Posted by: மீராபாரதி | August 5, 2015

கனவுச்சிறை – என்னை விடுதலை செய்தது! – பகுதி – 2

11156189_10206433399303109_7043483978685836281_nதேவகாந்தனின் கனவுச்சிறை ஈழத்து மக்களின் போர் மற்றும் போராட்ட வாழ்வை பதிவு செய்த ஒரு மகா நாவல். இருப்பினும் இதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு தனிக் குறு நாவல்கள் மட்டுமல்ல ஒவ்வொரு பாத்திரங்களினது அனுபவங்களும் ஒவ்வொரு தனிச் (சிறு) கதைகளே. மேலும் பல அரசியல், சமூக, சமய வரலாறுகளை உள்ளடக்கியது இப் படைப்பு. ஒவ்வொரு அத்தியாயத்தையும் பாகத்தினையும் வாசித்தபின் அடுத்து என்ன நடந்தது நடக்கப் போகின்றது என்ற ஏக்கத்தை தந்தது. சில பாத்திரங்களுக்கு என்ன நடந்தது என இப்பொழுதும் மனம் ஏங்கிக் கொண்டிருக்கின்றது. இப் படைப்பை வாசிக்கும் பொழுது அடிக்கடி என் கண்களில் கண்ணீர் வருவதையும் நெஞ்சு நோவதையும் தடுக்க முடியவில்லை. இன்னமும் மனதில் ஆழமான பாதிப்புகளை தந்து கொண்டிருக்கின்றது. இப் படைப்பில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பாத்திரங்களும் என் கண் முன் உயிருடன் உலா வந்தார்கள். வருகின்றார்கள். இவர்கள் எங்களில் ஒருவர்கள். அல்லது எங்களின் ஒவ்வொரு பாகங்களும் ஒவ்வொரு பாத்திரங்களிலும் சிறு அளவிலாவது இருக்கின்றது எனலாம். மேலும் எங்கள் குறிப்பாக புலம் பெயர்ந்த மனிதர்களின் நினைவுகளிலிருந்து மெல்ல அழிந்து போகும் அல்லது குறிப்பாக ஈழத்தில் வாழும் தமிழர்களின் ஆழ் மனதில் புதைந்திருக்கும் வலி நிறைந்த நம் கடந்த காலத்தை அதனுடான நமது வாழ்வை மீள அனுபவிப்பதற்கும் நினைவு கொள்வதற்கும் இப் படைப்பினுடாக வழியேற்படுத்தியிருக்கின்றார் தேவகாந்தன் அவர்கள்.

இப் படைப்பு ஈழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் அதாவது எழுபதுகளின் மத்தியில் ஆரம்பித்து 1983, 1987, 1989, 1991, 1993, 1995, 1997, 2001 என ஈழ மக்கள் எதிர்நோக்கிய முக்கியமான காலகட்டங்களை உப தலைப்புகளாக கொண்டு படைக்கப்பட்டுள்ளது. இந்த உபதலைப்புகள் கூட அக் காலங்களுக்குப் பொருத்தமான அர்த்தங்களையும் கொடுக்கின்றன. அவையாவன, திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னிதிரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய ஏற்பாடு. இக் காலங்கள் நம் உள உணர்வுகளுடன் ஒரு வகையான தொடர்புகளையும் உறவுகளையும் கொண்டுள்ளன. இந்த உணர்வுகள் நம் சுவாசம் நிற்கும் வரை அல்லது விடுதலை கிடைக்கும்வரை நம்முடன் வாழும் என்றே உணர்கின்றேன்.Devakanthan book launch 032

கனவுச் சிறை ஒரு பிரச்சாரப் படைப்பல்ல. தனது எழுத்தாளுமையை நிலைநாட்டும் சதுரங்க விளையாட்டுப் படைப்புமல்ல. மிக யதார்த்தமான ஆடம்பரமற்ற படைப்பு. அதேவேளை வெறுமனே சமூக (ஆதிக்க) சித்தாத்தங்களை அப்படியே பரவ விட்டுச்செல்லவில்லை. மாறாக சமூகத்தில் என்ன இருக்கின்றதோ அதை சொல்கின்றது. எது விமர்சிக்கப்பட வேண்டுமோ அது விமர்சிக்கப்படுகின்றது. என்ன தேவையோ அதைக் கூறுகின்றது. ஆனால் இவை எல்லாம் தனித்தனியாக தூரித்திக் கொண்டு இருக்கவில்லை. அப் படைப்பில் உள்ளார்ந்து இருக்கின்றது. அதுவே அதன் ஆன்மாவாக இருக்கின்றது.

தேவிபாரதி அவர்கள் தனது முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “போரை மையமாகக் கொண்ட இலக்கியப் படைப்புகளில் சில விதிவிலக்குகள் தவிர்த்த மற்றவை ஆண் மையக் கதையாடல்களாக இருப்பது இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது….. நாவலின் முக்கியமான ஆண் கதாப்பாத்திரங்களைப் பின்தொடர்ந்து சென்றிருந்தால் சாகசங்கள் நிரம்பிய ஒரு பெருங்கதையாடல் தேவகாந்தனுக்குக் கிடைத்திருக்கும்….. [ஆனால்] இந்த நாவல் அதைப் புறக்கணித்துப் போரின் விளிம்பில் அலையும் பெண்களை மையப் பாத்திரங்களாக்கியிருக்கிறது.” (20) என்கின்றார்.11956186-1310-46f1-ba04-35dd0075c53a_1wvxo2ck32p9chv__700

மார்க்சிம் கோர்க்கியின் தாயை பலமுறை இளமையில் வாசித்திருக்கின்றேன். அவ்வாறான ஒரு தாய்க்காக ஏங்கின காலம் அது. இப்பொழுது இப் படைப்பை வாசித்தபோது இப் படைப்பை ஈழத்தின் “தாய்” அல்லது ஈழத்தின் “பெண்” பற்றிய நவீனம் எனக் குறிப்பிடலாம் எனத் தோன்றுகின்றது. அதேவேளை தொடர்ந்து வாசிக்கும் பொழுது இது ஈழத்தின் “உயிர்ப்பு” எனவும் கூறத் தோன்றுகின்றது. அரசியல் செயற்பாட்டாளனாக “தாய்” மற்றும் அகம் நோக்கிய தேடல் கொண்டவனாக “உயிர்ப்பு” போன்ற படைப்புகளின் ஈழத்துப் பிரதியாக இதனைப் பார்க்கின்றேன். இது எந்தவைகயிலும் அந்தப் படைப்புகளுடன் ஒப்பிடும் நோக்கமல்ல. ஏனெனில் ஒவ்வொரு படைப்பும் தன்னளவில் தனித்துவமானவை. இருப்பினும் இப் படைப்புகளை ஏற்கனவே வாசித்திருப்பவர்கள் நான் இவ்வாறு கூறுவதற்கான காரணத்தை உணர்ந்து புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.

ஆரம்பத்தில் தாய் மகள் உறவும் மற்றும் பிரச்சனை உருவாவதற்கு காரணமாக இருந்த ஆண் பெண் உறவும் யதார்த்தமற்றதாக இருந்ததுபோல் தோன்றியது. அல்லது புறநடையாக இவ்வாறான உறவுகள் சம்பவங்கள் நடைபெறுவதாக இருக்கலாம். தனித்துவமானவையாக இருக்கலாம். ஆனால் போகப் போக இந்த உறவுகளுக்கு இடையிலான முரண்பாடுகளும் ஒவ்வொருவரின் நியாயங்களும் நீதிகளும் அவர்களினது அக முரண்பாடுகளும் வாழ்வின் பாதைகளும் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதற்கு அடிப்படையாக இருந்தன ஒவ்வொரு பாத்திரத்தினதும் ஆரம்பக் கட்டுமானங்கள். இறுதியில் எங்கள் முற்கற்பிதங்களை கேள்விக்குள்ளாக்குகின்றன.

10454493_10201877484413166_1377946895294651290_nஉண்மையில் இதுவே நம் சமூக யதார்த்தம். மனித வாழ்வின் உண்மையின் பக்கம். ஆனால் நாம் சமூகத்திற்கு காண்பிப்பதோ போலியான ஒரு முகம். இவ்வாறுதான் நாம் அகத்திலும் புறத்திலும் இருவேறு முகங்களைக் கொண்டு வாழ்கின்றோம். அதேபோல நாம் வெளியே பார்க்கும் புற சமூகமும் அக சமூகமும் ஒன்றல்ல. அக சமூகம் தன்னுள்ளே பல முரண்பாடுகளை கொண்டது. அதில் வாழும் மனிதர்களைப் போல என்பதை மிக அழகாக தெளிவாக தேவகாந்தன் அவர்கள் படைத்துள்ளார். இந்த மனிதர்களைப் பற்றி இப்படிக் கூறுகின்றார். “மனிதர்கள் எல்லோருமே தேவையொன்று ஏற்படுகிறபோது போலியாகிவிடுவதில் ஒன்றுதான். அஸ்ஸாம்காரன் போலத்தான் மகாராஷ்டிராக்காரன், பஞ்சாபி போலத்தான் மாலையாளி, இந்தியன் போலத்தான் சிறீலங்காக்காரனும்.” (917)images

ஈழத்தில் அதுவும் போர் மற்றும் போராட்டக் காலங்களில் “தாய்”களின் பாத்திரம் மிக முக்கியமானது. மிகவும் அர்ப்பணிப்பு மிக்கது. எந்தவகையிலும் குறைத்து மதிப்பட முடியாதது. ஆனாலும் இப் படைப்பில் வருகின்ற தாய்க்குள் இருக்கின்ற அக முரண்பாடுகளும் சமூக ஆதிக்க சித்தனைகளும் எவ்வாறு ஒருவரது வாழ்வை சிதைக்கின்றது என்பதையும் அவர்கள் வாழ்ந்த மண்ணிலிருந்து வேருடன் பிடிங்கி ஏறியப்படுகின்றது என்பதையும் சொல்கின்றது. இத் தாயின் பாத்திரம் ஈழத்தின் பொதுவான “தாய்” எனக் கூறலாம். ஆனால் அவளது மகள் புதிய தலைமுறை “பெண்” அப்படியானவல்ல. அவள் தனது வேரை மேலும் ஆழமாக தான் வாழ்ந்த மண்ணில் வேரூண்ட விரும்புகின்றவள்.

நான் அக்கறை கொள்ளும் அல்லது முதன்மைப்படுத்தும் பெண்ணியம் அல்லது பெண்ணிய சிந்தனைகள் எனது அடையாளத்திற்கானதல்ல. மாறாக சமூகம் தொடர்பான புரிதலின் அடிப்படையிலானது. உலகத்தின் சரிபாதி மனிதர்களான பெண்கள் இரண்டாம் பிரசைகளாகவும் அவர்களது வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கொண்டிருக்கும் பொழுது முழுமையான சமூக விடுதலை என்பது சாத்தியமற்றது. வர்க்க விடுதலை ஏற்படலாம். தேசிய விடுதலை கிடைக்கலாம். சாதிய விடுதலை கூட சாத்தியமாகலாம். ஆனால் பெண்கள் விடுதலை பெறவில்லையெனில் இவையெல்லாம் விடுதலையே அல்ல. ஆம்! முழுமையான சமூக விடுதலை என்பது சாத்தியமற்றது. ஏனெனில் பெண்கள் மீதான அடக்குமுறையும் சுரண்டலும் நமது ஆன்மாவுடன் கலந்துவிட்ட ஒன்று. ஆகவே பெண்ணிய விடுதலை என்பது பாரிய மாற்றத்தை ஓட்டு மொத்த சமூகத்திடம் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதர்களிடமும் வேண்டி நிற்கின்றது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் பெண்களின் பாடுகளை விரிவாகவும் ஆழமாகவும் பாடுகின்றது கனவுச்சிறை.

Devakanthan book launch 016இலட்சியப் பெண்கள் இரண்டு வகைகளில் தீர்மானிக்கப்படுகின்றார்கள். வழமையான ஒன்று சமூக ஆதிக்க கருத்துக்களின் பாதிப்புகளினால் உருவாக்கப்படும் இலட்சியப் பெண்கள். இவர்கள் “கற்புக்கரசிகள்” “பரிசுத்தமானவர்கள்”. இவ்வாறான ஆதிக்க சமூகத்தின் பெருமானங்களைக் கட்டிக்காக்க தமது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மட்டுமல்ல வாழ்வையே ஒடுக்கி உருக்கி தியாகம் செய்து வாழ்பவர்கள். இப்படியான பெண்களையே ஆதிக்க சமூகம் போற்றிப் புகழ்கின்றது. இதற்கு எதிராக வாழ்பவர்களை தூற்றி வாழத் தகுதியற்றவர்களாக அடையாளப்படுத்துகின்றது. பெரும்பாலான திரைப்படங்களும் படைப்புகளும் அழகியல் அம்சங்களுடன் நாசுக்காக இவ்வாறான சமூக ஆதிக்க கருத்துக்களையே பார்வையாளர்கள் மற்றும் வாசகர்களிடம் புகுத்துகின்றன.

Devakanthan book launch 020இந் நாவலில் வருகின்ற தாய் மட்டுமல்ல எங்களுடைய “அம்மா” க்களும் இவ்வாறான முரண்பாடுகளைக் கொண்டவர்கள் தான். அல்லது எங்களுடைய “தாய்” களின் பிரதிநிதியே இதில் வருகின்ற “தாய்” எனலாம். ஆகவேதான் இந்த அம்மாவிற்கும் எனது அம்மாவிற்கு பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இது தற்செயலானதல்ல. பெரும்பாலான அம்மாக்களின் உலகம் மிகச் சிறியது. அவ்வாறான சிந்தனைகளுடன்தான் அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றார்கள். தனது கணவர் குழந்தைகளின் நலனே பிரதானமானது. அதற்காக எவ்விதமான அர்ப்பணிப்புகளையும் செய்யத் தயங்காதவர்கள். அதேவேளை சமூகத்தின் ஆதிக்க கருத்துகளை அறிந்தோ அறியாமலோ பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள். இதனால் இவர்களுடன் இவர்களது குழந்தைகள் பல சந்தர்ப்பங்களில் முரண்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். எனது அம்மாவுடன் இவ்வாறான முரண்பாடுகள் பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் அவர்களை எதிரிகளாகவோ தூரோகிகளாகவோ கருதுவதில்லை. ஏனெனில் அந்த உறவில் அன்பும் கலந்துள்ளது. இவ்வாறு அன்பு கலந்திருக்கும் இடங்களில் நாம் இலகுவாக சமரசம் செய்து கொள்வோம். ஆனால் அன்பில்லாத இடங்களில் மிக இலகுவாக எதிரி அல்லது தூரோகிப் பட்டங்களை சுமத்தி முரண்பாடுகளை பெரிதாக்கி அழிவை உருவாக்கிக் கொள்வோம்.

Devakanthan book launch 021இவ்வாறான முரண்பாடுகளுடன் தான் எனது அம்மாவை மட்டுமல்ல அப்பாவை மட்டுமல்ல சிறிசாபாரத்தினம், பத்மநாபா, உமாமகேஸ்வரன், மட்டுமல்ல பிரபாகரனையும் மதிக்கின்றேன். அன்பு செய்கின்றேன். அதேநேரம் விமர்சனத்திற்கும் உட்படுத்துகின்றேன். பின்னையவர்கள் மரணித்தபோது இவர்களுக்கா நான் விட்ட ஒரு துளிக் கண்ணீரில் பொய்மையிருக்கவில்லை. ஆனால் தோற்றுப் போவமோ என்ற பயம் இருந்தது. விடுதலையின் ஏக்கம் இருந்தது.

இன்னுமொரு இலட்சிய பெண்கள் இருக்கின்றார்கள். இவர்கள் இயல்பாகவும் இயற்கையாகவும் வாழ்பவர்கள். நாம் வாழும் பல்வேறு ஆதிக்கங்கள் நிறைந்த சமூகத்தில் இவ்வாறு வாழ்வதே இலட்சிய தன்மை கொண்டதுதான். ஆனால் ஆதிக்க சமூகம் இவர்களை எதிர்க்கின்றது. ஒதுக்குகின்றது. பழிசுமத்துகின்றது. ஏனெனில் இவர்கள் ஆதிக்க சமூகத்தின் கட்டுப்பாடுகளை சிந்தனைகளை எதிர்ப்பவர்கள். அதற்கு அடிபணியாதவர்கள். மாறாக தமது உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் உண்மையாக இருப்பவர்கள். அதை மதிப்பவர்கள். புதிய சிந்தனை முறைகளையும் வாழ்வு முறைகளையும் தேடுகின்றவர்கள். சமூக ஆதிக்க கருத்துக்களுக்காக இவற்றை விட்டுக் கொடாதவர்கள். மண்ணையும் மக்களையும் எந்த எதிர்பார்புமில்லாமல் நேசிப்பவர்கள். அந்த நேசிப்பில் உண்மையும் ஆழமும் உண்டு. ஆனால் தூரதிர்ஸ்டவசமாக இது புரிந்துகொள்ளப்படுவதே இல்லை. உதாரணமாக ஈபிஆர்எல்எவ்வில் மரணித்த சோபா முதல் இறுதியாக விடுதலைப் புலிகளின் மரணித்த இசைப்பிரியா வரை இது உண்மையானது. ஊர்மிளா முதல் செல்வி, சிவரமணி, ராஜினி, ஊடாக மதவதனி வரை உண்மையானது. மேலும் இன்றும் ஈழத்தில் வாழுகின்ற பெண் போராளிகள் இதன் ஆதாராமாக இருக்கின்றார்கள்.Devakanthan book launch 023

ஏனெனில் எது அசாதாரணமோ அதுவே சமூக ஆதிக்க பார்வையில் சாதாரணமானது. எது சாதாரணமானதோ அது சமூக ஆதிக்க பார்வையில் அசாதாரணமானது. ஆகவே சமூக விடுதலையில் அக்கறையுள்ளவர்கள் அசாதாரணமானது என எதை ஆதிக்க சமூகம் கூறுகின்றதோ அதை சதாரணமாக வாழ முயற்சிப்பதற்கான வழிகளைத் தேடுகின்றனர். இதற்கு மிகுந்த தைரியமும் மனோபலமும் போராட்ட குணாம்சமும் உறுதியும் வேண்டும்.

இவ்வாறான பண்புகளும் ஆற்றலும் கொண்ட ஒரு பெண்தான் கனவுச்சிறையின் பிரதான பாத்திரம். தனது காதலுக்கும் காமத்திற்கும் மனிதர்களுக்கும் சமூகத்திற்கும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவள் இவள். காதலும் காமமும் பெண்விடுதலையின் முக்கியமான இரு கூறுகள். இதைப் புரிந்து கொள்ளுவோமானால் சமூகத்தில் பல பிரச்சனைகள் தானாகவே இல்லாமல் போய்விடும். ஆகவேதான் இவள் சமூக ஆதிக்க கருத்துக்களை கண்டு பயப்பிடுகின்றவள் அல்ல. ஆதிக்க சமூகம் எதிர்பார்க்கின்ற கல்வியை அதிகம் படித்தவளுமல்ல. ஆனால் ஆளுமையானவள். சமூகம், அரசியல், போராட்டம் தொடர்பாக சொந்தமான தேடலும் நிலைப்பாடு உள்ளவள். தான் எடுக்கும் முடிவுகளில் தெளிவான பார்வை கொண்டவள் மட்டுமல்ல அதில் உறுதியானவளும் கூட. இவ்வாறான பண்புகளால் சமூகம் எதிர்பார்க்கின்ற வாழ்வின் உயிர் நிலைக்கு இவள் செல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழும் வாழ்வில் வலி இருந்தாலும் ஒரு திருப்தி அமைதி ஆனந்தம் இருக்கின்றது. ஆகவேதான் இப் படைப்பை ஈழத்தின் “பெண்” என்று கூறுகின்றேன்.

Devakanthan book launch 025இந்த நாவலின் ஒரு பகுதி பெண்களின் பாடுகளை பாடும் பொழுது இன்னுமொரு பகுதி பௌத்த சிந்தனையைப் பாடுகிறது எனலாம். இரு பௌத்த மதகுருமாரின் பாத்திரங்களினுடாக பௌத்த மதம் தொடர்பான தீவிர விசாரணையை விரிவாக தேவகாந்தன் அவர்கள் முன்வைக்கின்றார். இதற்கான இவர் மேற்கொண்ட தேடல்கள் பிரமிக்க வைக்கின்றன. தேவிபாரதி அவர்கள் இது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “இந்தப் பகுதியில் தேவகாந்தனின் படைப்பு மொழி தன் உச்சத்தை நோக்கி எழும்பியிருக்கின்றது” என்கின்றார்.

பௌத்த சிந்தனை என்பது ஒரு வாழ்வு முறை. அதனை ஒரு மதமாக சிறைவைக்க முடியாது. சமூக மாற்றத்தையும் தனது அக மாற்றத்தையும் விரும்புகின்றவர் தனக்குள் மாற்றம் ஏற்படாதாவறு தன்னை கட்டி வைக்கமாட்டார். ஆகவே மதம் என்ற சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து கொண்டு மேலும் தேடுகின்ற ஒருவராகவே இருப்பார். அவ்வாறான ஒருவர்தான் இதில் வருகின்ற ஒரு சிங்கள பௌத்த குருவின் பாத்திரமும் பிரதான தமிழ் பாத்திரங்களின் ஒன்றும். இவர்களின் உரையாடல்கள் எனது அக கண்களை திறக்க ஊந்துகின்றது. சமூக மாற்றத்திற்கான பரந்த விரிவான உரையாடலுக்கு அடித்தளமிடுகின்றது. ஆகவேதான் ஈழத்தின் “உயிர்ப்பு” என அடையாளப்படுத்துகின்றேன்.

Devakanthan book launch 038முன்பு ஈழத்தில் தமிழ் பௌத்தம் இருந்திருக்கின்றது. ஆனால் அன்றிருந்த தென்னிந்திய சைவ மேலாதிக்கம் அல்லது ஆக்கிரமிப்பு ஈழத்தவர்களை மீளவும் சைவர்களாக மாற்றி இருக்கலாம். நாம் சிங்களவர்களுக்கு பௌத்தத்தின் சாரத்தை புரியவோ உணர்த்தவோ வேண்டுமானால் நாம் பௌத்த சிந்தனையின் அடிப்படையிலான ஒரு வாழ்வை மேற்கொள்வது தவிர்க்க முடியாததோ என அடிக்கடி சிந்திப்பதுண்டு. இந்த நாவல் அச் சிந்தனையை மேலும் தூண்டுகின்றது. இந்த நூல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படுமானால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களின் உணர்வுகளையும் சிந்தனைகளையும் மட்டுமல்ல வாழ்வின் வலியையும் சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வழிசெய்யலாம். இது அவர்களிடம் மாற்றத்தை உருவாக்கலாம் என நம்புவோமாக.

இறுதியாக தேவகாந்தன் கூறுகின்றார், “மரணம் அவலமானது. தனித்து விடப்படுபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். ஆனாலும், அவை தொடர்ந்தும் நிகழ்ந்து ஒன்றையொன்று மூடிக்கொண்டு விடுகின்றன. இன்றைய இழப்பிலும் மரணத்திலும் பரிதாபத்திலும் நேற்றைய இழப்பும் மரணமும் பரிதாபமும் மூடுண்டு விடுகின்றன. இனி உள்ளதெல்லாம், ஊர்க்காரர் என்றவகையில் ஒரு துக்க விசாரிப்புச் செய்தடங்குவதுதான்.” (722). மேலும் இதன் விளைவாக “புலப்பெயர்ச்சியென்பது நடந்த அக்கிரமங்களின் குறியீடு மட்டுமல்ல, நடக்கப்போகும் ஸ்வயமான அழிவுகளின் குறியீடும்தான்” (445). ஆகவேதான் “ஆரவாரமில்லாமல் மையம் அழியத் தொடங்கியிருக்கிறது. நிலம், சொத்து, உத்தியோகம் போன்ற சமூக கவுரவங்களின் மூலமழிய கலாசாரம் மாறுபடும். ஆக, யாழ்ப்பாணக் கலாசார மாறுபாட்டுக்கு சூசகம் சொல்லப்படுகிறதா? மாறாத சமூகமென்று ஏதுமில்லை.” (445) என்கின்றார்.

"                "

” “

நான் படைப்புகளை பொழுது போக்கிற்காக வாசிப்பவனோ பார்ப்பவனோ இல்லை. எனது தேடலுக்கு எதாவது தீணி கிடைக்கின்றதா எனத் தேடிக் கொண்டிருப்பவன். அது யாருடைய படைப்பு என்பதல்ல எனது அக்கறைக்குரியது. எனது தேடலுக்கு அதில் எதாவது இருக்கின்றதா…. எனது சிந்தனையை கேள்விக்குள்ளாக்கின்றதா… என்னை மாற்றத்தை நோக்கித் தள்ளுகின்றதா…அதுவே ஒரு படைப்பு தொடர்பான திருப்பதியை மகிழ்வை எனக்குத் தருகின்றது. ஆம் எனக்குள் அவ்வாறான மாற்றத்தை தேடலை ஏற்படுத்துகின்றது தேவகாந்தனின் கனவுச்சிறை என்றால் மிகையல்ல. நாம் “அரசியலில் ஒதுங்கலாம். இந்த அறங்களிலிருந்து ஒதுங்கிவிட இயலாது” (445). நமது போராட்டம் ஏன் தோற்றது என்பதற்கான காரணங்களை இப் படைப்பை ஆதாரமாகக் கொண்டு தேடலாம். மேலும் இந்த நாவல் தேவிபாரதி அவர்கள் குறிப்பிடுவதுபோல், “அமைதியிலிருந்து கொந்தளிப்புக்கு வாசக[ரை] நகர்த்திச் செல்லும் தேவகாந்தனின் படைப்பு மொழி வாசிப்பை ஒரு செயல்பாடாக மாற்றுகின்றது” என்கின்றார். ஏனெனில், “இது அரசியல் பேசாத அரசியல் நாவல்” (29) என்கின்றார் தேவகாந்தன்.

indexதேவகாந்தனைப் போல ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் ஆழமான படைப்பு இது. இப் படைப்பை தந்தமைக்காக தேவகாந்தனை கட்டிபிடித்து முத்தமிட விரும்புகின்றேன்.. அவரது பாதங்களைத் தொட்டு வணங்க விரும்புகின்றேன். ஆம் நான் உணர்ச்சிகளும் உணர்வுகளும் கொண்ட ஒரு மனிதன். ஆனால் இவை என்னை தவறான பாதையில் கொண்டு செல்லாதவகையில் ஒவ்வொரு கணமும் பிரக்ஞையுடன் வாழ முயற்சிப்பவன். அவ்வாறான ஒரு நிலையில் இப் படைப்பில் உள்ளார்ந்த பல அம்சங்களை உணர்ந்தேன். அவை எழுத்தில் இல்லை. மாறாக சொற்களுக்கு இடையிலான இடைவெளிகளில் இருக்கின்றன. அந்த இடைவெளிகளை காற்றுகள் நிறப்பிக்கொண்டு இருக்கின்றன. அல்லது கொண்டு திரிகின்றன. ஆகவேதான், “காற்றில், இனியும் அது காற்றில்தான் இருக்கும். ஏனெனில் நான் எழுதியதே காற்றில்தான். ஒவ்வொருவர் உட்சுவாசத்திலும் அது உணரப்படும். நான் காற்றில் கலந்த பின்னால்.. என்னையும் கூட உன்னால் சுவாசத்தில் உணரமுடியும்.” (627). இப் படைப்பிடம் தன்னை சரணடைகின்றவர்கள் ஒவ்வொருவரும் அதை உணரமுடியும் என நம்புகின்றேன். இதுவே என்னை மாற்றத்தை நோக்கித் தள்ளுகின்ற சக்தியாகும்.

11156189_10206433399303109_7043483978685836281_nகனவு ஒருவகை சிறைதான். ஆனால் இக் கனவுச்சிறை என்னை விடுதலை செய்தது என்றால் மிகையல்ல.

மீராபாரதி
தொடர்புகளுக்கு. meerabharathy@gmail.com

படங்கள் – டொரன்டோவில் நடைபெற்ற கனவுச்சிறை நூல் அறிமுக நிகழ்வின் போது என்னால் எடுக்கப்பட்ட படங்கள்.

தேவிபாரதி – முகநூல்

பி.கு – இந்த நாவல் பெண்களை மையமாக கொண்டு பெண்களின் பாடுகளை பாடுவதனால் தேவிபாரதி அவர்களின் முன்னுரையிலும் தேவகாந்தனின் என்னுரையிலும் பயன்படுத்திய பின்வரும் ஆணாதிக்க சொற்களை கவனத்தில் எடுத்திருக்கலாம். “வராலாற்றாசிரியன்” (9), “இலக்கிய வாசகனுக்கு”(9), “தமிழனின்” (13), “வாசகனை” (23). “தீவிரவாசகனால்” (29).

எனது தமிழ் இலக்கண அறிவு மட்டுப்படுத்தப்பட்டது. ஆகவே ஆண் எழுத்துக்கள் தொடர்பாக நான் குறிப்பிட்ட பொழுது எழுத்தாளர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார். இதனை விவாதத்திற்கு விட்டுவிடுகின்றேன். அது எனது தமிழ் மொழி மற்றும் இலக்கண அறிவை வளர்க்கும் என நம்புகின்றேன்.

“வாசகன் என்பதும் மனிதன் என்ற சொல்போல் பொதுவானதுதான். இவ்வாறான பொதுச்சொல் ஒன்று ‘அன்’ விகுதியேற்கிறபடியாயே தமிழ்மொழி வழக்கு அமைந்திருக்கிறது. என்ன செய்ய? அது எப்பாலினரையும் குறிக்கிற சொல்தான்”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: