Posted by: மீராபாரதி | April 17, 2015

காலம் : காலமாகாது (– அதுவரை) வாழும் தமிழ்!

காலம் : காலமாகாது (– அதுவரை) வாழும் தமிழ்
ஒருகாலத்தில் (ஆரம்பத்தில் திசை, பின் சரிநிகர், மற்றும் அன்று தொடர்ந்து வெளிவந்த பல சஞ்சிகைகள் வாசித்த காலங்களில்) சஞ்சிகைகள் பத்திரிகைகள் வெளிவந்தவுடன் அன்றிரவே எத்தணை மணியாக இருந்தாலும் முழுவதையும் வாசித்து விட்டுதான் மறுவேளை. நடுச்சாமம் கடந்து வாசித்த நினைவுகள் பசுமையாக உள்ளன. அந்த ஆர்வத்திற்கு இப்பொழுது என்ன நடந்தது? சரி இந்தக் கேள்விக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும் அதேவேளை….

திசை ஒவ்வொரு வியாழக்கிழமை மாலைகளில் வெளிவரும் என நினைவு. பரமேஸ்வரா சந்தியிலுள்ள கடையில் விற்பனைக்கு வரும். காத்திருந்து வாங்குவேன். அதனுடன் அப்படியொரு இனம்புரியாத பாசம். நவீன ஓவியங்கள், ரஞ்சகுமாரின் கதைகள் மற்றும் யேசுராசா என பல அறிமுகம் இதன் மூலம் ஏற்பட்டதுதான். பின் ஸ்டான்லி வீதியிலிருந்த வசந்தம் புத்தக நிலையத்தில் வாங்கிய நூல்கள் சஞ்சிகைகள். ஈரோசின் ஆவணக்க காப்பகத்தில் இருந்து வாசிக்க எடுத்த நூல்கள். கொழும்பு வந்த பின் சரிநிகர் என வாசிப்பு இரவு பகலாகத் தொடர்ந்தது. ஆனால் 2000ம் ஆண்டுகளுக்குப் பின் இவ்வாறு வாசிப்பதை நானாகவே நிறுத்திவிட்டேன். இப்பொழுது கொஞ்சக் காலமாக மீண்டும் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஆனால் இப்பொழுதெல்லாம் முன்பு போல் வாசிக்க முடிவதில்லை. நேரம் கிடைக்கும் பொழுது மனம் இசைவாக அமைதியாக இருந்தால் எதாவது ஒரு சஞ்சிகையின் அல்லது நூலின் ஒவ்வொரு படைப்பாக அத்தியாயமாக நாட்கணக்கில் வாசிப்பதாகவே இருக்கின்றது. இரவில் வாசிப்பது கஸ்டமாக இருக்கின்றது. கண்ணும் மங்கிக் கொண்டு செல்கின்றது. கண்ணாடி வாங்கவேண்டும் போல…

காலம்இவ்வாறு மார்ச் 2015 இல் வெளிவந்த காலம் 46வது இதழைப் பல நாட்கள் நேரம் கிடைக்கும் பொழுது வாசித்தேன். இதன்விளைவு உங்களுக்கு ஒரு தண்டனை. இதில் வந்த கட்டுரைகள் மற்றும் கதைகள் தொடர்பான சிறு குறிப்புகள் இப் பதிவு. நான் ஒரு இலக்கியக்காரனல்ல. முன்பொருமுறை நண்பர் ஒருவர் ஒரு நாவல் நூல் வெளியீட்டில் என்னை உரையாற்றுமாறு கேட்டிருந்தார். நான் சொன்னேன் ஏதுவும் அரசியல், தியானம் அல்லது பிரக்ஞை போன்றன தொடர்பான நூல்கள் பற்றி வேண்டுமானால் கேளுங்கள். அப்பொழுது நிச்சயமாக செய்வேன். ஆனால் இலக்கியம் எனக்கு பரிச்சயமற்றது. பரந்த வாசிப்பை கொண்டவனல்ல நான். ஆகவே எனக்குப் பொருத்தமில்லை என்றேன். இருப்பினும் இந்த காலம் இதழில் வந்த கதைகளை வாசித்தபோது எழுந்த உணர்வை சிந்தனையைப் பகிர வேண்டும் போல் இருந்தது. முதலில்  வாசித்த கட்டுரைகள் பற்றிய சிறு குறிப்பை முகநூலில் எழுதினேன். பின்பு இதிலுள்ள கதைகளையும் வாசித்த போது ஒரு பதிவாக எழுதினால் நல்லது என உணர்ந்தேன்.selva

இந்த இதழ் செல்வா கனகநாயகம் அவர்களின் நினைவுச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அவரது ஆளுமைகள் மற்றும் அவருடனான தமது உறவுகளையும் அனுபவங்களையும் பலர் எழுதியுள்ளனர். இதேநேரம் இவரின் இலக்கிய வரலாறும் திறனாய்வும் பின்காலனித்துவ அணுகுமுறை என்ற நூலையும் வாசிக்கின்றேன். ஆகவே இதை எல்லாம் ஒன்றாக இணைத்து இன்னுமொரு பதிவை எழுதலாம் என்ற எண்ணத்தில் இங்கு அதைத் தவிர்க்கின்றேன்.

தமிழ்நதிதமிழ்நதியின் பார்த்தீனியம் என்ற தலைப்பில் ஒரு கதை உள்ளது. இது அவர் எழுதுகின்ற நாவலின் ஒரு பகுதியாக இருப்பினும் சிறுகதையாகவும் தாக்கம் நிறைந்ததாக இருக்கின்றது. இந்திய இராணுவ வருக்கைக்குப் பின்பு ஈழத்தை அரசியல் அடிப்படையில் ஆக்கிரமித்தது இந்திய அரசு மட்டுமல்ல சுற்று சூழலின் அடிப்படையில் பார்த்தீனியம் என்ற பயிரின் ஆக்கிரமிப்பும் முக்கியமானது. இது தொடர்பாக ஐங்கரநேசன் அவர்கள் தனது ஏழாவது ஊழி நூலிலும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் இக் கதை அதைப் பற்றியதல்ல. அதைக் குறியீடாகக் கொண்டது என யாரோ ஒருவர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகின்றது. ஒரு போராளியின் பயிற்சியின் பின்பான ஊர் வருகையை கூறுகின்ற கதை. இதில் கதை மாந்தர்கள் அதிகமாக இருப்பது வாசிப்பதற்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. சிலநேரம் நாவலாக வாசிக்கும் பொழுது அப்படி வராது என நினைக்கின்றேன். நாவல் வரும் வரை காத்திருப்போம்.

lenaலீனா மணிமேகலை மிக அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் நனைந்திருந்த நாட்குறிபொன்று என ஒரு கதை எழுதியிருக்கின்றார். இவர் ஏற்கனவே பாலியல் மற்றும் காமம் தொடர்பாக எழுதிய கவிதைகள் விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளானவை.. இருப்பினும் இக் கதை இன்னுமொரு தளத்தில் இயங்குகின்றது. பொதுவாக மனிதர்கள் உடலுறவின் போது மிகவும் இயந்திரத்தனமாகவும் அவசரமாகவும் குற்றவுணர்வுடனுமே ஈடுபடுவார்கள் எனக் கூறுவர். ஆனால் இவரது கதை உடலுறவின் ஒவ்வொரு கணங்களையும் அனுபவித்த ஒருவரால் மட்டுமே இப்படி எழுதமுடியும். இந்த உணர்வுடன் நம்மையும் உடலுறவை மேற்கொள்ளத் தூண்டுகின்றது. ஆனால் இக் கதையில் விரசம் இல்லை. காம உணர்வு மட்டுமே இருக்கின்றது. அது அழகாகவும் இருக்கின்றது. திருமணமான ஒரு பெண் இன்னுமொரு ஆண் நண்பனுடன் கொள்ளும் காதல் (?) காம(?) உறவு தொடர்பானதே இக் கதை. நம் காம உணர்வை வெளிப்படுத்தும் பொழுது நாம் விழிப்பாக இருப்போமானால் அது ஒரு புதிய அனுபவத்தைத் தரும். இது ஒருவகையான தியானம் கூட. அவ்வாறான ஒரு நிலையிலிருந்து ஒரு பெண்ணின் அனுபவத்தைப் பதிவு செய்திருக்கின்றார் என்றே உணர்கின்றேன். உடலின் தேவை அதன் உணர்வுகள் என்பவற்றை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றார். இது வாசிப்பவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை நிச்சயமாக தரும் என நம்புகின்றேன்.

முத்துலிஉடலின் தேவைகள் இயல்பானவை. அதைப் பதிவு செய்யும் பொழுது மேற்கூறிய அழகான ஒரு படைப்பு உருவாகும். ஆனால் மனதின் ஆசைகள் விருப்பங்கள் தேவைகள் வேறு. அதை ஒரு படைப்பாக வெளிப்படுத்தும் பொழுது மிகக் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் அது படுகுழியில் விழுந்து அதன் அழகு கெட்டு அழுகி நாற்றமெடுக்கலாம். நம் மனதிலிருக்கும் வக்கிரமாக வெளிப்படலாம். அவ்வாறான ஒரு பேய்க் கதையைத் தான் அ.முத்துலிங்கம் அவர்கள் அண்மையில் காலச்சுவட்டில் எழுதியிருந்தார். அக் கதை அவரது எழுத்துலகப் பயணத்தில் ஒரு சறுக்கல் என பலர் பதிவு செய்தனர். அதேவேளை அவர் ஒரு நல்ல கதை சொல்லி என்பதை யாரும் மறுப்பதில்லை. இக் காலம் இதழிலிலும் உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது என்ற ஒரு கதையை எழுதியுள்ளார். வழமையாக ஒரு கதையை தன்னிலையிலிருந்து அல்லது படர்க்கையாக அல்லது எல்லாவற்றுக்கும் வெளியிலிருந்து புறநிலையாகத்தான் எழுதுவார்கள். அல்லது நான் வாசித்தவை அவ்வாறானவைதான். ஆனால் இக் கதையில் இவர் முன்னிலையிலிருந்து எழுதுகின்றார். அதாவது என்னுடன் என்னைப்பற்றி அவர் கூறுவது போல எழுதியிருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. இதற்குள் பெண் தொடர்பாக ஆணின் பார்வைகளையும் பெண்ணின் ஆளுமைகளையும் வெளிப்படுத்துகின்றார். அதேநேரம் இது ஒரு வகையான மனப்பிறழ்வு கதையா எனவும் சிந்திக்க வைக்கின்றது. இக் கதையில் யாருக்கு மனநிலை சரியில்லை என்பது வாசிப்பரின் புரிதலைப்பொறுத்தது. இதனுடாகப் புலம் பெயர்ந்த பலரின் மனநிலையை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.

sumathyகருப்பி சைகையிற் பொருளுணர் என அழகான தலைப்பில் கதை ஒன்று எழுதியிருக்கின்றார். இக் கதையை நான் வாசிக்கும் முன்பே துணைவியார் எனக்கு முழுக் கதையையும் கூறிவிட்டு தனது விமர்சனத்தையும் முன்வைத்தார். அவரின் விமர்சனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சரி அப்படி என்ன எழுதியிருக்கின்றார் என நானும் வாசித்தேன். வாசித்தபோது துணைவியார் கூறிய கதையை நான் மறந்து விட்டேன். கதை தனக்குள் என்னை முழ்க்கிவிட்டது. இது கதை சொல்லியின் வெற்றிதான். வாசகரை கதைக்குள் வைத்திருக்கும் அவரது ஆளுமையை அவருடைய பல கதைகளை வாசித்தபோது அறிந்துள்ளேன். அந்தளவிற்கு நன்றாக எழுதியிருக்கின்றார். சரி இனி விமர்சனத்திற்கு வருகின்றேன்.

இப்பொழுதெல்லாம் விமர்சனம் செய்வதற்கு பயமாக தயக்கமாக இருக்கின்றது. நான் ஒரு விமர்சனத்தை முன்வைத்தவுடன் குறிப்பிட்டவர்கள் என்னைக் கண்டால் தமது முகத்தை பத்து முழத்திற்கு நீட்டுகின்றார்கள். அல்லது நட்பிலிருந்து விலக்குகின்றார்கள். கோபிக்கின்றார்கள். அல்லது வலிந்து என்னிடம் தவறுகளை கண்டுபிடிக்க முனைகின்றார்கள். இப்படி பல. (சுய)விமர்சன உரையாடல் இல்லாமல் (சுய)வளர்ச்சி இல்லை என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதேவேளை நாம் விமர்சனம் முன்வைப்பது நமது தன்முனைப்பு என ஓசோ என்னைத் தடுக்கின்றார். இப்படியான நேரங்களில் ஓசோ சொல்லவரும் நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் அதேவேளை அவரைக் கடந்து எனது விமர்சனங்களை சமூக தனிமனித நலன் மட்டுமல்ல நட்பின் நலன் கருதியும் முன்வைப்பது அவசியமானது எனக் கருதுகின்றேன். கருப்பியிடமும் விமர்சனம் வைக்கின்றேன் கோவிக்க வேண்டாம் என முன் ஆணை பெற்றுவிட்டேன். எனது பார்வையில் ஒன்று தவறாக இருக்கும் பொழுது அதைக் குறிப்பிடாமல் விடுவது தவறு என்றே கருதுகின்றேன். ஆகவே எனது விமர்சனங்களை தனிப்பட்ட அடிப்படையில் எடுக்காது அதாவது படைப்பாளிபற்றியல்ல அவரது படைப்பு அல்லது கருத்து பற்றிய விமர்சனமாக பார்க்கும்படி வேண்டுகின்றேன். ஏனெனில் எல்லாவற்றுக்கும் அப்பால் மனித உறவுகளே முக்கியமானது. சிதையும் உறவுகளால் படைப்புகள் உருவாகலாம். ஆனால் (படைப்பின் மீதான) விமர்சனங்களால் உறவுகள் சிதையக்கூடாது.

முதலாவது பெண்ணிடமே சாதியையும் கலாசாரங்களையும் காவுகின்ற அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற பொறுப்புகளை பெரும்பாலான சமூகங்கள் வழங்கியிருக்கின்றன. அதைத்தானே இக் கதையும் சுட்டி நிற்கின்றது. இங்கும் ஒரு பெண்ணே சாதியை தூக்கிப்பிடிப்பவராக இருக்கின்றார். இது ஒரு வகையில் யதார்த்தத்தையும் மீறி சமூக ஆதிக்க கருத்தை மீள நிலைநாட்டுவதாக இருக்கின்றது. இரண்டாவது இக் கதையானது அடக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் பார்வையிலிருந்து தன்னிலையாக எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு எழுதும் பொழுது குறிப்பாக ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும். அல்லது சாதிக்கு எதிராக எழுதுகின்றோம் என நினைத்துக் கொண்டு ஆதிக்க சாதிய கருத்தாக்கதை தம்மையறியாமல் மீள நிலைநாட்டுவதாக முடிந்துவிடும். அவ்வாறுதான் இக் கதையும் உள்ளது. அந்தவகையில் அடக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களை மீண்டும் குற்றவுணர்வுக்கு உள்ளாக்குவது போன்ற ஒரு தோற்றப்பாட்டைத் தருகின்றது. அவர்களை நேர்மையற்றவர்களாகவும் அடையாளப்படுத்துகின்றது. அதாவது உயர் சாதி மன நிலையிலிருந்தே இக் கதை எழுதப்பட்டிருக்கின்றது என்ற உணர்வைத் தருகின்றது. மூன்றவாது ஒருவருக்கு காதல் பிரிவு ஏற்படுகின்றது. மீண்டும் குறுகிய காலத்தில் இன்னுமொரு காதல் உருவாகின்றது. இது சாத்தியமா? இது காதலா என்ற கேள்வியையும் எழுப்புகின்றார். ஒருவரைக் காதலிக்கும் பொழுது மட்டுமல்ல வாழும் பொழுதே இன்னுமொருவருடன் காதல் உணர்வு ஏற்படுவதை அனுபவித்திருக்கின்றேன். இப்படிப் பலர் காதலில் இருந்ததைக் கண்டிருக்கின்றேன். இது காதலா? காமமா? என்ற கேள்வி எனக்கு உண்டு. ஆனாலும் இவ்வாறு நடைபெறுவது நிசர்சனமாக உண்மை. ஏனெனில் யாரோ ஒரு கவிஞர் சொன்னதுபோல காதல் ஒரு தும்மலைப்போல எப்பொழுது எப்படி வரும் எனத் தெரியாது. ஆனால் வரும். வந்தபின்தான் அட எங்களுக்கும் “பல்ப்” எரிகின்றது என மொழித்திரைப்படம் போல உணர்வோம். இந்த விமர்சனங்கள் இக் கதை தொடர்பான முக்கியமான கருத்தியல் சார்ந்த விமர்சனங்களாக இருந்தபோதும் ஒரு படைப்பாக நன்றாக உள்ளது. ஒரு படைப்பு நல்லதா கூடாததா என்பதை அதன் கருத்துநிலையிலிருந்து பார்ப்பதா அல்லது படைப்பின் தரத்திலிருந்து பார்ப்பதா என்பது தொடர்விவாதமே.

jeyaபா.அ.ஜயகரன் அவர்களை சிறந்த நாடக நெறியாளராகத்தான் எனக்குத் தெரியும். ஆனால் இந்த இதழில் இருளில் மீள்பவர்கள் என அருமையான தொரு சிறுகதையை புனைவொன்றை எழுதியிருக்கின்றார். நாமறிந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு புனைவு என்பது எப்படி இருக்கலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் எனக் கொள்ளலாம். போராட்டம் முடிந்து விட்டது. அல்லது முடித்து வைக்கப்பட்டது. அல்லது தோற்றுப் போய்விட்டது. இருப்பினும் அந்த சுழல் உருவாக்கிய வடுக்கள் எங்கள் உடல்களிலும் மனங்களில் வாழ்கின்றன. அதை நாம் போகும் இடம் எல்லாம் காவித்திரிகின்றோம். வெறுமனே காவித்திரிவது மட்டுமல்ல அவை எம்மை எமது நாளாந்த வாழ்க்கையில் பாதிப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது. ஆனாலும் நாம் எதிர்காலம் குறித்து கனவு காண்பதை நிறுத்தவில்லை. அப்படியானதொரு கதைதான் இது. வரலாறு அறிந்தவர்களுக்கு இக் கதையில் வரும் மனிதர்கள் சில நேரம் பரிச்சயமானவர்களாக இருக்கலாம். வரலாறு அறியாவர்களுக்கு இது ஒரு போராட்டக்காலப் புனைவு. அல்லது போராட்டத்தின் பாதிப்புகளால் ஏற்பட்ட ஒரு மன வடு. அனுபவம்.

இக் கதைகள் புலம் பெயர் வாழ்வு தொடர்பான சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றது. நாம் சாதிய ஆணாதிக்க ஆதிக்க கருத்துக்களையும் புலத்திலிருந்து இடம்பெயர்த்து இங்கு கொண்டு வந்துவிட்டோம். பெண்களுக்கு எதிரான மனோபாவங்கiயும் காவி வந்துள்ளோம் எனக் கூறுகின்ற கதைகள் இவை.

nithiமலையகம் தொடர்பாக மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய கூலித்தமிழ் நூல் தொடர்பான ஒரு அறிமுகம் ஒன்றை அம்ஷன்குமார் அவர்கள் எழுதியுள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகள் வேறு. மலையக மக்களின் பிரச்சனைகள் சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைகளுடன் மோசமான சுரண்டலையும் கொண்டது. மேலும் அவர்களின் வாழ்நிலை என்பது இப்பொழுதும் மாட்டுத் தொழுவங்கள் போன்ற லயங்களிலையே இருக்கின்றது. இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிகளும் இவர்களது வாழ்நிலையை மாற்ற முன்வரவில்லை. ஆகவே ஈழத்தமிழ் ஊடகங்கள் தாம் வெளியீடும் சஞ்சிகைகளில் இவர்களது பிரச்சனைகள் தொடர்பாக ஆகக் குறைந்தது ஒரு கட்டுரையாவது தொடர்ச்சியாக வெளியிடுவார்களாயின் அது மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கும். இவர்கள் இன்னும் 21ம் நூற்றாண்டின் நவீன அடிமைகளாகவே வாழ்கின்றனர். இந்த நூலும் இவர்களை அடிமைப்படுத்தவும் சுரண்டவும் எவ்வாறு அதிகாரவர்க்கங்களுக்கு கூலித்தமிழ் பயிற்றுவிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடுகின்றது. அந்தவகையில் மலையகம் தொடர்பாக வந்த முக்கியமான ஒரு நூல் இது எனலாம்.upcoount

இறுதியாக பல கட்டுரைகள் இதில் இருந்தபோதும் எனக்கு முக்கியமானது என இரண்டு கட்டுரைகள் உள்ளன. இரண்டையும் மணி வேலுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். முதலாவது மொழிபெயர்ப்பு. சி.வி விக்னேஸ்வரனின் பாதுகாப்பையும் இறைமையையும் கட்டிக்காத்தல். இரண்டாவது ஹோ மாமா என்ற ஹோ சி மின் தொடர்பான கட்டுரையை ஜெனரல் கியாப் கடந்த வருடம் தனது 102 வயதில் மரணித்தன் நினைவாக எழுதியுள்ளார். இவை இரண்டும் ஈழப் போராட்டம் தேங்கியிருக்கும் இன்றைய சூழலில் புதிய சில சிந்தனைகளைத் தோற்றுவிக்க உதவலாம். கற்பதும் போராடுவதும் மீண்டும் கற்பதும் போராடுவதும் கற்பதும் தானே நாம் விரும்பும் உலகை அடையும் வரையான நம் வாழ்வு.

இலக்கியம் அரசியல் விமர்சனங்கள் என்பவற்றுக்கு அப்பால் மனித உறவுகள் தான் முக்கியம். அதை மதிப்பவர் காலம் செல்வம் அவர்கள். அவரது சுவாரசியாமான உரையை கேட்பதில் எப்பொழுதும் எனக்கு ஆர்வமுள்ளது. அண்மையில் அவர் தாய்வீடு பத்திரிகையில் எழுதிய பரிஸ் அனுபவப் பகிர்வை இரசித்து சிரித்து சிரித்து வாசித்தேன். அவ்வளவு அருமையாக எழுதியிருந்தார். அவருடன் பல முரண்பாடுகள் இருக்கலாம். அவரது கருத்துக்கள் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் இருக்கலாம். எனக்கு உடன்பாடிலில்லாத அவர் சார்ந்த விடயங்கள் கருத்துக்கள் தொடர்பாக நான் முன்வைத்த விமர்சனங்களுக்காக அவர் ஒருபோதும் என்னுடன் கோவித்ததில்லை. ஒரு நிகழ்வில் அவரது உரை அந்த நிகழ்வையே பாதித்தது என பொதுவில் விமர்சனம் செய்தேன். பின் அவரைக் கண்டபோது அவ்வாறு விமர்சனத்தை முன்வைத்தற்கு என்னுடன் கோவமா எனக் கேட்டேன். அது உங்களது உரிமை என எனது விமர்சனத்தை மதித்தவர். மதிப்பவர் அவர். அண்மையில் அவரிடம் சில நூல்களும் காலம் சஞ்சிகையும் வாங்கினேன். கையில் பணம் இருக்கவில்லை. பின்பு பணம் கொடுத்தபோது பணம் இப்ப தேவையில்லை என்றார். வேலையில்லைதானே கிடைத்தவுடன் தாருங்கள் என்றார். நான் இல்லை வேலை செய்கின்றேன் எனக் கூறிக் கொடுத்தேன். இவ்வாறு மற்ற மனிதர்களைப் புரிந்து கொள்பவர். வாசிக்க ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிப்பவர். இவருக்கு பணம் இரண்டாம் பட்சம். இதுதான் வாசிப்பதனால் வளரும் பண்பு. இவ்வாறான ஒரு பண்பாட்டைதான் வாசிப்பவர்கள் சமூகத்தில் உருவாக்க வேண்டும். ஆனால் வாசிப்பவர்கள் பலரிடம் இப் பண்புகளை காணக்கிடைப்பதில்லை. அதிலும் படைப்பாளர்களிடம் மிகவும் அரிதாகவே காணக்கிடைக்கின்றது. நம்மிடம் தெளிவும் உறுதியும் இல்லாதபோதுதான் நாம் விமர்சனங்களைக் கண்டு பயந்து ஓடவேண்டியுள்ளது. தவிர்க்க வேண்டியுள்ளது. எங்களிடம் தெளிவும் உறுதியும் இருக்குமாயின் எந்த விமர்சனங்களும் எங்களை ஒன்றும் செய்யாது. மாறாக அவை நாம் மேலும் வளர்வதற்கே பங்களிக்கும். அவ்வாறான ஒரு நிறைகுடமாக காலம் செல்வம் அவர்கள் இருக்கின்றார். குடத்தின் மீது கறைகள் இருக்கலாம். அவை சுத்தம் செய்யப்படக் கூடியவை.selvam

1998ம் ஆண்டுகளில் புலம்பெயர்ந்து வந்த புதிது. நாட்டுக்கு மீள செல்வதை நோக்கமாகக் கொண்டு இங்கு தீவிரமாக முழு நேர அரசியல் வேலை செய்த நேரம். வேலையும் இல்லாமல் கையில் பணமும் இல்லாமல் புதியவர்களைக் கண்டுபிடிப்பதற்காகவும் மற்றும் மக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதற்காகவும் புத்தக கண்காட்சி ஒன்றை நடாத்த தீர்மானித்தோம். இதற்காக தமிழகத்திலிருந்து விடியல் சிவா மூலமாக நூல்களை வரவழைத்து புத்தகக் கண்காட்சி ஒன்றை நடாத்தினோம். இலாபம் நமது நோக்கமாக இருக்கவில்லை. கையை கடிக்காமல் இருந்தால் போதும் என்பதற்கு ஏற்ப விலைகளைத் தீர்மானித்து விற்றோம். இதற்கு பல நண்பர்கள் தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாலும் பங்களித்தனர். இந்த நிகழ்வை காலம் செல்வம் அவர்களுக்குப் போட்டியாக நாம் நடாத்தவில்லை. ஆனால் இவ்வாறு நாம் தொடர்ந்து நடாத்தினால் காலம் செல்வம் அவர்கள் நீண்ட காலம் புத்தக கண்காட்சி நடாத்த முடியாது என்ற கருத்து பலரிடம் அப்பொழுது இருந்ததது. (காலம்’ அடிக்கடி ‘வளரும் தமிழ்’ என்று புத்தகக் கண்காட்சிகளை நடாத்துகின்றது (செல்வம் நூல் விலைகள் விடயத்தில் சிறிது தாராளம் காட்டுவாரா?). பாரதி மோகனும் (இவர் கரவை கந்தசாமியின் மகன்) தனிப்பட்ட ரீதியில் சில புத்தகக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கின்றார். மிகவும் நியாயமான விலையில் நூல்களை விற்றுப் பலரின் பாராட்டுதல்களைத் தட்டிக்கொண்டவரிவர். பதிவுகள் மே 2000- இணைப்பு கீழே உள்ளது ) (இந்த நிகழ்வை நாம் ஒரு குழுவாகவே செய்தோம். நான் முன்னிலையில் நின்று செயத்தால் அவ்வாறு பார்க்கப்பட்டது.) ஆனால் நமது நிலையோ மோசமாக இருந்தது. விடியல் சிவாவிற்கு குறிப்பிட்ட தினத்திற்கு முதல் ஒரு தொகை பணத்தை அனுப்ப வேண்டும். அல்லது அவருக்கு அங்கு பிரச்சனை உருவாகும். அந்தப் பணத்தை அனுப்புவதற்கே கடன் பட்டுத்தான் அனுப்ப வேண்டியிருந்தது. மேலும் நூல்கள் வந்தபோது ஆயிரம் டொலர்கள் வரி கட்ட வேண்டியிருந்தது. அதற்கு அப்பொழுது டொரன்டோ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற நவாம்சன் பங்களித்தார். நூல்களை விற்று அவரது கடனை அடைக்கலாம் என்றால் அது நடைபெறவில்லை. நூல்களை விற்று பணம் சேர்ப்பதற்காக பல தடவைகள் கண்காட்சியை ஒழுங்கு செய்தோம். ஆனால் தேவையான பணம் கிடைக்கவில்லை. இவ்வாறு ஓரு புத்தக கண்காட்சியை செய்து கையைக் கடித்துக் கொண்டு மனிதர்களுடன் மனஸ்தாபப்பட்டதுதான் மிஞ்சியது. அப்பொழுதுதான் காலம் செல்வம் அவர்களின் வாழும் தமிழ் என்ற நிகழ்வின் முக்கியத்துவம் புரிந்தது. அதன் கஸ்டங்கள் தெரிந்தன. இத்தனை வருடங்களாக வாழும் தமிழ் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு காலம் செல்வம் அவர்களின் அர்ப்பணிப்பும் உறுதியும் வாசிப்பின் மீதான அக்கறையுமே காரணம் என்றால் மிகையல்ல.

காலம்: காலமாகாது. அதுவரை “வாழும் தமிழ்”
kalam thamilஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 19ம் திகதி மாலை காலம் சஞ்சிகையின் ஆதரவில் வாழும் தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது. நிகழ்வில் கலந்து பயன்பெறுங்கள்.

காலம் சஞ்சிகையை இணையத்திலும் வாங்கி வாசிக்கலாம். பின்வரும் இணைப்பை அழுத்துங்கள் http://www.magzter.com/IN/Kaalam_Pathippagam/Kaalam/Art/
மீராபாரதி
16.04.2015

நன்றி
பதிவுகள் மே 2000
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1219:2012-12-13-05-28-43&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35
Photos – eKuruvi & Facebook

Advertisements

Responses

  1. காலம் : காலமாகாது தொடர வாழ்த்துகள்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: