Posted by: மீராபாரதி | April 29, 2016

தமிழினியின் விமர்சன வாளின் வெளிச்சத்தில் விடுதலைப் புலிகள்! – பகுதி மூன்று

Thamilini-akka-2தமிழினி சிறு வயது முதல் இயக்கத்தில் இணைந்து பங்களித்து, வளர்ந்து, இறுதியாக பல தலைமைப் பொறுப்புகள் வகித்தவர். இவ்வாறு இருபது வருட காலம் (29.07.1991-17.05.2009) தனது வாழ்வை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளின் தலைவரை நம்பி தன்னை அர்ப்பணித்தவர் என்றால் தவறல்ல. இவரைப் போல பங்களித்த போராளிகளுக்கு தமது இயக்கத்தையும் அதன் தலைமையையும் தலைவரையும் விமர்சிக்கும் தார்மீக உரிமை உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் நமது போராட்ட வரலாற்றில் விமர்சனங்கள் வரவேற்கப்படாமை விடுதலைப் போராட்டம் தோற்றதற்கு ஒரு காரணம் என்றால் மிகையல்ல. ஆகவே இனியாவது விமர்சனங்களை வரவேற்போம். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதித்து ஆரோக்கியமாகவும் சொற்களைப் பொறுப்புடனும் நிதானத்துடனும் பயன்படுத்தி உரையாடுவோம். இந்தடிப்படையில் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தமிழினி அவர்கள் முன்வைத்துள்ள விமர்சனங்களுக்குச் செல்வோம்.

Tamilini-death-1விடுதலைப் புலிகளின் தலைவர், தலைமை மற்றும் அதன் நிறுவன அமைப்புகள் மீதான தமிழினியின் விமர்சனங்கள் முக்கியமானவை. இந்த விமர்சனங்கள் எல்லாம் புதியவையல்ல என்பதை ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான விமர்சனங்களை தொடர்ச்சியாக வாசித்து வருபவர்கள் புரிந்து கொள்வார்கள். விடுதலைப் புலிகளின் விழ்ச்சி, அதன்பின் எதிர்கொள்ளப்படுகின்ற பிளவுகள் முரண்பாடுகள் தொடர்பான எதிர்வு கூறல்கள் 2009ம் ஆண்டுக்கு முன்பே பலரால் கூறப்பட்டவை. இயக்கங்களின் ஆரம்ப காலத்தில் பங்களித்த ஐயர் அவர்கள் விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால செயற்பாடுகள் தொடர்பான விமர்சனங்களை அனுபவ அடிப்படையில் முதன் முதலாக முன்வைத்தார். இதை வாசித்த புலி ஆதரவாளர்கள் பலர் ஆரம்பத்தில் இவ்வாறான தவறுகள் நடைபெறுவது தவிர்க்க முடியாதது. ஆனால் இதன் பின் புலிகள் இயக்கம் வளர்ச்சி கண்டது  என வாதிட்டனர். அதேநேரம் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இறுதிவரை இருந்த ஒருவரே இவ்வாறான விமர்சனங்களை மீள முன்வைத்துள்ளார். அந்தவகையில் இந்த நூலும் இதில் எழுப்பட்டுள்ள கேள்விகளும் விமர்சனங்களும் முக்கியத்துவமானவையாகும்.

13083095_10156932644855637_76107795059733847_nதமிழினி பின்வறுமாறு எழுதுகின்றார். “நின்று நிதானிக்காத கட்டாற்று வெள்ளம் போல காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு இறுக்கமான நிறுவனமாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நான் செயற்பட்ட காலம் அதனுடைய உச்ச எழுச்சிக் காலமாகவே இருந்தது. இயக்கத்தின் நடவடிக்கைகளிலும் தீர்மானங்களிலும் இருந்த சரி பிழைகளை இனங்கண்டு கொள்ளவோ அல்லது அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து எமது நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதோ இயக்கத்திற்குள் கற்பனையிலும் நடக்க முடியாத ஒரு காரியமாக இருந்தது.”(53).

indexதமிழ் சமூகத்தில் சாதாரணமாகக் காணக்கிடைக்கின்ற அதிகாரத்துவமான அப்பாவின் அடையாளமே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்றால் மிகையல்ல. குழந்தைகளிடம் (மட்டும் இயந்திரமயமாக) அளவுடன் அன்பைப் பொழியும் அப்பா. ஆனால் ஒழுக்கம் கட்டுப்பாடுகளை வரையறுத்து அவற்றை இறுக்கமாக கடைப்பிடிக்கும் ஒரு தந்தை. தவறினால் கடுமையான வன்முறையான தண்டனைகள் நிச்சயம் உண்டு. அதன் உச்சம் மரண தண்டனையாகவும் இருக்கும். இவ்வாறான ஒரு தந்தையின் வழிகாட்டலின் கீழ் பயத்துடன் வாழ்ந்து கொண்டு அவரின் கட்டளைகளைப் பின்பற்றுகின்ற குழந்தைகளே விடுதலைப் புலிகளின் போராளிகள் என்றால் மிகையல்ல. இவ்வாறு தந்தையின் நிலையில் இருந்தவரே புலிகளின் தலைவர் பிரபாகரன். ஆனால் இறுதியாக தனது கையில் ஒன்றுமில்லை அது வெறுங்கை எனக் கூறியதாக கூறுகின்றார் (197).

தலைவர் மீதான நம்பிக்கையும் (107&163), அவரைக் கடவுளாக நினைப்பதுவும் (163) இயக்கத்திற்குள் முக்கியமானவையாக இருந்துள்ளன. ஆகவே அவருக்கு எதிராக கதைப்பதோ பிழை கண்டுபிடிப்பதோ தெய்வக்குற்றம் (164). துரதிர்ஸ்டவசமாக இப் போக்கின் முடிவு இறுதித் தோல்விக்கும் அவரையே காரணமாக்கியது (164) என்கின்றார் தமிழினி. ஏனெனில் தலைவரின் கட்டுப்பாடுகளும் இறுக்கமான தன்மைகளும் தளபதிகளுக்குள் இருந்த முரண்பாடுகளும் தோல்வியை நோக்கிச் செல்வதற்கு முக்கிய காரணங்களாக இருந்திருக்கலாம். இது தொடர்பாக தமிழினி மேலும் கூறுகின்றார். “குறுகிய மனப்பாங்கும், வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும், அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசிரியர்கள் உதாரணமாக இருந்தார்கள்.” (58). பயிற்சி முகாமிலையே இப்படியெனின் இயக்க செயற்பாடுகள் எப்படி இருந்திருக்கும் என ஊகிக்கலாம். அதற்கான பல உதாரணங்களையும் முன்வைத்துள்ளார்.

index1பொதுவாகப் புலிகளின் தலைமையைப் பொறுத்தவரை மக்களின் நலன்கள் இரண்டாம்பட்சமே என்பதற்கு பல உதாரணங்களை ஆரம்பக் காலத்திலிருந்து இறுதிப் போர்வரை பல சம்பவங்களைக் கூறலாம். உதாரணமாக யாழ் இடப் பெயர்வு தொடர்பாக புலிகளின் தலைமையின் நோக்கம் என்ன என்பதை மிக நேர்மையாக முன்வைத்திருக்கின்றார் (71). இறுதிக் காலகட்டங்களில் ஒரு எல்லைவரை போராட்டத்திற்கான மக்களின் பங்களிப்பு ஆர்வம் ஒரு புறம் இருந்தது உண்மை. ஆனால் மறுபுறம் மக்களையும் அவர்களது குழந்தைகளையும் கட்டாயப் பயிற்சிற்கு நிர்ப்பந்தித்தமையினாலும் பல கட்டுப்பாடுகளை விதித்தமையினாலும் (104-5), ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் பாரபட்சமான தீர்மானங்களை மேற்கொண்டமையினாலும் போராளிகளிடம் மனக் குழப்பமும் அதிகளவிலான அதிதிருப்தியும் முரண்பாடுகளும் தோன்றின என்கின்றார். மேலும் தலைமையை நம்பிப் போராடிய பல்லாயிரக்கணக்கான போராளிகளை குறிப்பாக பெண் போராளிகளை எந்தவிதமான வழிகாட்டலுமின்றி இடைநடுவில் அனாதரவாக விட்டுச் சென்றனர். போரின் உக்கிரத்தால் மக்கள் பட்ட கஸ்டங்களில் போது எல்லாம் சரணடையும் முடிவை எடுக்காது தாம் (தலைமை) அழியப் போகின்றோம் என உறுதியாகத் தெரிந்த பின் மட்டும் சரணடைவும் முடிவை எடுத்தது யாருடைய நலன்களை அடிப்படையாகக் கொண்டது என்பது நாம் கேட்க வேண்டிய முக்கியமான ஒரு கேள்வி?

Local Input~  SRI LANKA: 2009 -- Captured  and dead soldiers of  LTTE (Liberation Tigers of Tamil Eelam) . (for Stewart Bell story- sent in by Stew with no real info) /pws

Local Input~ SRI LANKA: 2009 — Captured and dead soldiers of LTTE (Liberation Tigers of Tamil Eelam) .
(for Stewart Bell story- sent in by Stew with no real info) /pws

இறுதியாக இந்தியா மற்றும் சர்வதேசங்களின் துணையுடன் புலிகளும் அதன் தலைமையும் முற்றாக அழிக்கப்பட்டமைக்கும் மீள எழுச்சி பெறமுடியாமைக்கும் காரணம் தனித் தலைமை மீதான விசுவாசமும் உட்கட்சி ஜனநாயகமின்மையும் என்றால் மிகையல்ல. இந்த நூல் அதற்கான நல்லதொரு சாட்சி. தூரதிர்ஸ்டம் என்னவென்றால் இதை எல்லாம் நானறிந்த காலத்திலிருந்தே பலர் எதிர்வு கூறினர். ஆனால் ஒருவரும் கேட்கவில்லை. இறுதியாக உள்ளிருந்தே அந்த உண்மை வெளிப்படுத்தப்படுவது மட்டுமில்லை நிறுபிக்கவும்பட்டுள்ளது. இத் தவறுகளால் நாம் இழந்தது பல உயிர்கள் மட்டுமல்ல மக்களின் வாழ்வும் அவர்களின் விடுதலையுமாகும். இதிலிருந்து நாம் எதைக் கற்கலாம்?

index3ஈழத் தமிழர்கள் சிறிலங்காவின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அடக்குமுறைகளிலிருந்தும் விடுபட மீண்டும் போராட்டங்களை ஆரம்பிப்பார்களாயின் இந்த நூலிலிருந்து கற்றுக் கொள்ள பல விடயங்கள் உள்ளன. (இடைக்குறிப்பு மீண்டும் ஒரு போராட்டம் என்பது ஆயுத அரசியல் போராட்டமல்ல மக்கள் பங்கெடுக்கின்ற அரசியல் போராட்டமாகவே இருக்கவேண்டும். ஆனால் இதை தீர்மானிக்கப் போவது எதிர்கால சூழல்தான்). உதாரணமாக ஜேவிபி சிகப்பு சாயம் பூசிய இனவாத பிற்போக்கான இயக்கமே. இருப்பினும் 1971ம் ஆண்டும் 1989ம் ஆண்டும் (இந்தியாவின் துணையுடன்) அடக்கப்பட்டன. இறுதியாக அதன் தலைவரும் கொல்லப்பட்டார். ஆனால் தலைமை அழியவில்லை. இவர்கள் தலைமறைவாக வாழ்ந்து உறுப்பினர்களை வழிநடாத்தி இயக்கத்தைக் கட்டி எழுப்பினார்கள். இன்றும் (கொள்கையடிப்படையில் தவறான பாதையில் சென்றபோதும்) உயிர்த்துடிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு அடிப்படையான ஒரே ஒரு காரணம் இருக்கின்றது. அது என்னவென்றால் அதற்குள்ளிருந்த மத்தியத்துவ ஜனநாயகமும் தனிமனிதரில் தங்கியிருக்காத தன்மையும் என்பேன். இவ்வாறான பண்பும் தன்மையும் எங்களது ஈழத் தமிழ் இயக்கங்களிலும் கட்சிகளிலும் தொட்டுக் கொள்வதற்கான ஊறுகாயாகக்கூட  இருக்கவில்லை என்பது துர்ப்பாக்கியமானது.

13007357_10156932645035637_8798797280762352843_nதமிழினி அவர்கள் மற்றவர்களை மட்டும் குற்றம் கூறவில்லை. தன்னையும் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளார். மேலும் தனது தவறுகளினால் குற்றவுணர்விலும் கஸ்டப்பட்டுள்ளார் என்பதை அறியவும் உணரவும் முடிகின்றது. ஓரிடத்தில் நாம் அனைவரும் “வெற்றி மயக்கத்தில் இருந்தோம்” (13). எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறான வெற்றி மயக்கம் புலிகளின் தலைமையை மட்டும் ஆட்டிப்படைக்கவில்லை. முற்போக்கு என்றும் முன்னேறிய பிரிவினர் எனவும் கூறியவர்களையும் ஆட்டிப்படைத்தது. குறிப்பாக ஆனையிறவு கைப்பற்றியபோது இருந்த வெற்றி மயக்கம் தமிழீழ மக்கள் கட்சி பிளவுண்டு சீரழிந்து போகவும் வழிவகுத்தது என்பதை பலர் அறியமாட்டார்கள்.

தமிழினி விடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற தவறுகளுக்கான பொறுப்புகளையும் எடுகின்றார். உதாரணமாக “எந்த சமூகத்தை வாழவைக்க வேண்டுமென்பதற்காகப் நாம் போராடப் போனோமோ அதே சமூகத்தின் சீரழிவு நிலைக்கும் நாமே காரணமாக இருந்தோம். அதில் நானும் ஒரு பங்காளியாக இருந்தேன் என்பதை வேதனையுடனும் மிகுந்த மனத்தாக்கத்துடனுமே இங்கு பதிவு செய்கின்றேன்” (180) எனக் குறிப்பிடுகின்றார். மேலும், “தீராப் பகையுணர்ச்சியோடு எதிரும் புதிருமாக நின்று போரிட்டவர்கள் நிலத்தில் சடலங்களாக சிதறிக் கிடந்த காட்சி ஒரு தாயின் மடியில் உறக்கத்தில் புரண்டு கிடக்கும் குழந்தைகளையே நினைவுபடுத்தியது. எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடமும் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை” (60) எனப் போராட்ட காலத்தில் தனது அறியாமையை அல்லது வரையறுக்கப்பட்ட (மட்டுப்படுத்தப்பட்ட) அறிவு மட்டுமே இருந்தது என்பதை சுயவிமர்சனமாக ஒத்துக் கொள்கின்றார்.

thamiliniதமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அவரின் ஒரு “சத்திய சோதனை” முயற்சி எனக் கூறலாம். “நான் போராளியா? பயங்கரவாதியா?” என்பதை இறுதியில் உணர்ந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாதவாறு நிலைமைகள் அவரை சிறைப்படுத்தின. இந்த சிந்தனைப் போராட்டத்தின் வெளிப்பாடாக தனக்குள் குமுறுகின்றார். “எனது உயிரைக் கொடுத்து மக்களது எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை தானே என்னை போராட்டத்தில் இணையச் செய்தது? ஆனால் விடுதலையின் பேரால் ஏற்பட்ட அழிவுகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் நானும் ஒரு காரணமாகவே இருந்திருக்கின்றேன். அதனை மறுப்பதோ, மறைப்பதோ எனது மனச்சாட்சிக்கே நான் இழைக்கும் துரோகமாக இருக்கும் என எண்ணிக் கொண்டேன்” (234). இதற்குப் பின்பும் நாம் இவரிடம் எதை எதிர்பார்ப்பது? “பாதுகாப்பான கடந்த காலத்தையும் வளமான எதிர்காலத்தையும் கொண்ட நாம்” இவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பது எந்தவகையில் நியாயமானது?

ஆனால் நாம் என்ன செய்கின்றோம். அவர் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றோம். அவரே கூறுகின்றார், “அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் தனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதை புரிந்து கொள்ளலாம். ஆனால் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் பிரச்சாரம் செய்தமைதான் புரியதாத புதிராக உள்ளது“ எனக் குறிப்பிடுகின்றார். ஏன் நாம் இப்படி இருக்கின்றோம்?

கவிஞர் சேரன் அவர்கள் இந்த நூல் தொடர்பாக முகநூலில் குறிப்பிட்டதைப்போல சுய வரலாற்றை காந்தியால் கூட முழுமையாக எழுத முடியாது. அப்படியிருக்கும் பொழுது நாம் தமிழினியிடம் அதை எதிர்பார்ப்பது நியாயமில்லை. இருப்பினும் அவரது பதிவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நாம் அவதானிப்பதனுடாக ஒரு மனிதரைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். மேலும் சக மனிதர்களுக்கு, எதிர்காலத்தில் தமது அனுபவங்களை வரலாறுகளை எழுத இருப்பவர்களுக்கு, ஒரு படிப்பினையாகக்கூட இவை இருக்கலாம். அந்தவகையில் இவரின் பதிவில் காணப்படுகின்ற சில முரண்பாடுகளை குறிப்பிடுவது அவசியமானது. முதலாவது தலைமைப் பொறுப்பில் இருந்த இவர் தானும் அதில் இருந்தவர் என்பதை உணராத நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. ஆகவேதான் சில இடங்களில் மூன்றாவது நபராக இருந்து புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைமையைப் பற்றியும் எழுதுகின்றார். உதாரணமாக கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பாக குறிப்பிடும் பொழுது இது தவறான ஒரு செயற்பாடு என்பதை, “இயக்கத்தின் தலைமையால் உணரமுடியாமல் போனது” (179), “புலிகள் செய்தார்கள்” “அவர்கள் கருதினர் (13)” என மூன்றவாது நபராக இருந்து குறிப்பிடுகின்றார். உண்மையில் “நாம் உணரவில்லை” “நாம் செய்தோம்” “நாம் கருதினோம்” என தன்னிலைசார்ந்தும் எழுதியிருந்தால் குறிப்பிட்ட தவறுகளுக்கான கூட்டுப் பொறுப்பை தானும் எடுத்திருக்கலாம். அதேநேரம் இவ்வாறு எழுதுவதற்கு காரணம் தன்னை தலைமைத்துவத்துடன் அடையாளம் காண விரும்பாதது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த விருப்பமின்மை இயக்கத்தில் இருந்தபோது ஏற்பட்டதா அல்லது இந்த அழிவுகளையும் போராளிகளின் நிர்க்கதி நிலைகளையும் பார்த்த பின் இறுதியாக ஏற்பட்டதா என்பதை அவர் மட்டுமே அறிவார். ஆனால் இன்றும் தப்பி வாழ்கின்ற போராளிகள் அறிவார்கள். இவர்களே இந்த உண்மையைக் கூறக்கூடியவர்கள்.

Thamilini-akka-1தமிழினி தான் இயக்கத்தில் சேர்ந்த ஆரம்பத்தில் “என்னைப் பொறுத்தளவில் இலட்சியத்தால் ஒன்றிணைந்த உணர்வு ரீதியான குடும்பமாகவே இயக்கத்தைக் கருதியிருந்தேன். ஆனால் இப்படியான விடயங்களை (மாத்தையா விவகாரம்) அறிந்தபோது மூச்சுக் கூட விடமுடியாதளவிற்கு முதன் முதலாக இயக்கத்தின் மீது பயமும் கலக்கமும் ஏற்பட்டது” (64). இது “ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தாது விட்டாலும், …. அதிர்ச்சியாக இருந்தது” (51). என்கின்றார். இதேபோல் கருணா மீதும் பல பழிகள் சுமத்தப்பட்டதாக கூறுகின்றார் (161). இந்த நிகழ்வுகள் எதிர்மறைப் பார்வைகளையும் உணர்வுகளையும் தனக்குள்ளும் போராளிகளுக்கும் தந்ததாக குறிப்பிடுகின்றார். இருந்தபோதும் தொடர்ந்து போராட்டத்தில் பங்களித்திருக்கின்றார். பயணித்திருக்கின்றார். இது எவ்வாறு சாத்தியம் என்பது கேள்விதான்.

இதேபோல முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் மற்றும் கிழக்குப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவற்றில் என்ன நடந்தது என்பதையும் இவை தனக்குள் ஏற்படுத்திய மாற்றங்களையும் மேலும் விரிவாகவும் வெளிப்படையாகவும் முன்வைத்திருக்கலாம். இவை நூலின் நேர்மைத் தன்மைக்கு மேலும் பங்களித்திருக்கும். உதாரணமாக சமாதான காலத்தில் புலிகள் தொடர்பாக மக்களிடம் நம்பிக்கையீனம் இருந்ததாக குறிப்பிடுகின்றார் (15). அப்படியெனில் இவர் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதே இவ்வாறான ஒரு பார்வை இருந்திருந்தால் அவரது தொடர்ச்சியான பங்களிப்பு மீண்டும் மீண்டும் கேள்விக்குரியதாகின்றது. ஆனால் இவ்வாறான மாற்றங்களும் புரிதலும் நிலைப்பாடுகளும் போர் முடித்துவைக்கப்பட்ட பின் அல்லது புனர்வாழ்வின் பின் ஏற்பட்டது எனின் அது புரிந்து கொள்ளப்படக்கூடியது. ஆனால் இந்த உணர்வுகளும் எண்ணங்களும் குறிப்பிட்ட காலங்களிலையே ஏற்பட்டதாக இவரது பதிவுகள் கூறுவதுதான் முரண்பாடானாதாகின்றது.

இறுதிக் காலத்தில், “கட்டாய ஆட்சேர்ப்பு தலைவரின் மிகத் தவறான முடிவு. இது வெற்றிக்கான பாதையல்ல என்பதை உணர்ந்தேன்” என்கின்றார் (181). கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பாக மக்களிடம் கூறும் பொழுது அவர்களின் மனநிலையை தன்னால் கற்பனை செய்யமுடியாது (179) இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் அரசியல் துறைப் போராளியாக இருப்பதை மன உளைச்சலாக மட்டுமல்ல அவமானமாகவும் உணர்ந்தேன். ஆனால் தனக்குத் துரோகிப் பட்டம் கிடைக்கும் என்ற பயம் காரணமாக இவ்வாறான தனது விமர்சனங்களை பொதுவெளியில் முன்வைக்கத் தயங்கியிருக்கின்றார். நம்பிக்கையானவர்கள் என நினைத்தவர்களிடம் முன்வைத்தபோதும் “போராட்டத்தை குழப்பவேண்டாம் எனவும், முடியாவிட்டால் விலகிப் போகும்படியும், தலைவர் தூரநோக்குடன் சிந்தித்தே செயற்படுகின்றார்” எனவும் கூறி பலர் தனது வாயை அடைத்ததாக பதிவு செய்கின்றார். இவ்வாறான பல விமர்சனங்களைப் பலர் போர் முடிவுற்றபின் கூறுகின்றனர். இவர்கள் எல்லோரும் தவறான செயற்பாடுகளுக்கு எதிராக அன்று பேச முடியாவிட்டாலும் அவற்றுக்கு எப்படிப் பங்களித்தார்கள் என்று மட்டும் விளங்கவில்லை. இயக்கத்தைவிட்டு விலகியிருக்கலாமே?

தமிழினி, மேற்குறிப்பிட்டவாறு தன்னை சுயவிமர்சனம் செய்து கொண்டபோதும், விடுதலைப் புலிகளின் தலைமைப் பொறுப்பில் இருந்த காரணத்திற்காக, நடந்த தவறுகளுக்கான கூட்டுப் பொறுப்பை தானும் எடுத்திருக்கலாம். ஆனால் இவர் மற்றவர்கள் மட்டுமே இத் தவறுகள் நடைபெறக் காரணம் எனக் கூறியுள்ளமை விமர்சனத்திற்குரியது. ஏனெனில் முக்கியமாக கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் செஞ்சோலை படுகொலை (194) தொடர்பாக இவருக்கு பொறுப்பு உள்ளதாக பலர் கூறுகின்றனர். இவற்றுக்காக இவர் வருந்தியபோதும் குற்றவுணர்வு கொண்டபோதும் இவரது பங்கும் இதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ உள்ளது என்கின்றனர். ஆகவே இவற்றுக்கான கூட்டுப் பொறுப்பை தானும் எடுத்திருந்தால் இந்த நூலின் மதிப்பு இன்னுமொரு படி மேல் சென்றிருக்கும்.

நாம் நமது நிலைகளிலிருந்து இவ்வாறு விமர்சிக்கலாம். கருத்துக் கூறலாம். ஆனால் விடுதலைப் புலிகள் போன்ற ஒரு இயக்கத்தில் கூட்டுப் பொறுப்பு எடுப்பது சாத்தியமா என்பது கேள்விக்கும் விவாதத்திற்கும் உரிய விடயம். ஏனெனில் “ஒவ்வொரு பிரிவும் தமது வேலைகளுக்கே பிரிவுகளுக்கே முக்கியத்துவமளித்தன. ஆகவே ஒருங்கிணைந்த செயற்பாடும் கூட்டுப் பொறுப்பும் சாத்தியமற்றதாகியது” (165) எனக் குறிப்பிடுகின்றார். இதுவே இன்னுமொருபுறம் நிலாந்தன் அவர்கள் இந்த நூல் தொடர்பாக குறிப்பிட்டபோது, புலிகளின் வரலாற்றை யாராலும் முழுமையாக எழுத முடியாது. மாறாக ஒவ்வொருவரும் தமது அனுபவங்களையும் தாம் சார்ந்த செயற்பாடுகளையும் மட்டுமே பதிவு செய்யலாம் என்கின்றார். இவை எல்லாவற்றினதும் தொகுப்புக்கூட முழுமையானதல்ல. ஒரு முழுமையான வரலாற்றை தலைவர் பிரபாகரன் மட்டுமே செய்திருக்கலாம். ஆனால் அதுவும் முழுமையானதாக இருந்திருக்குமா என்பது கேள்விக்குறியதே. அந்தவகையில் தவறுகளுக்கான கூட்டுப் பொறுப்பை தலைவரைத் தவிர வேறு யாரும் எடுக்க முடியாதோ எனத் தோன்றுகின்றது. ஆனால் வெற்றிகளின் போது எல்லாம் கூடி கொண்டாடியவர்கள் தோல்விகளின் போதும் அதற்கான பொறுப்பை ஏற்பதுவே அறமாகும்.

13043276_10156932644695637_2378680096677163109_nஇந்த நூலில் முக்கியமான பகுதிகள் பெண் போராளிகள் மற்றும் பெண்ணியம் தொடர்பானது. பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக தலைவர் பிரபாகரனின் நிலைப்பாட்டை (108) பின்வருமாறு கூறுகின்றார். “பெண்களின் பிரச்சனைகளைப் பெண்களே வெளிக்கொண்டு வரவேண்டும். பெண்களைவிட ஆண்கள் அதிகம் சிறப்பாக பெண் விடுதலை பற்றிப் பேசுவார்கள். ஏன் நான் கூட உங்களை விடவும் நன்றாகப் பெண்ணியம் பேசுவேன். ஆனால் உங்களின் பிரச்சனைகளை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. எந்த ஆண்களினாலும் பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் சரிவரப் புரிந்து கொள்ளமுடியாது. பெண்களின் பிரச்சனைகளை பெண்கள் தான் பேச வேண்டும். எழுத வேண்டும். அப்பொழுதுதான் அது உண்மையானதாக இருக்கும்.” (108) எனக் கூறியதாக குறிப்பிடுகின்றார்.

images1மேற்குறிப்பிட்டவாறு கூறியபோதும் இயக்க செயற்பாடுகள் ஒரு வழிப் பாதையாகவே இருந்துள்ளன. புலி இயக்க உறுப்பினர்களை மட்டுமல்ல மக்களையும் பயத்தில் தான்  வைத்திருந்துள்ளார்கள். தவறுகள் நடைபெறாமைக்கு பயம் மட்டுமே காரணமாக இருந்துள்ளது. உதாரணமாக “இயக்கத்தை சாராத ஆண்களுடன் பாலியலுறவு கொண்டதற்காக அனைத்துப் பெண் போராளிகளின் முன்னிலையும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டணை விதித்தார்கள்,” (78). ஆண்களுக்குப் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கப்பட்டது.  உடலுறவு கொள்வது அந்தளவு தவறான செயற்பாடா? இவ்வாறு பயமுறுத்தியே தமது கட்டளைகளையும் நோக்கங்களையும் புலிகளின் தலைமை நிறைவேற்றியிருக்கின்றனர். இதைத்தான் புலிகளின் காலத்தில் பெண்களுக்கான சுதந்திரம் என்றும் இரவில் தனிய நடமாடலாம் எனவும் பலர் கூறுகின்றனர். இவ்வாறான சுதந்திரத்திற்கும் சவூதி போன்ற நாடுகளில் இருக்கின்ற சுதந்திரத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதைப் பலரால் இன்றுவரை புரிந்து கொள்ள முடியவேயில்லை.

இவ்வாறான ஒரு சூழ்நிலையிலும் பெண்களுக்கான நன்னடைத்தைப் பண்ணை பொறுப்பாளராக தமிழினி அவர்கள் இருந்தபோது குற்றவாளிகளாகப் பிடித்துவைக்கப்பட்ட பெண்களிடமிருந்து கற்றுள்ளார். “சமூகத்தினால் மூடிமறைக்கப்படும் மனித வக்கிரங்களும் பெண்களை மட்டுமே ;குற்றவாளியாக்கும் எமது சமூக மனப்பாங்கும் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூகத்தில் பெண்களின் பிரச்சனைகளை நான் ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு அந்தப் பெண்களின் கண்ணீர்க் கதைகள் தான் ஆரம்பப் பாடங்களாக இருந்தன.” (46). மேலும், “கசப்பான உண்மை எதுவெனில் பெண்களின் அறிவு மற்றும் சிந்தனையில் மாற்றங்களைள ஏற்படுத்துவதை விடவும், ஆயுதமேந்திப் போராடுவதன் மூலம் சமூகத்தில் எமது நிலையை வலுப்படுத்துவது தொடர்பில் அதிகம் சாதித்துவிட முடியும் எனப் பெண்களாகிய நாங்களே எமக்குள் கற்பிதம் செய்து கொண்டதுதான்” (74-5) என்கின்றார். “எவ்வாறு கட்டுக்கோப்பான குடும்பப் பெண்ணாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப் பயிற்சிகளைப் பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம்” (75-6). பெண்விடுதலை தொடர்பான நம்பிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் “உணர்வுகள் தற்காலிக அனுபவங்களாக இல்லாமல், ஒரு பண்பு மாற்றமாக உருவெடுப்பதற்குரிய வழிவகைகள் இயக்கத்திற்குள் நடைமுறையில் இல்லாமல் போனதுதான் மிக வேதனைக்குரியது” (76). ஆகவேதான் “பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கருத்துக்களை நான் கூறியிருக்கின்றேன். ஆனாலும், ஆயுதப் போராட்டத்தோடு சமாந்தரமான நிலையில் சமூக மாற்றத்திற்கான வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை”. (77) என இறுதியாகப் புரிந்திருக்கின்றார். அப்பொழுது காலம் கடந்து விட்டிருந்தது.

பெண்களின் பங்களிப்புகள் ஆற்றல்கள் தொடர்பாக பல இடங்களில் குறிப்பிடுகின்றார். நல்ல சிறுகதைகள் பலவற்றைக் கூட எழுதியுள்ளார். ஆனால் புலிகளில் இருந்த ஒரே காரணத்திற்காகவும் தலைமையை கேள்வியின்றிப் பின்பற்றியமைக்காவும் பெண் போராளிகளுக்கு இறுதியாகக் கிடைத்தது மரணமும் வசைகளும் வடுக்களுமே. உதாரணமாக கிழக்குப் புலிகளுக்கு எதிராக வன்னிப் பெண் போராளிகள் சண்டைபிடித்தமையானது “ஆயுதமேந்திய பெண்களின் வாழ்க்கையில் இது மோசமான கறை படிந்த நாட்களாயிருந்தது” என்கின்றார். மேலும் இயக்கத்தை நம்பி சரணடைந்த கிழக்கு மாகாணப் பெண் தளபதி சப்தகி (சாளி) உட்பட நான்கு பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டு இறுதியாக மரணதண்டனை வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது என்கின்றார். அதேவேளை ஒவ்வொரு பெண் தளபதிகள் தொடர்பாகவும் பெருமையாகவும் மதிப்புடனும் பதிவு செய்கின்றார்.   உதாரணமாக தளபதி விதுஷாவை தன்னை வளர்த்த தாய் என விழிக்கின்றார். இதேபோல் துர்க்கா, தணிகைச்செல்வி எனப் பல பெண் போராளிகளின் பங்களிப்புகள் தொடர்பாக பெருமையாக கூறுகின்றார். இறுதியாக பெண் போராளிகள் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையை எண்ணி கவலை கொள்கின்றார்.

இறுதியாகப் புனர்வாழ்வின் பின்பு தமிழினிக்கு கிடைத்த அனுபவமும் கசப்பானது. “ஒரு பெண் சிறை சென்று மீள்வது என்பது எமது சமூகத்தில் மிகவும் அவமானத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாலே அந்தப் பெண்களை மானமிழந்து போனவர்களாக் கருதி ஒதுக்கி வைக்கும் மோசமான மனப்பாங்கு கொண்ட மனிதர்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள். போர்க்களத்திலே பெண்கள் ஆயுதமேந்திப் போராடுவதை ஏற்றுக் கொண்ட சமூகம், அவர்கள் ஆயிரக்கணக்கில் களமுனைகளில் உயிரிழந்தபோது வீராங்கனைகள் எனப் போற்றிய சமூகம், அதே பெண்கள் சிறைகளுக்கும், புனர்வாழ்வு முகாம்களுக்கும் சென்று வரும்போது மட்டும் அவர்களை தரம் தாழ்ந்து விட்டவர்களாக கருதுவது மிகவும் கொடூரமானது.” (237)

“ஒரு பெண் போராடப் புறப்படுகின்ற போது, தன்னுடைய தன்மானத்தைப் பற்ற வைத்துக் கொள்ளும் வல்லமையையும் தனக்குள்ளே ஒரு நெருப்பாகப் பற்ற வைத்துக் கொள்கிறாள். களமுனையிலே ஒரு பெண் போராளி நிற்கும்போது, தன்னுடைய உயிர் மட்டுமின்றி, தனது தன்மானமும் இழக்கப்படலாம் என்ற ஆபத்து அவளுக்குத் தெரிந்தே உள்ளது. இருந்தும் சமூகத்தின் ஒரு பொது இலட்சியத்திற்காக அவள் துணிந்து களத்தில் நின்றிருக்கிறாள்.” (238). இவ்வாறான பெண்கள் மானமிழந்து வந்திருக்கின்றார்கள் எனக் கருதுவதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் இதைச் செய்யும் ஆண்களே தவிர பெண்கள் அல்ல. ஆனால் இவற்றையும் கடந்து வாழ்ந்து நிருபிக்க வேண்டியவர்களாக பெண்களே இருக்கின்றனர் என்பது துர்பாக்கயமான ஒரு உண்மை.

மேற்குறிப்பிட்டவாறு பல முரண்பாடுகளுடனும் குழப்பமாகவும் தமிழினி எழுதுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முதலாவது போரின் வடுக்களும் இழப்புகளும் துன்பங்களும் இதற்கெல்லாம் தான் பொறுப்பாக இருந்தேன் என்ற குற்றவுணர்வும் இவ்வாறான நிலைப்பாட்டுக்கு வர அவர் தள்ளப்பட்டிருக்கலாம். மேலும் புனர்வாழ்வு என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கம் போராளிகளின் உள உடல் நலத்தை கவனிப்பதற்குப் பதிலாக அவர்களது கருத்தியல் தளத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதை மட்டும் கவனித்திருக்கலாம். உண்மையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் செய்வதை சர்வதே சமூகம் அனுமதித்திருக்க கூடாது. ஆனால் தமக்கு பயன்படாதவரை ஈழத் தமிழர்கள் மீது யாருக்கு அக்கறை உள்ளது? அல்லது இறுதிப் போரில் கிடைத்த அனுபவங்களும் கண்ட காட்சிகளும் அவரில் மாற்றங்களை உருவாக்கியிருக்கலாம். ஆகவேதான், “யுத்தமொன்றில் பங்குபற்றும் போராளிகளின் இறுதிக் கணங்களில் அவர்களுடைய கண்களில் தேங்கியிருக்கும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிந்த எவராலும் மீண்டுமொரு யுத்தத்தைப் பற்றிப் பேசவோ அல்லது நினைத்துப் பார்க்கவோ முடியாது” (57). என்கின்றார். ஆகவேதான் மீண்டும் ஒரு போரை எதிர்கொள்ள முடியாத மனநிலையுடன் மரணத்தின் மூலமாக விடுதலை பெற்றுவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

index4ஆனால் இறுதிப் போர்க் காலங்களில்  தனது தாய் வெய்யிலுக்கு தலையை சாரியால் மறைத்துக் கொண்டு கையில் பாத்திரத்தை ஏந்திக் கொண்டிருக்கும் நிலைதான் இன்று ஈழத் தமிழிர்களின் நிலையும் என்பதை நாம் மறக்க கூடாது.

அவரையும் இறுதிவரை போராடி மரணித்த, பாலியல் சித்திரவதைகளுக்குட்பட்ட, இன்று வாழ்வதற்காகப் போராடுகின்ற அனைத்து போராளிகளையும் நினைவில் இருத்தி அவர்களுக்காக இக் கட்டுரைகளை சமர்ப்பணம் செய்கின்றேன்.
book_thamiliniஇவ்வாறான ஒரு நூலை எழுதியமைக்காக தமிழினி என்ற சிவகாமிக்கும் நன்றி கூறவேண்டியது அவசியமாகும்.
தமிழினி என்ற சிவகாமி மீது கூர்வாளின் நிழலானது அவரது மரணத்தின் பின்பும்   இருக்கின்றது என்பது கவலையான விடயம். ஆனால் இந்த நிழலானது குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்கின்றவர்கள் மீதும் அதிலும் அரசியல் அக்கறையுடையவர்கள் மீதும் ஏன் புலம் பெயர்ந்தவர்கள் மீதும் விழுகின்றது. ஆகவே நாம் மிகவும் கவனமாகவும் பொறுப்புணர்வுடனும்தான் செயற்படவேண்டும். அதேவேளை தமிழினியின் நூலின் மீது முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களிலிருந்து போரில் ஈடுபட்டவர்கள் ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். தாம் வாழும் பொழுதே தம்மால் முடிந்தளவு தமது அனுபவங்களை பதிவு செய்வதாகும். நிச்சயமாக இப் பதிவுகள் அவர்கள் புலத்திலா புலம் பெயர்ந்த் தேசத்திலா வாழ்கினறார்கள் என்பதைப் பொருத்தும் யாருடைய செல்வாக்குக்கு உட்பட்டிருக்கின்றார்கள் என்பதைப் பொருத்தும் அப் பதிவுகள் வேறுபடலாம். இதை நாம் புரிந்து கொண்டுதான் இந்த நூல்களை அனுக வேண்டும்.
மீராபாரதி

மேலதிக வாசிப்புகளுக்கு
இரு தேசியங்களுக்கு இடையில் பெண்கள்
ஐயர்
சிவகாமி 1
தமிழினி 2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: