Posted by: மீராபாரதி | September 2, 2015

மரணம்: ஒரு அனுபவம்

இன்று காலை ஒரு மரண செய்தி எனக்கு வந்தது..
அம்மாவின் தம்பி இலங்கையில் யாழில் காலமானார் என்பதே அச் செய்தி.

அப்பாவின் (ஐயாவின்) வழியில் நடைபெற்ற குடும்ப உறவுகளின் மரணம் தொடர்பாக ஏற்கனவே “மரணம் இழப்பு மலர்தல்” நூலில் எழுதியிருக்கின்றேன். அதை இங்கு பதிவிடுகின்றேன்.

அதேநேரம் அம்மா வழியில் இதுவரை இரண்டு மரணங்கள் நடைபெற்றிருக்கின்றன. முதலாவது அம்மாவின் அப்பா (பப்பபா என அம்மா அழைப்பார்.). நாம் அவரை எப்படி அழைத்திருப்போம் எனத் தெரியாது. ஏனெனில்  நாம் பிறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முதல், அம்மாவின் திருமணம் முடிந்த சில மாதங்களில் (1966ம் ஆண்டில்) அவர் இறந்து விட்டார். அம்மம்மா வெளிநாட்டிலிருந்து வந்து 1991 ம் ஆண்டு சிலாபத்தில் இறந்தார். அப்பொழுது நாம் கொழும்பிலிருந்தபோதும் இந்த மரணம் தொடர்பாக அறிந்திருக்கவில்லை. ஒரு வருடத்தின் பின்பே அறிந்தோம்.

அம்மாவுக்கு ஐந்து தம்பிகளும் இரண்டு தங்கைகளும். அம்மாவும் மற்றும் இரண்டு தம்பிகளையும் தவிர  அனைவரும் எழுபதுகளின் இறுதிகளில் புலம் பெயர்ந்து விட்டனர். ஆகவே அவர்களுடனான தொடர்புகள் அறுந்துபோய்விட்டன. மூன்று மாமாமார் மட்டுமே எம்மை அடிக்கடி வந்து பார்ப்பார்கள். அதில் ஒருவர் இப்பொழுது எங்கிருக்கின்றார் என்று தெரியாது.

வெள்ளை உடையணித்திருப்பவர் ராஜூ மாமா. திருகோணமலையில் 1972ம் ஆண்டில் எடுத்த படம்.

வெள்ளை உடையணித்திருப்பவர் ராஜூ மாமா.
திருகோணமலையில் 1972ம் ஆண்டில் எடுத்த படம்.

நமது குடும்பம் அப்பாவுடன் வாழ்ந்த 30 வருடங்களில் 30க்கு மேற்பட்ட வீடுகளுக்கும் இடங்களுக்கும் இடம் மாறி வாழ்ந்திருக்கின்றோம். இன்று இறந்துபோன ராஜூ மாமா நாம் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து வந்து பார்ப்பார். அவ்வாறு வரும் பொழுது என்பதுகளின் திரைப்பட கதாநாயகன் போல வெள்ளை ஜீன்ஸ் வெள்ளை சேட் அணிந்து குளிரும் கண்ணாடி போட்டி கையில் இனிப்புகளுடன் சிரிப்புடனும் வருவார். மேலும் 1970 களின் ஆரம்பத்தில் கட்சி பிரச்சனைகளை எதிர்நோக்கிய நேரம் எங்கள் அப்பாவிற்கு பல வழிகளில பங்களித்துள்ளார். கட்சிப் பத்திரிகைகளை சுரரொட்டிகளை இரகசியமாக இன்னுமொரு இடங்களுக்கு கொண்டு செல்லவதும் உண்டு என அம்மா கூறுவார்.

அம்மாவின் சகோதரங்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்து 50 வருடங்கள் ஆகிவிட்டன. உலகத்தின் ஒவ்வொரு திக்குகளிலும் இருக்கின்ற அம்மாவின் அனைத்து சகோதரங்களும் ஒருமுறையாவது சிலபாத்தில் இருக்கின்ற அவர்களது இல்லத்தில் சந்திக்க வேண்டும் என விரும்பினேன். இனி அது சாத்தியமில்லை.

மரணம்: ஒரு அனுபவம்.
1981ம் ஆண்டு மலையகத்தில் அட்டன் நகரில் வாழ்ந்த நேரம்….
“மதர் ஸ் சீரியர்ஸ்.” ஒரு நாள் அப்பாவுக்கு தந்தி (அவரச செய்தி) ஒன்று கரவெட்டியில் இருந்து வந்தது. தந்தியைக் கண்டவுடன் அப்பா யாரிடமோ சென்று கடன் வாங்கிவந்தார். இப்படியான அவசர நேரங்களில் அப்பாவுக்கு அவரது நண்பர்கள் தான் பண உதவி செய்வார்கள்.

அப்பாச்சி, அப்பாவின் தாய், சில காலமாக தொண்டையில் கன்சர் (புற்றுநோய்) எனக் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார். மாரகம ஆஸ்பத்திரியிலும் தங்கியிருந்து வைத்தியம் பார்த்தார். மாறுவதாகத் தெரியவில்லை. இதற்கு காரணம் அவர் முன்பு நன்றாக வெத்திலை போட்டது எனக் கூறியதாக ஞாபகம். இவருக்கு மூன்று மகன்கள். ஒரு மகள். இளைய மகன் சிறுவதிலையே வெளியே தெரியாத காரணங்களால் அல்லது எங்களுக்கு இன்னும் சொல்லப்படாத காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சித்தப்பாவின் முகம் நமக்குத் தெரியாத முகம். படங்கள் ஒன்றுமில்லை. ஆனால் இப்பொழுதும் வாழ்கின்ற இவருடன் படித்த நண்பர்கள் இவரை “லொயர்” என பட்டம் சொல்லி அழைப்பார்கள். இதன் பின் நடுவன் ஒரு சண்டியனாக கொழும்பு கொட்டாஞ்சேனையில் வலம் வந்தார். இந்த சண்டித்தனத்தால் தனது கால் ஒன்றையும் இழந்திருந்தார். இவரும் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று இள வயதிலையே இறந்துபோனார். இவரது செத்த வீட்டுக்குப் போனபோது அப்பாச்சி ஒரு மூலையில் இருந்து அழுதுகொண்டிருந்தார். மூத்த மகன் முழுநேர அரசியல் என தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார். இப்படி மூன்று மகன்கள் இருந்தும் அப்பாச்சியின் வாழ்வில் ஓளி வீசவில்லை. அப்பப்பாவின் மலாயன் ஓய்வூதியத்தில் கிடைத்த சிறு தொகையிலும் தான் அவித்து விற்கும் இடியப்பம் புட்டு என்பவற்றிலும் தன் குடும்பத்தின் வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருந்தார்.

அன்று மாலை பொடிமெனிக்கே புகையிரதத்தில் யாழ் நோக்கிப் புறப்பட்டோம். இவ்வாறு புகையிரதத்தில் யாழ் நோக்கி போவது எப்பொழுதுமே மகிழ்ச்சியான தருணங்கள். பொல்காவலையில் இரவு தங்கி கட்டிக் கொண்டு சென்ற சாப்பாட்டைச் சாப்பிட்டோம். பின் கொழும்பிலிருந்து வரும் யாழ்தேவியில் எறினோம். விடியற்காலை ஐந்தரை மணியிளவில் கிழக்கு சிவக்கும் நேரம் காகம் கரைய ஆரம்பிக்கும் கணத்தில் கொடிகாமம் புகையிரத நிலையத்தை சென்றடைந்தோம். அங்கிருந்து தட்டி வான் ஒன்றில் வரனியூடாக நெல்லியடியை நோக்கிச் சென்றோம். போகும் வழியில் அரசடியில் இறங்கி அப்பாச்சி இருந்த வீட்டை நோக்கி நடைபோட்டோம். அதிகாலை வேலை கரவெட்டி மண் தந்த மணம் மனதுக்கு இதமாக இருந்தது. வழமையாக இவ்வாறு வரும் பொழுது தண்ணீர் தாங்கி அருகால் இறங்கி அத்துலு வயலுக்கு அருகில் இருக்கும் அப்பாவின் மாமா மாமி வீட்டுக்கு போய் செல்வதுதான் வழமை. ஆனால் இன்றைக்கு அப்பாச்சி “சீரியர்ஸ்” என்பதால் அம்பம் ஆஸ்பத்திரி கடந்து நேராகவே சென்றோம். இந்த ஆஸ்பத்திரியில் தான் நாம் மூவரும் பிறந்தோம் என அம்மா சொன்னார்.

சம்மந்தர் கடையடி தாண்டி சிறிது துரம் தார் போட்ட வீதியில் சென்று, பல காலத்திற்கு முன்போடப்பட்ட குண்டும் குழியுமான பழைய கிரவல் வீதியொன்றில் திரும்பி சிறிது துரம் நடந்தோம். எதிர்ப்பட்ட முதல் வளைவில் அதன் ஒரு மூலையிலிருந்த தென்னோலையால் வேயப்பட்ட படலையைத் திறந்து உள்ளே சென்றோம். அப்பாச்சியின் குடும்பத்தின் காணி இது. இந்த வளவின் ஒரு பக்கத்தில் அப்பாச்சியின் சகோதரி, அப்பாவின் பெரியம்மாவினது பழைய கல் வீடு ஒன்று இருந்தது. மறு பக்கம் இரண்டு சிறிய கொட்டில்கள் தென்னோலையால் வேயப்பட்டிருந்தன. அந்த கொட்டில்களின் இடையில் நின்று அப்பபப்பா விளக்குமாற்றால் முத்தத்தைக் கூட்டிக் கொண்டு நின்றார். அப்பாச்சி வேலி ஓரத்தில் நின்று வாய் கொப்பளிச்சிக் கொண்டிருந்தார். காலை வேளையில் படலை திறந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார்கள்

அவர்கள். எங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். கண்டவுடன் “அப்பு… ஆத்தை… என்ன பார்க்க வந்தனியலே….” என சொல்லிக் கொண்டு அப்பாச்சி எங்களிடம் வந்தா. மாமி, அப்பாவின் தங்கச்சி, கொட்டிலுடன் இணைத்து சாய்த்துக் கட்டியிருந்த குசினிக்குள் இருந்து குனிந்து கொண்டு வெளியே வந்து ஒரு மூலையில் அமைதியாக அழுது கொண்டிருந்தார். ஆம் நீண்ட காலத்திற்குப் பின் அப்பா குடும்பமாக கரவெட்டிக்கு வந்திருந்தார். என் நினைவுக்கு இது தான் முதல் முறை குடும்பமாக கரவெட்டிக்கு சென்றது.

நேற்று மாலை அட்டனில் ஆரம்பித்து நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருந்தோம். நாங்கள் களைப்பாற மாமி தேத்தண்ணி ஊத்தித் தந்தா. தேத்தண்ணி குடித்துவிட்டு நாங்கள் பயணம் செய்த சந்தோசத்தில் ஓடியாடி விளையாடினோம். அப்பப்பா முத்தத்தை கூட்டிவிட்டு கொட்டிலுக்குள் வந்து குந்தியிருந்து இளைப்பாறினார். அவரும் எங்களுடன் இருந்து தேநீர் குடித்தார். அப்பா, அப்பப்பா அப்பாச்சி மூவரும் ஏதோ வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மாமி ஒதிங்கியிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவரவர் வேலைகளைப் பார்க்கச் சென்றனர்.

உச்சி வெயில் நம்மை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. அப்பாச்சி கொட்டிலுக்குள் இருந்த பழைய மரக் கட்டில் ஒன்றில் படுத்து மூச்சு விடக் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அப்பா, அப்பப்பா, மாமி, அம்மா, நாம் மூவரும் அப்பாச்சியை சுற்றியிருந்தோம். பக்கத்து கல் வீட்டிலிருந்த பெரியம்மாவும் அவரது மகள் சரசி மாமியும் பேரப்பிள்ளைகளும் மருமகன் இரத்தினசிங்கம் மாமாவும் ஓடி வந்தார்கள்.
அப்பாச்சிக்கு இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருக்கின்றனர். இவரைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் கல் வீடுகள் இருக்கின்றன. அனைவருக்கும் அவசரச் செய்திகள் சொல்வதற்கு ஆட்கள் அனுப்பப்பட்டார்கள். நெல்லியடியில் பருத்துறை வீதியிலிருக்கின்ற ஒரு சகோதரியான வித்துவான் மாமிக்கு சொல்வதற்காக யாரோ சைக்கிளில் சென்றார்கள். தச்சன்தோப்பு கோயிலுக்கு அருகிலிருல் அத்துளு வயலோரமாக இருக்கின்ற ஒரு சகோதரரான கண்ணாடிக் கந்தப்பு அப்பாவுக்கு சொல்வதற்காக பெரியம்மாவின் பேரப்பிள்ளைகள் சென்றார்கள். அரசடி வீதி மத்தொனியிலிருக்கின்ற மற்ற சகோதரர் வீரகத்தி அப்பாவிற்கு சொல்வதற்காக என்னை அனுப்பினார்கள்.

மதிய உச்சி வெய்யிலில் காலில் செருப்புமில்லாது புதை மண் சுடச் சுடவும் பின் தார் ரோட்டில் கால் வைக்க முடியாமலும் ஓடி ஓடி பூவரசம் நிழல்களில் ஒதிங்கி, ஓதிங்கி சென்று செய்தி சொல்லிவிட்டு திரும்ப ஓடி வந்தேன். இங்கு வரும் பொழுது விசும்பல் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொருவராக அப்பாச்சியின் வாயில் பால் ஊத்தினார்கள். என்னையும் ஊற்றச் சொன்னார்கள்.

இறுதியாக கடைசித் தங்கச்சி ஊத்தினார். இவரின் கை தனக்கு ராசியானது என அப்பாச்சி கூறுவார். இதனால் நாம் மூவரும் முன்பொரு முறை வந்தபோது, இரவு படுப்பதற்கு முதல் தங்கச்சியிடம் சில்லரைக் காசு கொடுப்பார். காலை இடியப்பம் விற்கப் போவதற்கு முதல் தங்கச்சியிடம் அவர் கொடுத்த பணத்திற்கே முதல் வியாபாரத்தை செய்த பின்பே சந்தைக்கு செல்வார்.

இப்பொழுது தங்கச்சி பால் ஊத்தியபோது பாதி உள்ளே செல்ல பாதி செல்லாமல் கடைவாயால் வழியத் தொடங்கியது. அனைவரும் சுற்றியிருக்க அப்பாச்சியின் உயிர் அவர் உடலை விட்டு பிரிந்து கொண்டிருக்க வேண்டும். எல்லா மாமிமாரும் அம்மாவும் “ஐயோ …அம்மா…” என்றும் “ஐயோ…. மாமி…” என்றும்… “ஐயோ… ஆசை ஆத்தை…” என ஆளாளுக்கு தம் உறவு முறை சொல்லிக் கத்தத் தொடங்கினார்கள். அப்பாச்சி கஸ்டப்பட்டு மூச்சை விட்டுக் கொண்டிருந்தார். மூச்சு நீண்டு கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவரது உடலை அசையாது அமைதியாக இருந்தது. முதன் முதலாக ஒரு உயிர் உடலை விட்டு பிரியும் பொழுது அருகில் இருந்து பார்த்தேன்.

ஒப்பாரி வைக்கின்ற சத்தம் கேட்டு பக்கத்து வளவுக்கார், அயலவர்கள், ஊரவர்கள் என ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் சில வயது போன பெண்கள் கல் வீட்டின் ஒரு மூலையில் இருந்து புதிதாக ஆட்கள் வரும் பொழுது “ஐயோ…” எனக்; குளறி சிறிது நேரம் வள்ளியம்மையின் பழங்கால நினைவுகளைக் கூறி ஒப்பாரி வைப்பார்கள். பின் வெத்திலை எடுத்து அதில் சுண்ணாம்பு தடவி சுருட்டி வாயில் போட்டுக் கொள்வார்கள். இத்துடன் சிறு துண்டு
பொயிலையையும் கிள்ளி கடை வாயிற்குள் திணித்துவிடுவார்கள். தமது வாயிற்குள் இவ்வாறு அனைத்தையும் அடைத்துப் பின் ஒரு பக்கம் தள்ளி பற்களால் அரைத்துக் கொண்டு மறு பகுதி வாயால் ஊர் புதினம் கதைத்தார்கள். இவர்கள் உறவுக்காரர்களா இல்லை கூலிக்கு மாறடிப்பவர்களா எனத் தெரியாது. ஊர்களில் செத்தவீடுகளில் இப்படி கூலிக்கு அழுபவர்கள் இருப்பதாக கூறுவார்கள்.

சிறிது நேரத்தில் பறையடிப்பவர்கள் வந்து வளவின் ஒரு மூலையில் வாசலுக்கு அருகில் குந்தியிருந்து “டங்கு… டக்கு… டங்கு… டக்கு…” என ஒலி வர பறையடிக்க ஆரம்பித்தார்கள். படைலையைத் திறந்து செத்த வீட்டுக்கு புதிய ஆட்கள் வருகின்றபோது மறக்காமல் உரத்து அடித்தார்கள். சில வயது போனவர்கள் வெள்ளை வேட்டியுடன்  அங்குமிங்கும் உலாவினார்கள். சிலர் ஒன்று கூடி பூவரச நிழலில் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பாவின் வயதுடையவர்கள் பந்தல் போட்டார்கள். இப்பொழுது சூரியன் மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தது.

எல்லோருக்கும் ஏதோ அவசரம். யாரோ கத்தினார்கள்… “சவத்தை… கொண்டு வாருங்கள்…” . கொஞ்ச நேரத்திற்கு முன்வரை எங்களுக்கு அப்பாச்சி மற்றவர்களுக்கு வள்ளியம்மை. இப்பொழுது சவமாகப் போனார். வளவின் நடுவில் மூன்று பெண்கள் வெள்ளை சாரியாலோ அல்லது வேட்டியாலோ சுற்றிப் பிடித்திருக்க அப்பாச்சியின் உடலைத் தூக்கிக் கொண்டுபோய் பெண்களுக்கு நடுவில் வைத்தார்கள். அவரது உடலை குளிப்பாட்டினார்கள். இதேநேரம் அப்பாச்சியின் உடலை வைப்பதற்கும் சுடலைக்கு கொண்டு செல்வதற்கும் தென்னோலையில் பாடை ஒன்று தயாரானது. குருக்கள் ஒருவர் மத்திரம் ஓதி நெருப்பை எரித்தார். ஒரு கிழவர் தொடர்ந்து வேறு வேறு தேவாரங்களை உச்சஸ்தாயில் பாடிக்கொண்டிருந்தார். “கூற்றாயினவாறு….. “ என இழுத்து இழுத்து கத்திப் படித்தார். கொஞ்சேரம் ஒய்வெடுத்து மீண்டும் பாடினார்.

இப்பொழுது வளவு முழுக்க ஆண்கள் வெள்ளை வேட்டியுடன் பூவரச மர நிழல்களில் நின்று கூட்டம் கூட்டமாக நின்று கூசு கூசுத்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பெரியம்மாவின் பெரிய நீட்டு விராந்தையில் வட்ட வட்டமாக குந்தியிருந்து கதைத்தார்கள். பின் கத்தி அழுதார்கள். மீண்டும் கதைக்க ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு மாலை வெய்யில் படாதாவாறு விராந்தையில் தாழ்வாரம் இருந்தது. நானும் தங்கச்சியும் சில சிறுவர்களும் சிறுமியரும் இதற்கிடையில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தோம். பிறகு கொஞ்ச நேரம் என்ன நடக்கின்றது என ஆர்வமாகவும் ஆச்சரியமாகவும் பார்த்தோம். மீண்டும் விளையாடினோம்.

இப்பொழுது அப்பாச்சியை பாடையில் கிடத்தியிருந்தார்கள். குருக்கள் ஏதோ ஓதிக் கொண்டிருந்துவிட்டு, “சரி பாடையைத் தூங்குங்கள்…” என சொல்ல நாளைந்து ஆண்கள் இரண்டு பக்கமும் இருந்து தூக்கினார்கள். திடிரென பெண்களின் அழுகை சத்தம் கூடியது. பறையடிப்பவர்களின் சத்தமும் கூடியது. இருவருக்கும் போட்டி நடந்தது. யாருடைய சத்தம் சுடலைக்கு கேட்கும் என்று. ஆனால் இவர்களைவிட தான் தனித்துப்போனதாக உணர்ந்தோ என்னவோ மாமி மிகப் பெரிய குரல் எடுத்து அழுதார். அப்பாச்சி குடியிருந்த வளவின் படலையை விட்டு பாடை அரசடி வீதியால் மேற்கிலிருக்கும் சோனப்பு சுடலையை நோக்கி சென்றது. ஆண்கள் மட்டும் அதனுடன் சென்றார்கள்.   சில பெண்கள்  தாமாகவே படலையுடன்  நின்றதுடன் மட்டுமின்றி மற்றப் பெண்களை வீதிக்கு செல்லாது படைலையுடன் தடுத்து விட்டார்கள்.    குழந்தைகளான எங்களை சிலர் பிடித்து தம்முடன் வைத்துக் கொண்டார்கள். திடிரென வளவு அமைதியானது. சிறிய சிறிய விசும்பல்களும் அழுகைகளும் விட்டு விட்டு கேட்டுக் கொண்டிருந்தன.

1981ம் ஆண்டு அப்பாச்சியின் செத்த வீட்டிற்காக அவர் இறப்பதற்கு முதலே அட்டனிலிருந்து முழுமையாக ஒரு நாள் பயணம் செய்து கரவெட்டிக்கு வந்திருந்தோம். அப்பொழுது இனக் கலவரம் ஒன்றும் நடந்திருந்தது. நாடு அமைதியற்றிருந்த காலம். ஆனால் அப்பப்பா 1996ம் ஆண்டு கரவெட்டியில் இறந்தபோது நாம் நாவற்குழியில் அகதிகளுக்கு தந்த காணியில் இருந்தோம். எங்களுக்கு மதியம் அளவிலையே செய்தி வந்தது. அப்பப்பா வழமையைப் போல காலையில் எழும்பி முத்தம் கூட்டி விட்டு கதிரையில் சாய்ந்தவராம். மாமி தேநீருடன் சென்று எழுப்பிய போது அவர் பதில் ஒன்றும் கூறவில்லையாம்.

நாம் உடனடியாக வெளிக்கிட்டோம். அப்பொழுது நாவற்குழியில் பாலத்தருகில் இராணுவம் இருந்தது. அதனுடான யாழ் பயணம் தடைசெய்யப்பட்டிருந்தது. ஆகவே தைதடி வெளியினுடாக சென்று கோப்பாய் சந்திக்கு சென்றோம். இது ஆபத்தான பயணம். ஏந்த நேரமும் ஹெலி வந்து சுடலாம். கோப்பாய் சந்தியிலிருந்து கரவெட்டிக்கு பருத்தத்துறை பஸ் எடுத்தோம். நெல்லியடி சந்தியில் இறங்கி சயன்ஸ் சென்டர் ஒழுங்கை ஊடாக இராஜ கிராமத்தைக் கடந்து அரசடி வீதியில் ஏறி மத்தொனி நோக்கி நடந்தோம். நாம் மாமி இருந்த வீட்டுக்குச் செல்ல மாலை ஆறு மணிக்கு மேலாகி விட்டது. சூரியன் மறைவதற்கு முதல் சடலத்தை எரிப்பதற்காக அவர்கள் அப்பப்பாவை ஏற்கனவே சுடலைக்கு கொண்டு போயிருந்தார்கள். இதனால் அவரது உடலை எங்களால் பார்க்க முடியவில்லை. தூரத்திலிருந்தபோதும் ஒரு நாள் பயணம் செய்து அப்பாச்சியை இறப்பதற்கு முன்பே வந்து பார்த்தோம். ஆனால் அப்பபப்பா இறந்தபோது ஒரு மணித்தியாலம் பயணம் செய்கின்ற தூரத்திலிருந்தபோதும் பார்க்க கிடைக்கவில்லை. இதை என்னவென்று சொல்வது?

1983க்கு முதல் அப்பாச்சியின் மரணத்தை அதிர்ஸ்டம் மட்டுமல்ல அழகானதும் என்பார்கள். ஏனெனில் இப்படி உறவுகள் கூடியிருக்க மரணம் நிகழ்வது அபூர்வமானது. ஆனால் 83குப் பின்பு இவ்வாறு பல (அகால) மரணங்கள் நடைபெற்றன. இவை அதிர்ஸ்டமல்ல. தூரதிர்ஸ்டமானவை. இந்த உயிர்கள் அமைதியாக இறக்கவில்லை. உறவுகள் சுற்றியிருக்க அமைதியிழந்து துடிதுடிக்க நிகழ்ந்த மரணங்கள் இவை. இதன் உச்சம்தான் 2009 மே மாதத்தில் நடந்தது. இதன் பாதிப்பை ஒரு தேசமாக இன்றுவரை உணர்கின்றோம். அந்த உணர்வு இன்று சகல மரணங்களையும் ஏற்றுக் கொள்ள பழகிக் கொண்டது.

அதிகாலை சூரியன் தரும் மகிழ்ச்சியைப் போல
ஒரு குழந்தையின் வருகை ஆனந்தமானது…

பகலில் சுட்டெரிக்கும் சூரியனைப் போல
இளமையில் (நாம்) ஆடும் ஆட்டம் கஸ்டமானதுதான்….

மாலைச் சூரியன் தரும் குளிர்மையைப் போல
முதுமையின் அரவணைப்பு சுகமானது…

சூரியன் மறைந்து இருள் கவும் போது ஏற்படும துக்கம்போல
மனிதர்களின் இறப்பு  துயரமானது…
ஆனால் இது இயற்கையின் நியதி…..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: