Posted by: மீராபாரதி | August 13, 2015

“தமிழ்கூலி” –இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன அடிமைகள் – மலையக மக்கள்.

“தமிழ்கூலி”

– இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன அடிமைகள் –

மலையக மக்கள்.

m nithiமலையகம் எப்பொழுதும் எனது உணர்வுடன் ஒன்றுபட்ட இடம். எனது சொந்த இடம் எது என்று கேட்டால் உணர்வுபூர்வமாக மலையகம் என்று சொல்லவே விரும்புவேன். ஏனெனில் எனது பதினைந்தாவது வயது வரை வாழ்ந்த இடம் அது. நான் பிறந்தது கரவெட்டி என்றாலும் தாய் மடி திருகோணமலை என்பேன். தவழ்ந்து, விளையாடி, வளர்ந்தது மலையகமே. இளம்பருவக் கோளாறாக வாலிபம் விளையாடியது யாழில். காதல் வென்றபோதும் கட்டுப்பாடுடன் வாழ்ந்த இடம் கொழும்பு. இறுதியாக வழியின்றி வீழ்ந்த இடம் ரொரன்டோ. ம்……

அட்டனிலிருந்து மஸ்கெலியா வரை ஒரு பக்கமும், கொட்டக்கலை, தலவாக்கொலை, நுவரேலியா, ராகல, அப்புத்தளை மற்றும் பதுளை என இன்னுமொரு புறமும்…ரொசல்ல நாவலப்பிட்டிய கந்தலோயா கண்டி என இன்னுமொரு புறமுமாக பேரூந்திலும் புகையிரதத்திலும் பயணம் செய்த அனுபவங்கள் இனிமையானவை. குறிப்பாக அட்டனிலிருந்து மஸ்கெலியா வீதி வழியாக டிக்கோயா ஊடாக நோட்டன் பாலம் வரை, நூவரெலியா வீதி வழியாக கொட்டக்கலை வரை, கொழும்பு வீதி வழியாக செனன் வரை மற்றும் புகையிரத பாதைகளிலும் இருபுறமும் காசு மிச்சம் பிடிப்பதற்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் கால் நடையாக சிறுவயதில் பயணம் செய்திருக்கின்றேன். மேலும் அட்டன் நகரைச் சுற்றியுள்ள அதிகமான ஆறுகளுக்கும் சிறிய நீர்வீழ்ச்சிகளுக்கும் குளிப்பதற்காக பல மலைகளைக் கடந்து நடந்து சென்றிருக்கின்றேன். இதைவிட அப்பாவிற்கு தோட்ட துரைமாரிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் வரை நண்பர்கள் இருந்தபோதும் தோட்டத் தொழிலாளர்களின் லயன் வீடுகளிலையே அதிகம் தங்கியிருக்கின்றோம். அவர்களின் உபசரிப்பில் அக மகிழ்ந்திருக்கின்றோம். இவர்களது வாழ்வு எம்முடன் ஒன்றுகலந்த காலங்கள் அவை. கடந்த வருடங்களில் மலையக தோட்டங்களுக்கு பயணம் செய்தபோது இப்பொழுதும் அவர்களது வாழ்நிலை நாற்பது வருடங்களுக்கு முன்பு பார்த்தது போலவே இருக்கின்றது. ஒரே ஒரு மாற்றம் நம்பிக்கை தருவதாக இருந்தது. பலர் கல்வி கற்பதில் அக்கறையாக இருக்கும் அதேநேரம் மலையக ஆசிரியர்கள் ஒரு சக்தியாக உருவாகி வருவதுடன் தமது வேலையை பொறுப்புடன் செய்கின்றார்கள் என்பதே மகிழ்ச்சியானது.

946964_446421905446117_1604765787_n1987ம் ஆண்டு நான் உயர்தரப் பரிட்சை எடுப்பதற்கு முதல் சில மாதங்களில் இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது. ஆகவே இனி வடக்கு கிழக்கில் போராட்டம் சாத்தியமில்லை என உணரப்பட்ட காலங்கள் அவை. ஆனால் நான் பரிட்சை முடிந்தவுடன் மீண்டும் அரசியல் இயக்கம் ஒன்றுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என உணர்ந்தேன். அக் காலங்களில் ஒரு நாள் ஈரோஸ் பாலகுமார் அவர்கள் எமது போராட்டம் மலையகத்தில் தொடரும் என நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதனை மனதில் கொண்டு பரிட்சை முடித்த அடுத்த நாளே அவர்களுடன் இணைந்து செயற்பட சென்றேன். ஏனெனில் இலங்கையில் அன்று மட்டுமல்ல இன்றுவரை மலையக மக்களின் வாழ்வே மிகவும் கஸ்டங்களும் வலிகள் நிறைந்ததும், எந்த உரிமைகள் அற்றதும், அடக்கப்படுவதும் சுரண்டப்படுவது அதிகம் கொண்டதும் என்றால் மிகையல்ல. இவ்வாறு மலையகம் தொடர்பாக எதை அறிந்தாலும் யாராவது தொடர்பு கொண்டாலும் புலாங்கிதமடைவேன். அவ்வாறுதான் மு.நித்தியானந்தன் அவர்களின் “கூலித்தமிழ்” நூலை வாசித்தது மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. மலையக மக்களின் வலி நிறைந்த வாழ்வை நேரடியாக கண்டபோதும் அவர்களின் வரலாற்றை வாசிப்பது மேலும் வலியைத் தருவதாகவே உணர்கின்றேன்.

44517_422779275781_3934182_nமு.நித்தியானந்தன் எழுதிய “கூலித் தமிழ்” நூலின் சில பாகங்களை அல்லது மலையக மக்களின் வாழ்வின் முக்கிய பகுதிகளைத் திரைப்படமாகப் பார்ப்பதாயின் பாலாவின் பரதேசி திரைப்படத்தை தயங்காமல் பார்க்கலாம். இந்த நூலில் வரும் பல தகவல்கள் அத் திரைப்படத்தில் மிக நேர்மையாக எடுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு திரைப்படத்தை எடுத்ததற்காக மட்டுமல்ல அவர்களது வலி நிறைந்த வாழ்வை ஜனரஞ்சகம் இல்லாமல் தந்தமைக்காகவும் பாலாவை எவ்வளவும் பாராட்டலாம். இத் திரைப்படத்திலும் நூலிலும் “குதிரைகளில் பவளிவரும் துரைமார்கள், சவுக்கடிகள், தண்டனைகளை நிறைவேற்றும் கம்பங்கள், மிருகங்களைப் போல அடைக்கப்பட்ட லய வாழ்க்கை, சங்கு ஊதி ஆரம்பமாகும் வேலைகள், பெரட்டுக் களங்கள், இயந்திரம் போன்ற உழைப்பு, கையெழுத்து மங்கும்வரை மாலைக்காடுகளில் வதை, வயிற்றுக்கே போதாத சம்பளம், தோட்டத்தை விட்டு ஓட முடியாத நிலை” (68) போன்றவற்றை இருவரும் பதிவு செய்திருக்கின்றனர். இவ்வாறான ஒரு நூலை பல புதிய தகவல்களுடனும் ஆதாரங்களுடனும் எழுதியமைக்காக மு.நித்தியானந்தன் அவர்களையும் நிச்சயமாக பாராட்டவும் வரவேற்கவும் வேண்டும்.

இந்த நூல் “19ம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கையின் மத்திய மலை நாட்டுப் பகுதிகளுக்கு “கூலி”களாகக் கொண்டு செல்லப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் மத்தியில் எழுந்த முதல் எழுத்து முயற்சிகளை” பதிவு செய்கின்றது. இதுநாள் வரை நடேச ஐயர் மற்றும் சி.வி. வேலுப்பிள்ளை இவர்களே மலையக மக்களுக்காக குரல் கொடுத்ததை அறிந்துள்ளோம். ஆனால் மலையகத் தமிழர்கள் “மோசமாக நடத்தப்படுவதற்கு எதிராக கருமுத்து தியாகராசர்” என்ற பத்திரிகையாளர் எழுப்பிய கண்டனங்களையும் இந்த நூலில் பதிவு செய்வதுடன் அவரையும் விரிவாக அறிமுகப்படுத்துகின்றார். மேலும் மலையகத்தின் முதல் நாவல்கள் இரண்டையும் அறிமுகப்படுத்தும் அதேவேளை “அஞ்சுகம் என்ற கணிகையர் குலப் பெண் ஆளுமையை மலையகத்தின் முதல் பெண் புலமையாளராக” அடையாளப்படுத்துகின்றார். இத் தகவல்களை ஐரோப்பிய நூலகங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான தேடல்கள் மூலம் பெற்றுத் தொகுத்துள்ளார் மு.நித்தியானந்தன் அவர்கள்.10407909_10153280668682433_6728937847235249788_n

இந்த நூலில் மலையகத்தின் முதல் நாவல் என ஆ.பால் எழுதிய சுந்திரமீனாள் அல்லது காதிலின் வெற்றி என்ற நாவலைக் குறிப்பிடுகின்றார். இந்த நாவல் தொடர்பாக ஆசிரியர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “அபூர்வக் கற்பனைக் கதைகளும மர்மக் கதைகளும் துப்புத்துலக்கும் கதைகளும் தமிழ் நாவல் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த காலத்தில் (1937களில்) இந்த நாவல்களின் வாசிப்புக் கிரகிப்பில் உருவான ஒரு இமிட்டேஷன் நாவல்தான் “சுந்தரமீனாள்”. இந்த நாவலில் பட்டவர்த்தனமாகத் தெரியும் குறைபாடுகள் மிகப் பலவாயினும் எழுத்துவளம் கைவரப்பெற்ற நாவலாசிரியர் ஆ.பால் 1930களில் தான் வாழ்ந்த வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்ட முனைந்திருந்தால் எத்தகைய மரியாதைக்குரிய ஒரு சரித்திரப் பணியைச் செய்திருப்பார் என்று நினைத்துப்பார்க்கையில் அவர் தந்திருக்கும் “சுந்தரமீனாள்” மிகப் பெரிய நஷ்டம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது” (141). இவ்வாறு ஆசிரியர் குறிப்பிட்டுவிட்டு இந்த நாவல் தொடர்பான விபரங்களுக்கு அதிக பக்கங்கள் ஒதுக்கியமை அவசியமா என்றே கேட்கத் தோன்றுகின்றது. இப் பக்கங்களை மேலும் மலையக மக்களின் வாழ்வு மற்றும் “கூலித் தமிழ்” தொடர்பான மேலதிக விபரங்களுக்கும் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கலாம்.

1013035_10151532466382362_860195680_nஜி.எஸ்.எம்.சாமுவேல் எழுதிய கண்ணனின் காதலி நாவல் “கற்பானபூர்வமான கதைப்பின்னலும் துப்பறியும் கதைப் பாங்கும் இந்த நாவலை வழிநடத்திச் சென்றுள்ளபோதிலும், யதார்த்த இடங்களுக்கு மீள்கையில் நாவலாசிரியர் நேர்மையான சித்தரிப்பைச் செய்திருக்கிறார்.” (168). மேலும், “மலையகத்தில் அரசியல் விழிப்பு அரும்புகட்டிநின்ற நிலையில் சாதி ஒடுக்குமுறை, தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் படும் துயரம் ஆகியவற்றில் கருத்தைச் செலுத்தி, இலக்கியப் புனைவில் நுழைந்த சாமுவேல் தன் காலகட்டத்தின் மனசாட்சியின் குரலாகத் திகழ்கின்றார். (168). உதாரணமாக ‘மாரிக்காலக் குளிரும், கோடைகாலக் கொடும் வேனலுந் தாங்கமாட்டாமல் துடிதுடித்தனர். அட்டை, கொசுக்களின் உபத்திரவம் வேறோர்பால் அவர்களை வாட்டலானது. இவ்விதக் கஸ்டங்களுடன் வேலை செய்தும் சாயங்காலம் வேலை முடிந்து பார்த்தால் பல குறைகள் கூறி ஏழைத் தொழிலாளர்களின்” (153) உழைப்பிலும் வயிற்றிலும் அடித்ததை விபரமாக விபரிக்கின்றார். அந்தவகையில் இது முக்கியமான நாவலாக இருக்கின்றது.

க. அஞ்சுகம் இயற்றிய “உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு” என்ற நூல் மலையக இலக்கியத்தின் உன்னதமான முன்னோடிப் பெண் ஆளுமையை வெளிப்படுத்தி நிற்கிறது (173). மேலும், “ஆகம, புராண இதிகாசங்களிலிருந்து தேவதாசிகள் எனப்படும் உருத்திர கணிகையர் வரலாற்றைத் தொகுத்தும்” “திருக்கண்ணமங்கை என்னும் திருப்பதியைச் சேர்ந்த அபிஷேகவல்லி என்னும் தேவதாசி மரபில் உதித்த ஆறு தலைமுறையினரின் வரலாற்றையும் இந் நூலில் அன்னை அஞ்சுகம் விரிவாக எழுதியுள்ளதாக குறிப்பிடுகின்றார் (174). இவை இவரது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்துகின்றது” (173) எனவும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அதேவேளை “இந்து சனாதன மரவை எவ்விதக் கேள்வியுமின்றிப் பரிபூரணமாக விசு வசித்து, அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டுவிட்ட தன்மையை அஞ்சுகம் அம்மையார்” (178) இந் நூலில் வெளிப்படுதியிருக்கின்றார் என விமர்சிக்கவும் தவறவில்லை. மேலும் “இந்து சனாதனப் புராணப்புனைவுகளை மெய்யென்று நம்பிவிட்ட பாங்கு இந்நூலின் அனைத்துப் பக்கங்களிலும் பளிச்சிடுகின்றது” (179) என்கின்றார்.

11146607_10153176888555782_5859480917993397931_nஇந்த நூலில் “1869ஆம் ஆண்டு ஆபிரஹாம் ஜோசப் இயற்றிய “கோப்பிக் கிருஷிக் கும்மி” என்பதே மலையகத்தின் முதல் இலக்கியம் எனக் கூறுகின்றார். மேலும் இதே எழுத்தாளர் எழுதிய “தமிழ் வழிகாட்டி” என்ற நூலையும் முதன் முதலாக அறிமுகப்படுத்துகின்றார்” (7). இந்தியாவின் தமிழகத்திலிருந்து “அடிமைகளாக கடத்தப்பட்டு .. எலும்புக்கூடுகள் சமைத்த பாதைகளில் இருநூறு மைல்வரை” நடையில் மலையகத்தை நோக்கி கூட்டி வரப்பட்டவர்கள் மலையக மக்களின் முன்னோர். இவர்களை ஆங்கிலேயர்கள் “கூலிகள்” என்றும் இவர்கள் பேசிய மொழியை “கூலித்தமிழ்” என்றும் அழைத்தனர் (7). இவ்வாறுதான் “அரசியல் ஆவணங்களிலும் அறிக்கைளிலும் நாளாந்த நடைமுறையிலும் அழைக்கப்பட்டு வந்தனர் (7). இந்த மக்களை அடக்குவதற்கும் சுரண்டுவதற்கும் துரைமார் “கூலித் தமிழை” கற்க வேண்டியதாயிற்று. இதற்கு எவ்வாறான சொற்களையும் வசனங்களையும் கற்றனர் என்பதை “கோப்பிக் கிருஷிக் கும்மி” மற்றும் “தமிழ் வழிகாட்டி” ஆகிய நூல்களில் இருந்து உதாரணங்களாக தந்துள்ளார். இதனடிப்படையில் “மலையகத் தமிழர்கள் மீது இடம் பெற்ற கொடூர துரைத்தன அடக்குமுறையையும் ஆங்கில துரைமார் தமிழ் பேச உபயோகித்த “கூலித் தமிழ்” போதினிகளில் இந்த அடக்குமுறைகளும் அதற்கு எதிரான எதிர்ப்புகளும் எவ்வாறு வெளிப்பட்டது என்பதையும் ஆய்வு” செய்கின்றார். (83). இந்த நூல்களுக்கு மாற்றாக தொழிலாளர்களுக்குப் பால பாடம் நடாத்துவதற்கு நடேசய்யரின் “தொழிலாளர் சட்ட புஸ்தகம்” இக் காலங்களில் வந்தமை தொழிலாளர் சமூக வராலாற்றில் ஒரு யுகமாற்றத்தைக் குறித்து நிற்கிறது” (94) என்கின்றார் மு.நித்தியானந்தன். இவ்வாறான ஒரு சிலரின் முயற்சிகள் இன்றுவரை நடைபெற்றபோதும் மலையக மக்களின் வாழ்வில் மாற்றம் என்பது கனவாகவே இருக்கின்றது.

முன்னேற்றங்களும் அபிவிருத்த்திகளும் காணாத லயங்களும் மலையக வாழ்வும்

முன்னேற்றங்களும் அபிவிருத்த்திகளும் காணாத லயங்களும் மலையக வாழ்வும்

மலையக மக்களின் சம்பளம் அன்றிலிருந்து இன்றுவரை “பிச்சைக் காசு” தான். மலையக மக்களின் மூதாதையர்கள் இந்தியாவில் இருந்தபோது 12 ரூபாயிலிருந்து 13 ரூபாய்வரை சம்பளமாகப் பெற்றுள்ளனர். ஆனால் இலங்கையில் 12 ரூபாயை கஸ்டமில்லாமல் சம்மாதிக்கலாம் என ஆசைக்காட்டப்பட்டுள்ளனர். உண்மையில் இலங்கையில் ஒரு மாத சம்பளத்தை 2 ரூபாய்க்கு மேல் வாங்கவில்லை என்கின்றார். (117). இந்த சம்பளமும் பல கழிவுகளுக்கு உட்பட்டு கையில் ஒன்றும் கிடைக்காத நிலைமைகளும் உள்ளன. இன்றும் கூட இலங்கையின் சக தொழிலாளர்கள் பெறும் சம்பளம் மற்றும் சலுகைகள் என்பவற்றுடன் ஒப்பிடும் பொழுது மலையகத் தொழிலாளர்களின் சம்பளமும் சலுகைகளும் மிக மிக குறைவானதே. ஒரு நாளைக்கான அடிப்படைச் சம்பளம் 450 ரூபா. குறைந்தது 75 வீதமான நாட்கள் வேலைக்கு சமூகமளித்திருந்தால் ஒரு நாளைக்கு 150 ரூபா அதிகமாக கிடைக்கும். பெண்கள் எட்டு மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்பதுடன் 18 கிலோ கிராம் தேயிலை இலைகளை பறித்தால் மட்டுமே இச் சம்பளம் வழங்கப்படும். ஆண்கள் தமக்கு கொடுக்கப்பட்ட வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு வரலாம். கடைசிக் காலங்களில் ஓய்வுதியம் போன்ற சலுகைகளை அல்லது உரிமைகளைப் பெறுவதற்கள் தொழிலாளி இறந்துவிடுவார். அவ்வளவு கெடுபிடிகள் அதில் உள்ளன. இவ்வாறான உழைப்பிலும் வருவாயிலும் இவர்கள் மூன்று நேரம் ஒழுங்கா சாப்பிடக் கூட முடியாது. அப்படியிருக்கும் பொழுது குழந்தைகளை கற்பிப்பது எப்படி? தமக்கென காணி வாங்கி வீடு கட்டுவது எப்படி?

மேல் மலையிலிருந்து கல்வி கற்க வருகின்ற பாலர் வகுப்பு குழந்தைகள்.

மேல் மலையிலிருந்து கல்வி கற்க வருகின்ற பாலர் வகுப்பு குழந்தைகள்.

இவ்வாறும் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முழுநேரம் தொழிற்சங்க மற்றும் கட்சி வேலை செய்கின்ற தோட்டத் தொழிலாளர்களின் நிலைமைகளை நாம் உணர்ந்து கொள்வது கஸ்டமல்ல. எனது அப்பாவின் தோழர் ஒருவர் இவ்வாறு தனது வாழ் நாள் முழுவதும் தொழிற்சங்க வேலைகளுக்காகவும் கட்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர். அவர் இறந்த பின்பு குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவரது மகள் பாலியல் தொழிலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக கேள்விப்பட்டேன். இது தொடர்பான ஒரு பதிவை முகநூலில் எழுதியபோது குறிப்பிட்ட பெண்ணை அத் தொழிலிருந்து வெளியே எடுத்து வேறு தொழில் வாய்ப்புகளை வழங்க புலம்பெயர்ந்த நண்பர் ஒருவர் முன்வந்தார். ஆனால் இந்த விடயத்தை மிகவும் பொறுப்புணர்வுடன் கவனமாக அணுகவேண்டும். ஆகவே இவ்விடயத்தில் இலங்கையில் உள்ள யாராவது பங்களிக்க முன்வந்தால் அக் குடும்பத்திற்கு உதவலாம். அக்கறை உள்ளவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

11694859_920615534666609_2473999005751061532_nமலையக மக்களை அரசியல்வாதிகள் நம்பி நம்பி தொடர்ந்து ஏமாறுகின்றபோதும் அவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது அவர்களது கடவுள்களே. ஆகவேதான், “என்றுமே மீட்சி தெரியாத ஒரு சூழலில், இந்து சமயச் சடங்காசாரங்கள், தெய்வங்களை வேண்டுதல், தமது வேண்டுதல்களுக்கு நேர்த்திக்கடன் வைத்தல் போன்றன, தொழிலாளர்கள் கஸ்டமான தொழில் நிலைமைகளை எதிர் கொள்வதில் அவர்களுக்குப் பெருந்துணையாய் இருந்தன என்பதில் ஒருவித ஐயமுமில்லை” (47) என்று குமாரி ஜயவர்த்தன குறிப்பிடுவதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மேலும், “அறியாமையும் அச்சமும் கலந்து ஒரு பலவீன நிலையில், அதன் விளைவு, கண்ணில் படும் மரமும் மலையும் கடவுளின் இருப்பிடங்களாயின. அந்த நம்பிக்கை, இன்றைய துயரம் நாளை விடியும் என்ற ஒரு நினைப்பை ஏற்படுத்தி அவர்களை வாழவைத்தது” (47). என்கின்றார் சாரல் நாடன்.

upcountryமலையக மக்கள் இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன அடிமைகள் என்றால் தவறில்லை. அந்தளவிற்கே இன்றுரை அவர்கள் வாழ்வு இருக்கின்றது. இது தொடர்பாக என்பதுகளில் பீ.ஏ. காதர் எழுதிய “இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்” என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது. இருப்பினும் இவர்களது பிரச்சனைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. “2003ம் ஆண்டின் “இந்திய வம்சாவளியினருக்குக் குடியுரிமை வழங்கும் சட்டவாக்கம்” குடியுரிமைப் பிரச்சனையைத் தீர்த்துவிட்டது” எனக் கூறினாலும் “ சட்ட சிக்கல்கள் இன்னும் இருக்கின்றன” என்கின்றார் முன்னுரை எழுதிய மழவரையன் விஜயபாலன்.

11702641_920612514666911_3021067286732658846_nதேவகாந்தன் அவர்களின் கனவுச்சிறை நூலில் பின்வருமாறு ஒரு வசனம் வரும். “சொந்த வீடு இல்லாத குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் குறைவு. …. கடைநிலை ஏழையாயிருந்தாலும், சொந்த வளவும் குடிசையும் தவறாமல் இருக்கும்.” (கனவுச்சிறை 784). ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் இன்றுவரை வாழும் லயம் என்பது பணக்காரர்கள் ஆடு மாடுகளை வளர்க்கும் கூடம் போன்றது. மேலும் இந்த லயங்களை யூத வதை முகாம்களுடன் ஒப்பிடுகின்றார் ஆசிரியர் மு.நித்தியானந்தன். “கூலி அடிமை முறையில் வாழும் தொழிலாளர்களைப் பட்டிகளில் அடைத்து வைப்பதன் குறியீடாகத்தான் இன்றும் அந்த லங்கள் அதைந்திருக்கின்றன. இவை ஊழியச் சிறைக்கூடங்கள் தான்” (67). சிலவேளைகளில் ஆடு மாடுகளை வளர்க்கும் கூடம் கூட காற்றோட்டம் கொண்ட வெளிச்சம் நிறைந்த அறைகளாக இருக்கும். இந்த தொடர் வீடுகளுக்கோ முன் கதவும் பின் கதவும் மட்டுமே காற்றும் வெளிச்சமும் வீட்டின் உள்ளே செல்வதற்கான வழிகள். ஆகவே வீட்டின் உள்ளே எப்பொழுதும் இருள் நிறைந்ததாகவே இருக்கும். அவர்களின் கஸ்டமான வாழ்வைப்போல. இவர்கள் வறுமையில் வாழ்ந்தபோதும் அவர்களின் உள்ளொளியே அந்த வீடுகளை வெளிச்சமேற்றி அழகாகவும் ஆனந்தமாகவும் வைத்திருக்கின்றன.

இந்த வீடுகளுக்கு வெளிச்சம் வரவேண்டுமாயின் இவர்களுக்கு சொந்தக் காணியும் வீடும் வழங்கப்பட வேண்டும். எத்தனை நூற்றாண்டுகள் தான் இவ்வாறு லயங்களில் இவர்கள் வாழ்வது? எத்தனை ஆண்டுகள் தான் அரசியல் தலைவர்கள் இவர்களை ஏமாற்றுவது? இம் முறை யார் சொந்தக் காணி வழங்கி வீடு கட்டித் தருவதாக எழுத்துமூலம் உறுதி எழுதித் தருகின்றார்களோ அவர்களுக்கே இவர்கள் வாக்களிக்க வேண்டும்?

மலையக மக்களின் விடியல் நோக்கிய பயணத்தில் நம்பிக்கை ஒளி வீசுமா?

மலையக மக்களின் விடியல் நோக்கிய பயணத்தில் நம்பிக்கை ஒளி வீசுமா?

ஆனால் அவ்வாறு யார் உறுதி வழங்கப் போகின்றார்கள்?

ஏனென்றால் “கூலித் தமிழ்” போதினிகளை எழுதிய ஜோசப் போலவே அதிகாரவர்க்கத்தின் அடிமைகளாக இருக்கின்றார்கள் அன்றும் இன்றும் (மலையக) அரசியல்வாதிகள்.

பல நண்பர்கள் இந்த முறை தேர்தலில் நிற்கின்றார்கள். ஆனால் இவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள் எந்தவகையிலும் நம்பிக்கை தராதவை. இவர்கள் அனைவரும் இம் முறை வெற்றி பெற வேண்டும் என்பதற்கான காரணம் ஒன்று மட்டுமே. அது மகிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடாது. மற்றும் படி மக்களுக்கு விடிவு கிடைக்குமா என்பது வழமைபோல ஒரு கனவே. ஏனெனில் அனைவரும் பழைய பாதைகளிலையே பயணிக்கின்றனர். மக்களின் விடுதலையிலும் உரிமைகளிலும் அக்கறை உள்ளவர்கள் புதிய பாதை ஒன்றை உருவாக்க வேண்டும். அதுவே நம்பிக்கையைத் தரலாம்.Kanthaloya 116
மீராபாரதி

தகவல்கள் – நன்றி – சண்முகம் சிவகுமார் மற்றும் நேரு கருணாகரன்

படங்கள் – முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.
சரவணன், சாந்தன், சகா, மற்றும் நான்.
ரொரன்டோ மற்றும் இலன்டனில் நடைபெற்ற நூல் அறிமுக படங்களும் உள்ளன.
உதவி நண்பர்களின் பங்களிப்புடன் கந்தலோயா சென்றபோது பதிவு செய்யப்பட்டவை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: