Posted by: மீராபாரதி | January 24, 2016

ஆதிரை: விதையா? வினையா?

DSC04971ஈழவிடுதலைப் போராட்டத்தில் இறுதிவரை பெரும் பங்காற்றியவர்களும் அதிகமாக (கட்டாயமாகப்) பலியாக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் வடக்கு கிழக்கில் சாதியாலும் வர்க்க நிலைகளாலும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட மக்களே. இவர்களுடன் மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்து அகதிகளாக வன்னிப்பிரதேசங்களில் வாழ்ந்த மலையக மக்களும் பாதிப்புக்குள்ளானார்கள். ஒரு புறம் தமிழ் சமூகங்களுக்குள் இருக்கின்ற சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் வர்க்க சுரண்டல்கள். மறுபுறம் தமிழ் சமூகங்கள் மீதான சிறிலங்கா அரசின் இன ஒடுக்குமுறை. இவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்த இந்த மக்கள் 1958ம் ஆண்டுகளிலிருந்து நடைபெற்ற தமிழ் மக்கள் மீதான ஒவ்வொரு தாக்குதல்களின்போதும் (இவை இனக்கலவரம் அல்ல) உள்நாட்டில் பல இடங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெயர்ந்தார்கள். சாதியாலும் வர்க்கத்தாலும் மேல் நிலையில் வாழ்பவர்களைப்போல இவர்களால் புலம் பெயர்ந்து பக்கத்து நாடான இந்தியாவிற்கு கூட போக முடியாது, அதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாதவர்கள். இவர்களின் வாழ்க்கை பொதுவான வரலாறுகளில் மட்டுமல்ல இலக்கியங்களிலும் முக்கியப்படுத்தப்படுவதோ கவனத்தில் கொள்ளப்படுவதோ இல்லை. ஏனெனில் இவர்கள் எல்லாவகையிலும் கீழ் நிலையில் வாழ்கின்ற முக்கியத்துவமற்ற மனிதர்கள். ஆனால் போரில் முன்னிலை அரங்குகளுக்கு மட்டும் முக்கியமானவர்கள். ஆகவேதான் அவர்களின் கஸ்டங்கள் வெளியே தெரிவதுமில்லை. அதைப்பற்றி யாருக்கும் அக்கறையுமில்லை. ஆனால் சயந்தன் அவர்கள் ஒரு படைப்பாளியாக அதை உணர்ந்து பொறுப்புடன் இவ்வாறான மனிதர்களைப் பிரதான பாத்திரங்களாகக் கொண்டு அவர்களின் பார்வையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை ஆதிரை என்ற ஒரு படைப்பாகப் புனைந்துள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எனக் குறிப்பிட்டால் தவறில்லை. இவ்வாறான படைப்புகள் மூலம்தான் இந்த மனிதர்கள் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுகின்றனர் என்றால் மிகையில்லை.imagesங

இவ்வாறான நாவல்களை வாசிக்கும் பொழுது படைப்பாளர் மீது இருக்கும் மதிப்புக்கும் தமது அரசியலுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் அதனுடன் ஒன்றித்தோ அல்லது தள்ளி நின்று எச்சரிக்கையுடனோ வாசிக்கலாம். இவ்வாறு வாசிப்பது படைப்பை ஒரேடியாக புகழவும் அல்லது இகழவும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். இதற்குமாறாக ஒரு படைப்பை படைப்பாக வாசிக்கும் பொழுதுதான் அதனுடன் ஒன்றிக்க முடியும். அனுபவிக்க முடியும். அதனுடன் வாழ முடியும். பல்வேறு உணர்வுகள் உணர்ச்சிகளுடன் நாமும் பயணிக்க முடியும். அவ்வாறு அனுபவித்து வாழ்ந்து முடித்த பின்னர்தான் புறவயமாக நின்று அதை விமர்சிப்பது ஆரோக்கியமாக இருக்கும். அல்லது கருப்பு வெள்ளையாகப் பார்க்கும் மனநிலையையே ஏற்படுத்தும். ஆகவே படைப்பு மற்றும் படைப்பாளர் தொடர்பான எல்லாவகையான முற்கற்பிதங்களையும் ஒரு கணம் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த நாவலை வாசித்தேன். இவ்வாறு வாசித்தபொழுதுகளில் அதனுடன் நானும் வாழ்ந்தேன் என்றால் பொய்யல்ல. அவர்கள் சிரிக்கும் பொழுது நானும் சிரித்து, காதலிக்கும் பொழுது நானும் காதலித்து, காமத்தை வெளிப்படுத்தியபோது அதை நானும் உணர்ந்து, இரகசியமாக எனக்குள் அனுபவித்து, அநியாயம் நடைபெறும் பொழுது நானும் கோபப்பட்டு, துயரும் இழப்புகளும் ஏற்படும் பொழுது நானும் அழுதேன் என்பதே உண்மை.

indexவர்க்க சாதிய ஒடுக்குமுறைகள், போர், விடுதலைப் போராட்டம் என்பவை மட்டுமல்ல இயற்கையும் மனிதர்களைப் படுத்தும் பாடுகளையும், போர் முடிவுற்றதன் பின் ஒவ்வொருவரும் தமது வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், நடைபெறும் மாற்றங்களையும் தனது ஆதிரை நாவலில் வெளிக் கொண்டுவருகின்றார் படைப்பாளர். இந்தப் படைப்பில் நடமாடும் மனிதர்களின் வாழ்வு என்பது நாள் முழுவதும் (அன்று) உழைத்து அன்றே உண்பதற்கானது மட்டுமே. ஆனால் அதிலும் மிச்சம் பிடித்து தமக்கான ஒரு வாழ்விடத்தை சிறு கொட்டிலை அழகாக அமைத்துவிடுவார்கள். இவ்வாறு வன்னியின் காடுகளுக்குள் டேவிட் ஐயா மற்றும் டாக்டர் ராஜசுந்தரம் அவர்களின் முன்னெடுப்புகளால் உருவாக்கப்பட்ட குடியேற்ற திட்டங்களும் அதைச் சூழவுள்ள கிராமங்களும் போருடனும் போராட்டத்துடனும் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன என்பதை விபரிக்கின்றார். இந்த மாற்றங்களுக்குள் அகப்பட்ட மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களும் ஏற்கனவே வன்னியில் வறுமையில் வாழும் குடும்பங்களும் எதிர்கொள்ளும் கஸ்டங்கள் ,வலிகள், இழப்புகள் மிகவும் துன்பமானவை. இவை வாசிப்பவர்களிடம் பல்வேறு உணர்வுகளையும் சிந்தனைகளையும் தூண்டலாம்.images

இந்த நாவலில் காமமும் காதலும் மிக இயல்பாக உயிர்வாழ்கின்றன. எந்தவிதமான பூச்சுக்களும் பூசாது சமூக வாழ்வின் நிழற் கண்ணாடிகளாக வெளிப்படுகின்றன. சமூகங்கள் புறப்பார்வைக்கு மட்டும் முன்வைக்கும் இலட்சிய பாத்திரங்கள் அக சமூகத்திற்குள் வாழ்வதில்லை. மனிதர்கள் போலி வாழ்வு வாழ விரும்புவதில்லை. ஆனால் சமூகம் அவர்களை போலியாகவே வாழ நிர்ப்பந்திக்கின்றது. இதற்கிடையிலான போராட்டமே மனிதர்களின் இன்னுமொரு வாழ்வாகின்றது. லட்சுமணனன் என்ற சிறுவன் பெண் உடல் மீது கொள்கின்ற மோகம், வெள்ளையக்கா, ராணி, சின்ராசு, மணிவண்ணன், சாரங்கன், நாமகள், அத்தார், சந்திரா, சங்கிலி, மீனாட்சி என ஒவ்வொருவர்களுடைய காதலும் காமமும் மிக யதார்த்தமாக வெளிப்படுகின்றன. இவர்களின் வாழ்வை ,காதலை ,காமத்தை எந்தவிதமான விரசமும் இல்லாமல் அழகாகவும் உணர்வுபூர்வமாக படைத்திருக்கின்கிறார். இதை வாசித்தபோது எனது வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்தில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களுடனும் அதனால் ஏற்பட்ட அனுபவங்களுடன் ஒன்றித்துப் பயணிப்பதாக உணர்ந்தேன். என்னை மீளவும் அந்தக் காலத்தில் வாழ்ச் செய்தது. இன்றும் அந்த ஏக்கங்கள் என் ஆழ்மனதில் துயில்கொள்கின்றன என்பதை அறிந்து கொண்டேன். இதுதான் நமது அக சமூகம். புற சமூகம் என்பது நாம் நல்லவர்களாக போடுகின்ற வேடங்கள் மட்டுமே.

12096185_10154278434754951_9002889028969672680_n

இப் படைப்பின் ஒவ்வொரு பாத்திரங்களும் என்னுடன் வாழ்ந்தன. அவர்கள் அவர்களாக மட்டும் வாழவில்லை. எனது வாழ்வில் கடந்து சென்றவர்களாகவும் வாழ்ந்தார்கள். அவ்வாறான ஒருவர்தான் ஆச்சிமுத்து.

DSC00444.jpg

Local Input~ SRI LANKA: 2009 — Captured and dead soldiers of LTTE (Liberation Tigers of Tamil Eelam) . (for Stewart Bell story- sent in by Stew with no real info) /pws

இவரது நடை, உடை, பேச்சு, மற்றும் மனிதர்கள் மீதான அக்கறையும் அன்பு என அனைத்தும் எனது அப்பாச்சியையும் இறுதிப்போரின்போது வன்னியில் உயிரிழந்த இன்னுமொரு அப்பாச்சியையும் நினைவூட்டின. அதேநேரம் மனிதர்களை சந்தேகிக்கின்ற, ஒதுக்கிவைக்கின்ற இராசமணி போன்ற யாழ் உயர்சாதி அதிகாரவர்க்க பெண்கள் பலரையும் பார்த்திருக்கின்றேன். எனது வாழ்விலும் ஒரு ஆரம்பகால வெள்ளையக்கா (மலரக்கா) இருக்கின்றார். பல சாரங்கன்களை கண்டிருக்கின்றேன். மேலும் சரணடையும் போராளிகளின் ஏக்கங்களும் நம்பிக்கைகளும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களும் நமக்குள் குற்றவுணர்வை உருவாக்குகின்றார்கள். கைது செய்யப்பட்டு பேரூந்தில் கைவிலங்கிடப்பட்டு வெளிவந்த படங்களில் இருந்த

DSC00439.jpg

Local Input~ SRI LANKA: 2009 — Captured and dead soldiers of LTTE (Liberation Tigers of Tamil Eelam) . (for Stewart Bell story- sent in by Stew with no real info) /pws

போராளிகள் ஒவ்வொருவரும் சரணடைந்த போராளி விநோதினியாக என் மனதில் வந்தார்கள். புனர்வாழ்வின்(?) பின்பு ஊருக்கு திரும்பும் வெள்ளையன் பாத்திரம் தனது வாழ்வை மீளக் கட்டமைக்க எதிர்நோக்கும் சவால்கள் பல. இது இன்றைய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முக்கியமானதொரு பிரச்சனை. இவையெல்லாம் ஒரு புனைவாக இருப்பினும் இவர்கள் எல்லாம் கற்பனை பாத்திரங்களல்ல. நிஜ வாழ்வில் நமக்கிடையில் வாழும் மனிதர்கள், நண்பர்கள், உறவுகள் எனலாம். இப்பாத்திரங்களின் உறவுச்சங்கிலியை ஆரம்பத்தில் தந்திருந்தமை பயனுள்ளதாக இருந்தது. மேலும் சிலவற்றை தந்திருக்கலாம் எனத் தோன்றியது.

aaa-1024x539ஆதிரை நாவலின் ஒவ்வொரு வசனங்களையும் ஒவ்வொரு பக்கங்களையும் அத்தியாயங்களையும் பகுதிகளையும் வாசித்து முடிக்கும் பொழுது பல்வேறு உணர்வலைகளையும் உருவாக்குகின்றன. குறிப்பாக சில அத்தியாயங்களை முடிக்கும் பொழுது எழுதப்படும் tamils 1இறுதி வசனங்கள் வாசகர்களையே படைப்பாளர்களாக்குகின்றது எனலாம். கவிஞர்கள் இவற்றைக் கவிதைகள் என்பார்கள். ஒரு வாசகராக நான் அதை வாசித்தபின் எனது கற்பனைகள் சிறகடித்துப் பறந்தன. உதாணரமாக, “நாங்களென்ன மனிசரை மனிசர் சுட்டுப் பொசுக்கவோ துவக்கோடை அலையிறம் (167)” “அப்பொழுது முதலை தும்பியாக உருமாறியது (182)” “அய்யா நானும் இந்தியாவில இருந்து வந்தவன்தான் (188)” “காற்றின் திசை திடீரென்று மாறியிருக்க வேண்டும். மழைச் சாரல் கால்களில் தூவியது (381), “மீனாட்சி கடைசிவரைக்கும் அதற்குப் பதில் சொல்லவில்லை (442)” “அவளுடைய காதுக்குள் “நீ துடக்கெல்லோ” என்று கிசுகிசுத்தான்.” அவள் “பொய் சொன்னனான்” (449), “அன்றைக்கு ராணி முகம் மலர்ந்து சிரித்தாள் (494)”, “அதற்குப் பிறகு … மகளை ஒருபோதும் கண்டதில்லை (605)”, “அவர்கள் வேறு கண்ணீரைத் தேடிப் போனார்கள் (637)”. இந்த வசனங்கள் என்னில் ஏற்படுத்திய பாதிப்புகளை விரிவாக்கினால் கதையை சொல்ல வேண்டி ஏற்படுவதுடன் கட்டுரையும் நீண்டுவிடும் (ஏற்கனவே கட்டுரை நீளமானது மட்டுமல்ல கதையைக் கூறுவதில் உடன்பாடுமில்லை.) ஆகவே அதை தவிர்க்கின்றேன். ஆனால் நீங்கள் வாசிக்கும் பொழுது அதை அனுபவிப்பீர்கள் என நம்புகின்றேன்.

12508861_10154479088324951_5101323451880456577_nஇப் படைப்பு பல அத்தியாயங்களை கொண்டது. நாடற்றவன் என்ற தலைப்பில் ஆரம்பித்து ஏதிலி, இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி, இரட்டைப் பனை, ஓயாத அலைகள், புகலிடம், வெற்றி நிச்சயம், சுதந்திரப்பறவைகள், படுகளம், மறியல் கொட்டில், இத்திடிரக்காரி என முடிகின்றது. இத் தலைப்புகளே படைப்பாளரின் அரசியலை ஒரளவு வெளிப்படுத்துகின்றது எனலாம்.
என் வாழ் நாளில் இதுவரை ஒரு தலைவர் எனக்கு கிடைக்கவில்லை. அரசியல் செயற்பாட்டில் ஈடுபட ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு தலைவர்கள் வந்தார்கள். அவர்களை நான் சுவீகரிக்க முதல் அவர்களாகவே நான் அவர்களை விட்டுவிட வழிசமைத்தார்கள். என்னாலும் நான் விரும்புகின்ற ஒரு தலைவராகவும் வரமுடியவில்லை. இவை எல்லாம் (தூர)அதிர்ஸ்டமா என நானறியேன். ஆனால் எனது அப்பாவுக்கு ஒரு தலைவர் இருந்தார். ந.சண்முகதாசன். இவர் மீது அவர் வைத்திருந்த மரியாதையையும் அன்பையும் பற்றையும் நான் அறிவேன். ஒரு சிறு விமர்சனமும் நாம் அவர் மீது முன்வைக்க முடியாது.

இவ்வாறுதான் தமிழர்களுக்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம், எனத் தொடர்ந்து, டெலோவின் சிறி சபாரட்ணம், ஈபிஆர்எல்எப்பின் பத்பநாமா, புளொட்டின் உமாமகேஸ்வரன், ஈரோசின் பாலகுமார் எனப் பல தலைவர்கள் வந்தனர். பின் டக்ளஸ் தேவானந்தா, இப்பொழுது சம்பந்தன், விக்கினேஸ்வரன் எனத் தொடர்கின்றது. ஒவ்வொரு தலைவர்கள் மீதும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் இன்றுவரை மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள். அவர்கள் மீது விமர்சனம் முன்வைப்பதை எதிர்க்கின்றார்கள். அல்லது அந்த விமர்சனங்களை மறுக்கின்றார்கள். அந்தளவுக்கு அவர்களது பாசமும் உறவும் அவர்களது கண்களை மறைக்கின்றன. இவர்கள் அரசியலையும் தனிப்பட்ட உறவுகளையும் கலந்து பார்ப்பதன் விளைவே இது. இந்தடிப்படையில்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது அந்த அமைப்பின் உறுப்பினர்களும் அனுதாபிகளும் அவர்களுடன் வளர்ந்த சிறுவர்களும் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன்.

1933934_10154465276734951_1009601054122817762_n

சயந்தன்

ஆகவே இந்த நாவலின் படைப்பாளரையும் அவர் வாழ்ந்த சூழலையும் கருத்தில் கொண்டு இதைப் புரிந்து கொள்ளகின்றேன். இருப்பினும் இவ்வாறான ஒருவர் தான் அறிந்த உணர்ந்த உண்மைகளையும் அதன் மீதான விமர்சனங்களையும் சுயவிமர்சனங்களையும் வெளிப்படையாக முன்வைக்கின்றார். இதை நாம் நிச்சயமாக வரவேற்க வேண்டும்.மேலும் தனது படைப்பு தொடர்பான வெளிப்படையான விமர்சனங்களை வரவேற்கின்றார். இது பக்குவப்பட்ட ஒரு எழுத்தாளரின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றது. படைப்பாளர்கள் இவ்வாறு இருப்பதே ஆரோக்கியமானது.

1010777_10153232077119951_4571935577547847365_nஒடுக்கும் அரசு ஒடுக்கப்படும் மக்களுக்கு செய்வதையே ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற அமைப்புகளும் செய்யுமாயின் அப்போராட்டமானது தவறான பாதையில் செல்கின்றது என உறுதியாகக் கூறலாம். இவ்வாறான ஒரு போக்கை சகல ஈழ விடுதலை அமைப்புகளும் கொண்டிருந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு தனது போராட்ட தொடர்ச்சியாலும் அர்ப்பணிப்பாலும் மரணங்களினாலும் அதனை மறைத்துவிட்டன. ஆகவே தவறுகள் வெளித்தெரிய வாய்பில்லாமல் போனது. அல்லது அவ்வாறான விமர்சனங்களை எதிர்கொள்வதற்கான வெளியை ஏற்படுத்தவில்லை. ஆகவே விமர்சனங்கள் மக்களின் மனங்களுக்குள்ளேயே நடைபெற்றன. அதனை மிகத் தெளிவாக படைப்பாளர் வெளிப்படுத்துகின்றார். விடுதலைப் போராட்டம் அதை முன்னெடுத்த தலைமைகள் தொடர்பான விமர்சனங்கள் நேர்மையாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இயக்கச் சண்டைகள், முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது, சாதாரண சிங்களவர்கள் மீதான படுகொலைகள் போன்றவை மட்டுமல்ல இன்றுவரை ஈழத் தமிழர்களுக்கு தவறான தகவல்களை வழங்கி தமது தவறை மறைத்த செஞ்சோலைப் படுகொலையின் உண்மையான வரலாற்றையும் பதிவு செய்துள்ளார். மேலும் குறிப்பாக குற்றமிழைக்கப்பட்ட அல்லது தூரோகி என்றழைக்கப்பட்ட ஒருவருக்கு குழந்தைகள் முன் வழங்கப்படும் தண்டனை எவ்வாறான தாக்கத்தை குழந்தைகளில் ஏற்படுத்தும் என்பதையும் உரையாடுகின்றார். ஆனால் நமது போராட்ட இயக்கங்கள் இந்தளவிற்கு நுண்ணுணர்வு கொண்டவர்களாக இருக்கவில்லை. ஏன் இவ்வளவு அனுபவத்திற்குப் பின்பும் நாம் கூட நுண்ணுணர்வு குறைந்தவர்களாக அல்லது அற்றவர்களாகத்தான் இப்பொழுதும் இருக்கின்றோம் என்பது துர்ப்பாக்கியமானது.

12279098_10154362602499951_9183605133083094980_nஎல்லாப் போராட்ட இயக்கத்திற்குள்ளும் இரண்டு விதமான போக்குகளைக் கொண்டோர் இருந்திருக்கின்றார்கள். ஒரு போக்கு மக்களின் மீது மதிப்பு வைத்து போராட்டமே மக்களுக்கானது ஆகவே அவர்களுடன் பண்பான உறவை வைத்திருப்பதுடன் விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு ஒரு மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும் என்பவர்கள். இன்னுமொரு போக்கு ஆயுதம் தரித்தவர்களே அதிகாரமுடையவர்கள். நமக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். நாம் போராடுகின்றவர்கள். மக்கள் எம்மைப் பின்பற்ற வேண்டும் என்பவர்கள். இந்தடிப்படைகளில் சில உறுப்பினர்கள் மக்களுக்கு எதிராக ஆயுதத்தைத் திருப்புகின்றார். ஆனால் இன்னும் சிலர் இறுதிவரை மக்களின் தேவைகளை கவனித்து பூர்த்தி செய்கின்றனர். இன்னுமொரு போராளியோ தன் இயலாமையையும் தவறுகளையும் உணர்ந்து ஒரு குழந்தையிடம் மன்னிப்பு கேட்கின்றார். இவ்வாறான தருணங்கள் உணர்ச்சிமயமானவை. இருப்பினும் போரின் இறுதிக் காலங்களில் நடைபெற்ற கொலைகளை குறிப்பாக நமக்குள் நடைபெற்ற கொலைகளை ஒரு மன்னிப்பில் கடந்து சென்று விடமுடியாது. அதுவும் கிளிநொச்சி பிடிபட்டவுடன் போராட்டம் தொடர்பாக இறுதி அல்லது மாற்று முடிவுகள் எடுக்காது இறுக்கணங்களில் முள்ளிவாய்க்காளில் வைத்து ஆயுதத்தை மெளினித்து சரணடைய எடுத்த முடிவு மிகவும் சந்தர்ப்பவாதமானதாகும். மக்களைவிட இயக்கத்தினது குறிப்பாக தலைமையின் மீது மட்டும் அக்கறை கொண்ட முடிவு அது. இதுவே சிறுவர் சிறுமிகளும் பெண் போராளிகளும் இராணுவத்திடம் உயிருடன் பிடிபடுவதற்கும் அவர்கள் எல்லாவகையிலும் கொடுமைப்படுத்தப்படுவதற்கும் வழிகோலியது. இதுமட்டுமின்றி தமது தவறான முடிவால் தாமே அதற்குப் பலியுமானார்கள். இதற்குப் புலம் பெயர்ந்த இயக்க விசுவாசிகள் கற்பிக்கும் நியாயம் என்னெவெனில் “அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் பொழுது தீர்வு கிடைக்கும் என தலைவர் நம்பினார்” எனக் கூறுகின்றவர்கள் நம்புகின்றவர்கள் இப்பொழுதும் இருக்கின்றார்கள். 1467435_10152411009254951_993819148_nஇதனால், “மேலும் பலர் கொத்து கொத்தாக கொல்லப்படவில்லையே” எனக் கவலைப்படுகின்றவர்களும் உள்ளனர். தாம் பாதுகாப்பாக புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து கொண்டு இப்படியும் மனித மனங்கள் சிந்திக்கின்றனவா என யோசிக்கும் பொழுது கோவமே மிஞ்சுகின்றது. இப்படி ஒரு விடுதலையைப் பெறுவதைவிட அடிமையாகவே வாழ்ந்து செத்துவிடலாம். இவ்வாறான தவறுகளை நாம் புரிந்து கொள்ளாதவரை நமது விடுதலை என்பது ஆதிரை நட்சத்திரங்களைப் போல நம்பிக்கையளித்துக் கொண்டு மிகத் தூரத்திலையே இருக்கும். அதேவேளை ஆதிரை போன்ற போராளிகளின் மரணங்கள் வெறுமனே பலியாடுகளாக மட்டும் தொடரும் என்பது துர்ப்பாக்கியமானது. இது அவர்களது கனவுகளுக்கும் நம்பிக்கைகளும் வாழ்க்கைக்கும் நாம் செய்கின்ற துரோகம் என்றால் மிகையல்ல.1901116_10152679976244951_1623745029_n

ஈழப் போராட்டம் இனவழிப்புடன் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுற்ற பின்னர் பல படைப்புகள் புலத்திலிருந்தும் புலம் பெயர்ந்த தேசங்களிலிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக வன்னி யுத்தம், கடவுளின் மரணம், சேகுரோ இருந்த வீடு, ஊழிக்காலம், அகாலம், உம்மத், கனவுச்சிறை, வேருலகு, ஆறாவடு, கசகறனம், நஞ்சுண்ட காடு, பொக்ஸ்…. இப்படி பல. இந்தப் படைப்புகள் ஒவ்வொன்றும் வெறுமனே புனைவுகள் இல்லை. பல மனிதர்களின் வாழ்வு தந்த அனுபவங்கள், படிப்பினைகள், தேடல்கள், கேள்விகள். அவர்களின் கடந்த கால வரலாறுகள். ஆகவே ஈழத்தில் வாழும் தமிழ் சமூகங்களின் விடுதலைக்காக செயற்படும் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒரு தீர்வை நோக்கி தமது பார்வைகளை முன்வைப்பதற்கு முதல் இப் படைப்புகளை ஒருதரம் என்றாலும் வாசிக்க வேண்டும். இவை நிச்சயமாக ஒரு பார்வையை அவர்களிடம் உருவாக்கும். கடந்த காலங்கள் கசப்பானவை மட்டுமல்ல துன்பமும் துயரமும் வலிகளும் நிறைந்தவை. இவற்றை வெறுமனே அரைகுறை அரசியல் தீர்வுகளுடன் கடந்து செல்ல முடியாது. மாறாக நியாயமான அரசியல் தீர்வு ஒன்றே இதுகாலவரையான அழிவுகளுக்கும் மரணங்களுக்குமான பதிலாக இருக்க முடியும். அந்த தீர்வு நிச்சயமாக ஒற்றையாட்சியின் கீழ் வாழ்வதும் இல்லை அதற்காக தனிநாடும் இல்லை என்பதையே இப் படைப்புகள் ஒவ்வொன்றும் மீள மீள வலியுறுத்துவதாக உணர்கின்றேன்.

12189830_10154319961034951_4226766107597874499_n

மத்தாளன் கடற்கரை

ஈழத் தமிழர்களின் இன்றைய காலம் சுயவிமர்சனம் செய்கின்ற காலம். ஏனெனில் சிறிலங்கா அரசினதும் ஆதிக்க சமூகங்களினதும் சக்திகளினதும் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை கிடைக்குமா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஆகவே போராட்டமானது இன்னுமொரு பத்து அல்லது இருபது வருடங்களில் மீளவும் ஆரம்பமானால் ஆச்சரியமில்லை. ஆனால் அவ்வாறு ஒரு போராட்டம் மீள ஆரம்பிக்கும் பொழுது இன்றைய தவறுகளிலிருந்து அவர்கள் கற்க வேண்டும். அதற்கு இவ்வாறான படைப்புகளே பங்களிக்கும்.

சயந்தன் அவர்கள் மலையக மக்களின் வாழ்வை படைப்பாக்கியிருப்பதையும் சரியான பார்வையில் அவர்களின் பிரச்சனைகளை முன்வைத்திருப்பதையும் மதிக்கின்றேன். வரவேற்கின்றேன். இருப்பினும் இவர்களது பேச்சுவழக்கு, மொழி போன்றவை தொடர்பாக மேலும் கவனம் எடுத்து செயற்பட்டிருக்கலாம் என உணர்கின்றேன். ஏனெனில் ஒரு படைப்பாளர் தான் வாழாத, தனக்குத் தொடர்பில்லாத சமூகங்களின் வாழ்வை குறிப்பாக தான் வாழும் சமூகங்களால் ஒடுக்கப்படுகின்ற ஒரு சமூகத்தின் வாழ்வைப் படைப்பாக்கும் பொழுது அதிகமான பொறுப்பும் அக்கறையும் அவசியமானதாகும். அந்த மக்களின் வாழ்வு, பண்பாடு, கலாசாரம், மொழி, பேச்சு வழக்கு என்பவற்றை விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்து உள்வாங்கிக் கொண்டு படைப்புருவாக்கத்தில் ஈடுபடும் பொழுது அது உயிர்ப்புடன் வரும். இனிவரும் தனது படைப்புகளில் இவற்றைக் கவனிப்பார் என நம்புகின்றேன்.

11750642_10154028013394951_4197317073383838754_nசயந்தன் அவர்களின் ஆறாவடு நாவல் இருபதுகளில் வாழ்கின்ற ஒரு வாலிபனின் இளமைத் துடிப்புப்பான படைப்பு எனின் ஆதிரை மூப்பதுகளில் வாழ்கின்ற ஒருவரின் பன்முகப் பார்வைகளைக் கொண்ட (ஒரளவாவது) பொறுப்புள்ள ஒரு படைப்பாகும். இப்படைப்பானாது மேலும் ஆழமானதாக படைக்கப்பட்டிருக்கலாம். படைப்பாளர் படைப்பின் ஆரம்பத்தில் மிக நிதானமாகவும் ஆழமாக காலுன்றிப் பயணிக்கின்றார். ஆனால் படைப்பின் இறுதியில் சில விடயங்களை நேர்மையாக விமர்சனம் செய்தபோதும் சில விடயங்களை வலிந்து நியாயப்படுத்த முயற்சிப்பதுடன் அவசர அவசரமாக பயணித்தாரோ என்று தோன்றுகின்றது. ஆரம்பத்திலிருந்த நிதானமும் ஆழமும் இறுதியில் காணாமல் போய்விட்டன. ஒரு படைப்பாளி அறுபது எழுபவது வயதுடைய ஒருவரின் வாழ்வனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு, ஒவ்வொரு பாத்திரங்களாக வாழ்ந்து, அவர்களின் உள்ளுணர்வுகளுக்குள் மேலும் ஆழமாகச் சென்று அவர்களின் அக முரண்பாடுகளை விரிவாக வெளிப்படுத்துவாராயின் குறிப்பிட்ட படைப்பானாது பன்மடங்கு உயர்வானதாக அமையும். இது ஒரு தவம்.1005938_10152677429479951_1809919630_n

அவ்வாறான ஒரு படைப்பு மனித சமூகத்திற்கான ஒரு வழிகாட்டியாகவும் செயற்படலாம். ஒரு படைப்பானது குறிப்பிட்ட சமூகத்தின் நிழற் கண்ணாடி போன்றதாகும். இதனுடாக வாசிப்பவர் அல்லது பார்ப்பவர் தனது முரண் நிலைகளை தானே உணரலாம். இது ஒருவர் தனது முரண்களைக் கடப்பதற்கான தேடலை ஊக்குவிக்கலாம். இதுவே ஒரு படைப்பின் மிகப் பெரிய பங்களிப்பாகும். ஆதிரை இப் பங்களிப்பை ஒரளவே செய்கின்றது. இவரது அடுத்த படைப்பு மேற்குறிப்பிட்டவாறான குறைகளை நிவர்த்தி செய்தும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும் வெளிவர வேண்டும் என விரும்புகின்றேன்.ஒடுக்கப்பட்ட மனிதர்களின் குறிப்பாக வன்னியில் வாழ்ந்த மலையக மக்களின் வாழ்வை ஆதிரை எனும் ஒரு படைப்பாகத் தந்தமைக்காக நன்றி கூறுவது எனது பொறுப்பாகும்.
ஆதிரை
இரவில் ஒளிர்கின்ற ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.
ஒரு ஒளி!

12227057_10154335211249951_2101259749673176637_n
https://youtu.be/cUXNVv-nE3U

நன்றி எதுவரை 19
http://eathuvarai.net/?p=5305

நன்றி படங்கள்
சயந்தன் முகநூல், அமரதாஸ், குளோபல் தமிழ் செய்திகள், கூகில்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: