Posted by: மீராபாரதி | June 16, 2015

கனவுக்குத் திரும்புதல் – 2 – பேராசிரியர் சொர்ணவேல் – ஒரு முன்மாதிரி

வாழ்க்கை என்பது கடல்ல.. சமுத்திரமல்ல… அது ஒரு பால் வெளி… அப்படியான வாழ்க்கையை நாம் முழுவதும் புரிந்து கொள்ள முயற்சிப்பது என்பது கடினமான ஒன்றே…. இருப்பினும் வாழ்வின் அர்த்தம் தேடி அல்லது அது உருவாக்கிய கேள்களுக்கான பதில்களைத் தேடிப் புறப்பட்ட நாம் எமக்கு கிடைக்கின்ற துரும்புகளைப் பிடித்துக் கொண்டு விடைகளைக் காணப் பயணம் செய்கின்றோம்…. அவ்வாறான ஒரு துரும்புதான் திரைப்படம்! சிறு வயதில் திரைப்படம் ஆர்வமாகப் பார்த்ததற்கு வேறு காரணங்கள் இருந்தன…. இன்னுமொரு காலத்தில் திரைப்படங்களையே புறக்கணிக்கவும் காரணங்கள் இருந்தன… ஆனால் மனித வாழ்வை புரிந்து கொள்வதற்கு திரைப்படம் ஒரு வழி என்பதைப் புரிந்த பின் நல்ல திரைப்படங்களை தேடித் தேடி மட்டுமல்ல கால் வலிக்க காத்திருந்து பார்க்கவும் ஆரம்பித்தோம். இத் திரைப்படங்கள் பால் வெளி போன்ற வாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களையும் எமக்கு ஒரு தட்டில் வைத்து தருவதில்லை…. ஆனால் குட்டைகளிலும் குளங்களிலும் நதிகளிலும் கடல்களிலும் வாழும் மனிதக் கூட்டங்களை அவர்களின் வாழ்வின் சிறு துளியை, அவர்கள் அனுபவங்களின் ஒரு மூச்சை திரைப்படங்களினுடாக சில இயக்குனர்கள் எமக்கு அனுபவிக்கத் தருகின்றார்கள். இவை பால் வெளியாக இருக்கும் வாழ்வை நாம் அனுபவிப்பதற்கான ஒரு துரும்பாக நமக்கு கிடைக்கின்றன…. இவ்வாறு மற்றவர்களின் அனுபவங்களை நாம் அனுபவிப்பது உணர்வது என்பது அவர்களை மட்டும் நாம் புரிந்து கொள்வதற்கு பங்களிப்பதில்லை. எம்மை நாம் புரிந்து கொள்ளவும் பங்களிக்கின்றது… அவ்வாறான புரிதலில் தான் சமூக மாற்றத்திற்கான பயணமும் ஆரம்பிக்கின்றது இவ்வாறுதான் திரைப்படங்களை நான் பார்க்கின்றேன்… அவ்வாறான படங்களைத் தான் தேடுகின்றேன்.

பேராசிரியர் சொர்ணவேல் - படம் கருணா

பேராசிரியர் சொர்ணவேல்
– படம் கருணா

எனது தேடலை இன்னுமொரு தளத்திற்கு எடுத்துச் சென்றார் பேராசிரியர் சொர்ணவேல் அவர்கள். திரைப்படங்கள் என்பவை கடந்த காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் அவை நிகழ் காலத்தில் நிகழ்பவை. அவ்வாறுதான் அதைப் பார்க்கும் பொழுதும் உணர்கின்றோம். அது எவ்வளவு பழைய படமாக இருந்தாலும் இன்று பார்க்கும் பொழுதும் அவ்வாறான உணர்வையே அது தருகின்றது என்றார். ஏனெனில் திரைக்கதை அவ்வாறுதான் எழுதப்படுகின்றது…. எழுதப்பட வேண்டும் என்றார். மேலும் திரைப்படங்களின் ஒவ்வொரு காட்சியும் அது வெளிப்படுத்தும் சட்டகத்திற்கு அப்பாலும் வாழ்வு தொடர்பான பல பரிமாணங்களை நமக்கு சொல்கின்றது…. அதைப் புரிந்து கொள்ளவேண்டியது நமது பொறுப்பு. அதை எவ்வளவு பொறுப்புடன் அர்ப்பணிப்புடன் செய்கின்றோம் என்பது எம்மைப் பொறுத்தது. இருப்பினும் அதற்கு இவ்வாறன சந்திப்புகள் உரையாடல்கள் அவசியமானவை. பேராசிரியர் சொர்ணவேல் அவர்களுடனான சந்திப்பு வெறுமனே திரைப்படங்கள் அதன் இயக்கம் தயாரிப்பு தொடர்பான தகவல்கள் மட்டும் கொண்டதாக மட்டும் இருக்கவில்லை. மாறாக நமது வாழ்வை ஊந்தி தள்ளவும் உற்சாகமாக வாழவும் தேடவும் வைக்கின்ற ஒரு சந்திப்பாக இருந்தது. இவரிடம் கற்கும் மாணவர்கள் பேறு பெற்றவர்கள். நாம் திரைப்படங்களைத் தயாரிக்கின்றோமோ இயக்குகின்றோமோ இல்லையோ ஆனால் இவருடனான மூன்று மணி நேர சந்திப்பு வாழ்வில் பலருக்கு கிடைக்காத பெரும் பாக்கியம். இத் திரைக் கதை பயிற்சி பட்டறை ஒழுங்கு செய்த தாய் வீடு பத்திரிகை (திலீப்குமார்) சுயாதீன திரைப்பட மையம் (ரதன்) ஆகியோருக்கு ஆனந்தமாக நன்றி கூறுகின்றோம். இலன்டனிலும் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக அறிகின்றோம். வாய்ப்புள்ளவர்கள் தவறவிடாதீர்கள்.

பேராசிரியர்கள் இவரைப் போலதான் இருக்க வேண்டும். நாம் அவரை அணுகத் தேவையில்லை. அவராகவே எங்களை அணுகுவார். மேலும் தான் தேடிப் பெற்ற அறிவை எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அனைவருடன் பகிர்வது மட்டுமல்ல தனது துறையில் கற்கும் மாணவர்களுக்கு அவர் ஒரு ஊக்கியாகவும் இருக்கின்றார். இவரைப் போன்ற ஒரு பேராசிரியர் அன்று நமது அரசியல் அறிவை பாதையை செப்பனிடுவதற்கு எங்களுக்கு கிடைத்திருந்தால் இன்று நமது வாழ்வு வேறு மாதிரி இருந்திருக்கலாம். இன்றும் பிரக்ஞை தியானம் தொடர்பாக விரிவான ஆழமான ஆய்வு செய்ய விரும்புகின்றேன். இதை ஊக்குவிக்கும் இவரைப் போன்ற ஒரு பேராசிரியரையே தேடுகின்றேன். கிடைப்பார் என்ற நம்பிக்கையில்…. வாழ்வு தொடர்கின்றது.

பி.கு – இளங்கோவின் கள்ளி கதை முதன் முதலாக வாசிக்கும் பொழுதே அதனால் ஈர்க்கப்பட்டேன். அவருடனான முரண்பாடுகள் விவாதங்கள் விமர்சனங்களுக்கு (அவ்வாறுதான் ஆரோக்கியமான உறவை வளர்க்கலாம்) அப்பால் அவரது எழுத்தை அவரை பதிவுகள் இணையத்திலிருந்து அறிந்த நாள் முதல் விரும்பி வாசிக்கின்றேன். பேராசிரியர் சொர்ணவேல் அவர்கள் இக் கதையின் சர்வதேச பரிமாணத்தை எங்களுக்குப் புரியவைத்தார். இங்கு தான் ஒரு மனிதர் படைப்பாளராக உயர்ந்து நிற்கின்றார். வாழ்த்துக்கள் இளங்கோ. உங்கள் படைப்புகளை மேலும் எதிர்பார்த்து….. இப் பதிவு கொஞ்சம் உணர்ச்சிவசமாக வாசிப்பவர்களுக்கு இருக்கலாம்.. ஆம் வாழ்வின் சில கணங்களில் சிலரைச் சந்திக்கும் பொழுது அப்படி நடைபெறுகின்றது. அவ்வாறன இன்னுமொரு சந்திப்பும் அதே நாள் நடைபெற்றது. அதைப் பற்றி நாளை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: