Posted by: மீராபாரதி | October 15, 2017

ஆற்றுப்படுத்தலும் ஆற்றமுடியா வலிகளும்

இந்திய வீடமைப்புத் திட்டம்: மீளக் குடியேறியவர்களுக்கான புதை குழி?

IMG_20171003_112453606_HDRஆற்றுப்படுத்தல் பயிற்சிகளை வழங்க நாம் சென்ற பெரும்பாலான கிராமங்கள் பிரதான வீதியிலிருந்து பல மைல்கள் உள்ளே இருப்பவை. செம்பாட்டு மண் அல்லது கிரவல் வீதிகளைக் கொண்டவை. காட்டுப் பாதைகள். இரவுகளில் பயணிக்க முடியாத பாதைகள். இங்கு வாழும் மக்கள் மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் கூலித் தொழில் செய்து வாழ்பவர்கள். அன்றாடம் உழைத்து உண்டு வாழ்பவர்கள். இவர்களாக இந்தப் பயிற்சிகளில் ஆர்வமாகவும் ஆனந்தமாகவும் பங்குபற்றினார்கள் என்பது நம்பமுடியாத ஒன்று. ஆனால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லையில் மன்னார் மாவட்டத்திலுள்ள ஒரு மீளக் குடியேற்றக் கிராமம் பிரதான வீதியிலிருந்து கொஞ்சத் தூரத்திலையே உள்ளது. மன்னார் நகரிலிருந்து ஆரம்பித்த நமது பயணம் வெள்ளாங்குளம் சென்று அங்கிருந்து துணுக்காய் ஊடாக மாங்குளம் செல்கின்ற பாதையில் சென்றோம். வீதியில் கானல் நீர் தக தகத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது கையில் ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு மற்றக் கையில் குடையைப் பிடித்துக் கொண்டு அருகில் இன்னுமொரு குழந்தையுடன் ஒரு பெண் எங்கள் வாகனத்தை நிறுத்தினார். நான் மாங்குளம் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும். நீங்கள் போகும் வரை வருகின்றேன் எனக் கூறி ஏறினார். இப் பாதையில் பஸ் சேவைகள் இல்லை. ஆகவே பெரும்பாலும் நாம்  நடந்தே செல்வோம் அல்லது இப்படி வாகனங்களை மறித்து ஏறிச் IMG_20171003_124607024_HDRசெல்வோம் என்றார். பின் நாம் எங்கே போகின்றோம் என அவர் கேட்டார். நாம் கூறினோம். அப்பொழுது அவர் நீங்கள் அந்த இடத்தைக் கடந்து வந்துவிட்டீர்கள் என்றார்.  அவர் அவ்வாறு சொல்லும் பொழுது நாம் ஒரளவு தூரம் பயணம் செய்திருந்தோம். என்ன செய்வது அவரையும் குழந்தைகளையும் அந்த இடத்தில் இறக்கி விட்டு விட்டு நாம் கவலையுடன் திரும்பினோம். அவர் குழந்தையை தூக்கிக் கொண்டு குடையைப் பிடித்துக் கொண்டு அந்தக் கொடும் வெயிலில் கானல் நீரின் மீது நடந்தார். மற்றக் குழந்தை அவரைப் பின்தொடர்ந்தது. இரு மருங்கிலும் பற்றைக் காடுகள் இருந்தபோதும் ஒதுங்குவதற்கு நிழல் மரங்களும் இல்லை. நல்லதொரு ஓவியர் இக் காட்சியை ஓவியமாக்கியிருப்பார்.

IMG_20171003_124844862நாம் திரும்பி நமது பயணத்தை தொடர்ந்தோம். மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள வெள்ளாங்குளம் கிராம சேவையாளர் பகுதிக்குள் உள்ள பருத்தித் தோட்டம் என அழைக்கப்பட்ட ஒரு கிராமத்திற்கு பயிற்சிகள் வழங்க சென்றோம். ஆனால் எம்மால் அங்கு பயிற்சி வழங்க முடியவில்லை. ஏனெனில் அதற்கான வசதிகள் அவர்களிடம் இருக்கவில்லை. மர நிழலே அவர்கள் ஒன்று கூடி உரையாடுவதற்கான இடம். அவர்களுடன் உரையாடுவதே அவர்களுக்கு நாம் வழங்கும் பெரும் பயிற்சி என உணர்ந்தேன். அதை மட்டும் செய்து விட்டு வந்தோம். அப்பொழுது குறிப்புகள் எடுத்தேன். இப்படி பல பேர் வந்து குறிப்புகள் எடுத்தார்கள் உறுதி மொழிகள் தந்தார்கள் ஆனால் எமது வாழ்க்கையில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை எனக் கவலைப்பட்டார்கள். புதிதாக ஒரு கட்டிடத்தைக் கட்டி உள்ளார்கள். இவ்வாறான சந்திப்புகளுக்கும் பயிற்சிகளுக்கும் அதைப் பயன்படுத்தலாம். ஆனால் அதற்கான திறப்பு விழா நடைபெறவில்லை என்பதால் பூட்டி வைத்திருக்கின்றார்கள். ஆகவே அதைப் பயன்படுத்த முடியாது இப்படி மரநிழலில் கூடுகின்றோம் என்றார்கள்.

IMG_20171003_122120324இப் பகுதியில் இந்திய வீட்டுத் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலிருந்த காணி இல்லாத மாற்றுத்திறனாளிகள்,  பெண் தலைமைத்துவ மற்றும் புனர்வாழ்வு பெற்ற குடும்பங்களை குடியேற்றி உள்ளார்கள். இத் திட்டத்தில் 72 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 12 வீடுகளை அன்றிருந்த உதவி அரசாங்க அதிபர் தனது பொறுப்பில் எடுத்துக் கட்டியுள்ளார்.  ஒரு வீட்டிற்கு கொடுக்கப்பட்ட நிதி 12 இலட்சங்கள். ஆனால் இந்த வீடுகள் ஆறு ஏழு இலட்சங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மிகுதிப் பணத்தை அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருந்தவர்கள் சுருட்டிவிட்டார்கள். அதனால் தான் இந்த வீடுகள் ஐந்து வருடங்களில் மரங்கள் உக்கி உருகுலைந்து போகின்றன. இதைக் கட்டுவதற்கு சப்பு மரங்களையே பயன்படுத்தியுள்ளார்கள். நிலங்கள் வெடிக்கின்றன. அல்லது குழிகள் ஏற்பட்டு புதைகின்றன. உறுதியில்லாத IMG_20171003_122204496நிலங்கள். சுவர்கள் வெடிக்கின்றன. மழை காலங்களில் வீடுகளினுள் வெள்ளம் வருகின்றது. கூரைகளினால் மழை கொட்டுகின்றது.  வீடு என்பது மழை காலங்களிலும் வெய்யில் காலங்களிலும் நிம்மதியாக ஒதுங்குவதற்கான ஒரு இடம். ஆறுதலாக இருப்பதற்கான ஒரு இடம். பயமின்றிப் படுப்பதற்கான உறைவிடம். ஆனால் வீட்டிற்குள் பாம்புகள் வருவது மட்டுமல்ல வீட்டின் நிலங்களிற்கு அடியில் பாம்பு புற்றுகள் இருக்கின்றன. வெய்யில் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு. நாம் எப்படி நிம்மதியாக இருப்பது? மகிழ்ச்சியாக வாழ்வது? இதனால் இந்த வீட்டுத் திட்டம் தமக்கான புதை குழியா? என்று கேட்கின்றார்கள்.

IMG_20171003_122151379இக் குடியேற்றத்திலுள்ள பெரும்பாலானவர்கள் கூலி வேலை செய்பவர்கள். ஒரு சிலர் மட்டும் புலிகள் உருவாக்கிய ஆனால் இன்று இராணுவத்தினர் பராமரிக்கின்ற மாமரங்கள் மற்றும் முந்திரிகை மரங்கள் உள்ள தோட்டத்தில் வேலை செய்கின்றார்கள். உண்மையில் வடமாகாண சபை இவ்வாறான தோட்டங்களை தாம் பொறுப்பேற்று வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்குவதுடன் வருமானத்தையும் பெறலாம். ஏன் இராணுவம்  இவற்றிலிருந்து பயன் பெற அனுமதிக்க வேண்டும்? மற்றவர்கள் தூர இடங்களுக்கு வேலைக்குச் செல்கின்றார்கள். ஆகவே இந்த வீட்டை திருத்தும் பொருளாதார வசதிகள் இவர்களிடம் இல்லை. வீட்டின் நிலையை அரசாங்க அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினால் உங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தாயிற்று இனி என்ன நாமே சமைத்தும் தர வேண்டுமா என நக்கலாக கேட்கின்றார்கள். அவர்களுக்கு எங்கள் கஸ்டம் புரியவில்லை. எங்கள் வேதனையை உணர முடியவில்லை. ஆனால் இந்த திட்டம் ஆரம்பிப்பதற்கு முதல் எங்களுக்குப் பல உறுதி மொழிகள் தந்தார்கள். நல்ல வீடு. வசதியான இடம். தண்ணீர் உண்டு. தோட்டம் உண்டு. வேலையும் தருவோம். கட்டில், மேசை, கதிரைகள் எல்லாம் தருவோம். இப்படி பல உறுதி மொழிகள். ஆனால் நாம் குடி வந்தவுடன் எம்மைக் கைவிட்டுவிட்டார்கள். உண்மையில் புதை குழியில் தள்ளிவிட்டார்கள் என்பதே உண்மை. ஆனால் அவர்கள் இத் திட்டத்தினால் நன்றாக உழைத்திருப்பார்கள். IMG_20171003_124638547இல்லை இல்லை நல்ல கம்மிசன்அடித்திருப்பார்கள். உண்மையில் எங்களை வைத்து அனைவரும் உழைக்கின்றார்கள். இனி அவர்களுக்கு என்ன கவலை. அவர்களுக்குத் தேவையானது கிடைத்துவிட்டது. எம்மையும் குடியேற்றிவிட்டார்கள். தங்கள் பொறுப்பு முடிந்து விட்டது என ஒதுங்கிவிட்டார்கள். உண்மையில் இந்த வீடுகள் நன்றாக உறுதியாக கட்டப்பட்டுள்ளனவா என பொறுப்பானர்வர்கள் பரிசோதித்து உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் அதை யார் செய்கின்றார்கள்.?போரில் பாதிக்கப்பட்ட மக்களை இவ்வாறுதான் அரசாங்க அலுவலர்களும் மக்கள் பிரதிநிதிகளும் துன்புறுத்துவதா? உண்மையில் இந்த அடிமட்ட நாளாந்த உழைப்பில் வாழும் ஏழை மக்களே நமது விடுதலைக்காக பல உயிர்களை தியாகம் செய்தவர்கள். ஆனால் இன்று அவர்களை அனைவரும் கைவிட்டுவிட்டோம்.

IMG_20171003_122102861பத்திரிகையில் உங்கள் கஸ்டங்களைப் போடுகின்றோம். அதுவே எம்மால் செய்யக் கூடியது. உங்களைப் படம் எடுத்துப் போடவா என அனுமதி கேட்டோம். எதையாவது செய்து எங்கள் பிரச்சனைகளைத் தீர்த்தீர்கள் என்றால் அதுவே போதும். உங்களுக்கு கோடிப் புண்ணியம் கிடைக்கும் என வாழ்த்தி அனுப்பினார்கள்.

ஆற்றுப்படுத்தல் ஆரோக்கியமாகப் போராட…

IMG_20170822_130550722_HDR (2)மன்னார் மாவட்டத்திலுள்ள பல கிராமங்களிலுள்ள பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட பெண்களுக்கும் மற்றும் கடந்த காலங்களில் இழப்புகளை சந்தித்து இன்று பல பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற பெண்களுக்கும் ஆற்றுப்படுத்தல் பயிற்சிகளை வழங்கினேன். இவற்றை மன்னார் மாதர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தியது. ஆறு நாட்களில் பன்னிரெண்டு கிராமங்களில் பயிற்சிகள் வழங்கினோம். இக் குடும்பங்களே கடைசியாக நடைபெற்ற போரில் முதலில் இடம் பெயர்ந்து நீண்ட நாட்கள் நீண்ட தூரங்கள் நடந்து முள்ளிவாய்க்காளை அடைந்தவர்கள். பின் அங்கிருந்து வெளியேறி முகாம்களில் வாழ்ந்து மீளக் குடியேறியவர்கள். இவர்கள் அனைவரும் நினைத்திருந்தால் அன்று ஒரு மணித்தியாலத்தில் பாலத்தைக் கடந்து “அந்தப் பக்கம்” அதாவது இராணுவத்தின் பக்கம் ஆரம்பத்திலையே சென்றிருக்கலாம். ஆனால் விடுதலைப் போராட்டத்தின் மீதான நம்பிக்கையினாலும் தமது கணவர்கள் மகன்கள் மகள்கள் உறவினர்கள் இயக்கத்தில் இருந்தமையினாலும் முள்ளிவாய்க்கால் வரை பயணம் செய்தார்கள். இவர்களின் ஆழமான நம்பிக்கை இறுதியில் சிதறடிக்கப்பட்டது. இது ஆழமான மன வடுக்களை இவர்களுக்குள் உருவாக்கியுள்ளது என்றால் மிகையல்ல.

IMG_20170825_111010868 (2)இப் பயிற்சிகளில் கலந்து கொண்ட பெண்களில் பெரும்பான்மையானவர்கள் கூலித் தொழில் செய்பவர்கள். இப் பயிற்சியானது இவர்களுக்குப் பயனுள்ளது என்பதில் எனக்கு சந்தேகமிருக்கவில்லை. ஆனால் எத்தனை பேர் முழுமையாக பங்கு பற்றுவார்கள் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது. இதற்கு நமது பண்பாட்டு கலாசார அம்சங்கள் முக்கியமான தடையாக இருக்கும் என யோசித்தேன். ஆனால் பல ‘பெண்கள் இப் பயிற்சிகளின் போது மனம் திறந்து தமது இழப்புகளை, சோகங்களை, கவலைகள் பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமின்றி பயிற்சியின் போது முழுமையாகப் பங்குபற்றினார்கள். ஆச்சரியப்படும் வகையில் தமது விருப்பங்களை அடக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.. இவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் தமது மனச் சுமைகப் பகிர்ந்து கொள்ளவும் கேட்கவும் ஒருவர் வேண்டும் என்பதே. இந்த நிகழ்வு தமது எதிர்பார்பை பூர்த்தி செய்தமைக்கான நன்றி கூறினார்கள். சிலர் தம் வாழ் நாளில் இன்றுதான் இவ்வளவு சந்தோசமாக இருந்ததாக கூறினார்கள். சிலர் சின்னக் IMG_20170901_120027419 (2)காலத்தில் சந்தோசமாக விளையாடியபின் இன்றுதான் விளையாடிதாக கூறினார்கள். சிலர் தமது உடல் நோக்கள் வலிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனதாக கூறினார்கள். வலியுடன் வந்தவர்கள் வலிமையுடன் சென்றார்கள். இவை எனக்குத் தனிப்பட மகிழ்ச்சியையும் பயிற்சி தொடர்பான திருப்தியையும் நம்பிக்கையையும் தந்தது. ஆம் அவர்கள் தம்மை மாற்றவும் ஆரோக்கியமாக வாழவும் போராடவும் தயாராகவே இருக்கின்றார்கள். ஆனால் எம்மில் எத்தனை பேர் அவர்கள் கூறுவதைக் கேட்கவும் புதிய வழிகளைக் காட்டவும் தயாராக இருக்கின்றோம்?

IMG_20171002_162348334 (2)இப் பயிற்சிகளில் பங்கு பற்றிய பல பெண்கள் கடந்த நாற்பது வருடங்களாக பல இழப்புகளை இழந்தும் வடுக்களை சுமந்து கொண்டும் வாழ்கின்றார்கள். பலர் இறுதித் போரில் தம் குடும்ப உறவுகள் பலரை ஒரே நாளில் இழந்துள்ளார்கள். அவர்கள் உடல்கள் சிதைவுற்றதைக் கண்ணால் கண்டவர்கள். பலர் தம் முன்னாலையே சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். சில குடும்பங்களிலுள்ள பெண்கள் தமது தந்தையரை 90களில் இழந்து கணவர்களை 2000ம் ஆண்டுகளில் இழந்து பிள்ளைகளை 2009ம் ஆண்டு இறுதிப் போரில் இழந்துள்ளார்கள். சில தாய்மார்களுக்கு மூன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள். இப் பிள்ளைகளில் பலரை இழந்துள்ளனர். சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் கதைகள் அனுபவங்கள் பெரும் சோகங்களைக் கொண்டது. சில கிராமங்களில் புலிகளிலிருந்து சரணடைந்து புனர்வாழ்வு பெற்றவர்களும் புலிகளினால் கட்டாயப்படுத்திப் பிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து தப்பி வந்தவர்களும் ஒன்றாக இப் பயிற்சிகளுக்கு வந்தார்கள். இவர்கள் தமது அனுபவங்களை வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு மாதம் புலிகளில் இருந்தமைக்காக மூன்று வருடங்களும் ஒரு வருடம் இருந்தமைக்காக நான்கு வருடங்கள் சிறை வாழ்வும் புனர்வாழ்வும் பெற்றுள்ளார்கள் என்று ஒரு தாய் வருந்தினார்.

இறுதிப் போர் முடிந்த பின் இழப்புகளை சந்தித்தவர்கள் மட்டுமல்ல 90ம் ஆண்டும் அதற்கு முன்பும் தம் உறவுகளை இழந்தவர்களும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளும் இன்றுவரை தமது சுமைகளை சுமந்த வண்ணமே உள்ளார்கள். இவர்களது சுமைகளை இறக்கி ஆற்றுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ வழி செய்வது என்பது பல வழிகளில் பயனளிக்கும் செயற்பாடாகும். தமது குடும்பங்களை வழிநடாத்தவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடவும், அதற்காக நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடவும் எனப் பல செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இவர்கள் ஆரோக்கியமாக உடல் உளவள நலத்துடன் இருப்பதும் பிரக்ஞையுடன் செயற்படுவதும் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளையும் வளங்களையும் வழங்க வேண்டியது நமது பொறுப்பாகும். தேசிய சமூக அரசியல் விடுதலைகள் மட்டுமல்ல மன (சுமைகளிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும்) விடுதலையும் அவசியமானதும் இன்றியமையாததுமாகும். இதுவே தேசிய சமூக அரசியல் விடுதலைக்கான சிந்தனைகளை செயற்பாடுகளை விரிவாகவும் ஆழமாகவும் பன்முக பார்வைகளில் பார்க்கவும் வழி செய்யும்.

நன்றி தினக்குரல்
15.10.2017


Leave a comment

Categories