Posted by: மீராபாரதி | January 23, 2015

ஆண்மைய எழுத்துக்கள் – தவிர்க்கப்பட வேண்டும்.. ஒரு உரையாடல்

ரஞ்சகுமாரின் படைப்பாற்றல் மீதும் காலச்சுவட்டின் வெளியீடுகள் மீதும் அதன் இதழ் மீதும் பெரும் மதிப்பு வைத்திருக்கின்றேன். அநதவகையில் எஸ்போவின் தீ நாவலை காலச்சுவடு மீளவும் வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந் நாவிலிற்கான முன்னுரையை “கலாதி” என்ற தலைப்பில் ரஞ்சகுமார் அவர்கள் எழுதியுள்ளார். மிக சிறந்த கட்டுரை.
அதை பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம்.
எஸ். பொ —-தீ —- முன்னுரை
http://www.kalachuvadu.com/issue-181/page36.asp
……..
இக் குறிப்பு இக் கட்டுரையைப் பற்றியதல்ல. மாறாக அதில் பயன்படுத்தப்பட்ட ஆண்மைய மொழியைப் பற்றியது.
இக் கட்டுரையை வாசித்தபோது பயன்படுத்தப்பட்ட மொழி எனக்கு நெருடலை ஏற்படுத்தியது. அதைச் சுட்டிக்காட்டவே இக் குறிப்பு.
ரஞ்சகுமார் போன்ற பெயர் பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் காலச்சுவடு போன்ற வெளியீட்டு நிறுவனங்கள் தாம் பொதுவாக எழுதுகின்றவற்றில் வெளியிடுகின்றவற்றில் இவ்வாறான ஆண்மை எழுத்துக்களைத் தவிர்ப்பது அவசியமானதாகும். முக்கியமானதுமாகும். ஏனெனில் இவர்களின் படைப்புகளை வெளியீடுகளை அதிகமான வாசகர்கள் வாசிக்கின்றனர். அவர்களிடம் ஏற்கனவே பழக்கத்திலுள்ள ஆண்மை எழுத்துக்களுக்குப் பதிலாக அது நீக்கம் செய்யப்பட்ட எழுத்துக்கள் சென்றடையும் பொழுது தமிழிலிருந்து ஆண் மைய நிலைப்பட்ட சொற்கள் இல்லாமல் போய்விடலாம். ஏனெனில் இந்த எழுத்துக்கள் எம்மை அறியாமலே ஆண்களல்லாத பாலினங்களை மறுதலிக்கின்றன.
ஆண் மையப்பட்ட எழுத்துக்களை ஆண்கள் மட்டும் எழுதுவதில்லை. பெரும்பாலான பெண்களும் இவ்வாறே எழுதுகின்றார்கள். ஆகவே இது ஆண்களுக்கு எதிரான ஒரு பதிவல்ல. மாறாக நமது சிந்தனைகளிலில் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆண் மொழி பற்றியதே.
சில நேரம் இவை சிறு தவறுகள் போலத் தோன்றலாம். ஆனால் சமூகத்தில் பெண்கள் மற்றும் ஆணல்லாதா சக பாலினரின் அடையாளங்கள் மற்றும் இருப்புகள் அங்கீகரிக்கப்பட வேண்டிய சூழலில் இத் தவறுகள் மற்றும் மாற்றங்கள் முக்கியமானது எனக் கருதுகின்றேன்.
அந்தவகையில் பின்வரும் சொற்றொடர்களில் பொதுவான சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது எனது எண்ணம். இனி இது தொடர்பான கருத்துக்களை உங்களிடம் விட்டுவிடுகின்றேன்.
……
வாசகன் என்ற சொல்லைத் தவிர்க்கலாம் – வாசகர் எனப் பயன்படுத்தியிருக்கலாம்.
“வாசகன் இவ்வாசகங்களுடன் ‘தீயாக எரிக்கும் நியதி’ எனவும் சேர்த்து வாசித்துக் கொள்கிறான்.”
….
“அன்றிருந்த வாசகனும் இன்றில்லை. தீயைத் தொடுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதில் இன்றுள்ள வாசகனுக்கு ஒப்பீட்டளவில் ஓரளவேனும் நெகிழ்வுப் போக்கு காட்டப்படுவதுண்டு.”
……
ஒருவனால் என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாம். ஒருவர் எனப் பயன்படுத்தியிருக்கலாம்.
“ஆனால் ‘வரலாற்றில் வாழ்தல்’ எனும் எஸ். பொவின் சுயவரலாறு வெளியாகிய பின்னர், அதனையும் ‘தீ’யையும் ஒப்பு நோக்கும் ஒருவனால் யோசேப் சுவாமியார், பாக்கியம், சாந்தி, லில்லி, லில்லியின் தாத்தா, புனிதம், சரசு ஆகிய அனைவரையும் மிகச் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.”
…..
மனிதனது என்பதை ;மனிதரது எனப் பயன்படுத்தியிருக்கலாம். காமம் அனைவருக்கும் பொதுவானது.
“பசித்த மானிடம்’ என்னும் தனது அற்புத சிருஷ்டியில் மனிதனது வயிற்றிலும் அடிவயிற்றிலும் எழும், என்றும் அடங்காத இரு பசிகளையும், அவற்றைத் தீர்க்கும் அவனது முனைப்புகளையும், அதன் விளைவாக அவனது ஆன்மா கொள்ளும் வறுமையையும், அவ்வறுமையிலிருந்து அவன் பெறும் ஆன்ம ஈடேற்றத்தையும் அற்புதமாக விபரித்தார் கரிச்சான் குஞ்சு. ”
…….
பின்வருவது எஸ்போ அவர்கள் எழுதியது. இருப்பினும் பின்வருமாறு மாற்றி வாசகர்களிடம் ஒரு விழிப்பை உருவாக்கி இருக்கலாம்.
…..
வாழ்கிறான் மனிதன் என்பதை வாழ்கிறா[ர்] மனித[ர்] என எழுதியிருக்கலாம்.
“மனித இனத்தின் பின்னமற்ற அடிப்படை உணர்ச்சி பாலுணர்ச்சியே. இவ் வுணர்ச்சியில் வித்தூன்றிக் கருவாகி, ஜனித்து, வளர்ந்து, அந்த நுகர்ச்சியில் எழும் குரோதம் – பாசம் ஆகிய மன நெகிழ்ச்சிகளுக்கு மசிந்து, சிருஷ்டித்தொழிலில் ஈடுபட்டே வாழ்கிறான் மனிதன்”
என்பதை வாழ்கிறா[ர்] மனித[ர்] என மாற்றி வெளிப்படுத்தும்போது புதிய மாற்றத்தை வாசகர்களுக்கு அறிந்து கொள் வழி செய்யலாம்.

நன்றி

Ranjakumar Somapala S மாதொருபாகன் வாசிக்கத் தொடங்கிருக்கிறேன். இடையில் நிறுத்த மனசில்லை. விரைவிலேயே இந்த முக்கியமான உரையாடலில் நானும் கலந்து கொள்வேன் . ஏனைய நண்பர் உரையாடலைத் தொடங்கித் தொடருமாறு கோருகிறேன் .
16 ஜனவரி இல் 08:04 PM • பிடிக்கவில்லை • 7

Rasiah Parameswaran Human என்பது இரு பாலாரையும் குறிப்பதுபோல் மனிதன் என்பது இரு பாலாரையும் குறிக்கும் எனக் கருதுகிறேன் மனிதன் ஆண்பால் என்றால் பெண் பால் மனிதியா ?
16 ஜனவரி இல் 10:08 PM • பிடித்திருக்கிறது • 1

Vickneaswaran Sk ஆண்மைய எழுத்துக்கள் தவிர்க்கப்படலாம் என்று எழுதியுள்ளீர்கள்.அவை தவிர்க்கப் படலாம் அல்ல இல்லாதொழிக்கப்பட வேண்டியவை. மொழியை கையாள்வதில் ஒவ்வொரு எழுத்தாளரும் சிரத்தையுடன் கவனமெடுத்து செய்வதன் மூலம் அதை ஒரு இயல்பான போக்காக மாற்றிவிட முடியும். மாற்ற வேண்டும்.இது உண்மையில் நமது சிந்தனையில் சேதனாபூர்வமாக ஊறிவரும்வரை சிரத்தயுடனான சரிபார்த்தல் அவசியம்.
16 ஜனவரி இல் 10:35 PM • பிடிக்கவில்லை • 4

வ.க.செ மீராபாரதி “இல்லாதொழிக்கப்பட வேண்டியவை” என்று எழுதவே எனக்கும் விருப்பம் ஆனால் அதில் வன்முறை கலந்திருப்பதாக நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். ஆகவே அவ்வாறான சொற்களை தவிர்க்கின்றேன்.
16 ஜனவரி இல் 10:43 PM • பிடித்திருக்கிறது • 2

Vickneaswaran Sk Human என்ற் சொல் ஆங்கிலத்தில் பொதுப்பாற் சொல்லாக பயன்படுத்தப் படுவது உண்மைதான்.ஆயினும் இப்போதெல்லாம் முடிந்தளவுக்கு அதை தவிர்த்து human being ,people என்ற சொற்களை பாவிக்கிறார்கள்.ஆனால் தமிழில் பல சொற்களுக்கு பெண்பாற் சொற்களே இல்லை.பதிலாக பொதுப்பாற் சொற்கள் தான் பாவிக்கப் பட்டு வந்தன.ஆசிரியை,கவிதை என்ற சொற்கள் மிக அண்மைக்காலத்தில் பாவனைக்கு வந்தவை.இன்னமும் புலவன், நாதன் போன்ற சொற்களுக்கு சரியான தமிழ் சொல் இல்லை. இவை ஆண்களுக்குரிய சொற்களாக இருந்திருக்கின்றன.பெண்பாற் புலவர் என்றோ அல்லது பொதுப்பாற் சொல்லான புலவர் என்றோ தான் நாம் பாவிக்கிறோம்.மனிதன் man என்ற் சொற்கள் இருபாலாருக்கும் பொதுவாக குறிக்கப் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளன தான்.இது ஆணைக் குறித்து சொன்னால் அது பெண்ணுக்கும் உரியதுதான் என்ற சிந்தனைதயிலிருந்து வருகிறது. பெண் தனித்துவமாக கருத்தில் எடுக்கப்படவேண்டும் என்பதே இந்த உரையாடலுக்கு அடிப்படை. மனிதன் என்றசொல்லுக்கு மனுசி, மனிசி என்ற் சொற்கள் பாவனையில் உள்ளன. ஆனால் அவை மனிதன் என்ற அர்த்தத்தில் பயனபடுத்தப் படுவதில்லை.
16 ஜனவரி இல் 11:11 PM • பிடிக்கவில்லை • 5

நடேசன் திரு தமிழ் மொழியில் சொற்கள், பொருட்கள் முன்னொரு காலத்தில் ஆண்பால் பெண்பால் என்ற வகைகளுக்குள்ளும் அடக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும். இது விடயமாக மொழிகள் பற்றிய நீண்ட ஆய்வுகளுக்குட்படுதினாலே ஒழிய இதன் ஆழம் காண முடியாது. எடுத்துக்காட்டாக சூரியன், சந்திரன், ஆண…மேலும் பார்க்கவும்
16 ஜனவரி இல் 11:25 PM • பிடித்திருக்கிறது • 1

வ.க.செ மீராபாரதி தமிழன், கவிஞன், எழுத்தாளன், படைப்பாளன், வாசகன்… இப்படியான சொற்கள் அனைத்தும் ஆணை விளிப்பனவே. ஆனால் நமது எழுத்துக்களில் இரு பாலருக்கும் பொதுவாகவே இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பெண்களினதும் பிற பாலினங்களைச் சேர்ந்தவர்களது அடையாளங்களை தனித்துவங்களை மறைத்துவிடுகின்றது. அமுக்கிவிடுகின்றது. இதை எல்லாம் ஆண் மட்டுமே செய்கின்றான் ஆண் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றான் பெண் இரண்டாம் பிரஜை ஆணுக்குப்பின் தான் பெண் என்ற நிலைப்பாட்டிலிருந்த நம்மை அறியாமலே பிரக்ஞையின்மையாக எழுதுகின்றவை. இந்த சிந்தனையிலிருந்து நாம் பிரக்ஞையாக விடுபட வேண்டுமாயின் இவ்வாறான உரையாடல்களும் மாற்றங்களும் அவசியமானவை.
16 ஜனவரி இல் 11:26 PM • பிடித்திருக்கிறது • 4

வ.க.செ மீராபாரதி “ஜெர்மன் மொழியில் பொருட்கள் மூன்று வகைகளாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன”
நான் அறிந்த வகையில் ஐரோப்பிய மொழிகளில் இவ்வாறான வகைப்படுத்தல்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றிலும் ;ஆண் சொற்களை குறிக்கின்றவை பிரதான முக்கிய இடம் வகிப்பவையாகவும் பெண் சொற்கள் இரண்டாம் அல்லது முக்கியத்துவமற்ற இடம் வகிப்பவையாகவுமே உள்ளன. ஏனெனில் இவ்வாறன மொழிகளை அல்லது சொற்களை உருவாக்கியதில் ஆண்களின் பங்கு அல்லது ஆணாதிக்க சிந்தனையின் பங்களிப்பே காரணமாகும்.
16 ஜனவரி இல் 11:30 PM • பிடித்திருக்கிறது • 3

Vickneaswaran Sk இல்லா தொழித்தலில் வன்முறை இருப்பதாக நினைப்பது தவறு.ஒரு விடயம் காலாவதியானது தேவையற்றது என்றால் அதை தவிர்க்கலாம். கூடாது ஊரு விளைவிப்பது என்றால் அதை இல்லாதொழித்தல் தான் சரியானது. அதைவெப்படிச் செய்வது என்பதில் தான் வன்முறை சம்பந்தப் படுகிறது. கல்வியூட்டல்,உரையாடல்,விவாதித்தல் என்பவை வன்முறை சார்ந்த நடைமுறைகள் அல்ல. அழித்தல் ஒழித்தல் போன்ற சொற்கள் வன்முறையுடன சம்பந்தப் படுத்தப்பட்டு அதிகம் பாவிக்கப் படுவதால் அப்படி உண்ரப் படுகிறது.தவிர்க்கப்படலாம் என்பது தவிர்க்கப்படாமலும் விடலாம் என்ற அர்த்தத்தையும் தரக்கூடிய பாதி திறந்த. கதவு. தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்வது ஒரு கோரிக்கை என்ற் அளவில் தவிர்க்கப்படலாம் என்பதை விட பொருத்தமானது.ஆனால் அது பிரச்சினையின் காத்திரத்தை வலியுறுத்தப் போதுமானதல்ல என்று நினைக்கிறேன் !.
16 ஜனவரி இல் 11:44 PM • பிடிக்கவில்லை • 4

வ.க.செ மீராபாரதி தவிர்க்கப்பட வேண்டும் என மாற்றிவிட்டேன் விக்கி
16 ஜனவரி இல் 11:49 PM • பிடித்திருக்கிறது • 2

Kotravai Kotravai மீராபாரதி – எனக்கும் இந்நெருடல் இருந்து வந்துள்ளது, எனது எழுத்தில் நானும் மிகவும் கவனமாக ‘ன்’ விகுதியை தவிர்க்க முயன்றிருக்கிறேன்… ஆனால் ஒரு சில இடங்களில் மையநீரோட்ட பாணியை / வாசகர் புரிதலை மனதில் கொண்டு எழுதும்போது, குறிப்பாக மொழிபெயர்ப்பில் அது சற்று சிரமமானதாகவே உள்ளது. ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டும் மாற்றம் அவசியமாந்து… கொஞ்சம் கொஞ்சமாக பழக்க வேண்டும்..
17 ஜனவரி இல் 12:55 AM • பிடிக்கவில்லை • 4

Ranjakumar Somapala S கொள்கையளவில் மிக அனேகர் உடன்பட்டேயாக வேண்டிய விடயம் இது. நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களையும் சவால்களையும் எப்படிச் சமாளிப்பது அல்லது வெல்வது என்பதே நம்முன்னே உள்ள பிரச்சினை. சிந்தனாமொழியும் படைப்பு மொழியும் மோதும்போது படைப்புந்தலும் வேகமும் பெரிதும் தடைப்பட்டு விடும் என்பது தலயாய பிரச்சினை . கடதாசியில் பேனாவின் எழுதும் போதும் கணினியில் தட்டெழுதும் போதும் படைப்பு மொழியின் இலாவகமும் வேகமும் மாறுபடுவது நான். அனுபவித்திருக்கிறேன்.
19 ஜனவரி இல் 03:19 AM • பிடிக்கவில்லை • 4

Ranjakumar Somapala S சமூகத்தில் வழக்கிலுள்ள மொழியை வில்லங்கமாக மாற்றுவது படைப்பாளியின் தர்மமாகுமா என்பது அடுத்த வினா. பொதுப்பாலுக்கும் பலவின்பாலுக்கும்இடையே ஏற்படும் மயக்கம் இன்னொரு சிக்கல். தனியே மொழியை மட்டும் மாற்றுவது சாத்தியமா? சமூகத்தின் வேறு இயங்குதளங்களிலும் சமகாலத்தில் சமாந்தரமாக மாற்றம் ஏற்பட வேண்டாமா?
19 ஜனவரி இல் 03:40 AM • திருத்தியது • பிடிக்கவில்லை • 1

Vickneaswaran Sk இந்த விவாதம் உள்பெட்டியில் பாரதி தொடங்கிவைத்த போது நான் இப்படி எழுதினேன்:

‘றஞ்சனின் கலாதி ஒரு கலாதியான கட்டுரை.எனக்கு மிகவும் பிடித்திருந்தது.நீங்கள் சுட்டிக்காட்டிய விடயங்களை நானும் கவனித்தேன் பாரதி..கட்டுரையில் வரும் சொற்களை மட்டும் மாற்றிவிடுகிற விடயம் அல்ல இது.அப்படி மாற்றினால் அந்த வசனங்களின் கலாபூர்வமான வெளிப்பாடு அல்லது நடை அழகு குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு..இது எழுதும்போது மனதிலிருத்தி எழுதப்படவேண்டும் அப்போதுதான் அது இயல்பாக அமையும்..இப்படியான உரையாடல்கள் எழுத்தாளர்களது மனதில் சேதனாபூர்வமாக இந்த உணர்திறன் கலந்து நிறைந்துவிடுவதற்கு வழி வகுக்கும்.இதற்கு இத்தகைய தொடர்ச்சியான உரையாடல் அவசியம்.பல் பெண்ணியம் சார்ந்த பெண் எழுத்தாள்ர்களே இந்தத் தவறுகளை விடுகிறார்கள்..ஆங்கிலத்தில் இப்போதெல்லாம் இந்த விடயத்தில் அதிக கவனமெடுத்து எழுதுகிறார்கள்.தமிழில் அது இன்னமும் வளரவில்லை..எனவே தொடர்ச்சியான உரையாடல் அவசியம்.’

றஞ்சகுமார் இப்பொது தெரிவித்துள்ள விடயம் கவனத்துக்குரியது. ஆனால் அதேவேளை சமாந்தரமாக நடப்பதென்பது ஒன்றுடன் ஒன்று ஊடாடி வள்ர்வதன் மூலமே நடைபெற்று வருகிறது . அதில் முன்கை எடுக்க வேண்டியர்கள் எழுத்தாள்ர்களே.மிக முக்கியமாக அதிகம படிக்கப்படுகின்ற படைப்புக்களைத் தரும் படைப்பாளிகளிடமும். பத்திரிகையளர்களிடமும் இருந்தே இது முதலில். தொடங்கப் பட வேண்டும் என்று. நினைக்கிறேன்.
19 ஜனவரி இல் 04:06 AM • திருத்தியது • பிடிக்கவில்லை • 4

வ.க.செ மீராபாரதி Vickneaswaran Skaran Sk Ranjakumar Somapala Sumar Somapala S Kalachuvadu Pathippagamhuvadu Pathippagam Kannan Sundaramn Sundaram நன்றி ரஞ்சகுமார்.. கொடுத்த வாக்கின்படி மாதொருபாகனை வாசித்து முடித்தவுடன் உங்கள் கருத்தை எழுதியதற்கு… மாதொருபாகன் தொடர்பான உங்கள் பதிவை வாசிக்க ஆவலாக உள்ளேன்… உள்ளோம்…. இப்பொழுது நீங்கள் குறிப்பிடும் கருத்துக்கள் தொடர்பாக… எனது கருத்துகள்…. “சிந்தனாமொழியும் படைப்பு மொழியும் மோதும்போது படைப்புந்தலும் வேகமும் பெரிதும் தடைப்பட்டு விடும் என்பது தலயாய பிரச்சினை . கடதாசியில் பேனாவின் எழுதும் போதும் கணினியில் தட்டெழுதும் போதும் படைப்பு மொழியின் இலாவகமும் வேகமும் மாறுபடுவது நான். அனுபவித்திருக்கிறேன்.” இதனுடன் எனக்கு முழு உடன்பாடே… படைப்பு மொழியை தடுக்கும் படி நான் கூறவில்லை….. உங்கள் கட்டுரையில் நான் உதாரணங்களாக காட்டியவற்றிலும் சில .. சிலவற்றை உதாரணங்களாக காட்டாமலே விட்டிருக்கின்றேன்… ஏனெனில் அதை மாற்ற முடியாது அது அப்படித்தான் இருக்கும் இருக்க வேண்டும்… மொழி ஒரு படைப்பை உருவாக்க பயன்படவேண்டுமே ஒழிய அதை அழிககும் வகையில் பயன்படக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடே…. அந்தவைகயில் கதை கவிதை; நாவல்கள் போன்ற படைப்புகiளில் நாம் அதற்குரிய மொழிகளைப் பயன்படுத்தலாம்… அப்பொழுதான் அது யதார்த்தமாகும்… உண்மைக்கு அருகில் நிற்கும்… ஆனால் படைப்புகளிலும் விளக்க குறிப்புகள் எழுதும் பொழுதும் இது போன்ற கட்டுரைகளிலும் நமது சிந்தனா மொழியைப் பயன்படுத்துவதே நியாயமானதாகும்… ஆகக் குறைந்தது அதற்கு முயற்சிக்க வேண்டும்… எப்பொழுது நாம் பயன்படுத்தும் மொழி தவறு என்று உணர்ந்து விட்டோமோ அப்பொழுதே அது மாற்றத்திற்கு உரியதாகிவிடுகின்றது…. இந்த மாற்றத்தை வெறுமனே நமது சிந்தனா முறையினுடாக மட்டும் ஏற்படுத்த முடியாது…. நமது எழுத்துக்கள் பிரக்ஞையின்மையிலிருந்து வெளிவராது பிரக்ஞையான எழுத்துக்களான வெளிவரும் பொழுது இவ்வாறான தவறுகளைத் தவிர்க்கலாம் என்பது எனது புரிதல்…. ஆகவே தான் நம் பிரக்கைஞையை வளர்க்க வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவதை கொடுக்கின்றேன்….
19 ஜனவரி இல் 12:55 PM • பிடித்திருக்கிறது • 3

வ.க.செ மீராபாரதி “சமூகத்தில் வழக்கிலுள்ள மொழியை வில்லங்கமாக மாற்றுவது படைப்பாளியின் தர்மமாகுமா என்பது அடுத்த வினா. ”

இதனுடன் எனக்கு உடன்பாடில்லை…. வழக்கிலுள்ள பல விடயங்கள் எம் மீது திணிக்கப்பட்டவை என்பதை நீங்கள் அறிந்தவர்… நாம் ஒன்றைத் தவறு என உணரும் ;பொழுதுதான் அதை மாற்றுவது தொடர்பாக சிந்திக்கின்றோம்… இங்கு நாம் வில்லங்கமாக மாற்ற முயற்சிக்கவில்லை;;…. பிரங்ஞையுடன் மாற்றவே முயற்சிக்கின்றோம்… இவ்வாறு மாற்றுவதே தர்மமாகும் என நான் நினைக்கின்றேன்…. ஏனெனில் சமூகத்தின் ஒரு பாதி மனித இனத்தை அல்லது பல பாலினங்களின் இருப்பை மறுக்கும் ஒரு மொழியை, ஆணாதிக்க மொழியை, நாம் பயன்படுத்த தேவையில்லை. இதுவே நியாயமும் தர்மமுமாகும்….

“தனியே மொழியை மட்டும் மாற்றுவது சாத்தியமா? சமூகத்தின் வேறு இயங்குதளங்களிலும் சமகாலத்தில் சமாந்தரமாக மாற்றம் ஏற்பட வேண்டாமா?”
இது விக்கி குறிப்பிடதன் படி நாம் எதாவது ஒன்றில் ஆரம்பிக்க வேண்டும்… மற்றவற்றில் மாற்றம் ஏற்படும் போது நாமும் மாறாலம் என்பது தப்பித்தலாகும்… இவ்வாறுதான் பல விடயங்கள் கைகழுவப்படுகின்றன…. நாம் தவறு என உணர்கின்றவற்றில ;நாம் மாற்றத்தை உருவாக்குமோம்… அதேபொல் வேறு வேறு இயங்கு தளங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்போம்….. மொழியை ;மாற்றுவது என்பது நமது சிந்தைனiயை மாற்றுவது என்பதாகும்…. நமது சிந்தைனையை மாற்றுவது என்பது புதிய புரிதலை கொண்டுள்ளோம் என்பதாகும்… ஆகவே நம் மீது திணிக்கப்பட்டதவறான மொழி மாற்றறுவது அவசியமானதே…… அதை சாத்தியமாக்குவது உங்களைப்போன்ற எழுத்தாளர்களினதும் காலச்சுவடு போன்ற வெளியீட்டகங்களின் பொறுப்பும் பணியும் என்றே நினைக்கின்றேன்….

இந்த மொழி கூட நமது இயல்பாக இருப்பதற்கு காரணம் நீண்ட காலமாக நாம் பயன்படுத்தி வந்தமையினாலையே…. இதேபொல் புதிய மொழியை நாம் பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுது எதிர் காலத்தில் அதுவே நமது ;இயல்பான மொழியாகிவிடும்…
19 ஜனவரி இல் 12:56 PM • பிடித்திருக்கிறது • 2

வ.க.செ மீராபாரதி Ranjakumar Somapala S
ரஞ்சகுமாருக்கு இந்த விடத்தில் நன்றியும் வாழ்த்தும் கூறவேண்டும்…. இந்த உரையாடலை உள்பெட்டியில்தான் ஆரம்பித்தேன்…. ஏனெனில சிலருக்கு இதுபோன்ற பிரச்சனைகளை பொதுவில் கூறினால் அவர்களுடைய தன்முனைப்பு பாதிப்படைந்து நியாயம் கற்பிக்க முனைவார்கள்…. இதனால் சிலிரிடம் உள்பெட்டியில் செய்தி இடுவேன்…. சிலர் மட்டுமே இச் சுட்டிக் காட்டல்களை ஏற்பார்கள்……

ஆனால் ரஞ்சகுமார் இது தனது எழுத்தின் மீதான விமர்சனமாக இருந்தபோதும் பொதுவில் பதிவிடுங்கள் அப்பொழுதுதான் பலரும் உரையடாலாம் அனைவருக்கும் நன்மையளிக்கும்… தானும் பங்குபற்றுவேன் என்றார்…. ஆகவேதான் பொதுவில் பதிவு செய்தேன்…

இதுதான் நேர்மையான ஒரு படைப்பாளிக்கு அழகு. … ஆகேவேதான் அவருடைய படைப்புகளும் மே;ன்மையானவையாக இருக்கின்றன… நாம் பரஸ்பரம் கருத்துப்பரிமாறல்கள் விமர்சனங்களுக்கு ஊடாகவே வளரலாம்…
நேற்று 09:21 AM மணிக்கு • திருத்தியது • பிடித்திருக்கிறது

வ.க.செ மீராபாரதி “எழுத்தாளன் சமூகத்தின் மீதான விமர்சனத்தால்தான் அவன் எழுதவே ஆரம்பிக்கிறான்.” http://www.jeyamohan.in/69674 இதேபோல் முன்பும் இவரது கட்டுரைகளை வாசித்து அதிலிருந்த ஆணாதிக்க சொற்கள் தொடர்பான ஒரு கடிதத்தை எழுதி அவருக்கு அதை அனுப்பாமல் பின் கட்டுரையாக்கி எனது வலையில் பதிவு செய்தேன். அதில் பின்வருமாறு குறிப்பிட்டேன். “ஒரு ஈழ எழுத்தாளருக்கு (http://www.jeyamohan.in/?p=14933) என்ற இவரது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “ஒரு கதாபாத்திரத்தையோ> கதையையோ அதன் ஆசிரியன் கொஞ்சம் கூட மாற்ற முடியாதென்பதை எழுத்தாளன் சொன்னால் நல்ல வாசகன் கண்டிப்பாகப் புரிந்து கொள்வான் என்றே நம்புகிறேன்.” இதிலுள்ள கருத்தல்ல மாறாக கையாளப்பட்ட சொற்களே கவனிக்கப்படவேண்டியது. இவ்வாறன சொற்களைப் போன்று இவரது மேற்குறிப்பிட்ட கட்டுiரையில் மேலும் பல ஆண்நிலைப்பட்ட சொற்கள் பரவிக்கிடக்கின்றன. இக் கட்டுரையானது பொதுவான ஒன்று என்பதுடன் ஜெயமோகன் என்கின்ற வாழ்கின்ற ஒரு பாத்திரத்தின் கூற்று. இன்றைய காலத்தில் இவ்வாறன கட்டுரைகளில் பொதுப்பால் எழுத்துக்கள் வருவதே பொருத்தமானது. ஆனால் அவ்வாறு பொதுப்பால் சொற்கள் இல்லாது ஆண்பால் சார்ந்த சொற்கள் மட்டும் வந்திருப்பது ஜெயமோகனிடமிருக்கின்ற தந்தையாதிக்க (தந்தையம்) கருத்துக்களை பிரதிபலிக்கவில்லையா?”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: