Posted by: மீராபாரதி | July 14, 2017

நெடுந்தீவு – ஈழத்தின் வடக்கு வாசல்

நெடுந்தீவு – ஈழத்தின் வடக்கு வாசல்

IMG_4671புலம் பெயர்ந்த நண்பர் ஒருவர் நான் இங்கு ஒரு வருடம் நிற்கின்றேன் என அறிந்தவுடன் அதற்கான வாழ்த்துகளை உட்பெட்டியில் தெரிவித்தார்.  அவரது ஆர்வத்தைக் கண்டு நானும் எனது தேவைகளையும் விருப்பதையும் கூறினேன்.  அவர் என்னை நெடுந்தீவுக்கு செல்லும்படியும் அதற்கான தொடர்புகளைத் தருவதாகவும் கூறினார். பல சிரமங்கள் முயற்சிகளுக்கு மத்தியில் அதனைப் பெற்றும் தந்து அங்குள்ள மாணவர்களுக்கு என்னாலான பங்களிப்பை வழங்கும்படி கூறினார். நானும் அவர் தந்த தொடர்புகளுடன் உரையாடி எனது பயணத்தை ஆரம்பித்தேன்.

யாழிலிருந்து குறிக்காட்டுவானுக்கு ஒரு மணித்தியாலப் பேரூந்துப் பயணம். குறிக்காட்டுவானிலிருந்து நெடுந்தீவிற்கு காலையில் ஏழரை மணிக்கும் ஒன்பதரை மணிக்கும் இரண்டு படகுச் சேவைகள் (குமுதினியும் வடதாரகையும்) நடைபெறுகின்றன. இப் பயணத்திற்கும் மேலும் ஒரு மணிநேரம் வேண்டும். மீண்டும் நெடுந்தீவிலிருந்து குறிக்காட்டுவானுக்கு மாலை இரண்டரை மணிக்கும் நாலரை மணிக்கும் செல்கின்றன. இரண்டையும் அரசாங்கம் இலவசமாகவே நடாத்துகின்றது. நெடுந்தாரகை வார இறுதி நாட்களில் மட்டுமே பிரதேச சபையினால் பயன்படுத்தப்படுகின்றது. இதனை கடற்படையினரே ஓட்டுகின்றனர்.  நான் சென்றது குமுதினி படகில்.

குமுதினி பெயரைக் கேட்டவுடனையே நமக்கு நினைவுக்கு வருவது 1985ம் ஆண்டு நடைபெற்ற குமுதினிப் படுகொலைகள் தான். இப் படகில் போகும் போது நான் நினைத்தேன் அதே பெயரில் புதிய படகொன்றை செய்து பயன்படுத்துகின்றார்கள் என. ஆனால் அங்கு சென்றவுடன் இது அதே படகுதான் தான் அறிந்தேன். இப் படகில் வைத்துத்தான் குழந்தைகளையும் பெண்களையும் ஆண்களையும் வெட்டிக் கொன்றார்கள். அதன்பின் படகை புனரமைப்பு செய்து இன்றுவரை பயன்படுத்துகின்றார்கள். கடந்த நூறு வருடங்களாக இது சேவையில் ஈடுபடுகின்றது என ஒருவர் கூறினார். இப் படகினுள் பயணிகள் நூழைவதற்கு சிறிய பாதைகள் நான்கு இருக்கின்றன. இரண்டு பாதைகள் பின்னால் இருப்பதற்கும். இரண்டு பாதைகள் முன்னால் இருப்பதற்கும். படகினுள் கீழே இறங்கிச் செல்ல வேண்டும். இந்தப் பாதைகளைச் சாதாரண ஒரு மனிதரால் அடைத்துக் கொண்டு நிற்கலாம். அவ்வாறு நின்றால் பயணிகள் வெளியே செல்வதற்கு எந்த மார்க்கமும் இல்லை. சுற்றிவர இருக்கும் சிறிய ஜன்னல்களாலும் வெளியே பாய முடியாது. இவ்வாறான ஒரு படகில் அகப்பட்ட அந்தப் பயணிகளை நினைத்துப் பார்த்தேன். அவர்கள் நிலையை உணர்ந்து இப்பொழுதும் பயம் கொண்டேன். குமுதினி நம் வாழ் நாளில் மறக்க முடியாத பெயர். இந்தப் பெயரைச் சொல்லும் பொழுதெல்லாம் அந்தப் படுகொலை நினைவுகள் வருவது தவிர்க்க முடியாதது.

நெடுந்தீவிற்கான இறங்குதுறையில் குமுதினி படுகொலையில் இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னம் உள்ளது. அருகில் கடற்படையின் முகாமும் உள்ளது. படகை விட்டு இறங்கியவுடன் பேரூந்து காத்து நிற்கும். அதில் ஏறி போக வேண்டிய சில இடங்களுக்கும் போகலாம். சில இடங்களுக்குப் போவது என்றால் காத்திருக்கும் ஆட்டோவைத்தான் பிடிக்க வேண்டும். நெடுந்தீவு 45 சதுர கீலோ மீட்டர் தூரம் கொண்ட பிரதேசம். சுமார் ஐயாயிரம் பேரே வசிக்கின்றனர். இவர்களுக்கு 17 தேவாலயங்களும் 7 கோவில்களும் உள்ளன. ஐந்து பாடசாலைகள் இருக்கின்றன. பெண்களுக்கு என தனிப் பாடசாலையும் உள்ளது. போகும் வழியில் டக்களஸ் தேவானந்தாவின் படத்துடன் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற வாசகத்துடன் அவரது அலுவலகம் இருந்தது. இது மட்டுமே அங்கிருந்த கட்சி அலுவலகம். இவரே இத் தீவிற்கு முதன் முதலாக மின்சாரம் கொண்டுவந்தவர் என்றார்கள். மேலும் பல வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய கட்டிடங்கள் என்பவற்றையும் வழங்கியதால் அவர் மீது மதிப்புடன் இருக்கின்றார்கள்.

நான் படகில் போகும் பொழுதே எனக்கு அறிமுகப்படுத்திய ராசன் என்ற தம்பிராசாவை அடையாளங் கண்டு உரையாடினேன். அவர் தங்குவதற்கான ஒரு இடத்தைக் கண்டு பிடித்து தந்தார். பிரதேச சபை சில வசதிகளுடன் இங்கு வருபவர்கள் தங்குவதற்கு நல்லதொரு கட்டிடத்தை கட்டியுள்ளது. அதில் மூன்று நாட்கள் தங்கினேன். இத் தீவில் தண்ணீர் பெரும் பிரச்சனை. ஒன்றிரண்டு கிணறுகளே நல்ல தண்ணீர் கிணறுகள். மற்றவையெல்லாம் உப்புத் தண்ணீர். இந்த மக்களுக்கு நல்ல தண்ணீர் மிகவும் பிரச்சனையான விடயம். நன்னீர் இவ்வாறு இல்லாமல் போனமைக்கு போர்த்துகீசரும் ஒரு காரணம். அவர்கள் நன்னீர் குளங்களை எல்லாம் தமது உல்லாசப் பயணத்துறைக்காக கடலை இணைத்து வெட்டிய கால்வாய்களினால் நிலங்களில் உப்பு நீர் சுவர்ந்துள்ளது. இன்று இக் கால்வாய்கள் உல்லாசப் பயணிகள் பார்வையிடும் இடமாக உள்ளது. உண்மையிலையே இலங்கையில் காணப்படும் இன ஒடுக்குமுறை உட்பட பல பிரச்சனைகளுக்கு போர்த்துகீசர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களிடமே நாம் நஷ்ட ஈடு கோர வேண்டும். ம்….. மேலும் இத் தீவில் வீடுகளில் தங்காமல் பொது இடங்களில் தங்கினால் சாப்பிடுவதற்கு உணவகங்கள் இல்லை. இறங்குறையில் மட்டும் ஒரு உணவகம் உள்ளது. இது சிறிது தூரம். வாகன வசதிகள் இல்லாவிட்டால் இங்கு வந்து சாப்பிட்டு போவது கஸ்டம். ஆனால் இங்குள் பிரதேச சபை மற்றும் பிரசேத செயலகம் என்பவற்றில் தீவுக்கு வெளியேயிருந்து வந்து வேலை செய்பவர்களுக்கு ஒரே ஒரு வீட்டில் சமைத்துக் கொடுப்பார்கள். அனைவரும் அந்த வீட்டைத்தான் சிபார்சு செய்தார்கள். மகேந்திரன் வீடு என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த வீட்டில் எனக்கான சாப்பாட்டையும் ஒழுங்கு செய்தேன்.

ஈழத் தமிழர்களின் வீட்டு வேலிகள் தொடர்பான ஒரு ஆவணப்படத்தை ஆர்வமுள்ளவர்கள் எடுக்கலாம். அதில் கூட பல தமிழர்களின் கலாசார, பண்பாட்டு, வர்க்க, சாதிய, காலமாற்ற அம்சங்கள் என நிறைய இருக்கின்றன. நெடுந்தீவில் கல் வேலிகள் பிரபல்யமானவை. இதனைப் பகிர் என்றும் அழைப்பார்கள். ஆனால் இன்று உள்ள கல்வேலிகள் புதிதாக மீண்டும் கட்டப்பட்டவை. ஏனெனில் போராட்ட காலத்தில் இயக்கம் சக்திமிக்க ராடர் ஒன்றை இங்கிருந்து எடுத்துச் சென்று விட்டார்கள். அதன்பின் அனைத்து வேலிகளையும் தரைமட்டம் ஆக்கும் படி கடற்படை உத்தரவிட்டுள்ளது. அதாவது தாம் எங்கிருந்து பார்த்தாலும் அடுத்த கரை தெரிய வேண்டும் எனக் கட்டளையிட்டுள்ளார்கள். ஆகவே இக் கல் வேலிகள் உடைக்கப்பட்டு மீண்டும் போராட்டம் முடக்கப்பட்ட பின் கட்டப்பட்டன. இவை வெறுமனே கற்களின் மேல் கற்களை அடுக்கிவிடப்பட்ட வேலிகள். தள்ளிவிட்டால் விழக்கூடியவை. ஆனாலும் நீண்ட காலம் இருக்கின்றன. இதைக் கட்டும், உண்மையில் அடுக்கும், ஆற்றலுள்ளவர்கள் மிகவும் நேர்த்தியாக செய்வார்களாம். மற்றவர்கள் செய்வதில் அந்தளவு நேர்த்தி இருக்காது என்பதை சில வேலிகளைப் பார்த்த போது தெரிந்தது. இன்றும் பல வேலிகள் உடைந்தும் வீடுகள் பாழடைந்தும் காணப்படுகின்றன. மனித நடாமாட்டம் குறைவான பிரதேசம் இது. சில நேரம் பகல் பொழுதுகளிலும் மாலை வேலைகளிலும் நான் மட்டுமே வீதியால் பயணம் செய்வேன். அந்தளவிற்கு அமைதியாக சன சந்தடியற்றப் பிரதேசம். விரைவில் உல்லாச பயணத்துறை இங்கு கொடிகட்டிப் பறக்கலாம்.

இங்கு நின்ற மூன்று நாட்களிலும் இரண்டு நாட்கள் இரண்டு பாடசாலைகளில் தியானப் பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அதற்கான ஒழுங்குகளை உதவிக் கல்விப் பணிப்பாளர் சாரதா அவர்கள் செய்தார்கள். இப் பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு கொஞ்சம் கஸ்டப்பட்டே இப் பயிற்சிகளைப் பழக்க வேண்டி இருந்தது. பொதுவாக ஈழத் தமிழர்களின் குழந்தைகளின் உடல்கள் அவர்கள் புலத்திலிருந்தால் என்ன புலம் பெயர்ந்து இருந்தால் என்ன இறுக்கம் தயக்கம் கூச்சம் போன்ற பண்புகளை கொண்டவையாகவுமே இருக்கின்றன. இதிலிருந்து இவர்களை மீட்பது என்பது மிகப் பெரும்சவாலே. இதை மாற்ற நமது கல்வித்துறையில் தான் பல மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது.

நெடுந்தீவிலிருந்து மீள வரும் பொழுது படகில் மாகாண சபை உறுப்பினர்களும் (விந்தன், ஐங்கரநேசன்) வந்தார்கள். இப் பிரதேசத்தின் இன்னுமொரு அடையாளமாக இருக்கின்ற குதிரைகள் தொடர்பான பிரச்சனைகளை நேரில் பார்வையிட வந்திருக்கின்றார்கள். கடந்த ஒரு மாதத்திற்குள் பல குதிரைகள் இறந்திருக்கின்றன. ஆனால் இவை இறந்ததற்கான காரணத்தை குதிரைகள் இறந்தவுடன் கண்டறியவில்லை. பொறுப்பானர்வகள் செய்யவில்லை. இப்பொழுது காலம் கடந்து விட்டதால் அதைச் செய்ய முடியவில்லை. ஆகவே இறப்பிற்கான காரணங்களை அறியமுடிவில்லை. அதேநேரம் இந்த வனவிலங்கு தொடர்பான அதிகாரமும் மத்திய அரசாங்கத்திடம் தான் இருக்கின்றதாம். அவர்களை மீறி இதில் தாம் ஒன்றும் செய்ய முடியாது என்றார் மாகாண சபை உறுப்பினர். குதிரைகளைப் போர்த்துகீசர் கொண்டு வந்த போதும் இன்று அது நெடுந்தீவின் அடையாளம். அதைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. இப்பொழுது சுமார் 1000 குதிரைகள் இருக்கின்றன. ஆனால் மத்திய அரசாங்க அமைச்சு 400 குதிரைகள் இருப்பதாகவே பதிவு செய்துள்ளனர். இவ்வாறு செய்வதனுடாக அதற்கான நிதியைக் குறைப்பதும் குதிரைகளை இல்லாமல் செய்வதுமே அவர்கள் நோக்கம் என்றார் வட மாகாணசபை உறுப்பினர்.

இங்கு நின்ற நாட்களில் புதிய நண்பர் நெடுந்தீவு தனாவின் அறிமுகம் கிடைத்தது. இவர் கிளிநொச்சியில் நடைபெற்ற வெற்றிச் செல்வியின் நூல் அறிமுக நிகழ்வில் என்னைக் கண்டுள்ளார். ஆனால் உரையாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் நான் தங்கி நின்ற விடுதிக்கு அருகில் நல்ல தண்ணீர் அள்ள வந்திருந்தார். அப்பொழுது என்னைக் கண்டவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு உரையாடினார். வாசிப்பதில் ஆர்வமுள்ள இவர் இங்குள்ள நூலகத்தில் புதிய நூல்கள் இல்லை எனக் குறைபட்டார். நண்பர்கள் இந்த நூலகங்களுக்கு அன்பளிப்பு செய்தால் வரவேற்பார்கள்.

நான் தங்கியிருந்த விடுதியின் பின்னால் ஒல்லாந்தர் கோட்டை உள்ளது. ஆனால் அது பராமரிக்கப்படாமல் உள்ளது. இதேபோல நெடுந்தீவின் சின்னங்களாக மாவிலித் துறைமுகம், வெளிச்சவீடு, குவிந்தா வெளிச்சவீடு, வெடியரசன் கோட்டை, ஒல்லாந்தர் கோட்டை, குதிரைகள், குதிரை லாயங்கள், பூதம் வெட்டிய கிணறுகள் நாற்பதடி மனிதரின் பாதம், ஆலமரம், அரசமரம், பெருக்கு மரம், . எல்லாவற்றையும் சுற்றிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

இப் பயணத்தை ஒழுங்குபடுத்திய புலம் பெயர்ந்த நண்பர், மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் சாரதா, தம்பிராசா, அரசரட்ணம் நெடுந்தீவு தனா மற்றும் செந்தூரன் ஆகியோருக்கு நன்றி பல.

மீராபாரதி

14.07.2017

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: