Posted by: மீராபாரதி | April 11, 2018

பார்த்தீபனின் கதைகள் மாட்டுச் சாணியா?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரைபார்த்தீபனின் கதைகளை சரிநிகரில் வேலை செய்த காலங்களில் சரிநிகர் பத்திரிகைகளிலும் மற்றும் தூண்டில் சஞ்சிகைகளிலும் வாசித்த நினைவு. அவ்வாறு வாசித்து நினைவில் நிற்பது “வராமல் வந்திருந்தால்” என்ற கதை. இதன்பின் நமது அரசியல் செயற்பாடுகளினால் இலன்டனில் 1998ம் ஆண்டும் அரசியல் செயற்பாடுகள் இல்லாமல் தனியன்களாக அலைந்து திரிந்தபோது 2006ம் ஆண்டு ஜெர்மனியிலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிட்டின. எழுத்தில் மட்டுமல்ல உரையாடலிலும் எள்ளலுடன் கூடிய விமர்சனங்களை செய்பவர் அவர் என்பதை அறிந்து கொண்டேன். அவரது இயல்பே அவரது படைப்புகள் எங்கும் பரவி இருக்கின்றன. ஆனால் அவர் அவரது சில படைப்புகளில் வருவதுபோல வரட்டு சிந்தாந்தங்கள் கதைப்பவரல்ல யதார்த்தவாத செயற்பாட்டளாராகவே புரிந்து கொண்டேன். முதன் முதலாக அவரது சிறுகதைகளை நண்பர்கள் இணைந்து தமிழச்சு என்ற பதிப்பகத்தினுடாக “கதை” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்கள். யசிதரனின் இம் முயற்சிக்கு வாழ்த்துகள்.

பார்த்தீபன் குண்டுகள் போடுதவற்கு முதலும் இயக்க சண்டைகளுக்கு முதலும் புலம் பெயர்ந்த ஒருவர். ஆனால் இத் தொகுப்பிலுள்ள கதைகளை வாசித்து முடித்த பின் புலம் பெயர்ந்த ஒருவர் புலத்தில் போர்ச் சூழலில் வாழ்ந்த ஒருவரைப் போல இவ்வளவு ஆழத்திற்குச் சென்று எழுதினார் என்பது ஆச்சரியமாகவே இருந்தது. இதற்கு அவரிடம் காணப்படுகின்ற குழந்தைகள் மற்றும் மக்கள் மீதான அக்கறையும் அன்புமே காரணங்கள் எனலாம். இதனால்தான் இவரது படைப்புகள் உயர்ந்து வாசகர் மனதில் பதிந்தும் இருக்கின்றன. தொடர்ச்சியாக எழுதாமல் விட்டபோதும் கூட வாசகர்கள் அவரை வாழ்த்தி புகழ்ந்து கொண்டிருப்பது அவரது ஆற்றலை படைப்பின் உயர்வை வெளிப்படுத்துகின்றன எனலாம்.

தானியங்கு மாற்று உரை இல்லை.வறுமை, ஏழ்மை, சுரண்டல், வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல், ஏற்றத்தாழ்வான சமூகம், இனவாதம், இன மத மொழி ஒடுக்குமுறைகள் போன்றவையே இவரது கதைக்களங்கள். இவை நாம் பிறந்த நாட்டுக்கு மட்டும் உரியவையல்ல. சர்வதேசத்திற்கும் பொதுவானவை என்பதை இவரது படைப்புகளை வாசிக்கும் பொழுது உணர்ந்து கொள்ளலாம். மேலும் விளிம்புநிலையில் வாழும் மனிதர்களின் பிரச்சனைகளும் உணர்வுகளுமே கதைகளின் மையம். உயிர். அந்தவகையில் முக்கியமானவை.

பெரும்பாலான கதைகள் ஈழத் தமிழர்களின் கடந்த நாற்பது வருட கால வாழ்வின் ஒரு குறுக்குவெட்டு முகம் எனலாம். இராணுவ அடக்குமுறைகள் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் அதனால் உருவான போராட்டங்கள், இயக்கங்கள், இயக்க முரண்பாடுகள் இராணுவ இயக்க படுகொலைகள், சித்திரவதைகள், கொழும்பு வாழ்வு, ஏஜென்சிகள், புலம் பெயர் வாழ்வும் அதன் கஸ்டங்களும், புலம் பெயர் தேசங்களில் காணப்படும் பிரச்சனைகள், வன்புணர்வுகள், பாலியல் தொழிலாளர்கள், குழந்தைகள் கடத்தல் என பரந்து பட்ட விளிம்பு நிலை மக்களின் பல்வேறுவிதமான வாழ்க்கைகளையும் அனுபவங்களையும் இவற்றை வாசிப்பதன் மூலம் அனுபவிக்கலாம் உணரலாம்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்இக் கதைகளை வாசிக்கும் பொழுது எமக்கு முந்திய தலைமுறை, நமது தலைமுறை, புதிய தலைமுறைகள் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றன? எவ்வாறு சிந்திக்கின்றன? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றன. ஏனெனில் இக் கதைகளை வாசிப்பதனுடாக ஒரு வரலாற்றையும் பாடத்தையும் கற்கலாம் என நம்புகின்றேன். ஒடுக்குமுறைகள் இருக்கும் மட்டும் போராடுவதும் கற்பதும் மீண்டும் போராடுவதும் மீண்டும் கற்பதும் தானே புரட்சியாளர்களின் அல்லது சமூகத்தில் அக்கறை கொண்டவர்களின் சமூகத்தை மாற்ற வேண்டும் என விரும்புகின்றவர்களின் வாழ்வாக இருக்க முடியும்.

இக் கதைகளில் இலக்கியத் தரம் தொடர்பான பல கருத்துகள் நிலவுகின்றன. சில கதைகள் ஒருவகையான பிரச்சாரதன்மை வாய்ந்தவை. அரசியல் சார்பு துண்டுப்பிரசுரங்கள் எனலாம். ஆனால் சில கதைகள் இலக்கியதரத்துடன் இருக்கின்றன என்றால் மிகையல்ல. இருப்பினும் இக் கதைகளில் எழுத்தாளப்படுகின்ற சமூக உளவியல் பிரச்சனைகளுக்காகவும் இதன் அரசியலுக்காகவும் வாசிக்கலாம். வாசிக்கப்பட வேண்டியவை. எது இலக்கியம் என்பது பல ஆண்டுகளாக தொடரும் சர்ச்சை. இந்த சர்ச்சையில் எதையும் இலக்கியம் இல்லை என்று புறக்கணிக்காது தடைசெய்யாது அனைத்தையும் வெளிவர ஊக்குவிக்க வேண்டும். வாசிப்பை ஊக்குவித்து பரவலாக்க வேண்டும். இதுவே வாசகர்கள் எது சிறந்த இலக்கியப் படைப்பு எது பிரச்சாரப் படைப்பு எனப் பிரித்தறியப் பங்களிக்கும். இருப்பினும் இலக்கயத்தின் தரத்தை யார் எப்படித் தீர்மானிப்பது? எழுபதுகளில் இது தான் இலக்கியம் என்று உயர்த்திப்பிடிக்கப்பட்டவை இன்று கேள்விக்கு உள்ளாகின்றன. ஆனால் அன்று அதை உயர்த்திப் பிடித்தவர்கள் ஈழ சமூகத்தின் முக்கியமான அறிவுஜீவிகள். ஆனால் இன்று அவை தலைகீழாக மாறியுள்ளன. ஆகவே இலக்கியத்தின் தரத்தை காலமும் அதிகாரமுமா தீர்மானிக்கின்றது? சாணியின் அழகியல் புதிய தலைமுறைக்குப் புரியாது… அல்லது மத்திய உயர் வர்க்கத்தினருக்கு புரியாது. ஆனால் ஏழைகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் புரியும். மாட்டுச் சாணி உயர்தரமானது மட்டுமல்ல. சுற்றுச் சூழலுக்கும் பங்களிப்பது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர், மேஜை மற்றும் உட்புறம்1986ம் ஆண்டு எழுதிய ஒரே ஒரு ஊரிலே கதை பல குடும்பங்களின் கதைகளும் அவர்களுக்கு இடையிலான உறவும் முரண்களும். அரைவாசிப் பிரச்சனைகள் குடும்பத்திற்கு நடப்பவை. அரைவாசிப் பிரச்சனைகள் சமூகத்திற்குள் நடப்பவை. இந்த இரண்டுக்கும் மேலால் நடப்பவை இராணுவ ஒடுக்குமுறைகள். இப் பிரச்சனைகள் எல்லாம் போர்க் காலத்தில் எப்படித் தீர்க்கப்பட்டன என்பதைக் கூறுகின்றன.

பாதியில் முடிந்த கதை 1987ம் ஆண்டு எழுதியது. அப்பா இல்லாத குடும்பத்தின் மூத்த மகன். அவன் மீதான் பொறுப்புகள். அவன் மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கும் அம்மா அக்கா தம்பி தங்கை. வெளிநாடு போவதே எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு என முடிவெடுத்து செயற்படுகின்றான். ஆனால் இறுதியில் என்ன நடந்தது? ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட பல அவலங்களில் ஒன்றை இது குறிக்கின்றது.

இராணுவக் கெடுபிடிகளும் பொருளாதார நோக்கங்களும் புலம் பெயர்வுகளை ஊக்குவித்தன. அப்படி வெளிநாடு சென்ற ஒருவனின் காதல் கதைதான்

காதல். இதை 1988ம் ஆண்டு எழுதியிருக்கின்றார். நமது சமூத்தில் காதல் என்பது ஒரு ஆணின் பார்வையில் எப்படி இருக்கின்றது என்பதை விமர்சனமாக முன்வைத்திருக்கின்றது இக் கதை. ஆனால் அதைச் சொல்வதற்கும் எமக்கு ஒரு வெள்ளையினத்தவர் தான் தேவைப்படுகின்றார். அவர்களுக்குத்தான் அறிவு அதிகமோ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பசி எவ்வளவு கொடுமையானது என்பதை பசி இருந்தவர்களுக்குத்தான் தெரியும். எல்லோரும் பட்டினி இருப்பது வேறு. ஆனால் எல்லோரும் வித விதமாக சாப்பிடும் பொழுது ஏழைகளின் வீட்டில் அடுப்பு எரியாமல் வயிறு எரிந்து கொண்டிருக்கும் கொடுமை கொடுமையானது. இந்தப் பசியை புரியவைக்க முடியாது. அவ்வாறான ஒரு ஏழை மீனவக் குடும்பத்தின் கதைதான் இது. இதையும் 1988ம் ஆண்டே எழுதியிருக்கின்றார்.இவர்களின் பசி தீர்ந்ததா? அல்லது யாருடைய பசி தீர்ந்தது?

1988ம் ஆண்டு எழுதப்பட்ட கதை மனவைி இறக்குமதி. போரும் போராட்டமும் ஆரம்பமான காலங்களிலிருந்து புலத்திலிருந்து பல பெண்கள் புலம் பெயர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். இன்றுவரை புலம்பெயர்ந்த நாடுகளில் பல பெண்களை மனைவிகளாக இறக்குமதி செய்யப்படுகின்றார்கள். இவ்வாறு இறக்குமதி செய்யப்படுவதற்கு மாப்பிள்ளையும் அவர் வீட்டாரும் முன்வைக்கும் கோரிக்கைகளும் அதனால் பெண் வீட்டாரும் பெண்ணும் படும் கஸ்டங்களுமே இன்றுவரை தொடரும் ஒரு தொடர் கதை. இதைப் பின்னணியாக கொண்டதே இக் கதை. நமது சமூகத்தின் மீதான சாட்டை அடி. சரி. ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட மனைவியுடன் அவன் வாழ்ந்தானா? இக் கதையை வேறுமாதிரி எழுதியிருக்க முடியாதா? இங்குதான் இலக்கியத்தின் வறுமை வெளிப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார் மற்றும் உட்புறம்ராதா பெரிசானபின் முக்கியமான கதை. ஆனால் பிரச்சாரத் தன்மை கொண்டது.மற்றக் கதைகளுடன் ஒப்பிடும் பொழுது யதார்த்தமற்றதுடன் தர்க்கமற்றதாகவும் இருக்கின்றது. இது 1989ம் ஆண்டு எழுதப்பட்டது.

இதே ஆண்டு எழுதப்பட்ட கதை நாளை. இது மகனின் கல்வியில் அக்கறையற்ற அம்மா அப்பா. புலம் பெயர் வாழ்வில் பாடசாலையில் அந்நியமாக உணரும் மகன். அவன் அடையும் அவமானங்கள். சித்திரவதைகள். எவ்வாறு அவனை வன்முறையாளனாக்குகின்றது என்பதை அழகாக சொல்லியிருக்கின்றார்.

1989ம் ஆண்டு எழுதிய ஒரு தொழிலாளியும் ஒரு தொழிலாளியும் மிக முக்கியமான அரசியல் கதை. கதையை வாசிக்கும் பொழுது வறட்டு மார்க்சிய வாதியின் கதைபோல இருக்கும். ஆனால் கதையில் முடிவில் அதற்கான ஆப்பு இருக்கும். புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் அகதியினதும் குர்திஸ் அகதியின் புலம் பெயர் வாழ்வும் தொழிலாளர் வர்க்க உணர்வும் எப்படி இயங்குகின்றன என்பதை கன்னத்தில் அறைந்தால் போல சொல்வது இக் கதை. ஈழத் தமிழர்கள் தம்மைப் புரிந்து கொள்ள வாசிக்க வேண்டும். ஆனால் புரிந்து கொள்வார்களா என்பது மில்லியன் டொலர் கேள்வி..

1990ம் ஆண்டு கதை ஒன்றும் எழுதவில்லை.

1991ம் ஆண்டு எழுதிய ஐம்பது டொலர் பெண்ணே. ஜெர்மனியக் குடும்பம் ஒன்று இலங்கையில் தத்து எடுத்த பெண்ணைப் பற்றிய கதை. இருப்பினும் புலம் பெயர் தேசத்தில் ஆரம்பத்தில் புலம் பெயர்ந்தவர்களின் மனஉளைச்சல் மற்றும் தம் தேசத்தவரை காணத் துடிக்கும் துடிப்பு என்பவற்றையும் இணைத்திருக்கின்றார்.

1994ம் ஆண்டு எழுதிய கதை தெரியவராதது. வீட்டுக் கஸ்டத்தால் ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்த ஒருவனின் கதை. அவனை நம்பியிருக்கும் அப்பா, அம்மா, கலியாணத்திற்காக காத்திருக்கும் அக்கா, முன்னால் இயக்கப் போராளி அண்ணா. ஜெர்மனியில் உழைக்க முடியாது என்று கனடாவிற்கு போகும் சீசனில் அல்லுப்பட்டுப் போன ஒருவனின் கதை. இப்படித் எத்தனை பேர் ஓடி ஓடி…. இப்படிப் புலம் பெயர்ந்து போனவர்களுக்காக இன்றும் காத்திருப்பவர்கள் எத்தனை பேர். இதுவும் புலம் பெயர் வாழ்வின் அவலத்தை சொல்லிச் செல்வது எனலாம்.

ஒரு அம்மாவும் அரசியலும் என்ற கதை 1994இல் எழுதியது. இது இயக்க மோதல்களி்ன் பின்னணியில் சொல்கின்றது. இதனால் நண்பர்களையும் உறவினர்களையும் வேறு வேறு இயக்கம் என்பதாலும் அல்லது இயக்கத்திற்குள் உள்ள முரண்பாடுகளாலும் மண்டையில் போடுகின்ற மையக் கருவே கதை. இவ்வாறு மண்டையில் போட்டவர்களினதும் போடப்பட்டவர்களினதும் அம்மாக்களும் அவர்களது அரசியல் புரிதல்களுமே இதில் அலசப்படுகின்றது. பல (சகல இயக்கங்களினதும்) போராளிகளின் அம்மாக்கள் என் கண் முன் வந்து போனார்கள்.

1994இல் எழுதி பனியில் எரியும் இரவுகள். இது புலம் பெயர்ந்த ஒருவனின் பிரச்சனைகளும் எதிர்பார்ப்புகளும் புலத்தில் இருப்பவர்களின் பிரச்சனைகளும் எதிர்பார்ப்புகளும் இவற்றுக்கிடையிலான முரண்பாடுகளையும் கூறாமல் கூறுகின்றது. எல்லோரும் அவரவர் நிலையிலிருந்தே எல்லாவற்றையும் பார்க்கின்றனர். ஒருவரும் மற்றவர் நிலையிலிருந்து பிரச்சனைகளைப் பார்ப்பதில்லை என்பதை வெளிப்படுத்தும் கதையிது.

வந்தவள் வராமல் வந்தால் 1995ம் ஆண்டு எழுதப்பட்டது. நமது சமூகத்தில் ஆண்களிடம் காணப்படும் பெண்கள் தொடர்பான மதிப்பீடுகளையும் அவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும் பாலியல் வக்கிர எண்ணங்களையும் வெளிப்படுத்துவது. நமக்கு வருவது ஒழுங்காக சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் மற்றவர்களுக்கு நடந்ததைக் கேட்பது சுவாரசியமானது. இவ்வாறான இரட்டை நிலைப்பாடும் ஆணாதிக்க எண்ணங்களும் கொண்ட ஆண்களைப் பற்றிய கதை.

ஒரு பிரஜை ஒரு நாடு 1995ம் ஆண்டு எழுதப்பட்டது. பங்கருக்குள் வாழும் தாயினதும் சிறுவனினதும் கதை. மேலும் போர்க் காலத்தில் எவ்வாறு சிறுவர்களின் உளவியல் பாதிக்கப்படுகின்றது என்பதை சொல்கின்றது. ஆனாலும் சிறுவர் பார்வையில்  பெரிய மனிதர் ஒருவர் எழுதியதுபோல இடைக்கிடை உணரவைத்தது.

1995ம் ஆண்டு எழுதப்பட்ட தூள் கதை புலம் பெயர்ந்தவர்களிடம் மட்டுமல்ல அந்தந்த நாடுகளில் வாழும் ஆண்களினது பாலியல் வக்கிரங்களையும் பெண்களினதும் பாலியல் தொழிலாளர்களினதும் பிரச்சனைகளைப் பேசுகின்றன. மேலும் சுரண்டும் ஆதிக்க வர்க்கத்திற்கும் சுரண்டப்படும் வர்க்கத்திற்குமான முரண்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றன. புலத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாடுகளிலும் இதே பிரச்சனைகள் வேறு வேறு வடிவங்களில் இருக்கின்றன என்பதை கூறுகின்றது.

1996ம் ஆண்டு எழுதிய கதை அம்மா பாவம். மகனின் பார்வையில் எழுதப்பட்டிருகின்றது. இக் கதை பல நல்ல விடயங்களை உள்ளடக்கியிருந்தபோதும் அவனது வயதுக்கு ஏற்ற கதையல்ல. கொஞ்சம் பெரிய மனுசனின் கதை. இருப்பினும் கணவனை இழந்த பெண்ணின் மீதான கட்டுப்பாடுகளை விபரிக்கும் கதை இது.

1997ம் ஆண்டு எழுதிய கதை இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ. இது ஒரு புறம் இலங்கையில் சிங்களப் பகுதிகளில் வாழும் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்ல தங்கி நிற்கும் தமிழர்களின் குறிப்பாக பொடியன்களின் பிரச்சனைகளை சொல்கின்றது. மறுபுறம் இவ்வாறு வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கின்ற ஏஜென்சி காரர்களின் விளையாட்டுகளினால் அழைத்துச் செல்லப்படுகின்றவர்கள் படும் கஸ்டங்களை கூறுகின்றது. இரண்டு பக்கத்திலும் அடி வாங்கும் தமிழர்கள்.

மேற்கின் ஒரு பக்கம் 1998இல் எழுதப்பட்ட கதை. மேற்கில் அதிகாரமும் சட்டமும் மக்களும் வீதியில் இருப்பவர்களை வாழ்பவர்களை எப்படிப் பார்க்கின்றனர் மதிக்கின்றனர் என்பதை விபரிப்பது மட்டுமல்ல அப்படியான ஒருவருடனான உரையாடலும் கதைக்கும் அதன் அரசியலுக்கும் வலுச் சேர்க்கின்றது. பலமா? 1998இல் எழுதப்பட்டது. இக் கதை புலம் பெயர்ந்த பிற நாட்டு மக்கள் உதாரணமாக குர்திஸ் மக்கள் எவ்வாறான வாழ்க்கை வாழ்கின்றார்கள் போராடுகின்றார்கள் என்பதையும் புலம் பெயர்ந்த ஈழம் வாழ் மக்கள் என்ன செய்கின்றார்கள் என்பதையும் கேள்வி கேட்கும் கதை.

தீவு மனிதன் 1998ம் ஆண்டு எழுதியது. ஒரு மனிதனின் உளவியல் மன எண்ணங்கள் தொடர்பான உளவியல் சார்ந்த கதை எனலாம். குழப்பமான கதை.

கெட்டன வாழும் 2005ம் ஆண்டு எழுதிய கதை. என்னை மிகவும் பாதித்த கதை. இதிலுள்ள பல கதைகள் மனதைப் பாதிப்பவையதான். இருந்தாலும் இது ஏனோ அதிகம் பாதித்ததது… அல்லது ஒவ்வொரு கதையை வாசிக்கும் பொழுது இவ்வாறு பாதிக்கின்றது…. அந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் இக் கதைக்குள் வருவதால் அதிகம் பாதித்ததுபோல் உணர்கின்றேனா? ஆம் இந்த உலகத்தில் அனைவரும் கெட்டவர்களா… நல்லவர்களே இல்லையா… சிலவற்றை செய்ய எப்படி மனம் வருகின்றது…? இயக்கத்திற்கு சென்றவர்கள்… கொன்றவர்கள் கொலை செய்யப்பட்டவர்கள்… வறுமை. கடத்தப்படும் பெண்கள் பாலியல் தொழில்… கொடுமை சித்திரவதை…. ஏன் உலகம் இப்படி இயங்குகின்றது.? மூக்குள்ளவரை கதை 2007ம் ஆண்டு எழுதியது. இக் கதையில் வரும் பாத்திரமே பார்த்தீபன் எனலாம். அதே எள்ளல் தர்க்கம் எல்லாம் வருகி்னறது. இலக்கியவாதிகளுக்கான விமர்சனம். எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிரான சாட்டையடி.

இறுதியாக கல்தோன்று என்ற கதை ஈழ விடுதலைப் போராட்டத்தைக் குறியீடாக கொண்ட ஒரு வரலாற்றுக் கதை எனலாம். அதாவது நமது ஈழப் போராட்ட வரலாற்றை குறியீடாகக் கொண்டு எழுதப்பட்டது. நாம் மாறுவதற்கு நிறையவே உள்ளது என்பதை உணர்த்தும் கதை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார், நிற்கிறார் மற்றும் உட்புறம்பார்த்தீபனின் கதை தொகுப்பின் இறுதியில் இவரது கதைகள் தொடர்பாக மற்றவர்கள் முன்வைத்த விமர்சனங்கள் இருக்கின்றன. இவர்கள் இக் கதைகள் தொடர்பான முக்கிய விமர்சனங்களை செய்துள்ளார்கள். கதைகளில் பிரச்சார நொடி, செயற்கைத்தனம், பாத்திரங்களுக்குள் உணர்வு பூர்வமாக போகாமல் மேலோட்டமாக உருவாக்கியிருப்பது, வாசகர்களை சிந்திக்க விடாது தீர்ப்பு கூறியிருப்பது என பல குறைகளை கூறியிருக்கின்றார்கள். இந்த விமர்சனங்கள் அவசியமானவையே. வாசித்தபோதும் நானும் உணர்ந்தவை. எல்லாவற்றுக்கும் அப்பால் இக் கதைகளினுடே ஒரு வரலாறு இருக்கின்றது. அது நாம் மீளப் பார்க்க வேண்டிய வரலாறு ஆகும்.

மீராபாரதி 2017

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: