Posted by: மீராபாரதி | May 20, 2015

மனவெளியின் அரங்கப் படைப்புகள்: சொற்களும் கருத்துக்களும் – சில விமர்சனக் குறிப்புகள்.

மனவெளியின் அரங்கப் படைப்புகள்: சொற்களும் கருத்துக்களும் –  சில விமர்சனக் குறிப்புள். 1376406_466112576835223_1471427909_nமேடையேற்றத்துடன் ஒரு படைப்பு முடிவடைந்து விடுவதில்லை. அதற்குப் பின்பு தொடரும் உரையாடலிலும் அது தொடரும் என நண்பரும் இயக்குனருமான மெலிஞ்சியினது கூற்றையும் மற்றும் விமர்சனங்களை எழுதும்படி ஊக்குவிக்கும் செல்வனினதும் நிலைப்பாட்டையும் வரவேற்றும் மதித்தும் மனவெளியின் அரங்கப் படைப்புகள் தொடர்பான எனது கருத்துக்களை இங்கு முன்வைக்கின்றேன்.

மனவெளி அமைப்பினர் பலரின்  (மங்கை, பொன்னி, மற்றும் சிலர்) வழிகாட்டுதல்களில் அரங்கப் பயிற்சிப் பட்டறைகளை நாடாத்தியும் ஒரு வருடங்களாக பயிற்சிகள் செய்தும் இம் முறையும் நான்கு நாடகங்களை வெற்றிகரமாக மேடையேற்றியுள்ளனர். இம் முறை மேடையேற்றப்பட்ட நாடகங்களின் பிரதான கருக்கள் தற்செயலாக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மையங்களாக கொண்டிருந்தன. இன்றைய தமிழ் சூழலில் இவ்வாறான படைப்புகள் வெளிவருது அவசியமானதும் ஆரோக்கியமானதும் வரவேற்க வேண்டியதுமாகும்.11147085_772261159553695_7166321084248751021_n

ஒரு நாடகம் ஆரம்பிக்க முன்பு நீண்ட விரிவான விளக்கங்கள் கொடுப்பது அவசியமற்றது என்பதை அரங்கு தொடர்பான எனது முன்னைய பதிவுகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். இவ்வாறான விளக்கங்கள் அழகிய உற்சாகமான குரலில் வழங்கப்பட்டாலும் அது ஒரு அரங்கிற்கு அவசியமா என்பது கேள்வி. ஒரு நாடகம் என்ன சொல்கின்றது என்பதை அரங்கத்தில் இருப்பவர்கள் பார்த்தும் கேட்டும் அது தரும் அனுபவத்தினுடாகப் புரிந்தும் கொள்ளவேண்டிய ஒன்று. இவ்வாறு புரிவதற்கு நாம் அதை நோக்கி இன்னும் வளர வேண்டிய தேவையும் உள்ளது. ஆகவே இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியவர்களாக உள்ளோம். 11193355_772784296168048_7429740104336296306_n

ஐஸ்வரியாவினதும் யாழினியினதும் குறியீட்டு நாடகங்கள். இளம் தலைமுறையினர் என்றடிப்படையில் இவர்களது படைப்புகள் வரவேற்கவும் ஊக்கப்படுத்தப்படவும் வேண்டியவை. ஐஸ்வரியாவினது சிருஷ்டி நாடகம் எவ்வாறு ஒரு குழந்தை இயந்திரத்தனமாக வளர்க்கப்படுகின்றது என்பதை சொல்கின்றது. மேலும் குழந்தையினது தெரிவுகளுக்கு சமூகத்தில் மதிப்பு கொடுக்கப்படுவதில்லை என்பதையும் சமூகம் என்ன விரும்புகின்றதோ அதையே அவர்களுக்கு திணிக்கின்றனர். இதில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த சிறுமி ஹரிணி மிகச் சிறப்பாக நடித்திருந்தார். புலம் பெயர் ஈழத் தமிழ் நாடக உலகில் இவருக்கும் அருவிற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.15448_772784209501390_447287097001980196_n

யாழினியின் நீ.ல.ம். நாடகம் மேற்குறிப்பிட்டவாறு வளர்க்கப்படுகின்ற குழந்தைகள் எவ்வாறான மனநிலையை, பிரச்சனைகளை சமூகத்தில் எதிர்கொள்கின்றார்கள் என்பதைக் கூறுகின்றது. மேலும் இவை உருவாக்கும் வலியினால்  கஸ்டப்படுகின்றார்கள். இதிலிருந்து எவ்வாறு வெளியே செல்வது என்பதற்கான வழியைத் தேடுகின்றார்கள். இவற்றை தமது உடல் மொழி மற்றும் பல கவிதைகளினுடாக அரங்கேற்றினர். யாழினியின் உயிர்ப்பு அரங்கில் மேடையேற்றப்பட்ட படைப்பை பார்த்த சிலருக்கு மட்டும் இந்த நாடகம் புதுமையானதாக இருக்கவில்லை என்பதை அறியக்கூடியதாக இருந்தது. அதன் பாதிப்பு இருந்ததாக கூறினார்கள். இதனை நானும் உணர்ந்தேன். ஆனால் முதன் முதலாகப் பார்த்த பலருக்கும் மிகவும் பிடித்திருந்ததுடன் பலரின் பாராட்டையும் பெற்றது. இந்த இரு படைப்புகளின் பாதிப்புகள் இல்லாதவகையில் தனது அடுத்த படைப்பை யாழினி உருவாக்குவார் என நம்புகின்றேன். அதற்கான ஆற்றல் அவரிடம் உள்ளது. 11150698_772258772887267_6212292583092143924_n

ஒளவையின் “காற்றெல்லாம் தென்றல் அல்ல” நாடகம் இன்றைய ஈழத்து மற்றும் புலம் பெயர் சூழலில் முக்கியமான கருவைக் கொண்டது. பெண்களுக்கு எதிரான வன்புணர்வுகள் தொடர்ந்து நடைபெறும் அதேவேளை இதனால் பாதிக்கப்பட்ட பெண்களையே மீளவும் குற்றவாளிகளாக பார்க்கின்றது மட்டுமல்ல பாதிப்புக்குள்ளாக்குகின்ற சமூகங்களில் வாழ்கின்றோம். அவ்வாறான பெண்களைப் இப்பொழுதும் “கற்பழிக்கப்பட்டவர்கள்” “கெட்டுப்போனவர்கள்” என சித்தரிக்கின்ற ஒரு சமூகத்தில் முக்கியமாக உரையாடப்பட வேண்டிய கருவை தெரிவு செய்திருந்தமை வரவேற்கவேண்டிய ஒன்று. இப்பொழுதும் தமிழ் பொது ஊடகங்களில் “கற்பழிப்பு” என்ற சொல்லே பழக்கத்தில் இருந்து வருகின்றது. மேலும் பெண்களின் “கற்பு” என்பது சமூகத்தில் முக்கியமானதாகவே இன்றும் கருதப்படுகின்றது. இதனால்தான் முன்னால் பெண் போராளிகள் பல சிக்கல்களை சமூகத்தில் எதிர்கொள்கின்றனர். இவ்வாறான நிலையில் இது கற்பிழப்புமில்லை. உடலுறவுமில்லை. பாலியல் வல்லுறவுமில்லை. இவற்றையெல்லாம் விட மிக மோசமான அதிகாரத்துவமான வன்புணர்வு மட்டுமே என்பதை இன்னும் ஆழமாக உறுதி செய்திருக்கலாம்.11209468_772784269501384_8114607916558974184_n

இந்த நாடகத்தில் கருத்தியல் அடிப்படையில் எனக்கு கேள்விகள் இல்லை. ஒன்றைத் தவிர. “கற்பழிப்பு” என்ற சொல்லுக்குப் பதிலாகப் பாலியல் வல்லுறவு என புதிய சொற்களை அறிமுகப்படுத்தியதில் சரிநிகர் போன்ற பத்திரிகைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்தக் காலத்தில் அது ஒரு முற்போக்கான செயற்பாடே. ஆனால் எனது புரிதலில் இன்று பாலியல் வல்லுறவு என்பதுவும் “கற்பழிப்பு” என்ற சொல்லுக்குப் பொருத்தமானதல்ல. ஏனெனில் வன்முறை மற்றும் அதிகாரத்துவத்தின் மூலமாகவோ அல்லது இவை எதுவுமில்லாமல் மற்றவரின் உடன்பாடில்லாமலே ஒருவர் தனது ஆண் குறியை பெண்ணின் யோனிக்குள்ளோ அல்லது அவரது உடலின் எந்த உறுப்புகளுக்குள்ளும் புகுத்துவது வன்புணர்வு என ஆங்கில அகராதிகள் கூறுகின்றன. இவ்வாறான வன்புணர்வுகளில் எந்தவிதமான உறவும் இருவருக்கும் இடையில் இருப்பதில்லை. ஆகவே இது வெளிப்படையாகவே ஒரு பாலியல் வன்முறை செயற்பாடாகும். இதனைக் குறிப்பதற்கு “பாலியல் வன்புணர்வு” அல்லது “வன்புணர்வு” என்ற சொல்லே பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இங்கு மற்றவரின் உடன்பாடில்லாமல் அதிகாரத்துவமான வன்முறையான புணர்தல் மட்டுமே நடைபெறுகின்றது. இவ்வாறான ஒரு புணர்தல் ஒரு கணவரினால் மேற்கொள்ளப்பட்டாலும் அது வன்புணர்வு என்றே வாதிடுகின்றனர். ஆகவே வன்புணர்வு என்ற சொல்லை இந்த நாடகத்தில் பயன்படுத்தியிருந்தால் மிகப் பொருத்தமானதாக இருந்திருக்கும். அரங்கத்தினருக்கும் அந்த சொல்லை அறிமுகப்படுத்தி அல்லது பரிச்சயப்படுத்தியிருக்கலாம். இதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் பல இருந்தன. ஆனால் தவறவிடப்பட்டுவிட்டது.1896877_772259126220565_581109615988602618_n

இந்த நாடகம் ஒரு அரங்க செயற்பாடாக மேலும் மெருகூட்டப்பட்டிருக்கலாம். இதற்கு ஒளவை தனது நேர்காணல்களில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் குறிப்பிட்டதுபோல இவ்வாறான பெரிய மேடைகளில் அரங்கேற்றிய பரிச்சயமின்மையும் மற்றும் தனது குடும்ப பின்னணியினால் தன்னிடம் அதிகமாகவும் எதிர்பார்த்திருக்கலாம் என்பவை காரணங்களாக இருக்கலாம். இருப்பினும் மனவெளியும் ஒளவையும் உரையாடி இவற்றை நிவர்த்தி செய்திருக்கலாம். குறிப்பாக மேடையை பயன்படுத்துவது தொடர்பாக கவனமெடுத்திருக்கலாம். ஏனெனில் சில காட்சிகளில் நடிகர்கள் இருந்த இடத்தை விட்டு அசையாது உரையாடிக் கொண்டிருந்தனர். இச் சந்தர்ப்பங்களில் முன் மேடை பயன்படுத்தப்படாது அநாதரவாக இருந்தது. மேலும் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான இச் சந்தர்ப்பங்களும் பயன்படுத்தப்படாமல் வீணாகின என்பதை உணரக்கூடியதாக இருந்தது. இவ்வாறான குறைபாடுகளுக்கும் அப்பால் சிறந்த கருவைக் கொண்ட முக்கியமான ஒரு நாடகம் இது எனலாம்.10996659_772258939553917_1184978634389907921_n  மேலும் ஔவை புலம் பெயர்ந்த பின் இயக்கும் முதல் நாடகம் என்பதனால் இதனை வரவேற்கவும் புரிந்துகொள்ளவும் வேண்டும்.

சபேசனால் நெறியாள்கை செய்யப்பட்ட சோபா சக்தியின் செரஸ் தேவதை நாடகம் அதன் பயிற்சியின் போது பார்க்க கிடைத்தது. அப்பொழுது என்னை மிகவும் பாதித்த படைப்பு இது. ஆனால் மேடையேற்றத்தின்போது முழுமையாக பார்க்க கிடைக்கவில்லை. பார்த்தளவில் பாதிக்கவுமில்லை. நண்பர்கள் பலர் சில விடயங்களை மீள மீள சொல்வது சலிப்பை உண்டாக்கியது என்றார்கள். இருப்பினும் ஒரு ஆணாக என்னை மிகவும் பாதித்த ஒரு படைப்பு. ஒரு பெண்ணை ஒருவன் வன்புணர்வு செய்வதற்கு அவன் சிங்களவனாக, தமிழனாக, முஸ்லிமாக, கிரிஸ்தவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஒரு ஆணாக இருப்பதே போதுமானது. பிற அடையாளங்கள் அதற்கு மேலும் வலுச் சேர்ப்பவை மட்டுமே. அதனால்தான் இனப் படுகொலை நடந்த இக் காலங்களிலும் புலத்தில் (ஈழத்தில்) பெண்கள் தமிழ் ஆண்களாலையே வன்புணர்வு செய்து கொல்லப்படுகின்றார்கள். பிரசாத்தின் நடிப்பிலும் அவர் உச்சரித்த சொற்களிலும் ஒரு ஆணாக நான் கஸ்டப்பட்டேன். குற்றவுணர்வில் வதைபட்டேன். எல்லா ஆண்களுக்குள்ளும் வன்புணர் செய்வதற்கான விதை இருக்கின்றதா? சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் அவ்வாறு செய்வதற்கும் செய்யாமல் விடுவதற்குமான தெரிவை வழங்குகின்றதா என்பது கேள்வியாகவே இருக்கின்றது. இது ஒரு ஆய்வுக்கு உரியவிடயம்.

10421627_772259312887213_8287132393792474846_nநாம் எழுதும் கட்டுரைகளில் என்னதான் ஆணாதிக்க கருத்தியலுக்கு எதிராக பெண்ணியக் கருத்தியலை உயர்த்திப் பிடித்து எழுதினாலும் நம் மனதிற்குள் ஆதிக்கம் செலுத்துவது ஆணாதிக்க கருத்தியல் என்பதை ஒரு ஆணாக நன்றாகவே உணர்ந்தவன் நான். அது பெண்களை எவ்வாறு பார்க்கச் செய்கின்றது என்பதையும் அறிந்தவன். இப் புரிதலில் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படும் பொழுது அவள் எந்தளவு இயலாமையாகவும் அதேநேரம் அலட்சியமாகவும் இருந்தாள் என்பதை தர்சன், பிரசாத், மற்றும் தர்சி நடித்த பாத்திரங்களிலும் அவர்கள் நடிப்பிலும் மற்றும் பயன்படுத்திய சொற்களினுடாகவும் உணர்ந்தேன். இசைப்பிரியா, கிரிசாந்தி, கோணேஸ்வரி போன்ற பெண்கள் என் மனக்கண் முன் வந்து சென்றார்கள். இவர்களின் பிரதிநிதியாக தர்சி அவர்கள் மிக அழகாகவும் அர்த்தபூர்வமாகவும் தன்னைச் செதுக்கியிருந்தார். குறிப்பிட்ட பெண் வன்புணர் செய்யப்படும் பொழுது எப்படி அலட்சியமாக இருந்தாலோ அந்த அலட்சியம் தர்சியின் நடிப்பிலும் பாத்திர வார்ப்பிலும் வெளிவந்தது. இது என்னை மேலும் மேலும் வேதனைப்படுத்தியது. ஒரு ஆணாக இருப்பதற்காக வெட்கப்பட்ட தருணங்கள் அவை. என்னால் அவர்களுக்காகவும் எனக்காகவும் அழுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.11062653_772259262887218_4057651364380450973_n

பெண்கள் எதிர்நோக்கும் இவ்வாறன பிரச்சனைகளுக்கு ஆண்கள் மீது குற்றம் கண்டு அவர்களுக்கு தண்டனையும் மன்னிப்பும் வழங்குவது ஒரு வழிமுறையாக இருக்கலாம். அதேநேரம் இதுகூட ஒரு விதமான தப்பித்தலாகும். ஏனெனில் இவ்வாறான தண்டனைகளும் மன்னிப்புகளும் பாலியல் கொடுமைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கான மூலத்தை ஆராய்வதில்லை. அந்த மூலப் பிரச்சனையை தீர்க்காது தண்டனையும் மன்னிப்பும் வழங்க கோருவது ஒரு தற்காலிக தீர்வே. இதற்கு மாறாக இவ்வாறு நடைபெறுவதற்கு காரணமாக இருக்கின்ற சமூகத்தில் நிலவுகின்ற ஆதிக்க கருத்தியலை சமூக கலாசாரத்தை மாற்றுவதற்கான செயற்பாடுகளையும் உரையாடல்களையுமே நாம் முன்னெடுக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானதாகும். அப்பொழுதுதான் மன்னிப்புக்கும் தண்டனைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் அவ்வாறான ஒரு பார்வை இன்னும் நமக்குள் வரவில்லை. பிரச்சனையின் மூலத்தைக் கைவிட்டு விளைவுகளுக்கு தீர்வு காண்பதிலையே நாம் பெரும்பாலும் நேரத்தை செலவிடுகின்றோம். அதில் திருப்தியும் காண்கின்றோம். இவ்வாறான உரையாடல்களை சமூகத்தில் ஏற்படுத்த அரங்கு முக்கிய பங்கை ஆற்றலாம் என நம்புகின்றேன். அந்தவகையில் இது முக்கியமான ஒரு நாடகம்.

11188478_772261992886945_3628242043765914799_nமெலிஞ்சி முத்தனின் மோகப்பறவை” ஒரு அழகியல் படைப்பு. பார்ப்பதற்கு ஆனந்தமாகவும் இதமாகவும் இருந்தது. அழகிய நடனங்கள், பாடல் என ஒரு கலக்கு கலக்கியது. அரங்கத்தினரும் ஆனந்தமாக சிரித்துச் சிரித்து அனுபவித்தனர். ஒரு படைப்பாக நன்றாகவே இருந்தது. அதேவேளை ஒரு படைப்பின் தரத்தை எதைக் கொண்டு மதிப்பிடுவது. அதன் வெளிப்படுத்துகையை மட்டும் கொண்டா அல்லது அது கூறவரும் கருத்தையும் உள்ளடக்கியதா என்பது ஒரு விவாதத்திற்கு உரியதே. இருப்பினும் எனது நிலைப்பாட்டில் இரண்டையும் இணைத்தாகவே கருதுகின்றேன். இந்தடிப்படைகளிலையே நாடகம் தொடர்பான எனது பார்வைகளை முன்வைக்கின்றேன்.11196226_772784476168030_6656580018227866798_n

மெலிஞ்சியின் நாடகத்தில் பவானி அவர்கள் ஒரு பாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்திருந்தார். இப் பாத்திரம் தனது தாய்மை உணர்வை முதன்மைப்படுத்தி தனது பாலியல் உணர்வை கட்டுப்படுத்தியதாக புறக்கணித்ததாக கூறுகின்றது. இக் கூற்று வழமையான ஜனரஞ்சக சினிமாக்களிலும் மீள மீளக் கூறப்பட்டு சமூகத்தில் நிலை நிறுதுத்தப்படுகின்ற ஒன்று. இது ஒரு சமூக ஆதிக்க கருத்து. ஒருவர் தனது பாலியல் உணர்வை தனது கணவரல்லாத காதலருடன் திருப்தி செய்வதால் அவரது தாய்மை உணர்வானது எந்தவகையிலும் குறைந்து விடாது. கெட்டும் போகாது. ஆனால் இந்த நாடகத்தில் அப்பாத்திரம் காதலருடன் உடலுறவுக்கு செல்லாமல் தனது “கற்பை” “தாய்மை உணர்வைக்” காப்பாற்றியிருக்கின்றது. இதற்கு மாறாக இப் பாத்திரம் பின்வருமாறு கூறியிருந்தால் சமூகத்திலிருக்கின்ற ஆதிக்க கருத்தை சவால் செய்வதாக இருந்திருக்கும். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை மெலிஞ்சியும் மனவெளியும் தவறவிட்டுவிட்டுள்ளனர். 10956395_772259522887192_6903265954816359142_n

இந்த நாடகத்தில் அப் பாத்திரம் “தாய்மை உணர்வும் பாலியலுணர்வும் எனக்குள் போராட்டம் நடந்தின. நான் எனக்கு உண்மையாக இருக்க விரும்பினேன். ஆகவே அவருடன் உறவு கொண்டேன். அப்படிப் பிறந்த குழந்தைதான் எனது இரண்டாவது பிள்ளை. இது அவருக்குத் தெரியும். தெரியாமலும் இருக்கலாம். சில நேரம் தெரியாதது போலவும் அவர் இருக்கலாம். ஆனால் என்னிடம் ஒன்றும் கேட்பதில்லை. இவ்வாறு நான் அவருடன் (காதலருடன்) உறவு கொண்டதால் எனது தாய்மை உணர்வு எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை என உணர்கின்றேன்” எனக் கூறியிருந்தால் அதுதான் இந்த நாடகத்தின் முழுமையான ஆகக் குறைந்தது கருத்தியல் ரீதியான பெரு வெற்றியாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன்.18490_772259586220519_7493584175838930346_n

சமூக யதார்த்தத்தில் இவ்வாறான உறவுகள் சதாரணமாக இருக்கின்றன. ஆனால் சமூகத்திற்கும் அதன் கட்டுப்பாடுகளுக்கும் பயந்து இரகசியாமாகவே இவ்வாறான உறவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது உண்மையான காதல் மறைவாகவும் சட்ட சமூகரீதியாக அங்கீகரிக்கப்பட்ட (காதலில்லா) உறவுகள் வெளிப்படையாகவும் இருக்கின்றன. பிடிபடுகின்றவை கள்ளக் காதல் என முத்திரை குத்தப்பட்டு அசிங்கப்படுத்தப்படுகின்றன. அந்தளவிற்கு சமூக ஆதிக்க சக்தியின் கருத்துகள் பயமுறுத்துகின்றனவாக இருக்கின்றன. அந்தப் பயத்திற்குள் அடங்கிப்போனதாகவே இந் நாடகத்தின் கருத்தியல் இருக்கின்றது. ஆனால் மெலிஞ்சி அவ்வாறு பயந்து அடக்கிப்போகின்றவர் அல்ல. அதேவேளை வயது போனபின் கணவரை விட்டு காதலருடன் போவதில் ஒரு புதுமையும் இல்லை என்பதை மெலிஞ்சியும் நன்கு அறிவார் என நம்புகின்றேன். 11128715_772259519553859_4916022612101016162_n

இதே நாடகத்தில் இரண்டாவது கருத்தியல் சமரசம் அல்லது சமூக ஆதிக்க கருத்தை மீள நிலைநாட்டிய கருத்து கூட்டுக் குடும்பம் தொடர்பானது. கூட்டுக் குடும்பம் இப்பொழுதும் நல்லது என்றே நினைக்கின்றேன். ஆனால் அது ஜனநாயக பூர்வமானதாகவும் ஒவ்வொருவருடைய ஆற்றல்களை மதிப்பதாகவும் அவற்றை வெளிக்கொண்டுவர ஆதரவளிப்பதாகவும் அனைவருடைய பங்களிப்புடனும் இருக்க வேண்டும். இது ஒரு வகையில் கம்யூன் வாழ்க்கை போன்றது. ஆனால் நமது பாரம்பரிய கூட்டுக் குடும்ப வாழ்கை ஆணாதிக்கத்தை அடிப்படையாக கொண்டது. பெண்கள் சிறந்த முகாமையாளர்களாக அதற்குள் செயற்பட்டிருக்கலாம். ஆனால் கருத்தியல் அடிப்படையில் ஆண்களின் வழியே தான் செயற்பட்டிருக்கின்றது. இந்த நாடகத்திலும் கூட்டுக் குடும்பம் கலைந்ததற்கு ஒரு பெண்ணையே மருமகளையே(?) குற்றம் சாட்டுகின்றது. இது மீளவும் சமூக ஆதிக்க கருத்தை வலியுறுத்துவதாகவே இருக்கின்றது. இதற்கு மாறாக பல்வேறு உரையாடல்களை இந்த நாடகத்தில் நடாத்தியதுபோல் அப்பப்பாவின் அதிகாரமே கூட்டுக்குடும்பம் சிதைவற்கு காரணமாக இருந்திருக்கலாம் என ஒரு உரையாடலை நடாத்தியிருக்கலாம். இவ்வாறான கூட்டுக் குடும்பங்களில் பெண்கள் பலிக்கடாக்கள். அவர்களது ஆளுமைகள் மழுங்கடிக்கப்படுகின்ற இடம் இவை என்பதை வலிறுத்தியிருக்கலாம். ஆனால் அவ்வாறு இந்த நாடகத்தில் நடைபெறவில்லை என்பது தூர்பாக்கியமானது. மணிரத்தினத்தின் படங்களைப் போல இவ்வாறான அழகியல் படைப்புகளில் இருக்கின்ற ஆபத்து ஆதிக்க சமூக கருத்துகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல மெதுவாக ஏற்றி நிலைநாட்டிவிடுவார்கள். சிலர் அறிந்து செய்வார்கள். சிலர் அறியாமல் செய்வார்கள். இது எந்த ரகம் என்பதை உங்கள் தேடலுக்கு விட்டு விடுகின்றேன். அழகிய நாடகம். அழகான கூத்து நடனம். புதுமையான படைப்பு. ஆனால் கருத்துகளில் புதுமையில்லை.11012906_772263806220097_883875859138330617_n

மேற்குறிப்பிட்ட விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு நான்கு நாடகங்களிலும் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். இயக்குனர்களும் நன்றாக நெறிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக நான் இரசித்த இன்னும் இருவரின் நடிப்பை பற்றியும் நிச்சயம் குறிப்பிட வேண்டும். அரசியும் ரொனாட்டும் ஏற்று நடித்த பாத்திரங்கள் அவை. இவர்கள் இருவரது கண்களும் ஒருவரை ஒருவர் நோக்க ஒரே லயத்தில் ஆடியது மட்டுமல்ல அப் பாத்திரங்கள் வெளிப்படுத்திய காதல் உணர்வை தமது உடல் மொழியினுடாக நம்மை அல்லது என்னை உணரச் செய்தார்கள். அந்தளவு சிறப்பாக நடித்திருந்தார்கள். இதுதான் அரங்க நடிப்பில் உடல் மொழியின் பங்களிப்பு எனக் கருதுகின்றேன். பயிற்சியின் போது மிகச் சிறப்பாக செய்தவர்கள் இரு மேடையேற்றங்களில் ஒன்றில் சிறிது தவறவிட்டது எனக்கு மிகவும் கவலையைத் தந்த ஒரு விடயம்.

டொரன்டோ ஈழத் தமிழர்களின் அரங்கு தொடர்பாக சில குறிப்புகள். எதிர்கால அரங்க செயற்பாடுகள் தொடர்பாக மனவெளியானது மாதாந்தம் அரங்கப் பயிற்சிப் பட்டறை ஒன்றை ஒழுங்கு செய்வார்களாயின் பயனுள்ளதாக இருக்கும். இதனுடாக பல விடயங்களை நடிகர்கள் மட்டுமல்ல இயக்குனர்களும் அறிந்து கொள்ளப் பயன்படுத்தலாம். அடிப்படையில் அரங்கு என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதும் அதற்கு கூட்டுப் பங்களிப்பின் அவசியம் எந்தளவு முக்கியத்துவம் என்பதுவும் உணரச் செய்யப்பட வேண்டும். இதற்கு புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்பும் அடிப்படையான விடயங்கள். மேலும் வெறுமனே பாத்திரங்களை ஏற்று நடிப்பது மட்டுமல்ல அப் பாத்திரங்களை நடிப்பதனுடாகவும் நடிக்கச் செய்வதனுடாகவும் அப்பாத்திரங்களை நாம் உணர்ந்து புரிந்து கொள்ள விளைகின்றோம். விளையவேண்டும். இப் புரிதலானது மற்ற மனிதர்களை புரிவதற்கான ஒரு பாதையாகும். இது நம்மைப் பற்றி நமக்கு புரிய வைப்பதுடன் நமக்குள்ளும் மாற்றத்தை உருவாக்குகின்றது. இதுதான் ஒரு அரங்கில் பங்குபற்றுகின்றவர்களுக்கு கிடைக்கின்ற மிகப்பெரும் பயன். இதன் பின்பே இந்த நாடத்தினுடாக சமூகத்திற்கு என்ன சொல்கின்றோம் என்பது முக்கியத்துவம் பெருகின்றது என்பது எனது புரிதல். ஆனால் இப் புரிதல் உள்வாங்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றதா என்பது பெரும் கேள்வி. 11049502_772259156220562_1647911878019027587_n

இவ்வாறான பயிற்சிப்பட்டறைகள் நாடகப் பிரதிகளுக்காகவும் நடிகர்களுக்காகவும் இறுதிவரை காத்திராமல் ஆரம்பத்திலையே உறுதி செய்வதற்கும் பங்களிக்கும். இவ்வாறு செய்யும் பொழுது பிரதி தொடர்பான கருத்தியல் அடிப்படையிலான விரிவான உரையாடலையும் நடாத்தலாம். அப்பொழுதுதான் எங்களையும் அறியாமல் பிரதியில் காணப்படும் சமூக ஆதிக்க கருத்துக்களை மீள அரங்கத்தினரிடம் கொண்டு செல்லாமல் அதை விவாதத்திற்கு உட்படுத்தலாம். மேலும் நேரமின்மையும் சுமைகள் நிறைந்த புலம் பெயர் வாழ்க்கைச் சுழலில் எவ்வளவு காலம் தொடர்ச்சியாக ஒரு நாடகத்தைப் பழகுகின்றோம் என்பதில்தான் அந்த நாடகத்தின் விளைவும் தரமும் இருக்கும். ஏனெனில் அப்பொழுதான் நடிகர்கள் அப் பாத்திரங்களுக்குள் உள்வாங்கப்பட்டு சிறந்த நடிப்பை இயல்பாக வெளிப்படுத்துவதுடன் இயக்குனரும் மேலும் மேலும் தனது படைப்பை மெருகூட்டலாம் என நம்புகின்றேன்.11000708_772259322887212_820996458399677753_n

மனவெளி தமிழ் நாடகங்களை ஒழுங்குபடுத்தி மேடையேற்றுவதில் தமது வரையறைகளுக்குள் தொழில்முறையாளர்கள் (Professionals) போல் சிறப்பாக பணியாற்றுகின்றார்கள். இதற்கு அக் குழுவிலுள்ள ஒவ்வொருவரும் பங்களிக்கின்றார்கள். டொரன்டோவில் ஈழத் தமிழர்களின் பல அரங்க குழுக்கள் இருக்கின்றன. பல ஆற்றல் நிறைந்த நெறியாளர்களும் நடிகர்களும் உள்ளார்கள். மனவெளி இம் முறை சில சக அரங்க குழுவினரை உள்வாங்கியதுபோல் மேலும் வெளியில் உள்ள சக குழுவினரையும் எதிர்காலத்தில் உள்ளவாங்க வேண்டும். அல்லது இவ்வாறு செயற்படுகின்ற ஒவ்வொரு அரங்க குழுவிடமும் ஒரு நாடகத்தைக் கேட்டு அவற்றை ஒருங்கிணைத்து மேடையேற்றலாம். ஏனெனில் ரொரன்டோ தமிழர்களிடம் பல அரங்க குழுக்கள் இருந்தபோதும் இயக்குனர்கள் பலர் இருந்தபோதும் எல்லா நாடகங்களிலும் பங்களிப்பவர்கள் நடிப்பவர்கள் சுற்றி சுற்றி ஒரு சிலரே. இதை மனவெளி கவனத்தில் கொண்டால் பயனுள்ளதாக இருப்பதுடன் ரொரன்டோ புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அரங்கு ஆரோக்கியமான ஒரு பாதையில் செல்லும். மேலும் மனவெளியின் அரங்காடல் ரொரன்டோ புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அரங்கப் பிரதிநிதிகளாக வளர்ச்சி பெறலாம். இதைச் செய்வதற்கான பண்பும் ஆற்றலும் அவர்களிடம் காணப்படுகின்றது என்றே நம்புகின்றேன். 11169958_772259656220512_4841446075493869467_n

இறுதியாக நாடகம் முடிந்தவுடன் மூன்று முக்கியமான விடயங்களை மனவெளி தனித் தனியாக செய்ய வேண்டும். தர்சி அவர்கள் ஏற்கனவே இதில் ஒன்றை உரையாடலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது சிரியசான நாடகங்களில் தம்மை உள்வாங்கிய நடிகர்கள் மேடையேற்றம் முடிந்தபின் அதிலிருந்து மீள வெளிவருவதற்கான பயிற்சிகள் வழங்க வேண்டும். இரண்டாவது மேடையேற்றம் முடிந்தபின்பு மனவெளியின் ஒன்று கூடலையும் விமர்சன சுய விமர்சன செயற்பாட்டை ஒன்றாக வைக்காமல் இரண்டையும் தனித் தனியாக வைப்பது ஆரோக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதாவது நாடகத்தை வெற்றிகரமாக மேடையேற்றிவிட்டோம் என்பதைக் கொண்டாடுவதாக ஆடலும் பாடலும் நிறைந்த கொண்டாட்டமாக ஒரு நிகழ்வையும். இன்னுமொரு நிகழ்வை (சுய)விமர்சன நிகழ்வாக வைத்து நடந்த தவறுகளை கற்றுக் கொள்வதற்கு வழி செய்யவேண்டும். குறிப்பிட்ட இரண்டு விடயங்களும் ஏற்கனவே நடைபெறுகின்றன. ஆனால் இரண்டு ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடைபெறுவது நடிகர்களிடம் மனச் சோர்வை ஏற்படுத்துவதைக் காணக்கிடைத்து. ஆகவேதான் இவ்வாறான ஒரு முன்மொழிதல். இதைப் பல நடிகர்கள் வரவேற்பார்கள் என நம்புகின்றேன்.11066137_772263469553464_1689850247636932529_n

மனவெளியில் நானும் சிறிய பங்களிப்பு ஒன்றை செய்வதற்கு அனுமதித்த மனவெளிக்கும் செல்வனுக்கும் நன்றி பல. டொரன்டோவில் அரங்க செயற்பாட்டில் மீள இணைவதற்கு என்னை ஊக்குவித்து வரவேற்ற சக்கவரவர்த்தி, சுமதி, மற்றும் செல்வன் ஆகியோருக்கு இச் சந்தர்ப்பத்தில் நன்றி பல கூற விரும்புகின்றேன். இது எனது வாழ்க்கையிலும் புதிய பாதைகளை திறந்து விடும் என நம்புகின்றேன்.

எனது விமர்சனங்கள் தனிநபர்கள் மீது கொண்ட வெறுப்பினால் முன்வைக்கப்படுவதல்ல. மாறாக மேலும் முன்னேறிய படைப்புகளை படைப்பாளர்களிடம் எதிர்பார்த்து அக்கறையுடனும் அன்புடனும் முன்வைக்கப்படுபவை. சில நேரங்களில் உடன்பாடின்மைகளாலும் ஏமாற்றத்தாலும் நாம் உணர்ச்சிவசப்படுவதால் நமது சொற்கள் எம்மையும் மீறி எதிர்மறையாக வந்து விழுகின்றன. அவை சிலரைப் பாதிக்கச் செய்யலாம். இவற்றை பரஸ்பரம் சுட்டிக்காட்டி ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்வதற்கும் இதனுடாக எல்லோரும் வளர்வதற்கும் ஆழமான புரிதலை ஏற்படுத்துவதற்கும் பங்களிப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பு என்றே உணர்கின்றேன். அதைச் செய்வோமா?11188243_772259442887200_1104029788090993213_n நன்றி. நட்புடன் மீராபாரதி

படங்கள் : நன்றி சர்வேசன்

Advertisements

Responses

  1. நன்றாக அலசி உள்ளீர்கள்
    சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

  2. நன்றி யாழ்பாவாணன்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: