Posted by: மீராபாரதி | March 25, 2015

ஒரு களவும் ஒரு பொய்யும் அல்லது ஒரு பென்சிலும் ஒரு துண்டுப் பாணும்

வறுமையை எழுத்தினுடாக உணர்வதற்கு எவ்வாறு (ரஞ்சகுமார் போன்ற எழுத்தாளர்கள் போல) எழுதி உணர்த்துவது எனத் தெரியவில்லை. அப்படி ஒரு வறுமையை குழந்தைகளாக இருந்தபோது கடந்து வந்திருக்கின்றோம். அதுவும் இளமையில் வறுமையும் ஏழ்மையும் குழந்தைகளுக்கு கொடுமை. அவ்வாறான ஒரு நாளில்….

1978ம் ஆண்டு… ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலம்…. அட்டன் மலையகம்.

நாம் வாடகைக்கு குடியிருந்த அறைக்குப் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு குழந்தைக்குப் பிறந்த நாள். நமது வறுமை மற்றும் ஏழ்மையின் காரணமாக  அவர்கள் தங்கள் வீட்டுக்குள் எம்மை வழமையாக அனுமதிப்பதில்லை. ஆகவே ஒரு நாளும் தங்கள் வீட்டுக்குள் எங்களை அழைத்ததுமில்லை. ஆனால் இன்று அதிசயமாக ஏனோ அழைத்தார்கள். எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. நல்ல இனிப்புகள் பலகாரங்கள் கிடைக்கும் என்ற அவாவுடன் ஆர்வமாக ஆனந்தமாக சென்றோம். இவ்வாறான இனிப்புப் பண்டங்களை புதுவருடம், தைப் பொங்கள், புத்தாண்டு, தீபாவாளி, நோன்பு எனப் பெருநாட்களில் மட்டுமே எங்களுக்கு சாப்பிடக் கிடைக்கும். ஆகவே இன்று எங்களுக்கு கிடைத்த அதிர்ஸ்டம் என நினைத்தோம்.

pencil1வீட்டின் முன்னறையிலிருந்த மேசையின் கீழ் இருந்து மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தோம். அதை ஒரு பஸ்ஸாக நினைத்து ஒருவர் முன்னுக்கு சாரதியாக இருக்க மற்றவர்கள் பயணியாக இருக்க நான் வாசிலில் தொங்கிக் கொண்டு டிக்கட் கொடுப்பவராக இருந்தேன். அப்பொழுது எனது கை மேசைக்கும் அதன் அடியிலிருந்த லாச்சிக்கும் இடையில் தற்செயலாகச் சென்றது. கையில் ஒரு பென்சில் தட்டுப்பட்டது. மற்றவர்கள் என்னைக் கவனிக்காதபோது எடுத்துப் பார்த்தேன். இந்தியாவிலிருந்து கொண்டு வந்த பல நிறங்களில் படம் போட்ட பென்சில். அல்லது விலை அதிகம் கொடுத்து வாங்கிய பென்சில். இந்தப் படம் போட்ட பென்சில் அழகானது மட்டுமல்ல அதன் ஒரு முனையில் அழிரப்பரும் உள்ளதுடன் அதிலிருந்து நறுமணம் ஒன்றும் வீசும். மிகச் சிலரிடம் மட்டும்தான் இந்தப் பென்சிலைக் கட்டிருக்கின்றேன். பாடசாலை மாணவர்களிடம் மிகவும் அரிதாகவே காணக்கிடைக்கின்ற பென்சில் இது. நாம் வழமையாகப் பயன்படுத்துவது வெறும் மஞ்சள் நிறத்திலிருக்கின்ற மலிவான பென்சில். அதில் நறுமணமும் வராது. மறுமுனையில் அழிரப்பரும் இல்லை.pencil2

இப்பொழுது என் மனம் படபடக்க ஆரம்பித்தது. விளையாட்டில் ஆர்வம் குறைந்தது. இந்தப் பென்சிலை யாருக்கும் தெரியாமல் எடுப்பதா இல்லையா என மனம் அலைபாய்ந்தது. அதைப் பற்றிச் சிந்திப்பதிலையே முழுக் கவனமும் இருந்தது. ஒரு புறம் பயம், தயக்கம் மறுபுறம் ஆசை, ஆர்வம். இவற்றுக்கிடையில் மனம் போராடியது. ஆனால் ஒரு கணமும் இன்றுதான் முதன் முதலாக வீட்டுக்குள் அழைத்துள்ளார்கள் அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என நினைக்கவே இல்லை. இறுதியாக எனது ஆசையும் ஆர்வமும் வெற்றிபெற ஒரு வழியாக யாருக்கும் தெரியாமல் எடுத்துவிட்டேன். மிகக் கவனமாக ஆனால் விரைவாக எனது அரைக் காற்ச்சட்டைக்குள் வைத்துவிட்டு மற்றவர்களுடன் விளையாட்டில் இணைந்தேன். ஆனால் மனம் படபடக்க உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. எப்பொழுது வெளியே போவோம் எனக் காத்திருந்தேன். ஒருவழியாக அவர்கள் வீட்டிலிருந்து அதை(க் களவு) எடுத்துக் கொண்டு வந்தேன். பத்திரமாக புத்தகங்களுக்கு நடுவில் வைத்தேன்.

இரவு நித்திரைவரும் வரை பயத்துடன் படுத்திருந்தேன். அம்மா அப்பாவுக்குத் தெரிந்தால் தோலை உரித்து விடுவார்கள். மற்றவர்களுக்குத் தெரிந்தால் வெட்கம் மானம் ரோசம் எல்லாம் போய்விடும். இப்படியே நினைத்துக் கொண்டு நித்திரை கொண்டபோது அதைப் பற்றிய கனவு வந்தது. பள்ளிக்கூடத்தில் நண்பர்கள் சூழ நடுவில் நான் பெருமையுடன் நிற்கின்ற காட்சி வந்து வந்து போனது. கனவில் மகிழ்ச்சியாக இருந்தேன். விடிந்தபின் குளிர்ந்த போதும் அலுப்பில்லாமல் ஆர்வத்துடன் எழும்பி வெளிக்கிட்டேன். ஆனால் மீண்டும் மனதுக்குள் பயம் உருவாக உடலில் சிறு நடுக்கமும் இருந்தது. வீட்டை விட்டு விரைவாக செல்வதற்கு முயன்றேன். இருப்பினும் பென்சிலைப் பத்திரமாக புத்தகத்திற்குள் வைத்து அதை மாட்டுத்தாள் பேப்பர் பாக்குக்குள் வைத்துக் கொண்டு பாடசாலைக்குச் சென்றேன்.

pencil3இரவு கனவு கண்டதைப் போல இன்று பள்ளிக் கூடத்தில் நான் தான் ராஜா. வழமையாக என்னிடம் வராத என்னுடன் கதைக்காத மாணவர்கள் எல்லாம் இன்று என்னைச் சுற்றி இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சில மாணவர்கள் மட்டுமே நடராஜா கொம்பஸ் பெட்டி வைத்திருந்தார்கள். அதுவே அவர்களது பெருமையைக் கூறும். ஆனால் இன்று இந்தப் பென்சிலைத் தொட்டும் மணந்தும் பார்க்க அவர்களும் விரும்பினார்கள். அதை எங்கே வாங்கினேன் என விசாரித்தார்கள். நான் என்னத்தைச் சொல்வது பொய் மேல் பொய் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பாவுக்குத் தெரிந்த மாமா ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் எங்களுக்கு அன்பளிப்புச் செய்தார் எனக் கூறினேன். எங்களது வறுமையையும் ஏழ்மையையும் பாடசாலை நண்பர்கள் ஆசிரியர்கள் அனைவரும் அறிவார்கள். ஆகவே அவர்களுக்கும் இந்தப் பென்சில் எப்படி எனக்கு கிடைத்தது என்பது சந்தேகமாகவே இருந்திருக்கும். ஆனால் நான் என்னுடையது என சாதித்தேன். பீத்திக் கொண்டு திரிந்தேன்.nataraj comapss

பென்சிலின் சொந்தக்காரர் அந்த வீட்டிலிருந்த ஒரு அக்கா. இவர்களின் குடும்பம் தம்மை தோட்டத் தொழிலாளர்களுடன் அடையாளப்படுத்த மாட்டார்கள். ஏனெனில் முதலாளிமார் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவுடன் நெருக்கமான உறவு உள்ளவர்கள். இவர் நமது பாடசாலையில் உயர் தரம் படித்துக் கொண்டிருந்தார். தனது பென்சிலைக் காணவில்லை எனக் காலையில் தேடியிருக்கின்றார். யோசித்துப் பார்த்தார். முதல் நாள் மாலை தங்கள் வீட்டுக்குப் புதிதாக வந்த அந்நியர்கள் நாம் மட்டுமே என்பது அவருக்குப் புரிந்தது. ஏற்கனவே என்னைக் கண்டால் அவருக்கும் பிடிக்காது. ஆகவே அவருக்கு என் மீது அதிக சந்தேகம் வந்திருக்க வேண்டும். அதனால்தான் என்றுமில்லாதவாறு இன்று எங்கள் வகுப்பறைப் பக்கம் வந்தார். அவர் வருவதைக் கவனியாது நான் பென்சிலைக் கையில் வைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டு நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். மற்றவர்கள் கேட்டும் அதை அவர்கள் கையில் கொடுக்கவில்லை. எனது கஸ்டகாலம் என்னைக் கடந்து சென்ற அக்கா நான் பென்சில் வைத்திருப்பதைக் கண்டுவிட்டார். அவர் நேராக எனது வகுப்பாசிரியரிடம் சென்று முறையிட்டார்.

beating kids1வகுப்பாசிரியர் யாழ்ப்பாணத்தவர். அவர் என்னைக் கூப்பிட்டு “ஏன்டா யாழ்ப்பாணத்தாண்ட மானத்த வாங்குகின்றாய்… உன்ட யில்லை என்றா.. கொடுத்துவிடன்.. “ என்று திட்டினார். எனக்கு யாழ்ப்பாணத்தாரின்ட மானம் போவது பற்றிப் பிரச்சனையில்லை. ஏனெனில் நான் யாழ்ப்பாணத்தவனாக என்றும் உணரவில்லை. ஆனால் மலையக நண்பர்கள் என்னைப் பனங்கொட்டை என்பார்கள். நான் யாழ்ப்பாணம் போனால் யாழ்ப்பாண நண்பர்கள் என்னைத் தேயிலைக் கொட்டை என்பார்கள். ஆகவே நான் இரண்டும் கெட்டானாகவே இருந்தேன். அல்லது இரண்டுமாக இருந்தேன். ஆகவே யாழ்ப்பாண மானம் போவதைப் பற்றிக் கவலைப்படாமல் நானும் இல்லை என சாதித்தேன். அவர்கள் முயற்சி வெற்றியளிக்க வில்லை. ஆசிரியர் மாணவ நண்பர்களுக்கு முன்னால் தான் என்னைத் திட்டினார். அவர்களுக்கு இப்பொழுது தெரிந்துவிட்டது. எல்லோரும் என்னை ஒரு மாதிரிப் பார்த்தார்கள். நான் தனித்துப் போனேன். வெட்கமாகப் போய்விட்டது. உருவாக்கிய பெருமைகள் மகிழ்ச்சி எல்லாம் ஒரு கணத்தில் காணாமல் போய்விட்டன.

அக்கா தன் பென்சிலைக் கண்டுபிடிக்க விடாது முயற்சி செய்தார். பாடசாலை முடிய தனது வீட்டில் சென்று முறையிட்டார். அவர்கள் எனது அம்மாவிடம் முறையிட்டார்கள். அம்மாவுக்கு என் மீது கோவமும் அவர்கள் அவ்வாறு சொன்னதால் வெட்கமும் ஏற்பட நெருப்பாக இருந்தார். என்னை எதிர்பார்த்து காத்திருந்தார்.

நான் பள்ளிக்கூடம் முடிந்து புத்தகங்களையும் அந்தப் பென்சிலையும் மாட்டுத்தாள் பேப்பர் பாக்குக்(பையிக்)குள் பத்திரமாக வைத்துக் கொண்டு சென்றேன். மழை தூறிக் கொண்டிருந்தது. ஆகவே தலை நனையாமலிருக்க ஒரு கையால் புத்தகப் பையை தலையில் வைத்துக் கொண்டும் மறுகையால் காற்சட்டை விழுந்துவிடாமல் இருக்க அதைப் பிடித்துக் கொண்டும் ஓடிச் சென்றேன். வீடும் வரும் பொழுது ஒரளவு நனைந்துவிட்டேன்.

வீட்டு வாசலில் அம்மா கோவத்துடனும் முறைத்த கண்களுடனும் கையில் கம்புடன் நின்றார். பக்கத்துவிட்டு அக்காவின் பெயரைச் சொல்லி அவரின் பென்சில் எங்கே என்றார். எனக்குத் தெரியாது என மீண்டும் பொய் சொன்னேன். அவர் அடிக்க அடிக்க நானும் அடம் பிடித்தேன். அவர் களைத்துப் போனார். அடுத்த அடிபோடும் ஆட்டம் ஆடுவதற்கு தயாராக சிறிது இளைப்பாறினார். ஆனாலும் அவரது வாயிலிருந்து திட்டுக்கள் வந்து கொண்டிருந்தன. “ஏன்டா குடும்ப மானத்தை வாங்குறாய்… ஐயா வரட்டும் இன்னும் இரண்டு நல்லா வாங்கித் தாரன்… “ என்று புறுபுறுத்துக் கொண்டே இருந்தார்.

நான் என்ன செய்வது எனத் தெரியாது இருந்தேன். இனி அப்பா வரும் நேரம். அவரிடம் அம்மா சொன்னால் இன்னும் அடி விழும். அது அம்மா அடிப்பதால் ஏற்படும் வலியைவிட அதிகமானது. ஆகவே பென்சிலைக் கொடுப்பது எனத் தீர்மானித்து மாட்டுத்தாள் பேப்பர் பையினுள் பென்சிலைத் தேடினேன். ஆனால் அதற்குள்லிருந்த பென்சிலைக் காணவில்லை. மாட்டுத்தாள் பை நனைந்து இருந்ததுடன் ஒரு பக்க மூலையில் ஓட்டையாகவும் இருந்தது. அதற்கூடாக வரும் வழியில் எங்கோ விழுந்திருக்க வேண்டும் என நினைத்தேன். இப்பொழுது பென்சிலைக் காணவில்லை என உண்மை சொன்னாலும் யாரும் நம்பப் போவதில்லை. கள்ளன் பட்டம் கிடைப்பதும் அப்பாவிடம் அடி வாங்குவதும் உறுதி. களவெடுத்தும் அனுபவிக்காமல் கள்ளன் பட்டமும் அடியும் மட்டுமே கடைசியாக கிடைத்தது. பயத்துடனும் கவலையுடன் வீட்டு மூலையில் போய் குந்தினேன்.pencil

,,,,,,,,,,,,,,,,

காலை வழமைபோல விடிந்தது.
இரவு அம்மா தான் போட்ட அடி போதும் என நினைத்தாரோ என்னவோ அப்பாவிடம் சொல்லவில்லை. ஆகவே அந்த அடியிலிருந்து தப்பினேன். சில நேரம் பிள்ளையளுக்கு காலம சாப்பிட ஒன்றுமில்லை. மத்தியானமும் என்ன செய்வது என தெரியாத நிலையில் பிள்ளைகள் பசியிலிருக்கும் என நினைத்தும் அப்பாவிடம் சொல்லாமலும் விட்டிருக்கலாம். எப்படியோ அப்பாவிடமிருந்து அடி வாங்காமல் தப்பியது சந்தோசமாக இருந்தது.

up country & Batti 2012 140விடிய எழும்பிய போது அம்மா தேத்தண்ணி தந்தார். “சீனி காணாது கையில வைச்சு நக்கி குடி” என்றார். அப்பாவும் காலையிலையே தேத்தண்ணி குடித்துவிட்டு வெளியே போய்விட்டார். அவர் எப்படியாவது காசு பிரட்டி குடிக்காமல் வந்தால் தான் எங்களுக்கு மதியம் அல்லது ஆகக் குறைந்தது இரவுச் சாப்பாடாவது கிடைக்கும். அம்மா அறைக்குள்ளையே இருந்தார். அறை இருட்டாக இருந்தது. வீட்டுச் சொந்தக்கார கிழவி பகலில் லைட்போட விடமாட்டார். அதுமட்டுமில்லை அம்மாவுக்கு மட்டுமே இந்த வீட்டின் உள்ளே அதாவது பின் பக்கம் உள்ள குசினிக்குப் போவதற்கு அனுமதி உள்ளது. அவர் சமைத்துவிட்டு சாப்பாட்டை இந்த அறைக்குள் கொண்டுவந்து விடுவார். இந்த அறை மட்டுமே நமக்கு சாப்பிடுவதற்கும் உடை மாற்றுவதற்கும் படிப்பதற்கும் படுப்பதற்கும் என அனைத்துக்கும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. ஆகவே நாம் விளையாடுவதாக இருந்தால் முன் வாசல், முத்தம், வெளி மட்டுமே எமக்கு இருந்தது.

poor kidஅப்பா வரும் வரை நாம் மூவரும் வெளியே வந்து வாசலில் கானில் உட்காந்திருந்தோம். இந்தக் கானில் மழை நாட்களில் மட்டுமே கூரையிலிருந்து விழும் மழை நீர் ஓடும். மற்ற நாட்களில் காய்ந்துபோய் இருக்கும். எங்களுக்கு விளையாடுவதற்கு மனமுமில்லை உடலில் வலுவுமில்லை. ஆகவே சும்மா இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். ஏன் எங்களுக்கு மட்டும் இவ்வளவு கஸ்டம்? ஏன் அப்பாவுக்கு வேலை இல்லை? கடவுள் ஏன் எங்களுக்கு இவ்வளவு கஸ்டத்தை தாரார்? என கடவுளின் மீது கோவம் வந்தது. வந்த கோவத்தில் பெருநாள் நாட்களுக்கு கிடைத்த சிவபெருமான், உமாதேவி பிள்ளையார், முருகன், சரஸ்வதி, இலச்சுமி, தூர்க்கை, யேசு, புத்தர் என எல்லாக் கடவுள்களின் படத்தை எடுத்து கொண்டு வந்து அடி அடி என அடித்தேன். இவர்களை அடித்தோ அல்லது இவர்களிடம் கோவம் பட்டும் பிரயோசனமில்லை. இரஞ்சிக் கேட்டும் பயனில்லை. ஒருபோதும் நாம் கேட்பது இவர்கள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. குழந்தைகளின் கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாத கடவுள்கள் பெரிய மனிதர்களின் கோரிக்கைகளையா நிறைவேற்றப் போகின்றார்கள். ஆனாலும் மனிதர்கள் கடவுள்களை நம்புகின்றார்கள்.poor kid1

மணி பதினொன்றாகியது. பக்கத்து வீடுகளிலிருந்து வரும் சமையல் வாசம் நம் மூக்கைத் துளைத்தது. இந்தச் சாப்பாட்டு மணம் நம் மூவரது வயிற்றை மேலும் கிண்டி எடுத்தது. நாம் ஒன்றும் செய்ய முடியாதளவு சோர்ந்து போயிருந்தோம். என்ன செய்யலாம் என யோசித்த போது ஒரு எண்ணம் தோன்றியது. கடன் கேட்பது

runningநான் எனது உடல் வாகனத்தை தயார் செய்தேன். கையை வாகனத்தின் ஸ்டேரிங்கை பிடிப்பதுபோல் கற்பனையாக பிடித்துக் கொண்டு, வாயினால் “புடுக்” “புடுக்… று று. ரூரூ” என சத்தம் போட்டுக் கொண்டு அரைக் காற்சட்டையின் குண்டிப் பக்கம் தேய்ந்து தேய்து உருவான இரு ஓட்டைகளால் புகை வருவதாக கற்பனை செய்து கொண்டேன். அப்படியே கால்கள் எனது வாகனத்தின் சில்லுகளாக மாற வளைந்து வளைந்து ஓடினேன். வரிசையாக ஒட்டிக் கொண்டிருந்த பத்து வீடுகளையும் கடந்து வீதிக்கு வந்தும் ஓடினேன். இந்த வீதியால் எப்பொழுதாவதுதான் வாகனம் வரும். ஆகவே பயமின்றி ஓடலாம்.driving

அட்டன் பிரதான வீதியிலிருந்து மேல் நோக்கி வந்தால் ஒரு வீதி இடப் பக்கமாகத் திரும்பி புகையிரத பாலம் கடந்தால் அட்டன் நூலகம் மற்றும் நகரசபை என்பவற்றுக்கு செல்லலாம். திரும்பாமல் நேராக சென்றால் அது பஸ் திருத்துகின்ற டிப்போவிற்கு செல்லும். இந்த சந்தியிலுள்ள சிங்களக் கடையில் தான் நான் வழமையாக சமான்கள் வாங்குவேன். ஆனால் இந்தக் கடையில் கடன் தரமாட்டார்கள். ஆகவே வேறு இடத்தில் தான் கடன் வாங்க வேண்டும். இப்பொழுது கொஞ்சக் காலமாக நான் ஓடிவந்த இந்த வீதி ஓரமாக இருக்கின்ற வீடு ஒன்றில் ஒருவர் பெட்டிக் கடை ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார். அவரிடம் சில நாட்கள் காசு கொடுத்து அரை அல்லது காறாத்தால் பாண் வாங்கியிருக்கின்றேன். அப்படி வாங்கி வாங்கி கொஞ்சம் அவருடன் பழக்கம். பழக்கம் வந்த பிறகு கடனுக்கும் வாங்கியிருக்கின்றேன். இவ்வாறு சிறுவயதிலையே கடன் வாங்கிப் பழகிவிட்டேன். எம்மைப் போன்ற குடும்பங்களுக்கு மற்றவர்களிடம் கடன் கேட்பது என்பது சாதாரண ஒரு நிகழ்வு. (பணக்காரார்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கும். அல்லது அவர்கள் இவ்வாறு சில்லரைக் கடன் ஒன்றும் வாங்க மாட்டார்களாக்கும். பணக்கார வீட்டு ஆனால் புரட்சிகர அரசியல் ஈடுபாடுள்ள எனது நண்பர் ஒருவர் ஒரு நாள் என்னிடம் கேட்டார் எப்படி கூச்சமில்லாமல் கடன் கேட்கின்றாய் என. அவருக்கு எப்படி ஒரு ஏழையின் பசியை, தேவையை உணர்த்துவேன்)

மேற்குறிப்பிட்ட கடைக்காரரிடம் போய் மீண்டும் பாண் கடன் வாங்குவோம் என நினைத்துக் கொண்டு ஓடி வந்து எனது வாகனத்தை நிறுத்தினேன். ஏற்கனவே அவரிடம் கொஞ்சக் கடன் வைத்திருக்கின்றேன். இருந்தாலும் எனதும் தங்கைகளினதும் பசி என்னைக் கடன் கேட்கத் துண்டியது. அவரைப் பார்த்து அப்பாவியாக சிரித்துக் கொண்டு, “அண்ண ஒரு அரை றாத்தால் பாண் தாங்கோ நாளைக்கு காசு தாரன்” என்றேன். “முடியாது தம்பி நேற்றும் முந்த நாளும் வாங்கின கடனை தந்துபோட்டு புதுசா கடன் வாங்கு” என்றார். “அண்ண இப்ப காசில்ல.. காறாத்தல் பாணாவது தாரிங்கலா” என்றேன். அவர் மனம் இலகுவது மாதிரித் தெரியவில்லை. ஏமாற்றம் உடலில் சோர்வைத் தந்து எனது முகம் வாடியது. இருந்தாலும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகலாமல் தயக்கத்துடன் நின்றேன். சில நேரம் அவர் மனம் மாறித் தரலாம் என நம்பினேன்.

இவ்வாறு கடை வாசலில் நின்று கொண்டிருந்தபோது மனதில் மின்னல் போல ஒரு எண்ணம் தோன்றியது. நேற்று இவரிடம் கடன் கேட்டபோது தனது கடையிலிருந்த பூட்டு ஒன்றைக் காணவில்லை என்றார். அந்தப் பூட்டைக் கண்டதாக பொய் சொன்னால் சில நேரம் கடன் தரலாம் என மனம் சொன்னது. அவரிடம் இரகசியம் சொல்லுமாப்போல, “அண்ண நேற்று உங்கட பூட்டு ஒன்று காணவில்லை என்று சொன்னிங்க” என்றேன். “ஆமா இப்ப என்ன அதுக்கு” என்ன என்றார் அவர். “நீங்க சொன்ன மாதிரி ஒரு பூட்டை நேற்றுப் பின்னேரம் பிச்சை கையில வைத்திருக்க கண்டேன்” என்றேன். “அப்படியா… அவனிடம் கேட்கின்றேன்” என்றார். அவருக்கு பூட்டு கிடைக்கும் என்ற சந்தோசத்திலோ என்னவோ தன்னிடமிருந்த அரை றாத்தல பாணை நடுவால வெட்டி காறாத்தல் பாண் தந்தார். “ பழைய பாக்கி இரண்டு ரூபா… இப்ப மொத்தமா இரண்டு ரூபா முப்பது சதம் தரவேண்டும்” என்றார். நானும் “சரி” என மகிச்சியாக சிரித்துக் கொண்டு கூறிவிட்டு எனது காரில் மீண்டும் ஓடி வந்தேன்.

beating kidsபிச்சை என்னைப்போல ஒரு சிறுவன். நாம் வசிக்கின்ற வீட்டிலிருந்து நான்காவது வீட்டில் வசிப்பவன். உண்மையில் அங்கு வேலை செய்பவன். அவனது அம்மா அப்பா தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவர்கள். இவனைப் படிப்பிக்க வைக்க முடியாத கஸ்டத்தினால் இவன் இப்பொழுது வாழுகின்ற வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார்கள். மாதத்தில் ஒரு நாள் வந்து இவனையும் பார்த்து விட்டு அவன் வேலை செய்ததற்கான பணத்தையும் வாங்கி கொண்டு போவார்கள்.

இவன் காலையில் இருந்து இரவு வரை வேலை செய்ய வேண்டும். வசிக்கின்ற வீட்டிலிருக்கின்ற பிள்ளைகளைகளில் ஒருவருக்கு இவனது வயது. மற்றப் பிள்ளைகள் சிறியவர்கள். இவர்களைப் பள்ளிக்கூடம் கூட்டிச் செல்ல வேண்டும். இவன் பள்ளிக்கூடம் போவதில்லை. மாலையில் இந்த வீட்டுக்காரர் வணங்குகின்ற கடவுளின் இருப்பிடத்திற்கு இந்த வீட்டுப் பிள்ளைகளைக் கூட்டிச் செல்ல வேண்டும். இவன் வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த பொடியன். இந்த வீட்டுக்காரர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவனும் அவர்களுடன் சேர்ந்து இந்த வீட்டுக்காரரின் மதத்தின் முறைகளை பழகவும் அவர்களது வேதங்களைப் பாடமாக்கவும் வேண்டும். இரவு வீட்டுக்கு வந்து வேலை எல்லாம் செய்து முடிந்தபின் மற்றப் பிள்ளைகளுடன் சேர்ந்து அவர்களைப் போல குறிப்பிட்ட மதத்தின் பாடல்களைப் பாடிப் பாடமாக்குவான். எல்லோரும் சாப்பிட்ட பின்தான் இவன் சாப்பிட வேண்டும். பசித்தாலும் காத்திருக்க வேண்டும். இவன் எதாவது ஒரு சின்னப் பிழை விட்டாலும் அந்த வீட்டுக்கார அம்மா நன்றாக இவனை அடிப்பார். பல முறை அவ்வாறு அவன் அடிவாங்குவதைக் கண்டிருக்கின்றேன். வெளியிலுள்ள தூணில் கட்டிப் போட்டும் அடிப்பார்கள். இதைத் தடுப்பதற்கோ இவனுக்காக கேள்வி கேட்பதற்கோ யாரும் இல்லை. பார்த்துக் கவலைப்பட்டிருக்கின்றேன். ஆனால் இன்று எம் பசி போக்க அவனை மாட்டிவிடுவதைத் தவிற வேறு வழி எனக்குத் தெரியவில்லை. அவன் மீது இரக்கப்படும் எனது கண்களை என் பசி மறைத்துவிட்டது.

காறாத்தல் பாணை மூன்று துண்டாக வெட்டி அடித்துண்டை நான் எடுத்துக் கொண்டேன். அது நல்ல மொறு மொறு என இருக்கும். சில நாளைக்கு அரை றாத்தல் வாங்கினால் நடுவால் மூன்று துண்டாக வெட்டி நானும் எனக்கு அடுத்த தங்கச்சியும் பக்க வாட்டிலிருக்கின்ற மொறு மொறு பக்கத்தை எடுப்போம். நடுவில் பஞ்சு போல இருக்கின்ற பக்கம் எப்பொழுதும் கடைசி தங்கச்சிக்கு தான் கிடைக்கும். நாங்கள் மூத்தவர்கள். பலமுள்ளவர்கள் என்பதால் எமக்கு விருப்பமானதை நாம் எடுத்துக்கொண்டு மிகுதியைத்தான் அவருக்கு கொடுப்போம். இந்தக் காறாத்தால் பாண் யானைப் பசிக்கு சோளப் பொறி போட்டமாதிரித்தான். இருந்தாலும் ஒன்றுமில்லாததற்குப் பரவாயில்லை. அம்மா தான் பசியுடன் இருந்தபோதும் நாம் பசியாருவதைப் பார்த்து மகிழ்ந்தார். குழந்தைகளை இப்படிப் பட்டினி போடுகின்றேனே என உணர்வதை அவரது முகம் காட்டியது. ஆனாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாதவராக இருந்தார்.

மாலை நேரம். மதியம்போல் நாம் சாப்பிட்ட அந்த துண்டுப் பாண் தந்த சிறு சக்தியில் நாம் வீட்டின் முற்றத்திலிருந்து ஜில்போல அடித்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது

“அடிக்காதிங்கோ…வலிக்குது.. நான் எடுக்கல்ல…நான் எடுக்கல்ல… வலிக்குது அடிக்காதிங்கோ” என்ற பிச்சையின் சத்தம் நம் காதுகளுக்கு கேட்டது. நாம் திரும்பிப் பார்த்த போது அவனைக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொண்டிருந்தார் அந்த வீட்டுக்கார அம்மா.

இப்பொழுதும் அவன் கத்துகின்ற ஒலி என் காதுகளுக்குள் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

மீராபாரதி
பி.கு:

  1. கடந்த வருடம் இலங்கை சென்றபோது அவனைப் பற்றி விசாரித்தேன். பிச்சை மதம் மாறி கலியாணம் கட்டி பிள்ளைகளும் இருக்கின்றன. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் வந்து அவனும் துணைவியாரும் இறந்து விட்டதாக சொன்னார்கள்.
  2. இப்பொழுது அவன் இறந்து விட்டான். ஆனால் அவனது சின்ன வயது முகமும் அந்த அழுகுரலும் இன்றும் எனக்குள் கேட்டுக் கொண்டிருக்கின்றது. இப்படி எழுதி எனது குற்றவுணர்வையும் கடப்பதற்கு முயற்சி செய்கின்றேன்.
  3. இது நடந்தது 1978 -1979 காலங்களில்.. இக் காலங்களில் நான் முதன்முறையாக கடைக்குப் போய் பாண் வாங்கிய போது ஒரு றாத்தல் பாணின் விலை 60சதம் என நினைக்கின்றேன். பின் அது 90சதம், ஒரு ரூபாய் ஆகி பின் 1.20சதம் எனக்   கூடிக் கொண்டு சென்றது. இக் காலங்களில் காறாத்தால் பாண் வாங்குமளவிற்கு 15 சதம் அல்லது 25சதம் இல்லாமல் இருந்திருக்கின்றோமே என இப்பொழுது நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கின்றது.
  4. இப்பொழுது எவ்வளவு சாப்பாடுகளை நாம் வீணாக்குகின்றோம் என்பதைப் பார்க்கும் பொழுது கடந்த காலம் என் கண் முன் வர தவறுவதில்லை. இப்பொழுதும் எத்தனை பேர் இப்படி ஒரு நேர பசியாவது ஆற முடியாது கஸ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒன்றும் செய்யாது எழுதிக் கொண்டிருக்கின்றோம்.
  5. உங்கள் வாழ்க்கையிலும் இவ்வாறான சிறு களவுகள், சொன்ன பொய்கள் நினைவு வரலாம். அவற்றை எழுதலாமே…
  6. படங்கள் கூகில் – நன்றி

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: