Posted by: மீராபாரதி | July 17, 2017

நிலம் இழந்த கதைகள்

சொந்தக் காணிக்குள் களவாக நூழைஞ்சவர்களின்

 நிலம் இழந்த கதைகள்

19867143_10158967343380324_1100284851_oஅடையாளம் வெளியீடான ஜெராவின் நிலம் இழந்த கதைகள் மிகவும் முக்கியமானதொரு நூல். அதுவும் இன்றைய காலத்தில் அவசியமானதும் பரவலாக அறிமுகம் செய்யப்பட வேண்டியதுமாகும். கொள்கை ஆய்வுகளுக்கான நிலையம் தனது பதிப்புரையில், “”நல்லாட்சி” என்ற கோசத்துடன் ஆட்சி மாற்றம் 2015 இல் இடம் பெற்றதன் பின்னரும், தமிழ் பிரதேசங்களில் அதி உச்ச இராணுவ இருப்பும் நில அபகரிப்புகளும் ஏன் இடம்பெறுகின்றன என்பது பற்றிய ஆழமான தேடல் தேவை “ என்பதனால் இந் நூலை வெளியீடுகின்றோம் எனக் குறிப்பிடுகின்றனர்.  இதுவரை விடுவிக்கப்பட்ட காணிகளைப் பொறுத்தவரை, “காணிகளை விடுவிப்போம் ஆனால் இராணுவத்தோடு வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்பது தான் அரசாங்கத்தின் செய்தியாக இருக்கின்றது.” மேலும் இவ்வாறான செயற்பாடுகளினுடாக இராணுவம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அதை அண்டிய பகுதிகளில் புதிய குடியேற்றங்களும் பௌத்த விகாரைகளும் அமைக்கப்படுகின்றன. இத்துடன் இராணுவம் மக்களின் நளாந்த பிரச்சனைகளிலும் தலையீடு செய்வதனுடாக தமது பிரசன்னத்தை நியாயப்படுத்துகின்றனர். ஆகவேதான் “அடக்குமுறைக்குள் இருந்து கொண்டு அடக்குமுறையை தன்னிலையாக்கம் செய்து நாம் அதனை எமது அன்றாட வாழ்வியலில் உள்வாங்காமல்  இருப்பதற்காக சமூக விழிப்புணர்புத் திட்டங்கள் தேவை” என்கின்றனர். “நாம் வாழ்வது ஒரு அசாதாரண சூழலுக்குள் என்பது தொடர்பிலான மீள் ஞாபகமூட்டல் அவசியம். அப்படியான சிந்தனையின் வெளிப்பாடு தான் இந்த தொகுப்பை வெளிக்கொணரச் செய்ய வேண்டும் என எம்மை உந்திற்று.” என்கின்றார் ஆய்வுத் திட்டப் பணிப்பாளர் குமாரவடிவேல் குருபரன். நூலாசிரியர் ஜெரா “நிலம் தமிழர்களின் ஆன்மா. நிலத்தை இழத்தல் ஆன்ம இழப்புக்கு – சுயம் இழப்புக்கு நிகரானது” என்கின்றார். ஈழப் போரும் இந்த நிலத்தைப் பாதுகாக்கவே ஆரம்பித்தது.  ஆனால் போரின் முடிவில் அரசானது பல காரணங்களினுடாக தமிழர்களின் நிலங்களை அபகரிக்கின்றது. அவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலங்களில் வாழ்ந்தவர்களின் அனுபவங்களே இத் தொகுப்பு.  கடந்த வாரம் மு.திருநாவுக்கரசு அவர்கள் நிலம் பறிப்பினதும் அது எவ்வாறு துண்டாடப்பட்டது என்பவற்றின் வரலாறு தொடர்பாக கோட்பாட்டாக்கம் செய்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இத் தொகுப்பில் ஏழு கதைகள் உள்ளன. இவை ஏழு நிலங்களின் வரலாறுகள். ஏழு மனிதர்களின் அனுபவங்கள். ஏழை மனிதர்களின் வாழ்வு. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய், கொக்கிளாய் முகத்துவாரம், கொக்குத்தொடுவாய், முள்ளியவளை, கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு, மற்றும் வட்டுவாகல் ஆகிய கிராமங்களிலுள்ள மக்களை சந்தித்துப் பெறப்பட்ட தகவல்கள். இவை வெறுமனே கதைகள் இல்லை. ஏழை மனிதர்கள் அன்றாடம் தாம் வாழ்வதற்காக எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சவால்கள் எனலாம். ஒவ்வொரு நாளும் உண்பதற்கே போராட்டமாக இருக்கும் பொழுது வாழும் நிலத்தை மறுப்பதானது உயிரைப் பறிப்பது போன்றது. நிலமில்லாமல் வாழ்வேது? வாழும் நிலத்திலோ தினம் ஆயுதத்துடன் இராணுவம். அவர்களுடன் ஆக்கிரமித்த பௌத்த பிக்குகளும் சிங்களவர்களும். இரவில் நிம்மதியான நித்திரை எங்கே? போராட்டம் ஆரம்பித்த காரணங்களில் இதுவும் ஒன்று, ஆனால் போராட்டம் மட்டும் நின்றுவிட்டது. காரணங்கள் மட்டும் தொடர் கதையாக இருக்கின்றன.

indexமுதலாவது கதை கொக்கிளாய் கிராமத்திற்குள் வாழ்ந்த திருஞானசம்பந்தர் மணிவண்ணதாசன் என்ற வண்ணம் அண்ணனின் கதை. “சொந்தக் காணிக்குள் களவாக நூழைஞ்ச முதல் தமிழன் நானாகத்தான் இருக்கக்கூடும்” எனக் கூறும் இவரது காணியின் உரிமைக்கான போராட்டதை இது வெளிப்படுத்துகின்றது.1983ம் ஆண்டு காணி உரிமைக்காக அலுவலகங்களுக்கு ஏறி இறங்கியவரை 1984ம் ஆண்டு இராணுவத்தின் துணையுடன் அந்தக் கிராமத்திலிருந்த அனைவருடனும் வெளியேற்றினார்கள். அந்த நேரத்தில் காணியை விட்டுப் போக மாட்டேன் என்று கூறிய முதியவர் ஒருவரை அவரது வீட்டை எரித்துவிட்டு அதற்கு மேல் தூக்கி வீசினார்கள். 1990ம் ஆண்டு இந்தியாவிற்கு சென்ற இவர் 2009ம் ஆண்டு மீண்டும் இந்தியாவிலிருந்து வந்து தனது நிலத்திற்கு சென்றிருக்கின்றார். தனது காணியைச் சுற்றி வேலியை அடைத்தபோது பௌத்தபிக்கு இராணுவத்துடன் வந்து, “இக் காணியில் உனக்கு உரிமையில்லை” எனக் கூறி சண்டைபிடித்துள்ளார். இவரது தொடர்ச்சியான போராட்டத்தினால் பிக்கு “இறங்கி வந்து” காணியின் பாதியை வைத்துக் கொள் என அதிகாரத் தொனியில் கூறியிருக்கின்றார். யார் யாரைப் பார்த்து வைத்துக் கொள் என்பது? ஆகவே இவர் உடன்படவில்லை. இங்குள்ள சிங்கள மக்களும் இது வண்ணத்தின் காணி அவரிடமே கொடுத்துவிடுங்கள் என பிக்குவிற்கு கூறியதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அந்த சிங்களவர்களைப் பற்றிய குறிப்புகள் ஏதுவும் இல்லாமை ஒரு குறைபாடு. அவர்களுடனும் உரையாடி இருக்க வேண்டும். அதன்மூலம் அவர்களை எவ்வாறு அரசு பயன்படுத்துகின்றது என்பதை அவர்களது வாயாலையே சொல்ல வைத்திருந்தால் இது மேலும் சிறந்த ஒரு ஆவணமாக இருந்திருக்கும். ஏனெனில் சிங்கள மக்களே இல்லாத இப் பகுதியில் ஏன் பௌத்த விகாரை கட்ட வேண்டும்? இது தொடர்பாக யாரும் கதைக்கச் சென்றால் புலனாய்வுத் துறையினர் வருபவர்களின் தகவல்களை பெறுகின்றார்கள். இக் காணிப் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் தொடக்கம் காணிப் பதிவாளர் எனப் பலருடன் உரையாடி பிக்குவிற்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆதரவுடனும் இராணுவத்தின் பாதுகாப்புடனும் பௌத்த விகாரையை பிக்கு தொடர்ந்தும் கட்டுகின்றார். வண்ணனோ எதிர்காலமே கேள்வியாக வானத்தைப் பார்த்தபடி இருக்கின்றார்.

இரண்டாவது அனுபவம் கொக்கிளாய் முகத்துவாரப் பகுதியைச் சேர்ந்தவரது. இங்கே 1983ம் ஆண்டிலிருந்து சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் பிரச்சனை இருக்கின்றது. இந்த இடத்திலிருந்து விரட்டப்பட்ட தமிழர்கள் மீண்டும் மீண்டும் இந்த இடத்திற்கு வரும் பொழுதெல்லாம் பிரச்சனை ஏற்படுகின்றது.1984ம் ஆண்டு இங்கிருந்து சிறுவனாக விரட்டப்பட்ட அலன் என்பவர் இன்றும் தனது காணி உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவரது அனுபவமே இக் கதை. மீண்டும் 2011ம் ஆண்டு தனது காணிக்கு மீளக் குடியேறச் சென்றபோது அங்கு வாழ்கின்ற சிங்களவர்கள் இது இப்பொழுது எங்களுடைய காணி எனக் கூறி விரட்டி விட்டுள்ளார்கள். இவரது காணியைச் சுற்றி இருப்பவர்கள் சிறிது சிறிதாக இவரது காணிக்குள் தமது வேலியை விஸ்தரித்து நடுவில் உள்ள இடத்தை விளையாட்டுத் திடலாகப் பயன்படுத்துகின்றார்கள். இங்கு ஆரம்பத்தில் குடியேறிய சிங்களவர்கள் இது இவருடைய காணிதான் எனக் கூறியபோதும் புதிதாக குடியேறியவர்கள் ஏற்க மறுக்கின்றார்கள். இங்கும் இந்த இருவிதமான சிங்களவர்களிடமிருந்து கருத்ததெதுவும் அறியப்படவில்லை. அலன் மீன் பிடித்தொழில் செய்கின்றார். ஆனால் இப்பொழுது பெரும்பாலான சிங்களவர்களே இங்கு இ்த் தொழிலை செய்கின்றார்கள். ஆகவே தனது தொழிலும் பாதிக்கப்படுகின்றது என்கின்றார். மேலும் இவர்கள் தடை செய்யப்பட்ட மீன் பிடிமுறைகளான சுருக்குவலை, இயந்திரம் இழுக்கும் கரைவலை என இப்பவும் பயன்படுத்துகின்றார்கள். இது இங்கு வாழும் தமிழர்களை மட்டும் பாதிக்கவில்லை. இச் சூழலையும் பாதிக்கின்றது.

19885929_10158967342915324_1424317723_o“தமிழர்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் குடியிருக்கப் போறதெண்டால், கிராம சேவையாளர் தொடக்கம், பிரதேச செயலாளர் வரைக்கும் உறுதிப்படுத்திக் கடிதம் தரவேணும். அப்பதான் புது இடத்தில எங்களப் பதிவு செய்வினம். சிங்கள ஆக்கள் சாதாரணமா கிராம சேவகர் குடுக்கிற துண்டோட வருகினம். அதைக் குடுத்துத்தான் பதிவு செய்யினம். இங்க இருக்கிற எங்கட அதிகாரிகளும் அதை ஏற்றுக்கொள்ளுகினம்.” என்கின்றார் அலன்.

மூன்றாவது கிராமம் கொக்குத்தொடுவாய். இங்கு மார்சா ஐயாவுடன் அவரது வீட்டு முற்றத்திலிருந்து உரையாடினோம். 1956ம் ஆண்டு எங்களுக்குத் தந்த காணி உறுதி இப்பவும் இருக்கு. சிலர் இடம்பெயர்ந்ததில் தூலைத்துப்போட்டார்கள். இவர்கள் இடம்பெயர்ந்து போகும்வரை இந்த இடங்களில் எல்லாம் கரைதுறைப்பற்று என தமிழ் பெயர்கள் இருந்தன. இப்பொழுது சம்பத்நுவர, ஜனகபுர, சிறிபுர என பெயர்களை மாற்றி அழைக்கின்றார்கள்.

நான்காவது கதை முள்ளியவளை கிராமம். இக் கிராமத்தை முஸ்லிம்கள் முஸ்லிம் அமைச்சரின் உதவியுடன் அபகரித்துள்ளதாக குறிப்பிடுகின்றார்கள். முக்கியமாக இப் பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்களான வன்னியன்மேடு போன்ற இடங்களையும் வனங்களை அழித்து தனிநபர்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளார்கள். இக் கிராமத்தில் ஆரம்பத்தில் 1000 முஸ்லிம்கள் குடும்பங்கள் இருந்துள்ளனர். ஆனால் இன்று இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக உள்ளது. இவ்வாறு புதிதாக குடியேறியவர்கள் கொண்டுவரும் துண்டைக் கொண்டு அவர்களுக்கான காணிப்பதிவுகள் நடைபெறுகின்றன. இப் பதிவிலும் நூலாசிரியர் குடியேறிய முஸ்லிம் மக்களுடனும் மற்றும் குறிப்பிட்ட அமைச்சருடனும் உரையாடவில்லை. அல்லது அதுதொடர்பான பதிவை செய்யாமை முக்கிய குறைபாடாகும். ஏனெனில் முஸ்லிம்கள் மக்கள் உடனான முரண்பாடுகளை பதிவு செய்யும் பொழுது தமிழர்கள் மிகவும் அவதானமாகவும் நூன்ணுணவர்வு உள்ளவர்களாகவும் இருப்பது அவசியம். அவ்வாறு அதனையும் பதிவு செய்திருந்தால் ஒரு பன்முக பார்வை கொண்ட நூலாக இது இருந்திருக்கும்.

ஐந்தாவது கேப்பாப்புலவு கிராமத்தில் வாழ்ந்தவர்களது அனுபவமாகும். “2009ம் ஆண்டுவரை இலங்கை இராணுவத்தின் நிழல் கூட விழாத கிராமமாகத்தான் இது இருந்தது. ஆனால் இப்பொழுது அந்தக் கிராமத்தின் முழுப்பகுதியையும் இராணுவத்தின் நிழல் மறைத்திருக்கின்றது.” ஆறாவது அனுபம் புதுக்குடியிருப்பு கிராமத்தைப் பற்றியது. இக் கிராமத்தில் புலிகளின் நிர்வாக அலுவலகங்கள் பல இருந்துள்ளன. ஆகவே இராணுவம் இந்த இடங்கள் முழுவதையும் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பு வலையமாக அறிவித்தது. ஆகவே மீளக் குடியேற வந்தவர்களுக்கு காணியை வழங்க மறுக்கின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்தான் 79 வயதான செல்வரத்தினம் தங்கம்மா. இவரது காணி மீட்ப்புக்கான போராட்டமும் தொடர்ந்து நடைபெறுகின்றது. ஏழாவது காணி அனுபவம் வட்டுவாகல் பகுதிக்குரியது. இவருக்கு உறுதிப் பத்திரங்கள் இருந்தும் பயனில்லை. இராணுவம் இப் பகுதி முழுவதையும் பாதுகாப்பு உயர்வலையமாக அறிவித்து கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் நாம் உள்ளே போக முடியாது உள்ளோம் என்கின்றார்.

தமிழர்களின் மரபு வழித் தாயகப் பிரதேசங்களான வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற மையமாகத் தென்னமரவாடி காணப்படுகின்றது. இந்த தென்னமரவாடி வலயத்திற்குள் மண்கிண்டிமலை, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் முதலான கிராமங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் திட்டமிட்டு அரசும் அரசாங்கமும் இராணுவமும் பௌத்த மதகுருமாரும் சிங்களவர்களைக் குடியேற்றி வடக்கு கிழக்கை பல வழிகளில் இரண்டாகப்  பிரிக்கின்றனர். தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை அழிக்கின்றனர். பௌத்த ஆலயங்களை நிறுவி புதிய அடையாளங்களை உருவாக்குகின்றனர். இதனால் பாதிக்கப்படுபவர்கள் சதாரண தமிழ் மக்கள். ஆனால் அரச அதிகாரிகள் தமது தொழிலைப் பாதுகாக்க இவ்வாறான பிரச்சனைகளில் பெரிதாகத் தலையிடுவதில்லை. ஆகவே கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தமது கதிரைகளுக்காக சண்டைபோடவே நேரம் காணதபோது இதற்காக போராட எங்கே நேரம் கிடைக்கும். எதிர்கட்சி தலைவரும் அவரது ஆலோசகரும் எழுபது வருடகாலம் ஏமாற்றப்பட்ட அனுபவத்தின் பின்னரும் நம்பிக்கையுடன் ஏமாறக் காத்திருக்கின்றார்கள்.

யாரைத்தான் நோவது?

பாவம் மக்கள்!

மீராபாரதி

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: