Posted by: மீராபாரதி | July 30, 2017

புதிய அரசியல் தலைமை அவசியமா?

ஈழத் தமிழர்களுக்கு புதிய அரசியல் தலைமை அவசியமா?

ஜனநாயக செயற்பாடில்லாத கட்சிகள் புதிய தலைமையை உருவாக்குமா?

தேசமாக உணர்வது! தேசமாக சிந்திப்பது! தேசமாக செயற்படுவது! என்பது என்ன?

index52009ம் ஆண்டு வரை ஈழத் தமிழர்களின் ஏகபோகத் தலைமையாக விடுதலைப் புலிகளின் தலைமையே இருந்தது. இதனை ஈழ தமிழ் மக்களும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்க வேண்டியிருந்தது. அவர்களால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டமை அதிகாரத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் நல்லதொரு செயற்பாடே. அது ஜனநாயக முறைப்படி நடைபெற்றிருந்தால் ஆரோக்கியமான முற்போக்கான செயற்பாடாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறாமை தூர்ப்பாக்கியமானது. ஆகவே போரின் பின்பு தலைமை என்பது தமிழர் தேசிய கூட்டமைப்பு (டிஎன்.ஏ) என்பதைவிடவும் தமிழரசு கட்சியாகவும் சம்பந்தனாவும் மாற்றம் பெற்றது. இப்பொழுதும் ஜனநாயக செயற்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்காமல் அதிகாரம் புதிய தலைமைத்துவத்திற்கு கைமாறியது.

images5நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சிக்கும் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்கும்  முதலமைச்சராக ஒருவரைத் தெரிவு செய்ய தமக்குள் ஒருவரும் கிடைக்கவில்லை.  தூரதிர்ஸ்டமாக இதற்கான காரணத்தை ஒருவரும் ஆராயவில்லை. அப்படி ஆய்வு செய்திருந்தாலும் அதிலிருந்து கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆகவே  புதிய அதிகாரத்துவ ஏகபோக தலைமைத்துவமானது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வட மாகாணத்திற்கான முதலமைச்சராக விக்கினேஸ்வரன் அவர்களைத் தெரிவு செய்தது. முதலமைச்சர் மக்களால் தெரிவு செய்யப்பட்டபோதும், இது தமிழர் தேசிய கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் பலவீனமான ஆரோக்கியமற்ற ஒரு செயற்பாடே என்றால் மிகையல்ல. ஆகவே பின்விளைவுகள் தொடர்கின்றன.

images6சிறிலங்கா அரசாங்கத்தின் நீதிபதியாக நீண்டகாலம் பணியாற்றிய விக்கினேஸ்வரன் அவர்களை கட்சிக்கு வெளியிலிருந்து முதலமைச்சராக தெரிவு செய்தமை பலருக்கு சந்தேகங்களையும் ஆச்சரியங்களையும் ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் மீதான விமர்சனங்களுக்கு அப்பாலும் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஆனால் அவரை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாதவர்கள் பின்பு ஏற்றுக்கொள்ளுமாறும், முன்பு ஏற்றுக் கொண்டவர்கள் பின்பு எதிர்க்குமாறும் அவரது நடவடிக்கைகள் இருந்தன. இதற்குக் காரணம் அவர் தனது வரையறைக்குள் ஈழத் தமிழர்களின் தேசிய அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முதலமைச்சராக செயற்பட்டார் என்பதே. பாதிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த சில செயற்பாடுகளை முன்னெடுத்தார்.  இதனால்தான் அவருக்கு நெருக்கடி வந்தபோது இளைஞர் கூட்டம் தன்னியல்பாகவே அவரைப் பாதுகாக்க முன்வந்தது. இவையும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்ல அவரைத் தெரிவு செய்தவர்களே எதிர்பார்க்காததுமாகும். இருப்பினும் அவருக்கு ஒரு எல்லை உள்ளது. இதனைப் புதிய தலைமையாக அவரை உருவாக்க முயற்சிப்பவர்கள் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை.

விக்கினேஸ்வரன் அவர்களை கனடாவின் விமானநிலையத்தில் வரவழைத்தபோது முன்பு புரட்சிகர கட்சியில் செயற்பட்ட ஒருவர் தீடிரென சென்று புரட்சிகர தலைவர் ஒருவரை வரவேற்பதுபோல கட்டிப்பிடித்து வரவேற்றார். ஆனால் விக்னேஸ்வரன் அவர்கள் அதன் தாற்பரியத்தைப் புரியாது சடம்போல நின்றார். இந்த உடல் மொழிகளும் கவனிக்கப்பட வேண்டியவை. ஏனெனில் ஒருவரது உடல் மொழிகள் அவரது சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறு இருக்கமான ஒருவர் தனது எல்லைகளை மீறி உடைத்துக் கொண்டு இலகுவாக வரமாட்டார். ஆகவே அவரை முன்நோக்கி ஒடும் குதிரையாக நம்பிக் காசு கட்டுகின்றவர்கள் மீண்டும் எல்லாவற்றையும் இழந்து ஏமாந்து அன்னாந்து பார்க்கும் நிலைமையே ஏற்படும். இது ஈழத் தமிழர்களுக்கே பாதகமானது என்பதை ஒருவரும் புரிகின்றார்கள் இல்லை. அவர் இருக்கும்வரை என்ன செய்கின்றாரோ அதைச் செய்யட்டும். ஆனால் ஈழத் தமிழர்களின் வாழ்வில் அக்கறை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விக்கினேஸ்வரனுக்கு அப்பால் தேட வேண்டும்.

index7பல கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தபோதும் அதில் ஆதிக்கம் செலுத்தும் பாரம்பரிய கட்சியான தமிழரசுக் கட்சி இருந்தபோதும் ஏன் வெளியிலிருந்து ஒருவரை முதலமைச்சர் பதிவிக்குக் கொண்டுவந்தார்கள்? இக் கட்சிகளுக்குள் இருந்து ஒருவரை ஏன் தெரிவு செய்ய முடியவில்லை? இதற்கான காரணம் வெளிப்படையானது. இவர்களிடம் ஜனநாயக மத்தியத்துவ செயற்பாடுகள் இல்லை. தமிழரசுக் கட்சிக்குள்ளையே இல்லாதபோது அதன் ஆதிக்கம் அதிகமாக இருக்கின்ற கூட்டமைப்புக்குள் எவ்வாறு ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது. ஜனநாயம் என்பது ஒரு கட்சியின் இயக்கம். புதிய தலைவர்களை உருவாக்கும் ஒரு பொறிமுறை. அது சரியாகச் செயற்படுமாயின் இரண்டாம் மூன்றாம் தலைமைகள் கட்சிக்குள் இருந்தே உருவாகும். ஆனால் அவ்வாறான செயற்பாடுகள் உள்ள ஒரு கட்சிகளும் ஈழத் தமிழர்களிடம் இல்லை. பல அங்கத்தவர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சியிடமும் இல்லை. தனிநபரே கட்சியாகச் செயற்படும் மற்றக் கட்சிகளிடமும் இல்லை. இந்த நிலையைில் இவர்கள் புதிய தலைமை வேண்டும் என யாருக்காக யாரிடம் கேட்கின்றார்கள்.

index8புதிய தலைமை வேண்டும் என்பவர்கள் யார்? அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதும் ஆய்வுக்குரியது. பெரும்பாலான கட்சிகள் தனிநபர்களில் தங்கியிருப்பவை. அவர்களது அதிகாரதிற்கு உட்பட்டவை. இவர்களுக்குள்ளும் ஜனநாயம் இல்லை. இவ்வாறு தனிநபர்களை முன்னிலைப்படுத்தி படம் காட்டும் கடந்த கால இயக்கங்களான இன்றைய ஜனநாயக கட்சிகள் மக்கள் மீது அக்கறையிருக்குமாயின் தமது கட்சிக்குள் ஜனநாயக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதற்குத் தேவையான அங்கத்தவர்களை கொண்டிருக்காவிட்டால் தமது கட்சிகளை களைத்துவிட்டு புதிய கட்சியை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் ஒன்றுபட்டு இறங்க வேண்டும். அல்லது ஒதுங்கி புதிய தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும். இதுவே சரியான வழிமுறையும் காலத்தின் தேவையுமாகும்.

ஒரு இயக்கம் கூட்டமைப்பாக இருந்தாலும் தனிக் கட்சியாக இருந்தாலும் அதற்குள் ஜனநாயகம் செயற்பட வேண்டும். கட்சியின் பெரும்பான்மை அங்கத்தவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு கட்சி செயற்பட வேண்டும். கட்சியிலுள்ள பெரும்பான்மையினருடன் உடன்பாடு இல்லாதவர்கள் தமது கருத்துகளை முன்வைத்து அதைப் பெரும்பான்மையினரின் கருத்தாக மாற்றக் கட்சிக்குள் செயற்பட வேண்டும். ஆனால் எந்த ஒரு கட்சியும் இவ்வாறான ஜனநாயக வழிகளில் செயற்படுவதில்லை.  ஆகவே இவர்கள் புதிய தலைமைத்துவம் தொடர்பான கருத்தை முன்வைப்பது தன்நலம் சார்ந்த செயற்பாடோ என சந்தேகிக்க வேண்டி உள்ளது.

images4ஈழத் தமிழர்களுக்கு புதிய அரசியல் தலைமைத்துவம் வேண்டும் என நினைப்பவர்கள் சில அர்ப்பணிப்புகளை செய்து அதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். முதலாவது ஈழத் தமிழர்களின் நீண்ட கால குறுகிய கால அரசியல் நோக்கங்கள் அபிலாசைகள் என்ன என்பதை திட்டவட்டமாகத் தீர்மானிக்க வேண்டும். இரண்டாவது இதை அடைவதற்கான மூலோபாயங்கள் தந்திரோபாயங்கள் என்ன என்பதில் விரிவான ஆழமான தெளிவு இருக்க வேண்டும். மூன்றாவது இது தொடர்பான விவாதங்கள் உரையாடல்கள் பிரதேச மட்டங்களிலிருந்து உருவாக்க வேண்டும். அதற்காகச் செயற்பட வேண்டும். நான்காவது இங்கிருந்து புதிய குழுக்களை உருவாக்கி ஜனநாய முறைப்படி பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். இவ்வாறுதான் புதிய தலைமைகள் மக்கள் மத்தியில் இருந்து உருவாகலாம். ஐந்தாவது இப்பிரதிநிதிகளினதும் கட்சி அங்கத்தவர்களினதும் பொதுக் குழுவிலிருந்தே புதிய தலைமைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறுதான் புதிய தலைமைகளை உருவாக்கலாமே ஒழிய நினைத்தவுடன் ஒருவரை கொண்டுவந்து இருத்தி உருவாக்க முடியாது. அவ்வாறு உருவாகுமாயின் அது தேர்தல்களை மையப்படுத்தியதாக மட்டுமே அமையும். மேலும் புதிய தலைமை என்பது தனிநபர் சார்ந்து இருப்பதல்ல. அது ஒரு குழுவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தமிழர்களின் தலைவிதியானது தனிநபர்களினால் தீர்மானிக்கப்படாமல் மக்கள் நலனில் அக்கறையுள்ள குழுக்களினால் தீர்மானிக்கப்படும்.

images9புதிய தலைமையோ கட்சியோ தேர்தல்களில் பங்குபற்றுவது தவறல்ல. ஆனால் அது மட்டுமே நோக்கமாக கொண்ட செயற்பாடாக இருக்கக் கூடாது. இப்பொழுது உள்ள கட்சிகளுக்கு அது மட்டுமே இலட்சிய செயற்பாடு. மாறாக இது ஒரு பகுதி செயற்பாடாக மட்டுமே இருக்க வேண்டும். ஆகவே பிரதேச சபை, மாணான சபை, மற்றும் பாராளுமன்றங்களுக்கு செல்வது என்பது ஒருவருடைய தொழிலாக இருக்கக் கூடாது. ஏனெனில் ஈழத் தமிழர்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்கள்.. ஆகவே இவ்வாறு அதிகாரங்களுக்குச் செல்வது என்பது மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளாக இருக்க வேண்டும். முதலவாது   இக் கட்சிகளுக்கும் பிரதிநிதிகளுக்கும் ஈழத் தமிழர்களி்ன் பொருளாதார, கல்வி, வீடமைப்பு, மீளக் குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்பான தீர்வுகளும் செயற்திட்டங்களும் கொண்ட தெளிவான வரைபடம், ஆய்வுகள், அறிக்கைகள் என்பன இருக்க வேண்டும். இவை தொடர்பான குறுகிய கால நீண்ட கால  வேலைத்திட்டம்  ஒன்று உருவாக்கப்பட்டு மக்கள் முன்வைக்கப்பட வேண்டும். தமது கைகளுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால் இவற்றை நிறைவேற்றுவோம் என உறுதி அளிக்க வேண்டும். இதுவே மக்கள் நலன் சார்ந்து செயற்படுவது எனலாம்.

images22மேற்குறிப்பிட்ட உறுதி மொழிகளில் சரி பாதியையாவது நிறைவேற்றாவிட்டால் இரண்டாம் முறை இப் பதவிகளுக்குப் போட்டி போடுவது தடுக்கப்பட வேண்டும். ஒரளவு செயற்படுபவர்களுக்கு மட்டுமே இரண்டாவது சந்தர்ப்பம் வழங்க வேண்டும். ஆகக் கூடியது ஒருவர் மூன்று முறை மட்டுமே இவ்வாறான பதிவிகளில் இருக்கலாம் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் புதிய தலைமைகளும் புதிய சிந்தனைகளும் கட்சிகளுக்குள் வரும் வாய்ப்புகள் உருவாகும். இன்று பதிவிகளில் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்டவாறு செயற்பட்டார்களா? இவர்கள் எத்தனை முறை மக்கள்களுக்கு உறுதி மொழிகள் வழங்கி நிறைவேற்றாமல் ஆனால் மீண்டும் மீண்டும் வழங்கி பதிவிகளில் இருக்கின்றனர்?

images3மேலும் பிரதேச, மாகாண, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கும் ஊதியம் சலுகைகள் என்பன கட்சிக்கு உரியதாக இருக்க வேண்டும். கட்சியில் செயற்படும் அனைத்து அங்கத்தவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் சம அளவில் இந்த ஊதியம் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கான நிதிகள் தனிநபர்கள் சார்ந்து அல்லாமல் கட்சி சார்ந்து மக்கள் நலன் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். மக்கள் இல்லாமல் கட்சி அங்கத்தவர்களின் உழைப்பு இல்லாமல் மேற்குறிப்பிட்ட பிரதிநிதிகள் உருவாக முடியாது என்ற புரிதல் ஆழமாக இருக்க வேண்டும்.

ஆனால் நடைமுறையில் என்ன நடக்கின்றது? அதிகாரத்திலுள்ளவர்கள் தாம் பிரச்சனையைத் தீர்ப்போம் என நம்பிக்கை அளிக்கின்றனர். அதிகாரமற்றவர்கள் அவர்கள் தீர்க்க மாட்டார்கள். எங்களிடம் அதிகாரத்தை தாருங்கள் நாம் தீர்ப்போம் என்கின்றார்கள். ஆனால் இருவர்களிடமும் ஜனநாயக செயற்பாடும் இல்லை. என்ன செய்யப் போகின்றோம் என்ற தெளிவான வரைப்படமும் இல்லை. இவர்கள் அனைவரிடமும் அதிகாரம் கையில் இருந்தபோது இவைபற்றி உரையாடியதுமில்லை. இதுவே இவர்களின் கடந்த கால செயற்பாடுகள். இவர்களை நம்பி மீண்டும் ஆற்றில் இறங்குவது ஆபத்தானது.  இந்த நிலையில் புதிய தலைமைத்துவத்தை உருவாக்க புதிய தலைமுறை என்ன செய்ய வேண்டும் என சிந்திப்பது தவிர்க்க முடியாதது. இதைப் புரிந்த அனுபவமும் அறிவும் கொண்டவர்கள் புதிய தலைமுறையையும் தலைமையையும் வழிநடாத்த முன்வரவேண்டும்.  சிந்திப்போமா? செயற்படுவோமா?

நாம் ஒரு தேசமாக உணர வேண்டும். ஒரு தேசமாகச் சிந்திக்க வேண்டும். ஒரு தேசத்திற்காக ஒன்றினைந்து செயற்பட வேண்டும். இதை நாம் இஸ்ரேலிடமும் ஜப்பானிடமும் கற்கலாம். கடந்த வாரம் மு.திருநாவுக்கரசு தினக்குரலில் எழுதிய கட்டுரை இந்தடிப்படைகளில் வாசிக்க வேண்டிய ஒன்று. மேற்குறிப்பிட்ட வாசகங்களை மீள மீள தமக்குள் உள்வாங்கி ஒவ்வொரும் செயற்பட வேண்டும். இதுவே இன்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான விமோசனமாக இருப்பதுடன் ஆரோக்கியமான செயற்பாட்டிற்கும் நீதியான அரசியல் தீர்விற்கும் வழிவகுக்கும்.

உணர்வோமா? சிந்திப்போமா? செயற்படுவோமா?

மீராபாரதி

நன்றி தினக்குரல் 30.07.2017 பாரதி ராஜநாயகம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: