Posted by: மீராபாரதி | August 4, 2015

கனவுச்சிறை – என்னைத் தாக்கிய சுனாமி – பகுதி 1

11156189_10206433399303109_7043483978685836281_nநான் அதிகம் வாசித்த எனது இருபதிகளின் ஆரம்பத்தில் (என்பதுகளின் இறுதிகளிலும் தொன்னூறுகளின் ஆரம்பத்திலும்). அப்பொழுது மாணவராக அரசியல் இயக்கம் ஒன்றுடன் மீளவும் இணைந்து நம்பிக்கையுடன் செயற்பட்ட காலங்கள். பெரும்பாலும் இரஸ்சிய மற்றும் இந்திய குறிப்பாக அசாம், தெலுங்கானா (போன்ற போராட்டங்கள் நடைபெற்ற தேசங்களின்) படைப்புகளையே ஆர்வமாக வாசித்தேன். இப் படைப்புகள் ஒரு குறிப்பிட்ட நாட்டின் தேசத்தின் போராட்ட அனுபவங்களையும் மனித உறவுகள் தொடர்பான படிப்பினையை எனக்குத் தந்தன. போராட்ட வாழ்வு என்றால் என்ன என்பதைச் சொன்னவை. ஆகவே என் மனதிற்கும் உணர்விற்கும் நெருக்கமாக இருந்ததன. மேலும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் தொடர்பான கனவை எனக்குள் விதைத்தன. ஆனால் என்னை, என்னைச் சுற்றியிருக்கும் மனிதர்கள், நான் வாழுகின்ற சமூகம் மற்றும் அந்த மண் ஆகியவை பற்றிய எந்தவிதமான புரிதலையும் எனக்குத் தரவில்லை. நான் வாழ்ந்த மண், சூழல், சுற்றியிருந்த மனிதர்கள் என்பவற்றிலிருந்து மட்டுமல்ல என்னிலிருந்தும் விடுபட்டு என்னைக் கனவுலகத்தில் அவை வாழ வைத்தனவோ என இப்பொழுது உணர்கின்றேன். அதேநேரம் இது எந்தவகையிலும் அன்று நடைமுறையில் போராடிய புலிகள் இயக்கத்துடன் இணையவில்லை என்ற குற்றவுணர்வை இன்றுவரை உருவாக்கவில்லை. ஏனெனில் அன்றிலிருந்து இன்றுவரை அவர்களது சிந்தனை மற்றும் செயற்பாடுகளுடன் உடன்பட முடியாமலே இருக்கின்றது. இது எந்தவகையிலும் அவர்களது அர்ப்பணிப்பை அவமதிப்பதாகாது. அதேநேரம் நாம் அன்றைய நடைமுறை வாழ்வை நமது வழியில் எதிர்கொண்டிருக்க வேண்டும். எமது புரிதல்களின் அடிப்படையிலாவது செயற்பட்டிருக்க வேண்டும். இதற்கு இலக்கிய படைப்புகள் படைப்புகள் ஒரளவு பங்களித்திருக்கலாம். ஆனால் அவ்வாறான படைப்புகள் அன்று வரவில்லை. அல்லது நான் வாசிக்கவில்லை. வாசித்திருந்தாலும் புரிந்திருப்பேனா என்பதும் கேள்விக்குறியதே.

ஈழத்துப் படைப்புகளை எனது வாசிப்புக் காலங்களில் மிகக் குறைவாகவே வாசித்திருந்தேன். ஆகவே எனது வாசிப்பு எல்லைக்குள் அப்பொழுது என்னைப் மிகவும் பாதித்த ஈழத்துப் படைப்புகள் மிகக் குறைவானவையே. உதாரணமாக ரஞ்சகுமாரின் படைப்புகளும் மிக முக்கியமாக கோவிந்தனின் (டொமினிக்) புதியதொரு உலகம் போன்றவையுமே என்னைப் பாதிப்புக்கு உள்ளாக்கின. இவை அன்றைய சூழலைப் புரிந்து கொள்ள ஒரளவு பங்களித்திருந்தன. ஆனால் இப் படைப்புகளும் அண்மைக் காலங்களில் வெளிவந்த வன்னி யுத்தம், கடவுளின் மரணம், ஊழிக்காலம், ஊம்மத், மற்றும் யோ. கர்ணன், வெற்றிச் செல்வி, தமிழினி, சயந்தன், குணா கவியழகன், சோபா சக்தி, இளங்கோ டிசே, மெலிஞ்சி முத்தன், அகிலன் ஆகியோரின் படைப்புகள் போரினதும் இனவாத அடக்குமுறைகளினதும் அதற்கு எதிரான போராட்டங்களினதும் விளைவுகளால் ஏற்பட்ட அனுபவங்களையும் வலிகளையுமே பதிவு செய்திருக்கின்றன. மேலும் பொதுவாக கூறின் பெரும்பாலும் புறம் நோக்கிய விமர்சனங்களாகவும் பார்வைகளாகவுமே இருந்திருக்கின்றன. இவை தனது சமூகம், மனிதர்கள், மற்றும் தன்னுடைய அகம் நோக்கிய பார்வையையோ பிரச்சனைகளின் மூலத்தையோ ஆராய முற்படவில்லை. இது நமது போராட்ட வரலாற்றில் முக்கியமான குறைபாடாகவே இருந்து வந்துள்ளது. இவ்வாறு கூறுவது இப்படைப்புகளின் முக்கியத்துவத்தை குறைப்பதாகாது. அதேவேளை இக் குறையை அண்மையில் வாசித்த தேவகாந்தனின் கனவுச்சிறை நீக்கியுள்ளது. இது அவ்வாறான ஒரு படைப்பு என்பேன்.

கனவுச்சிறை போன்ற படைப்புகள் எமது போராட்டக் காலங்களில் அதிகம் வெளிவந்திருக்க வேண்டும். இவை நமது சமூகத்தின் இயக்கத்தையும் போராட்டத்தின் பாதையையும் மட்டுமல்ல இதில் பங்குபற்றிய ஒவ்வொரு தனிமனிதர்களின் வாழ்வையும் அகம் நோக்கிப் பார்க்க வழிசமைத்திருக்கலாம். அவ்வாறு நடைபெற்றிருக்க வேண்டும். இதனுடாக அவை வாசகர்களின் கண்களைத் திறந்திருக்கலாம். முக்கியமாக அரசியல் செயற்பாட்டாளர்கள் தம்மையும் தமது சமூகத்தையும் போராட்டத்தையும் அகம் நோக்கிய விமர்சனப் பார்வை பார்ப்பதற்கு இவ்வாறான படைப்புகள் ஊக்குவித்திருக்கலாம். பங்களித்திருக்கலாம். இது இவர்களது அகக் கண்ணைத் திறந்து சமூகத்தின் போராட்டத்தின் இயங்குதிசையை புரிந்து கொள்ளவும் சரியான வழியில் திசைதிருப்பிக் கொண்டு செல்லவும் ஒரு காரணியாக செயற்பட்டிருக்கலாம். மேலும் நாம் வாழ்ந்த மண்ணுடனும் மக்களுடனும் நெருக்கமான உறவை உணர்வுபூர்வமாக வளர்ப்பதற்கு இவ்வாறான படைப்புகள் பங்களிக்கும் என்பது எனது புரிதல்.
இவ்வாறான படைப்புகள் ஜனநாயகம் குறைந்த அல்லது இல்லாதிருந்த காலங்களில் மக்களுடன் உரையாடுவதற்கான ஊடகமாக இருந்திருக்கும். ஆனால் இவ்வாறான படைப்புகளின் பற்றாக்குறைவினால் அதற்கான விலையை இன்று கொடுப்பதுடன் அதன் விளைவுகளையும் அனுபவிக்கின்றோம். இருப்பினும் காலம் கடந்தாவது இனிவரும் புதிய தலைமுறைக்கும் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் பங்களிக்கும் வகையில் தேவகாந்தனின் கனவுச்சிறை வந்துள்ளமை மிகவும் பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரியது.

Devakanthan book launch 032தேவகாந்தன் அவர்களை புலம் பெயர்ந்த பின்பே அறிந்து கொண்டேன். அவருடன் அறிமுகமானேன். அறிமுகமான பின்பும் அவருடைய படைப்பாற்றல் தொடர்பாக அறிந்திலேன். ஒரு முறை மகா பாரதம் தொடர்பான எனது சந்தேகங்களை எழுதியபோது ரஞ்சகுமார் அவர்கள் தேவகாந்தனுடன் உரையாடும்படி கூறியிருந்தார். அவரிடம் பல தகவல்களை அறியலாம் என்றார். ஆனால் அவ்வாறு அறிவதற்கான சந்தர்ப்பம் அமையவுமில்லை. நான் முயற்சிக்கவுமில்லை. இருப்பினும் இது தேவகாந்தன் தொடர்பான மதிப்பை என்னுள் கூட்டியது. இன்னுமொருமுறை அ.இரவி அவர்கள் இலண்டனிலிருந்து வந்தபோது தனது பயணத்தின் நோக்கம் தேவகாந்தனையும் சந்திப்பது என்றார். அவரது படைப்பை வாசித்த பின் அவரைச் சந்திப்பதற்காக தேடிக் கொண்டிருந்தேன். அந்தளவிற்கு உயர்வான தரமான படைப்பாளி அவர் என்றார். இது மேலும் அவர் மீதான அபிமானத்தையும் மதிப்பையும் எனக்குள் உயர்த்தியது. இதன் பிறகு அருண்மொழிவர்மன் அவர்கள் தேவகாந்தனின் நூல்களை வாசிப்பதற்கு தந்தார். ஆனால் அவை அப்படியே இருந்தன. வாசிக்க ஆர்வமில்லாது இருந்தேன். இதன் பின் முதன் முறையாக ஒரு தமிழ் நூலை அதன் வெளியீட்டு நிகழ்வில் நாற்பது டொலர்கள் கொடுத்து வாங்கினேன் என்றால் அது கனவுச்சிறைதான். அவவ்வளவு பணம் கொடுத்து வாங்கிய நூலை வாசிக்க வேண்டும் என ஆரம்பித்தேன். ஆனால் அந்தப் படைப்பின் மதிப்பு விலைமதிப்பற்றது என்பதை வாசிக்கும் பொழுது உணர்ந்தேன்.

Devakanthan book launch 031தேவகாந்தனுடன் உரையாட ஆரம்பிப்பதில் இருக்கின்ற கஸ்டம் போல கனவுச்சிறை மகா நாவலையும் வாசிக்க ஆரம்பிப்பதில் கஸ்டம் இருந்தது. ஆனால் அவரது உரையை பொறுமையுடன் கேட்டால் எவ்வளவு பயனுள்ளதோ அதேபோல பொறுமையுடன் விடாது தொடர்ந்து இரண்டு பக்கங்கள் மட்டும் வாசித்தாலே போதும் அதன் பிறகு இப் படைப்பை கையை விட்டு கீழே வைக்க மனம் விரும்பாது. அந்தளவிற்கு தனது கனவுச் சிறைக்குள் நம்மை சிறை வைக்கின்றார். இதற்கு காரணம் அவரது கதைசொல்லும் ஆற்றல். அதேவேளை இப் படைப்பிடம் நான் சரணடைந்தேன் என்பதும் உண்மையாகும். அவ்வாறு சரணடைந்த நிலையிலிருந்தவாறு என் மனப் பதிவுகளை வாசித்துக் கொண்டு தொடர்ச்சியாக எழுதிய குறிப்புகளே இவை. ஏனெனில் ஒவ்வொரு அத்தியாத்தையும் வாசிக்கும் பொழுதும் வாசித்து முடித்த பின்பும் அது எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புகள் உணர்வுகள் சிந்தனைகள் அதிகம். இப் படைப்பை வாசித்த காலம் முழுக்க எனது மனம் சூறாவளியல்ல சுனாமியில் சிக்குண்டு தவித்ததைப் போல இருந்தது. அந்தளவிற்கு வலி நிறைந்த படைப்பு இது. தேவகாந்தன் அவர்கள் எப்பொழுதும் சோகமாகவே தோன்றுவதற்கான காரணம் அந்தளவிற்கு அவருக்குள் வலிகள் நிறைந்திருக்கின்றனவோ என எண்ணுகின்றேன். அதை அவர் ஒவ்வொரு காலகட்டங்களிலும் உணர்ந்திருக்கின்றார் என்பதை பின்வரும் கூற்று நிருபணம் செய்கின்றது.

”மாயங்கள் நடந்தன போல்தான் எல்லாம் நடந்து முடிந்திருந்தன. உயிர்த்தளமே அதில் அசைந்திருந்தது. பாழ்வெளியாய்க் கிடந்தது யாழ்நகர். எப்படி நடந்தது அது.? போராளி இயக்கத்தின் அரசியல் நடைமுறைப் பிழையின் பெறுபேறா அத்தனை அழிவும்? ஒரு இலட்சம் ராணுவமும் கனரக ஆயுதங்களும் மண்ணில் இறங்கியிருந்த வேளையில், சிறீலங்கா ராணுவத்தின் ஒப்பறேஷன் லிபறேஷன் தாக்குதலைத் தடுக்க வல்லமையற்றிருந்த இயக்கம், அதை எதிர்க்கத் துணிந்தமை எப்படி நிகழ்ந்தது?” (451).

போன ஆண்டு தையில் இந்திய அமைதிப்படை திரும்பிவிட்டிருந்தது. விலக்கம் ஆரம்பிக்கின்றவேளையிலேயே முகாம்களை அமைக்க விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கியிருந்தது. தீர்க்கமாய் அவர்கள் அமைதிப் படையிடம் இழந்த பகுதிகள் மீளப்பட்டிருந்தன. ஆனால் படை விலகல் யுத்த முடிவின் அம்சமாய் இல்லாமல், யுத்த சக்திகளின் மாற்றமாய் இருந்ததையே அங்கு அவதானிக்க முடிந்திருந்தது. யாருக்கும் அது உவப்பில்லாத நிலை. அதை அப்போதும் கலையாத மோனமும், அப்போதும் கலையாத ஸ்தம்பிதமும் நிரூபணமாக்கிக்கொண்டிருந்தன. அமைதியும் சமாதானமும் சுதந்திரமும் இன்னும் தொலைவிலானதாய். கந்தகப் புகை மணம் காற்றில் விரவாத கணம் இன்னும் அபூர்வமாய். “ (554).

Devakanthan book launch 033இதற்கு ஒத்த உணர்வை நானும் அக் காலங்களில் உணர்ந்தேன். ஆகவேதான் அந்தக் குறிப்பிட்ட காலத்தின் அனுபவத்தை “போராளிகளாக காடுகளுக்குள் சென்றவர்கள் இராணுவப் படையாக வெளியே மீள வந்தார்கள்” எனக் குறிப்பிடுவேன். இவ்வாறான இவர்களது மீள் வருகை எனக்கு எந்த நம்பிக்கையையும் தரவில்லை. மாறாக மக்களிடமிருந்து அந்நியமான போராளிகள் என்ற பெயரில் ஒரு இராணுவ படையையே கண்டேன். இக் கூற்று எந்தவகையிலும் உண்மையான அர்ப்பணிப்புடன் போராடிய போராளிகளை அவமதிப்பதாகாது என்பதைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.

இப் படைப்பை பாதியளவில் வாசிக்கும் பொழுதே மீண்டும் போராட வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்றது. சிங்கள மக்களை ஆகக் குறைந்தது சிறிலங்கா அரசை மன்னிக்கவே முடியாது என்ற உணர்வைத் தந்தது. இப்பொழுதும் நாம் போராடுவதற்கான நியாயங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. ஏனெனில், “பேரினவாதமெங்கிறது வெறும் கூச்சல் குழப்பம் கலவரம் எண்டதுகளுக்குள் அடங்கிவிடுகிறதில்லை. அதுக்கு திட்டமிட்ட செயல் தளம் இருக்கு, சித்தனைத் தளம் இருக்கு, தத்துவத் தளமிருக்கு. பேரினவாதத்தின்ர தத்துவத்தளம்… புனிதம். அமானுஷ்யமாக்கி தெய்வீகப்படுத்தும் எதையும். சிங்களவன் கண்ட புனிதம் இனம் சார்ந்தது. தன்னை ஆரிய இனமெண்டான் அவன். மொழியும் மதமும் இன அடையாளங்களாச்சு. அந்தப் புனிதம்.. தெய்வீகம்… இந்த அடையாளங்கள் அடிபடுகிற ஒவ்வொரு தருணத்திலயும் அவன் வெறியடையிறான். மகாவெறி. இலங்கையில இதுவரை காலத்தில நடந்த எல்லாக் கலவரங்களுக்கும் இதுதான் பின்புலம்” (323).

Devakanthan book launch 036மேலும் சொல்கிறார், “அரசுமயப்பட்ட இந்த வெறியை எதிர்க்கிறதுக்கு வெறும் சண்டைகள் போதாது. நிறுவனமயப்பாடு வேணும். எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தினால்தான் வெற்றிக்கான வாய்ப்புக் கிடைக்கும்” (323). என்கின்றார். தமிழ் இயக்கங்கள் “நிறுவனமயப்படலாம். ஆனா.. இதுவரைக்கும் அப்படி ஆகேல்லை. குழுநிலைகளில நிறுவனமயம் இல்லை. சக்தி பிரிநிலையில் நிறுவனமயம் உண்டாகாது. நிறுவனமயம்.. குழுநிலை தாண்டினது. அரசுமயப்பட்ட பேரினவாதத்தப்போல அதுவும் எதிர் தத்துவத் தளம் கொண்டது.” (323) ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? என்ற கேள்வியை கேட்பதுடன் பின்வரும் கூற்றையும் கவனத்தில் கொள்வது அவசியமானது எனக் கருதுகின்றேன்.

ஈழத் தமிழர்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறையும் அதிலிருந்து விடுதலைபெறுவதற்கான போராட்டமும் “… ஒரு மகா பிரளயம்! அடியொட்ட ஆட்டங்காணாமல் இது அடங்கப்போவதில்லை. பழைய அற விழுமியங்கள், பழைய சிந்தனைகளெல்லாம் வெடித்துச் சிதறத்தான் செய்யும். விடுதலைப் போராட்டம் கூட ஒரு தக்க விலை குறிக்கப்படும்போது திசைமாறிப் போக வாய்ப்புண்டு. இல்லையேல் போராளித் தலைவர்கள் யாரேனுமாவது அப்படிப் போகக்கூடும். நாம் நெருப்பின் துளிபோன்ற பரிசுத்தத்துடன் இருப்பதுதான் செய்யக்கூடியது. நெல்லுக்குப்போல புல்லுக்கும் பொசியும். இதன் ஒழுங்குபடுத்தல்களை காலம் செய்யும்.” (568).

அதேவேளை, “எங்களுடைய பிரச்சனையை அறிவுபூர்வமாக அணுகக்கூடாது என்பதல்ல. அவரவரும் தங்கள் தங்கள் அறிவின் ஆழ அகலத்துக்கேற்ப இப்பிரச்சனைகளுக்கு உருவங்கொடுத்து, மூல உருவத்தைச் சிதைத்துவிடுவதைத்தான் சொல்லுகிறேன்” என எச்சரிப்பதுடன் அது அறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வுபூர்வமான ஒரு பிரச்சனையும் என்கின்றார். இதைப் புரிந்து கொள்ளாதவரை இதற்கான தீர்வும் கனவாகவே இருக்கும். 11156189_10206433399303109_7043483978685836281_n

டொரன்டோவில் நடைபெற்ற இந்த நூல் விமர்சன நிகழ்வின் போது இது பெரிய நூல் கனம் அதிகம் எனவும் ஆகவே வாசிப்பதற்கு கஸ்டமானது என நான் மதிக்கும் ஒருவர் எதிர்மறையாகவே தனது கருத்துக்களை சபையில் முன்வைத்தார். அவருடைய உரை எனக்கு உடன்பாடானதாக மட்டுமிருக்கவில்லை எரிச்சலையும் உருவாக்கியது. ஆனால் நான் இந்த நூலை வேலைக்கு எடுத்துச் செல்வதுடன் பயணம் முழுவதும் கையில் வைத்து வாசித்தேன். அதன் அளவிற்கும் பாரத்திற்கும் அப்பால் அதனுடனான உறவு அவற்றை மறக்கச் செய்கின்றது. ஏனெனில் அந்தளவிற்கு வாழ்வின் சுமையை இது கொண்டுள்ளது. இக் கனம் நூலின் கனத்தைவிட அதிகமானது. இதை விட பெரிய தடித்த ஆங்கில நூல்களை எல்லாம் பலர் (தமிழ் முகங்களும்) சுமந்து கொண்டு பயணங்களின் போது வாசிப்பதைக் கண்டுள்ளேன். அவ்வாறு தமிழ் நூலையும் நமது வேலைக்கான பயணங்களின் போது வாசிக்க தயக்கமில்லையெனில் அதில் பெருமையிருக்குமாயின் தாராளமாக இந்த நூலையும் வாசிக்கலாம் என்றே நம்புகின்றேன்.

இப் படைப்பை வாசித்து கொண்டு போகும் பொழுது மூன்று இடங்களில் மட்டுமே எனது வாசிப்பு பயணம் தடைபட்டது. அந்த மூன்று இடங்களும் படைப்பாளர் “கற்பழிக்கப்படுகின்றாள்” (662) என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். இரண்டு இடங்களில் படைப்பாளரின் விளக்கமாக வந்ததே இத் தடைக்கான காரணமாகும். இதைத் தவிர்த்து வன்புணர்வு எனப் பயன்படுத்தியிருக்கலாம். மூன்றாவது இடம் பிரதான பாத்திரமும் இச் சொல்லைப் பயன்படுத்துகின்றது (653). இவர் ஒரு சதாரண மனிதராக இருந்தால் புரிந்துகொள்ளலாம். ஆனால் முற்போக்கான அடையாளம் கொண்ட ஒரு பத்திரிகையாளர் 1993ம் ஆண்களில் இதனைப் பயன்படுத்துவது நெருடலாக இருந்தது. ஏனெனில் அந்த நேரங்களில் “கற்பழிப்பு” என்ற சொல்லுக்கு மாற்றாக வன்புணர்வு என்ற சொல்லை சரிநிகர் உட்பட பல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பயன்டுத்தியதுடன் ஊக்குவித்தன. மேலும் இந்த மூன்று இடங்களிலும் இந்த சொல் பயன்படுத்தியது படைப்பாளரா அல்லது திருத்தியவர்களில் இடைச் செருகலா என்ற கேள்வியும் உண்டு. ஏனெனில் அந்தளவிற்கு எந்தத் தடைகளுமின்றி படைப்பாளரின் எழுத்தாற்றலும் நாவலின் பயணமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து நம்மை அந்தக் காலத்தில் பயணம் செய்வித்தன. மேலும் “ஏரியாத் தலைவரிட்ட” (573) என்ற சொற்றொடரும் பயன்படுத்தப்படுகின்றது. புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களும் “ஏரியாப் பொறுப்பாளர்” என்றுதான் கூறுவார்கள். இவ்வாறான சொற்களும் சில எழுத்துப் பிழைகளுமே வாசிப்பின் ஓட்டத்தை தடைசெய்தன. எனது நூலில் எழுத்துப் பிழைகள் நிறையவே வருவதுண்டு. ஆனால் காலச் சுவடு போன்ற தொழில்முறைசார்ந்து நூல்களை வெளியீடுகின்றவர்களின் படைப்புகளில் இவ்வாறு எழுத்துப் பிழைகள் வருவது வாசிப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் இவ்வாறான ஒரு நாவலைப் பதிப்பித்தமைக்கு நாம் காலச்சுவடு பதிப்பகத்திற்கு நன்றி கூற வேண்டியவர்களாக உள்ளோம்.

இப்பொழுதுதெல்லாம் நூல்களை மூக்கு கண்ணாடியின் உதவியுடன் பகல் வேளைகளில் தான் நன்றாக வாசிக்க முடிகின்றது. ஆகவே வேலைக்கான பயணத்தின் போதும் மதிய இடைவேளையின் போதுமே வாசிக்கின்றேன். இவ்வாறு இந்த நாவல் எனது நேரங்களை சிறை பிடித்தது. இரவுகளில் வாசித்ததை அசைபோடுகின்றேன். நித்திரையில் கனவு காண்கின்றேன். ஆம் கனவுச் சிறை வாசிக்கும் காலங்களில் அதனுடன் இரவும் பகலும் வாழ்ந்தேன். இப்பொழுதும் வாழ்கின்றேன். இரண்டு வார காலங்கள் பெரும் சுனாமியில் சிக்கியிருந்தேன். அதிலிருந்து வெளிவருவது மிகவும் கஸ்டமானதாக இருக்கின்றது. அந்தளவிற்கு என்னை இப் படைப்பு தாக்கியுள்ளது. ஆனால் இத் தாக்குதல் என்னை அழித்துவிடவில்லை. தேடவும் அறிந்து கொள்ள வழிகாட்டுகின்றது.

இறுதியாக, “மக்களுக்காக நான் எழுதுவதில்லையென்று ஒரு குறை இருக்கு. ஆனாலும் நான் மக்கள் பக்கம்தான். அதாலதான் நான் மற்ற சக்திகளை எதிர்க்கிறன். அது ஆபத்தானது எண்டது எனக்குத் தெரியும். தங்குதடையில்லாத பறத்தலுக்கு விரிந்த வானத்தின் என் இச்சிப்பை இவர்கள் புரிந்துகொள்ளமாட்டினம் எண்டதும் எனக்குத் தெரியும். ஆனாலும் வேறமாதிரி எழுத என்னால முடியேல்லை!” (457)
என்பதை தேவகாந்தன் அவர்கள் இப் படைப்பின் மூலம் நிறுபித்திருக்கின்றார்.

Devakanthan book launch 025நாளை இக் கட்டுரைத் தொடரின் பகுதி இரண்டை  – கனவுச்சிறை –  என்னை விடுதலை செய்தது! – பகுதி – 2 –  பதிவு செய்வேன்.
மீராபாரதி
தொடர்புகளுக்கு. meerabharathy@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: