Posted by: மீராபாரதி | November 26, 2015

தமிழ் அரசியல் கைதிகளே: புலம் பெயர்ந்த மக்களை மன்னியுங்கள்.

ஈழத்தின் தமிழ் அரசியல் கைதிகளே!
புலம் பெயர்ந்த மக்களை மன்னியுங்கள்.

jail12_CIகவனிப்பார் யாருமின்றி இலங்கை அரசின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளே! நாளாந்த வாழ்விற்காகப் புலத்தில் இன்றும் போராடும் முன்பு ஆயுதம் ஏந்திய போராளிகளே, உங்களுக்குப் பொது மன்னிப்புக் கிடைக்கிறதோ இல்லையோ உங்களிடத்தில் பொதுமன்னிப்பொன்றை இக்கடித மூலம் கோர விரும்புகிறேன்.
என்னையும் புலம் பெயர்ந்தவர்களையும் தயவு கூர்ந்து நீங்கள் மன்னிக்க வேண்டும். உங்களைச் சிறைகளில் இருந்து விடுவிவிக்கத் தேவையான அழுத்தங்களை வழங்குவதற்குரிய வெகுசனப் போராட்டத்தை நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் முன்னெடுப்பொம் என்று நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது யோசித்திருப்பீர்கள். இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் புலம் பெயர் நாடுகள் பல குளிரில் உறைந்திருந்த போது இங்கே பொறிபறக்க மக்கள் வீதிகளில் இறங்கினார்கள். இறக்கப்பட்டார்கள். அதனையும் நினைத்திருப்பீர்கள். இயக்கத்தைப் பாதுகாக்க, தலைவர்களைப் பாதுகாக்க, திரட்டப்பட்ட கூட்டம் அது. ஆனால் உங்களுக்காகக் ஏன் கூடவில்லை என்பதை விளங்கிக் கொள்ள உங்களுக்கு முடியாமல் இருக்கலாம். ஆம்! அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

sri lankaநீங்கள் உங்கள் உடலையும் உயிரையும் கொடுத்த இயக்கம் இப்பொழுது இல்லை. நீங்கள் ஈழ விடுதலைப் போராட்டம் என்கிற சிதைந்து போன பெரும் வாகனத்தின் ஆணிகள் மட்டுமே. நீங்கள் இன்று உதிர்ந்து கிடக்கிறீர்கள். நீங்கள் உக்கி மக்கிப்போவதையிட்டு யாருக்கென்ன கவலை? உங்களின் தலைவரைப்பற்றியும் ஈழத்தைப் பற்றியும் பேசிப்பேசிக் காலம் கழிக்கும் பல அமைப்புகள் புலம் பெயர்ந்தவர்கள் வாழும் நாடுகளில் உள்ளன. இவை உங்கள் இரத்தத்தில் வளர்ந்த அமைப்புகள். ஆனால் நீங்கள் உங்கள் விடுதலையைக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் போதெல்லாம் இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். வாழ உன்னும் பசியில் உங்கள் வயிறு போடும் சத்தம் சிறைச் சுவரைத் தாண்டிக்கேட்காது. துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டுப் பழகிய காதுகளுக்கு மனித வாழ்வின் வேட்கையின் ஒலி கேட்பதில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமானது உங்களை வைத்து வியாபாரம் செய்ய முடியாது என்பதுதான். உங்களை வைத்து உண்ணா விரதம்தான் செய்யலாம்.

Local Input~ SRI LANKA: 2009 -- Captured and dead soldiers of LTTE (Liberation Tigers of Tamil Eelam) . (for Stewart Bell story- sent in by Stew with no real info) /pws

Local Input~ SRI LANKA: 2009 — Captured and dead soldiers of LTTE (Liberation Tigers of Tamil Eelam) .
(for Stewart Bell story- sent in by Stew with no real info) /pws

சிலநேரம் உங்கள் விடுதலைக்காக நீங்கள் (சிறைகளில் உண்ணாவிரதம் இருந்து) தற்கொலை செய்து கொண்டால் அப்பொழுது இந்த அமைப்புகள் உங்களைக் கண்டு கொள்ளும் என்றும் நினைப்பீர்கள். இங்குதான் நீங்கள் பிழை விடுகிறீர்கள். நீங்கள் முன்பு செய்து கொண்ட தற்கொலைக்கும் இப்பொழுது செய்ய நினைக்கும் தற்கொலைக்கும் வேறுபாடு உள்ளது. இரண்டினதும் வியாபாரப் பயன்பாடுகள் வேறானவை. ஆனால் உங்களுக்கு ஒரு வழியுள்ளது. சிறிலங்காவின் சிறைகளில் உங்களில் எவராவது கொல்லப்பட்டால் அப்பொழுது இத் தமிழர் அமைப்புக்கள் “தடியெடு பொல்லெடு சிங்களவன்கள் தமிழனைக் கொண்டு போட்டாங்கள்” என்று துள்ளிக் குதித்து கடைகளைத் திறக்கத் தொடங்குவார்கள். (உங்களுடைய துர் அதிஸ்டம் சிறைகளில் வைத்து உங்களை உடனடியாகக் கொல்லக் கூடிய அரசாங்கம் இப்பொழுது ஆட்சியில் இல்லை. ஆனால் உங்களைச் சிறுகச் சிறுகக் கொல்லும் அரசாங்கமே இப்போழுதுள்ளது.)release 1
உங்கள் மரணத்தை முன்வைத்து சிலர் தேச விடுதலைக்காகக் குரல் கொடுப்பார்கள். உங்களின் இழப்புச் செய்தி கேட்டதும் பல ஊடகங்கள் புலம் பெயர்ந்த மக்களின் இதயங்களைப் பிழிந்து உணர்ச்சி ஆறுகளை ஓடவிடும். உங்களை மாவீரர் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள். உங்கள் மீதான அன்பு பெருக்கப்படும். இனப்படுகொலை நிகழ்த்திய சிங்களவர்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள். சிகப்புத் தாள்களில் அச்சிடப்பட்ட படங்களில் மஞ்சள் எழுத்துக்களில் எழுதப்பட்ட வீர வசனங்கள் பளீரிடக் கடைகள் தோறும் அஞ்சலிப்பிரசுரங்கள் தொங்கும். சுவரொட்டிகள் ஒட்டப்படும். சிலர் தங்க நகைகளை உங்கள் பெயர்களில் காணிக்கையாக்குவார்கள். உங்களை மாவீரர்கள் எனப் போற்றிக் கொண்டாடுவார்கள். மாவீரர் நாள் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும். ஆனால் இன்று சிறையிலிருந்து நீங்கள் வெளியே வர உங்களைப் பிணையெடுக்க கூட ஒருவரும் இல்லாது இருக்கின்றீர்கள். நீங்கள் வாழும் பொழுது கவனிப்பாரற்று இருக்கின்றீர்கள்.
release 2மாவீரர்கள் அனைவரையும் நெஞ்சில் இருத்தி உண்மையாக உருகும் இதயங்கள் இக் கடிதத்தைப் படிக்க வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்கிறேன்.
images5இதே நேரத்தில் புலத்தில், வடக்கிலோ கிழக்கிலோ, வானம் பார்த்த குடிசையின் ஈர மூலையில் உண்ண ஏதுமில்லாததாலேயே அன்று ஆயுதம் ஏந்திப் போராடிய போராளியும் உண்ணாவிரதமிருந்து கொண்டிருப்பார். தனது நாளாந்த வாழ்வுடன் போராடிக் கொண்டு. உங்களுக்குத் தெரியாததா?

நாங்கள் புலம் பெயர்ந்த மக்கள். புலம் அகமான மக்கள். அகம் புலமான மக்கள். எங்கள் வாழ்வு மிக வேகமானது. நேரப்பற்றாக்குறை கொண்டது. கடன்பட்டு வாங்கிய வீட்டில் உறங்காது, வேலைக்குச் செல்லும் வாகனங்களிலேயே உறங்கி கொண்டு ஓடி ஓடி உழைக்கின்றோம். எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதில் மிச்சமிருக்கின்ற நேரம் கழிந்து விடுகின்றது. இந்த அவதிக்குள் ஒன்றுக்கும் பயனில்லாத உங்களைப் பற்றி கவலைப்பட ஏது நேரம்? நீங்கள் இப்பொழுது கவனிப்பாரற்ற மனிதர்கள். உங்களின் கடந்த காலப் பங்களிப்புகளை எல்லாம் ஞாபகம் வைத்திருக்க வேண்டுமா என்ன? நீங்கள் போராடினீர்கள் அதற்கு இப்பொழுது அனுபவிக்கிறீர்கள். போராட்டத்திலிருந்து தப்பிவந்த நாங்கள் என்ன செய்ய?
shut 1நீங்களும் உங்கள் நலனில் அக்கறை கொண்ட உங்கள் உறவுகளும் உங்கள் விடுதலைக்காக ஈழதேசத்தில் போராடினார்கள். இன்றும் போராடுகின்றார்கள். ஆம் அவர்களால் மட்டுமே உங்கள் விடுதலைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் முழு நாள் கடையடைப்பையும் வேலைப்புறக்கணிப்பையும் வெற்றிகரமாக செய்ய முடிந்தது.

shut 2
நாங்கள், புலம் பெயர்ந்த மக்கள், அதனை ஒரு செய்தியாக மட்டும் வாசித்து விட்டு எங்கள் நாளாந்த வேலைகளில் மூழ்கிப்போனோம். உங்களை உங்கள் துயரங்கள் எல்லாவற்றிலிருந்தும் அல்லது ஒன்று இரண்டிலிருந்தோ விடுவிக்கும் வலு எங்களிடம் (புலம் பெயர்ந்தவர்களிடம்) இல்லை. இதனை நான் உங்களுக்குச் சொல்லவே வேண்டும். உங்கள் விடுதலைக்காக ஒரு துரும்பையேனும் எடுத்துப்போட எங்களுக்குத் தோன்றாது. இதையிட்டு நான் வெட்கப்படுகிறேன். எனது வெட்கத்தையிட்டு உங்களிடம் மன்னிப்பு கோரவிரும்புகிறேன்.
free political 1உங்கள் விடுதலைக்கு எங்களை (புலம் பெயர்ந்தவர்களை) நம்பாதீர்கள். அது உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது. தேசத்தின் கைகளில் உள்ளது.

 

 

 

 

 

இப்படிக்கு வெட்கம் கெட்ட மீராபாரதி.
நன்றி நண்பர் இ.தே.பு அவர்களுக்கு கட்டுரையை திருத்தி அழகாக்கியமைக்கு,

நன்றி குளோபல் தமிழ் செய்திகள்
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126344/language/ta-IN/article.aspx
படங்கள் – கூகுள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: