Posted by: மீராபாரதி | April 13, 2016

புலிகளைத் தேடியபோது….

நான் ஒரு புலி ? – 3

வறண்டு போன மண்ணை மேலும் சுட்டெரிக்கும் வெய்யில். வெறுச்சோடிய வீதிகளில் எல்லாம் கனக்கும் கானல் நீர். இசைக்காமல் பறக்கும் காற்று. ஆடாமல் நிற்க்கும் மரங்கள். வீதி ஓரங்களில் காய்ந்து போய் தனித்திருக்கும் இருக்கும் முதிர்ந்த மரங்களைப் போல பெரும்பாலும் வீதி ஓரமாக நடமாடும் முதியவர்கள். புதிய விதைகள் மறைந்து வளர்வதைப் போல இளம் சமூகம் மறைந்து வாழ்ந்தனர். ஏற்கனவே தம் பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்த்த பெற்றோர் மேலும் இறுக்கமாகப் பொத்தி வைத்துப் பாதுகாத்தனர். ஆசைக்கு கூட இளம் சமூகத்தை வீதியில் காணக்கிடைப்பதரிது. பாடசாலை மாணவர்களும் பாடசாலைக்குச் செல்லத் தயங்கினார்கள். கல்வியிலே கண்ணாக இருக்கும் பெற்றோரும் கூட அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பப் பயந்தார்கள். இருக்கும் சொத்துப் பத்துக்களை விற்று வெளிநாட்டுக்கு அனுப்பக் கூடியவர்கள் தம் இளம் பிள்ளைகளை கண்காண தேசங்களுக்கு தனிய அனுப்பினார்கள். சிலர் கடன் பட்டும் அனுப்பினார்கள். மற்றவர்கள் விதி எதுவோ அதை எதிர்கொள்வோம் என ஊருக்குள் ஓடி ஒழிந்து வாழ்ந்தார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு வெளிநாட்டுக்குப் போகும் வசதிகளோ, ஓடி ஒழிக்க இடங்களோ இருக்கவில்லை.  அதேநேரம் இந்திய இராணுவத்தின் மீதும் அவர்களுடன் நின்றவர்கள் மீதும் கோவம் வந்தவர்கள் இயக்கத்துடன் இணைந்து காட்டுக்குள் போனார்கள். எனக்கும் இவர்கள் மீது கோவம் இருந்தபோதும் யாருடனும் இணைந்து செயற்படவோ போராடவோ முடியாது இருந்தேன். போராட்டத்தை முன்னெடுத்தவர்களுடன் உடன்பாடில்லை என்பதுடன் அவர்கள் மீது கோவம் மட்டுமே இருந்தது

இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் வீதிகளில் எல்லாம் பிள்ளைப் பிடிக்காரர்கள் திரிந்த காலமது. இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்களிடம் மதிப்பு பெற்ற முன்னால் போராளிகள் இவர்கள். இன்று மக்களுக்கு எதிரானவர்களாக மாறிவிட்டார்கள். எங்கிருந்து எப்படி வருவார்கள் எனத் தெரியாது. வாகனங்களில் வருவார்கள். வீதிகளில் நிற்கும் இளைஞர்களை அள்ளிக் கொண்டு போவார்கள். எங்கே கொண்டு போவார்கள் எனத் தெரியாது. ஆகவே பெற்றோர் முகாம்கள் இருக்கின்ற இடங்களை நோக்கி ஒடுவார்கள். வாசலில் குந்தியிருந்து ஒப்பாரி வைப்பார்கள். தங்கள் பிள்ளைகளை ஒப்படைக்கும் வரை காத்திருப்பார்கள். இன்றுவரை பல பெற்றோர்கள் இப்படிக் காத்துக் கொண்டுதானிருக்கின்றார்கள்.

indian army1இப் பிள்ளை பிடிகாரர்களுக்குத் துணையாக இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் இருந்தது. இவர்கள் பலவிதமான தோற்றங்களில் இருந்தார்கள். அதில் ஒரு படைதான் கூர்க்காக்கள். பற்றைகளுடன் பற்றைகளாக பூவரசுகளுடன் பூவரசுகளாக ஒட்டி நிற்கும் பொழுது அடையாளம் தெரியாதளவு குள்ளமானவர்கள். இவர்கள் மறைந்திருக்கும் மரங்களுக்கும் செடி கொடிகளுக்கும் கூட உணர்விருக்கும். ஆனால் இவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. அவ்வளவு மூர்க்கமானவர்கள். மொழி ஒரு தடை என்ற காரணத்திற்கும் அப்பால் அப்படித்தான் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களிடம் தப்பிப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று. ஆனாலும் போராளிகள் இவர்களையும் ஏமாற்றிவிட்டு தப்பித்து ஓடிவிடுவார்கள். தப்பித்தவறி அகப்பட்டவர்கள் கதி அவ்வளவுதான். எழுத்தில் எழுத முடியாதளவு கொடூரமானவை அவை. துடிக்க துடிக்க துன்புறுத்துவார்கள். தண்ணி கேட்டு நாவறண்டு செத்துப் போகுமளவிற்கும் பொது வெளிகளில் வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். நாம் மனதுக்குள் அழுதாலும் ஒன்றும் செய்யமுடியாமல் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.

என்னைப் போன்றவர்களுக்கு பல்கலைக்கழக மாணவர் என்ற அடையாளம் ஒரு பாதுகாப்பு. அது இருப்பதால் எங்களுக்கு ஒரு திமிரும் இருந்தது. ஆகவே நம்மில் சிலர் பயமின்றி வீதிகளில் அலைந்தோம். அதிகமானவர்கள் வீட்டுக்கும் பல்கலைக்கழத்திற்கும் மட்டுமே போய் வந்து கொண்டிருந்தார்கள். தேவையில்லாமல் வீதிகளில் அலைந்து அவர்களிடம் பிடிபட விரும்பவில்லை.

அப்படியான ஒரு நாளில்…

முதலாம் ஆண்டுப் பரிட்சைக்குப் படித்து விட்டு மாலை ஆறுமணி போல் யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டுக்கு வந்தேன்.  நாமிருந்த வாடகைக் கொட்டில் அரைவாசிக்கு மண்ணால் மதில் கட்டப்பட்டு அதற்குமேல் தென்னோலைகளால் மறைக்கப்பட்டு தகரத்தினால் கூரைபோடப்பட்டிருந்தது.  ஒரு பக்கம் சரிந்த கூரையின் கீழ் தாழ்வாரம். மறுபக்கம் சரிந்த கூரையின் கீழ் இரண்டு அறைகள். ஆனால் அதில் ஒரு அறை மட்டுமே பாவனைக்கு ஊகந்தது. அதற்குள் தான் இரவு நித்திரை. தாழ்வாரத்தின் முடிவில் பனை மட்டைகளால் நிரைக்கு அடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட குசினி.

இந்த வாடகை கொட்டில் பாலாலி வீதிக்கும் கோயில் வீதிக்கும் இடையில் இருந்த புதிய சிவன் வீதியில் இருந்தது. இந்த வீதி இரண்டு கோயில்களுக்கு இடையில் செல்கின்ற சிவன் வீதியில் ஆரம்பித்து பருத்துறை, வைமன், கந்தர்மட வீதிகள் சந்திக்கின்ற இடத்திலுள்ள பாரதியார் சிலையின் முன்னால் போய் ஏறுகின்றது. ஆட்டோக்களும் சைக்கிள்களும் மட்டுமே போகும் சிறிய வீதி. மற்றும்படி மனிதர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.  குறிப்பாக இந்தக் காலப் பகுதியில் போராளிகள் பிரதான வீதிகளைப் பயன்படுத்தாமல் இந்த வீதிகளால் கடந்தும் இங்குள்ள வீடுகளின் வளவுகளுக்குள்ளும் ஒழிந்துமிருப்பார்கள். இவ்வாறுதான் இந்திய இராணுவத்திற்கும் அவர்களுடன் இயங்கும் தமிழ் குழுக்களுக்கும் தெரியாமல் நடமாடுவார்கள்.

நான் வாசலில் வர தாழ்வாரத்திலிருந்து வீதியை எட்டியெட்டிப் பார்த்துக் கொண்டிருந்த  அம்மா, “ஐந்து மணிக்கு வேலை முடிந்து வரவேண்டிய தங்கச்சி இன்னும் வரவில்லை. போய் பார்த்துவிட்டு வா என்றார்.”  தங்கச்சி படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வேலைக்கு போக ஆரம்பித்திருந்தார்.  “சரி”  எனச் சொல்லிவிட்டு சிவன் வீதியால் பருத்தத்துறை வீதியை நோக்கி நடந்தேன். வழமைக்கு மாறக வீதியில் ஒருவரும் இருக்கவில்லை. வீட்டிலிருந்து சிறிது தூரம் தான் சென்றிருப்பேன். “ஸ்ட்டொப் ஸ்டொப்” என்ற சத்தம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வந்தது.. “ஆ இன்டைக்கு மாட்டுப்பட்டேன்” என மனதிற்குள் நினைத்துக் கொண்டு நின்றேன். பூவரச மரங்களின் பின்னாலும் வேலிகளின் பின்னாலும் ஒழிந்திருந்த இந்திய இராணுவ கூர்க்காக்கள் துப்பாக்கிகளை நீட்டியபடி என்னை நோக்கி வந்தார்கள். துப்பாக்கியால் “கையை உயர்த்து” என்று சைகை செய்தபடி ஆங்கிலத்தில் கத்தினார்கள்.
“எங்கே போறாய்” என்றார்கள். “தங்கச்சியை காணவில்லை பார்க்கப் போகின்றேன்” என்றேன். “நீ பொய் சொல்கின்றாய்” என்றார்கள்.
நான் “இல்லை” என்றேன்.  அவர்கள் “பொய்” என்றார்கள். அப்படியே சில நேரம் நானும் அவர்களும் எமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கதைத்தோம். பின் எனது பேச்சைக் கேட்காது தமது கையிலிருந்த வயறால் அடித்து கொண்டு ஆடு மாடுகைள அழைத்துக் கொண்டு போவது போல் பருத்துறை வீதியை நோக்கி அழைத்துச் சென்றார்கள். எனக்கு ஒரு புறம் கோவம் பொத்துக் கொண்டு வந்தாலும் அவர்கள் கையிலிருந்த துப்பாக்கியினால் மெளனமாக இருந்தேன். துப்பாக்கிகளுக்கு முன்னால் நமது சொற்கள் பலமிழந்த காலங்கள் அவை.

சந்தியில் ஏற்கனவே பலர் குந்தி வைத்திருக்கபட்டிருந்தனர். ஆனால் பருத்தித்துறை வீதியின் மற்றப் பக்கம் வைமன் வீதியில் பல மனிதர்களை இந்தப் பக்கம் வர விடாது இராணுவம் தடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் குந்தியிருந்தவரிடம் “என்ன நடந்தது” என தாழ்ந்த குரலில் கேட்டேன். “புலிப் பொடியன் ஒருவன் இதற்குள் ஓடினவனாம். அவனைப் பிடிப்பதற்காக சிவன் வீதியின் அரைவாசித் தூரதிற்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீடிர் ஊடரங்கு சட்டத்தை அறிவித்து வருவோர் போவோரை பிடிக்கின்றார்கள்” என்றார். அதனால்தான் இந்த வீதிக்குள் புதியவர்கள் வராமல் இராணுவம் ஆரம்பத்திலையே அவர்களை வீதியின் மறுபுறம் தடுத்து வைத்துள்ளார்கள் என்பது புரிந்தது. இந்த விசயம் தெரியாமல் வந்த என்னைப் போன்றவர்களைப் புலியென சந்தேகப்பட்டு பிடித்து வைத்துள்ளார்கள். சரி இனி என்ன செய்வது நடப்பது நடக்கட்டும் என்று இருந்தேன். தங்கச்சியை வைமன் வீதியில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டேன். அவர் என்னைக் கண்டிருப்பார். ஊடரங்கு நீங்க அவர் போய் வீட்டில் சொல்வார் என நினைத்தேன்.

எங்களை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். ஆனால் எங்கு கொண்டு செல்கின்றார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது இருட்டியும் விட்டது.  எங்கே கொண்டு செல்கின்றார்கள் என்பதை கவனிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் வாகனம் ஒரு வீட்டின் முன்னால் நின்றது. அனைவரையும் இறக்கி உள்ளே கொண்டு சென்று ஒரு அறையில் அடைத்தனர். அந்த அறையில் ஏற்கனவே சுவரில் சாய்ந்து கொண்டு அதற்குப் பாரமாக சிலர் இருந்தனர். நாமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு சுவரைத் தாங்கிப் பிடித்தோம். அதுவோ நீங்கள் இல்லாவிட்டாலும் நான் உறுதியுடன் நிற்பேன் என்பதுபோல எங்களைப் புறக்கணித்தது. இரவுச் சாப்பாடும் தரவில்லை. வாழ்வு இருண்டதாக நிச்சயமற்றதாகத் தெரிந்தது. நித்திரை கொள்ளப் பயமாக இருந்தது. ஆனால் அதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை. நாம் விரும்பாவிட்டாலும் நித்திரை நம் அனைவரையும் ஆட்கொண்டது. எப்படியோ அன்று இரவை கடத்திவிட்டோம். இல்லை. அது தானாகவே கடந்து சென்றது.

காலையில் தமிழ் பொடியன்கள் சிலர் வயரால் அடித்து எங்களை எழுப்பினார்கள். தேநீரும் சப்பாத்தியும் தந்தார்கள். அறைக்குள்ளையே இருந்தோம். விசாரணைகள் என்று ஒன்றுமில்லை. இந்த முகாமில் இந்திய இராணுவத்துடன் டெலோவினர் இருக்கின்றனர் என்பதை அறிந்தோம். இப்படியே நாட்கள் கடந்தன. வாழ்வு இருண்டதாக நம்பிக்கையற்றதாக இருந்தது. அம்மா எங்கே எல்லாம் என்னைத் தேடுவார் என்ற நினைவு வந்துபோகும். இரவில் கத்தும் சத்தங்கள் கேட்கும். பயம் உருவாகும். பின் அமைதி. அந்த அமைதியில் நித்திரை ஆட்கொண்டுவிடும். இப்படியே எந்த நாட்கள்? எத்தனை நாட்கள்? என்று ஒன்றுமே தெரியாமல் இருந்தோம்.  ஒரு நாள் நீ விட்டுக்குப் போகலாம் என வெளியே விட்டார்கள். வெளியே வந்தபோதுதான் ஒரு வாரம் கடந்து போயிருப்பதும் நாமிருந்தயிடம் மானிப்பாய் என்பதும் தெரிய வந்தது. கையில் காசுமிருக்கவில்லை. அங்கிருந்து நடந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

சில குடும்பங்கள் இவ்வாறு தமது பிள்ளைகள் பிடிபட்டால் தம்மிடம் உள்ள சொத்துக்களை விற்று கடன் வாங்கி வெளிநாட்டுக்கு இல்லாவிட்டாலும் கொழும்புக்காவது உடனே சுடச் சுட அனுப்பினார்கள். அம்மாவிடம் விற்பதற்கும் ஒரு சொத்தும் இருக்கவில்லை. அந்தளவு கடனை நம்பி தரவும் ஒருவருமிருக்கவில்லை. அப்பாவும் கொழும்பில் என்ன செய்கின்றார் என்று தெரியவில்லை. இப்பொழுது வேறு ஒரு இயக்கத்துடன் தொடர்பாக இருக்கின்றார். எனக்கும் அவ்வாறு ஒடுவதற்கு விருப்பமிருக்கவில்லை. ஆகவே வழமைபோல மீண்டும் எனது படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

சில வாரங்களின் பின்….

இக் காலங்களில் கந்தன் கருனை வீட்டில் ஈபிஆர்எல்எவ் இயக்கம் முகாமிட்டிருந்தது. இந்த வீட்டுக்கு முன்னால் இருக்கின்ற கோவில் வீதியில் தடைகளை ஏற்படுத்தி அந்த வீதியால் சைக்கிளில் போவோரை சில நேரம் இறங்கி நடக்கச் சொல்வார்கள். அல்லது தடைகளில் பிரேக் போட்டு மெதுவாக வளைந்து வளைந்து செல்ல வேண்டும். அவ்வாறு போகின்றவர்களில் தமக்கு சந்தேகமானவர்களை அவர்கள் பிடித்துக்கொள்வார்கள்.

ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் இந்த வீதியால் இரவுகளில் படிக்கின்ற வீட்டுக்கு நான் செல்வேன். அவ்வாறு கடக்கும் பொழுதெல்லாம் அவர்களைப் பார்ப்பேன். அவர்களது கடந்த காலத்தை நினைத்துப் பார்பேன். உண்மையில் மனம் தன் பாட்டுக்கு இதனைச் செய்யும். கடந்த கால நினைவுகள் என் மனதில் திரைப்படமாக ஓடும்.

ஈபிஆர்எல்எவ்புடன் ஏதோ காரணங்களினால் சேர விருப்பமில்லா விட்டாலும் எனக்குப் பிடித்த இயக்கங்களில் ஒன்று அது. ஆர்ப்பாட்டமில்லாதவர்கள். மிகைப்படுத்தல் இல்லை. மக்களில் அக்கறை உள்ளவர்கள் என பல காரணங்கள். இதை எல்லாவற்றையும் விட பத்மநாபா மீது இனம் புரியாத விருப்பமும் மரியாதையும். சில மனிதர்களை தனிப்பட அறியாதபோதும் அவர்கள் மீது இப்படி ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகின்றது. இவற்றுக்கு அப்பாலும் அவர்களைப் பிடித்ததற்கு அவர்களது சிகப்பு நிறம் ஒரு காரணமாக இருக்கலாம். இவ்வாறான ஒரு இயக்கத்தை புலிகள் இயக்கத்தின் தலைமை 1986ம் ஆண்டு மார்கழி மாதம் தடைசெய்து அழித்தார்கள்.

அப்பொழுது நாம் யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பேக்கரி லேனில் வாடகைக்கு குடியிருந்தோம். அன்று இரவு முழுவதும் இருட்டிலிருந்து அழுதேன். அழுதோம். கவலையுடன் இருந்தோம். நாம் அழுவது கூட வெளியே தெரியக்கூடாது எனப் பயந்தோம். புலிகள் இயக்கத்தின் உளவாளிகள் பல உருவங்களில் அன்று அலைந்து திரிந்தார்கள். சுவர்களுக்கும் காது இருந்த காலமது. ஆகவே பலர் இருட்டில் அழுவதற்கும் பயந்தார்கள்.  ஒரு இயக்கத்திற்கு ஆதரவாக இருப்பதற்காக இன்னுமொரு இயக்கத்திற்குப் பயந்தோம். அந்த இரவு மிகவும் பயம் நிறைந்ததாக இருந்தது. தூப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கோட்டைப் பக்கம் இருந்து வரவில்லை. மாறாக அதற்கு எதிர் திசையில் ஆரியக்குளச் சந்திப் பக்கமிருந்து கேட்டன. வாகனங்கள் விரைந்து ஒடுவது மனதில் மேலும் பயத்தை உருவாக்கின. அந்த இரவு நம்பிக்கையிழந்த பாதுகாப்பற்ற எதிர் காலங்களின் வரவாகக் கழிந்தது.

dr.Benjaminஈபிஆர்எல்எவ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலரை புலிகள் கைது செய்து வைத்திருந்தார்கள். சில மாதத்தின் பின் கிட்டருக்கு யாரோ கிரனைட் எறிந்தார்கள். இது அவரது காலைப் பறித்துக் கொண்டது. ஆனால் அருணா என்ற புலிப் போராளி இதைச் செய்தது ஈபிஆர்எல்எவ் அங்கத்தவர்கள் என நம்பி தாம் கைது செய்து கந்தன் கருனையில் அடைத்து வைத்திருந்த 53  பேரை சுட்டுக் கொன்றதாக செய்திகள் பரவின. அதில் நாம் மிகவும் மதித்த நமது தந்தையின் நண்பரும் அட்டன் ஹைலன்ஸ் கல்லுரியில் நான் படித்தபோது  எனது சிரேஸ்ட மாணவருமாக இருந்த பெஞ்சமின் என்ற ரவி உட்ப பலர் கொல்லப்பட்டதைக் கேட்டு மீண்டும் அழுதேன். அழுதோம். இப்படி பலரால் மதிப்பும் மரியாதையும் அன்பும் வைத்திருந்த பலர் கொல்லப்பட்டார்கள். கவலையில் கழிந்தன கணங்கள். ஆனால் சில காலத்தின் பின்பு இவர்களை எல்லாம் நாம் மறந்துபோனோம்.

இப்பொழுது புலிகள் மட்டுமே முன்னணியில் நின்று போராடிக் கொண்டிருந்தார்கள். இந்திய இரணுவம் வந்தது. கொஞ்ச நாளிலையே புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் சண்டைமூண்டது. புலிகள் காடுகளுக்குள் விரட்டப்பட்டார்கள். இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடன் ஈபிஆர்எல்எவ், டெலோ, ஈஎன்டிஎல்எவ் போன்ற இயக்கங்கள் மீண்டும் வந்து முகாமிட்டு புலிகளைப் பிடிப்பதற்கு  துணை புரிந்தார்கள். இவர்களுக்குப் புலிகள் மேல் இருந்த கோவத்தினால் அவர்களை மீளப் பழிக்குப் பழி வாங்கினார்கள். மிக மோசமாகச் செயற்பட்டார்கள். நான் முன்பு பார்த்த மதித்த ஈபிஆர்எல்எவ் இல்லை இவர்கள். அன்று சாதாரணமானவர்களாக இருந்தவர்கள் இன்று பயங்கரமானவர்களாகத் தோன்றினார்கள். கொலை வெறியர்களாக இருந்தார்கள். புலிகளுக்கு தாம் சளைத்தவர்கள் இல்லை என நிறுபித்தார்கள். எதற்காக புலிகளை வெறுத்தேனோ அப்படி இவர்களும் இருந்தார்கள். ஆகவே இப்பொழுது இவர்களையும் நான் வெறுத்தேன். இப்படி ஒரு இயக்கத்திற்கு பத்பநாபா இப்பொழுதும் தலைவராக இருக்கின்றாரே எனக் கோவம் எழுந்தது. பெஞ்சமின் போன்றவர்கள் இப்பொழுது இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. மரணம் ஒருவருக்கு எப்பொழுது எப்படி நிகழ்கின்றது என்பதைப் பொறுத்து அவர் மீதான நமது பார்வைகள் மாறுபடுகின்றன என்பதை நினைக்க வியப்பாக இருந்தது.

புலிகளின் தலைமை (ஆகக் குறைந்தது எனக்கு) நம்பிக்கை துரோகம் செய்யவில்லை. ஏனெனில் புலிகளின் தலைமையை (ஒருபோதும்) (இறுதிவரை) நான் நம்பவேயில்லை. (ஆகவேதான் இறுதியாக நடைபெற்ற சம்பவங்களும் ஆச்சரியப்படுத்தவில்லை. புலிகள் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் தான் அது ஆச்சரியமானது.) ஆனால் ஈபிஆர்எல்எவ் செய்தது நம்பிக்கை துரோகம். ஏனெனில் அவர்களை நான் நம்பினேன். (இப்படித்தான் ஈபிஆர்எல்எவ்யை வெறுத்த பலர் புலிகளை காலம் காலமாக நம்பியிருந்தனர்.) இந்திய இராணுவத்துடன் வந்ததுகூட தவறில்லை. ஆனால் வந்தபின் என்ன செய்தார்கள் என்பது தான் முக்கியமானது.  அவர்கள் நியாயமாகவும் மக்களின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்தும் செயற்பட்டிருந்தால் இறுதியாக நடந்த மாபெறும் அழிவைக்கூடத் தடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் மக்களை எதிரிகளாக்கியதுடன் புலிகளின் ஆதரவாளர்களாக மாற்றினார்கள். இவ்வாறு தமக்கு கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பத்தை அநியாயமாகத் தவறவிட்டுவிட்டார்கள்.

இவர்கள் இன்னுமோரு மோசமான வேலை செய்தார்கள். வடக்கு கிழக்கு மாகாண சபை ஆட்சியை கைப்பிடித்தார்கள். இல்லை வேறு ஒருவரும் போட்டி போடவில்லை என்பதால் இவர்களுக்கே ஆட்சி சென்றது. இதனுடாக தமிழ் தேசிய இராணுவம் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு கட்டாய ஆட்பிடிப்பு செய்தார்கள். இவ்வாறு கட்டாய ஆட்பிடிப்பை ஆரம்பித்து வைத்தவர்களே இவர்கள்தான். இக் காலங்களில்தான்  வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே கொஞ்சம் துணிவுடன் திரிந்தார்கள்.  (மீண்டும் முதலாவது பந்தியை வாசிக்கவும்)

இப்படியான ஒரு நாளில் தான் சிவன் வீதியில் நாம் குடியிருந்த வீட்டிலிருந்து, அம்மாவிடம் சாப்பாடு வாங்கிக் கொண்டு, பரிட்சைக்குப் படிப்பதற்காக நல்லூரடியில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்றேன். புதிய சிவன் வீதியால் வந்து சிவன் வீதியில் வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் செல்ல கோவில் வீதி வரும். அதில் வலது பக்கம் திரும்பி கோவில் வீதியால் சிறிது தூரம் போக கந்த கருனை  இல்லம். இந்த வீட்டின் பின் மதிலுக்குக் பின்னால்தான் நாம் குடியிருக்கும் புதிய சிவன் வீதியிலிருந்த வீடு இருந்தது.

வழமையாக இந்த கோயில் வீதியால் போகும் பொழுதோ, கந்தன் கருனை வீட்டுக்கு முன்னால் இறங்கி நடந்த செல்லும் பொழுதோ, அல்லது தடைகளில் பிரேக் பிடித்து மெதுவாக வலைந்து வலைந்து சைக்கிளில் செல்லும் பொழுதோ கந்தன் கருனையில் காவலுக்கு நிற்கின்ற ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களை கவனிப்பேன். ஒரு காலத்தில் இவர்களுக்காக அழுதேன். பரிதாபப்பட்டேன். எவ்வளவு பண்பானவர்கள் என மதித்தேன். ஆனால் எல்லாவற்றையும தவிடிபொடியாக்கும்படி இப்பொழுது இந்திய இராணுவத்துடன் சேர்ந்து செய்யும் நடடிக்கைகள் இருக்கின்றனவே என பெருமூச்சு விடுவேன். ஒவ்வொரு நாளும் இந்த நேரத்தில் கடந்து போகும் பொழுது இவர்களைப் பார்ப்பதும் பெருமூச்சு விடுவதும் இவ்வாறான எண்ணங்கள் எனது மனதுக்குள் ஓடுவதுமாக இருக்கும்.

ஒரு நாள் அவ்வாறே கடந்து செல்ல முற்படுகையில் அந்த வீட்டில் காவலுக்கு நின்றவர் ஒருவர் என்னைக் கூப்பிட்டார். நான் “என்னையா கூப்பிடிறீங்க” என தெரியாததுபோல் கேட்டேன். “உன்னத்தான் வாடா .. .. மவனே” என்றார். பின் “நீ புலியல்லவா.  உன்னை முன்பு புலிகளின் வானில் கண்டிருக்கின்றேன். எல்எம்ஜி வைத்துக் கொண்டு போறனியல்லலோ” என்றார். இக் காலங்களில் எனக்கு இந்திய இராணுவத்திற்கோ இவர்களுக்கோ பயமிருக்கவில்லை. இவர்கள் மீது ஒரு வகையான கோவம் இருப்பதால் எனது பதிலும் கோவமாக  இறுமாப்பாகத்தான் இருந்தது. இந்த மனிதர் என்னைப் பார்த்து இப்படிக் கேட்டது ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் மறுபக்கம் கோவத்தை உண்டாக்கியது. “இல்ல நான் புலிகளில் இருக்கவில்லை… ” என்றேன்.  அவர் நம்பவில்லை. இன்னுமொருவரிடம் “தோழர்” என அழைத்து பொறுப்பாளரை வரும்படி அழைத்தார்.

பொறுப்பாளர் வந்தவுடன் அவரிடம் ஏதோ இரகசியமாக கூறினார். பொறுப்பாளரும் என்னிடம் வந்து, “நீ என்ன புலியா” எனக் கேட்டார். நான் இல்லை என்றேன். எனது பதிலில் அவருக்கும்  நம்பிக்கையில்லை.  உள்ளே சென்றவர் சிறிது நேரத்தில் வோக்கியில் உரையாடிக் கொண்டு வந்தார். வோக்கியில் பேசியவாரே ஒருவனிடம் “வாகனத்தை எடு” என்று சைகை செய்தார் . வேறு இருவரிடம், “இவனை அசோக்கா ஹோட்டலுக்கு கொண்டு போங்கள்” என்றார். அன்று அசோக்கா ஹோட்டல் தான் பல இளைஞர்களின் விதியை தீர்மானித்தது. பல பெற்றோர்களின் காத்திருக்கும் வாசல்படியானது. அது ஒரு கொலைக்களம் என அழைக்கப்பட்டது.

என்னை வாகனத்தின் பின் இருக்கையில் ஏற்றினார்கள். இரண்டு பக்கமும் இருவர் துப்பாக்கிகளுடன் ஏறிக்கொள்ள நான் நடுவில் இருந்தேன். எனது கைகைளைப் பின்னால் இழுத்துக் கட்டினார்கள். அவர்களது துப்பாக்கியின் முனை எனது வயிற்றின் இரு பக்கமும் குத்திக் கொண்டிருந்தது.  நான் பயப்பிடவில்லை. அவர்கள் மீது அனுதாபப்பட்டேன். ஒரு காலத்தில அவர்களின் அனுதாபியாக இருந்த என்னை இப்படிச் செய்கின்றார்களே என்ற கோவம் எழுந்தது. ஆனாலும் இவர்கள் என்னை என்னவும் செய்ய முடியும்… அப்படித்தான் அவர்கள் செயற்பட்டார்கள். மறுபுறம் என்னை இப்படிக் கொண்டு போவதைப் பார்க்க பகிடியாக இருந்தது. சிரிப்பு வந்தது. ஆனால் நான் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் அமைதியாக  இருந்தேன். அவர்களும் என்னுடன் ஒன்றும் கதைக்கவில்லை. நான் வெளியைப் பார்த்துக் கொண்டு சென்றேன். வாழ்வில் நம்பிக்கையிழந்த மக்கள் சோர்வுடனும் பயத்துடனும் வீதிகளில் நடந்து செல்வதுபோல எனக்குத் தோன்றியது. சில நேரம் இதுதான் நான் இந்த வெளிகளைப் பார்க்கும் கடைசி கணங்களாகவும் இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் அசோக் றோட்டலின் முன்னாலுள்ள இன்னுமொரு கட்டிடத்தின் பின் பக்கமாக வாகனம் சென்றது. என்னை  உள்ளே கூட்டிச் சென்றார்கள். அது ஒரு வீட்டின் பின் விறாந்தை. பலர் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் வரிசையாக உட்காந்து இருந்தார்கள். பக்கத்து அறை ஒன்றிலிருந்து சத்தம் வந்தது. “ஐயோ …. அம்மா” என்ற சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.  சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தேன். விறாந்ததையின் முடிவிலுள்ள ஒரு இடத்தில் வாசல் ஒன்று இருந்தது. அதன் வெளியில் தாழ்வாரம் ஒன்று இருந்தது. அதற்குள்ளே இரும்புக் கம்பிகள் கூரையிலிருந்து நிலத்திற்கு செங்குத்தாகவும் கிடையாகவும் போடப்பட்டிருந்தன.  அந்த கம்பிகளில் சிலரின் கைள்கள் கட்டப்பட்டிருந்தன. அவர்கள் கீழே இருக்கவோ நிமிர்ந்து நிற்கவோ முடியாதவாறு அரைமடியில் நின்றார்கள். அவ்வாறு  நின்று கொண்டிருந்த ஒருவருக்கு பச்சை மட்டையால் ஒருவர் அடித்து கொண்டிருந்தார். அவர் அடித்த அடியில் அடி வாங்கியவருக்கு மலம் வந்தது. அடித்தவர் அங்கு குந்தியிருந்த இன்னுமோரு கைதியை அழைத்து அதை சுத்தம் செய்ய சொன்னார். அதன் பிறகு நான் அந்தப் பக்கம் பார்க்கவேயில்லை. ஆனால் அவர்கள் போட்ட கூக்குரல்களின் சத்தம் தொடர்ந்து என்னைத் தேடி வந்து கொண்டிருந்தன.

அன்றிரவு நாம் குந்தியிருந்த விறாந்தையிலையே நித்திரை கொண்டோம். அடுத்த நாள் ஒருவர் வந்து என்னை விசாரித்தார். “உண்மையைச் சொல்லு” என காலால் உதைத்ததார். நான் அவர்கள் எதிர்பார்க்கும் “உண்மையைச்” சொல்லவில்லை. எனது உண்மை நிலை என்னவோ அதையே சொன்னேன். அது அவர்களைப் பொறுத்தவரை பொய்யான வாக்குமூலம். இவர்கள் புலிகளால் தடை செய்யப்படுவதற்கு முதல் அப்பா இவர்களுடன் வேலை செய்தவர். ஆனால் இப்பொழுது நான் அவரின் மகன் எனக் கூறினால் மேலும் ஆபத்தாக முடியுமோ தெரியாது என நினைத்து அதைக் கூறவில்லை. ஏனெனில் அவர் இப்பொழுது இன்னுமொரு இயக்கத்தில் வேலை செய்கின்றார். ஆகவே என்னைப் பற்றிய விடயங்களை மட்டும் எழுதிக் கொடுத்தேன். பிடிபடுகின்ற ஒவ்வொருவரும் தாம் தப்பிப்பதற்காக தம்மில் பிழையில்லாதவாறு நியாயப்படுத்தியே தமது வாக்குமூலத்தை எழுதுவார்கள் என்பதைக் கைது செய்பவர்கள் அறிவார்கள். யாரும் யாரிலும் நம்பிக்கையற்ற காலங்கள். ஆனாலும் பிடிபட்டவர்களுக்கும் வேறு தெரிவில்லை. தப்பிப்பதற்கு எது பொருத்தமான வழியென நாம் உணர்கின்றோமோ அதை மட்டுமே பின்பற்ற வேண்டிய தருணங்கள் இவை.

அம்மாவுக்கு எனது சின்னக் காலத்திலிருந்து பிரச்சனைதான். பத்து வயசிலையே கோயிலுக்குப் போவதாக கூறிவிட்டு நண்பர்களுடன் விளையாடச் செல்வேன். அப்படியே அவர்களது வீட்டிலும் நித்திரை கொண்டுவிடுவேன். நண்பர்களின் வீடு இருப்பதோ இரண்டு மூன்று மைல்களுக்கு அப்பால். அம்மாவுக்கு தெரியாது எந்த நண்பருடன் எங்கே நான் தங்கியிருக்கின்றேன் என. ஆனால் எப்படியோ கண்டுபிடித்து அதிகாலையிலையே என்னை அழைத்துப் போக வந்து விடுவார். ஒரு நாள் வந்ததும் வராததுமாக முதலில் “பளார்” என்று ஒரு அறை விழுந்தது. அதன் பிறகுதான் விசாரிப்பு. அம்மாவுக்கோ அவரின் மனச்சுமை. என்னை அடித்ததன் மூலமாக அதை அவர் தீர்த்துக் கொண்டார். எனக்கு நண்பர்களின் விட்டாருக்கு முன்னால் அடித்தது வெட்கமாக இருந்தது. ஆனால் சிறுவனான எனக்கு அதை தடுக்கும் அதிகாரம் இல்லை. பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

அன்றுபோலவே இன்றும் காலையில் நான் வரவில்லை என நினைத்து அம்மா பயந்து விட்டார். எங்கே போய்த் தேடுவது? யாரிடம் கேட்பது? ஒன்றும் தெரியாது. ஆகவே பல்கலைக்கழத்திற்குச் சென்று முறையிட்டார். இவ்வாறு மாணவர்கள் யாரும் காணாமல் போனால் பல்கலைக்கழகமும் முதலில் முறையிடும் இடம் அசோக்கா ஹோட்டல்தான். அவர்கள் ஒரு வாரத்தின் பின்பு நான் இருப்பதாக அறிவித்தார்கள். அதன் பின்பு அம்மாவும் பேராசிரியர் ஒருவரும் வந்து என்னை ஒரு நாள் பொறுப்பெடுத்தார்கள்.

என்னைப் போன்றவர்களுக்கு (ஏழையாக இருந்தாலும்) பல்கலைக்கழக மாணவராக இவ்வாறான வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் பலருக்கு இவ்வாறான வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாமையினால் காணாமல் போனார்கள். அல்லது தேசிய இராணுவமாக ஆயுததாரிகள் ஆக்கப்பட்டார்கள். ஆனால் பின்பு புலிகளின் கைகளில் அதிகாரம் கிடைத்தபோது இவ்வாறானவர்களும் துரோகியாகப் பலியானார்கள் என்பது துயரமானது.

அவர்கள் புலிகளை  தேடியபோது புலியாக சந்தேகப்படப்பட்டு மூன்று முறை கைது செய்யப்பட்டேன். பின் புலிகள் அவர்களைத் (“துரோகிகளைத்”) தேடியபோது (அந்தப் பட்டம் எடுக்காமல்) தப்பிக்க வேண்டியிருந்தது.

புலிகள் தேடியபோது: நான் ஒரு துரோகி? அடுத்த பதிவில்…

மீராபாரதி

பி.கு”

1.சித்திரை 13ம் திகதி கந்தன் கருணை படுகொலை நினைவு நாள்.
2.புலிகளையோ அல்லது சக இயக்கத்தவரையோ பயங்கரவாதிகளாகவோ பாசிஸ்ட்டுகளாகவோ அரக்கர்களாகவோ நான் பார்க்கவில்லை. ஆனால் இவர்கள்  பயங்கரமான வன்முறையாளர்களாக இருந்தார்கள். இதற்கு காரணம் நம் சமூகத்தில் இருந்த வன்முறை கலாசாரமும் சமூக உளவியலும் என்றே நினைக்கின்றேன். ஆகவே யாரையும் இவ்வாறு முத்திரை குத்துவதில் உடன்பாடில்லை. மேலே உள்ள பென்ஞமினின் அஞ்சலி துண்டுப்பிரசுரத்தில் அவ்வாறு எழுதப்பட்டிருப்பதற்கு நான் பொறுப்பல்ல.
நான் ஒரு புலி… பகுதி 1 http://tinyurl.com/p2x5bxb

நான் ஒரு புலி…. உ…. தூ…ஒன்று – பகுதி 2 http://tinyurl.com/nub5r7y

நான் ஒரு புலி…. உ…. தூ… ஒன்று – பகுதி 3 http://tinyurl.com/kdoojkg

நான் ஒரு புலி…. உ…. தூ… ஒன்று – பகுதி 4 http://tinyurl.com/krvtnk2

நான் ஒரு புலி…. உ…. தூ… ஒன்று – பகுதி 5 http://tinyurl.com/m9yfdee
நான் ஒரு புலி… பகுதி 2 http://tinyurl.com/oynzew6

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: