Posted by: மீராபாரதி | December 1, 2015

சிறப்பு முகாம்கள்: தமிழக தமிழ் தேசிய உணர்வாளர்களின் இரட்டை நிலைப்பாடுகள்!

சிறப்பு முகாம்கள்:

தமிழக தமிழ் தேசிய உணர்வாளர்களின் இரட்டை நிலைப்பாடுகள்!

சிறப்பு முகாம்கள் அல்ல சித்திரைவதைக் கூடங்கள்!

12311266_1052525711464198_8211636667500824412_nதோழர் பாலன் அவர்களின் “சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் அறிமுக நிகழ்வை தமிழர் வகைத்துறைவள நிலையம் (தேடகம்) கார்த்திகை மாதம் 29ம் திகதி டொரன்டோவில் நடாத்தியது. வழமைக்கு மாறாக மண்டபம் நிறைந்த கூட்டம். தமிழகத்திலிருக்கின்ற இந்த சித்திரவதை முகாம் எனும் சிறைகளில் இருந்தவர்களும் அவர்களின் உறவினர்களும் அதிகளவில் வந்திருந்தனர்.

பா.ஐயகரன் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். ஜயகரன்இவை அகதிகள் முகாம் எனக் கூறப்பட்டாலும் சட்டத்திற்கு முரணாக குடியேறிவர்கள் என்ற வகையிலையே கணிக்கப்படுகின்றனர். ஆகவே அகதிகளுக்கு உரிய எந்த விதமாக உரிமைகளும் இல்லாமலே இவர்கள் வாழ்கின்றனர். இவர்களின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் ஒரு செயற்பாடே இக் கூட்டமாகும் எனக் கூறினார்.

markஇந்த சிறைகளில் இருந்த மார்க் அன்டணி தனது அனுபவத்தை பகிர்ந்தார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்ற அகதிகளை இரண்டு வகையான முகாம்களில் சிறைவைத்தனர். ஒரு முகாம் குடும்பத்தினருடன் இருப்பவர்கள். மற்ற முகாம் தனி மனிதர்கள். 1990 ஆண்டு அகதியாக கடல் வழியாக வந்த என்னை சந்தேகத்தின் பேரில் கைது செய்து இந்த முகாமில் அடைத்தனர். ஒரு சிறையிலிருந்து இன்னுமொரு சிறைக்கு மாற்றப்பட்டு பயணிக்கும் ஒவ்வொருமுறையும் வாகனத்திற்குள் இருக்கும் நாம் நையப்புடைக்கப்படுவோம். ஒரு முறை டி.ஜே.பி தேவாரம் தலைமையில் இந்த முகாமுக்கு வந்து சிறையிலிருந்தவர்களை மிக மோசமாகத் தாக்கினார்கள். நான் இச் சிறையில் இருந்தபோதுதான் தோழர் பாலன் கைது செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டார். என்னைச் சில காலத்தின் பின் இலங்கைக்கு நாடு கடத்தினார்கள்.

உசாநாடுகடந்த அரசாங்கத்தின் உறுப்பினரும் மனித உரிமையாளருமான உஷா சிறீஸ்கந்தராசா அவர்கள் உரையாற்றும் பொழுது இலங்கையில் மட்டுமல்ல உலகத்தில் பல நாடுகளில் அகதிகள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலர் ஆயுததாரிகள் அல்லது “பயங்கரவாதிகள்” எனக் கருதப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். குற்றம் நிருபிக்கப்பட்ட சதாரண கைதிகளுக்கு கூட பல சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால் இவ்வாறு அகதிகளுக்கு குறிப்பாக இந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டுள்ளன. இன்று தமிழக முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா அவர்கள் ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டு பல செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றார். ஆகவே சிறைவைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையைக் கோரி இவருக்கு நாம் பல கடிதங்களையும் கையொப்பங்களை சேகரித்து அனுப்பினால் அவர் இவர்களின் விடுதலைக்கு வழி செய்வார் என நம்புகின்றேன் என்றார்.

johnமனித உரிமை செயற்பாட்டாளரும் சர்வதேச மன்னிப்புச்சபை உறுப்பினருமான ஜோன் அலெக்ஸ் அவர்கள் தனது உரையில் தான் நீண்ட காலமாக இலங்கை பிரச்சனைகளில் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக அக்கறை கொண்டு செயற்பட்டு வந்தேன். இலங்கை அரசாங்கத்திற்கு பல அழுத்தங்களை கொடுத்திருக்கின்றோம். அதுபோல் இனிமேல் இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழக அரசுக்கு இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக அழுத்தங்களை கொடுக்க செயற்படுவேன் என்றார்.

சேரன்பேராசிரியர் சேரன் அவர்கள் உரையாற்றும் பொழுது இந்த நிகழ்விற்கு உரையாற்ற அழைத்தமை தொடர்பாக மகிழ்ச்சி கொள்ள முடியாது. ஏனெனில் இந்த நூலை வாசிக்கும் பொழுது அந்தளவு கோவம் ஏற்படுகின்றது. இவை சிறப்பு முகாம்கள் அல்ல சிறப்பு சிறைகள். இந்தியா ஒரு விசித்திரமான நாடு. உலகிலுள்ள முக்கியமான ஜனநாயக நாடுகள் பல ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான பட்டயத்தில் கையொப்பம் வைத்துள்ளார்கள். ஆனால் இந்தியா இதில் கையொப்பம் இடவில்லை. ஆகவே அவர்கள் ஐ.நா அகதிகள் பட்டயத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. ஆகவே ஐ.நாவிற்கு இது தொடர்பாக கேள்வி கேட்க அதிகாரமில்லை. அதேவேளை இவர்கள் ஏற்றுக் கொண்ட அகதிகள் தொடர்பாக பாரபட்சமான ;நிலைப்பாடுகளையே கொண்டுள்ளார்கள். குறிப்பாக தீபேத் அகதிகள் பல உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்க வழி செய்துள்ளார்கள். ஆனால் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இவ்வாறான எந்த உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்படவில்லை. இதற்கு மத்திய அரசு மட்டும் பொறுப்பல்ல. மாநில அரசும் பொறுப்பாகும். ஆகவே தமிழக முதலமைச்சருக்கு நாம் அனுப்பும் கடிதங்கள் குப்பைத் தொட்டிகளுக்கே போகும். அதேவேளை தமிழகத்திலுள்ள கட்சிகள் குறிப்பாக ஈழத் தமிழர்களிற்காக குரல் கொடுக்கின்ற மே 17 இயக்கம் மற்றும் நாம் தமிழர் அமைப்பு போன்ற தமிழ் தேசிய உணர்வு கொண்ட கட்சிகள் ஆகியவையும் இவ்வாறான விடயங்களுக்காக குரல் கொடுத்து தமிழக அரசை பகைக்க தயாரில்லை. இது இவர்களின் இரட்டை நிலைப்பாடு ஆகும். மேலும் இவ்வாறான சிறப்பு முகாம்கள் 1990ம் ஆண்டுக்கு முதல் இருந்தே இந்தியாவில் காஸ்மீர் அசாம் போன்ற மாநிலங்களிலும் இருந்து வருகின்றன. இன்று இது போன்று உள் நாட்டு சட்டங்களுக்கு மட்டுமல்ல சர்வதே சட்டங்களுக்கும் கட்டுப்படாத வெளிகளில் பல சிறைக்கூடங்கள் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன என்றார். அகதிகளிலும் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மேற்கு நாடுகளில் வாழ்கின்ற அகதிகள். இவர்கள் எப்பொழுதும் தமது நாடுகளுக்குத் திரும்பிப் போகப்போவதில்லை. ஆனால் தமிழகத்திலிருக்கின்ற ஈழ அகதிகளை தம் நாட்டுக்கு போகச் சொல்கின்றார்கள். இதற்கு ஆதரவாக பலர் செயற்படுகின்றார்கள். ஒரு அகதி தனது நாட்டுக்கு திரும்பிப் போகவேண்டுமா இல்லையா என்பதை தானே தீர்மானிக்கும் உரிமை உடையவர். அந்த உரிமைகூட தமிழகத்தில் வாழ்கின்ற ஈழத் தமிழ் அகதிகளுக்கு மறுக்கப்படுகின்றது என மேலும் கூறினார். இவ்வாறு சிறைகளில் இருக்கின்றவர்கள் தொடர்பாக எந்தவொரு தமிழ் தேசிய உணர்வாளர்களும் கட்சிகளும் தமிழ் தலைமைகளும் அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றார்கள். மேலும் இவர்களின் விடுதலைக்காக வழக்குகளை பொறுப்பேற்க பணம் கேட்கின்றனர். ஆனால் சிறையில் இருப்பவர்களிடம் அந்தளவு பணம் இல்லை. ஆகவே இவர்களின் விடுதலைக்காக ஒரு அமைப்பை உருவாக்கி செயற்படுவது அவசியமானது என்றார்.

கணன்பதினாறு வருடங்கள் தமிழக அகதிகள் முகாமில் வாழ்ந்த கணன் சுவாமி உரையாற்றும் பொழுது 1990ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டுவரை அகதியாக தமிழகத்தில் இருந்தேன். இங்கு வாழ்ந்தபோது அகதிகள் பாடசாலைகளுக்கும் தொழில் செய்வதற்கு மட்டுமல்ல தொலைபேசி எடுக்க கூட வெளியில் செல்லமுடியாதவாறு கட்டுப்படுத்தப்பட்டோம். அகதிகள் முகாமில் நேரத்தை கடத்துவதற்காக சில நேரம் பாட்டும் பாடுவோம். அப்படி ஒரு நாள் ஒருவர் புலிப்பாட்டை மற்றவர்கள் கேட்டு பாடியதற்காக சிறப்பு முகாம் எனும் சிறைக்கு அனுப்பப்பட்டார். பத்பநாமா மற்றும் ராஜிவ் கொலைகளுக்குப் பின்பே இந்தளவு கெடுபிடிகள் நடைபெற்றன. ஆகவே இவ்வாறு நடைபெற்றமைக்கு நமது தவறுகளும் காரணமாகும்.

அகிலன்தமிழகத்தில் அகதியாக இருந்த த.அகிலன் உரையாற்றும் பொழுது நம்பிக்கையுடன் தமிழ் நாட்டின் கரைகளில் கால் பதித்தேன். ஆனால் அங்கு கிடைத்த வரவேற்பு தனது நம்பிக்கைகளை சிதறடித்தது என்றார். ஈழத் தமிழ் அகதிகள் என்ற அடையாளம் ஐரோப்பாவில் வாழும் அகதிகளின் அடையாளமாக மட்டுமே இருக்கின்றது. ஆனால் இந்தியாவில் தமிழகத்தில் இருக்கின்ற ஈழ அகதிகளுக்கு இந்த அடையாளம் இல்லை. மேலும் தமிழகத்தில் பல்வேறு வகையான ஈழ அகதிகள் உள்ளனர். ஆனால் இந்த சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சபிக்கப்பட்டவர்கள். குறிப்பாக செங்கல்பட்டு சிறைக்கு (சிறப்பு முகாமுக்கு) போகும் வழி மட்டுமே உள்ளது. அங்கு போவோர்கள் மீள வருவது கிடையாது. இவர்களைப் பற்றி எல்லாம் தமிழகத்திலிருக்கின்ற ஈழத் தமிழ் தேசிய உணர்வாளர்கள் அக்கறை கொள்வதில்லை. இங்கு நடைபெறும் சித்திரவதைகள் அவர்களுக்கு சித்திரவதைகள் இல்லை. பெண்களுக்கு எதிரான வன்புணர்வுகள் பாலியல் கொடுமைகள் இல்லை. ஆனால் இலங்கையில் சிறிலங்கா இராணுவம் செய்வது மட்டுமே இவர்களது கண்களுக்கு சித்திரவதைகளாகவும் வன்புணர்வுகளாகவும் தெரிகின்றன. இவ்வாறு உணர்வுபூர்வமாக தொடர்ந்தது அவரது உரை. இறுதியாக தனது சிறை அனுபவத்தை முழுமையாக பதிவு செய்யும் படி தோழர் பாலனிடம் கோரிக்கை விட்டார். அதுவே இந்த சிறப்பு சிறைகள் தொடர்பான முழுமையான அனுபவத்தை அனைவருக்கும் கொடுக்கும் என்றார்.

12301553_10156123600755012_4021232982107947633_nஅகதிகள் தொடர்பான விடயங்களில் தனது அமைப்பு சார்ந்து செயற்பட்ட பரதன் கூறும் பொழுது இவ்வாறான நிலைமைகள் 1990களின் பின்பே நடைபெற்றன. அதற்கு முதல் தமிழகத்தில் மிகவும் ஆதரவான நிலையே காணப்பட்டது. ஆகவே இவ்வாறான மாற்றத்திற்கு நமது தவறுகளும் முக்கியமான ஒரு காரணமாகும் என்றார்.

balanஇலங்கையில் வடபகுதியில் கரவெட்டியில் பிறந்த தோழர் பாலன் அவர்கள் 1991ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் கைது செய்யப்பட்டார். இவர் பல குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்டு பல சிறைகளில் அடைக்கப்பட்டார். இறுதியாக இவர் இந்த சிறப்பு முகாம் எனும் சித்திரவதை சிறையில் அடைக்கப்பட்டார். 1997ம் பெப்பிரவரி மாதம் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டபோதும் விடுதலை செய்யாது தடுத்து வைக்கப்பட்டார். 1998ம் ஆண்டு ஏப்பிரல் மாதமே இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு ;விடுதலை செய்யப்பட்டார். இந்த நூலில் இவர் நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் போராளி சிவா, மற்றும் வழக்கறிஞரும் மலையகத்தை சேர்ந்தவரும் பின் இந்தியா சென்று தமிழகத்தில் வசித்தவருமான இ.ரா.சிவலிங்கம் அவர்களின் சிறை அனுபவங்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. வழக்கறிஞர் தோழர் பா.புகழேந்தியின் அணிந்துரையும் உள்ளது. மேலும் இந்த நூலில் இச் சிறைகள், கைதிகள், மற்றும் அகதிகள் தொடர்பான தமிழக கட்சிகளினதும் அதன் தலைவர்களினதும் இரட்டை நிலைப்பாடுகளையும் தொகுத்துள்ளார். மறுபுறம் ஈழத்து அரசியல்வாதிகள் கூட தமிழகத்திற்கு வரும் பொழுது இச் சிறைகள் தொடர்பாகவும் அங்கு வாழும் கைதிகள் அகதிகள் தொடர்பாகவும் தமிழக தலைவர்களுடன் உரையாடுவது மட்டுமில்லை அவர்களை வந்து பார்ப்பதில் கூட அக்கறையில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

balan 1இறுதியாக சிவவதனி அவர்களின் நன்றி உரை இடம் பெற்றது.

தோழர் பாலன் சிறையிலிருந்தபோது எழுதிய கவிதை ஒன்றின் சில வரிகள்….
சிறப்பு முகாமின் சித்திரவதைகளினால்

ஒவ்வொரு நாளும் ஆண்டாய் கழியும்.
அவ் ஆண்டின் நாட்களோ
நீண்டு தெரியும். (12.01.1995)

தமிழகத்தில் செயற்படும் தமிழ் தேசிய உணர்வாளர்களிடம் ஒரு கோரிக்கை.

ஈழத் தமிழர்களின் விடுதலை போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்பு அளிப்பரியது. அதை நாம் என்றும் மறவோம். மதிப்புடன் நினைவில் வைத்திருப்போம்.

இன்று ஈழவிடுதலைப் போராட்டம் ஒரு நிர்க்கதியான நிலையில் இருக்கின்றது. முதலில் ஈழதேசம் மூச்சு விடுவதற்கு ஒரு வெளி வேண்டும். அதன் பின்பே தமது விடுதலை தொடர்பாக அத் தேசமானது சிந்திக்கலாம் செயற்படலாம்.

பங்கு 1தமிழுக்காக ஒரு நாடு வேண்டு எனின் அதற்கான சிறந்த பொருத்தமான இடம் ஈழமல்ல தமிழ் நாடே. ஆகவே ஈழ விடுதலைக்காக போராடுவதற்குப் பதிலாக தமிழக விடுதலைக்காகப் போராடுவதே பொருத்தமானதாகும். அதுகூட இந்தியாவை சிதறடிக்குமானால் இன்று மத்திய கிழக்குபோல் எதிர்காலத்தில் இந்திய உருவாகலாம். ஆகவே மிகவும் நிதானத்துடன் செயற்படவேண்டியது அவசியமாகும்.

sivavathniமேலும் உங்களது போராட்டமானது தமிழக மக்களின் பிரச்சனைகளையே அடிப்படையாகவும் பிரதானமாகவும் கொண்டிருக்க வேண்டும். அதற்காக செயற்பட்டுக் கொண்டே ஈழவிடுதலைக்காக சிறிய பங்களிப்பை செய்வது ஆரோக்கியமான வழிமுறையாகும். இதற்குமாறாக தமிழகத்தில் இருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக மௌனமாக இருந்து கொண்டு அல்லது அதைப் பகுதி நேர போராட்டாமாக முன்னெடுத்துக் கொண்டு ஈழ விடுதலையை பிரதான செயற்படாக முன்னெடுப்பது அர்த்தமற்ற பயனற்ற செயற்பாடாகும். ஆகக் குறைந்தது தமிழகத்திலிருக்கின்ற இந்த சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக் கூடங்களில் அடைபட்டுகிடக்கின்றவர்களின் விடுதலைக்கும் உரிமைகளில்லாது அகதிகளாக தமிழகத்தில் வாழும் மக்களுக்காகவாது குரல் கொடுத்து செயற்படுவீர்களானால் அதுவே பயனுள்ளதாகும். இதற்குமாறாக வெறுமனே ஈழவிடுதலையை மட்டுமே நீங்கள் பிரதானமாக தொடர்ந்து முன்னெடுப்பீர்களானால் அது உங்களது பிழைப்புவாத செயற்பாட்டை வெளிப்படுத்துவதாகும். இது தவறான ஒரு பாதையாகும்.12107718_10156124508445012_2257937387697889223_n

மீராபாரதி

30.11.2015

படங்கள் ஈகுருவி ஐயா

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: