Posted by: மீராபாரதி | July 11, 2017

ஈழத்தமிழர்களின் கல்வி

ஈழத்தமிழர்களின் கல்வி
ஒரு நூலும் சில பயணங்களும்.

Kanthaloya 133

ஈழத் தமிழர்கள் போரின்போதும் போரின் பின்பும் பல வழிகளில் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். இன்று இப் பாதிப்புகள் தொடர்கின்றன. இதில் வடக்கு கிழக்கு மாணவர்களின் கல்வி பயங்கரமான அளவில் பாதிக்கப்பட்டு முன்னேற்றமற்றதாக இருக்கின்றது. சில பாதிப்புகளை அரசியல் ஊடாக அல்லது அந்த அதிகாரத்தைக் கைப்பற்றுவதனுடாகவே நிவர்த்தி செய்யலாம். சில பாதிப்புகளை நமது கூட்டு முயற்சியால் நிவர்த்தி செய்யலாம். அந்தவகையில் ஈழத் தமிழர்களின் கல்வியை எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லலாம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். சில பாடசாலைகள் பல பரிட்சைகளினுடாக மாணவர்களை வடித்து எடுத்து சிறந்த பெறுபேறுகளை பெற்று புகழ் பெற்ற பாடசாலைகளாக விளங்குகின்றன. இதில் எந்தப் பெருமையும் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் இந்த மாணவர்கள் எந்தப் பாடசாலையில் கல்வி கற்றாலும் சித்தியடைவார்கள்.  மாறாக எந்தப் பாடசாலை பின்தங்கிய நிலையில் வசதிகளற்று இருந்தும் வறுமையிலும் கஸ்டப்பட்டு கல்வி கற்கின்ற மாணவர்களை சித்தியடையச் செய்விக்கின்றதோ அதுவே வளர்ச்சிப் பாதையில் செல்கின்றது எனலாம். அவ்வாறான பாடசாலைகள் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்குத் தடையாக இருக்கின்ற காரணிகளை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

19726953_10158936052060324_1715236102_oஅ.வா.முஹ்சீன் அவர்களின் பாடசாலை உளவியல் – ஒர் ஊடுகதிர் அறிக்கை முக்கியமானதொரு நூல். இந்த இந்த நூலை அறிமுகம் செய்வதனுடாக எவ்வாறு நமது தடைகளை களையலாம் என்பதை அறியலாம். பாடசாலை ஆசிரியர்கள் மட்டுமல்ல அதிபர்கள், கல்வி திணைக்களங்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் வாசிக்க வேண்டிய ஒரு நூல் இது. இ்ந்த நூலில் மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் (உளப்) பிரச்சனைகளும் நமது கல்வித் திட்டம் தொடர்பான விமர்சனங்களும் விபரமாகவும் தெளிவாகவும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில் கல்வி திட்டங்களிலும் கற்பித்தலிலும் பரிட்சைகளிலும் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதையும் முன்வைக்கின்றார். இம் முன்மொழிவுகளை முன்னெடுத்தாலே ஆரோக்கியமான மாற்றம் ஒன்று கல்வித்துறையிலும் மாணவர்களிலும் ஏற்படலாம்.

download (4)இந்த நூலில் காணப்படுகின்ற தலைப்புகளை தொகுத்துக் கூறினாலே நூல் என்ன பிரச்சனைகளை உரையாடுகின்றது என்பது தொடர்பாக விளக்கம் ஏற்படும்.மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் முதலாவது தலைப்பு உளவியலின் மட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் பாடசாலை மட்டம், நிர்வாக மட்டம், கொள்கை மற்றும் அமுலாக்க மட்டம் என்ற உப தலைப்புகள் உள்ளன. இரண்டாவது மாணவர்களின் உளவியலில் ஏற்படுகின்ற பாதிப்புகள் என்ற தலைப்பின் கீழ் மாணவர்களின் வளர்ச்சிப் பருவங்கள், சுயகற்றல், ஊடகங்கள், கட்டாயப் பாடங்கள், வெளியூர்களில் கல்வி கற்றல், பாடசாலை நேர முறைமை, பரீட்சை முறைமை, தண்டனைகள், மற்றும் கிழக்கு மாகாண சூழ்நிலை எனப் பல உபதலைப்புகள் உள்ளன. மூன்றாவது ஆசிரியர்களின் உளவியலில் ஏற்படுகின்ற பாதிப்புகள் என்ற தலைப்பின் கீழ் ஆசிரியர் நியமனம், கல்விக் கொள்கைகள், ஊதிய விவகாரம், கற்பித்தல் நேரம், மதிப்பீடுகளும் கணிப்பீடுகளும், பிற நிறுவனங்கள், ஆசிரியர்களின் வாண்மை நிலையும் ஆளுமையும் மற்றும் நிர்வாக மட்டம் என்ற உபதலைப்புகள் உள்ளன. இறுதியாக அதிபர்களின் உளவியலில் ஏற்படுகின்ற பாதிப்புகள் என்ற தலைப்பும் உள்ளது. இவ்வாறு ஒரு பாடசாலை சமூகம் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக உரையாடுகின்றது இந் நூல். ஆகவே கல்வித்துறையில் அக்கறையுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது என்றால் மிகையல்ல.

beating kids1பாடசாலை உளவியல் என்பது மருத்துவ (clinical), கல்வி (educational), மற்றும் வளர்நிலை (developmental) உளவியல்களை உள்ளடக்கியதாகும். இவை “சிறுவர்கள் மற்றும் கட்டிளமைப் பருவத்தினரின் நடத்தைகள் மற்றும் கற்றல் சார்ந்த பிரச்சனைகளை அடையாளம் காணவும் அவற்றிற்குப் பரிகாரம் காணவும் உதவுகின்ற ஒரு துறையாகும்” (10) எனக் குறிப்பிடுகின்றார். இருப்பினும் இந்த நூல் “ஒரு பாடசாலை சூழுலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்கொள்கின்ற உளநெருக்கடிகள் குறித்தே பிரதானமாக அக்கறை கொள்கின்றது.” (13). பாடசாலை உளவியலானது பாடசாலை மட்டம், நிர்வாக மட்டம், கொள்கை வகுத்தல் மற்றும் அமுலாக்கல் மட்டம் என்ற மூன்று தொகுதிகள் தனித்துவமாகவும் இருக்கின்ற அதேநேரம் ஒன்றுடன் ஒன்று இடைவெட்டுவனவாகவும் இருக்கின்றன. இவ்வாறு செயற்படுகின்ற இத் துறைகள் எவ்வாறு மாணவர்கள் ஆசிரியர்கள் மீது உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அறிவது அவசியமானது. இதை அறிவதனுடாகப் பல மாற்றங்களை மாணவர்களிலும் ஆசிரியர்களிலும் கல்வி வளர்ச்சியிலும் ஏற்படுத்தலாம் என்கின்றார்.

19724174_10158936048910324_1490050403_oமாணவர்கள் தமது 05 வயதில் இருந்து 19 வயது வரையிலான நீண்ட காலத்தை பாடசாலைகளில் கழிக்கின்றார்கள். இக் காலப்பகுதியிலையே ஒரு பிள்ளையின் உடல், உள மற்றும் அறிவு ரீதியான வளர்ச்சிகள் இடம் பெறுகின்றன. இந்த மூன்று வளர்ச்சிகளும் ஒன்றில் ஒன்று சார்ந்ததாகவும் ஒன்றை ஒன்று பாதிப்பனவாகவும் அமைந்திருக்கின்றன. மேலும் ஒரு பிள்ளையின் உளவியலை வடிவமைப்பதில் அப் பிள்ளையின் மரபணுவியல் காரணிகளோடு, குடும்பம், நண்பர் குழாம், மற்றும் சூழல் என்பனவும் பங்களிப்புச் செய்கின்றன. இத்தகைய பன்முகக் காரணிகளின் கூட்டு வினைகளின் விளைவாகவே ஒரு பிள்ளையின் உளவியல் கட்டமைக்கப்படுகின்றது. இந்த உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ளும்போதுதான் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாடசாலைகளோடு ஏனைய காரணிகளும் கொண்டிருக்கின்ற வகிபாகத்தை முறையாக மதிப்பீடு செய்ய முடியும். (17).

Kanthaloya 038மாணவர்களின் கற்றலில் குறிப்பாக ஆசிரியர்களின் வகிபாகம் முக்கியமானது. ஏனெனில் ஆசிரியர்களே விளக்கமளித்தல், முகாமைத்துவம், வழிகாட்டுதல், கண்காணித்தல், அடையாளம் காணுதல், உற்சாகப்படுத்தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் உதவி செய்தல் என வெவ்வேறு வழிமுறைகளில் மாணவர்களின் கற்றல் செயற்முறையை ஊக்குவிக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றார்கள். (18). இவ்வாறான ஒரு நிலையில்தான் மாணவர் ஒருவருக்கான சுயகற்றலுக்கான அடித்தளம் இடப்படுகின்றது. சுயகற்றலானது குழுச் செயற்பாடு, முன்வைப்பு, நடிப்பு, வீட்டு வேலைகள், பயிற்சிகள், ஒப்படைகள் என்பவற்றினுடாக ஊக்குவிக்கப்படுகின்றன (20). இருப்பினும் ஒரளவு அறிவு மட்டத்தைப் பெற்ற மாணவர்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் இவர்கள் செய்ததைப் பிரதி பண்ணுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். ஒரு புறம் பாடசாலைகளில் இவற்றைக் கவனித்து வழிநாடத்த 40 நிமிட வகுப்பறை நேரம் போதாமையாக காணப்படுகின்றது. மறுபுறம் குடும்ப சூழ்நிலைகள் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கின்ற மாணவர்களுக்கே பெற்றோரின் பங்களிப்பு கிடைக்கின்றது. பெரும்பாலன மாணவர்களுக்கு இதுவும் தூரதிர்ஸ்டமாகவே உள்ளது. ஆகவே அறிவு மட்டம் குறைந்த மாணவர்களின் வளர்ச்சி வீதம் இவ்வாறு பல காரணிகளால் பாதிக்கப்படுன்றது (21). குறிப்பாக பரிட்சைகளின் சித்தியெய்தும் வீதம் 50க்கு 50தாகவே இருக்கின்றது. இதற்கான காரணங்களை அறிவது அவசியமாகும்.

images (5)மேற்குறிப்பிட்ட 50 வீதமான “படிக்காத”மாணவர்களுக்கு கிடைக்கின்ற தண்டனைகளும் பலவிதம். இவையும் மாணவர்களின் கல்வியைப் பாதிக்கின்றன. படிக்காதவர்கள், பதிலளிக்காதவர்கள், வீட்டு வேலைகளை முடிக்காதவர்கள், பாடசாலைக்குத் தாமதமாக வருகின்றவர்கள், பணம் செலுத்தாதவர்கள் மற்றும் பெற்றோர்களை அழைத்து வராதவர்கள் என பல காரணங்களுக்காகத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன (74). இத் தண்டனைகளுக்குப் பயந்து பலர் பாடசாலைக்கு வருவதை தவிர்க்கின்றனர். உண்மையில் அதிபர்களும் ஆசிரியர்களும் இந்த மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு முதல் இவ்வாறு நடப்பதற்கான காரணங்களை அறிந்து அதை உரையாடி தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இதனுடாக தீர்வுகளை காணமுடியாமல் போன பின்பும் இவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தண்டனைகள் வழங்குவதற்குப் பதிலாக பிரச்சனைகளைத் தீர்க்க ஆரோக்கியமான தண்டனைகளை வழங்கும் வழிகளைக் கண்டடைய வேண்டும். ஏனெனில் ஆசிரியர்களில் தங்கி நிற்பவர்கள் மாணவர்கள். மேலும் ஆசிரியர்களிடம் அறிவும் இருப்பது அவர்களுக்கு ஒரு அதிகாரத்தை வழங்குகின்றது. இந்த அதிகாரமானது தண்டனைகள் வழங்குவதனுடாக துஸ்பிரயோகம் செய்யப்படக்கூடாது. மாறாக மாணவர்களின் பன்முகப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதனுடாக அவர்களை வழி நடாத்த வேண்டும்.

poor kidமேற்குறிப்பிட்ட காரணங்களுக்கு அப்பால் மாணவர்களின் கல்வி வளர்ச்சியைப் பாதிப்பவையாக பரிட்சைகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், கல்விப் பொது தராதர (க.பொ.த) சாதாரண மற்றும் உயர்தரப் பரிட்சைகள் என்பன முக்கியமான மூன்று பரிட்சைகள். இவை பெரும்பான்மையான மாணவர்கள் கல்வியை இடையில் விட்டு விலகுவதற்கு வழிவகுக்கின்றன. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சை குழந்தைகளைச் சித்திரவதை செய்கின்றது. இக் குழந்தைகள் தாம் விளையாடுகின்ற வயதில் விளையாடாது அதிகாலை முதல் இரவு வரை புத்தகங்களும் கையுமாக இருக்கின்றார்கள். பாடசாலை முடிந்தவுடன் மாலை நேர வகுப்புகளுக்குச் செல்கின்றனர். சில பெற்றோர்கள் மூன்றாம் நான்காம் வகுப்புகளிலிருந்தே இப் பரிட்சைக்காக குழந்தைகளைத் தயார் செய்கின்றார்கள். பெரும்பான்மையான குழந்தைகளுக்கு இப் பரிட்சையின் முக்கியத்துவம் புரிவதில்லை. அதற்கான அறிவோ பக்குவமோ அவர்களுக்கு இல்லை. ஆகவே இப் பரிட்சையானது மாணவர்களைவிட பெற்றோருக்கே முக்கியத்துவமானதும் அவசியமானதுமாக இருக்கின்றது. இதனால் கிடைக்கும் பலன் மிக அரிதானபோதும் இப் பரிட்சையில் சித்தியடைவது இன்று ஒரு சமூக கௌரவமாக கருதப்படுகின்றது. அதற்காகவே பெற்றோர்கள் கஸ்டப்பட்டு போட்டி போட்டு செயற்படுகின்றார்கள். குழந்தைகளின் விளையாட்டுத் தன்மையை இல்லாமல் கின்றார்கள். உண்மையான தரவுகளின் படி இப் பரிட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களில் 10வீதத்திற்கும் குறைவானவர்களே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றார்கள். மேலும் ஏழை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இப் பரிட்சையானது அவர்களுக்குப் பயன்படாமல் பணக்கார மாணவர்களின் கௌரவமான அந்தஸ்திற்கே அதிகமாகப் பயன்படுவது தூர்ப்பாக்கியமானது (60-61).

poor kid1க.பொ.த (சா.த) பரீட்சையில் தோல்வியடைகின்ற மாணவர்களின் முறைசார் கல்வி வாழ்வு மட்டுமின்றி பாடசாலைகளுக்கூடாக அவர்களின் ஆற்றல்கள் வெளிப்படுவதற்கான சாத்தியங்களும் முடிவுக்கு கொண்டுவரப்படுகிறன. குறிப்பாக கடந்த வருடங்களில் 60 வீதத்தினருக்கு அதிகமானோர் இப் பரிட்சையில் சித்தியடைய முடியாது தமது கல்வியை இடை நிறுத்தியுள்ளார்கள் (25). இந்த வீதமானது சிறு எண்ணிக்கையல்ல மாறாக மிகவும் அக்கறைக்குரிய கவனப்படுத்தப்பட வேண்டிய எண்ணிக்கை என வலியுறுத்துகின்றார். புதிய மாற்றங்கள் நடைபெறுவதாக அறியக் கிடைத்தபோதும் பாரிய மாற்றங்களை கல்வியிலும் கற்பித்தலிலும் பரிட்சை முறைமைகளிலும் செயற்படுத்த வேண்டும் என்பதையே பரிட்சை முடிவுகள் தெரிவிக்கின்றன.

க.பொ.த (சா.த) பரிட்சையில் சித்தியடைய தமிழ் மொழியில் திறமைச் சித்தியும் கணிதத்தில் சாதரண சித்தியும் பெறுவது கட்டயாமானது. ஆனால் இப் பாடங்களிலையே அதிகளவானவர்கள் சித்தியடையத் தவறுகின்றனர். (25). சுமார் 50 வீதமானவர்கள் தமிழில் திறமை சித்தி பெறமுடியாமையினால் உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பை இழந்துள்ளார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு, நூவரெலியா மாவட்டங்களிலையே 50 வீதமானவர்கள் சித்தியடையவில்லையெனின் இலங்கையின் மற்ற மாவட்டங்களின் நிலைமையைப் புரிந்து கொள்ளலாம். அதாவது 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திறமைச் சித்தி பெறத் தவறியுள்ளனர். கல்வி வலையங்களாகப் (97) பார்த்தால் நூவரெலியா, அட்டன், தீவகம், கிளிநொச்சி, வவுனியா, துணுக்காய், பட்டிருப்பு, மட்டக்களப்பு, மூதூர், கிண்ணியா, திருகோணமலை போன்ற (66) தமிழ் பிரதேசங்களிலையே இதுதான் நிலைமை.(27-28). தமிழ் பாடத்தில் சித்தியடையாமைக்கு அப் பாடவிதானத்தில் இருக்கின்ற மதம் சார்ந்த விடயங்களும் பரிட்சைகளின் கடினத்தன்மையும் காரணமாக இருக்கின்றன. இதன் காரணமாக பாடவிதானத்தில் கால சூழ்நிலைக்களுக்கும் நடைமுறை வாழ்வுக்கும் ஏற்ப மாற்றங்களை செய்வது பொருத்தமானது என முன்மொழிகின்றார். மாணவர்கள் உயர் கல்வி பெறும் வாய்ப்பைத் தடுக்காது இருக்க தமிழ் மொழியில் திறமைச் சித்தி கட்டாயமா என்பது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டியுள்ளது என்கின்றார் (32).

19747744_10158936049970324_1103622081_oகணிதப் பாடத்திலும் 97 வலயங்களில் 42 வலயங்களில் சாதாரண சித்தி பெறாதவர்கள் 50 வீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். இவர்களும் உயர்தரக் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். வலய மட்டங்களைக் கவனிக்கும் பொழுது தமிழ் மாணவர்கள் பலர் கணிதப் பாடத்தில் சித்தியடையவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். கணிதப் பாடத்தில் சித்தி பெறமுடியாமையானது பலரது உயர்கல்விக்கான தடைகல்லாக இருக்கின்றது. பல்வேறு திறமைகள் கொண்ட மாணவர்கள் இந்த ஒரு பாடத்தினால் தமக்கான பல சந்தர்ப்பங்களை இழக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார் (39). ஆங்கிலப் பரிட்சையிலும் 25 மாவட்டங்களில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 50 வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை. குறிப்பாக 17 வலயங்களில் 75 வீதத்திற்கு அதிகமான மாணவர்கள் சித்தியடையவில்லை. இந்த வலயங்களில் வடக்கு கிழக்கு மற்று மலையகப் பிரதேசங்களின் பின் தங்கிய வலயங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. உதாரணமாக தீவகம், கிளிநொச்சி, மடு, வவுனியா, முல்லைத்தீவு, துணுக்காய், பட்டிருப்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, தென்மாராட்சி, மூதூர் என்பன சில. மேலும் உயர்தரம் கற்கின்ற மாணவர்களில் 60 -90 வீதமானவர்கள் ஆங்கிலப் பாடத்தில் சித்தியடையாதவர்கள் (70). ஆகவே கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடத்திட்டங்கள் மற்றும் அவை கற்பிக்கப்படும் முறைகள் தொடர்பாகவும் மாற்று செயற்பாடுகள் அவசியம் என்பதை மேற்குறிப்பிட்ட முடிவுகள் வலியுறுத்தி நிற்கின்றன. இவ்வாறு சில மாற்றங்களை ஏற்படுத்துவது பல மாணவர்களின் மேற்படிப்பை ஊக்குவிக்கும்.

நன்றி தினக்குரல் 09.07.2017
பாரதி இராஜநாயகம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: