Posted by: மீராபாரதி | April 16, 2018

ஒன்டாரியோ தேர்தல் 2018 – மாற்றம் என்பது என்ன? – பகுதி ஒன்று

ontario14ஒன்டாரியோ தேர்தல் 2018 – மாற்றம் என்பது என்ன? – பகுதி ஒன்று

ஒன்டாரியோ மாகாணத்திற்கான தேர்தல் வரப்போகின்றது. வேட்பாளர்கள் தேர்வு களைகட்டுகிறது. பழமைவாதக் கட்சியின் தலைவர் தெரிவு பல்வேறு ஆட்டங்கள் கண்டு இறுதி முடிவைக் கண்டுள்ளது. இவர்களின் இறுதி முடிவு எதுவாயினும் அது உவப்பானதல்ல. ஏனெனில் எவர் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள் பழைமைவாத சிந்தனை உடையவர்களே. ஆனால் தெரிவு செய்யப்பட்டிருப்பவரோ பொது மக்கள் நலன்களுக்கு எதிரான நோக்குள்ள நம்பகமற்ற தலைவர் என்றால் மிகையல்ல. இவ்வாறான சூழ்நிலையில், “லிபரல்கள் நீண்ட காலம் ஆட்சி செய்து விட்டார்கள் ஆகவே மாற்றம் ஒன்று தேவை”, என்ற பரவலான கருத்து மக்களிடம் நிலவுகின்றது. அல்லது ஏதோ ஒருவகையில் அக் கருத்தின் ஆதிக்கம் ஆழமாகவே வேரூண்டியுள்ளது. திட்டமிட்டு வேரூண்டப்பட்டுள்ளது என்பதே உண்மை. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்பது பழைமைவாத கட்சிக்கு ஆதரவளிப்பது என்பதாகவே பலரிடமும் காணப்படுகின்றது. இந் நிலையில் மாற்றம் என்பது என்ன?   வெறுமனே கட்சியை மாற்றினால் ontario10மாற்றம் வந்துவிடுமா? கத்தலின் வின்னின் தலைமையிலான லிபரல் கட்சியின் ஆட்சியை மாற்றுவதற்கு அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த தவறுகள் என்ன? பழைமைவாதக் கட்சி ஆட்சியைப் பிடித்தால் மாற்றம் வந்துவிடுமா? பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? புதிய ஜனநாயக கட்சி இவர்களுக்கான மாற்றாக அமையுமா? இக் கட்சி இம் முறை வெற்றி பெறுமா?  எவ்வகையான மக்கள் நலத் திட்டங்களை இக் கட்சிகள் முன்னெடுக்கும்? முன்னெடுக்குமா? எனப் பல கேள்விகளைக் கேட்க வேண்டும். இதற்கான பதில்களை ஆதாரங்களுடன் அறிவேண்டும். அப்பொழுதுதான் இம் முறை யாருக்கு ஆதரவளிப்பது வாக்களிப்பது மக்களுக்கு நன்மையளிக்கும் என்பதைத் தீர்மானிக்கலாம். அவ்வாறான ஒரு சிறு முயற்சியே இக் கட்டுரை.

ontario31996ம் ஆண்டு ஜனவரியில் கனடாவிற்கு வந்தேன். அக் குளிர் காலத்தில் குளிரையும் பொருட்படுத்தாது பங்குபற்றிய முதலாவது போராட்டம் அன்றைய பழைமைவாதக் கட்சியின் ஒன்டாரியோ முதல்வர் மைக்கரிசிற்கு எதிரானதுதான். இலண்டன் ஒன்டாரியோவில் நடைபெற்ற இப் போராட்டத்திற்கு நண்பர்களுடன் பஸ்சில் சென்றிருந்தேன். பல தொழிலாளர்கள் அமைப்புகள் இணைந்து  இப் போராட்டத்தை ஏற்பாடு செய்தன. குளிரையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கானவர்கள் ஊர்வலத்திலும் இறுதிக் கூட்டத்திலும் பங்குபற்றினர். இவ்வாறு மைக்கரிசிற்கும் அவரது மாகாண ஆட்சிக்கும் எதிராகப் பல போராட்டங்கள் அவர் ஆட்சியை விட்டு செல்லும் வரை தொடர்ச்சியாக நடைபெற்றன.

ontario2இக் காலத்தில் ஒன்டாரியோவில் வேலை வாய்ப்புகளும் மிக கஸ்டமாக இருந்தன. இப்பொழுதுபோல் அவ்வளவு இலகுவாக வேலை எடுக்க முடியவில்லை. அபிவிருத்திகள் நடைபெறவில்லை. சுரங்க மின்சார வண்டிகளுக்கான நிதிகள் தடுக்கப்பட்டன. மைக்கரிசின் காலத்தில் ~வருடத்திற்கு 400 மில்லியன் டொலர்கள் படி பல்கலைக்கழகத்திற்கும் பாடசாலைகளுக்குமான நிதிகள் குறைக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் கற்பதற்காகப் பெற்ற ஓசாப் கடன்கள் 38 வீதத்தால் குறைந்தன. அதாவது 38 வீதமானவர்கள் இக் கடனைப் பெறுவதற்கு தகுதியில்லாதவர்களானார்கள். அதேநேரம்  பல்கலைக்கழக கட்டணங்கள் 60 வீதத்தால் அதிகரித்தன. ஆசிரியர் மாணவர்கள் வீதம் அதிகரித்தன.~ அதாவது ஒரு ஆசிரியருக்கு அதிக மாணவர்கள் இருந்தார்கள். இதனால் கல்வியின் தரம் குறைந்தது. மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அதாவது கனேடிய மாகாணங்களில் மாணவர்கள் குறைந்த நிதி ஆதரவையும் அதிகமான கட்டணங்களையும் செலுத்தும் மாகாணமாக ஒன்டாரியோ இருந்தது. மேலும் பல்கலைக்கழகம் புகுவதற்கு தயார் செய்கின்ற 13ம் வகுப்பை இல்லாது ஒழித்தார். இந்த நிலையில் ontario22கல்வியில் முன்னேற்றம் எப்படி நிகழ முடியும்? இவற்றைவிட தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. தொழிற் சங்கங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. சமூக சேவைகள் குறைக்கப்பட்டன. அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகவே பல வைத்திய சாலைகள் மூடப்பட்டன. அதேநேரம் தனியாருக்கும் பெரும் நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் அதிகம் வழங்கப்பட்டன. அவர்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டன. இவற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் வீதியில் இறங்கினார்கள். அவரது ஆட்சிக்கு எதிராக ஊர்வலம் சென்றார்கள். போராடினார்கள். ontario11இக் காலங்களில் ஒன்டாரியோவில் ஏதாவது ஒரு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ontario202002ம் ஆண்டு மைக் கரிஸ் ஒன்டாரியோ முதல்வர் பதவிலியருந்தும் அரசியலிலிருந்தும் விலகிச் சென்றபோதும் அவர் ஏற்படுத்திய பாதிப்புகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு பேயாகப் பின் தொடர்ந்தன என்கின்றார்கள். இதிலிருந்து மீண்டு வருவதற்கு லிபரல் ஆட்சிக்குப் பல காலம் எடுத்தன. ஆகவே பழமைவாதக் கட்சியின் பின்வரும் வியடங்கள் தொடர்பான கொள்கைகளை நிலைப்பாடுகளை தெரிந்து கொண்டு புரிந்து கொண்டே நாம் அவர்களுக்கான ஆதரவை வழங்கலாம். இதைச் செய்யாமல் ஆதரிப்பது என்பது நாமே நமக்கான படுகுழியை வெட்டுவதாகும்.

Isadore Day;முதலாவது கனேடிய முதற்குடியான பழங்குடிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுபாப்பதும் உரிமைகளை மதிப்பதுமாகும். கடந்த கனேடிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஹாப்பர் பல உறுதி மொழிகளை வழங்கியபோதும் அவர்களின் வருடாந்த கூட்டத்திற்குச் செல்லவில்லை. அவர்களுடன் இணைந்து வேலை செய்வதற்கான பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றார்கள். இதுவே பழைமைவாதக் கட்சியின் தேசியளவிலான பிரதான நிலைப்பாடாக இருக்கும் பொழுது மாகாண  ஆட்சியில் நிலைப்பாடுகள் பெரியளவில் வேறுபடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆகவேதான் ஒன்டாரியோ பழங்குடி மக்களின் தலைவர், பழமைவாத அரசாங்கம் ஆட்சி செய்தபோது நாம் பெற்ற நன்மைகளை விட  பிரச்சனைகளையே அதிகம் எதிர்கொண்டோம் என்கின்றார்.

ontario24பழைமைவாதக் கட்சியினர் தாமே கனேடிய மண்ணை ஆள்வதற்கு உரிமை உடையவர்கள் ஏன நம்புகின்றனர். தாமே நாகரிகமானவர்கள் என்ற வெள்ளையினவாத சித்தாந்ததைக் கொண்டவர்கள். கனேடிய முதல் குடிகளான பழங்குடி மக்களை பிரதான நகரங்களிலிருந்து ஒதுக்குப்புறமான குடியிருப்புகளை நோக்கி பலத்காரமாகத் தள்ளியவர்கள். அந்த மக்களையும் அவர்களின் குழந்தைகளையும் 1997ம் ஆண்டுவரை சீர்திருத்தி நாகரிப்படுத்துவது என்றடிப்படையில் சிதைத்தவர்கள். மேலும் இவர்கள் தம்மை இந்த நாட்டின் குடிவரவாளர்களாக எண்ணுவதில்லை. ஆனால் புதிய குடிவரவாளர்களுக்கு எதிரானவர்களாகவே எப்பொழுதும் சிந்திப்பதும் செயற்படுகின்றவர்களுமாக இருக்கின்றார்கள். ஆகவே இந்த நாட்டின் குடிவரவாளர்களான ஈழத் தமிழர்கள் இவர்களுக்கு ஆதரவளிப்பதை கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.

ontario9கனேடிய மத்திய மாகாண அரசுகள் சமூக நலத்திட்ட அரசுகள். அதாவது மக்களின் நலன்களை முதன்மைபடுத்தி செயற்படுவன. ஆனால் பழைமைவாதக் கட்சியினர் இதற்கான அரசின் பங்களிப்பை குறைப்பதையே நோக்கமாகக் கொண்டவர்கள். ஆகவே பெரும்பாலான திட்டங்களை தனியார்களுக்கு வழங்கி அரசின் செலவைக் குறைத்து தமது வரவு செலவுத் திட்டங்களை சமப்படுத்துவதில் மட்டுமே அக்கறை கொண்டவர்கள். மாறாக மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து துண்டுவிழும் தொகையை எவ்வாறு புதிய திட்டங்களினுடாக வருவாயை ஏற்படுத்தி சமப்படுத்துவது என சிந்திக்க விரும்பாதவர்கள். ஆனால் கத்தலின் வின்னின் லிபரல் ஆட்சியில் இவர்கள் தூக்கிப்பிடிப்பது மின்சாரத் திணைக்களத்தை தனியாருக்கு விற்றதும் அந்த நிறுவனத் தலைவரின் வருமானமுமாகும். அது விமர்சனத்திற்குரியபோதும் இதே பழமைவாதக் கட்சியினர் ஆட்சியில் இருந்திருந்தால் இதைவிடப் பலவற்றை தனியார் மயப்படுத்தியிருப்பபார்கள். அதிகமான ஊதியத்தை வழங்கியிருப்பார்கள். இவர்களின் கடந்த கால வரலாறு இவற்றை உறுதி செய்யும். ஏனெனில்  அடிப்படையில் பழமைவாதக் கட்சியினர் மக்கள் நலன்களுக்கு எதிராக செயற்படுகின்றவர்கள். இதற்கான சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

ontario18பெண்கள் போராடிப் பெற்ற உரிமைகளில் முக்கியமானது கருக்கலைப்பிற்கான உரிமை. ஆனால் பழமைவாதக் கட்சியினர் கருக்கலைப்புக்கு எதிரானவர்கள். இம் முறை பழமைவாதக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட டக் போட்டுக்கு பிரதான ஆதரவை வழங்கியவர்களில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கது. அவர் கருக்கலைப்புக்கு எதிரானவராக இருந்தபோதும் தானாக எந்த சட்டங்களையும் இயற்றமாட்டாராம். ஆனால் தனது பிரதிநிதிகள் அதில் மாற்றங்களை முன்மொழியும் பொழுது அதை அனுமதிப்பாராம். இவ்வாறு கூறுவது பேச்சுரிமையைப் பாதுகாப்பது என்ற போர்வையில் முன்னெடுக்கும் இவரின் கள்ளத்தனமான கபடத்தனமான செயற்பாடாகும். ஒரு புறம் கருக்கலைப்பை எதிர்க்கும் இவர்கள் அவசியமற்ற கருக்கலைப்பு எதனால் ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்கின்றார்கள் இல்லை.

ontario5ஆகவேதான் மறுபுறம் பாடசாலையில் மாணவர்களுக்கு பாலியல் கல்வி கற்பிப்பதை எதிர்க்கின்றார்கள். இதற்குப் பிரதான காரணமாக டக் போட் கூறுவது ஆசிரியர்களுடனும் பெற்றோருடனும் கலந்துரையாடி இப் பாடவிதானத்தை தயாரிக்கவில்லை என்பதாகும். ஆனால் உண்மையில் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாலியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதை இவர் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் பெரும்பாலான பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் பாலியல் தொடர்பான அறிவு பழமைவாத சிந்தனையுடன் கட்டுண்டது மட்டுமல்ல அதைப்பற்றி உரையாடுவதிலும் கற்பிப்பதிலும் தயக்கமும் வெட்கமும் கொண்டவர்கள். இவ்வாறான ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் எதைக் கலந்துரையாடுவது. பாலியல் கல்வி பலவகையில் அவசியமானது. அப்பொழுதுதான் அவசியமற்ற கருக்கலைப்புகளை இல்லாமல் செய்யலாம். பாலியல் துஸ்பிரயோகங்களை வன்புணர்வுகளை அடையாளங் காணவும் அவற்றைக் களையவும் செய்யலாம். இதற்குமாறாகப் பாலியல் கல்வியை மறுப்பது என்பது குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான இவ்வாறான செயற்பாடுகளை ஆதரிப்பதாகும். இதைப் பழமைவாத கட்சியினரும் அதன் தலைமையும் புரிந்து கொள்ளாமை தூரதிர்ஸ்டமாகும். மேலும் இவர்கள் பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விரும்பாதவர்கள். ஆகவேதான் பழமைவாதக் கட்சியில் பெண்கள் தலைமைத்துவத்திற்கு வருவது என்பது இலேசான காரியமல்ல. அப்படியும் ஒரு பெண் வருவாராயின் அவர் தன்னுடன் போட்டியிடுகின்ற ஆணைவிட பழமைவாதச் சிந்தனையில் ஆழமாக ஊறியவராகவும் உறுதியானவராக இருப்பதே காரணமாக இருக்கும். இதேபோல் ஓரினப் பாலியல் உறவை கொண்ட கே மற்றும் லெஸ்பியன்களை எதிர்ப்பவர்கள். இவை எல்லாம் இணைந்தே கந்தலின் வின்னுக்கு எதிரான பிரச்சாரத்தை மறைமுகமாக முன்னெடுக்கின்றனர் எனலாம்.

ontario8பழமைவாதக் கட்சியினர் மக்கள் நலத் திட்டங்களுக்கும் மாணவர்களின் முன்னேற்றங்களுக்கும் மட்டும் எதிரானவர்கள் இல்லை. தொழிலாளர்களுக்கும் எதிரானவர்கள். ஆகவேதான் அடிப்படைச் சம்பளம் 15 டொலர்களாக அதிகரிப்பதை எதிர்க்கின்றார்கள். தாம் ஆட்சிக்கு வந்தால் இப்பொழுது அதிகரிக்கப்பட்ட 14 டொலர்களுடன் குறிப்பிட்ட காலத்திற்கு சம்பள உயர்வு நிறுத்தப்படும் என்கின்றார்கள். ஆனால் இவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒருமுறைதானும் சம்பள உயர்வை செயற்படுத்தவில்லை. ஆனால் போக்குவரத்துக் காண கட்டணங்களை அடிக்கடி வருடா வருடம் உயர்த்தினார்கள். மாணவர்களின் கல்விக்கான கட்டணத்தை உயர்த்தினார்கள். பொருட்களின் விலைவாசி, வீட்டு வாடகை என்பன உயர்ந்தன. குறைந்த வருமானமுடையவர்களிடம் அதிக வரியை அறவிட்டு அதிக வருமானம் பெறுபவர்களிடம் குறைந்த வரியை அறவிட்டு அநீதி இழைத்தார்கள். பெரும்பாலும் கோப்ரேட் வியாபார நிறுவனங்களுக்கு சார்பாகவே இவர்கள் செயற்பட்டார்கள். செயற்படுவார்கள். மேலும் சுற்றுச் சூழல் மாசடைதல் தொடர்பான அக்கறையற்றவர்கள். அதைப் பாதுகாப்பதில் முனைப்பில்லாதவர்கள். இவ்வாறான வேலைத்திட்டங்களையே இவர்கள் ஒன்டாரியோ மாகாணத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்  பொழுதும் தொடர்வார்கள் என்றால் மிகையல்ல. ஆகவே வாக்களிக்கும் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

doug3டக் போட் மைக் கரிசிலிருந்து பெருதும் வேறுபட்டவரல்ல. சிலவேளை அவரைவிட இவர் மோசமானவராகவும் இருக்கலாம். ஆகவே வாக்காளர்கள் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். சரியானவர்களைப் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள் தொடர்பாக அதிகம் அறிய வேண்டும். தெரிந்தவர், தமிழர், சாரி வேட்டி கொடுத்தவர் , கட்டியவர், நிகழ்வுகளுக்கு வந்து புகழ்ந்தவர் என்றடிப்படையில் வாக்களித்தால் நம் தலையில் நாமே மண்ணை வாரி இறைத்தவர்களாவோம்.

doug1முக்கியமாக ஈழத் தமிழர்கள் பழமைவாதக் கட்சியல் போட்டியிடுவதற்கும் ஆதரவளிப்பதற்கும் வெட்கப்பட வேண்டும். இவ்வாறு வெட்கப்படாது செயற்படுகின்றார்கள் எனின் அவர்கள் தமது ஊரிலிருந்து கொண்டுவந்த ஆணாதிக்க வர்க்க பழமைவாத சமூக மத சிந்தனைகளைத் தூக்கிப்பிடிக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள் எனலாம். ஆகவே…

பழமைவாதக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது…

ontario7கனேடிய முதல் குடிகள் பழங்குடிகளுக்கு எதிராக வாக்களிப்பதாகும்.

குடிவரவாளர்களான நமக்கு எதிராக வாக்களிப்பதாகும். மக்கள் நலன்களுக்கு எதிராக வாக்களிப்பதாகும். சமூக சேவைகளுக்கு எதிராக வாக்களிப்பதாகும்.

சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கு எதிராக வாக்களிப்பதாகும் பெண்களுக்கு எதிராக வாக்களிப்பதாகும்.

தொழிலாளர்களுக்கு எதிராக வாக்களிப்பதாகும்.

ontario4குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் எதிராக வாக்களிப்பதாகும்.

அதாவது நமக்கு எதிராக வாக்களிப்பதாகும்.

ஆகவே யாருக்கு வாக்களிப்பது என்பது வாக்காளர்களின் தெரிவாகும்.

அடுத்த பகுதியில் உண்மையாக மாற்றம் வேண்டுமாயின் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்ற கேள்விக்குப் பதிலாக அமையும்.

மீராபாரதி 16-04-2018

ontario12

https://www.thestar.com/opinion/2009/10/31/still_living_with_mistakes_of_the_harris_government.html

https://toronto.ctvnews.ca/ghost-of-mike-harris-still-haunts-ontario-politics-1.705725

https://ipolitics.ca/2018/03/27/ontario-first-nations-concerned-about-a-ford-government/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: