Posted by: மீராபாரதி | July 23, 2017

குரலற்றவர்களுக்கான குரல் – 1

குரலற்றவர்களுக்கான குரல் – 1

“நான் சைவக் (மன்னிக்கவும் மரக்கறி கடைகளில். இதில் கூட எந்தளவு மத ஆதிக்கம் பாருங்கள்) கடைகளில் சாப்பிடுவதில்லை” என ஒரு கூற்றை எழுதிவிட்டுக் கடந்து செல்லலாம். ஏனெனில் அந்தளவு சுத்தமின்மை இக் கடைகளில் காணப்படுகின்றன. ஒரு கடையில் கை கழுவ பின்னால் சென்ற போது சாம்பாரும் குழம்பும் என இரண்டு அண்டாக்கள் போகின்ற வழியில் கிடந்தன. அப்பொழுது அதற்கு மேலால் ஒரு பரல் நிறைய குப்பைகளை தூக்கிக் கொண்டு இருவர் செல்கின்றனர். அதிலிருந்து நீர்த் துளிகள் குப்பைகள் அதற்குள் விழும் என்ற எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் அவர்கள் செய்தார்கள். இதற்குப் பின்பும் எப்படி இருந்து சாப்பிடலாம்? மேலும் கடைகளில் சாப்பிட உட்காட்தாந்தால் அவர்கள் கறிகளை ஊற்றும் முறையைப் பார்த்தால் “ஏன்டா சாப்பிட வந்தம்” என்ற மாதிரி இருக்கும். நான் சுகாதார அமைச்சராக மட்டும் இருந்தால் இக் கடைகள் அனைத்தையும் இழுத்து முடிவிடுவேன். சுகாதார உத்தியோகத்தர்களின் கண்களின் இவை படுவதில்லை. அவர்கள் தண்டனை வழங்குவது எல்லாம் மீண்டும் ஏழை எளிய மக்களுக்கே. யாழ் ஆஸ்பத்திரியை சுற்றி இருக்கும் கால்வாயில் எத்தனை நூற்றாண்டு தண்ணீர் தேங்கி நிற்கின்றது என்பதை யார் கணக்கில் எடுக்கின்றார்கள். இவற்றில் அக்கறை  கொள்வதும் ஒரு தமிழ் தேசிய செயற்பாடே.

இலங்கையில் வீடுகளைத் தவிற நான் சாப்பிட விரும்பி செல்லும் இடங்கள் மிக அரிது. இருந்தும் செல்கின்ற ஒன்று விவசாய அமைச்சு நடாத்தும் உணவகங்கள். இது கூட வடமாகாண விவசாய அமைச்சரின் உருவாக்கமல்ல. மாறாக மத்திய அரசாங்கத்தின் செயற்பாடு. உருவாக்கம். சிங்களப் பகுதிகளிலும் இக் கடைகள் மிக நன்றாக செயற்படுகின்றன.  அங்குதான் முதலில் உருவாக்கப்பட்டன.

சரி இனி இப் பதிவின் நோக்கத்திற்கு வருகின்றேன்.  நண்பர் ஜெராவின் முஸ்லிம் கடைகளுக்கு எதிரான ஒரு கூற்றை நானும் மேற்குறிப்பிட்டவாறு சைவக் கடைகளுக்கு எதிராக குறிப்பிட்டுவிட்டுக் கடந்து செல்லலாம். ஆனால் அது அவ்வாறு செல்லக் கூடியதல்ல. ஏனெனில் இது நம் தமிழ் சமூகத்திலிருக்கின்ற கூட்டுப்பிரக்ஞையின்மையின் கூற்று. அதாவது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தமிழ் சமூகத்திற்குள் ஆழப்பதிந்திருக்கும் எண்ணங்களின் பிரதிபலிப்பு. அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு எதிராக ஒருவர் கூச்சலிடும் பொழுது அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது நமது பொறுப்பாகும்.

ஜெராவின் கூற்றுக்கு எதிராக தனிப்பட நான் இவ்வாறு எழுத வேண்டிய ஒரு பொறுப்பும் இருக்கின்றது. ஏனெனில் கடந்த வாரம் தான் தினக்குரலில்  அவரது “நிலமிழந்த மனிதர்களின் கதை” நூல் தொடர்பான அறிமுகத்தை புகழ்ந்து எழுதியிருந்தேன். அந்த நூல் முக்கியமானதொரு நூல் என்பதில் இப்பொழுதும் சந்தேகமில்லை. அதுவும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின், நிலம் பறிக்கப்பட்டவர்களின், குரலற்றவர்களின் குரல் என்பதனால் முக்கியமானது. ஆனால் அதில் கூட தமிழர்களின் நிலங்களை முஸ்லிம்கள் பறிக்கின்றார்கள் அத்துமீறிக் குடியேறுகின்றார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர்களின் கருத்தையும் அறிந்து எழுதியிருக்க வேண்டும் என எனது அறிமுக கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு காரணம் குறிப்பிட்ட அமைச்சரின் நடவடிக்கைகளையே விமர்சித்திருக்க வேண்டும். அவரது செயற்பாடுகளை ஆய்வு செய்து ஒழுங்காகப் பதிவு செய்திருக்க வேண்டும். அதற்குமாறாக பலிக்கடா ஆக்கப்பட்ட மக்களையே மீண்டும் பலிக்கடாவாக்கி குற்றம் சாட்டியிருப்பது பொறுப்பற்ற செயல். இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான நமது (தமிழ் மக்களின்) உணர்வுகளையே காட்டுகின்றது. தூரதிர்ஸ்டவசமாக இதற்கு பதிப்புரை எழுதிய குமாரவடிவேல் குருபரன் அவர்களும் இதனைக் கருத்தில் எடுக்காது அப்படியே பிரசுரித்திருந்தமை விமர்சனத்திற்குரியது.

குரலற்றவர்களிற்கான குரல் -2

நான் இதுவரை ஒரே ஒரு இலக்கிய சந்திப்பிலையே கலந்து கொண்டிருக்கின்றேன். அதுவும் நண்பருக்குப் பங்களிக்க வேண்டும் என்பதற்காக. மற்றும்படி சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை.  இன்றைய தார்ப்பரியத்தில் புலம் பெயர்ந்த இலக்கிய சந்திப்பு மீண்டும் புலத்திற்கு வந்ததில் எனக்கு உடன்பாடுமில்லை. புலம் பெயர்ந்த சமூகத்தில் அன்று இலக்கிய சந்திப்பு உருவானதற்கான காரணம் அன்று ஈழத்தின் (புலத்தின்) தமிழ் பிரதேசங்களிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் புலிகளின் ஆதிக்கம் இருந்தமையே எனலாம். புலிகளின் தலைமைகளுக்கு எதிராக அவர்களி்ன் ஜனநாய மறுப்பிற்கு எதிராக ஒலித்த குரல் அது. ்அன்று அதன் பாத்திரம் முற்போக்கானதே. அவசியமானதும் கூட. இன்று அது மீண்டும் புலம் பெயர்ந்து புலத்திற்கே வந்துவிட்டமை அதன் தாற்பரியத்தை இழந்து விட்டது எனலாம். அல்லது அது தனது நோக்கதைப் பிரதிலிபலிக்க வேண்டுமாயின் இன்றைய ஜனநாயக மறுப்பிற்கு எதிராகவும் நிலவும் ஆதிக்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்குமாயின் அதன் தாற்பரியம் இப்பொழுதும் கட்டிக் காக்கப்படுகின்றது எனலாம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பதையே மே 2009 ஆண்டுக்குப் பின்பு நடைபெறும் நிகழ்வுகள் கூறுகின்றன.

சரி இனி விடயத்திற்கு வருகின்றேன்.

பெண்களின் காம உணர்வு என்பது யோனியில் அல்ல அது கிளிட்டரசிலையே இருக்கின்றது என்பது ஆய்வுகள் கூறும் உண்மை. யோனி என்பது புணர்விற்கும் குழந்தை பேற்றுக்கும் மற்றும் மாதவிடாய் போன்றன வெளியேறுவதற்குமான ஒரு வழியே. இதற்குள் “ஜீ இடம்” என்று ஒன்று இருப்பதாகவும் அதுவும் காம உணர்வுகளைத் தூண்டக்கூடியது எனக் கூறுகின்றார்கள். ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படாத ஆய்வுக்கு உட்பட்ட விடயமாக இருக்கின்றது. ஆனால் கிளிட்டரஸ் என்பது பெண்களின் காம உணர்வின் மூலம் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல். இந்த அறிவை பல ஆண்டு காலமாக பெண்களுக்கும் சமூகத்திற்கும் ஆதிக்க சக்திகள் மறைத்து வைத்திருக்கின்றார்கள் என்பது பழைய தகவல். இதன் மூலம் பெண்களின் காம உணர்வைக் கட்டுப்படுத்தி அவர்களை ஒடுக்கி வைத்திருக்கின்றார்கள். இதுவே ஒரு ஒடுக்குமுறைதான். ஆனால் கத்னா என்பது காலம் காலமாக நடைமுறையில் இருந்தாலும் புதிதாக அறிந்த ஒரு விடயம். கிளிட்டரஸ் தொடர்பான அறிவை மறைப்பதே ஒடுக்குமுறை என்றால் அந்தப் பகுதியையே வெட்டி எறிவது என்பது கொடுமையிலும் கொடுமை. ஒடுக்குமுறையின் உச்சம். இது இன்றைய முஸ்லிம் சமூகத்தில் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் ஒரு பெண்ணுக்கு நடந்தால் கூட அது வன்முறைதான். ஒடுக்குமுறைதான். அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

அதாவது ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள் மீண்டும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்க வேண்டும். அதையே இலக்கிய சந்திப்பும் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அது தனது தாற்பரியத்தைக் காப்பாற்றலாம். அந்தவகையில் கத்னா தொடர்பான விவாதம் நடைபெற வேண்டியது முக்கியமானதாகும்.

மீராபாரதி


Responses

  1. முதற்கண் வந்தனங்கள்,
    கத்னா தொடர்பான ‘விவாதம்’ கட்டாயமானதே, ஆனால் தனிப்பட்ட ஒருவரின் அவர் சார்ந்த கருத்துக்களை மாத்திரமே பேசும் ஓர் உரை என்பது கத்னா பற்றிய முழு அறிவினை அது பற்றி அறியாதவர்களுக்குத் தந்துவிடப்போவதில்லை,

    உண்மையில் ஏற்பாட்டுக்குழு ஒருவருடைய உரையை மாத்திரம் இடம்பெறும் வகையில் அமைக்க முயற்சிக்காமல், அதை ஒரு அரங்காகவோ அல்லது பல தரக் கருத்துக்களுக்கு இடமளிக்கும் ரீதியான ஓர் கலந்துரையாடலாய் நடைபெற எத்தனித்திருந்தால் இத்தனை குழப்பங்கள் ஏற்பட்டிராதோ என்னவோ?..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: