Posted by: மீராபாரதி | March 13, 2015

முஸ்லிம்களும் இஸ்லாமும்: அச்சமும் எதிர்ப்புணர்வும் – சில குறிப்புகள்

முஸ்லிம் கூட்டம்முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் தொடர்பான புரிதல்களை (புலம் பெயர்ந்த) ஈழத் தமிழர்கள் பெற்றுக்கொள்வதற்கு உரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும். இது தொடர்பான பல உரையாடல்களை கடந்த காலங்களில் தேடகம் மற்றும் மே 18 இயக்கத்தினர் ஒழுங்கு செய்தனர். இக் கூட்டங்களில் குறிப்பிட்டதுபோல் இந்த நிகழ்வுகளில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவை நண்பர்களுக்கு சுற்றுக்கு விடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது இதுபோன்ற விடயங்களில் ஏற்கனவே எட்டப்பட்டிருந்த புரிதலிலிருந்து புதிய உரையாடலை ஆரம்பிக்கலாம். அப்பொழுதான் இன்னுமொரு கூட்டத்தை இந்த விடயங்கள் தொடர்பாக (யாராவது) ஒழுங்கு செய்யும் பொழுது அது ஒரு வளர்ச்சிப்படியாக இருக்கும்.

இவ்வாறான கூட்டங்களில் குறிப்பிட்ட சிலரே (இறுக்கமான அவசரமான புலம் பெயர் வாழ்வுச் சூழலுக்குள் நேரம் ஒதுக்கி) மீள மீள வருகின்றோம். இந் நிலையில் முதல் கூட்டத்தில் உரையாடிய முரண்பாடுகள் சந்தேகங்கள் தொடர்பாக மீள மீள நடைபெறும் கூட்டங்களில் அவற்றையே மீளக் கலந்துரையாடுவதில் பயனில்லை. இது ஆழமான விரிவான பரந்த புரிதலை நாம் பெற்றுக் கொள்ளவதற்கும் வளர்வதற்கும் வழிசெய்யாது. மேலும் இவ்வாறான கூட்டங்கள் ஒழுங்கு செய்யும் பொழுது அவசரமின்றி ஆறுதலாக பலர் பங்குபற்றுவதற்கு ஏற்ப கால அவகாசம் கொடுத்து ஒழுங்கு செய்ய வேண்டும். அதேவேளை கடந்த முறை நடைபெற்ற நிகழ்வின் (அது எந்த அமைப்பு செய்திருந்தாலும்) கூட்டக் குறிப்புகளை பகிர்வது பயனுள்ளதாகும். இதற்கு இவ்வாறான விடயங்களில் ஆர்வமும் அக்கறையுமுள்ள அமைப்புகள் ஒன்றினைந்து பங்களிக்க முன்வரவேண்டும். அல்லது ஒவ்வொருவரும் தாமே இவ்வாறான ஒரு நிகழ்வை செய்தோம் என தமது இயக்க மன்னிக்கவும் அமைப்பு வரலாற்று நூலில் குறிப்பதற்கு மட்டுமே இவை பயன்படலாம். மாறாக சமூக தனிமனித மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் பங்களிக்குமா என்றால் அது கேள்விக்குறியே. இவ்வாறான ஒரு பின்னனியில் கனடா ரொரன்டோ நகரில் சமஉரிமை இயக்கம் ஒரு கிழமைக்குள் அறிவித்து இஸ்லாமிய அச்சக் கோளாறும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வும் என்ற கூட்டத்தை அவசர அவசரமாக ஒழுங்கு செய்திருந்தது. இது ஒரு பயனுள்ள உரையாடல்களாக இருந்தபோதும் மேற்குறிப்பிட்ட கேள்விகளைவிட மேலும் பல கேள்விகளை உருவாக்கியது.

இரு இனங்கள் மதங்கள் என்பவற்றுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் உணர்ச்சிகரமான விவாதங்களாக மாறுவதுண்டு. இருப்பினும் இக் கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் உணர்ச்சிப் பிளம்புகள் வெடிக்கவில்லை. மாறாக ஒரே இனத்திற்குள் உள்ளவர்களுக்குள் வெடித்தது. ஆகவே இவ்வாறான விடயங்களை உரையாடுவதற்கு முதல் நாம் உணர்ச்சிவசப்படாமல் எவ்வாறு உரையாடுவது என்பதை பழக வேண்டும். அல்லது இவ்வாறான கூட்டங்கள் மட்டுமல்ல எந்தக் கூட்டங்களும் ஒழுங்காக நடைபெறாமல் நேரத்தை வீணடிக்கும் செயலாகவே இருக்கும். ஆகவே இந்த மாற்றம் அவசியமானதும் முக்கியமானதுமாகும்.

1990ம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் குறுகிய நேரத்தில் வெளியேற்றப்பட்டமை கண்டிக்கத்தக்கதும் வருத்தத்திற்கும் உரியதுமாகும். இதற்கு இலங்கையில் வாழ்கின்ற வாழ்ந்த முழுத் தமிழ் சமூகமும் பொறுப்பெடுக்க வேண்டும். இதற்காக நாம் ஒவ்வொருவரும் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில் அதைத் தடுக்கவோ எதிர்க்கவோ செய்யாது அமைதியாக இருந்தோம். இவ்வாறு இருந்தமை ஒருவகையில் இதற்கு ஆதரவு வழங்கியதுமாகும். அல்லது எதிர்க்க முடியாத நமது இயலாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதேவேளை இந் நிகழ்வு முழு ஈழத்து தமிழ் சமூகத்திலும் இருந்த ஆழ்மன எண்ணத்தின் விருப்பத்தின் ஒரு வெளிப்பாடு என்றால் மிகையல்ல. ஆகவே இதனை வெறுமனே செயற்படுத்திய ஒரு இயக்கத்தின் மீது அல்லது அந்த இயக்கத்தின் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் மீது மட்டும் பொறுப்பு சுமத்தி குற்றவாளியாக்குவது சரியான வழிமுறையல்ல. இவ்வாறு செய்வது என்பது நாம் தப்பிக்கும் ஒரு தந்திரோபாயமாகும். இன்றுகூட இந்த செயலை நியாயப்படுத்தும் (இயக்கம் சார்ந்த சாராத) பலர் இருக்கின்றனர். குறிப்பாக கிழக்கிலங்கையில் முஸ்லிம் தமிழ் இரண்டு சமூகங்களும் தம்மை நியாயப்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். இவ்வாறு பல தளங்களில் இன விரோதங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் தமிழ் சமூகங்களில் முஸ்லிம் விரோதப்போக்குகள் ஊறிக் காணப்படுகின்றன. இந்த நிலையில் நாம் முஸ்லிம் சமூகத்துடன் ஒரு உரையாடலை செய்வது அசாத்தியமானதாகும். இதைச் சாத்தியமாக்குவதற்கு நாம் முன்கூட்டிய சில செயற்பாடுகளை செய்ய வேண்டியவர்களாக இருகின்றோம்.

முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் என்பவற்றுக்கு எதிராக இலங்கையிலும் மேற்கு ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சார மற்றும் தாக்குதல்களுக்கு ஒரளவு எண்ணிக்கையான தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் சிலர் இவ்வாறான எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து ஆதரவுக் குரலையும் கொடுக்கின்றனர். இருப்பினும் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல பெரும்பான்மையாக எதிர்மறை பார்வைகளும் கருத்தாதிக்கங்களுமே தமிழர்களின் ஆழ்மனங்களில் காணப்படுகின்றன. இவை பல ஆண்டுகளாகப் பதியவைக்கப்பட்டவையாகும். குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மட்டுமே இவை வெளிப்படும். ஆகவே முதலில் நாம் செய்ய வேண்டியது தமிழர்கள் தமக்குள் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் தொடர்பாக கலந்துரையாடி பொதுவான ஒரு புரிதலுக்கு வரவேண்டும். நமது சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும். தவறான பார்வைகளைக் களையவேண்டும். இதன் அடுத்த கட்டமாக இவை தொடர்பான நமது கேள்விகளைத் தொகுக்க வேண்டும். இவற்றைச் செய்த பின்தான் முஸ்லிம் சமூகத்தவரை அழைத்து அவர்களுடன் உரையாடலை நடாத்தா வேண்டும். இவற்றைச் செய்யாமல் அவர்களை உரையாட அழைத்து அவர்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்துவதோ இழிவு செய்வதோ ஆரோக்கியமானதுமல்ல நாகரிகமானதுமல்ல. இது எந்தவிதமான தீர்வுகளையும் தரப்போவதில்லை. மேற்குறிப்பிட்ட கூட்டத்தில் இவ்வாறு நடைபெறாதபோதும் கடந்த கால கூட்டங்களிலும் முகநூல் மற்றும் வலை விவாதங்களிலும் இவர்களுக்கு எதிரான எண்ணங்கள் இவ்வாறுதான் பரவிக்கிடக்கின்றன.

முஸ்லிம் அச்சம் மற்றும் அவர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வு தொடர்பாக நாம் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் உள்ளன.

எல்லா நாடுகளிலும் பல மதங்கள் இனங்கள் இருக்கின்றன. ஒரு சில நாடுகள் மட்டுமே தாம் பல மத இனங்களை சமமாக மதிப்பதாக கூறுகின்றன. இருப்பினும் இந்த நாடுகளிலும் கூட குறிப்பிட்ட ஒரு சமயத்தின் இனத்தின் ஆதிக்கம் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ நிலவுகின்றன என்பது நாம் அறிந்ததே. இந்தடிப்படையில் மேற்குல நாடுகளில் எல்லாம் கத்தோலிக்க அல்லது கிரிஸ்தவத்தை அடிப்படையாக கொண்ட மதங்களே பெரும்பான்மையாக இருக்கின்ற. இவை அந்தந்த நாடுகளின் அரசுகளையும் ஆதிக்கம் செய்கின்றன. இதேபோல் கனடா பல்லின மத கலாசாரங்களை அங்கிகரிக்கின்ற நாடு எனக் கூறப்படுகின்றது. இருப்பினும் கிரிஸ்தவ வெள்ளையின ஆதிக்கம் உள்ளார்ந்தும் சில நேரங்களில் வெளிப்படையாகவும் காணப்படுகின்றது எனக் கூறினால் தவறல்ல. இவ்வாறான ஒரு சூழலிலையே இந்த அரசுகள் முஸ்லிகளுக்கும் அவர்களது இஸ்லாம் மதத்திற்கும் எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முரண்நகை என்னவென்றால் இதே காரணங்கள் இவர்களுக்கும் பொருந்தும். அதாவது கிரிஸ்தவ மதத்தினரும் வெள்ளையினத்தவரும் (இனவாதிகளும்) பல்வேறு எதிர்மறைச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் அதைப்பற்றி யாரும் கதைப்பதில்லை. பெருதுபடுத்துவதில்லை. அந்தளவிற்கு அரசு மட்டுமல்ல ஊடகங்களும் இவர்களின் ஊதுகுழல்களாகவே இருக்கின்றன.

முதலாவது முஸ்லிம்களின் பரவலான இடப்பெயர்வும் மற்றும் தாம் வாழும் சமூகத்திலுள்ள பிற மதங்களைச் சேர்ந்தவர்களை இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்ய முயற்சிப்பது. மற்றும் அவர்களிடம் காணப்படும் மதம் மற்றும் கலாசாரம் பண்பாடுகள் தொடர்பான உறுதியான போக்கு அல்லது இறுக்கம். இவற்றினால் ஏற்படும் முரண்பாடுகள். இரண்டாவது இஸ்லாமிய மதத்தின் பெயரால் சில அதீதிவிரவாதக் குழுக்கள் முன்னெடுக்கின்ற “பயங்கரவாத” தாக்குதல்கள். இது மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்ல ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் நடைபெறுகின்றன. இதனால் ஏற்படுகின்ற பயம் அல்லது இதைக் காரணமாக்கி உருவாக்கப்படுகின்றன பய சூழல். இவ்வாறான அச்சங்களின் காரணமாக பொதுவாக அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் “பயங்கரவாத” முத்திரையை அமெரிக்க ஐரோப்பிய அரசாங்கங்கள் திட்டமிட்டு பரப்புகின்றன. அதாவது முஸ்லிம் அடையாளம் என்பது ஒரு “பயங்கரவாத” அடையாளம்.    இவர்கள் வன்முறையாளர்கள். இவர்கள் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும். இவை நடைமுறையில் உண்மையல்ல எனினும் மக்கள் மனதில் ஆழமாக வேரூண்டப்பட்ட கருத்தியல்கள். ஆகவே முஸ்லிம் சமூகங்கள் தமக்கு எதிராக போடப்பட்ட இவ்வாறான எதிர்மறை முத்திரைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். நாமும் மற்ற இன மதங்களைப் போல நமது அடையாளங்களைப் பேணுகின்றோம். சில அதிதீவிர முஸ்லிம்களும் இஸ்லாமியரும் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு முழு முஸ்லிம் சமூகமும் பொறுப்பல்ல. ஆகவே நம்மை பலி கொள்ளாதீர்கள். எதிரியாக நினைக்காதீர்கள் என்பது இவர்களது கோரிக்கை. இந்தக் கோரிக்கை பெருமளவில் செவிசாய்க்கப்படவில்லை என்பது தூர்ப்பாக்கிமானது. ஆகவே (ஈழத்) தமிழர்கள் ஒடுக்கப்பட்ட ஒரு இனம் என்ற வகையில் இவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது தார்மீகப் பொறுப்பாகும்.

இக் கூட்டம் மேலும் சில கேள்விகளை எழுப்பின. எல்லா மதங்களும் ஆண்களால் உருவாக்கபட்டவை. அவர்களே அதிகாரத்திலும் இருக்கின்றனர். ஆணாதிக்க கருத்தியலைக் கொண்டவை. பெண்களுக்கு எதிரானவை. அவர்களை அடக்கி ஒடுக்கும் கருத்தியலையும் செயற்பாடுகளையும் சடங்குகளையும் கொண்டவை.  பெண்களின் உடல் மீது அதிகாரம் கொண்டவை. அவர்களின் தெரிவுகளை சுதந்திரத்தை மறுப்பவை. கருக்கலைப்புக்கு எதிரானவை. மேலும் ஒருதார இரு (எதிர்) பாலுறவு திருமண முறையை மட்டும் ஆதரிப்பவை. இதற்கு அப்பாற்பட்ட அனைத்து பாலியலுறவுகளையும் எதிர்ப்பவை. மேலும் ஒவ்வொரு மதத்தினரும் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு குறிப்பிட்ட தமது மதக் கருத்துக்களை ஆழமாகப் புகுத்தியும் அது தொடர்பான சடங்குகள் பழக்கவழக்கங்களை பயிற்றுவித்து ஒருவிதமான அடிமைகளாக வளர்க்கின்றனர். இவை அனைத்துமே ஏற்றுக்கொள்ளவோ உடன்படவோ முடியாதவை. ஒவ்வொரு குழந்தையும் தான் வளர்ந்த பின் தனக்கான மதத்தை தேர்தேடுக்கும் வகையில் அதற்கான அறிவை அவர்களுக்கு வழங்கவேண்டும். இதுவே சரியான ஐனநாயக வழிமுறையும் ஆரோக்கியமாக குழந்தைகளை வளர்க்கும் முறையாகும். இதற்கு மாறாக வளர்க்கப்பட்ட குழந்தைகளும் பெண்களுக்கும் சுயமான சுதந்திரமான தெரிவு என்று ஒன்று உண்டா என்றால் அது இல்லை என்றே கூறவேண்டும். ஏனெனில் ஏற்கனவே குழந்தைகளினதும் பெண்களினதும் ஆழ்மனங்களில் இருப்பது மதங்களாலும் ஆணாதிக்க சமூகங்களாலும் வழங்கப்பட்ட கருத்தியல்கள். ஆகவே இதனடிப்படையில் தான் அவர்களது தெரிவுகள் உள்ளன. இத் தெரிவுகள் அனைத்தும் பிரக்ஞையான தெரிவுகள் அல்ல. மாறாகப் பிரக்ஞையின்மையான தெரிவுகள். ஆகவே ஆதிக்க சக்திகளின் தெரிவுகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நமது தெரிவுகளை மேற்கொள்ள முதலில் நம் (ஆழ்)மனங்களை சுத்தம் செய்ய வேண்டும். அதிலிருக்கின்ற ஆதிக்க சக்திகளின் கருத்துகளை அகற்ற வேண்டும். இதன் பின்பு தெரிவு செய்வதே நமது சுய தெரிவாக இருக்க முடியும். அதுவரை நமது தெரிவுகள் அனைத்தும் சார்புத்தன்மையானவையாகும்.

மதங்கள் ஒருதார இரு (எதிர்) பாலுறவு திருமணங்களை மட்டுமே அங்கீகரிக்கின்றன. பல்வேறு பாலுறவுகள் இருப்பதற்கான சாத்தியங்களை எதிர்க்கின்றன. மறுக்கின்றன. இவர்களுக்கு எதிரான போக்குகள் ஒடுக்குமுறைகள் என்பது கூட ஒரு உலகாளாவிய பொதுப் பிரச்சனை. சக இன மதங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைவிட இவை எந்தளவிலும் குறைவானவையல்ல. ஆகவே நம் மீதான குறிப்பிட்ட ஒடுக்குமுறைகளை மட்டும் உயர்த்தி பிடித்துக் கொண்டு நமக்கு உடன்பாடில்லாத ஒடுக்குமுறைகளைப் புறந்தள்ள முடியாது. ஆனால் அவ்வாறான ஒரு பண்பை இக் கூட்டங்களில் காணமுடிகின்றது. இது தொடர்பாகவும் நாம் அக்கறை கொள்ள வேண்டும். அந்தவகையில் பாடசாலைகளில் சிறுவர்களுக்கு பாலியல் கல்வி கற்பிப்பதை வரவேற்க வேண்டும். இதற்கு மதங்கள் தடைபோடக்கூடாது.

இந்த நாடுகளில் ஒவ்வொரு மதங்களும் சுதந்திரமாக செயற்படும் உரிமை இருக்கலாம். ஆனால் அவை தனிநபர்களில் அவர்களின் சிறுவயதிலிருந்து அவர்களது சுதந்திரங்களில் தலையிடக் கூடாது. மேலும் கனேடிய பூர்விகக் குடிகளின் உரிமைகள் மதிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு இனத்தினதும் சமூகத்தினதும் மதத்தினதும் தனித்துவங்கள் பேணவும் பாதுகாக்கப்படவும் வேண்டும். அதேவேளை இங்கு குடியேறுகின்ற ஒவ்வொரு சமூகங்களும் தமது நல்ல விடயங்களை உயர்த்திப்பிடிக்கலாம். ஆனால் பிற்போக்கான விடயங்கைள உயர்த்திப்பிடிக்க கூடாது. அதற்கான ஆதரவையும் புலம்பெயர்ந்தவர்கள் வழங்கக்கூடாது. இவ்வாறான மாற்றங்களே ஆரோக்கியமானதாகும்.

நாம் புலம் பெயர்ந்து வாழ்க்கின்ற கனடா போன்ற நாடுகளில் ஒப்பீட்டளவில் ஐனநாயம் உள்ளது. ஒப்பிட்டளவிலான பல்வேறு சுதந்திரங்கள் உள்ளன. ஒரு பெண் நடுநசியிலும் எந்தவிதமான அச்ச உணர்வு இல்லாமலும் பொது வெளிகளில் திரியலாம். விதிவிலக்குகளும் உள்ளன. குறிப்பாக தென்னாசிய சமூகங்களிலிருந்து வந்த பெண்களின் உணர்வுகள் விதிவிலக்காக இருக்கலாம். அதேவேளை இந்த மண்ணின் பூர்விகக் குடிகள் பல்வேறு வகைகளில் இன்னும் ஒடுக்கப்படுகின்றர். அரசு இன மத சார்பற்றதாக இருந்தாலும் வெள்ளை மற்றும் கிரிஸ்தவ மத சார்புத் தன்மையை கொண்ட கடவுள் மீதான நம்பிக்கை கொண்ட அரசாகவே இன்னும் இருக்கின்றது. இதிலிருந்து எவ்வாறு இந்த அரசை விடுவிப்பது என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும். அதாவது இந்த அரசின் மேல் இருக்கின்ற கிரிஸ்தவ அல்லது கத்தோலிக்க மற்றும் வெள்ளையின ஆதிக்கத்தை இல்லாது செய்வதே முற்போக்கானதாகும். இவ்வாறுதான் நாம் மேலும் முன்னேறிய ஒரு அரசை உருவாக்குவதற்கு செயற்பட வேண்டும். இங்கிருந்து எவ்வாறு முன்னோக்கி செல்வது என்பது தொடர்பாக சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். மாறாக பின்நோக்கிச் செல்வதையல்ல. புரிந்து செயற்படுவோமா?

தொடர்ந்தும் உரையாடுவோம்.
மீராபாரதி
உங்கள் கருத்துகளுக்கு meerabharathy@gmail.com

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: