Posted by: மீராபாரதி | March 12, 2017

கோச்சின் பீனாலே: மக்கள் கலை

கோச்சின் பீனாலே ( Kochi-Muziris Biennale): மக்கள் கலை

IMG_5444பீனாலே (Biennale) என்பது இத்தாலிய மொழியில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை என்ற அர்த்தத்தை தரும். ஆகவே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கோச்சின் பீனாலே கலை நிகழ்வு நடைபெறுவதால் இதற்கும் அந்தப் பெயரையே பயன்படுத்துகின்றார்கள். ஆரம்பத்தில் கேரளா கலாசார நிகழ்வாக நடாத்த தீர்மானித்தவர்கள் பின் பரவலான ஆதரவு கிடைத்தபோது இந்திய கலாசார நிகழ்வாக மாற்றினார்கள். இப்பொழுது அதையும் கடந்து இது ஒரு மக்கள் கலாசார நிகழ்வாக நடைபெறுவதாக கூறப்பட்டது. ஒருவகையில் இது ஒரு சர்வதேச கலாசார நிகழ்வுமாகும். ஏனெனில் பல நாடுகளிலிருந்து கலைஞர்கள் பங்கு பற்றுவதுடன் அவர்களின் படைப்புகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை 108 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு இம் முறை 2016ம் ஆண்டு மார்கழி மாதம் ஆரம்பமாகி 2017ம் ஆண்டு பங்குனி மாதம் நிறைவடைகின்றது. நாம் இந்த நிகழ்விற்கு செல்வதற்காக கேரளாவிற்கு வரவில்லை. ஆனால் நாம் கேரளாவிற்கு செல்கின்றோம் எனக் கூறியபோது நண்பர்கள் தீபாவும் கார்மேகமும் இந்த நிகழ்விற்கும் செல்லுங்கள் என ஊக்கமளித்தார்கள். அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். அந்தளவிற்கு பயனுள்ள தாக்கமான நிகழ்வு. ஒரு கலைப் படைப்பு எவ்வாறு மக்களின் வலிகளைப் பேச வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்குகின்றது இந்த நிகழ்வு. இதனை மக்கள் கலைசார்ந்த ஒரு அரசியல் செயற்பாடு என்று கூறினால் மிகையாகாது.

IMG_5448கடல் சூழ்ந்திருக்க காற்று வீசும், மரங்கள் பல வளர்ந்திருக்க நிழல் தரும் கோச்சின் கோட்டை அருகில் இந்த நிகழ்வு நடைபெறுவது மேலும் அழகையும் அமைதியையும் சேர்த்தது.  நாம் அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு அறிமுக நிகழ்விற்குச் சென்றோம். இந் நிகழ்வில் தொண்டராக செயற்படுகின்ற நித்தி அவர்கள் சட்டத் தொழில் செய்பவராக இருந்தமையினால் கலைத்துவ செயற்பாட்டு பின்னணி அற்றவராக இருந்தபோதும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு கலைத்துவப் படைப்புகள் தொடர்பாகவும் விரிவான விளக்கங்களைஅழகாகத் தந்தார். இதற்காக படைப்பாளர்களுடன் விரிவான உரையாடலை செய்ததாக கூறினார். இந்த விளக்கங்கள் எங்களுக்கு ஊக்கியாக இருந்தன. ஆகவே நாம் பார்த்த குறிப்பிட்ட ஒவ்வொரு படைப்புகள் தொடர்பாகவும் நாம் அறிந்ததை புரிந்ததை உங்களுடன் பகிர்வது பயனுள்ளது எனக் கருதுகின்றேன்.

IMG_5397முதலாவது கேரளத்தின் தொன்மைக் கதை ஒன்றை ஒரு சுவர் நீளத்திற்கு வரைந்திருக்கின்றார்கள். அரசவைப் புலவர் ஒருவருக்கு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் ஒருவரையே திருமணம் செய்வார் எனக் கூறப்படுகின்றது. இதையறிந்த அவர் அரசரின் உதவியுடன் அன்று பிறந்த ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளையும் கொல்கின்றார். ஆனால் ஒரு குழந்தையை காவலர் கொல்லாமல் ஆற்றில் விட்டுவிடுகின்றார். அக் குழந்தையை ஒரு ஐயர் குடும்பம் எடுத்து வளர்கின்றது. இருபது வருடங்களின் பின்பு இக் குடும்பத்திடம் புலவர் செல்கின்ற போது இளம் பெண்ணைப் பார்த்து மயங்கி திருமணம் செய்கின்றார். அதன்பின்பே இப் பெண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிகின்றார். ஆனாலும் பெண்ணின் மீதான காதலினால் அவருடன் வாழ்ந்து பன்னிரெண்டு குழந்தைகள் பெறுகின்றார். முதல் பதினொரு குழந்தைகளையும் பிறந்தவுடனையே கைவிட்டு விடுகின்றார். இவர்கள் வேறு வேறு சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களில் வளர்கின்றார்கள். இவர்களின் ஒவ்வொருவரின் கதைகளே சுவரில் தொடர் ஓவியமாக இருக்கின்றன. IMG_5399அதில் மூவரின் பெயர்கள் வள்ளுவன், காரைக்கால் அம்மணி, மற்றும் பாணர். முதல் இருவரும் தமிழகத்தில் திரிந்ததாக கூறுகின்றார்கள். இவர்கள் வள்ளுவராகவும் காரைக்கால் அம்மையாரகவும் இருக்க முடியுமா? இந்தப் பாணருக்கும் ஈழப் பாணருக்கும் தொடர்புகள் இருக்குமா? இது தொடர்பாக அறிந்தவர்கள் மேலும் தகவல்களை தரலாம். இக் கதையை அழகான ஓவியமாக இந்த நிகழ்வு ஆரம்பித்த நாளிலிருந்து ஓவியர் பி.கே.சதானந்தனின் வரைய பலர் நிறம் தீட்டுகின்றார்கள். அநேகமாக நிகழ்வு முடியும் பொழுது ஓவியம் நிறைவு பெறலாம். இவ் ஓவியத்தை மாலை பார்க்கச் சென்றபோது இது தொடர்பாக விளங்கப்படுத்தவா என ஒருவர் வந்தார். இவர் பொறியியலாளராக இருந்தவர். இளம் வயது. அந்த வேலையை விட்டுவிட்டு துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்தாராம். இப்பொழுது அதையும் விட்டுவிட்டு இங்கு தொண்டராகப் பணியாற்றுகின்றார். எத்தனை விதமான மனிதர்கள்.

IMG_5396இரண்டாவது இரசிய ஒளி ஓவியப் படைப்பாளரின் ஆடை அலங்காரம். இதன் தகவல்களை அறிந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இந்த ஆடைகளை அணிந்திருப்பவர்கள் அனைவரும் உரிமை கோரப்படாத அடையாளம் காணப்படாத மனித உடல்கள். இவர்கள் இறந்து சற்று நேரத்தின் பின் எடுக்கப்பட்ட படங்கள் இவை. இவற்றைப் பார்த்தபோது ஆடை அலங்காரம் தொடர்பாகவும் மனித உடல்கள் தொடர்பாகவும் பல கேள்விகள் உணர்வுகள் எழுந்தன.

IMG_5404மூன்றாவது தண்ணீரின் அரசியல் தொடர்பானது. இதனை அரங்க அளிக்கையாக இந்த நிகழ்வு ஆரம்பித்தபோது படைப்பாளர் அளித்திருந்தார். இதன்பின் அந்த அரங்க அமைப்பையே ஒரு படைப்பாக்கி காட்சிக்கு வைத்திருக்கின்றார்கள். எவ்வாறு இயற்கையாக வரும் நீரை ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு மறுப்பதுடன் கட்டுப்படுத்தி வழங்குகின்றார்கள் போன்ற விடயங்களை இப் படைப்பு உரையாடுகின்றது.

IMG_5407நான்காவது ஒரு சமாதியின் வரலாறு தொடர்பானது. ஒரு சமாதி பத்து வருடங்களில் எவ்வாறு மாறுகின்றது என்பதை ஒளி ஓவியத்தினுடாக முன்வைக்கின்றார் படைப்பாளர். குறிப்பிட்ட காலம் மட்டுமே அடையாளங்கள் நிலைத்து நிற்கின்றன. அதன் பின் அவை மெல்ல மெல்ல அழிந்து அல்லது கரைந்து செல்கின்றன.

IMG_5409ஐந்தாவது மரணத்தின் நடனம். இப் படைப்பும் தனித்துவமானது. இவர் தனது பிறந்த நாளை மின்சார விளக்குகள் கொண்டு படைத்திருக்கின்றார். இதை நேரடியாகப் பார்த்தபோது தெரியவில்லை. ஆனால் ஒளி ஓவியத்தில் குறித்த ஆண்டு நன்றாக தெரிகின்றது. இந்த மின் விளக்குகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. நிகழ்வு ஆரம்பித்தபோது எரிந்த அனைத்து மின் விளக்குகளும் அன்றிலிருந்து ஒவ்வொன்றாக அனைகின்றன. நிகழ்வு முடியும் பொழுது அனைத்து விளக்குகள் அனைந்துவிடும். இதனுடாக வாழ்வில் நாள் தோறும் நடைபெறும் மரணத்தின் நடனத்தை நமக்கு உணர்த்துகின்றார்.

IMG_5410ஆறாவது வித்தியாசமான ஆனால் மிகுந்த உழைப்பை வேண்டி நிற்கின்ற படைப்பு. பல விதமான சஞ்சிகைகளை சுருட்டி பொது கழிப்பறை ஒன்றை உருவாக்கியிருக்கின்றார். இப் படைப்பை இவர் ஒளி ஓவியமாகவும் பயன்படுத்துகின்றார். இரண்டுவிதமான படைப்புகளும் வேறு வேறு விதமான பார்வைகளைத் தருகின்றன. இப்படி பல படைப்புகளை உருவாக்கியுள்ளார். தூரயிருந்து பார்ப்பதற்கு யதார்த்தமாக இருந்தபோதும் அருகில் சென்று பார்த்தால் அது நிஜமல்ல என்பது புரியும்.

IMG_5415ஏழாவது இந்திய பாக்கிஸ்தான பிரிவினையின் போதான லாகுர் நகரத்தினை மென்மையான பலகைகளினால் வடிவமைத்திருக்கின்றார். இதற்கு இவரது பாட்டி கூறிய அனுபவங்களும் கதைகளும் மூலமாக இருக்கின்றன. மேலும் இப் படைப்பில் உருது எழுத்துக்களைப் பயன்படுத்தி கவிதை ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றார். இந்த எழுத்துகள் கட்டங்களாகவும் மலைகளாகவும் ஆறுகளாகவும் வீடுகளாகவும் விளங்குகின்றன.

IMG_5489எட்டாவது இசை எவ்வாறு மனித உடல்களில் அதிர்வுகளை மாற்றங்களை ஏற்படுத்துகின்றது என்பதை அடிப்படையாக கொண்டது. இதன் காட்சியமைப்பே ஒரு கவிதை போல அழகாக இருந்தது. உள்ளே இசை. வெளியே கடல். இவற்றை இசையுடன் உள்ளே இருந்து பார்க்கும் பொழுதும் நமது உடல்களில் அதிர்வு ஏற்படுகின்றன. இவை ஏற்படுத்தும் உணர்வுகள் நம்மை வேறு எங்கோ அழைத்துச் செல்கின்றன.

IMG_5430பத்தாவது கேரளாவில் போர்த்துக்கேயர்களுக்கும் ஒல்லாந்தார்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் போது நடுவில் அகப்பட்ட கறுப்பின அடிமைகளின் வாழ்வை பின்னணியாக கொண்ட படைப்பு. தமது சொத்துக்களைப் பாதுகாக்க அடிமைகளை என்ன செய்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் படைப்பு இது.

பதினொராவது மனிதர்களுக்குள் இருக்கின்ற பல்வேறு தன்மைகள் தொடர்பான கோட்டு ஓவியங்கள். இவை கீறப்பட்டு ஒன்றின் மீது ஒன்று வைக்கப்பட்டுள்ளன. இதனுடாக மனிதர்களி்ன் சிக்கலான பன்முகத் தன்மைகள் வெளிப்படுத்துபவையாக இருக்கி்ன்றன.IMG_5455

பதின்ரெண்டாவது ஒரு வீடு எவ்வாறு இருக்கும் என்பதை வீட்டின் நினைவாக ஓவியமாக மட்டுமல்ல வீடாகவும் உருவாக்கிய படைப்பு. நிழலுக்கும் நிஜத்திற்குமிடையிலான இடைவெளி இது.

பதின்மூன்றாவது சித்திரவதைக்கு IMG_5439.JPGஉள்ளாக்கப்படுகின்ற ஒரிவரின் மெழுகினால் செய்யப்பட்ட உருவம் ஒரு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த இருண்ட அறையில் இடைக்கிடை சிகப்பு வெளிச்சம் உருவத்தின் மீது பாச்சப்படும். அப்பொழுது அவை நம்மில் ஏற்படுத்தும் உணர்வுகள் வித்தியாசமானவை. சித்திரவதைகளின் வலியை உணர்த்துபவை.

IMG_5441பதினாங்காவது வாழ்வையும் இறப்பையும் குறிக்கின்ற முட்டையும் முட்டை மீது பூசப்பட்ட சாம்பல் அல்லது வீபூதி கொண்ட படைப்பு. வெளிச்சம் குறைந்த அறை ஒன்றினுள் பெரிய முட்டை ஒன்று. அதன் மீது சாம்பல் முழுமையாகப் பூசப்பட்டுள்ளது.

பதினைந்தாவது ஜப்பானிய தொன்மைக் கதையை அடிப்படையாக கொண்ட படைப்பு. தங்க நாணயங்களுக்காக கொல்லப்பட்ட மகனின் கதையைப் பின்னணியாக கொண்டதாக இருப்பினும் இது படைப்பாளர்களின் வாழ்வை வெளிப்படுத்துகின்றது எனக் கூறினர்.IMG_5426.JPG

பதினாறாவது இயற்கையினால் உலகம் அழிந்தாலும் படைப்புகள் அழியாது என்பதைக் கூறுகின்றது. இது சுற்றுச் சூழல் வெப்படைவதை மறுக்கின்ற அரசியலையும் ரம்பின் அரசியலையும் விமர்சிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு படைப்பு எனலாம்.

IMG_5530பதினேழாவது ஈழத்துப் படைப்பாளி கலாநிதி சனாதனனின் படைப்பும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. நூலக விபரக் கோவைகளின் அடிப்படையில் ஈழத்து விடுதலைப் போராட்ட அரசியல் வரலாற்றை தொகுத்து ஒரு படைப்பாக தந்திருக்கின்றார்.  பல்வேறு தலைப்புகளில் விபரங்களைச் சேகரித்து அவற்றை தனித் தனியாகத் தொகுத்துள்ளார். இவற்றை வாசிக்கும் பொழுது ஒருவர் போராட்ட அல்லது இனத்துவ ஒடுக்குமுறை காலத்திற்கு மீள செல்வதுபோல உணரலாம். மிகவும் முக்கியமான படைப்பு. ஆனால் இதனைப் பிரதான இடத்தில் வைக்கலாம் ஒதுக்குப் புறமான வேறு ஒரு இடத்தில் வைத்திருந்தார்கள். இந்த இடத்தில் பல படைப்பாளர்களின் படைப்புகள் இருந்தன.  படைப்பாளர்களே இந்த இடத்தை தெரிவு செய்ததாக கூறினார்கள்.

IMG_5465மிகவும் பாதித்த படைப்புகள் இரண்டு. பதின்னெட்டாவது 2015ம் ஆண்டு துருக்கியிலிருந்து கடல் வழியாக தப்பித்தபோது கடலில் தாண்டு இறந்த சீரிய சிறுவனினதும் அவனது உறவினர்கள் தொடர்பான கவிதையைப் பின்புலமாக கொண்ட படைப்பு. இக் கவிதையை வாசிக்க நீரினுடாக நடந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது நீருடன் பேசும் பல வாசகங்கள் ஒரு பக்கத்தில் தொங்கவிடப்பட்டிருப்பதை வாசிக்கலாம். இது வெறுமனே கவிதையை மட்டும் வாசிப்பதல்ல அக் கவிதையை வாசிப்பதற்கு செல்கின்றமையும் ஒரு அனுபவத்தை உணர்வை வலியைத் தரக்கூடியன. அழகிய ஆழமான வித்தியாசமான படைப்பு. கவிதை எழுத்துக்களால் மட்டும் ஆனது அல்ல. அது இயற்கையாக அதுவாகவே இருக்கின்றது. நமக்கு பார்வைப் புலனும் உணரும் திறனும் இருந்து கொண்டால் புரிந்து கொள்ளலாம் என்பதை உணர்த்திய படைப்பு இது.

IMG_5457இறுதியாக நாம் பார்த்த பத்தொன்பதாவது படைப்பு. இது எகிப்தின் பிரமிட்டுகள் போல மண்ணினால் கட்டப்பட்ட கூம்பு போன்ற ஒரு கட்டிடம். இதனுள் பாய்களினால் அடைத்து பாதை அமைத்துள்ளார்கள். உள்ளே முழுமையான இருட்டு. ஒரு வழிப் பாதை. இதனுடாக நடந்து செல்லும் பொழுது நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக இருக்கின்ற பல கவிஞர்களின் கவிதைகளை அவர்களது குரலில் பல மொழிகளில் ஒலிக்கவிட்டிருக்கின்றார்கள். முதன் முறை சென்றபோது முன்னால் சென்றவர்கள் சத்தம் போட்டதாலும் பின்னால் வந்தவர்கள் வெளிச்சத்தைப் பாச்சி நடந்து வந்தாலும் அதன் அனுபவத்தை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. ஆகவே மீண்டும் ஒரு தரம் இதனுடாகப் பயணித்தோம். பிரமிட்டுகளில் புதைப்பது அவர்கள் உடல்கள் பழுதுபடாமல் இருப்பதற்கு எனக் கூறுவார்கள். அதேபோல் இக் கவிஞர்களை எந்த அதிகாரத்தினாலும் அடக்க முடியாது. இவர்களது குரல்கள் அழியாது இருக்கும் எனக் கூறுவது போல இருந்தது இப் படைப்பு. படைப்புகளின் முக்கியத்துவதை வெளிப்படுத்திய ஒரு படைப்பு இது எனலாம்.IMG_5425

மேலும் பல படைப்புகள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் உணர்வதற்கும் இருக்கின்றன. நேரமின்மையால் பார்க்க முடியவில்லை. மனித வாழ்க்கையில் கலைத்துவ செயற்பாட்டின் பங்களிப்பு எவ்வாறு இருக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இந்த நிகழ்வைக் கொள்ளலாம். மக்கள் கலை என்பது இதுதானோ…..

மீராபாரதி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: