Posted by: மீராபாரதி | July 19, 2015

நஞ்சுண்ட காட்டில் விசமுண்ட வாழ்வு – விடமேறிய கனவு

கைதிகளான போராளிகளின் (மனப்) போராட்டம்! 11225069_949648785091598_6325538335323944387_nகுணா கவியழகன் அவர்கள் தனது நஞ்சுண்ட காட்டில் ஏழைகளின் வாழ்வையும் வறுமையின் வலியையும் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பையும் வெளிக்கொண்டுவந்தார். மேலும் ஒரு போராளி எந்தளவு அர்ப்பணிப்புடன் நமது போராட்டத்தில் தனது வாழ்க்கையை இணைத்துள்ளார் என்பதை யதார்த்தமாக சித்திரித்ததுடன் மிகவும் உணர்வுபூர்வமாகவும் இலக்கியத்தரத்துடனும் அழகாகவும் பதிவு செய்துள்ளார். இப் படைப்பினுடாக சிறந்த ஒரு படைப்பாளியாக தமிழ் பேசும் உலகில் அறியப்பட்டார். இப்பொழுது விடமேறிய கனவு என்ற தனது படைப்பில் ஒரு இனவழிப்பின் ஊடாக போரை முடித்துவைத்தபின் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த போராளிகளின் உணர்வுகள், சிந்தனைகள், மற்றும் மனம் ஆகியவற்றுடனான போராட்டங்களையும் அதனால் உருவான உளவியல் பிரச்சனைகளையும் கஸ்டங்களையும் நேர்மையாக பதிவு செய்துள்ளார். இதனுடாக நமது போராட்டத்தின் தோல்விக்கான காரணங்களையும் விடுதலைக்கான புதிய பாதையையும் தேடுகின்றார். அதாவது, “வலியிலிருந்துதான் வாழ்வைக் கற்றுக் கொண்டோம். வாழ்விலிருந்து வலிகளைக் கடந்தாக வேண்டும்” (150) எனக் கூறுகின்றார். விடமேறிய கனவு என்ற படைப்பு பல தளங்களில் முக்கியத்துவமுடையது. போரில் தோற்ற பின்பு சிறிலங்கா அரசின் அதிகாரத்துவத்திற்குள் வாழ்கின்ற போராளிகளின் சூழலை நாம் ஏன் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதற்கு இந்த நூல் சாட்சியாக இருக்கின்றது. புலம் பெயர்ந்தவர்கள் இதைக் கவனத்தில் எடுக்காது (நாம்) அவர்கள் மீது குத்தும் முத்திரைகள் மற்றும் அவர்களைப் பற்றிய மதிப்பீடுகள் எவ்வளவு பொறுப்பற்ற செயல் என்பதை இப் படைப்பினுடாகப் புரிந்துகொள்ளலாம். மேலும் புலம் பெயர்ந்தவர்கள் புலத்தில் வாழ்பவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக உடனடியாக முடிவு எடுத்து முத்திரை குத்துவதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளவும் இந்த நூல் பங்களிக்கலாம்.front page kuna இப் படைப்பு போராட்டத்தில் பங்குபற்றிய பலவகையான சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் கொண்ட போராளிகள் தொடர்பான ஒரு ஆய்வாகவும் இருக்கின்றது. சிலர் ஆரம்பத்திலிருந்தே போராட்ட உணர்வுடன் பங்குபற்றியவர்கள். சிலர் சூழ்நிலைகளால் பங்குபற்றியவர்கள். சிலர் கட்டாயப்படுத்தப்பட்டு பங்குபற்றியவர்கள். இவ்வாறு பல காரணங்களுக்காகப் பங்குபற்றியவர்கள் காலோட்டத்தில் போராட்டத்தில் நேர் மறையான எதிர்மறையான பாத்திரங்களை ஆற்றியுள்ளார்கள். காலம் மற்றும் அனுபவம் இவர்களிடம் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இவர்கள் அதிகாரத்துவத்தின் கைதிகள் ஆகும்பொழுது அல்லது அதன் கீழ் வாழும் பொழுது தமது அறிவுக்கும் அனுபவத்திற்கும் புரிதல்களுக்கும் ஏற்ப முடிவுகள் எடுத்து செயற்படுகின்றனர். சிலரது நோக்கங்கள் வெளிப்படையானவை. சிலரது நோக்கங்கள் புரிந்து கொள்ளக்கூடியவை. சிலரது செயற்பாடுகள் சந்தேகங்களை உருவாக்கக் கூடியவை. இருப்பினும் அவர்களுக்குள் என்ன இருக்கின்றது என்பது நாம் அறியாதது என்பதைத் தெளிவாக இப் படைப்பினுடாகப் புரியவைக்கின்றார். ஆகவே புலத்தில் வாழ்கின்ற போராளிகள் தொடர்பான நமது புரிதல்களை உருவாக்கவோ தெளிவுபடுத்தவோ அதற்கான சூழல் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அவசியமாயின் ஆரோக்கியமான உரையாடல்களை மட்டுமே இப்பொழுது நாம் தொடரலாம்.

புனர்வாழ்வின் போது போராளிகளில் செய்யப்பட்ட அழங்காரப் பொருட்கள்

புனர்வாழ்வின் போது போராளிகளில் செய்யப்பட்ட அழங்காரப் பொருட்கள்

இப் படைப்பில் கைது செய்யப்பட்ட போராளிகளுக்கு நடைபெறும் சித்திரவதைகள் முக்கியமான ஒரு பகுதி. (புதியதொரு உலகம் மற்றும் ஆயுத எழுத்து ஆகிய நூல்களிலும் இவ்வாறான சித்திரவதைகள் விரிவாக கூறப்படுகின்றன.) தங்கள் உயிரைக் காப்பாற்ற இதை எல்லாம் அவர்கள் எதிர்கொண்டு பொறுமையுடன் கடக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் முன்பு இயக்கத்திலிருந்து புலம் பெயர்ந்த நண்பர் ஒருவர் மீண்டும் இலங்கைக்குப் போவதற்கு தனக்குப் பயம் என்றார். காரணம் சித்திரவதையை தாங்க முடியாது என்றார். இப் பயம் நியாயமானது. ஆனால் இங்கிருந்து இயக்கத்திற்காக ஆயுதப் போராட்டத்திற்காக வேலை செய்கின்றார் (செய்தார்). இதனால் அங்கு பிரச்சனைகளையும் சித்திரவதைகளையும் எதிர்நோக்குகின்றவர்கள் தொடர்பாக சிந்தித்தாரா என்பது கேள்வி. ஏனெனில் இப்படித்தான் பலர் இங்கு தாம் பாதுகாப்பாக இருந்து கொண்டும் தெரிவுகள் பலவற்றைக் வைத்துக் கொண்டும் உள்ளார்கள். ஆனால் புலத்தில் வாழ்பவர்களின் உணர்வுகளையோ விருப்பங்களையோ புரியாமல் அவர்கள் வாழும் சூழலுக்குள் மேலும் அவர்களை மாட்டிவிடுகின்ற காரியங்களையே செய்கின்றனர். அவர்களுக்கு வேறு தெரிவுகள் இல்லாமையால் அதிகாரத்துவத்தின் கைகளுக்குள் மாட்டுப்படுகின்றனர். ஆகவே புலம் பெயர்ந்தவர்கள் செய்கின்ற காரியங்கள் எந்தவகையான அறம் என்பது கேள்விக்குரியது. என் மீது ஒருவர் வன்முறையை பிரயோகிக்கும் பொழுது அது எனக்கு வலிக்கின்றது. நான் வேதனையில் துடிக்கின்றேன். இப்படி செயற்கையாக மரணிக்காமல் இயற்கை மரணம் வரும்வரை வாழ்வதற்கு விரும்புகின்றேன். அப்படி இருக்கும் நான் இன்னுமொருவர் மீது வன்முறை பிரயோகிப்பதோ கொலை செய்வதோ எந்தவகையான அறமாகும். நான் உணர்ந்த வலியையும் வேதனையையும் மற்றவரும் அனுபவிப்பார் தானே. அவருக்கும் இயற்கையாகவும் அமைதியாகவும் மரணிக்க விருப்பம் இருக்கலாம் அல்லவா? ஆகவேதான் வன்முறையையும் கொலை செய்யும் கலாசாரத்தையும் எதிர்க்கின்றேன். ஆயுதங்களைப் புறக்கணிக்கின்றேன். அதேநேரம் போராட்டத்திற்கான புதிய வழிகளைத் தேட வேண்டி உள்ளது. 10463941_368417336693593_2252558111437506106_nஒரு போராளி கைதியாக இருக்கும் சூழ்நிலையில் அவர் மனநிலை எப்படி இருக்கும்? தனது உயிர் வாழ்வு முக்கியமானதா? மற்றவர்களது முக்கியமானதா? இது சுயநலமா? அல்லது நம் மனம் அவ்வாறுதான் சிந்திக்குமா? இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களையும் சிறைபிடிக்கப்பட்ட சூழ்நிலையில் வாழ்கின்ற மனிதர்களின் உளவியலையும் மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றார். ஒரு காலத்தில் மற்றவருக்காக உயிரைவிடவும் தயாராக இருந்தவர்கள் இன்று தமது உயிரே முக்கியமானது அதைப் பாதுகாப்பதே   பிரதானமானது என்ற நிலையில் வாழ்கின்றனர். ஆகவே இவ்வாறான போராளிகள் கைதியாக இருக்கும் பொழுது ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகமே மேலோங்குகின்றது. ஆகவேதான் “மனதில் கேட்கும் கேள்வியை முகத்தில் மறைப்பது நண்பர்களுக்கு இடையில் இலகுவானதல்ல” என்கின்றார். ஒருவர் முன்பு இயக்கத்தில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தபோதும் அவர் மீது ஆழமான நம்பிக்கை அன்று இருந்தபோதும் இன்று அவர் மீது சந்தேகம் ஏற்படுவதையோ அல்லது இவ்வாறான மன எண்ணங்கள் ஓடுவதையோ தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் இப்பொழுது “நான்” முக்கியமாகிவிட்டேன். எனது தப்பித்தலே பிரதானமானது என்றாகிவிட்டது என்பதை இப் படைப்பானது நமக்கு உணர்த்துகின்றது. ஒருவர் முந்நாள் இராணுவ சிப்பாயாக இருக்கலாம். ஆனால் ஒரு போராளி ஒருபோதும் முந்நாள் போராளியாக இருக்க முடியாது. ஏனெனில் ஒரு போராளி என்பவர் தனது நோக்கத்தில் இறுதி இலக்கில் எப்பொழுதும் தெளிவாக இருப்பார். அதை நோக்கிய பயணத்தில் பல தடைகள் பிரச்சனைகள் மாற்றங்கள் ஏற்படலாம். அதை அவர் எவ்வாறு எதிர்நோக்கி செல்கின்றார் என்பதிலையே அவரது இறுதி வெற்றி தங்கியுள்ளது. சமூக விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த போராளி என்பவர் எப்பொழுதும் போராளிதான். (தூரதிர்ஸ்டவசமாக இப் போராளிகள் எந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடினார்களோ அந்த சமூகத்துடனையே இன்று போராட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்). ஆனால் இப் பயணத்தை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவர் அவர்கள் தொடர்பான எதிர்மறையான மற்றும் தவறான முடிவுகளை எடுக்கலாம். அவ்வாறு எடுப்பது மட்டுமல்ல அவர்களை தூற்றவும் செய்கின்றனர். ஆகவேதான் குணா கவியழகனின் பின்வரும் கூற்று முக்கியத்துவம் பெறுகின்றது. kuna 1“நான் கொண்ட நியாயங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கின்றேன். அதுவும் மரணத்தின் விசநிழலில். எங்கள் நியாயங்களுக்காக எதையெல்லாம் இழந்தோம்? அடுத்தவருக்காக உயிரை இழக்கச் சித்தமாகவே வாழ்ந்தோம். இன்னும் நான் உயிருடன் இருப்பது என் குற்றமல்லவே. குற்றம் தான் என்றால் அது விதியின் குற்றம். ஒரு கோடி குண்டுகளால் என் உடலைக் களத்தில் சாய்க்க முடியவில்லை. ஆனால் வாழ்வனைத்தும் மரணத்தின் எதிரேதான் நின்றோம். இன்றது விசமுண்ட வாழ்வாகிப் போனதேன்” (102). என எம்மைப் பார்த்து கேள்வி கேட்கின்றார்? ஆனால் இதற்கு நம்மிடம் பதிலில்லை. போராளிகள் தொடர்பாக எதிர்மறையாக உரையாடுபவர்களுக்கு இக் கேள்விகள் உறைக்குமா என்பது சந்தேகமே. குணா கவியழகன் தனது முதலாவது படைப்பிலையே இயக்கத்தின் போக்கு தொடர்பாக பயமின்றி தயக்கமின்றி விமர்சித்திருக்கின்றார். அல்லது கேள்வி கேட்டிருக்கின்றார். அன்று அது கருத்தில் எடுக்கப்பட்டு அலசி ஆராயப்பட்டிருந்தால் இவ்வாறான பெரும் தோல்வி எங்களுக்கு ஏற்பட்டிருக்காது. இது மட்டுமல்ல தனது இரண்டாவது படைப்பில் அதைப்பற்றிய (சுய)விமர்சனம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆனாலும் அதன் முக்கியத்துவம் கருதி செய்கின்றார். குறிப்பாக கட்டாய ஆட்பிடிப்பு தொடர்பான தனது ஆதங்கத்தை அதன் தவறை அது ஏற்படுத்திய பாதிப்பை உரையாடுகின்றார். மற்றவர்களை கட்டாயமாகப் பிடிக்கும் பொழுது அதனால் குறிப்பிட்ட குடும்பத்தில் ஏற்படும் பாதிப்பை பிடிப்பவர்கள் உணர்வதில்லை. ஆனால் தனது குடும்பத்தில் உள்ள ஒருவர் இவ்வாறு பிடிக்கப்பட்டு மரணிக்கும் பொழுதுதான் அந்த வலியும் தாம் செய்த தவறும் உணரப்படுகின்றது. ஆனால் அது காலம் கடந்த ஒரு உணர்தலாக மட்டுமே இருக்கின்றது. “போராளியாக உயிரை விடுவது முக்கியமல்ல. போராளியாக உயிர் வாழத் தெரிந்திருக்க வேண்டும்” என சேகுவேரா கூறியதாக குறிப்பிடுகின்றார். ஆனால் தமிழ் இயக்கங்கள் போராளியாக உயிர்வாழ முயற்சிக்கவில்லை. மற்றவர்களின் உயிரை எடுப்பதற்கும் அல்லது ஒருவர் உயிரை விடுவதற்கும்தான் வழிகாட்டினார்கள். மாறாக வாழ்க்கையை ஒரு போராட்டமாக மாற்ற நாம் முனையவில்லை. இயக்கமும் மக்களும் பிரிந்து இருந்தது போல ஈழத் தமிழர்களின் வாழ்வும் போராட்டமும் பிரிந்தே இருந்தது. இது நமது தூரதிர்ஸ்டம் மட்டுமல்ல நமது போராட்டத்தின் தோல்விக்கான மூலகாரணமுமாகும் என்றால் மிகையல்ல. இயக்கம் மீண்டும் போரை ஆரம்பித்தது தொடர்பான விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. உலக நாடுகள் ஒன்றுபட்டு எம்மை தோற்கடித்தற்கு அப்பால் நாம் போருக்கான தயாரிப்புகளை செய்யாமல் நமது படைப்பலத்தை கருத்தில் எடுக்காமல் போரிட ஆரம்பித்தது பெரும் தவறு. மேலும் உலகநாடுகள் இணைந்து நமது 11 ஆயுதக் கப்பல்களை முடக்கியபோதே விழிதிருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் திட்டம் உள்ளது என்று மட்டும் கூறிக்கொண்டிருந்தோம் எனப் பல வகையான விமர்சனங்களை முன்வைக்கின்றார். இவ்வாறான சுய விமர்சனங்களே இன்று அவசியமானவை. இதுவே நமது பாதையை செப்பனிட்டு எதிர்காலத்திற்கான வழியை உருவாக்கும். இப் படைப்பில் சிங்கள முற்போக்காளர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களிடம் அடைக்களம் தேடிச் செல்கின்றார். இது குறியீட்டு அடிப்படையில் இனிவரும் காலங்களில் நாம் சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்தே நமது விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம். இவ்வாறான ஒரு நம்பிக்கையை நீண்ட காலமாக நான் வைத்திருந்தேன். இப்பொழுதும் இருக்கின்றது. முன்பு எல்லாம் சிங்கள நண்பர்களைச் சந்திப்பதற்கு ஆர்வமாகவும் நீண்ட தூரங்கள் பயணம் செய்தும் தேடிச் செல்வேன். ஆனால் போரின் பின்பு இலங்கைக்குச் சென்றபோது அந்தளவு ஆர்வம் ஏற்படவில்லை. இதற்கு அவர்கள் மீது இருந்த நம்பிக்கை இல்லாமல் போனது காரணமாக இருக்கலாம். அல்லது 2009 மே வரை நடந்ததை அவர்கள் தடுத்து நிறுத்த முடியாமல் இருந்ததை மன்னிக்க முடியாமல் இருப்பது காரணமாக இருக்கலாம். ஆனால் நான் புலம் பெயர்ந்து விட்டேன். சிங்கள மக்கள் தொடர்பாக எந்த ஒரு நிலைப்பாட்டையும் நான் எடுக்கலாம். அதனால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனெனில் நான் பாதுகாப்பாக வாழ்கின்றேன். எனக்குத் தெரிவுகள் உள்ளன. ஆனால் புலத்தில் வாழ்பவர்களுக்கு அவ்வாறல்ல. அவர்களுக்குத் தெரிவுகள் இல்லை. அவர்களது நாளாந்த வாழ்வுக்குத் தேவையான சாதாரண விடயங்களிலிருந்து பொருளாதாரம், போக்குவரத்து, கல்வி என முக்கியமான விடயங்கள் வரை சிங்கள மக்களுடன் மட்டுமல்ல சிறிலங்கா அரசாங்கத்துடனும் அதன் இராணுவத்துடனும் இணைந்தும் சமரசத்துடனும் மட்டுமல்ல சிலநேரங்களில் நசிந்தும் செய்யவேண்டி உள்ளது. இது அவர்களால் தவிர்க்க முடியாத சூழல். ஏனெனில் உயிர் வாழ்தல் முக்கியமானது. விறுமாப்பு பேசுவது திரைப்படங்களுக்கு மட்டுமே பொருத்தமானதுபோல. மறுபுறம் தமிழ் அரசியல் தலைமைகள் மக்களை சரியான அரசியல் பாதையில் வழி நடாத்திச் செல்கின்ற எந்த வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்காத நிலையில் மக்களின் சதாரண முடிவுகளை நாம் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் “இந்த அற்பர்களின் முன்னால் கைகட்டிக் குனிய வேண்டி உள்ள கடை அவமானத்தின் வலி ஆரம்ப நாட்கள் போன்று கைதிகளுக்கு இப்போது இல்லை. இந்தச் சூழலுக்குள் வாழ்வமைத்துக் கொள்வது எப்படி என்பதில்தான் கைதிகளின் மனம் அக்கறைப்பட்டுக் கொண்டுபோனது. ஒரு சமயம் அதுவே வடிகாலாக அமைந்து நொறுங்கும் மனத்தின் துணையாகிக் கொள்கிறது என்றும் சொல்லலாம். அல்லாவிட்டால் தன்நிலை கண்டு தன்னைக் கொன்றுவிட மனம் உந்திவிடக்கூடும்.” (192). போராளிகள் மட்டுமல்ல புலத்தில் வாழ்கின்ற மக்களும் ஒருவகையில் கைதிகள் தான். ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் வாழ்கின்ற (முந்நாள்) போராளிகளின் நிலைபற்றி நாம் புரிந்துகொள்வது கடினமானதல்ல. ஆனால் இவர்களைப் பற்றிய அக்கறை நம்மிடம் உள்ளதா? father 032இறுதியாக இவ்வாறான படைப்புகளை வாசிக்கும் பொழுது நமது வாழ்வையும் இதனுடன் இணைத்துப் பார்ப்பது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. அந்தவகையில் இதில் வருகின்ற ராசு அண்ணர் என்ற பாத்திரத்துடன் எனது தந்தையாரை (கரவை கந்தசாமி) ஒப்பிட்டுப் பார்த்தேன். அவருக்கு மூன்று மொழிகளிலும் சராளமாகக் கதைக்கவும் எழுதவும் தெரியும். ஆகவே பல சந்தர்ப்பங்களில் இப் பாத்திரத்தின் நிலைக்கு அவரை கொண்டு வந்து சூழல் விட்டு விடும். ஒரு புறம் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் மறுபுறம் அதிகாரம் கொண்டவர்களுக்கும் இடையிலான தொடர்பாளராக இருக்க வேண்டிய சூழல். இது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல அவசியமானதுகூட. உதராணமாக சிறிலங்கா மற்றும் இந்திய இராணுவத்துடன் மக்களுக்காகவும் போராளிகளுக்காகவும் மட்டுமல்ல தடை செய்யப்பட்ட சக இயக்கப் போராளிகளுக்காகவும் உரையாடியவர். (இவ்வாறான செயற்பாடுகளுக்காக பலர் இவருக்கு மரண தண்டனை விதித்தது வேறு விடயம்). இச் சந்தர்ப்பங்களில் எல்லாம் எந்த அதிகாரத்திலுள்ளவர்களுடன் சந்தித்தாலும் அவரது உடல் மொழியும் உரையாடும் முறையும் அதேயளவு அதிகாரத்தை வெளிப்படுத்தும். குனிக்குறுக மாட்டார். அதேநேரம் மக்களுடன் நண்பர்களுடன் உரையாடும் பொழுது அவரது உடல் மொழி வேறாக இருக்கும். அவர் மீது எனக்கு அரசியல் அடிப்படையில் பல விமர்சனங்கள் இருந்தபோதும் இவ்வாறான பண்புகள் நான் ஒரு மகனாக மட்டுமல்ல அரசியல் ஈடுபாடு உள்ள ஒருவராகவும் மதிக்கும் விடயங்களாகும். ஆனால் நான் கண்ட அறிந்த நமது தமிழ் தலைவர்களிடம் இந்தப் பண்புகளை இதுவரை காணவில்லை. மக்களுக்கு எப்பொழுதும் தமது அன்றாட வாழ்வே முக்கியமானது. அதுவும் வறுமைக்கோட்டிற்கு கீழே போர்க்காலச் சூழலில் வாழ்பவர்களது நிலை மிகவும் கவலைக்கிடமானது. இவர்களுக்கு அப்பா மற்றும் ராசு அண்ணர் போன்றவர்களது பங்களிப்புகள் என்றும் தேவையானது. இன்று இப் படைப்பிலுள்ள ராசு அண்ணர் பாத்திரத்தை இப் படைப்பாளி புரிந்து கொண்டதுபோல் இவர்கள் (சகல இயக்கங்களும்) அதிகாரத்திலிருந்தபோது இவ்வாறானவர்களைப் புரிந்து கொண்டார்களா என்பது கேள்வி. ஆகவேதான் “துரோகி” என்ற பட்டம் கொடுத்து அவசியமானவர்கள் முக்கியமானவர்கள் என பலரது உயிர்களை அன்று பறித்தோம். ஆனால் நமக்கு இக்கட்டான சூழ்நிலைகள் வரும் பொழுதுதான் சக மனிதர்களின் தேவைகளை, பங்களிப்புகளை, அவர்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்கின்றோம். ஆனால் இவ்வாறான காலம் பிந்திய புரிதல் மிகவும் தூரதிர்ஸ்டமானது. பயனற்றது. ஏனெனில் போன உயிர் திரும்பிவரப் போவதுமில்லை அக் கொலைகளின் ஏற்பட்ட விளைவுகளுக்கும் முற்றுப்புள்ளிகள் வராது. அதிகாரத்திலிருக்கும் பொழுது பெரும்பாலானவர்கள் இவ்வாறுதான் பொறுப்பற்றதனத்துடன் செயற்படுவார்கள். ஆனால் குணா கவியழகன் தனது முதற் படைப்பை அதிகாரத்தில் அல்லது அதிகாரத்துவத்துடன் இருந்த போதே நேர்மையாகவும் பொறுப்புடனும் சுய விமர்சனத்துடனும் பதிவு செய்துள்ளார். அதற்காக அவர் பாராட்டவும் மதிக்கப்படவும் வேண்டியவர். 11403319_10155600500695012_7961329599699008813_nகுணா கவியழகனின் படைப்பின் முக்கியத்துவம் அவரது நேர்மையே. முன்பு அதிகாரத்திலிருந்தபோதும் இன்று அதிகாரதிலில்லாதபோதும் பயமின்றி நேர்மையுடன் தனது கருத்துக்களை முன்வைத்தார். வைக்கின்றார். இவ்வாறானவர்கள் மிகவும் அரிது. அதுவே இவருக்கான முக்கியத்துவத்தை அளிக்கின்றது. மேலும் ஒரு படைப்பாளராகவும் உயர்ந்து நிற்கின்றார். குணா கவியழகனின் பின்வரும் கூற்று நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. “நிகழ்காலம் நம்பிக்கையற்றதாகும்போது மனிதர்கள் கடந்த காலத்தின் துக்கச் சுழிக்குள் மாட்டிவிடுகிறார்கள். அல்லது எதிர்காலத்தின் அச்ச வலைக்குள் சிக்கிவிடுகிறார்கள். ஆனால் நானோ மனிதர்கள் கடந்த காலத்தின் துயரிலோ எதிர்காலத்தின் அச்சத்திலோ அகப்பட்டுக் கொள்ளும்போதுதான் நிகழ்காலத்தின் மீது நம்பிக்கையை இழக்கின்றார்கள் என்றே புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன்.” (106). இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்திற்கான திட்டத்தை நிகழ்காலத்தில் நம்பிக்கையுடன் வாழ்வதன் மூலமாக செயற்படுத்த முடியும் என்பதாகும்! இந்த நம்பிக்கையை மக்களிடம் உருவாக்குவதற்கு நல்லதொரு அரசியல் தலைமை தேவை. அந்த வெற்றிடம் நீண்ட காலமாகவே தமிழ் சமூகத்தில் இருக்கின்றது. மீராபாரதி படங்கள் – குணா கவியழகன், வாசுதேவன் தொடர்புகளுக்கு meerabharathy@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: