Posted by: மீராபாரதி | February 28, 2015

நான் ஒரு புலி… பகுதி 2

இரவு ஏழு மணி… எங்கும் அரை இருட்டுப் பரவி இருந்தது…. பனைகள் மற்றும் தென்னைகளுக்கூடாக அடிவானம் சிவந்து கிடப்பது தெரிந்து…

பக்கத்து வளவு கிணற்றில் தண்ணி எடுத்து முகம் கழுவி விட்டு கொட்டிலுக்குள் தலையை மட்டுமல்ல உடம்பையும் வளைத்து நூழைந்தேன்.

தென்னோலையில் வேய்ந்து கட்டப்பட்ட சின்னஞ்சிறிய கொட்டில் இது. நடுவில் மட்டும் ஐந்தடி உயரம். இரண்டு பக்கங்களும் சரிந்து வந்து மூன்று அடி உயர்த்திற்கு இருந்தது. உயர்ந்த பக்கத்தில் நான்கடி உயர்த்தில் தென்னோலையால் கட்டப்பட்ட கதவு. இதற்கூடாகத்தான் கொட்டிலுக்குள் போகவேண்டும்.
கொட்டிலின் ஒரு மூலையில் அகதிகளுக்கு அல்லது பிச்சைக் காசில் கிடைத்த மாவில் அம்மா குழைத்த புட்டு குழலில் அவிந்து கொண்டிருந்தது. அம்மா அருகிலிருந்த அம்மியில் சம்பல் அரைத்து கொண்டிருந்தார்.  சிறிது நேரம் காத்திருந்தேன். பின் ஒரு அலுமினியத் தட்டில் சாப்பாட்டைப் போட்டுத் தந்தார். வாசற் படியிலிருந்து சாப்பிட்டு விட்டு அப்பன் வீட்டை போகத் தயாரானானேன்…. தங்கச்சிகள் இருவரும் கொட்டிலுக்குள் விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள்…. வாசித்துக் கொண்டிருந்தார்கள்…

அம்மா குனிந்தவாறு வெளியே வந்து நிமிர்ந்தார். பின் வேலி ஓரமாக சென்று சமைத்த சட்டி பாணைகளைக் கழுவினார். பின் கொட்டிலினுள்ளே சென்று கழுவிய சட்டிகளை அடுக்கி வைத்துவிட்டு படுப்பதற்கு ஆயத்தம் செய்தார். இந்தக் கொட்டிலுக்குள் அவர்கள் மூவரும் படுப்பதற்கே காணாது. இப்ப நானும் வந்து சேர்ந்துவிட்டது அவர்களுக்கு அதிகம் கஸ்டமாகப் போய்விட்டது.

உயர்தரப் பரிட்சை எடுத்தவுடன் மிஞ்சியிருந்த அல்லது அழிக்கப்படாது இருந்த இரண்டு இயக்கங்களில் எனக்குப் பிடித்த ஒன்றுடன் இணைந்தேன். அவர்களது மாணவர்களுக்கான முகாமில் சில காலம் தங்கி அதன் அருகில் இருந்த வறிய ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கணிதம் கற்பித்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். கொஞ்சக் காலத்தின் பின் இயக்கத்திலிருந்த சிலர் நான் ஒரு புலி உளவாளி என சந்தேகம் கொண்டனர். ஆகவே முகாமிலிருந்து என்னை போய் விடும் படி சொல்லிவிட்டார்கள். நல்ல வேளை உளவாளி என சுடவில்லை. அப்படி சுட்டிருந்தால் இப்படி ஒன்றை நீங்கள் கஸ்டப்பட்டு வாசிக்க வேண்டி ஏற்பட்டிருக்காது. என்னைச் சுடாமல் விட்டதற்காக நீங்கள் அவர்களை இப்பொழுது திட்ட மட்டுமே முடியும். என்ன செய்வது திட்டித் தீருங்கள். வாசித்துக் கொண்டே…. (நான் ஒரு புலி…. உ…. தூ…ஒன்று – பகுதி 1,2,3 – http://tinyurl.com/p2x5bxb)

நான் வீட்டில் இல்லாத காலங்களில் அம்மா அப்பா தங்கச்சிமார் இருவரும் இருப்பதற்கு வீடு இல்லாமல் கஸ்டப்பட்டார்கள். நாவற்குழி சந்திக்கு அருகில் இருந்த பள்ளத்துக் காணியில் வசித்த சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமது கொட்டில் ஒன்றைத் தற்காலிகமாகத் தந்து உதவினார்கள். இவர்களும் அதில் தங்கினார்கள். இது ஒரு பெரிய கொட்டில். இந்த இடம் நாவற்குழி உமைக்கடலுக்கும் கண்டி வீதிக்கும் இடையில் இருந்தது.

நாவற்குழிப் புலிப் பொறுப்பாளர் அருள் தன்னை துரோகி எனச் சுட்டுவிடுவார் எனப் பயந்து தப்பித்து கொழும்புக்குச் சென்று விட்டார் அப்பா. அவர் போனபின் இந்த கொட்டிலின் சொந்தக்காரர்கள் அந்த வீடு தங்களுக்கு வேண்டும் எனக் கூறி அம்மா தங்கைகள் வாழ்வதற்கு இந்த சின்னக் கொட்டிலை தற்காலிகமாகப் போட்டுக் கொடுத்தார்கள்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் நானும் மீண்டும் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். இவர்களுடன் நானும் இரவில் தங்கிப் படுப்பது கஸ்டம். இடம் காணாது. ஆகவே அப்பனிடம் கேட்டு அவனது அறையில் படுத்தேன். அவன் தன் கட்டிலில் என்னைப் படுக்க அனுமதித்தான். நாம் இருவரும் ஒரு கட்டிலிலையே படுப்போம். அகதிகளாக வந்தவர்களை ஊர் மக்கள் இவ்வாறு ஏற்பது அரிதிலும் அரிது. ஆனால் நாவற்குழி நண்பர்கள் என்னைத் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்கள்.

நாவற்குழிக்கு 1984ம் ஆண்டு ஆரம்பத்தில் வந்தோம். வந்த சில காலத்திலையே சித்திவினாயகர் கோயிலடி பொடியன்கள் நண்பர்களாகி விட்டார்கள். அப்பொழுது நாம் சித்திவினாயகர் கோயில் வீதி முடிவடைகின்ற கடற்கரைக்கும் சுடலைக்கும் அண்டிய கோயிற் காணியில் இருந்தோம். இக் காலங்களில் அப்பன் வீட்டில் இரவிரவாக தமிழ்த் திரைப்படம் அல்லது கிரிகெட் பார்ப்போம். பார்த்து விட்டு அங்கேயே நான் படுத்தும்விடுவேன். இப்படித்தான் அவனது அறையில் படுக்கப்பழகினேன்.
“போய்விட்டு வாரன் ” என அம்மாவுக்குச் சொல்லிப் போட்டு எனது சைக்கிளை எடுத்துக் கொண்டு மணல் ஒழுங்கையில் ஏறினேன்.  இருமருங்கிலும் தென்னோலையாலும் பனையோலையாலும் வேயப்பட்ட வேலிகள். வேலிகளுக்கு உள்ளே இருந்த கொட்டில்களிலிருந்து விளக்கு வெளிச்சம் தெரிந்தது. அது மெல்லிய காற்றுக்கு ஆடி ஆடி எரிந்து கொண்டிருந்த்து. அந்த வெளிச்சம் அந்த வீட்டை ஓளியேற்றவே காணாது. ஒழுங்கை எங்கும் இருட்டு பரவியிருந்தது. இருந்தாலும் எனக்கும் சைக்கிளுக்கும் பழக்கப்பட்ட ஒழுங்கையால் வெளிச்சமில்லாமலே மிதித்துக் கொண்டுவந்து கண்டி யாழ் வீதியில் ஏறி நாவற்குழி சந்தியை நோக்கி சைக்கிளைத் திருப்பினேன்.
இந்திய இராணுவத்துடனான சண்டைக்கு முன்பு நாவற்குழி சந்தியில் நாம் வாடகைக்கு இருந்த பழைய வீடு இடிபாடுகளுடன் அந்த இருட்டிலும் தெரிந்தது. சந்தியிலிருந்த இந்திய இராணுவ முகாமிலிருந்த வந்த வெளிச்சத்தால் அவ்வாறு தெரிந்திருக்கலாம். இந்திய இராணுவம் நாவற்குழி வீட்டுத் திட்டத்தில்  முகாம் அமைத்திருந்தார்கள்.  அங்கிருந்து வந்த எண்ணை மணம் காற்றில் கலந்து எனது மூக்கில் பட்டுக் கொண்டு  சென்றது. இப்பொழுதெல்லாம் வடக்கு கிழக்கில் இந்த மணம் தான் எங்கும் ஆக்கிரமித்திருந்தது.

இந்த வீதியால் அடிக்கடி போய் வருவதால் அவர்கள் எங்களைக் கண்டு கொள்வதில்லை. நாமும் அவர்களுக்குப் பயப்பிடுவதில்லை. பழகிவிட்டோம். கண்டி யாழ் வீதியிலிருந்து சைக்கிளை கேரத்தீவு வீதிக்குத் திருப்பினேன்.

இந்த சந்தி பல வகைகளில் முக்கியமானது. கேரத்தீவு வீதியிலுள்ள கிராமங்களிலிருந்து யாழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் சைக்கிளில் வந்து சந்தியில் விட்டு விட்டு பஸ்ஸில் பயணிப்பார்கள். கேரத்தீவு பஸ் ஒழுங்கான நேரத்திற்கு வராது. அப்படி வந்தாலும் அதில் ஏற முடியாது. கூட்டம் பஸிற்கு வெளியே தள்ளிக் கொண்டு காணப்படும். ஆகவே சந்தியில் வந்து சாவகச்சேரி கொடிகாமம் பஸ் எடுப்பார்கள். சில விரைவு பஸ்கள் நிற்காமல் போனால் அதற்கு கல் ஏறிய ஓட்டுனர் பஸ்ஸை நிற்பாட்டிபோட்டு வந்து மாணவர்களுடன் மல்லுக்கு நிற்க என சந்தி ஒரே கலோபரமாக இருக்கும். இதன் பின் இலங்கை இராணுவம் பாலத்துக்கு அருகிலுள்ள இறால் கொம்பனியில் முகாம் அமைத்தபின் நமது சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாள் கலையும் பாடசாலைக்குப் போகும் பொழுது முகாமின் முன்னால் இறங்கி பயந்து பயந்து நடந்து போக வேண்டும். சில காலத்தின் பின் இந்தப் பாதை தடைபட்டது. அப்பொழுது புகையிரதபாதையில் சைக்கிளையும் தூக்கிக் கொண்டு அந்தப் பாலத்த்தைக் கடந்து சென்றோம். இராணுவ முகாம் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்தரிக்கப்பட கைதடி கோப்பாய் வீதியை பயன்படுத்த ஆரம்பித்தோம். அதுவும் பயம் நிறைந்த பயணம்தான். ஏனேனில் அந்த வெளியில் பயணிக்கும் பொழுது றெலிகப்டரில் இராணுவம் வந்து சுடும். ஆகவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் அந்த வெளியைக் கடப்போம். இப்படியான ஒரு காலத்தில் தான் நாவற்குழி இராணுவ முகாமை தண்ணீர் பௌசரில் குண்டு வைத்து தாக்குவதற்கு புலிகள் முயற்சி பிழைத்தபோது புலிகளில் முக்கியமான தலைவர்கள் அல்லது ஆரம்ப கால உறுப்பினர்கள் பலர் இறந்தனர். கொஞ்சக் காலத்தின் பின் இந்த இடம் பாதுகாப்பில்லை என இராணுவ மூகாமை அகற்றிவிட்டார்கள். இப்படி நாவற்குழி சந்தியுடனான உறவு இருந்தது. இப்பொழுது இந்திய இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது.

நாவற்குழி சந்தியிலிருந்து கேரத்தீவிற்கு போகும் வீதியின் மூலையில் தான் காலையிலிருந்து மாலை வரை இந்திய இராணுவம் பிடித்து வைத்திருக்கும் தமது பிள்ளைகளை விடுவிக்க வேண்டி தாய்மார் காத்திருப்பார்கள். அப்பனின் தம்பி இளங்கோவையும் இங்குதான் பிடித்து வைத்திருக்கின்றார்கள். கடந்த ஆறு மாதங்களாக அவனின் அம்மாவும் காலையிலையே இங்கு வந்துவிடுவார். மாலையில் தான் வீட்டுக்குப் போவார். அப்பா இங்கு இருந்த வரை இளங்கோவை விடுவிக்க முயன்று பார்த்தார். ஆனால் அவரால் முடியவில்லை.

நாவற்குழி சித்திவிநாயகர் கோயிலடிப் பொடியன்களில் இளங்கோ ஒரு தனி வரலாறு. அதைப் பற்றி தனியாக எழுத வேண்டும். இப்பொழுது எனது பயணத்தைத் தொடர்கின்றேன்.

சந்தியைக் கடந்து சன சந்தியடியில்லா கேரத்தீவு வீதியில் பாட்டுப் பாடிக் கொண்டு சைக்கிள் ஓடினேன்.  கும் இருட்டு. புகையிரதக் கடவையைக் கடந்து சிறிது தூரம் சென்றவுடன் தான் பயம் கொஞ்சம் நீங்கும். அப்பொழுதுதான் குடிமனைகள் ஆரம்பிக்கும். குடிமனைகளைக் கண்டவுடன் ஒரு தைரியம் வந்துவிடும். இருந்தாலும் கத்திப் பாடுவதை மட்டும் விடவில்லை. சைக்கிளை மிதித்துக் கொண்டு இருட்டில் அவ்வாறு பாடுவதில் ஒரு விருப்பம் உண்டு எனக்கு. அது ஒரு அலாதியான ஆனந்தம்.Jaffna 2012-navatkuli 008

அந்த இருட்டிலும்   பெண்கள் பார்க்காத போதும், அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி திருப்புவேனோ, அப்படி ஒரு வெட்டு வெட்டி அழகாக கேரத் தீவு வீதியிலிருந்து சைக்கிளை சித்திவினாயகர் கோயில் வீதிக்கு திருப்பினேன். சித்திவினாயாகர் வீதி ஒரு வகையான கிரவல் பாதை. இரண்டு வீடுகள் கழிய ஒரு குளம் வரும். குளத்தை அண்டி சிறிய வயல் வெளி. இப்பொழுதுதான் அறுவடை முடிந்து வெட்டப்பட்ட நெற் பயிர்கள் காயந்து போய் முற்களைக் போலத் தூரித்திக் கொண்டிருந்தன.

கோயிலடியிலிருந்து சைக்கிளை மணல் பாதைக்குத்  திருப்பினேன். திருப்பாமல் நேராக சென்றால் வாசிகசாலை. அதைக் கடந்து ஒரு வயல் வெளி. இந்த வீதியின் முடிவிடம் தான் நாம் முன்பு அகதியாக வந்து இருந்த கோயிற் காணி இருந்த இடம். நாம் இருந்த கொட்டிலிருந்து சிறிது தூரத்தில் கடற்கரை ஓரத்தில் சுடலை ஒன்றும் இருந்தது. அது ஒரு ஊமைக் கடல். இக் கடலுக்கு அப்பால் பூம்புகார் என்ற மீனவக் கிராமம். இராணுவம் பொடியன்களைத் தேடி வருகிறது என்று அறிந்தால் இக் கடலைக் கடந்து அந்தக் கிராமத்திற்கு செல்வோம்.Jaffna 2012-navatkuli 015

கோயில் வீதியிலிருந்து செங்குத்தாக மணற் பாதைக்கு சைக்கிளைத் திருப்பி ஒழுங்கைக்கால் இரண்டு திருப்பங்கள் திருப்பினால் அப்பனின் வீடு. அப்படியே சைக்கிளை கொண்டு போய்வாசலில் ஏத்தி கேட்டை திறக்க முயன்றேன். ஆனால் வழமைக்கு மாறாக கேட் திறந்து இருந்தது. அப்பொழுதான் கவனித்தேன். இந்திய இராணுவ வண்டி ஒன்றும் சில இராணுவத்தினரும் வாசலில் நிற்கின்றார்கள். “இது என்னடா வம்பாக போய்விட்டது” என நினைத்துக் கொண்டு ஒரு கணமும் தாமதியாமல்  சைக்கிளைத் திருப்பினேன். பக்கத்தில் இருக்கின்ற (புலம் பெயர்ந்தபின் அகால மரணமடைந்த நண்பர்) மணிவண்ணனின் வீட்டுக்குப் போக முயற்சித்தேன். “ஸ்டொப்” “ஸ்டொப்” என எல்லாப் பக்கங்களிலிருந்தும் சத்தம் போட்டுக் கொண்டு இராணவத்தினர் ஓடி வந்தனர். நான் ஒன்று செய்யாது அப்படியே நின்றேன். நல்ல நேரம் அவர்கள் என்னைச் சுடவில்லை.

Jaffna 2012-navatkuli 019

“எங்கே இளங்கோ”… என்றான் ஒருவன்… “அவனிடமிருந்து என்ன செய்தி கொண்டு வந்தாய்” என்கின்றான் இன்னுமொருவன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்துப்போய் நிற்கின்றேன். வீட்டு வாசலில் அப்பனின் தாய், பாட்டி பாட்டா தம்பிமார் எல்லோரும் நிற்கின்றனர்.
எனக்கு ஒரு கணம் என்ன நடந்தது என விளங்கவில்லை. கொஞ்ச நேரம் சென்றபின்தான் விளங்கியது. இளங்கோ முகாமிலிருந்து தப்பி விட்டான் என்பதை உணர்ந்து கொண்டேன்.
“எனக்கு என்ன தெரியும் நான் இங்கு படுக்கத் தானே வந்தேன்…..”Jaffna 2012-navatkuli 040

இனி என்ன செய்வது உண்மையைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.  பொய் எனத் தான் நினைப்பார்கள். ஆனாலும் நான் உண்மைதான் சொல்ல வேண்டும். பொய் சொல்லிப் பயனில்லை. “எனக்கு ஒன்றும் தெரியாது. நான் இங்குதான் படுப்பது. படுக்கத்தான் வந்தேன்” என்பதை  திரும்பத் திரும்ப சொன்னேன். ஆனால் அவர்கள் நம்புவதாக இல்லை.  என்னைத் தூக்கி ரக்கின் பின்னால் இருக்கைகளுக்கு இடையில் கீழே போட்டார்கள். கால்களைக் கட்டினார்கள். கைகளைப் பின்னால் இழுத்துக் கட்டினார்கள். சுருண்டும் படுக்க முடியவில்லை. கஸ்டப்பட்டுக் கொண்டு இருந்தேன். இரு புறமும் இருந்த இருக்கைகளில் இராணுவத்தினர் ஏறி இருந்து கொள்ள வாகனம் புறப்பட்டது. போகும் வழி எல்லாம் மாறி மாறி என்னைக் காலால் உதைத்துக் கொண்டு வந்தார்கள். அவ்வாறு உதைப்பதற்கு வசதியாக அவர்களது காலடியில் நான் இருந்தேன். ஹிந்தியிலும் கதைத்தார்கள். கேள்வி கேட்டார்கள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.  கப்டனும் தமிழ் தெரிந்த இராணவத்தினர் ஒருவரும் மற்ற வாகனத்தில ஏறிவிட்டார்கள் போல அல்லது முன்னுக்கு ஏறி இருப்பார்கள் என நினைத்தேன். வாகனம் தனங்கிளப்பு  பக்கமாக கேரத் தீவு வீதியில் பயணம் செய்து கொண்டிருந்தது.

இரவிரவாக தங்களுக்கு சந்தேகமாக இடங்களில் எல்லாம் தேடினார்கள். வயல்கள், கடற்கரை ஓரம், தெரிந்த வீடுகள் என எல்லா இடமும் தேடினார்கள். ஆனால் அவர்களால் பிடிக்க முடியவில்லை. இளங்கோ இவர்களை ஏமாற்றி பிடிக்க முடியாதவாறு எங்கேயோ ஓழிந்து இருக்க வேண்டும். அவனுக்கு இப்படி சாகாசங்கள் பிடிக்கும். அவன் எப்படி இயக்கத்திற்குப் போனான் என்பதுவும் சுவாரசியமானது. இப்பொழுதும் அந்தக் காலைப் பொழுது கண் முன் தெரிகின்றது. ஆனால் இப்பொழுது அதை எழுதும் நிலையில் இல்லை. முதலில் இவர்களிடமிருந்து தப்பி வரவேண்டுமே.

நாவற்குழி வீட்டுத்திட்ட சந்தியிலிருந்த முகாமுக்குச் செல்லும் வரை எனக்கு அடிப்பது நிற்கவில்லை. கேள்வி கேட்பதுவும் நிற்கவில்லை.
நான் ஒரு புலி. இளங்கோவிடம் இருந்து ஏதோ செய்தி கொண்டு வந்திருக்கின்றேன் என அவர்கள் முழுமையாக நம்பி விட்டார்கள். ஆனால் நான் ஒரு சாதாரணவன் மட்டுமல்ல அந்த இயக்கத்திற்கும் எதிரானவன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். என்னை வீட்டுத் திட்டத்திலிருந்த ஒரு வீட்டின் அறைக்குள் அடைத்தார்கள்.

அப்பனையும் பிடித்துக் கொண்டு வந்து பக்கத்து அறையில் போட்டார்கள். சில நாளைக்கு சாப்பிடுவதற்கு எண்ணெய் மிதந்து வளியும் கத்தரிக்காய் பிரட்டலும் சப்பாத்தியும் தருவார்கள். மற்றும்படி இரண்டு நேரமும் கொஞ்சம் சோறும் சாப்பாத்தியும் எண்ணயும் தண்ணியும் கலந்த  துவரம் பருப்பில் ஒரு கறியும் தருவார்கள். எல்லா சாப்பாடுகளிலும் அதன் மணத்தையும் மீறி எண்ணை மணமே வரும். ஒரு வழியாக ஒவ்வொரு நேரமும் சாப்பிட்டு முடிப்பேன். வாழ்வது முக்கியமல்லவா? அல்லது எப்படி இப்ப நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பீர்கள்.

இப்பொழுது எனது அம்மாவும் அப்பனின் அம்மாவுடன் சேர்ந்து நாவற்குழி சந்தியில் எனது விடுதலைக்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்பாவும் இல்லை. கஸ்டம் தான். விசாரணை என பெரிதாக எதுவும் நடக்கவில்லை. சில நாளைக்கு வந்து வயரால அடிப்பார்கள். காலால் உதைப்பார்கள்.  நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.
ஒரு கிழமையின் பின்பு ஒரு இரவு…
எழும்பி நின்று கைகளை உயர்த்தி கண்களைத் திறந்து இருக்கச் சொன்னார்கள். அடிக்கடி வந்து உறுதி செய்து கொண்டார்கள். கையை கீழே போட்டால் கையை தூக்கி வைத்திருக்கும்படி கத்துவார்கள். நின்று கொண்டு கண்களை மூடியிருந்தால் ஜன்னலினுடாக கண்களுக்கு வெளிச்சம் பாச்சி கண்களைத் திறக்கப் பண்ணுவார்கள்.

Jaffna 2012-navatkuli 024பக்கத்து அறையில் அப்பனும் என்னைப் போல் நிற்பதை இராணுவம் கத்துவதில் இருந்து புரிந்து கொண்டேன். இப்படி காலை ஆறு மணி வரை எங்களைக் காவல் காத்தார்கள். எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. என்னைக் கஸ்டப்படுத்தி சத்தியை வரவழைத்தேன். அல்லது சத்தி வரும் நிலையில் அதை ஊக்குவித்தேன்.
சத்தி வந்தது… அறைக்குள்ளையே சத்தி எடுத்தேன்…..
அப்பொழுதுதான் கதவைத் திறந்து உள்ளே வந்தார்கள். என்ன என்று கேட்டார்கள். எனக்குத் தெரியாது சத்தி வருகுது… சுகமிலை என்றேன்.
காலைச் சாப்பாடு கொண்டு வந்து தந்தார்கள்…. சாப்பிடவில்லை…. மதியமும் சாப்பாடு கொண்டு வந்து தந்தார்கள் சாப்பிடவில்லை…. இரவு கப்டன் அழைத்தான் …. ஏன் சாப்பிடவில்லை என ஆங்கிலத்தில் கேட்டான்…
நான் அதற்குப் பதிலளிக்காமல் என்னை ஏன் பிடித்து வைத்திருக்கின்றாய் எனக் கேட்டேன். என்னைக் கேள்வி கேட்கின்றாயா எனக் கேட்டு காலால் உதைத்தான். பின் பதில் ஒன்றும் கூறாது இருந்தான். என்னை மீண்டும் அறையில் அடைத்தார்கள்.

காலை வழமையைப் போல விடிந்தது….
கப்படன் மீண்டும் கூப்பிட்டான். சரி நீ வீட்டுக்குப் போகலாம் என்றான்.

வீட்டுக்கு ஓடிச் சென்றேன். என்னைக் கண்டதில் அம்மாவிற்கும் தங்கைளுக்கும் சந்தோசம்.Jaffna 2012-navatkuli 025
உடனையே அப்பன் வீட்டுக்கு போனேன். வீடு களையிழந்து காணப்பட்டது. என்னைக் கண்டவுடன் அப்பனின் அம்மா எழுந்து வந்து ஒப்பாரி வைத்தார்.
ஒரு மகன் தப்பி தலைமறைவாகிவிட்டான். இன்னுமொரு மகனை இந்திய இராணுவம் பிடித்துள்ளது. மற்றவர்கள் சிறுவர்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் கொஞ்சக் காலத்தில் அவர்களும் இந்தப் பயணத்தில் இணைந்தார்கள்.
இளங்கோ வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று…. வாழ்கிறார். ஆனால் உடம்பிலும் மனதிலும் பல “ஆறாவடு”க்கள்.

 

நான் மீண்டும் ஒரு முறை புலியானேன். அடுத்த நான் ஒரு புலி – 3 பதிவில்….

 

மீராபாரதி

28.02.2015

 

Advertisements

Responses

  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: