Posted by: மீராபாரதி | February 26, 2017

தென்னிந்திய நாடக விழா – பாலைவனத்தில் ஒரு ரோஜா

தென்னிந்திய நாடக விழா – பாலைவனத்தில் ஒரு ரோஜா –சில குறிப்புகள்

img_5296நாம் தஞ்சைப் பெரும் கோவிலை இதுவரை பார்க்காவிட்டாலும் தஞ்சாவூர் போகும் நோக்கம் இருக்கவில்லை. ஆனால் நண்பி தீபா தாம் தஞ்சையில் நடைபெறும் நாடக விழாவில் ஒரு நாடகம் போடுவதாகவும் முடிந்தால் வரவும் என அழைத்திருந்தார். இவ்வாறன ஒரு சந்தர்ப்பத்தை ஏன் தவறவிடுவான் என முடிவெடுத்து குறிப்பிட்ட நாடகத்தை மட்டும் பார்ப்பதற்காக செல்ல முடிவெடுத்தோம். பின்பு மங்கையை சந்தித்தபோது தனது நாடகம் ஒன்று இருப்பதாகவும் கூறினார். இதேபோல சுதர்சியை சந்தித்தபோது தான் இரண்டு நாடகங்களில் பங்கேற்பதாக கூறினார். இறுதியாக ஒரு நாள் மட்டும் தங்காமல் நான்கு நாட்கள் நடைபெற்ற நாடக விழாவில் மூன்று நாட்களும் பார்க்கக் கூடிய நாடகங்களைப் பார்த்தோம். இனிமையான பொழுதுகள்.

img_5299நாடகம் ஒரு கூட்டு நிகழ்வு. அதிலும் தென்னிந்திய மாநிலங்களிலுள்ள நாடகக் குழுக்களை இணைந்து நான்கு நாட்கள் ஒரு நிகழ்வாக நடாத்துவது என்பதுபெரும் கூட்டு முயற்சி. இதற்குப் பல மனிதர்களின் உழைப்பும் பங்களிப்பும் இன்றியமையாதது. மேலும் இந்த நான்கு நாட்களும் காலை பத்து மணியிலிருந்து இரவு பத்து மணிவரை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அனைவருக்கும் உணவும் தங்குமிட வசதிகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் நடைபெற்ற ஒரு உரையாடலின் போது அ.மங்கை அவர்கள் இந்த நாடக விழாவை, “பாலைவனத்தில் பூத்த ஒரு ரோஜா” எனக் கூறியிருந்தார். ஏனெனில் 90களின் பின்பு தமிழக அரங்க சூழல் கீழ் நோக்கி சென்று கொண்டிருந்ததே இதற்கு காரணம் என்றனர். பல்வேறு அரங்க முயற்சிகள் நடைபெற்றபோதும் நீண்ட காலமாக இவ்வாறான ஒரு நாடக விழாவை தமிழகம் காணவில்லை என்றனர். img_5255ஆகவே இவ்வாறான முயற்சிகளை வரவேற்பதும் பாராட்டுவதும் அவசியமானது. அந்தவகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைப் (தமுஎகச) பாராட்டாமல் இருக்க முடியாது. கடந்த இரண்டு வருடங்களாக முயற்சி செய்து வழமையைப் போல பல்வேறு பிரச்சனைகளுக்கும் தடங்கள்களுக்கும் மத்தியில் நான்கு மாநிலங்களிலுமுள்ள இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடக குழுக்களை வரவழைத்து வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். இதில் பெரும்பாலான நாடகக் குழுக்கள் தமுஎகச யின் அங்கத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் பங்குபற்றிய அனைத்துக் கலைஞர்களையும் அவர்களது ஆற்றல்களையும் ஒழுங்கமைத்தவர்களையும் பாராட்டி வாழ்த்த வேண்டும்.

img_5254மூன்றாம் நாள் காலை பிரளயன் தலைமையில் அரங்க விவாதம் நடைபெற்றது. தமிழக நாடக குழுக்களின் வரலாறுகள் தொடர்பாகவும் அதன் அரசியல் அழகியல் தொடர்பாகவும் உரையாடல்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் அ.மங்கையும் பிரவிணும் இவர்களுடன் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் அ.மங்கை அவர்கள் “அரசியல் அரங்கவியல், அழகியல்” ஆகிய மூன்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் அதன் கலவையே ஒரு அரங்க அளிக்கையாகும் என்ற தொனிப்பட கூறியிருந்தார். சமூகத்திலிருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கின்றது. இந்த அரசியலையை பொது வெளிக்கு கொண்டுவர உணர்வுள்ளவர்கள் ஊந்தித் தள்ளப்படுகின்றார்கள். இவர்களின் ஒரு களமாக செயற்பாடாக அரங்க செயற்பாடுகள் அமைகின்றன. இந்த அரங்க செயற்பாடுகளுடன் அழகியல் இணையும் பொழுது சிறந்த படைப்புகள் வெளிவருகின்றன. அழகியல் இல்லாமல் போகும் பொழுது வெறுமனே அரசியல் பிரச்சாரங்களாக மட்டுப்பட்டுவிடுகின்றன. இவ்வாறான நாடகக் குழுக்களில் செயற்பாடுகள் பதினைந்து வருடங்கள் மட்டுமே நிலைத்து நிற்கின்றன என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதேநேரம் இதனை மறுத்து பல குழுக்கள் இக் கால எல்லை்யைக் கடந்து செயற்படுவதாக சிலர் வாதிட்டனர்.

img_5259தமிழகத்தில் நான் பார்க்கும் முதல் அரங்க நிகழ்வு இது. இவ்வாறன முயற்சிகளை ஒரு புறம் மதித்து, வரவேற்று, பாராட்டினாலும் மறுபுறம் அரங்க கலை மீதான ஆர்வத்தினாலும் அக்கறையினாலும் நமது விமர்சனக் கருத்துகளை முன்வைப்பது அவசியம். ஏனெனில் இவ்வாறன விமர்சனங்களே உரையாடல்களை உருவாக்கி நமது சிந்தனையையும் செயற்பாட்டையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அதாவது பிரளயன் அவர்கள் குறிப்பிட்டதுபோல, “சிந்தனையிலிருந்து செயலுக்கும் செயலிலிருந்து சிந்தனைக்கும் மாறி மாறி ஒன்றை ஒன்று உரசி உரமேற்றி” செல்கின்றோம். இங்கு நடைபெற்ற நாடகங்களை ஐந்து வகையாக பிரிக்கலாம். முதலாவது அரசியல் பிரச்சார நாடகம். இரண்டாது சமூக பிரச்சனைகளை வெளிப்படுத்திய நாடகங்கள். மூன்றாவது நாடகப் பட்டறையினுடாக பயிற்சி பெற்று அரங்கேற்றபட்டவை. நான்காவது தனிநபர் அரங்கு. ஐந்தாவது சிறுவர் நாடகங்கள்.

நாம் பார்த்தவற்றில் பிரச்சார நாடகங்கள் என்றால் “உறிகள்”, “ஆதலினால்”, “மனுசி”, “நாட்டிலொரு நாடகம் நடக்குது” என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த நாடகங்களில் எல்லாம் பொதுவாக, காப்பரேட் நிறுவனங்கள், பிராமணியம், அரசியல்வாதிகள், மற்றும் காவற்துறை என்பன இணைந்து செய்யும் கொள்ளைகள், அழிவுகள், மக்கள் விரோத செயற்பாடுகள், சுரண்டல்கள் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள் என்பனவே பிரதான கருத்துக்களாகவும் அவற்றுக்கான களமாகவும் இருந்தன. மனிசி நாடகத்தில் நடித்தவர்கள் அனைவரும் தொழில் செய்கின்ற நடுவயது பெண்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

img_5256மேற்குறிப்பிட்ட அனைத்து நாடகங்களும் நல்ல கருத்துக்களை கொண்டிருந்தாலும் சிறந்த அரங்க செயற்பாடா என்றால் அது கேள்விக்குறிதான். சில பாத்திரங்களின் நடிப்பும் நன்றாக இருக்கவில்லை. முழுமைாக இடதுசாரி அரசியல் பிரச்சாரமாகவும் செயற்கையான நடிப்பாகவும் இருந்தமை சோர்வை ஏற்படுத்தின. குறிப்பாக மார்கிஸிய லெனினிய இடதுசாரி கட்சிகளையும் இவர்களின் பிரதிநிதிகளாக வருபவர்களை மக்களின் பிரதிநிதிகளாகவும் அவர்களே மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பவர்களாகவும் வெளிப்படுத்தியமை அப்பட்டமான ஒரு பக்கச் சார்பு பிரச்சாரமே. ஏனெனில் இந்திய, தமிழக இடதுசாரி கட்சிகள் இதுவரை எவ்வாறான அரசியலை முன்னெடுக்கின்றன என்பது வெள்ளிடைமலை. உண்மையிலையே மக்கள் மீது அக்கறையுள்ள கலைஞர்கள் செய்ய வேண்டியது என்னவெனில் மக்களின் எதிரிகளை மட்டும் விமர்சிக்காமல் தாம் சார்ந்த கட்சிகளையும் அதன் செயற்பாடுகளையும் சுயவிமர்சனம் செய்கின்ற (பிரச்சாரப்) படைப்புகளை (யாவது) உருவாக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

17005983_10154217401426135_1570378170_nந.முத்துசாமி எழுதிய பிரசன்னா ராமசாமியின் “காண்டவ வன தகனம்” நாடகம் ஒரு கூத்துப் பட்டறை உருவாக்கம்.. கிருஸ்ணனும் அர்ச்சுணனும் எவ்வாறு இந்திரபிரசித் என்ற நகரை உருவாக்குவதற்காக காடுகளை அழித்தார்கள் என்பது கதை. இதில் பங்கு பற்றியவர்களின் பங்களிப்புகள் மதிக்கப்பட வேண்டும். குறிப்பாக பாட்டுப் பாடி நடித்தவர் சிறப்பாக செய்தார். பெரும்பான்மையானவர்கள் தமக்குரிய பாத்திரத்தை நன்றாகவே செய்தனர். நிகழ்காலத்துடன் தொடர்புபட்டது எனக் கூறி ஒவ்வொருவரும் தமது கிராமத்தில் வாழ முடியாமல் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து கூலித் தொழில் செய்பவர்கள் என அறிமுகப்படுத்தினார்கள். பின்பு காண்ட வனத்திற்கு களம் மாறியது. இதையும் சில நேரம் மட்டுமே நாடகமாக செய்தார்கள். பெரும்பாலான நேரங்களில் குறிப்பிட்ட பாத்திரங்களாக நடிப்பினுடாக கதையை சொல்லாமல் வெறுமனே வாயால் கதை சொன்னார்கள். அதாவது பாத்திரங்களாக நடிக்காமல் என்ன நடக்கின்றது என்பதை விபரித்தார்கள். இது எமக்கு அலுப்பை உருவாக்கியது. எமக்கு மட்டுமல்ல பார்வையாளர்கள் பலருக்கும் அலுப்பை உருவாக்கியிருக்க வேண்டும். ஏனெனில் நாடகம் ஆரம்பித்த போது இருந்த பார்வையாளர்களில் அரைவாசி பேர் ஒரு மணித்தியாலத்தின்பின் இருக்கைகளில் இருக்கவில்லை. இரண்டு மணி நேர நாடகம் நம்மைக் கட்டிப் போடவில்லை. எப்படா முடியும் என்ற ஏக்கத்தையே தந்தது. நாற்பது வருட கூத்துப்பட்டறை அனுபவம் இந்த அரங்க செயற்பாட்டில் வெளிப்படவில்லை. இதற்கான காரணத்தை பொறுப்பானவர்கள் தேடி அறிந்து கொள்ளவது பயனுள்ளது.

மேற்குறிப்பிட்ட அரங்க அளிக்கைகளில் ஆன்மா இருக்கவில்லை. நடிகர்களின் உடல் மட்டுமே இருந்தது எனலாம்.

img_5305பிரளயனின் நெறியாள்கையில் ஓசூர் டிவிஎஸ் அக்கதெமி மாணவர்கள் பங்கேற்க அரங்கேறிய “பதனம்” சிறுவர்களின் நாடகம் முக்கியமானது. ஆரம்பத்தில் 9ம் 10ம் வகுப்பு மாணவர்களின் பங்களிப்புடன் பயிற்றப்பட்ட இந் நாடகம் பரிட்சையின் காரணமாக பின் 8ம் 9ம் வகுப்பு மாணவர்களின் பங்களிப்புடன் அரங்கேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்கள். இதனால் ஏற்பட்ட பயிற்சியின்மையைக் காணக் கூடியதாக இருந்தது. இருப்பினும் பல மாணவர்கள் சிறப்பாக நடித்திருந்தார்கள். மாணவர்கள் தமது குழந்தைப் பருவங்களில் எவ்வாறு காலம் காலமாக பதனம் செய்யப்படுகின்றார்கள் என்பதை வெளிப்படுத்திய ஒரு படைப்பு இது. மாணவர்களின் தெரிவின்மை, வர்க்கப் பாகுபாடுகள் மற்றும் சாதிய ஒடுக்குதலும் இகழ்தலும் என்பவற்றுக்கு எவ்வாறு முகம் கொடுக்கின்றார்கள் என்பதைக் கூறியது.

img_5304 மாணவர்களுக்காக படைப்புகளை உருவாக்குவதும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதும் மிகவும் சவாலானதும் அதேநேரம் வரவேற்க கூடிய ஒரு செயற்பாடுமாகும். அந்தடிப்படையில் பிரளயனின் இம் முயற்சியை வரவேற்கலாம். ஆனால் இந்த நாடகத்தின் கரு இந்த மாணவர்களுக்கு சற்று அதிகமோ என சிந்திக்கத் தோன்றுகின்றது. ஏற்கனவே பெற்றோர்களின் கனவுகளாலும் சமூகத்தின் ஒடுக்குமுறைகளாலும் தெரிவுகளற்றுப் பதனப்பட்ட இவர்களை நமது சமூக மாற்ற கனவுகளால் பதனப்படுத்துகின்றோமா என்ற கேள்வி எழுந்தது. இவ்வாறான நாடகக் கருக்கள் உயர்தர அதாவது 11ம் 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். அல்லது பல்கலைக்கழ மாணவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாடகத்தில் கூறப்பட்ட விடயங்கள் பெற்றோருக்குத் தேவையானவை. ஆகவே பெற்றோர்கள் இவ்வாறான நாடகத்தில் பங்கேற்கும் பொழுது அவர்களுக்குள் இது மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கலாம். ஆனால் 14 வயது வரையான குழந்தைகளுக்கு எங்களுடைய (வளர்ந்தவர்களின்) சிந்தனைகளின் அடிப்படையில் நாடகங்களை உருவாக்காமல் அவர்களுடைய கனவுகளுக்கும் கற்பனைகளுக்கு ஏற்ப அரங்க செயற்பாடுகளை மேற்கொள்வது ஆரோக்கியமானது என்றே எண்ணுகின்றேன். அதாவது இந்த நாடகத்தில் கூறப்பட்ட நோக்கத்திற்கு ஏற்ப குழந்தைகளும் மாணவர்களும் என்ன தெரிவை மேற்கொள்கின்றார்களோ அதை உள்வாங்கி ஒரு அரங்க அளிக்கையாக வழிநாடத்துவதே சிறப்பானதாக அமைந்திருக்கும்.img_5285

அரசியல், அரங்கியல், அழகியல் என அனைத்தும் இணைந்து பார்க்க கூடியதாக இருந்தவை, சுடலையம்மா, அகமெனான், மாயக் கோமாளியின் ஜாலக் கண்ணாடிகள், சாந்தியடையட்டும், நெல்லு விளையாட்டு, உபகதை, ஜனம் கோசம் ஆகிய அரங்க அளிக்கைகள் எனலாம். தனிநடிப்பு இந்த நாடக விழாவில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருந்தது. சிலவற்றைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நாம் பார்த்த இரண்டு தனி நடிப்புகள் தொடர்பான குறிப்புகள் இவை.

img_5258முதலாவது தனிநடிப்பு வ.கீதா எழுதி அ.மங்கையின் நெறியாள்கை செய்ய ரேவதி நடித்த “சுடலையம்மா” நன்றாக இருந்தது. தனி நடிப்பு என்பது சவாலானது ஆனாலும் உணர்ந்து சிறப்பாக நடித்திருந்தார். தமிழக காவல் துறையின் அத்துமீறல்களையும் என்கவூண்டர் படுகொலைகளையும் வெளிப்படுத்திய முக்கியமான அரங்க அளிக்கை. ஆனால் அரங்க அமைப்பினால் கனதி குறைவாக இருந்தது. இவர்களும் சில அரங்க குழுவினரைப்போல அரங்கத்தின் நடுவில் நடாத்தியிருந்தால் மேலும் நன்றாகவும் செறிவாகவும் இருந்திருக்கலாம். மேலும் சுடலையம்மாவின் ஆடையில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஏனெனில் சுடலையம்மா போன்ற தொழிலாளிகள் மிகவும் ஏழ்மையில் வாழ்பவர்கள். ஆனால் பயன்படுத்திய ஆடை மத்தியதர வயது பெண்கள் உடுத்தும் தரத்தில் இருந்தமை குறைபாடாக இருந்தது. இது தொடர்பாக மங்கையுடன் உரையாடியபோது இவர்களது வாழ்வு ஏழ்மையாக இருந்தாலும் வெளியில் செல்லும் பொழுது ஒரளவு நன்றாகவே ஆடை அணிந்து செல்வார்கள் எனக் குறிப்பிட்டார்.

img_5292இரண்டாவது தனி நடிப்பு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வை அரங்க துறையில் மேற்கொள்கின்ற ஹரியானாவைச் சேர்ந்த சவிதா ராணி நடித்த “சாந்தியடையட்டும்” தனி நடிப்பு நாடகம் முக்கியமானதாகும். இவர் இதனை சிறப்பாகவும் அரங்கேற்றினார். இவர் ஆங்கிலத்தில் உரையாடியபோதும் தனது நடிப்பாற்றலாலும் அதை அரங்கேற்றிய முறையாலும் அனைவராலும் கவரப்பட்டார் என்பதைக் காணக்கூடியதாக இருந்தது. ஒரு பெண்ணின் மீது கட்டுப்பாடுகள் எவ்வாறு திணிக்கப்படுகின்றன அதை அவர் எவ்வாறு எதிர் கொள்கின்றார் என்பதையும் ஆண்களின் மனநிலையையும் பெண்களின் உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி அரங்கேற்றினார். மேலும் தான் மட்டும் நடிக்காமல் அரங்கத்தில் இருந்தவர்களின் பங்களிப்புகளையும் பெற்று அவர்களையும் ஒரு பாத்திரமாக்கினார். சின்ன சின்ன விடயங்களை எடுத்து அதனுடாக தான் சொல்ல வேண்டியதை மிக அழகாக கூறினார். அதிர்ச்சி வைத்தியமும் செய்தார்.

இதேபோல புதுகை பூபாளம் அளித்த நாகரீக கோமாளிகள் என்ற அரசியல் நையாண்டியை சிறப்பாக பாடல்களினுடாக செய்தார்கள். அதற்காக கா.பிரகதீஸ்வரன் மற்றும் செந்தில் ஆகியோர் பாரட்டுக்குரியவர்கள்.

img_5263கிரேக்க நாடக ஆசிரியர் அஷ்கிலஸ் எழுதிய அகமெனான் நாடகப் பிரதியை ஜம்புநாதன் மொழியாக்கம் செய்ய ரெஜின்ரோஸின் நெறியாள்கையில் மேடை அரங்க குழுவினரின் வழங்கினர். இவர்களின் நடிப்பு, ஆடை வடிவமைப்பு, அரங்க அமைப்பு அனைத்தும் நன்றாக இருந்தது. நல்ல முயற்சி. இந்த நாடகம் தாய் வழி சமூக்திலிருந்து தந்தை வழி சமூகத்திற்கு மாறும் காலகட்டத்திற்குரியதாக இருந்தாலும் இன்றைய தமிழக நிலமைக்குப்  பொருத்தமானது என ஜம்புநாதனுடன் உரையாடியபோது குறிப்பிட்டார். ஆட்சி அதிகாரத்திற்காக தந்தையைக் கொன்ற தாயை மகன் கொலை செய்வதே மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த நாடகப் பிரதியின் முழுக் கதை. இந்த அரங்க அளிக்கையில் ஒரு பகுதி மட்டுமே அரங்கேற்றப்பட்டது.

img_5282முருக பூபதியின் நெறியாள்கையில் மணல்மகுடி வழங்கிய நாடகம் மாயக்கோமாளியின் ஜாலக்கண்ணாடிகள். இந்த அரங்கம் அரை வட்டத்தில் பார்வையாளர்கள் இருக்க அரங்க அளிக்கையானது வெறும் நிலத்தில் மண் மீது நடைபெற்றது. நடிகர்கள் தம் மீது அரிதாரங்களை மட்டும் பூசவில்லை. நிலத்தில் புரண்டு மண்ணுடனும் கட்டித் தவழ்ந்தார்கள். ஒவ்வொருவரது உடல் மொழிகளும் நன்றாக இருந்தன. தமிழக மண்ணின் மணம் இசையுடன் கலந்து வீசியது. ஆனால் இவர்களது நடிப்புகள் செயற்பாடுகள் இது நாடகம் என்பதை விட நாடகப் பயிற்சிப் பட்டறை நடைபெறுவது போன்ற உணர்வையே தந்தன. குறியீடுகளால் நிறைந்திருந்தது இந் நாடகம். இக் குறியீடுகளையும் கவித்துவ வரிகளையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் பலவீனமான ஒரே ஒரு பெண் பாத்திரத்தை தவிர அனைத்துப் பாத்திரங்களும் பலமான ஆண் உடல்களாக காணப்பட்டன. எனக்குப் பின்னால் இருந்த பார்வையாளர் ஒருவர் “இருட்டுக்குள் நடப்பதை கண் தெரியாத ஒருவர் எப்படி பார்க்க முடியும்” எனக் கூறுமளவிற்கு ஒளியமைப்பு இருந்தது. இந்த அரங்க காட்சிகளை ஒளி ஓவியமாக எடுப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் இவ்வாறான அரங்க அளிக்கைகள் பார்வையாளர்களுக்கு என்ன சொல்கின்றது என்பதைப் புரிவதற்கு தொடர்ச்சியான உரையாடல் அவசியம்.

img_5309பிரளயனின் பிரதியாக்கத்திலும் நெறியாள்கையிலும் சென்னை கலைக்குழு வழங்கிய நாடகம் உபகதை. இராமாயண மற்றும் மகாபாரத உபகதைகளை மீள்பார்வைக்கு உட்படுத்தியது மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்களினதும் தோற்றதாக கூறப்பட்டவர்களினதும் பார்வையில் கூறினார்கள். நல்ல உத்திகள். நடிகர்கள் சிறப்பாகவே நடித்தார்கள். பார்வையாளர்களின் மனங்களில் புதிய பார்வைகளை கேள்விகளை நிச்சயமாக இந்த அரங்கு தோற்றுவித்திருக்கும் என நம்பலாம்.

img_5268தேனி செவக்காட்டு கலைக்குழு வழங்கிய “நெல்லு விளையாட்டு” முக்கியமானதொரு அரங்க அளிக்கை. சிறிய கரு. குழப்பமில்லாத அழகியப் படைப்பு. ஒரு விவசாயி எவ்வாறு ஏமாற்றப்பட்டு கடனாளியாகின்றார் என்பதையும் அதனால் அவரது வாழ்வு எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதையும் வெளிப்படுத்தினார்கள். விவசாயிகளின் வாழ்வை மிகவும் யதார்த்தமாகவும் எளிமையான இயல்பான நடிப்போடும் அழகியலோடும் தந்தார்கள். அனைவரும் மிகவும் நன்றாகவே நடித்திருந்தனர். இந்த அரங்க அளிக்கையைப் பார்த்த பெரும்பான்மையானவர்கள் ஆரம்பத்தில் சிரி சிரி யென சிரித்து ஆனால் இறுதியில் கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு தாக்கம் நிறைந்த அரங்க அளிக்கையாக இருந்தது.

17012609_10154217379236135_806744689_nஆந்திரா மக்கள் நாடகக் குழுவின் (ஆந்திரப்பிரஜா நாட்ய மண்டலி) “ஜனகோசம் (மக்களுக்காக)” அரங்க அளிக்கை மிக நன்றாக இருந்தது எனலாம். இது ஒரு பிரச்சார நாடகமாக இருந்தபோதும் என்னை மிகவும் கவர்ந்த இசை நடன நாடகம். இவர்களது உடல் அசைவுகள், உணர்வுகள், குரல்கள், கண்கள், பார்வைகள் என அனைத்தும் சிறப்பாக இருந்தன. கோவம் வீரம் கவலை அழுகை என்பன ஒவ்வொரு பாத்திரங்களிலும் முழுமையாக வெளிப்பட இவை அரங்கையும் முழுமையாக ஆட்கொண்டமை முக்கியமானது. ஒரு அரங்கத்திற்கு என்ன தேவையோ அந்தளவு இருந்தன. ஒரு அரங்க அளிக்கை பிரச்சாரமாக இருக்கலாம். ஆனால் அது அழகியலோடு கலைத்துவமாகவும் இருக்க வேண்டும். அதற்கு இந்த அரங்க அளிக்கை நல்லதொரு உதாரணம் எனலாம். நாமறிந்த மார்க்சிய, இந்திய, ஆந்திர, தெலுங்கான வரலாறுதான் இவர்களின் அரங்க அளிக்கை. ஆனால் அவர்கள் அதை அரங்க அளிக்கையாக வெளிப்படுத்தியவிதம் பார்வையாளர்கள் அனைவரையும் கட்டிப்போட்டது. மிக அழகாக தொகுத்திருந்தார்கள். இசையும் பாடல்களும் அதன் குரல்களும் மிகப் பெரிய பலமாக இருந்தன. ஒரு மணித்தியாலம் போனதே தெரியவில்லை. இறுதியில் அவர்கள் களைத்துப் போனபோதும் பார்வையாளர்களின் விருப்பத்திற்காக மேலும் ஒரு நடனத்தை தந்திருந்தார்கள். இதில் நடித்தவர்கள் அனைவரும் விவசாயிகளும் அவர்களின் பிள்ளைகளும் என்பதை அறிந்த போது மதிப்பு கூடியது. இவர்கள் ஒவ்வொருவரையும் கட்டித் தழுவி நன்றி கூறவேண்டும் போல இருந்தது.img_5300

இறுதியாக பெரும்பாலான நாடகங்களில் நடிகர்கள் அவசியமற்று தொண்டை கிழிய கத்தியே தமது உணர்வுகளை உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். இது நடிகர்களின் குரல்களை வீணாக்குவதுடன் அவசியமற்ற சத்தத்தையும் ஏற்படுத்தும். இவ்வாறு கத்துவதற்குப் பதிலாக சில வசனங்களையாவது உணர்ந்து நிதானமாக ஆனால் சத்தமாக பேசும் பொழுது அவை உறுதியானதாகவும் தெளிவானதாகவும் வெளிவரும் அல்லவா?

தஞ்சாவூரில் அரண்மனை வளாகத்தில் சங்கீத மகால் மண்டபத்தில் தமுஎகச ஒழுங்குபடுத்திய தென்னிந்திய நாடக விழாவிற்கு இரண்டாம் நாள் மாலையே பார்க்க சென்றோம். வாசலில் “உள்ளே செல்லலாமா” எனக் கேட்டபோது போகலாம் என்றனர். நாம் உள்ளே சென்றபோது நாடகம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஓரளவு மண்டபம் நிறைந்த கூட்டம். நாடகத்திற்குரிய மண்டபமில்லை. பாடசாலைகளில் மேடையேற்றப்படும் நாடக மேடைக்குரிய மண்டபம். தமிழகத்தில் அதுவும் தஞ்சையில் இவ்வாறான விழாவை நடாத்தா சிறந்த நாடக அரங்கம் ஒன்றில்லையா என்ற கேள்வியை எழுப்பியது. தமிழகத்தின் நிலையை நினைத்து கவலை கொண்டோம். தமிழக அரசு என்ன செய்கின்றது?

img_5273விமர்சனங்களுக்கு அப்பால் மூன்று நாட்களும் நாம் சங்கீத மகாலையே சுற்றிச் சுற்றி வந்தோம். மறக்காமல் இதையும் கூற வேண்டும். அரண்மனைக்கு அருகில் வீதியோரத்தில் கம்பு, கேழ்வரகு புட்டுகள் விற்பனைக்கு இருந்தன. இவை நமது இரவுணவை திருப்பதி செய்து மேலும் மகிழ்ச்சியைத் தந்தன.

மீராபாரதி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: