Posted by: மீராபாரதி | April 27, 2016

தமிழினி – மீண்டும் கூர்வாளின் நிழலில்! – பகுதி இரண்டு

ltte-220x350விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண்கள் பிரிவின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்கின்ற சிவகாமி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அண்மையில் பலரது கவனத்தையும் பெற்று வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளானது. இந்த நூல் பின்வரும் தலைப்புகளை உள்ளடக்கிப் பதினொரு பகுதிகளை கொண்டுள்ளது. “பாதைகள் திறந்தன” என ஆரம்பித்து, “போருக்குள் பிறந்தேன், ஆயுதப் பயிற்சி பெற்ற அரசியல் போராளி, தமிழ் மக்களும் ஆயுதப் போராட்டமும், ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும், வரலாற்றைத் திருப்பிய வன்னிப் போர்க்களம், கிழக்கு மண்ணின் நினைவுகள், உண்மையற்ற சமாதானம், நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகின்றோம், சரணடைவும் சிறைச்சாலையும்”, எனத் தொடர்ந்து இறுதியாக “புனர்வாழ்வு” அனுபவங்களுடன் நிறைவு பெறுகின்றது.

12729351_1024379040969342_2882615215426262599_nஇந்த நூல் வெறுமனே ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற கருத்து நிலைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல. ஆனால் தூரதிர்ஸ்டவசமாக அவ்வாறுதான் பார்க்கப்படுகின்றது. இதற்கு மாறாக புலிகளினது மட்டுமல்ல ஈழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல், கோட்பாடு, செயல், உளவியல், சாதியம், பெண்ணியம், பால், பாலியல் மற்றும் சமூகப் பார்வை என பல தளங்களில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒரு நூல் இதுவாகும். இந்த நூலுடன் இணைந்து போர் முடிந்ததாகக் கூறப்பட்டபின் போரில் சிக்குண்டு முள்ளிவாய்க்கால்வரை இறுதிவரை சென்றவர்களிடமிருந்து வெளிவந்த வன்னியுத்தம், உழிக்காலம், கடவுளின் மரணம், கொலம்பசின் வரைபடம், விடமேறிய கனவு, … போன்ற நூல்களையும் நிலாந்தன், கருணாகரன், யோ.கர்ணன், தமிழ்கவி, வெற்றிச்செல்வி, கருணை ரவி, தமிழினி, …. போன்றவர்களின் படைப்புகளையும் மற்றும் இதற்கு முதல் வெளிவந்த ஐயர், செழியன், புஸ்பராணி, புஸ்பராஜா …… எனப் பலரின் நூல்களையும் ஆய்வு செய்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக அரசியல், உளவியல் மற்றும் பெண்ணிய துறைசார் வல்லுனர்கள் அல்லது அரசியல் செயற்பாடுகளில் அக்கறை உள்ளவர்கள் செய்யவேண்டும். இதுவே சமூக அக்கறையுள்ளவர்களின் பொறுப்பான செயற்பாடாகும். அப்பொழுது இந்த நூல்கள் தொடர்பான பன்முக கற்றலுக்கான வழிகளை எமக்கு ஏற்படுத்தித் தரும்.

இவ்வாறான ஒரு கற்றலிலிருந்துதான் நாம் எங்கு தவறிழைத்தோம்? நமது பார்வையில், செயற்பாடுகளில் என்ன தவறுகள் இருக்கின்றன? தொடர்ச்சியான போராட்டத்திற்கு எவ்வாறான பாதையை தெரிவு செய்வது? தேசம் என்பது என்ன? தேசியம் என்பதன் விளக்கம் என்ன? கோட்பாடும் செயலும் என்றால் என்ன? போன்ற பல வினாக்களுக்கு விடை காண முயற்சிக்கலாம். இன்றைய தேவையும் இதுவே. இவ்வாறான விரிவான ஆழமான ஆய்வுகளை செய்வோமாயின் நாம் செல்ல வேண்டிய பாதையை தெளிவாகத் தீர்மானிக்கலாம் என நம்புகின்றேன்.

book_thamiliniஇந்த நூல் வெளிவருவதில் ஜெயக்குமரனின் பங்களிப்பு முக்கியமானது. இருப்பினும் இந்த நூலின் ஆரம்பத்தில் இவரால் எழுதப்பட்ட அறிமுகமும் தமிழினியை நியாப்படுத்தி பாதுகாப்பதும் அவசிமற்ற ஒன்று. இதைத் தவிர்த்திருக்கலாம். இவரது இவ்வாறான செயற்பாடுகள் தமிழினி மீதும் அவரது எழுத்துக்கள் மீதும் மேலும் சந்தேகங்களை உருவாக்குவனவாகவே இருக்கின்றன. இதை ஜெயக்குமரன் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தமிழினியின் முக்கியத்துவத்தையும் ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவரது வகிபாகத்தையும் வரலாறு தீர்மானிக்கும். அதை நாம் வலிந்து நிறுவத்தேவையில்லை.

Thamilini-akka-2தமிழினி எனும் சிவகாமி ஒரு சாதாரண மனிதர். போர்ச் சூழலுக்குள் பிறந்த ஒரு பெண். நாம் வாழ்ந்தபோது இருந்த சூழலைப் போல இவர் வாழ்ந்த சூழலும் விடுதலைப் போராட்டத்தை நோக்கி இவரைத் தள்ளியது. ஆனால் ஒரே ஒரு வேறுபாடு உண்டு. 1986ம் ஆண்டுக்கு முன்பு பல இயக்கங்களில் ஒன்றை நாங்கள் தெரிவு செய்ய வேண்டி இருந்தது. ஆனால் சிவகாமி போன்ற பெண்களுக்கு அவ்வாறான தெரிவுகளுக்கான சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை. இவர்களுக்கு இருந்தது ஒரே ஒரு தெரிவுதான். சிறிலங்கா அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கும் இனவழிப்புகளுக்கும் எதிராகப் போராட வேண்டுமாயின் விடுதலைப் புலிகளில் சேர்வதைத் தவிர வேறு வழியே இவர்களுக்கு இருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமையும் அவ்வாறான ஏகப்பிரதிநிதித்துவ சிந்தனைகளையே மக்களிடம் விதைத்தன. ஒரு தலைவர். அவர் வழி நடாத்தும் ஒரு இயக்கம். இதில் இணைந்து பங்களித்தால் விடுதலை நிச்சயம் என்ற நம்பிக்கை. இதைப் பெரும்பாலானவர்கள் நம்பினார்கள்.

Tamilini-death-1சிவகாமி தனது குழந்தைப் பருவ எண்ணங்களை மிக அழகாக இந்த நூலின் இரண்டாவது மூன்றாவது பகுதிகளில் குறிப்பிடுகின்றார். இவை மிகவும் உணர்வும் உணர்ச்சிபூர்வமான பகுதிகள். சின்னக் குழந்தைகளின், மற்றும் புதிதாக இணைந்த போராளிகளின் சின்ன சின்ன ஆசைகளை அழகாக உண்மைத்தன்மையுடன் பதிவு செய்கின்றார். தலைவரை சந்தித்தல் (39) தங்கையுடனான உறவு (43). என ஆரம்பித்து, பாதிக்கப்பட்ட பெண்களிடம் கற்றல் (46). பெண்களை மட்டும் குற்றவாளியாக்கும் சமூக மனப்பாங்கு மற்றும் ஆண் பெண் முரண்பாடுகளும் புரிந்துணர்வும் செயற்பாடும் (50) எனத் தான் உணர்ந்தவற்றையும் கற்றவற்றையும் பதிவுசெய்கின்றார். தானும் தனது தங்கையும் இயக்கத்தில் இணைந்தமையும் பின் தங்கை மாவீரராக (113) மரணித்ததையும் தனது ஏழைக் குடும்பம் எதிர்நோக்கிய கஸ்டங்களையும் விபரிக்கின்றார். இவரது இக் குறிப்புகள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏழைக் குடும்பங்களின் பங்களிப்பைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

சமாதானக் காலம் எனக் கூறப்பட்ட இன்னுமொரு போருக்கான தயாரிப்புக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் கொல்லப்பட்டார். தமிழினியும் அன்று கொல்லப்பட்டிருக்க வேண்டியவர். ஆனால் தப்பினார். இறுதியுத்தத்திலும் சரணடைந்தமையால் சில காலம் உயிர் வாழ்ந்தார். இந்த இரு சந்தர்ப்பங்களில் மட்டுமல்ல போர்ச் சூழலின் பல சந்தர்ப்பங்களில் இவர் கொல்லப்பட்டிருந்தால் தமிழினியும் மாவீரராக இன்று நினைவு கூறப்பட்டிருப்பார். அவரது படமும் மரணித்த இரண்டாயிரம் போராளிகளுடன் ஒரு படமாக இருந்திருக்கும். ஆனால் அவருக்குள் (ஏற்கனவே) இருந்த இவ்வளவு எண்ணங்களும் அவருடன் அதற்குள் புதைந்துபோயிருக்கும். இப்படி எத்தனை எத்தனை போராளிகளின் எண்ணங்கள் அவர்கள் மனதிற்குள் புதைந்திருக்கின்றனவோ யாருக்குத் தெரியும்? இப்பொழுதுகூட எத்தனை போராளிகளின் எண்ணங்கள் வெளிவரத் துடித்துக் கொண்டிருக்கின்றனவோ? ஆனால் புற அக கூர்வாளின் நிழல்கள் அவர்களைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன. வாழ வேண்டும் என்பதற்காக இதற்குப் பயந்து வாழ்கின்றனர். ஆனால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து இவற்றை வெளிக்கொண்டுவர வேண்டியது நமது பொறுப்பு.

news_26-06-2013_19thamiliniசிவகாமி ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னைச் சிறு வயதிலையே இணைத்து இருபது வருடங்களாகப் பங்களித்திருக்கின்றார். இவரது ஆற்றலை அல்லது விசுவாசத்தை அல்லது இரண்டையும் புரிந்து கொண்ட தலைவரும் தலைமைகளும் இவருக்குப் பொறுப்புகளை வழங்கியுள்ளனர். உதாரணமாக விடுதலைப் புலிகளின் தலைவரினால் 1998ம் ஆண்டு சுதந்திரப் பறவைகள் பத்திரிகை (108) மற்றும் 1999ம் ஆண்டு அரசியற்துறை மகளிர் பொறுப்பாளர் (116) பதவிகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இவருக்கு வழங்கியதைப் போன்றே தலைவர் பல தளபதிகளுக்கும் பொறுப்புகளை வழங்கினார். இறுதிப் போர்வரை மரணித்தவர்கள் மற்றும் சரணடைந்தபோதும் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் இயக்கத் தலைவர்கள் எனின் சரணடைந்து புனர்வாழ்வு(?) பெற்ற தமிழினியும் இயக்கத் தலைமைச் சேர்ந்தவர்தான். ஆகவே இவரது இந்த நூல் முக்கியத்துவமுடையதே. அதேவேளை இவ்வாறு பொறுப்புகளில் இருந்தவர்களையே புறக்கணித்தும் அவர்கள் தலைவர்களே இல்லையென மறுதலித்தும் அவர்கள் மீது பாலியல் வசைகள் பாடும் பொழுது சதாரண (பெண்) போராளிகளின் நிலையை நினைக்கையில் கவலைதான் ஏற்படுகின்றது.

images2மற்றவர்கள் போரில் மரணித்தமையினாலும் தமிழினி சரணடைந்தமையினாலும் அவர்களுக்கிடையில் எந்த வேறுபாடுகளையும் ஏற்படுத்த முடியாது. சரணடைவது கூட இறுதியாக தலைமை தன்னைப் பாதுகாப்பதற்காக எடுத்த முடிவு. இது  சரியெனின் சரணடைந்த போராளிகளின் முடிவும் சரியானதே. நடேசனும் புலிதேவனும் சரணடைந்தபோது கொல்லப்பட்டவர்கள். ஆனால் இவர் கொல்லப்படவில்லை. இவர் கொல்லப்படவில்லை என்பதற்காக கொல்லப்பட்டவர்களுக்கு இருக்கின்ற மரியாதையை எந்தவகையிலும் இழந்தவரல்ல. (சிலநேரம் நடேசனும் புலிதேவனும் சரணடைந்தபோது கொல்லப்பட்டிருக்காவிட்டால் அவர்களுக்கும் இன்று துரோகி பட்டம் கிடைத்திருக்கலாம்.) நாம் வானத்திலிருந்து குண்டுகள் போடும் போதே பயந்து புலம் பெயர்ந்தவர்கள். ஆனால் இவர்கள் இராணுவத்துடன் நேருக்கு நேர் சுடுபட்டு சண்டை செய்தவர்கள். போரில் தோற்கின்றோம் என்பதை உணர்ந்த நிலையில், “இனி என்ன செய்வது?” என்பது களத்திலிருந்த ஒவ்வொருவரினதும் தெரிவு. கைவிடப்பட்ட போராளிகள் இக் கணத்தில் எடுத்த முடிவுகள் தொடர்பாக நாம் தீர்வு கூறமுடியாது. மதிப்பீடும் செய்யமுடியாது. ஏனெனில் வாழ்வா? சாவா? என்ற மனநிலையை ஏற்படுத்தும் சூழலில் நாம் வாழவில்லை. அவர்கள் மட்டுமே அதை எதிர்கொண்டவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.

tamilinia-680x365உண்மையில் தற்கொலை செய்வதைவிட யதார்த்தத்தை எதிர்கொண்டு வாழ்வதே சரியானதும் நான் தனிப்பட விரும்புகின்ற தெரிவுமாகும். ஆனால் மிகவும் கஸ்டமானது. இதனால்தான் குட்டி மணி தங்கதுரை போன்றவர்கள் ஈழ விடுதலைப் போராட்டம் சர்வதேசரீதியில் அறியப்படாத சூழலிலும் நீதி மன்றங்களைப் பிரச்சாரத்திற்கான களமாகப் பயன்படுத்தினர். ஆனால் குமரப்பா, புலேந்திரன் போன்றவர்கள் எமது போராட்டம் சர்வதேசமயப்பட்ட சூழலிலும் தற்கொலை செய்விக்கப்பட்டு இவ்வாறான சந்தர்ப்பங்களை தவறவிட்டனர். மரணங்கள் மட்டும் தீர்வுகளைப் பெற்றுத் தராது. தீர்க்கமான அரசியல் முடிவுகளே தீர்வுகளைப் பெற்றுத் தரும் என்பதை நாம் ஒருபோதும் (இன்றும் கூட) கற்கவில்லை.

images3விடுதலைப் புலிகள் போன்ற இயக்கத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு சரணடைவது என்பது மிகவும் கஸ்டமான ஒன்று. அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் ஒருவர் தான் வாழ்ந்து பிரச்சனைகளை எதிர்நோக்க முடிவெடுத்து சரணடைவது தவறல்ல. இந்த சூழ்நிலையையும் மனநிலையையும் அறிந்து உணர்ந்து புரிந்து கொள்ள தமிழினியின் எழுத்துக்களில் 211-9ம் பக்கங்கள்வரை வாசிப்பதே பொருத்தமானது. இருப்பினும் உதாரணத்திற்கு அவரின் ஒரிரு வார்த்தைகளில் கூறினால்,” இப்போதிருக்கும் இருண்ட சூழ்நிலையை எதிர்கொள்ளும் திராணியற்று தற்கொலை செய்து கொள்வதைவிட, உயிரோடிருந்து எதிர்வரப் போகும் சூழ்நிலைகளைக் கடந்து செல்வதற்குத் தான் அதிக மனோபலம் தேவைப்படும் என்பதை அறிவு உணர்த்தியது….. வார்த்தைகளால் விபரிக்க முடியாதபடி இரத்தமும் தசையுமாக இதயத்தை அறுத்துக் கொல்லும் வலிகளோடு, முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிய அந்தச் சூழ்நிலையை இலகுவில் புரியவைக்க முடியாது”. இதற்கு மேல் நாம் என்ன சொல்வதற்கு உள்ளது?

தமிழினி என்ற சிவகாமி போன்ற போராளிகளுக்கு புனர்வாழ்வு(?) என்ற பெயரில் நடைபெற்றது என்ன என்பது கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டது… புனர்வாழ்வுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள், ”கடந்த காலத்தைப் பற்றிக் கதைப்பது தேவையில்லாத விடயம்… ஆகவே மற்றவர்களுடன் கடந்த காலத்தை கதைக்க வேண்டாம்” ஆனால் “ நீங்கள் நல்ல விதமாக புனர்வாழ்வுப் பயிற்சிகளை நிறைவு செய்து சமூகத்துடன் வாழ வேண்டும்” இது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை. போரின் வடுக்களை ஆற்றுவது என்பது அவற்றைக் கதைக்காமல் விடுவதால் நடைபெறுவதல்ல. புனர்வாழ்வு பெறுபவர்களுக்கு பொறுத்தமான பாதுகாப்பான சூழல்களை உருவாக்கி நம்பிக்கைகளை ஏற்படுத்தி கடந்த காலத்தை மீள எதிர்கொள்வதற்கான பயிற்சிகளைச் செய்விக்க வேண்டும். அப்பொழுதுதான் தங்களுக்குள் ஆழமாகப் படிந்துள்ள அக புற வடுக்களை ஆற்றுப்படுத்தலாம். இதற்குப் பதிலாக சிறிலங்கா அரசுக்கு சார்பான முளைச்சலவைதான் புனர்வாழ்வு என்ற பெயரில் நடைபெற்றிருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்வதில் எந்தக் கஸ்டங்களுமில்லை. ஈழத் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் கூட இதில் எல்லாம் அக்கறையில்லை. காணாமல் போனவர்கள் எல்லாம் கொல்லப்பட்டிருப்பார்கள் என சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் கூறுகின்ற போது கோவப்படாமல் கேட்டுக் கொண்டிருப்பதுதான் இவர்களின் சமரச அரசியல் செயற்பாடு. இவர்களை நம்பிப் பயனில்லை.

images5ஆனால் தமிழினி போன்ற போராளிகள் என்ன செய்வார்கள். அவர்கள் செய்யக்கூடியதெல்லாம் தம்மால் வெளிப்படுத்தக்கூடிய ஒரு பக்கத்தையாவது பதிவு செய்வதுதான். சிறிலங்கா அரசின் இனவழிப்பு மனித உரிமைகள் செயற்பாடுகள் தொடர்பான அதிகளவிலான தகவல்கள் வந்துள்ளன. வந்தவண்ணமுள்ளன. அதை தமிழினி செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமின்றி இவை அவரைப் போன்ற போராளிகளால் செய்ய முடியாத காரியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழினி போன்ற போராளிகள் புலிகளின் நிழலில் வாழ்ந்தபோதும் கூர்வாளின் நிழலில் தான் இருந்தார்கள். அவர்களும் ஒரு கூர்வாளாகவே இருந்தார்கள். அதேவேளை போரின்போதும் போரின் பின்பும் புனர்வாழ்வின் பின்பும் கூர்வாளின் நிழலில்தான் இருந்தார்கள். இருக்கின்றார்கள். தூரதிர்ஸ்டவசமாக தமிழினி இறந்த பின்பும் கூர்வாளின் நிழலில் தான் இருக்கின்றார். இருப்பினும் தமிழினி தன்னை சுய விமர்சனத்திற்கு உட்படுத்தியும் தான் செயற்பட்ட இயக்கம் மற்றும் தலைமைகள் தொடர்பான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். இது ஒரு முக்கியமான அவசியமான செயற்பாடு. இதைச் செய்வதற்கான முழுத் தகுதியும் ஆற்றலும் அவருக்கு உண்டு என்பது நாம் அறிந்ததே. ஆனால் அதில் போதாமைகள் மற்றும் குறைகள் இருக்கலாம். இதனை அவருடன் இணைந்து செயற்பட்டு புலத்திலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் வாழ்பவர்கள் தான் இயக்க நலனை முதன்மைப்படுத்தாது மக்கள் நலனையும் விடுதலையையும் முதன்மைப்படுத்தி பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் நமது பக்க தவறுகள் என்ன என்பது தொடர்பாக நாம் இன்னும் உரையாட ஆரம்பிக்கவில்லை. இனியாவது அதை ஆரம்பிப்போம்.

அடுத்த பகுதியில் தமிழினி முன்வைத்த சுயவிமர்சனம் மற்றும் விமர்சனங்கள் தொடர்பாக பதிவு செய்கின்றேன்.
அடுத்த தலைப்பு.

விடுதலைப் புலிகள்: கூர்வாளின் நிழலில்! – பகுதி மூன்று

மீராபாரதி

சிவகாமி: மீண்டும் கூர்வாளின் நிழலில்! – பகுதி ஒன்று
ஈழப் போராட்டம் – ஐயர்
அகாலம் முதல் உழிக்காலம் வரை

Responses

  1. […] மேலதிக வாசிப்புகளுக்கு இரு தேசியங்களுக்கு இடையில் பெண்கள் ஐயர் சிவகாமி 1 தமிழினி 2 […]

    Like


Leave a comment

Categories