Posted by: மீராபாரதி | April 10, 2016

கங்கு: எது எனது குரல்?

கங்கு தொடர்பான விமர்சனங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்.DSC04797-XL

எனது பதில்களை வாசிப்பதற்கு முதல் பின்வரும் இணைப்பிலுள்ள அரங்க அளிக்கையை ஒரு தரம் பார்த்துவிட்டு உங்கள் கேள்விகளை கேளுங்கள். அதன்பின் எனது கேள்விகளையும் தொடர்ச்சியாக அதற்கான பதில்களை வாசியுங்கள். இதுவே பயனுள்ள வழிமுறையாகும். இதற்குமாறாக எனது கேள்விகளையும் பதில்களையும் வாசித்தபின் அரங்க அளிக்கையைப் பார்த்தீர்களானால் உங்களின் அகத் தேடலுக்கான சாத்தியமில்லாது போய்விடயலாம். மேலும் அளிக்கை தொடர்பான சார்பு நிலை ஏற்பட சாத்தியமுள்ளது. ஆகவே தவிர்ப்பது நல்லது.

கங்கு தனலாய் தகிக்கும் மனிதர்களின் வாழ்வின் ஒரு துளி!

கங்குஎமது அரங்க அளிக்கையை எவ்வாறு அளிப்பது என்பதில் மிகவும் கவனமாகவும் பொறுப்புணர்வுடனும் வருகை தந்தோரை மதித்தும் செயற்பட்டோம். ஆகவேதான் அரங்க அளிக்கையின் ஆரம்பத்தில் எந்தவிதமான விளக்கங்களையும் வழங்காது நேரடியாக அளிக்கைக்கு சென்றோம். அவ்வாறு ஆரம்பத்திலையே விளக்கங்களை அல்லது நோக்கங்களை அளிப்பது பார்வையாளர்களிடத்தில் சில எண்ணங்களை ஏற்கனவே விதைத்துவிடலாம். இது அரங்க அளிக்கையை முழுமையாக தமது பார்வையினுடாக அனுபவிப்பதற்கு தடையாக இருக்கலாம். இதற்குமாறாக நமது அரங்க அளிக்கையினுடாகவே நாம் என்ன சொல்கின்றோம் என்பதைப் பார்வையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அரங்க அளிக்கையின் இறுதியில் விரிவான உரையாடலை செய்வதற்கு நேரம் போதாமையினால் இவ்வாறு எழுத வேண்டி ஏற்படுகின்றது. மேலும் மேடையில் உரையாற்றுவதைவிட எழுதுவது எனக்கு இலகுவானது. இனி அரங்க அளிக்கை தொடர்பான விளக்கத்திற்கு செல்வோம்.

DSC04706-Lதாய் வழி அல்லது அதற்கு முன்பான ஆதிகால கம்யூனிச சமூகத்தில் மனிதர்கள் மாசற்றவகையில் (unpolluted) சுதந்திரமாக வாழ்ந்திருக்கலாம் என்பது நாம் அறிந்த வரலாறு. இதைக் குறிப்பதற்குத்தான் ஒரு பெண்ணினதும் ஆணினதும் நடனத்தை அமைத்திருந்தோம். ஆனால் ஆதிகால மக்களை இலட்சிய மனிதர்களாக (Ideal & Romanticize) வெளிப்படுத்தும் நோக்கமிருக்கவில்லை. இருப்பினும் அந்த நடனம் நான் விரும்பிய நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்தவில்லையாயின் அது எனது கலைத்துவ ஆற்றலின்மையின் குறைபாடு எனலாம். மேலும் நடனமாடியவர்களை மாசற்றவர்களாக காண்பிக்க வெள்ளை ஆடையே முதலில் தெரிவுசெய்யப்பட்டது. ஆனால் அந்த நிறத்தைப் பயன்படுத்துவது நமது காலினித்துவ சிந்தனையின் வெளிப்பாடு என்பதால் அதற்கு மாற்றாக கருப்பு நிறத்தை தெரிவு செய்தோம். இந்த நடனம் நன்றாக இருந்ததுடன் அதை ஆடியவர்களும் சிறப்பாகச் செய்தனர் எனப் பலர் பாராட்டினர். இந்த நடனத்தை முதலில் நானே ஆடுவதாக இருந்தது. அவ்வாறு நான் ஆடியிருந்தால் நடனம் தொடர்பாக இந்தளவு நேர்மறையான கருத்துகள் வந்திருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில் விமர்சனங்கள் இவ்வாறு தனிநபர் சார்ந்துதான் முன்வைக்கப்படுகின்றன. இது தூர்ப்பாக்கியமான ஒரு நிலை.

DSC04735-XLஅடுத்த காட்சியில் நடனமாடிய இருவரையும் ஆணாதிக்க, மத, சாதிய, முதலாளித்துவ, இன நிறுவனங்கள் மனிதர்களை ஆதிக்கம் செய்து அவர்களது கருத்துகளை மனிதர்கள் மீது திணித்தனர். மனிதர்களின் இதயங்களையும் யோனிகளையும் ஆண்குறிகளையும் பூட்டுக்களால் பூட்டி அவர்களது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டிப்போட்டனர். தாம் விரும்பியவாறு “நாகரிகமானவர்களாக” மாற்றினர். மேலும் பிற்போக்கான கருத்துக்களால் அவர்களைப் பயமுறுத்தி ஆதிக்கம் செய்தனர். இதனால் மனிதர்கள் தமது காதல் உணர்வுகளையும் காம உணர்சிகளையும் தமக்குள் ஒடுக்குவதனால் தம்மை வருத்திக் கஸ்டப்படுகின்றனர். இவை இவர்களுக்குள் உள முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன. அதேநேரம் வாய்ப்புகளைப் பெற்ற ஆண்கள் அதிகாரங்களைப் பெற்றவர்களாக பொதுவெளிகளில் சுதந்திரமாக திரிய வாய்ப்புகளற்ற ஆண்களும் குறிப்பாக அதிகாரமற்ற பெண்களும் குறுகிய வட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டனர்.

DSC04751-XLஅதிகாரப் படிமுறைகள் உருவாக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மனிதர்கள் வாய்ப்பற்றவர்களாக தமது உணர்வுகளை எண்ணங்களை வெளியில் பேச முடியாதவர்களாக உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாதவர்களாக ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டனர். ஆனால் வசதிகளும் வாய்ப்புகளும் அதிகாரமும் உள்ளவர்கள் இவர்களின் பேச்சாளர்கள் ஆனார்கள். இவர்களும் அதிகார நிறுவனங்கள் தமக்குள் திணித்த ஆதிக்க சிந்தனைகளையும் முரண்பாடுகளையும் தமது உரைகளில் வெளிப்படுத்தினர். மேலும் மற்றவர்களை அடக்கியும் தம்மை ஒடுக்கியும் சமூகத்திலும் தமக்குள்ளும் முரண்பாடுகளை உருவாக்கிக் கொண்டனர். இவ்வாறுதான் நமது சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆறுபேரும் எரிந்து கொண்டிருக்கும் தனலாக புகைந்தனர். அவர்கள் புகைத்தவைதான் வசனங்களாக வெளிவந்தன.

DSC04746-XLஇன்றைய சமூகத்தில் பெண்கள் முன்னேறியிருந்தாலும் இது ஆண்களின் சமூகம் என்பது சந்தேகத்திற்கிடமில்லாதது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு உலகத்தின் எந்த மூலைக்கும் ஆண் பயமின்றி எந்த நேரமும் பயணிக்கலாம். ஆனால் பெண் அவ்வாறு பயணிக்க முடியாது. அவளுக்குள் ஒரு பயம் தயக்கம் விதைக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல எந்த சமூகமும் அவளுக்குரிய பாதுகாப்பை இன்னும் முழுமையாக உறுதி செய்யவில்லை. ஆகவேதான் அவளது வெளிகள் ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது ஒடுங்கியவையாகவும் ஆண்களுக்குப் பின்னால் இருப்பவையாகவும் அரங்க அளிக்கையில் நிலைநிறுத்தப்பட்டன. ஆண்களின் வெளிகள் அகன்றதாயும் அவர்களின் அடையாளமே சமூகத்தின் அடையாளமாகவும் முதன்மையானதாகவும் வெளித்தெரிவதாகவும் அமைக்கப்பட்டது. இந்த அரங்க வெளிகள் சமூக அதிகாரக் கட்டமைப்பின் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டன.

DSC04745-XLபெண்கள் அவர்கள் வெள்ளைப் பெண்களாக இருந்தால் என்ன மத்தியதர வர்க்கப் பெண்களாக இருந்தால் என்ன ஒடுக்கப்பட்ட பெண்களாக இருந்தால் என்ன இன்றும் பொது மற்றும் அக வெளிகளிலும் ஒடுக்கப்படுவதுடன் பாலியல் வன்புணர்வுகளுக்கும் துஸ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக எல்லா வர்க்க மட்டங்களிலும் மத சாதிய இனப் பிரிவுகளிலும் குடும்பங்களுக்குள் நடைபெறும் வன்முறைகளும் வன்புணர்வுகளும் பொதுவில் பேசப்படுவதில்லை. மேலும் ஒரே தொழில் செய்தபோதும் பெண்களுக்கு குறைவான ஊதியத்தையே வழங்குகின்றனர். அதேநேரம் நூகர்வுக் கலாசாரத்திற்கு அவர்களை ஆட்படுத்தி அதிகவிலையிலான பொருட்களை வாங்க ஊக்குவிக்கவும் நிர்ப்பந்திக்கவும் படுகின்றனர்.

DSC04796-XLகுறிப்பிட்ட சில பெண்கள் அதிகாரமுள்ளவர்களாக ஆணாதிக்க சிந்தனைகளைப் பிரதிபலிப்பவர்களாக பிற்போக்கானவர்களாக நுகர்வு கலாசாரத்தால் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இவர்களை நமது வாழ்வில் நாம் சந்தித்திருக்கலாம். உதாரணமாக பெரும்பாலான வெள்ளையினப் பெண்கள் தாம் அறிந்தோ அறியாமலோ வாய்ப்புகளைப் (Privilege) பெற்றவர்களாக இருக்கின்றார்கள். அதில் சிலர் அதிகாரமானவர்களாகவும் வசதிகளும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அதிலும் சிலர் மோசமானவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தமது வாய்ப்புகளை (Privilege)  சரியானது என நியாயப்படுத்தி வாதிடுகின்ற இனவாதிகளாகவும் இருக்கின்றார்கள். இதேபோல ஆதிக்க வர்க்கங்களை, சாதிகளை சேர்ந்த பெண்கள் சுரண்டப்படுகின்ற வர்க்கங்களை ஒடுக்கப்படுகின்ற சாதிகளை சேர்ந்த ஆண்களை விட அதிகாரமானவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு நிலையை இடைவெட்டு அல்லது ஊடாடும் நிலை (intersectionality) எனப் பெண்ணிய கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு மனிதர்கள் இருப்பது அவர்கள் தவறு அல்ல. அவ்வாறுதான் சமூகம் அவர்களை உருவாக்குகின்றது. அதேவேளை இவ்வாறான பெண்களினால் உருவாக்கப்படுகின்ற பிரச்சனைகளை பெண்களின் பிரச்சனையாக பொதுமைப்படுத்துவது தவறானதாகும். இது சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற பெண்களின் நிலையை மறைப்பதும் மறுப்பதுமாகும். இங்கு மீண்டும் அதிகாரத்திலுள்ளவர்களாலும் வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளவர்களாலும் ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் “அபகரிக்கப்படுகின்றன”. இந்த நிலைமை பால், பாலியல், வர்க்கம், சாதியம், மதம் என எல்லா மட்டங்களிலும் காணப்படுகின்றன. இதுவே சமூகத்தில் காணப்படுகின்ற பெரும்பாலான மனிதர்களின் பொதுவான முரண் மற்றும் ஊடாடும் நிலை.

DSC04812-XLஇவ்வாறான ஒரு சூழலில் தனிப்பட்ட ரீதியல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு கங்கு அரங்க அளிக்கையானது எதிர்மறையானதாக இருந்ததில் வியப்பில்லை. ஏனெனில் இவர்கள் தமது அனுபவங்களிலிருந்து மட்டும் கற்றுக்கொண்டு பெண்களுக்கு எதிரான இவ்வாறான முடிவுகளுக்கு வருகின்றனர். ஒவ்வொரு மனிதர்களினதும் அனுபவங்கள் முக்கியமானவை மதிக்கப்பட வேண்டியவை. ஒருவரின் நிலையைப் புரிந்து கொள்ள அவசியமானவை. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஆண்கள் மீது சமூகம் அக்கறை கொள்ள வேண்டும். அதேநேரம் இவர்களின் பிரச்சனைகள் சமூகத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்குப் போதுமானவையல்ல. மேலும் இந்த அனுபவங்களைப் பொதுமைப்படுத்துவது மிகவும் தவறான ஒரு பார்வையாகும். அதாவது குறிப்பான பெண்களினால் ஏற்படுகின்ற பிரச்சனைகளைப் பொதுமைப்படுத்தி பெரிதாகக் காட்டுவதும் பெண்கள் அனைவரும் இவ்வாறானவர்களே என நிறுவ முற்படுவதும் சமூகம் தொடர்பான தவறான பார்வையையே ஏற்படுத்தும். ஆனால் அதிகாரங்களையும் வாய்ப்புகளையும் வசதிகளையும் அதிகமாக கொண்ட ஆண்களும் (பெண்களும்) இதனையே நிறுவ முற்படுகின்றனர். இவை ஏதுவுமற்ற ஒடுக்கப்படுகின்ற பெண்களும் (ஆண்களும்) இவர்களுடன் முட்டி மோதுவது என்பது மிகப் பெரிய சவாலே.

DSC04801-XLஇந்த அரங்க அளிக்கையானது புலத்திலும் புலம் பெயர்ந்த தேசத்திலும் வாழுகின்றவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலையே உருவாக்கப்பட்டது. ஆகவேதான் சில பிரச்சனைகள் புலம் பெயர்ந்தவர்களுக்கு அந்நியமானவையாகவும் “அரைத்த மாவை மீள மீள “அரைப்பதாகவும்” இருக்கின்றன. அதேவேளை அரங்கிற்கு யார் வருகின்றார்கள் என்பதை ஒரு நெறியாளராக நான் கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்.  இதைப் பற்றிய கவனமின்மை எனது தவறே. இதுவே அரங்க அளிக்கை சில பார்வையாளர்களுக்கு அந்நியமானதாக இருப்பதற்கு காரணமாகியிருக்கலாம். ஆனால் புலத்தில் இப்பொழுதும் இதே பிரச்சனைகளை பெரும்பாலானவர்கள் நாள்தோறும் எதிர்கொள்கின்றனர். புலத்தில் வாழ்பவர்களின் வாழ்வைப் புரிந்து கொள்ள செய்வதையும் நம்மை (புலம் பெயர்ந்தவர்கள்) அகம் நோக்கி பார்க்க செய்வதற்குமான ஒரு முயற்சியே இந்த அரங்க அளிக்கையின் நோக்கங்களில் ஒன்று.

இது எனது முதல் அரங்க அளிக்கை என்றபடியால் எல்லாப் பிரச்சனைகளையும் ஒரே அளிக்கையில் கூறுவதற்கு ஆர்வப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. உண்மையில் பல பிரச்சனைகளை முன்வைத்தமைக்கான காரணம் ஆர்வக்கோளாறல்ல. மாறாக மேற்குறிப்பிட்டவாறு சமூகத்தில் காணப்படுகின்ற பல்வேறு புற அக ஒடுக்குமுறைகளையும் மனிதர்கள் தமக்குள் கொண்டிருக்கின்ற முரண்பாடுகளையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு உத்தியாகவே பல்வேறு சமூகப் பிரச்சனைகள் பயன்படுத்தப்பட்டன. ஒருவர் ஒரு இடத்தில் ஒடுக்குகின்றவராகவும் இன்னுமொரு இடத்தில் அல்லது நேரத்தில் ஒடுக்கப்படுகின்றவராகவும் இருக்கின்றார். தன் மீதான ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற போராட விரும்புகின்ற ஒருவர் அதேநேரம் இன்னுமொருவரை ஒடுக்குகின்றவராக இருக்கின்றார். இது சமூகத்தில் காணப்படுகின்ற எல்லாப் பிரிவினர்களுக்கும் பொருந்தும். இந்த முரண்நிலைகளை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இவ்வாறான ஒரு நிலையை இடைவெட்டும் அல்லது ஊடாடும் நிலை (intersectionality) என பெண்ணிய கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர் என்பதை மீள நினைவுபடுத்துகின்றேன்.

Untitledஉதாரணமாக எங்களைப் போன்ற புலம் பெயர்ந்த மனிதர்களைப் பொறுத்தவரை வெள்ளை ஆண்களே அதிகாரமானவர்கள். வசதிகளும் வாய்ப்புகளும் கொண்டவர்கள். ஆதிக்க சாதி ஆண்கள் தமது சமூகத்திற்குள் அல்லது ஊரில் அதிகாரமானவர்களாக இருக்கலாம் ஆனால் புலம் பெயர்ந்த சமூகத்தில் இவர்களும் இரண்டாம் பிரஜைகளே. இப்படிப் பல முரண்பாடுகளுடன் இடைவெட்டி ஊடாடும் நிலையில் (intersectionality) தான் நாம் வாழ்கின்றோம். ஆகவேதான் அதிகாரத்தின் குறியீடான வெள்ளைச் சால்வை வலது புறத்தில் (DR) இருக்கின்ற ஆணிடம் எப்பொழுதும் கழுத்தில் இருக்கின்றது. இடது புறத்தில் மத்தியில் (LC) இருக்கின்ற பெண்ணிடம் எப்பொழுதும் இடுப்பில் இருக்கின்றது. ஆனால் வலதுபுற மத்தியில் (RC) இருக்கின்ற பெண்ணினதும் இடது புறமுமாக (DL) இருக்கின்ற ஆணினதும் சால்வை நேரங்களுக்கு ஏற்ப அதிகாரத்துவமாக கழுத்திலும் அதிகாரத்துவமில்லாமல் இடுப்பிலும் மாறி மாறி வருகின்றது.

ஒரு மனிதரை மதிப்பிடுவதற்கும் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கும் இவ்வாறான பல புற அக முரண்பாடுகளையும் அடக்குமுறைகளின் பல்வேறு படிநிலைகளையும் நாம் விளங்கிப் புரிந்து கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் இதிலிருந்து விடுதலைபெறுவதற்கு சரியான ஒரு பாதையை நாம் கண்டுபிடிக்கலாம். வெறுமனே வெள்ளை கருப்பு புரிதல்கள் பிரச்சனைகளை தீர்க்காது. மாறாக இவ்வாறான பார்வை மீள மீள அநீதியான செயற்பாடுகளுக்கும் தவறான முடிவுகளுக்குமே வழிவகுக்கும்.

DSC07448-L நமது அரங்க அளிக்கையின் இறுதி காட்சியில் மனிதர்களாகிய நாம் தனலாக நெருப்பாக எரிகின்றோம் என்பதைக் காட்டுவதற்கே அனைவரும் சிகப்பு மற்றும் ஒரேஞ் நிறங்களிலான ஆடைகளை அணிந்தோம். மாறாக ஆன்மீக கருத்தை வெளிப்படுத்துவதற்காக அல்ல. தூரதிர்ஸ்டவசமாக தமிழர்களின் மனங்கள் இந்த நிறங்களை ஆன்மீகத்துடன் அடையாளப்படுத்துவதுடன் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இந்த மனநிலை நமது நாடகத்தை தவறாகப் பார்ப்பதற்கும் காரணமாகிவிட்டது. இவ்வாறான ஒரு பார்வை ஏற்படாதவாறு இருப்பதில் நாம் மேலும் கவனமாக இருந்திருக்க வேண்டும். இருப்பினும் இது ஒரு சிக்கலான விடயம். தியானம் நம்மை நமது மனதை துய்மையாக்கும் என்பதைக் குறிக்க முதலில் நாம் இந்த நடனத்திற்கு (மட்டுமல்ல ஆரம்பத்தில் நடனமாடிய இருவருக்கும்) வெள்ளை நிற ஆடைகளை அணிவதாகவே தீர்மானித்தோம். ஆனால் அது கூட நமக்குள் இருக்கும் வெள்ளை என்றால் தூய்மையானது என்ற  காலனித்து சிந்தனை என்பதால் தவிர்த்தோம். இதற்கு மாற்றாக கங்கு தனலாக எரிகின்ற ஒன்று. ஆகவே நெருப்பின் நிறத்தைப் பயன்படுத்தினோம். தூரதிர்ஸ்டமாக அது மதத்துடன் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது. இது எனது தவறா? அல்லது விமர்சகர்களின் பார்வையாளர்களின் தவறா என்பது உரையாடலுக்கு உரியது.

DSC04832-XLஇவ்வாறான சமூக முரண்பாடுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் தியானமோ ஆன்மீக வழிமுறைகளோ தீர்வல்ல. அவ்வாறான ஒரு பார்வையை முன்வைக்குமளவிற்கு சமூக இயங்கியலைப் புரியாதவனல்ல. இருப்பினும் அவ்வாறு வெளிப்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்திய முறையில் உள்ள எனது தவறு என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். அதேநேரம் பார்வையாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் என் மீது இருக்கின்ற முன்மதிப்பீடுகளின் விளைவாகவும் அவ்வாறான எண்ணம் எழுந்திருக்கலாம். மேற்குறிப்பிட்ட ஆடைகளின் நிறங்கள் தொடர்பான விடயத்திலும் இதுவே நடந்திருக்கலாம். என்போல் தியானம் செய்யாத (நானும்) நாத்தீகர் (தான்) ஒருவர் இவர்களின் நண்பராகவும் இருந்து இதே அரங்க அளிக்கையை அளித்திருந்தால் இவ்வாறு ஆன்மீகத்துடன் இணைத்து மதிப்பிடப்பட்டிருக்குமா என்பதும் கேள்விக்குரியது. ஆகவே இவ்வாறான சார்புநிலை விமர்சனங்கள் அளிக்கையின் நோக்கத்தையும் அதன் குறியீடுகளையும் கேள்விக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தாது வெறுமனே என் மீதான முன்மதிப்பீட்டின் விளைவாக எழுந்த எதிர்வினையான விமர்சனங்களோ என சிந்திக்கத் தூண்டுகின்றன.

நாம் ஆதிக்க சக்திகளின் குரல்களிலிருந்து விடுபட்டு நமது குரல்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். இது ஒரு முக்கியமான விடயம். இதற்கு அடிப்படையானது என்னவெனில் நமது சிந்தனைகள் எண்ணங்கள் யாருடயவை என்பதைக் கண்டறிய வேண்டும். சமூகங்களில் இருக்கின்ற ஆதிக்க நிறுவனங்களான ஆணாதிக்க, சமய, சாதிய, முதலாளித்து சிந்தனைகள் நமக்குள் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை இனங்காண்பது முக்கியமானது. இவற்றை ஒவ்வொன்றாகக் களையும் பொழுதான் சரியானதும் நியாயமானதுமான புதிய சிந்தனைகள் பிறக்கும். நமது சொந்தக் குரல்களை கண்டறிவதற்கு நமக்குள் இருக்கின்ற ஆதிக்க சிந்தனைகளை பகுத்தறிவினுடாக கட்டவிழ்ப்பதுபோல (deconstructing thoughts) தியானமும் முக்கியமான ஒரு வழிமுறையாகும். பகுத்தறிவின் வழியானது மட்டுப்படுத்தப்பட்டதுடன் இருதுருவ சிந்தனையாகும். ஆனால் தியானம் அனைத்தையும் முழுமையாகப் பார்ப்பதாகும். இருதுருவ சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. அதாவது நமது (இருதுருவ) எண்ணங்களை சிந்தனைகளை நாமே பிரக்ஞையுடன் பார்க்கப் பழகுவதாகும் (being conscious and aware about our thoughts). இவ்வாறு நமது குரலை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதற்கான ஒரு வழிதான் நமது மூச்சைக் கவனிப்பதாகும்.. மூச்சுக்கும் எண்ணங்களுக்கும் தொடர்பு இருக்கின்றன. மூச்சை தொடர்ச்சியாக கவனிக்கும் பொழுது எண்ணங்கள் நம்மை ஆதிக்கம் செய்யாது. இது உடனடியாக சாத்தியமானதல்ல. ஆனால் தொடர்ச்சியான பயிற்சியில் சாத்தியமாகலாம். ஆனால் தூரதிர்ஸ்டவசமாக இப் பாதையானது ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இது ஆன்மீகமல்ல. இதிலிருந்து விலத்திப் பார்த்தால் இதுவும் ஒரு விஞ்ஞான வழிமுறையாகும். இதுவே தியான வழிமுறையாகும். சமூகத்தின் ஆதிக்க சிந்தனைகள் நம்மை ஆதிக்கம் செய்யாத ஒரு நிலையில் நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு புதிய பார்வைகள் வழிகள் கிடைக்கலாம். இது ஒரு பயிற்சி. இந்தடிப்படைகளில் சமூகத்தினதும் மனிதர்களினதும் பன்முகத் தன்மைகளையும் பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் புரிந்து கொள்வது அவசியமானது..

இறுதியாக நாம் நமது அரங்க அளிக்கையில் சில புதுமைகளை செய்தோம். இவை ஏற்கனவே பல அரங்க அளிக்கைகளில் செய்யப்பட்டவைதான். உதாரணமாக சிலர் சுட்டிக்காட்டியதுபோல நான்காவது சுவரை உடைத்திருந்தோம். பார்வையாளர்களையும் அவர்கள் இருந்த வெளிகளையும் அளிக்கையின் பங்காளிகளாக்கியிருந்தோம். இறுதியாக நெறியாளருக்கு முக்கியத்துமளிக்காது ஒடுக்கப்பட்ட பாத்திரங்களாக நடித்தவர்களுக்கு முக்கியத்துவதை வழங்கி அரங்க அளிக்கையை நிறைவு செய்தோம். ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கப்படவேண்டும் என்பதே முக்கியமானதும் அவசியமானதுமாகும். தூரதிர்ஸ்டவசமாக என் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளும் விமர்சனங்களும் முன்மதீப்பீடுகளும் பழிவாங்கும் மனமும் இந்த அரங்க அளிக்கையின் இவ்வாறான பன்முக தன்மைகளைப் பார்க்கமுடியாது சிலருக்கு மறைத்துவிட்டன. இது தூரதிர்ஸ்டமானது. நாம் இன்னும் வளர்வதற்கு நிறைய உள்ளது.

DSC04789-Lஇவ்வாறு பல காரணங்களைக் கூறுவதனால் கங்கு மிகச் சிறந்த அரங்க படைப்பு எனக் கூறவில்லை. குறைகள் உள்ளன. இக் குறைகள் எந்தவகையிலும் அரங்க அளிக்கையின் முக்கியத்துவதை குறைத்துவிடவில்லை என்ற திருப்தியே இதை நாம் மேடையேற்றியதற்கும் காரணமாகும்.

பங்களித்த விமர்சனங்கள் செய்த கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும் நன்றி பல.

மீராபாரதி

நன்றி படங்கள் இகுருவி ஐயா

தொடர்பான பதிவுகள்
விமர்சனம் 1
விமர்சனம் 2
எனது அனுபவங்கள்
கேள்விகள்

அரங்கு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: