Posted by: மீராபாரதி | August 8, 2017

மாட்டுப் பண்ணை – ஒரு பயிற்சிக் களம்

IMG_4593மீண்டும் ஒரு நாள் இவரது செல்வபாக்கியம் பண்ணைக்குச் சென்றோம். அன்று பாடசாலை மாணவர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பொன்றில் பங்கு பற்றினோம். இது மாடு வளர்ப்பு தொடர்பான நமது புரிதலை மேலும் வளர்த்துவிட்டது. வழமைக்கு மாறாக வாழைத்தண்டில் விளக்கேத்தி நிகழ்வை ஆரம்பித்தார். சில நாட்களில் இப் பயிற்சி வகுப்புகளை நாம் இருவருமே செய்வோம். சில நாளைக்கு மாடு வளர்ப்பின் பல்வேறு துறைகளில் இருப்பவர்களை அழைத்து அவர்களின் அறிவைப் பகிரச் செய்வோம். இம் முறை பலரை அழைத்துள்ளோம் என நேசன் கூறினார்.

IMG_4601இந் நிகழ்வில் நமது நண்பரும் அட்டன் தேசிய வங்கியின் (ஏச்.என்.பி) வட பிராந்திய முகாமையாளருமான சுந்தரேசன் அவர்கள் முதலில் உரையாற்றினார். இவர் தனது அறிமுகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார். ஈழத் தமிழர்கள் ஆரம்பத்தில் கல்விக்கு இப்பொழுதுபோல முக்கியத்துவமளிக்கவில்லை. அவர்கள் இயற்கை விவசாயத்தை நம்பியே வாழ்ந்தனர். பின்பு பல அரசியல் சமூக காரணங்களால் கல்வியில் அக்கறை செலுத்தினோம். ஆனால் நமது கல்வி வெறுமனே ஏட்டுக் கல்வியாகவே இருந்தது. நடைமுறை வாழ்வு சார்ந்ததாக இருக்கவில்லை. நான் விவசாயத் துறையில் பட்டப்படிப்பை 25 ஆண்டுகளுக்கு முன்பு முடித்திருந்தேன். அன்று எனக்கு சைலேஜ் என்பது நூல்களில் வெள்ளைத் தாளில் கருப்பு மைகளால் எழுதப்பட்ட எழுத்துக்கள் மட்டுமே. ஆனால் 25 ஆண்டுகளின் பின்பு நேசன் அவர்களின் பண்ணையில்தான் சைலேஜ் என்றால் என்ன?  எப்படி இருக்கும்? எப்படி மணக்கும்? என்பதை எல்லாம் எனது ஐம் புலன்களையும் கொண்டு அறிந்தேன். இவ்வாறான அறிதலே ஒரு விடயம் தொடர்பான ஆழமான புரிதலை உருவாக்கும். அந்தவகையில் இன்றைய இந்த நிகழ்வு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறினார். மேலும் இவரின் இந்த முயற்சி பலருக்கான உந்து சக்தி. புனர்வாழ்வில் இருந்து வெறும் கையுடன் வெளியே வந்தபோது வாழ்க்கை போராட்டமானது. மாடு வளர்ப்பு தொடர்பான எந்தவிதமான கல்விப் பின்புலமும் இல்லாமல் ஒரு மாட்டை வாங்கினார். அதை தனது தேடலாலும் உழைப்பாழும் நல்ல பயனுள்ள மாடாக மாற்றினார். அதுவே இன்று பெரியம்மா என அன்புடன் அழைக்கப்படுகின்றது எனக் குறிப்பிட்டார்.

IMG_4597புதுக்குடியிருப்பின் கால் நடை வைத்தியர் தயாபரன் அவர்கள் உரையாற்றும்போது நாம் பட்டி மாடுகள் வளர்க்கவே பழக்கப்பட்டிருந்தோம்.  ஆனால் இன்று பண்ணை முறைகளில் புதிய தொழில்நூட்பங்களின் உதவியுடன் வீட்டுத் தொழிலாக இதனை செய்யலாம். அதாவது உலர்வலயத்தில் கால் நடைகளை திரிய விட்டு வளர்ப்பதிலும் பார்க்க கட்டி வளர்ப்பது பயன்மிக்கதாகும். அதற்கான அறிவைப் பெறுவதனுடாக அதிகமான பால் உற்பத்திகளையும் செய்யலாம். இலங்கையில் இரண்டு இலட்சத்தி ஐம்பதினாயிரம் பசுக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு பசு 40 லீட்டரிலிருந்து ஒரு லீட்டர் வரையான பாலைத் தருகின்றது. ஆகவே சராசரியாக 2.7 லீட்டர் பால் கிடைக்கின்றது. இச் சராசரியை 5.4 ஆகா உயர்த்தலாம். அப்பொழுதுதான் ஒருவருக்குத் தேவையான 130 மில்லிலீட்டர் பாலைப் பெறலாம். அதாவது பாலிற்கான தேவை உள்ளது. மேலும் முல்லைத் தீவு மாவட்டம் போசாக்கின்மை குறைந்த கடைசி மாவட்டமாக உள்ளது. ஆகவே இப் பிரச்சனையைப் போக்க குறைந்த செலவில் கூடிய உற்பத்தியை பெரும் வழிகளைப் பின்பற்ற வேண்டும். செயற்கையாக சினையூட்டுவதன் மூலம் பால் உற்பத்தியை விரைவாக அதிகமாகப் பெறலாம். தரம் பிரிக்கப்பட்ட சீமன்களைக் கொண்டு பசு மாடுகளை உருவாக்குதல். புதிய மாடுகளை இறக்குமதி செய்தல் என்பவை பயனுள்ளவை. இதற்குரிய தீணிகளாக அசோலா மற்றும் சைலெஜ் (குழிர் காப்பு திணி) முறைகளைப் பயன்படுத்தலாம். இவ்வாறான வீட்டுப் பண்ணை முயற்சிகள் வன்னியின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் போசாக்கு குறைப்பாட்டைத் தீர்ப்பதற்கும் தீர்வாக அமையலாம் என்றார்.

IMG_4596பால்களைச் சேகரிக்கும் மில்கோ நிறுவனத்தின் முல்லைத்தீவு கிளையின் முகாமையாளர் சிவா உரையாற்றினார். இவர் தரமான பால் எது என்பதை நன்றாக விளக்கினார். வழமையாக பாலில் 87 வீதம் நீர் உள்ளது. மிகுதி 13 வீதமே கொழுப்பு. இதற்கு மேலும் தண்ணீரை சேர்க்கும் பொழுது தேவையான கொழுப்பு கிடைக்காமல் போகின்றது. அவ்வாறான பாலை நாம் பெறுவதில்லை. எமக்கு 4000-5000 லீட்டர் பால் ஒரு நாளைக்குத் தேவை. ஆனால் இப்பொழுது 2000 லீட்டர் பாலையே சேகரிக்கின்றோம் என்றார்.

IMG_4618சுகாதார அபிவிருத்தி மற்றும் கால் நடை உத்தியோகத்தர்கள் (சுகன்யா மற்றும் விதுசன்)உரையாற்றும் பொழுது மாடுகளின் வகைகளைப் பற்றிக் கூறினார்கள். பிரதானமாக ஐரோப்பிய, இந்திய, மற்றும் உள்நாட்டு வகை மாடுகள் இருக்கின்றன. ஐரோப்பிய வகை மாடுகளின் தோல்கள் மென்மையானவை. இதிலும் யேசி, பிரிசியம், சஜீவால் என மூன்று வகைகள் உள்ளன. இவை 40 லீட்டர் வரை பால் தரும். இவற்றின் ஏரியும் தாடையும் சிறியதாக இருக்கும். இந்திய வகைகளின் மாடுகளின் தோல்கள் தடித்தவை. இவற்றின் ஏரியும் தாடையும் பெரிதாக இருக்கும். இவை குறைவான பாலையே தரும். உள்ளுர் மாடுகளின் தோல்கள் மிகவும் தடித்தவை. மிகக் குறைவான பாலையே தரும். ஆனால் செயற்கையாக உருவாக்கப்படும் கலப்பின மாடுகள் அதிகமான பாலைத் தருகின்றன.  வழமையாக மாட்டுக்கு அதன் நிறையில் பத்தில் ஒரு பங்கு உணவும் இருபதில் ஒரு பங்கு நீரும் வழங்க வேண்டும். மேலும் மாட்டுக்குப் புதிதாக எவ்வாறு செயற்கை சினையை உருவாக்குவது என்பதையும் செய்து காட்டினார்கள். மாணவர்கள் ஆர்வமாக கற்றபோதும் ஒரு மாணவி தானாக முன்வந்து செய்முறையிலும் பங்கு பற்றினார்.

IMG_4599நேசன் உரையாற்றும் பொழுது முதல் மாட்டை பார்த்தவுடனையே விரும்பி வாங்கிவிட்டேன். ஆனால் பலர் இந்த மாடு சரியில்லை என்றனர். எனது தேடல்களினுடாக இந்த மாட்டை 2 லீட்டர் பாலிலிருந்து 10 லீட்டர் பால் தரும் மாடாக வளர்த்தெடுத்தேன். இந்த மாட்டையே பெரியம்மா என அழைக்கின்றேன். இதேபோல் வெள்ளையம்மாவை 4 லீட்டரிலிருந்து 18 லீட்டர் பால் தரும் மாடாக வளர்ந்துள்ளேன். இப் பெயர்கள் எல்லாம் சும்மா பெயர்கள் அல்ல. இப் பெயர்கள் ஒவ்வொன்றிலும் ஒரு உறவினரோ நண்பரோ உயிர் வாழ்கின்றார். பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நான் சைலேஜ் முறையையே பின்பற்றுகின்றேன்.  ஒரு பசுவிடமிருந்து அதிகமான பாலைப் பெற வேண்டுமாயின் எவ்வாறு உணவு கொடுப்பது? பால் கறப்பது? என்பவை தொடர்பாக விளக்கமாக கூறினார். கோதுமை, தவிடு, பருப்பு கோது, கடலைக் கோது, வைக்கோல், சைலேஜ், புல், பனம் இலை என்பன அதிகமாகப் பால் தரும் நல்ல உணவு வகைகள் என்றார்.

இவரைப் பற்றியும் இவரது பண்ணை தொடர்பாகவும் இத் துறைசார் வல்லுனர்களின் கருத்துகளை அறிவதும் பயனுள்ளது. அவர்களில் சிலரின் கருத்துகள்.

IMG_4624முல்லைத்தீவு மாவட்ட கால்நடை  திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கிரிஜகலா சிவானந்தன் அவர்கள் கூறும் பொழுது, “பல பண்ணையாளர்கள் உதவி கேட்டு வருவார்கள். ஆனால் அந்த உதவிக்கு ஏற்றபடி உழைக்க மாட்டார்கள். ஆனால் நேசன் நாம் வழங்கும் உதவிகளுக்கும் மேலாக தனது உழைப்பைச் செலுத்துகின்றார். நாம் கண்காட்சிகள் நடாத்தும் பொழுது தனது மாடுகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை காட்சிக்கு வைப்பது மட்டுமல்ல சிலவற்றை இலசவமாகவும் வழங்குவார். பலர் கண் பட்டுவிடும் என்பதற்காக தமது மாடுகளையும் பொருட்களையும் வெளியே காட்டமாட்டார்கள். இவர் அதற்கு எதிர்மாறாக அனைவரையும் அழைத்துக் காட்டுவார். முக்கியமாக இவர் நடாத்தும் பயிற்சிகள் மாணவர்களுக்கு பரிட்சையில் சித்தியடைய மட்டுமல்ல பண்ணையார்கள் பலருக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கின்றது. யு.எஸ் எயிட் பங்களிப்பானது கறக்கும் ஒவ்வொரு மேலதிகப் பத்து லீட்டர் பாலுக்கும் ஏற்ப உயர்ந்து செல்லும். அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தனது உழைப்பினால் இவர் உயர்ந்து சென்றமையினால் மேலும் புதிய உதவிகளை அவர்களிடமிருந்து பெற்றார்.  இவரது பால் உற்பத்தி குறைவாக இருக்கலாம். இலாபம் அதிகம் வராமல் இருக்கலாம். ஆனால் அவரது பங்களிப்புகள் அளவிடமுடியாதளவு உயர்வானவை. ஆகவேதான் இவர் நமது மாவட்டத்தில் முன்மாதிரியான பண்ணையாளராகத் திகழ்கின்றார்.”

IMG_4619கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மில்கோவின் பிராந்திய முகாமையாளர் கனகராஜா கூறியபோது, “கிழக்கு மாகாணம் வாகரை மற்றும் ஈச்சிலபற்றைச் சேர்ந்த கால் நடை வளர்ப்பாளர்களை பயிற்சிக்காக நான் அழைத்துச் சென்றேன்.  ஒவ்வொரு முறையும் ஐம்பது பேர் அளவில் இரண்டு முறை சென்றோம். இவரது மாதிரிப் பண்ணை வடிவம் இவர்களுக்கான சிறந்த பயிற்சி அனுபவமாக இருந்தது. மேலும் இவரது பயிற்சிகள் உலர்வலையத்தில் எவ்வாறு மாடுகளை அதிகம் பால் தருவதாக வளர்க்கலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டது.  கால் நடை அதிகாரிகள் இவ்வாறான பயிற்சிகள் செய்வதற்கும் இவரைப் போன்ற ஒரு பண்ணையாளர் செய்வதற்கும் பாரிய வேறுபாடு உள்ளது. நடைமுறைசார்ந்து பல விடயங்களை விளக்கினார். மிகவும் பயனுள்ள பயிற்சி இது. இதில் பயிற்சி பெற்றவர்கள் இந்த அனுபவங்களை தமது பண்ணைகளில் பயன்படுத்துகின்றார்கள்.”

இவரைத் தொடர்பு கொள்ள…20621023_10154899052867362_359212823876813232_n
மீராபாரதி

நன்றி தினக்குரல் 06.08.2017 பாரதி ராஜநாயகம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: