Posted by: மீராபாரதி | May 17, 2018

ஒன்டாரியோ தேர்தல்: கட்சிகளின் வேறுபாடு ஒரு வீதமா?

ஒன்டாரியோ தேர்தல்: கட்சிகளின் வேறுபாடு ஒரு வீதமா?

Image result for ontario party leaders debate 2018கனேடிய அரசியல் கட்சிகள் இடையே பாரிய வேறுபாடுகள் உண்டா?. ஏனெனில் இவர்கள் முதலாளித்துவ நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள். புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்த துணியாத கட்சிகள். காரணம் பன்னாட்டு நிறுவனங்களிடம் கட்சிக்காக நன்கொடை வாங்குகின்றவர்கள். ஆகவே கனேடிய கட்சிகள் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாடுகளை ஒரளவே மீறமுடியும். மீற முடியாது என்பதே உண்மை. அந்தளவிற்கு அவர்களுக்கும் கட்சிக்குமான உறவுகள் உள்ளன என்றால் மிகையல்ல. இக் கட்சிகள் யாரிடம் எவ்வளவு நன்கொடைகளை வாங்குகின்றார்கள் என்பது வெளிப்படையானது. அதனை கீழே உள்ள ஊசாத்துணைகளில் பார்க்கலாம். இவ்வாறான நிலையில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விடயம்தான்.

ontario14உதாரணத்திற்கு இக் கட்சிகள் பணக்கார்களிடம் முதலாளிகளிடம் அறவிடும் வரி ஒரு வீதத்திலையே வேறுபடுகின்றது. உதாரணமாக டக் போட்டின் பழமைவாதக் கட்சி (கொன்சவர்ட்டி) 10.5 வீதம் அறவிடப்போவதாக கூறுகின்றார்கள். அதாவது இப்பொழுது இருப்பதைவிட ஒரு வீதமாகக் குறைக்கப் போகின்றார்கள். இது பணக்காரர்களுக்கும் முதலாளிகளுக்கும் நன்மையானதே. ஏனெனில் இது இவர்களின் பணச்  சேகரிப்பை மேலும் அதிகரிக்கும்.  இதேநேரம் கத்தலின்வின்னின் லிபரல் கட்சி இப்பொழுது அறவிடும் 11.5 வீதத்திலையே வைத்திருக்கப் போகின்றார்கள் எனக் கூறுகின்றனர். அதேநேரம் சிறு முதலாளிகளுக்கு சிறு வரி விலக்கு அளிக்கின்றனர். அந்திரே ஹாராவின் புதிய ஜனநாயக கட்சியினர் (என்டிபி) ஒன்றரை வீதத்தைக் கூட்டி 13.5 வீதத்தையும் வருடம் 200 000 டொலர்களுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் மேலும் அதிகமாக வரி அறவிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். இவர்களும் அதேநேரம் சிறு முதலாளிகளுக்கு சிறு வரி விலக்கு அளிக்கின்றனர். இது அவசியமான நல்ல திட்டமே. இருப்பினும் இக் கட்சிகள் பணக்கார்களிடம் முதலாளிகளிடம் அறவிடும் வரி  ஒரு வீத வேறுபாடு கொண்டதைப் போல இவர்களுக்கு இடையிலான வேறுபாடு ஒரு வீதமளவிலானதா?. இதனை இவர்களின்  செயற்பாடும் முன்வைக்கும் தேர்தல் அறிக்கைகள் திட்டங்கள் என்பவற்றின் அடிப்படையிலே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வேறுபாட்டை உழைக்கும் மக்களும் மத்திய தர வர்க்கத்தினரும் புரிந்து கொள்வதன் மூலமே தாம் யாருக்கு வாக்களிப்பது தங்களுக்கு நன்மையானது பயனுள்ளது என்பதைத் தீர்மானிக்கலாம்.

doug3டக் போட் தலைமையில் பழமைவாதக் கட்சி இம் முறை ஆட்சியைப் பிடிக்க முன்வைக்கும் திட்டங்கள் என்ன? இவரது அடிப்படைக் கொள்கையே அரசின் செயற்பாட்டை சிறிதாக்குவதுடன் முதலாளிகளிடம் அறவிடப்படும் வரியை வெட்டுவதுதான். ஆனால் இதை எவ்வாறு செய்யப் போகின்றார் என்பதை இன்னும் விளக்கவில்லை. தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடவில்லை. இதுவரை எல்லாமே வாக்குறுதிகள்கள்தான். அரசாங்கத்தின் பங்களிப்பை குறைப்பது என்பது அரசாங்க தொழில் வாய்ப்புகளையும் அதன் சேவைகளையும் குறைப்பதாகும். மேலும் முதலாளிகளிடம் அறவிடும் வரி குறையும் பொழுது அரசாங்கத்திற்கு வருமானம் குறையும்.  இந்த நிலையில் தான் முன்வைக்கும் திட்டங்களுக்கு எங்கிருந்து பணத்தைப் பெறப்போகின்றார் என்பதை விளக்கவில்லை என பலர் குற்றஞ்சாட்டுகின்றார். ஆகவே பல சமூக சேவைகளையும் அரசாங்க தேவைகளையும் வெட்டுவதன் மூலமும் குறைப்பதனுடாகவும் தனது அரசாங்கத்திற்கான வருவாயைப் பெற்றுக்கொள்வார் என பலர் தமது சந்தேகங்களை வெளியிடுகின்றனர். இதையே கடந்த கால பழமைவாத கன்சவர்ட்டி அரசாங்கங்களும் செய்து மக்களுக்கு கஸ்டங்களை கொடுத்தன. ஆகவே மக்கள் இது தொடர்பாக எச்சரிக்கையாக இருப்பதுடன் தமது வாக்குகளை சரியாப் பயன்படுத்துவதே நன்மையானது.

டாக் போட் மின்சார கட்டணத்தை 37 வீதமாக குறைப்பதாக கூறியுள்ளார். ஆனால் மின்சாரசபை தொடர்ந்தும்  தனியார் மயமாகவே இருக்கும் என நம்புகின்றேன். ஏனெனில் அதைப் பற்றி எந்த செய்திகளையும் கூறவில்லை. மாறாக மின்சார சபை தலைவர் அதிக வருமானம் எடுப்பதால் அவரை வேலையை விட்டு நீக்குவதாக கூறியுள்ளார். இதனால் பாரிய நஸ்டம் அரசாங்கத்திற்கே ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றார்கள். இது மட்டுமல்ல மேலும் பல சேவைகள் தனியார் மயப்படுத்தப்படலாம் என்ற சந்தேகம் உள்ளது. உதாரணமாக டொரன்டோ போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்படலாம் என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. ஏனெனில் இவர்கள் முதலாளிகளுக்காக வேலை செய்பவர்கள். இதேநேரம் லிபரல்கள் மின்சார சபையை தனியார் மயப்படுத்தியது தவறானபோதும் அதை டக்போட்டின் தலைமையிலான பழமைவாதிகள் குற்றச்சாட்டாக முன்வைப்பது நகைச்சுவையே.

ontario21லிபரல் கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் முதலாளிகளுக்கும் மக்களுக்கும் இடையில் தரகர் வேலை பார்ப்பவர்கள். ஆகவேதான் மின்சாரசபையை முழுமையாக தனியார் மயமாக்காமல் அதன் ஒரு பகுதியை மட்டும் விற்று தமது மக்கள் திட்டங்களுக்கான வருவாயைப் பெற்றுக் கொண்டார்கள். அதேநேரம் தாம் மீண்டும் ஆட்சிக்கு வரும் பொழுது லிபரல் கட்சி 25 வீதத்தால் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதாக கூறியுள்ளனர். இவர்கள் இருவரையும் விட புதிய ஜனநாயக கட்சியினர் மின்சார சபையை முழுமையாக அரசாங்கம் மீள வாங்குவதாக உறுதி அளித்துள்ளார்கள். இதுவே சரியான நிலைப்பாடாகும். மக்களின் நலன் கருதிய செயற்பாடாகும். மேலும் கிராமப்புறங்களில் மின்சாரக் கட்டணத்தை 15 வீதத்தால் குறைப்பதாகவும் உறுதிளித்துள்ளார். மத்திய அரசாங்கத்துடன் உரையாடி மின்சாரக் கட்டணத்தில் அறவிடப்படும் ஏச்எஸ்டி யை இல்லாமல் செய்வதாகவும் கூறுகின்றனர்.

ndp3மேற்குறிப்பிட்டவாறு மேலும் பல திட்டங்களையும் சேவைகளையும் முன்மொழிந்துள்ளார்கள். ரொடரன்டோவின் போக்குவரத்தை சீர்செய்ய டக்போட்டின் பழமைவாதக் கட்சி 5 பில்லியன் ஒதுக்குகின்றது. கத்தலின் வின்னின் லிபரல் கட்சி ஏற்கனவே பல திட்டங்களை முன்னெடுத்து நிறைவேற்றியுள்ளது. கடந்த இருபது வருடத்தில் இப்பொழுது சிறந்த டிடிசி (டொரன்டோ போக்குவரத்துச்) சேவை நடைபெறுகின்றது. மேலும் இதை விரிவாக்கும் திட்டங்களை முன்மொழிந்துள்ளார்கள். அந்திரே கரோவின் என்டிபியினர் ஒவ்வொரு நகரசபையும் செலவும் செய்யும் அதேயளவு பணத்தை தாமும் வழங்குவதாகவும் ஒவ்வொரு வருடமும் 800மில்லியன் டொலர்களையும் ரொரன்டோவிற்கு 300 மில்லியன்களை மேலதிகமாக ஒதுக்குவதாகவும் கூறியுள்ளார்கள்.

ontario7டக்போட் அடிப்படை சம்பள உயர்வை 14 டொலர்களுடன்  சில காலத்திற்கு நிறுத்தப் போவதாக கூறியுள்ளார். கிட்டிய காலத்தில் அடிப்படை சம்பள உயர்வு இல்லை என்கின்றார். இதில் நேர்மையான உண்மையை சொல்லியுள்ளார். 2003ம் ஆண்டுவரை 6.85 டொலர்களுடன்  நீண்ட காலம் பழமைவாதக் கட்சியினரால் நிறுத்திவைக்கப்பட்ட அடிப்படைச் சம்பளத்தை லிபரல் ஆட்சியில் தான் படிப்படியாக உயர்த்தி 14 டொலர்களுக்கு கொண்டுவந்துள்ளார்கள். தாம் வென்றால் அடுத்த வருடம் 15 டொலர்களாக உயர்த்துவதாக கூறியுள்ளார்கள். இது உழைக்கும் மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் அவசியமானதே. இதையே என்டிபியினரும் கூறி உறுதியளித்துள்ளனர்.

இதேபோல விட்டுத் திட்டம், முதியவர்களுக்கான மருத்துவ திட்டம், குழந்தை பராமரிப்பு, புதிய வைத்தியசாலைகள், வைத்தியர்கள். தாதிமார்கள், வைத்தியசாலையில் தங்குவதற்கு அதிகமான வசதிகள், என ஒவ்வொருவரும் பல திட்டங்களை அறிவிக்கின்றார்கள். இவற்றை எல்லாம் யார் பெரும்பான்மை மக்களின் நலன்களை அடிப்படையாக் கொண்டு முன்னெடுப்பார்கள் என்பதுதான் கேள்வி.

ontario20புதிய ஜனநாயக கட்சியில் லிபரல் சிந்தனையுள்ளவர்கள் இருக்கின்றார்கள். லிபரல் கட்சியில் இடதுசாரி தீவிர சிந்தனையுள்ளவர்களும் பழமைவாத சிந்தனையுள்ளவர்ளும் இருக்கின்றார்கள். பழமைவாதக் கட்சியில் லிபரல் சிந்தனை உள்ளவர்கள் இருக்கின்றார்கள். கட்சிகளின் தலைமையைப் பொறுத்து குறிப்பிட்ட சிந்தனை மேலாதிக்கம் செலுத்தும். இருப்பினும் இக் கட்சிகளில் யார் ஆட்சியைப் பிடிக்கின்றார்களோ அதற்கமைய அவர்களின் கொள்கைகளும் அவற்றை நடைமுறைப்படுத்துகின்றமையும் சமூகத்தில் பாரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தவல்லன. ஆகவே சரியான கட்சியை தெரிவு செய்ய வாக்களிப்பது நமது பொறுப்பாகும்.

ndp4இன்றைய நிலையில் பழமைவாதக் கட்சியே வெல்லும் நிலையில் உள்ளது. அந்தளவிற்கு அவர்கள் மக்களை மயக்கி வைத்துள்ளார்கள். அல்லது லிபரல் கட்சியின் ஆட்சி மீது வெறுப்பில் உள்ளார்கள். உண்மையில் இதுவரை ஆட்சி செய்த லிபரல்களின் மீது மக்களுக்கு இருக்கின்ற கோவங்களை உணர்ச்சிகளை உணர்வுகளை சுரண்டும் ;வகையில் தமது பிரச்சாரங்களை பழமைவாதக் கட்சியினர் முன்னெடுக்கின்றார்கள். நாள்தோறும் புதிய புதிய திட்டங்களை அறிவிக்கின்றனர். இவற்றை இவர்கள் செய்வார்கள் என்பததற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் மக்கள் நம்புகின்றனர். மைக் கரிஸ் பொது உணர்வைப் பிரதிபலிப்பதாக அறைகூவினார். டக் போட்டோ மக்களிடம் பெரும்பான்மையாக காணப்படுகின்ற உணர்வைப் பிரதிபலிப்பதாக கூறுகின்றார். ஆகவேதான் அவரை நோக்கி பெரும்பான்மையினர் நகர்கின்றனர். ஆனால் இவர் தன்னையும் மீறி குடிவரவாளர்களுக்கும் சுற்றுச் சுழலுக்கும் கருக்கலைப்பிற்கும் பாலியல் கல்விக்கும் எதிராக தெரிவிக்கும் கருத்துகள் மக்களுக்கு விரோதமானவை. பெரும்பான்மையான மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாமை மக்களிடம் பகுத்தறிவு இல்லையா என்பது கேள்விக்குறியதாகின்றது. அல்லது பெரும்பான்மையான குடிவரவாளர்கள் பழைமைவாத சிந்தனை கொண்டவர்களா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.

30741149_10160170183570007_6476161309082648576_nஇவ்வாறான சூழ்நிலையில் லிபரல் கட்சி வெல்ல வேண்டுமாயின் அவர்கள் இப்பொழுது வேலை செய்வதைவிட இரட்டிப்பாக வேலை செய்ய வேண்டும். இல்லையெனின் தோல்வி நிச்சயம். லிபரலின் 15 வருட ஆட்சியில் டொல்டன் மக்னியூட்டின் ஆட்சியை விட கத்தலின் வின்னின் ஆட்சி மக்கள் நலன் கருதி உறுதியாக செயற்பட்ட கட்சி எனக் கூறலாம். ஆனால் தவறுகள் நடந்துள்ளன. இதுபோன்ற தவறுகள் பழமைவாதக் கட்சி ஆட்சியில் இருந்திருந்தாலும் நடைபெற்றிருக்கும்;. ஏனெனில் பன்னாட்டு நிறுவனங்களின்  வழிகாட்டலில் செயற்பட்டால் இதுவே நடைபெறும். இதற்காக லிபரல் கட்சியை முழுமையாக ஒதுக்குவது அவர்கள் இதுவரை உருவாக்கிய மக்கள் நலத் திட்டங்களை இல்லாமல் செய்வதற்கு வழிவகுக்கும். இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் நாம் லிபரல் கட்சியை ஆதரிக்க வேண்டும். ஏனெனில் கத்தலின் வின்னின் தலைமையிலான லிபரல் கட்சியினர் நடைமுறையில் செய்து காட்டி தாம் மக்களின் பக்கம் என்பதை நிறுபித்துள்ளனர். உண்மையில் குடிவரவாளர்களான நாங்கள் லிபரல் அல்லது என்டிபி கட்சியையே ஆதரிக்க வேண்டும். அதுவே நியாயமும் தர்மமும் ஆகும்.

ontario-election-2018-horwath-wynne-ford-20180314-810x445-1521049828நாம் விரும்பும் என்டிபி புதிய ஜனநாயக கட்சி வெல்ல வேண்டுமாயின் அவர்கள் இப்பொழுது வேலை செய்வதைவிட நான்கு மடங்கு வேலை செய்ய வேண்டும். அது மட்டுமல்ல அவர்கள் உண்மையிலையே ஆட்சியைப் பிடிக்க முதல் நாளிலிருந்து வேலை செய்ய வேண்டும். வெறுமனே கணக்கெடுப்பின் முடிவுகளைப் பார்த்து நம்பிக் கொண்டிருப்பது மட்டும் போதாது. இக் கட்சி இம்முறை மீண்டும் தோற்றுப் போனால் அடுத்த முறையாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டுமாயின் ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுத்தமானவர்களை ஆரம்பத்திலையே தெரிவு செய்ய வேண்டும். மேலும் ஜூன் 7ம் திகதியிலிருந்து வேலை செய்தால் 2022யில் வெல்லலாம். அவ்வாறான ஒரு வேலை திட்டத்தை இம் முறையாவது முன்னெடுப்பார்களா? இவர்களது திட்டங்களை இலட்சியவாதம் என விமர்சிக்கின்றார்கள். ஆம் ஒரு வீதமான பணக்கார்களுக்கு எதிரான இவர்களது திட்டங்கள் இலட்சியவாதமாகவே இருக்கும். ஆனால் உழைக்கும் மக்களுக்கும் மத்தியதர வர்க்கத்தினருக்கும் இவை சாதாரண நடைமுறை திட்டங்கள் மட்டுமல்ல அவசியமானவையுமாகும்..

இவற்றுக்கப்பால் இம் முறை டக்போட்டின் தலைமையிலான பழைமைவாதக் கட்சியை தோற்கடிக்க வேண்டுமாயின் லிபரலும் என்டிபி கட்சியும் கூட்டாக செயற்பட வேண்டும். தமக்குள் சண்டைபிடிப்பதை தவிர்க்க வேண்டும். தாம் ஒருவரை ஒருவர் தாக்குவதை நிறுத்த வேண்டும். மாறாக டக் போட்டையும் அவரது திட்டங்களையும் பழமைவாதக் கட்சியையும் அவர்களது நிலைப்பாடுகளையும் கடுமையாக விமர்சிப்பதை முன்னெடுக்க வேண்டும். ஒன்டாரியோ வடக்கில் நடைபெற்ற தலைவர்களின் விவாதத்தின் பின்பு அவ்வாறான போக்கு காணப்படுகின்றது. இது சந்தர்ப்பவசத்தினால் நடைபெறமால் திட்டமிட்டமுறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். மேலும் லிபரல் வேட்பாளர்கள் முன்னணியில் இருக்கும் இடங்களில் இரு கட்சிகளும் அவர்களை ஆதரிக்க வேண்டும். இதேபோல என்டிபி வேட்பாளர்கள் முன்னணியில் இருக்கும் இடங்களில் அவர்களை இருவரும் ஆதரிக்க வேண்டும். அப்பொழுது பழமைவாதக் கட்சி தோற்கடிக்கப்படலாம். லிபரலும் என்டிபியும் இணைந்து ஆட்சி அமைக்கலாம். என்டிபி ஆட்சி அமைப்பது நமது விருப்பமாயினும் அது அவ்வளவு இலகுவானதல்ல.

இவ்வாறான வெற்றிக்காக பழமைவாதக் கட்சியை எதிர்ப்பவர்கள் ஒவ்வொருவரும் பல மடங்கு வேலை செய்ய வேண்டும். ஆனால் தூரதிர்ஸ்டவசமாக அவ்வாறான ஒரு போக்கை காணவில்லை. இது பழமைவாதக் கட்சியினருக்கே சாதகமாக அமைகின்றது. நாம் விழிப்படைய வேண்டும். பழமைவாதக் கட்சியும் டக்போட்டின் தலைமையும் மக்களுக்கு எதிரானவை என்பதை பெரும்பான்மையான மக்கள் புரிந்து கொள்ளவில்லை. இந்த சிந்தனையை மாற்றி புரிதலை ஏற்படுத்த பல மடங்கு வேலை செய்ய வேண்டும்.

டக்போட்டின் தலைமையிலான பழமைவாதக் கட்சி ஒரு வீதமான முதலாளிகளுக்கும் பணக்கார்களுக்குமே சேவை செய்யும். அதாவது அவர்களுக்காக 99ம் வீதம் செயற்படுவார்கள். 99ம் வீதமான மக்களை கைவிட்டுவிடுவார்கள். லிபரல் கட்சி ஒரு வீதமான முதலாளிகளுக்கும் 99 வீதமான மக்களுக்கும் இடையில் சமரசம் செய்யும். அதாவது இருவருக்குமு; ஐம்பதுக்கு ஐம்பது வீதம் செயற்படுவார்கள். என்டிபி புதிய ஜனநாயக கட்சி ஒரு வீதமான முதலாளிகளின் சுரண்டல்களுக்கு எதிராக 99ம் வீதம் செயற்பட்டு 99ம் வீதமான மக்களுக்கான திட்டங்களை மேற்கொள்ளும். இதுவே இந்த தேர்தல் வெளிப்படுத்தும் உண்மை. இனித் தெரிவு வாக்காளார்களின் கைகளில்.

மீராபாரதி

https://www.theglobeandmail.com/news/politics/political-donations-in-canada-a-guide/article34296694/

http://www.cbc.ca/news/canada/toronto/ontario-political-party-fundraising-largest-donors-1.3540674

http://www.macleans.ca/politics/ontario-election-2018-party-platforms/#hydro

http://www.macleans.ca/politics/ontario-election-2018-party-platforms/#taxes

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: