Posted by: மீராபாரதி | August 25, 2017

ஆற்றுப்படுத்தல் ஆரோக்கியமாகப் போராடுவதற்கு

IMG_20170808_105826848 (2)எனது பயிற்சிகளில் வழங்கும் ஆற்றுப்படுத்தல் என்பது ஆரோக்கியமாக வாழ்வதற்கும் படைப்பாற்றலுடன் போராடுவதற்கும் வழிகாட்டுவதுடன் பிரக்ஞையுடன் செயற்பட பயிற்சியளிப்பதாகும்.

இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில்  முப்பது ஆண்டு காலம் போர் நடைபெற்றது. கடந்த பத்தாண்டு காலமாக போர் முடிந்ததாக கூறுகின்றார்கள். ஆனால் இன்னும் மனிதர்கள் தமது இழப்புகளிலிருந்து மீளவில்லை. அதன் வடுக்களிலிருந்து வெளியே வரவில்லை. காணாமல் போனவர்களை இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காகப் போராடுகின்றார்கள். – இருப்பினும்

IMG_20170727_171512772 (2)இவர்களின் ஆழ்மனங்களில் இழப்பின் துயரும் அதன் வடுக்களும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இது இவர்களின் நாளாந்த வாழ்க்கையை தொடர்ந்தும் பாதிக்கின்றது. ஆரோக்கியமாக வாழவோ போராடவோ தடுக்கின்றது. மேலும் நோய்வாய்ப்படுகின்றனர்.  மன அழுத்தம் மனச் சோர்வு என்பவற்றுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.

ஆண்கள் பல வழிகளில் தமக்கான ஆற்றுப்படுத்தலை கண்டடைந்து விடுகின்றார்கள். இருப்பினும் அவர்களும் அந்த துயரிலிருந்தும் வடுக்களிலிருந்தும் இன்னும் விடுதலை பெறவில்லை. தற்காலிக விடுதலையையே பெறுகின்றார்கள்.

IMG_20170822_130550722_HDR (2)இந்த நிலையில் பெண்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை அதுவும் பெண் தலைமைத்துவ குடும்பப் பெண்கள் நிலை மிக கவலைக்கிடம். அவர்களுக்கு தமது துயரையும் வடுக்களையும் பற்றி நினைக்கவே நேரமில்லை. காலையிலிருந்து இரவு வரை வீட்டு வேலை, கூலி வேலை மீண்டும் வீட்டு வேலை என நேரம் ஓடிவிடுகின்றது. இதற்கிடையில் காணாமல் போனவர்களைத் தேடுவதற்கும் இழந்த இருப்பிடங்களை மீளக் கட்டுவதற்கும் அதற்காக அலைவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இந்த நிலையில் தமது உடல் உள மன ஆரோக்கியத்தைப் பற்றி கவனிப்பதற்கும் இழப்பிலிருந்து மீள்வதற்கும் வடுக்களை ஆற்றுவதற்கும் நேரம் எங்கே இருக்கின்றது?

IMG_20170825_111010868 (2)மன்னார் மாவட்டத்திலுள்ள 12  கிராமங்களுக்கு காலையும் மாலையும் சென்று பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பெண்களுக்கு உளவள நல ஆற்றப்படுத்தலுக்கான பயிற்சிகள் வழங்கினேன். இக் குடும்பங்களே கடைசியாக நடைபெற்ற போரில் முதலில் இடம் பெயர்ந்து நீண்ட நாட்கள் நீண்ட தூரங்கள் நடந்து முள்ளிவாய்க்காளை அடைந்து அங்கிருந்து வெளியேறி முகாம்களில் வாழ்ந்து மீளக் குடியேறியவர்கள். இவர்கள் அனைவரும் ஒரு மணித்தியாலத்தில் பாலத்தைக் கடந்து “அந்தப் பக்கம்” இராணுவத்தின் பக்கம் ஆரம்பத்திலையே சென்றிருக்கலாம். ஆனால் விடுதலைப் போராட்டத்தின் மீதான நம்பிக்கையினாலும் தமது கணவர்கள் மகன்கள் மகள்கள் உறவினர்கள் இயக்கத்தில் இருந்தமையினாலும் முள்ளிவாய்க்கால் வரை பயணம் செய்தார்கள்.

IMG_20170901_120027419 (2)ஒரு நாள் மன்னார், அம்மாறை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ் மாவட்டங்களிலிருந்து வந்த பெண் தலைமைத்துவ பெண்களுக்கும் உளவள வளர்ச்சிக்கும் ஆற்றுப்படுத்தலுக்குமான பயிற்சிகள் வழங்கினேன். சில பயிற்சிகளில் முஸ்லிம் பெண்களும் கலந்து முழுமையாகவும் ஆர்வமாகவும் பங்கு பற்றினார்கள். இப் பெண்களில் பலர் கடந்த நாற்பது வருடங்களாக பல இழப்புகளை இழந்தும் வடுக்களை சுமந்து கொண்டும் வாழ்கின்றார்கள். பலர் இறுதித் போரில் தம் குடும்ப உறவுகள் பலரை ஒரே நாளில் இழந்துள்ளார்கள். பலர் தம் முன்னாலையே சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். சில குடும்பங்களிலுள்ள பெண்கள் தமது தந்தையரை 90களில் இழந்து கணவர்களை 2000ம் ஆண்டுகளில் இழந்து பிள்ளைகளை 2009ம் ஆண்டு இறுதிப் போரில் இழந்துள்ளார்கள்.  இவர்களின் கதைகள் அனுபவங்கள் பெரும் சோகங்களைக் கொண்டது. சில கிராமங்களில் புலிகளிலிருந்து சரணடைந்து புனர்வாழ்வு பெற்றவர்களும் புலிகளினால் கட்டாயப்படுத்திப் பிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து தப்பி வந்தவர்களும் இருக்கின்றார்கள்.

IMG_20171002_162348334 (2)இறுதிப் போர் முடிந்த பின் இழப்புகளை சந்தித்தவர்கள் மட்டுமல்ல 90ம் ஆண்டும் அதற்கு முன்பும் தம் உறவுகளை இழந்தவர்களும் காணாமலாக்கப்பட்டவர்களும் இன்றுவரை தமது சுமைகளை சுமந்த வண்ணமே உள்ளார்கள். இவர்களது சுமைகளை இறக்கி ஆற்றுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ வழி செய்வது என்பது பல வழிகளில் சவாலான ஆனால் அவசியமான பயனுள்ள செயற்பாடாகும். தமது குடும்பங்களை வழிநடாத்தவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடவும், அதற்காக நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடவும் என பல செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இவர்கள் ஆரோக்கியமாக உடல் உளவள நலத்துடன் இருப்பதும் பிரக்ஞையுடன் செயற்படுவதும் அவசியமாகும்.

கலந்து கொண்ட பெண்களில் பெரும்பான்மையானவர்கள் கூலித் தொழில் செய்பவர்கள். இப் பயிற்சியானது இவர்களுக்குப் பயனுள்ளது என்பதில் எனக்கு சந்தேகமிருக்கவில்லை. ஆனால் எத்தனை பேர் முழுமையாக பங்கு பற்றுவார்கள் என்ற சந்தேகம் இருந்தது. இதற்கு நமது பண்பாட்டு கலாசார அம்சங்களும் முக்கிய தடையாக இருக்கும் என யோசித்தேன். ஆனால் பல ‘பெண்கள் இப் பயிற்சிகளின் போது மனம் திறந்து தமது இழப்புகளை சோகங்களை கவலைகள் பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமின்றி பயிற்சியின் போது முழுமையாகப் பங்குபற்றினார்கள். ஆச்சரியப்படும் வகையில் பங்கு பற்றினார்கள். இவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் தமது மனச் சுமைகப் பகிர்ந்து கொள்ளவும் கேட்கவும் ஒருவர். இந்த நிகழ்வு தமது எதிர்பார்பை பூர்த்தி செய்தமைக்கான நன்றி கூறினார்கள். சிலர் தம் வாழ் நாளில் இன்றுதான் இவ்வளவு சந்தோசமாக இருந்ததாக கூறினார்கள். சிலர் பாடசாலைக் காலங்களுக்குப் பின்பு இன்றுதான் விளையாடி ஆடிப் பாடியதாக குறிப்பிட்டார்கள். சிலர் தமது உடல் நோக்கள் வலிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனதாக கூறினார்கள். வலியுடன் வந்தவர்கள் வலுவுடன் வலிமையுடன் சென்றமை எனக்குத் தனிப்பட மகிழ்ச்சியையும் பயிற்சி தொடர்பான திருப்தியையும் தந்தது.

இவர்களது சுமைகளை இறக்கி வைப்பது என்பது மிகப் பெரிய சவால். ஆனாலும் யானைப் பசிக்கு சோளப் பொறி போல என்னால் முடிந்த சிறி பங்களிப்பை செய்தேன் என நம்புகின்றேன். இது எனது செயற்பாட்டை தொடர்வதற்கான நம்பிக்கையை மட்டும் தரவில்லை அதன் தேவையையும் எனக்கு உணர்த்தியுள்ளது என்றால் மிகையல்ல. இதற்கு வழிசமைத்த வெற்றிச் செல்விக்கும் மன்னார் மாவட்ட மாதர் சங்க பெண்கள் அமைப்பினருக்கும் மாகாவிற்கும் 12 பயிற்சிகளுக்கும் வந்து பங்களித்த பெண் நண்பிகளுக்கும் நன்றி கூற வேண்டும்.

உதவி நண்பர்களின் பங்களிப்பினால் மட்டக்களப்பிலும் வலைப்பாட்டிலும் மலையகத்திலும் சில பாடசாலைகளிலும் எனது நண்பர்களின் முயற்சியினால் மலையகத்தில் சில பாடசாலைகளிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர் பயிலுனர்களுக்கும் பயிற்சிகள் வழங்கினேன். கிளி ொச்சியில் கருணாகரன் அவர்கள் பின்தங்கிய கிராமம் ஒன்றில் ஒழுங்கு செய்தார். மேலும் பெண்கள் தொடர்பாக செயற்படும் மன்னார் மாதர் சங்கத்தின் பங்களிப்பினாலும் வெற்றிச் செல்வியின் ஊக்கத்தினாலும் பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்களுக்கும் மாற்றுத்திறனாளியினருக்கும் ஆற்றுப்படுத்தல் மற்றும் பிரக்ஞையை வளர்க்கும் பயிற்சிகளை வழங்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றேன். இதன் மூலம் எனக்கு உணவும் தங்குமிடமும் சில வேளைகளில் செலவுகளுக்கான பணமும் கிடைக்கின்றது. எனது ஆற்றலை மக்களுடன் பகிர்கின்றேன். பதிலுக்கு அவர்களிடமிருந்து கற்கின்றேன். இதை எவ்வளவு காலம் தொடரலாம் என்பதை நான் அறியேன். ஆனால் புரட்சிகர வாழ்வு என்பது நமது அர்ப்பணிப்பிலும் முயற்சியிலும் புரிதலிலுமே உள்ளது. சமூகத்துடன் சமரச வாழ்வு வாழும் வரை நாம் நினைப்பதை இந்த சமூகத்தில் சாதிக்க முடியாது. கோட்பாடுகளும் தத்துவங்களும் அவசியமானவையே. ஆனால் அவை மக்களிடமிருந்து அந்தியப்பட்டு இருக்கும் பொழுது அவற்றுக்குப் பயனுமில்லை மதிப்புமில்லை. இப்போதைக்கு போரில் உறவுகளை இழந்தவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கும் போரின் வடுக்களை சுமந்து திரிபவர்களுக்கும் என்னால் செய்யக்கூடியது ஆற்றுப்படுத்தலே. அவர்கள் உளநலத்துடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிவகையே. நான் 2000ம் ஆண்டின் பின் பெற்ற பயிற்சிகளை பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கும் ஆரோக்கிய வாழ்விற்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் இறுதியாகப் பயன்படுகின்றமை எனது முயற்சி வீண் போகவில்லை என்ற திருப்பதியையும் நம்பிக்கையையும் அளிக்கின்றது.

இந்தப் பயிற்சிப் பட்டறைகள் மூலமாக நான் கற்பித்தவை மட்டுமல்ல் கற்றவையும் அதிகமாகும்.

இதை தொடர்ந்து செய்வதற்கு யாரும் ஒழுங்கு செய்யலாம். விரும்பியவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். பலரிடம் இப் பயிற்சிகளை வழங்க ஒழுங்க செய்யுமாறு கேட்டேன். ஆனால் பதிலில்லை. என் மீது நம்பிக்கையற்றவர்கள் இந்த பயிற்சி பெற்ற மக்களிடம் கேட்டு அதன் பின் ஒழுங்கு செய்யலாம். ஏனெனில் பங்கு பற்றிய பெரும்பான்மையானவர்கள் கூறியது உண்மையானது என்பதை அவர்கள் பயிற்சியின் போது செயற்பட்ட விதமே கூறியது. ஆகக் குறைந்தது அவர்கள் கூறியதில் பாதி உண்மையாவது இருக்க வேண்டும். அந்த உண்மைகளே அவர்கள் ஆரோக்கியமாக வாழப் போதுமானதாகும்

2000ம் ஆண்டு அரசியலை விட்டமைக்கு பல காரணங்கள் இருந்தன. முதன்மையான காரணம் முதலில் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என உணர்ந்தமையாகும். ஏனெனில் எனது தவறான பிரக்ஞையின்மையான செயற்பாடுகளை அறிந்து புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். இரண்டாவது காரணம் சக மனிதர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என உணர்ந்தேன். ஏனெனில் அவர்களின் (தவறான) வழிகாட்டல்களை நாம் புரிய முடியாது இருக்கின்றோம்.  அவர்களின் பிரக்ஞையற்ற செயற்பாடுகளை அறிந்து கொள்ள முடியாதிருக்கின்றோம். ஆகவேதான் முதலில் என்னையும் எனது செயற்பாடுகளையும் அறிந்து கொள்வதற்காக தியானப் பயிற்சிகளிலும் உளவளப் பயிற்சிகளிலும் பங்குபற்ற ஆரம்பித்தேன். எனது பிரக்ஞையை வளர்ப்பதில் அக்கறை செலுத்தினேன். எனது உழைப்பு வருமானம் அனைத்தையும் இதற்காகவே செலவு செய்தேன். உழைத்து சொத்து சேர்க்க வேண்டும் வீடு கட்ட வேண்டும் கார் வாங்க வேண்டும் என்பதற்காக இன்றுவரை நான் உழைக்கவில்லை.

2000ம் ஆண்டு அரசியலை விட்டபின் ஒரு வருட உழைப்பின் சேமிப்பில் உடனடியாக இந்தியா சென்று பயிற்சிகள் பெற்றேன். மீண்டும் கனடா வந்து உழைத்து சேமித்து 2001ம் ஆண்டு இறுதியிலும் இந்தியா சென்று நான்கு மாதங்கள் நின்று பயிற்சி எடுத்தேன். இதன்பின் இரண்டு வருடங்கள் உழைத்து சேமித்த பணத்தில் 2003ம் ஆண்டு இறுதியில் சென்று பயிற்சி எடுத்தேன். இதன்பின் மற்றவர்களுக்கு கற்பிப்பதனுடாக நானும் கற்றேன். இதுவரை நான் கற்றமை போதாது என்பதை உணர்ந்தேன். மேலும் மூச்சுப் பயிற்சிகள் தொடர்பாக ஆழமாக அறிய வேண்டும் என விரும்பினேன். ஆகவே 2006ம் ஆண்டும் 2007ம் ஆண்டும் கையில் அதிகப் பணம் இல்லாதபோதும் கடன்பட்டு விசேசமான பயிற்சிகளை இத்தாலியில் பெற்றேன். இதற்காக இத்தாலியில் இரண்டு வருடங்களிலும் இரண்டு தரம் இரண்டு மாதங்கள் தங்கி நின்று கற்றேன். இதற்காக நிறைய பணம் செலவு செய்தேன். இம் பயிற்சியின் முடிவில்தான் உளவியலை துறைசார்ந்து கற்க வேண்டும் என முடிவு செய்தேன்.

கற்க ஆரம்பிப்பதற்கு முதல் இலங்கையில் ஆரம்பபமாகியிருக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக நடாத்தலாமா என முடிவு செய்து அதில் இறங்கினேன். இதனை 2008ம் ஆண்டின் ஆரம்பத்திலும் நடுவிலும் செய்தேன்.  நான் அதில் தொடர்ச்சியாக செயற்படாமையினாலும் பெரியளவில் ஆதரவு இல்லாமையினாலும் அதனால் பயனில்லாமல் போனது. ஏனெனில் அப்பொழுது பலரும் போராட்டம் வெல்லும் என நம்பினார்கள். தூரதிர்ஸ்டவசமாக புலம் பெயர் மக்கள் போராட்டம் கைநழுவி சென்ற பின்பே 2009ம் ஆண்டுகளின் ஆரம்பத்திலையே வீதிகளில் இறங்கினார்கள். அப்பொழுதும் கூட தவறான கோரிக்கைகளையே முன்வைத்துப் போராடினார்கள். அதுவும் பயனளிக்கவில்லை. நான் வேறு வழியில்லாம் கற்பதில் கவனம் செலுத்தினேன்.  2011ம் ஆண்டு உளவியலில் சிறப்பு பட்டம் பெற்றேன். ஒரு வருடம் தற்காலிக வேலை கிடைத்தது. இக் காலங்களிலையே பிரக்ஞை ஒரு அறிமுகம் என்ற நூலை எழுதினேன். வேலை கிடைத்து ஒரு வருடத்தில் 2012ம் ஆண்டு இறுதியில் வேலையை நானாகவே விட்டு எனது பிரக்ஞை நூலுடன் இலங்கை பயணமானனேன்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்பொழுது நான் செய்யக்கூடியது அவர்களை ஆற்றுப்படுத்தி அவர்களின் இழப்புகளிலிருந்து வெளியே கொண்டுவருவது என்பதை உணர்ந்தேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். அப்பொழுது எனது நண்பர்களின் பங்களிப்பினால் இலங்கையில் தங்குவது பிரச்சனையில்லாமல் இருந்தது. மற்றும் உதவி நண்பர்கள் சாந்தி சச்சிதானந்தம் ஆகியோரின் பங்களிப்பினால் மாணவர்களுக்கும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆற்றுப்படுத்தல் உளவள நலப் பயிற்சிகளை வழங்கினேன். அந்தக் காலம் மிகவும் கெடுபிடி காலமாகும். உளவியல் ஆற்றுப்படுத்தல் என்ற சொல்லையே வடக்கு கிழக்கில் பயன்படுத்த முடியாத சூழல். இருப்பினும் நெடுங்கேணியில் உறவுகளை இழந்த பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட பெண்களுக்கு ஆற்றுப்படுத்தல் பயிற்சிகள் வழங்கினேன். அதில் பெண்கள் ஆர்வமாக பங்கு பற்றியபோதும் நாம் அவர்களுக்கு ஏதாவது பொருளுதவி செய்வோம்  என எதிர்பார்த்தே வந்திருந்தார்கள். கையில் பணம் போதாமையினால் இரண்டு மாதங்களுக்கு மேல் என்னால் இலங்கையில் நிற்க முடியவில்லை. மீண்டும் கனடா பயணமானேன்.

கனடா சென்றவுடன் ஏற்கனவே செய்த தற்காலிக வேலை கிடைத்தது. அதை செய்து கொண்டே ஆற்றுப்படுத்தல் கவுன்சிலிங் தொடர்பாக மேலும் கற்றேன். மேலும் இலங்கையில் பெற்ற அனுபவங்களையும் அறிந்த விடயங்களையும் உள்வாங்கிக் கொண்டு அவர்களின் தேவைக்காக எனது இரண்டாவது நூலை எழுத ஆரம்பித்தேன். இந்த நூல் ஒருவகையில் எனக்கான ஆற்றுப்படுத்தலுமாகும். அதுவரை எனது தந்தையின் படுகொலை தொடர்பாக நான் எதையும் எழுதியிருக்கவில்லை. ஆகவே அது தொடர்பான எனது அனுபவத்தையும் கேள்விகளையும் சிந்தனைகளையும் ஒருங்கினைத்து எழுதிய நூலே மரணம் இழப்பு மலர்தல் ஆகும். இந் நூல் ஒருவகையில் ஈழத் தமிழர்களின் இழப்புகளிலிருந்து அவர்களை மீட்கவும் ஆற்றுப்படுத்தவும் ஏற்றவகையில் உருவான ஒரு செயற்பாட்டு நூலாகும். இரண்டு நூல்களையும் எனது ஒரு வருட உழைப்பிலையே பதிப்பித்தேன். மீண்டும் 2013ம் ஆண்டு இறுதியில் இலங்கை வந்து நான்கு மாதங்கள் இருந்தேன். தங்குவதற்கு நண்பர்கள் பங்களித்தார்கள். உதவி நண்பர்கள் மற்றும் பல நண்பர்களின் பங்களிப்பினால் எனது காலங்களைப் பயனுள்ள வகையில் செலவு செய்தேன். நான்கு மாதங்களின் பின்பு பணம் முடிய மீண்டும் கனடா பயணமானேன்.

தூரதிர்ஸ்டவசமாக இம் முறை கனடாவில் நான் எதிர்பார்த்தவுடன் வேலை கிடைக்கவில்லை. பல முயற்சிகள் செய்தும் குறுகிய கால ஒப்பந்த வேலைகளே கிடைத்தன. அதனால் பல மாதங்கள் வேலை இல்லாமல் இருக்க வேண்டி ஏற்பட்டது. நானாக வேலையை விட்டதால் என் மீது ஏற்பட்ட நம்பிக்கையீனம் ஒரு காரணம். மேலும் இதனால் அரச ஆதரவும் கிடைக்கவில்லை. இருப்பினும் கையில் இருந்த பணத்தை வைத்துக் கொண்டு எனது பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் என்ற மூன்றாவது நூலை பதிப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். தூரதிர்ஸ்டவசமாக அது வெளிவராமல் இழுபட்டுக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் மீண்டும் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எனது பங்களிப்பை செய்ய வேண்டி தேவை உள்ளது என்பதை உணர்ந்தேன். கையில் இருக்கும் சிறிய சேமிப்புடன் நண்பர்களின் வீடுகளில் தங்கி ஏதாவது ஒருவகையில் எனது செயற்பாடுகளை ஈழத்தில் முன்னெடுக்க முயற்சித்தேன்.

இலங்கைக்கு வந்தால் தங்குவது ஒரு பிரச்சனைதான். ஒரு மாதம் மட்டும் இலங்கையில் இருப்பதாக இருந்தால் வாடகைக்குத் தங்கலாம். ஆனால் நீண்ட காலம் சொந்த வீடு, நெருங்கிய உறவினர்கள் இல்லாமல் நண்பர்கள் வீடுகளிலும் சில உறவினர்கள் வீடுகளிலும்  தங்குவது என்பது பொருத்தமானதல்ல. இருப்பினும் ஒவ்வொரு வீட்டிலும் சூழற்சி முறையில் அதிகம் ஒரு வாரம் நிற்பதுபோல் தங்குகின்றேன். இங்கு வீடு ஒன்றை கட்டி வருவதாக இருந்தால் இன்னும் பல வருடங்கள் செல்லும். சில நேரம் வருவது சாத்தியமில்லாமலே போகலாம். ஆகவே அவ்வாறான நோக்கத்தை கைவிட்டு எப்படியாது வாழ்வோம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் வந்தேன். இதுவரை நான் கற்றதையும் பெற்ற பயிற்சிகளையும் கொண்டு போரினால் உறவுகளை இழந்து துன்பப்படும் மனிதர்களை ஆற்றுப்படுத்தி அவர்களை அதிலிருந்து மீட்கும் பணியை செய்யலாம் என உணர்ந்தேன். செய்கின்றேன். பங்குபற்றியவர்களின் ஆர்வமும் ஆனந்தமும் எனக்குத் திருப்பதியை தருகின்றன. இதைவிட வேறு என்ன வேண்டும்?. இதற்காக ஓசோவிற்கும் எனக்குப் பயிற்சியளித்த அவரிடம் நேரடியாகப் பயிற்சி பெற்ற எனது பயிற்சியாளர்களுக்கும் நன்றி கூற வேண்டும். ஓசோவின் வழிகாட்டலும் இவர்களின் பயிற்சியுமே என்னை இவ்வாறான ஒரு பங்களிப்பை செய்யத் தூண்டியது எனலாம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: