந்தால் என்ன இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதனால் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளால் ஒடுக்கப்படுகின்றனர் புறக்கணிக்கப்படுகின்றனர். 2009ம் ஆண்டுவரை தமிழர்கள் தமிழர்கள் என்பதற்கானவே தயவு தாச்சணியமின்றி அழிக்கப்பட்டனர். இது ஒரு இனவழிப்பு என்றால் மிகையல்ல. இவ்வாறான ஒரு நிலையில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்க்கும் அதேவேளை, பிரதேசவாதங்களை எதிர்க்கும் அதேவேளை, ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அதேவேளை. முதலாளிகளின் ;சுரண்டலை எதிர்க்கும் அதேவேளை சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஒடுக்குமுறைகளையும் புறக்கணிப்புகளையும் அதன் மேலாதிக்கத்தையும் எதிர்க்க வேண்டும்.  இதுவே நியாயமான ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பான அரசியலாக இருக்கும். ஆனால் ஸ்டாலின் அவர்கள் எவ்வாறான அரசியல் செயற்பாட்டை யார் சார்பாக முன்னெடுக்கின்றார் என்பதே விமர்சனத்திற்குரியது.

ஸ்டாலின் அவர்கள் யாழ் மேலாதிக்க வாதத்தை சரியாக எதிர்க்கும் அதேநேரம் தமிழ் மக்களை கொன்றொழித்து சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தை முன்னெடுக்கின்ற ராஜபக்ச சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றார். இக் கூட்டானது இவர் யாழ் மேலாதிக்கம் மீது முன்வைக்கின்ற  விமர்சனங்களை வலுவிழக்கச் செய்கின்றது எனலாம்.  உண்மையிலையே யாழ் மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமாயின் வடக்கு கிழக்கில் எல்லா வகையிலும் ஒடுக்கப்படுகின்ற மக்களை ஒன்றினைத்து அவர்கள் சார்பாக செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படுகின்ற ஒருவர் யாழ் மேலாதிக்கம் தொடர்பாக விமர்சனத்தை முன்வைப்பாராயின் அதில் ஒரு நியாயம் நேர்மை இருக்கும். அவ்வாறு இல்லாமல் இலங்கையில் தமிழர்கள் என்பதற்காக ஒடுக்கும் சக்திகளான சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு வெறுமனே அக ஒடுக்குமுறைகளை மட்டும் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்குவது சந்தேகத்திற்கும் விமர்சனத்திற்கும் உரியது. இவர் எந்த கிழக்கு மக்களின் அக்கறையின்பால் மேற்குறிப்பிட்ட தமிழ் தலைவர்களின் ;வரலாற்று தவறுகளை குறிப்புகளாக முன்வைத்தாரோ, அதே மக்கள் சிங்கள பௌத்த பேரினவாத்தினால் ஒடுக்கப்படுவதை உணரத் தவறியது கவனிக்க மறந்தது எப்படி?

இன்றைய ஈழத் தமிழ் பிரதேசமான வடக்கு கிழக்கில் சாதிய ஒடுக்குமுறைகள், ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் பால் பாகுபாடுகள், மதப் புறக்கணிப்புகள் தொழிலாளர்களை சுரண்டுதல்கள் இருப்பதுபோல பிரதேச வேறுபாடுகளும் புறக்கணிப்புகளும் காணப்படுகின்றன. சமூக விடுதலையை நேசிப்பவர்களாக இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதில் எந்த தயக்கமோ சந்தேகமோ இல்லை. ஆனால் தூரதிர்ஸ்டவசமா தமிழ் தேசிய அரசியலில் காலம் காலமாக விடுதலைப் புலிகளுக்கு முன்பும் அவர்களது காலத்திலும் அதன் பின்பும் யாழ் உயர் வர்க்க வெள்ளாள மேலாதிக்கமே தொடர்கின்றது என்றால் மிகையல்ல. அந்தவகையில் விடுதலைப் புலிகளிலிருந்து கருணாவும் பிள்ளையானும் பிரிந்து சென்றபோது முன்வைத்த குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் நியாயமானவையே. ஆனால் அந்த அநீதிகளை கேள்விகேட்டு பிரிந்து சென்றவர்கள் அமைதியாக இருந்திருக்கலாம். அல்லது கிழக்கு மக்களின் விடுதலைக்கான அரசியலை செய்திருக்கலாம்.

ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கும் ராஜபக்சக்களுக்கும் முண்டு கொடுத்து சாமரம் வீசுகின்றார்கள். இச் செயற்பாடே இவர்களது யாழ் மேலாதிக்கம் தொடர்பான விமர்சனத்தை சந்தேகத்திற்குள்ளாக்குகின்றது. ஏனெனில் இதனுடாக இவர்கள் சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்திற்கு சேவை செய்கின்றார்கள். சிங்கள பௌத்த பேரினவாதமே இன்று இலங்கையில் இருக்கின்ற முக்கியமான ஒரு பிரச்சனை எனலாம்.  ஏனெனில் சிங்கள பௌத்த பேரினவாதமானது அரசியல் பலத்தை, இராணுவ பலத்தை மட்டுமல்ல ஜனநாயக பலத்தையும் கொண்டுள்ளார்கள். இவர்கள் தமிழர்களுக்குள் பிளவுகளையும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றார்கள். இந்த நோக்கத்திற்கு துணைபோகின்ற வகையில் கருணாவும் பிள்ளையானும் இவர்து ஆலோசகரான ஸ்டாலினும் பிரதேசவாதத்தையும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றார்கள். இவ்வாறு ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு எதிராக செயற்படுகின்ற இவர்களுக்கு யாழ் மேலாதிக்கம் தொடர்பாக கதைப்பதற்கு என்ன அருகதை உள்ளது?.

மக்களின் விடுதலையா? விடுதலைப் புலிகளாக? என்றால் நான் நிற்கும் பக்கம் மக்களின் விடுதலையே. ஏனெனில் விடுதலைப் புலிகள் மக்கள் விடுதலையைப் பெற்றுத் தரமாட்டார்கள் என முழுமையாக அன்று நம்பியது மட்டுமல்ல புரிந்தும் கொண்டிருந்தேன். அதேநேரம் விடுதலைப் புலிகளா? சிங்கள பௌத்த பேரினவாத அரசா? என்றால் எனது ஆதரவு விடுதலைப் புலிகளுக்கே. எவ்வாறு ஜேவிபியினர் உண்மையான இடதுசாரிகளாக இல்லாதபோதும் ஜேவிபியா? அல்லது சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகளாக? என்றால் எனது ஆதரவு ஜேவிபிக்கே. இது ஒப்பிட்டடிப்படையில் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் ஒடுக்கப்படும் சக்திகள் சார்பாகவும் இருக்கின்ற அரசியல் நிலைப்பாடாகும். மாறாக ஒடுக்கும் அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற யாருக்கும் சமூகங்களுக்குள் இருக்கின்ற எந்த ஒடுக்குமுறைகள் தொடர்பாகவும் விமர்சிப்பதற்கு உரிமையில்லை. ஜனநாயக அடிப்படையில் அவ்வாறு உரிமையை எடுத்துக்கொண்டாலும் அந்த விமர்சனத்தில் உண்மையில்லை. நேர்மையில்லை. இந்தடிப்படையில் ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த யாழ் மேலாதிக்கம் தொடர்பான விமர்சனம் உண்மையாயினும் அதை முன்வைத்தமைக்கான நோக்கத்தில் நேர்மையில்லை என்றே புரிந்து கொள்கின்றேன். ஒடுக்குமுறையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற அவருக்கு அந்த உரிமை உண்டா என கேட்பதிலும் தவறில்லை.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு கட்சியும் மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அனைவரும் பிழைப்புவாதிகளாகவே இருக்கின்றனர். தூரதிர்ஸ்டமாக ஒடுக்கப்படுகின்ற மக்களுக்குள் இருந்து எந்த தலைமையும் உருவாகவில்லை. அவ்வாறு உருவாகின்ற தலைமைகளையும் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற யாழ் வெள்ளாள கொழும்பு மேட்டுக்குடி ஆண்கள் நசுக்கிவிடுகின்றனர். இவர்களால் தமிழ் தேசிய அரசியலானது சிக்கி சின்னாபின்னமாகி பிற்போக்கான அரசியல் பயணத்தையே முன்னெடுக்கின்றார்கள். ஆகவே இன்றைய தேவை எல்லாவகையிலும் ஒடுக்கப்படுகின்ற தமிழ் மக்கள் சார்பான முற்போக்கான தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடும் செயற்பாடுமே அவசியமாகும். மாறாக எந்த மேலாதிக்கத்திற்கும் துணைபோகின்ற செயற்படால்ல. அது சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு துணைபோவது மட்டுமல்ல யாழ் சைவ வெள்ளாள ஆண் மேலாதிக்கத்திற்கு துணைபோவதாக இருந்தாலும் தவறானதே. ஸ்டாலின் அவர்களுக்கும் அவரது கட்சிக்கும் தம் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமாயின் இவ்வாறான ஒரு அரசியலையே முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு முன்னெடுக்கும் பொழுது இவ்வாறான விமர்சனங்கள் ஆரோக்கியமானவை மட்டுமல்ல ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்குப் பயனுள்ளவையுமாகும்.

வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்கள்சார்பாக போராடிய தலைவர்களே புகழுடன் நினைவு கூரப்படுகின்றார்கள். மக்களை ஒடுக்கிய தலைவர்கள் தூற்றப்பட்டு சபிக்கப்படுகின்றார்கள். மறக்கவும்படுகின்றார்கள். நாங்கள் வரலாற்றில் யாருடன் எந்தப் பக்கம் நிற்கப்போகின்றோம் என்பது எங்களின் தெரிவு. இதை ஸ்டாலினும் அவரது கட்சியும் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.

மீராபாரதி

மே 18, கொவிட்-19 என்பவற்றின் பின்னணியில்: நிலாந்தன் - Vanakkam London

நிலாந்தன் அவர்களின் கட்டுரையை வாசிக்க
http://www.nillanthan.com/4554/

ஸ்டாலின் ஞானம் அவர்களின் குறிப்பை வாசிக்க…

ஜனநாயகமற்றவர்களின் ஜனநாயக அரசியல்


Leave a comment

Categories