Posted by: மீராபாரதி | January 5, 2015

நஞ்சுண்டகாட்டில் ஒரு ஏணைப்பிறை

நஞ்சுண்டகாட்டில் ஒரு ஏணைப்பிறை

front page kuna
வழமையாக எதையும் கொண்டாட வேண்டும் என நினைப்பவன் நான். ஓசோவின் அறிமுகத்திற்கு முதலே கையில் பணம் இல்லாவிடினும் கொண்டாடுவதற்கு மனம் இருந்தது. இப்பொழுது பணம் இருந்தாலும் மனம் இல்லை. ஆனால் ஓசோவை வாசித்தபின் கொண்டாடுவது என்பது எனது வாழ்வானது. அது எனது பிறந்த நாள் மற்றும் புது வருடங்கள் மட்டுமல்ல. மற்றவர்களது மரணத்தைக் கூட கொண்டாடித்தான் வழியனுப்ப விருப்பம். எனது மரணமும் அவ்வாறு நடைபெறுவதையே விரும்புவேன்.
வருடத்தின் கடைசி நாள் எனது பிறந்த நாள். அப்பாவின் இறந்த நாள். மற்றும் நானாகத் திட்டமிட்டு அதேநாளில் நடாத்திய (பதிவுத்)திருமண நாள். அடுத்த நாள் புதுவருடம். முன்பு இந்த நாட்களை நன்றாக நானாகவே கொண்டாடினேன். ஆனால் இப்பொழுது இந்த நாட்களை சதாரணமாக கடந்து செல்லவே விரும்புகின்றேன். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அவை இங்கு அவசியமற்றது. ஆகவே இக் கொண்டாட்ட சூழ்நிலையிலிருந்து ஓடி விட்டேன். எந்த நோக்கமுமில்லாது ஊர் சுற்றினேன்.

kuna 1
இவ்வாறான ஒரு சூழலில், மனநிலையில் குணா கவியழகனின் நஞ்சுண்டகாடு என்ற நாவலை வாசித்தேன். அதனுடன் ஒரு பொழுது வாழ்ந்தேன். இவ்வாறு ஒரு நூலை ஒரே மூச்சில் நான் வாசித்து முடிப்பது இப்பொழுதெல்லாம் அரிதிலும் அரிது. ஆனால் இந்த நூலை அவ்வாறுதான் வாசிக்கலாம். இதன் ஐம்பதாவது பக்கங்கள் தாண்டும் பொழுது கண்களில் கண்ணீர் வருவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது வெறுமனே கற்பனைக் காவியமல்ல. நமது தேசியவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய வறுமையில் வாழ்ந்த ஒரு போராளிக் குடும்பத்தின் வாழ்க்கை. அதை இன்னுமொரு போராளி தனது பார்வையில் கூறுகின்றார். நான் விமர்சனத்துடன் மதிக்கின்ற பாலகுமார் அவர்களின் முன்னுரையுடன் இந்த நூல் வெளிவந்திருப்பது இதற்கு மேலும் ஒரு முக்கியத்துவத்தையும் மதிப்பையும் வழங்குகின்றது.

bala annan
இது இலக்கியமா? புனைவா? அபுனைவா? என்பது தொடர்பாகவும் பிரதான பாத்திரமான சுகுமாரின் வாழ்க்கையை கூறிய முறை தொடர்பாகவும் கேள்விகள் விமர்சனங்கள் உள்ளன. இவற்றை இலக்கிய விமர்சர்களிடம் விட்டுவிடுகின்றேன். ஆனால் ஒரு படைப்பாக அல்லது அனுபவப் பதிவாக ஈழத் தமிழர்கள் குறிப்பாக புலம் பெயர்ந்தவர்கள் அனைவுரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் இது.
வறுமை மற்றும் பசியின் கொடுமை தொடர்பாக இந்தப் படைப்பாளர் குறிப்பிடுகின்றார். இவர் குறிப்பிடுவது போர் சூழல். இடப் பெயர்வு. உணவுத் தட்டுப்பாடு நிலவிய காலம். அனைவருக்கும் கஸ்டம் எனக் கூறலாம். ஆனால் இவ்வாறான நிலைமைகள் இல்லாத பொழுதுகளில் அயலவர்களிடம் உணவு இருந்தது. பொருட் தட்டுப்பாடு இருக்கவில்லை. எல்லோரும் சமைத்து சாப்பிட்டார்கள். ஆனால் நாம் பட்டினி இருந்தோம். மற்ற வீடுகளிலிருந்து வரும் சமையல் மணத்தை நுகர்ந்தபடி. இதைப் போன்ற இளமையில் கொடுமை வேறு ஒன்றுமில்லை. இவ்வாறான எனது சொந்த அனுபவத்தால் இப் படைப்பு எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றது என நினைக்கின்றேன்.

இந்த நூல் 2004ம் ஆண்டு எழுதப்பட்டு உள் சுற்றுக்கு விடப்பட்டதாக கி.பி.அரவிந்தன் குறிப்பிடுகின்றார். அதேவேளை இப்படைப்பில் இடம்பெரும் நிகழ்வுகள் சூழல் இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னிருந்து சமாதான காலம் ஆரம்பிக்கும் வரையான காலப்பகுதி எனலாம். மேலும் நூலில் ஆயுதப் பயிற்சி தொடர்பாக பல விமர்சனங்கள் வருகின்றன. அதேவேளை ஒரு வசனம் தீர்க்க தரிசனமாக அன்றே கூறப்பட்டிருக்கின்றமை கவனிக்கத்தக்கது.

“விலை கொடுக்காது விடுதலை சாத்தியமாகாது என்பதை விளங்கித்தான் உள்ளேன். ஆயினும் விடுதலைக்குத் தக்க விலைதான் கொடுக்கலாம். அதற்கு மேலால் கொடுக்க முடியாது. கொடுக்கக் கூடாது. கொடுக்க நேர்ந்தால் நாங்கள் தோற்றுவிடக்கூடும் என எண்ணுகின்றேன்” என வருகின்றது. இந்த வசனங்களை எழுதிய இந்தப் படைப்பாளியை எவ்வாறு விட்டுவைத்தார்கள்? அல்லது இதன் அர்த்தம் புரியாதவர்களாக அவர்கள் இருந்தார்களா? அப்படி நினைக்க முடியாது. அல்லது புலித் தலைமை இவ்வாறான விமர்சனங்களையும் கருத்தாடல்களையும் தங்களுக்குள் மட்டும் ஏற்றுக் கொண்டார்களா? அதனால்தான் பதிப்பிக்க அனுமதிக்கவில்லையா? என்ற கேள்விகள் தொக்குநிற்கின்றன.

எனக்கு ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையில்லை. அவ்வாறான ஒரு போராட்டத்திற்கு இவ்வாறு பயிற்சிகள் அளித்து பயிற்றுவிப்பதிலும் உடன்பாடு இல்லை. மனிதர்களை இவ்வாறு இயந்திரமாக்கி போர் முனைக்கு அனுப்பிவிட்டு அவர்கள் செய்கின்ற தவறுகளுக்காக குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்குவதிலும் உடன்பாடில்லை. ஆனால் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எவ்வாறு போராடுவது? வன்முறையான ஒடுக்குமுறையை எவ்வாறு எதிர்கொள்வது?
ஒருவர் போராட்டத்திற்கு போவதற்கு பல காரணங்கள் உள்ளன. இக் காரணங்கள் எல்லாம் நேர்மறையான காரணங்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. ஆனால் போராட போனபின் இவ்வாறான பயிற்சிகளுக்கும் கஸ்டங்களுக்கும் முகம் கொடுத்து முழுமையான பயிற்சி முடிந்து வெளிவருவதற்கு அவர்கள் போன காரணத்தைவிட மேலானதொரு காரணம் இருக்க வேண்டும். இதற்காக அவர்கள் தமது எதிர்மறை முகங்களை உணர்வுகளை வெளிக்காட்ட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவ்வாறான உணர்வுகள் கோபதாபங்கள் முரண்பாடுகள் பற்றியும் இது பதிவு செய்கின்றது.
தூசணம் அல்லது ஊத்தைப் பேச்சு என்பது எப்பொழுதும் பெண்களின் பாலியல் உறுப்புகளை குறிப்பிடுவதன் மூலம் பாலியல் உறுப்புகளையும் அதனுடான செயற்பாடுகளையும் மட்டுமல்ல பெண்களையும் இழிவுபடுத்துகின்றோம். இது எல்லா சமூகங்களிலும் பொதுவாக காணப்படுகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இதிலிருந்து நாம் மீள வேண்டுமாயின் பெண்கள் மற்றும் பாலியல் தொடர்பான சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவை தொடர்பான பிரக்ஞை உருவாக வேண்டும். ஆனால் நமது போராட்டத்தில் அவ்வாறான அக்கறை இருந்ததா என்பது கேள்விக்குறியே.

ஈழத் தமிழ் இயக்கங்களில் “தூசணங்கள்” அல்லது “ஊத்தைப் பேச்சுகள்” பேசுவது வழமையாக இருந்துள்ளது. அ வில் ஆரம்பித்து பெரும்பாலான எல்லா எழுத்துக்களிலும் பல சொற்கள் இருக்கின்றன. ஆனால் பிரதானமாக சில சொற்கள் மீள மீள பயன்படுத்துவார்கள். நாம் உள்ளுரில் 1884ம் ஆண்டு பயிற்சி எடுத்தபோதும் பயிற்சியாளர் இவ்வாறான சொற்களைப் பயன்டுத்தியே பேசுவார். ஒரு முறை 1985ம் ஆண்டு என நினைக்கின்றேன். யாழ் நகரில் பூபாலசிங்களம் புத்தக்க்கடைக்கு முன்னால் நிற்கின்றேன். கோட்டையிலிருந்து செல் அடிக்கின்றனர். செல் குத்தும் சத்தம் கேட்டு புளொட்டின் சங்கு ஒலித்து சனத்தை எச்சரிக்கின்றது. சனம் பல பக்கங்களுக்கு ஓடுகின்றனர். இராணுவம் வெளியே வருகின்றது என வதந்தி பரவுகின்றது. கிட்டு தனது படைகளுடன் ஒரு பிக்கப் வானில் வந்து இறங்குகின்றார். அதிலிருந்து இறங்கிய பொடியன்கள் போராளிகள் உடனடியாகப் பாதுகாப்பு நிலை எடுக்கின்றார்கள். ஒரு பொடியன் போராளி சனங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நிலை எடுத்தான். ஆனால் கிட்டு அவனை எல்லாவகையான தூசணத்தையும் பயன்படுத்தி கத்தினார். அதற்கு அவன் “சனம் அண்ண அதுதான்” என பதிலை இழுத்தான். கிட்டர் “…. நான் சொன்னதை செய் சனத்தைப் பற்றிக் கவலைப்படாதே” என்று சனத்திற்கு முன்னால் தூசண சொற்களைப் பயன்படுத்திக் கட்டளையிட்டார். அப்படியான தலைமை கொண்ட இயக்கத்திலிருந்து தூசணம் பேசியதற்காக தண்டனை கிடைத்ததை வாசிக்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது. சிலநேரம் இத் தண்டனைகள் புதியவர்களுக்கும் இளையவர்களுக்கும் இருக்கலாம். சிரேஸ்ட போராளிகளுக்கும் தலைமைக்கும் விதிவிலக்காவும் இருக்கலாம். ஏனெனில் போர்ச் சூழலிலும் தூசணம் நன்றாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை வேறுபல படைப்புகளிலும் வாசித்த ஞாபகம் உள்ளது.

ஈழத்திலிருந்து வெளிவந்த போரிலக்கியங்களில் குறிப்பிடுவதைப் போல இந்த நூலிலும் தலைவர் பிரபாகரன் அவர்கள், இவ்வாறான பயிற்சிகளின் போது கடுமையான தண்டனைகள் வழங்குவதை அவர் விரும்புவதில்லை எனக் குறிப்பிட்டு, பாதுகாக்கப்படுகின்றார். இவர் பற்றி கூற்றுகள் தனியான ஆய்வுக்கு உரிய விடயமாகும். அதை இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

எம் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் அடக்குமுறை நாம் புலம் பெயர்வதற்கு காரணம். ஆனால் பெரும்பாலானவர்கள் அங்கு இருக்கும் பொழுது போராட்டத்தை தவிர்த்து இங்கு வந்தவுடன் தீவிர தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர் ஆனாவர்கள். மரணித்த போராளிகள் ஒவ்வொருவரும் இவர்களுக்கு மாவீர்ர்கள். ஆனால் இந்த மாவீரர்கள் தமது குடும்பங்களை விட்டுவிட்டு போராட வந்தவர்கள் என்பதை வசதியாக நாம் ஒவ்வொருவரும் மறந்துவிடுகின்றோம். அதிலும் இவ்வாறு மரணித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள். ஆகவே இவர்களது குடும்பங்கள் பல கஸ்டங்களையும் வறுமையான வாழ்வையும் இப்பொழுதும் எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில் அடுத்த நேர உணவிற்கு உழைத்து சாப்பிட வேண்டியவர்கள். அவ்வாறான உழைப்பிற்கு ஆண்களிலையே பெரும்பாலும் தங்கியிருக்க வேண்டிய நிலை. ஆனால் இக் குடும்பங்களின் பெரும்பாலான ஆண்கள் மரணத்துவிட்டனர். சிலர் சிறையில் வாடுகின்றர். இன்னும் சிலர் உடல் அங்கங்களை இழந்து வாழ்கின்றனர். இப்படியான பல குடும்பங்களை தமிழ் தேசிய கட்சிகளும் அதன் தலைவர்களும் போராட்டத்தின் ஆதரவு சக்திகளும் கைவிட்ட நிலையில் இப்பொழுதும் அவர்கள் வறுமையிலும் ஏழ்மையிலும் பட்டினியுடனும் வாழ்க்கையே ஒரு போராட்டமாக வாழ்கின்றார்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் அதற்காக குரல் கொடுப்பதற்கும் எங்களுக்கு (புலம் பெயர்ந்தவர்களுக்கு) என்ன தார்மீக உரிமை உள்ளது? அதை உணர்ந்துதான் இந்தப் படைப்பின் கதைசொல்லி தனது இறுதி முடிவை தவிர்க்க முடியாமல் எடுக்கின்றான்.

சிலரது எழுத்துக்களில் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கள் மற்றும் அவற்றுக்கு இடையிலும் ஒரு உயிர் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் ஒரு உணர்விருக்கும். அதை வாசிக்கும் பொழுது நாம் உணரலாம். அவை வெறும் எழுத்துக்களல்ல. உயிருள்ள உருக்கள். இவ்வாறு ரஞ்சகுமாரின் படைப்புளில் அனுபவித்திருக்கின்றேன். அவ்வாறான உயிருள்ள ஒரு படைப்புதான் ஏணிப்பிறை என்ற நஞ்சுண்டகாடு.
ஒவ்வொரு போராளிகளினது நம்பிக்கையானது கடைசிப் போராளி இருக்கும் வரை தம் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படத்தேவையில்லை என்பது. இது தோழமையுணர்வுக்கும் பொருந்தும். ஆனால் இது உண்மையல்ல என்பது யதார்த்தம். கடந்த முறை இலங்கை சென்றபோது அப்பாவின் முன்னால் தோழரின் குடும்பத்தின் வாழ்க்கையை நேரில் பார்த்தபோது வாழ்வின் மீதான போராட்டம் புரட்சி மீதான நம்பிக்கை இழந்த தருணங்கள் அவை.

அப்பாவின் நண்பர். உண்மையில் (முன்னால்) தோழர். நாம் மாமா என்றே அழைப்போம். அப்பாவின் பல தோழர்கள் எங்களுக்கு மாமாதான். ஆகவே குடும்ப நண்பருமானார். அவர் அழகானவர். பிரகாசமான முகமுள்ளவர். அன்பான பேச்சு அவருடையது. இவர் தொடர்பான பல விடயங்களை இங்கு பதிய முடியாது. அது அவரது குடும்பத்தை அடையாளப்படுத்துவதை இலகுவாக்கிவிடும். ஆகவே தவிர்க்கின்றேன்.
அப்பாவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நாம் வறுமையில் இருந்தபோது சிறு பங்களிப்புகளாவது செய்தார். அதுவே அவரால் முடிந்தது. ஏனெனில் கட்சியின் வருமானத்தில் தான் அவர் குடும்பமே வாழ்க்கை நடாத்தியது. நாம் சிறுவர்களாக இருந்தபோது அவர் வீட்டில் சென்று தங்கியிருக்கின்றோம். அவருக்கும் மூன்று குழந்தைகள்.
இந்த முறை இலங்கை சென்றபோதே அவர் நீண்ட காலங்களிற்கு முன்பே இறந்த செய்தி கேள்விப்பட்டேன். இவர் இறுதிவரை கட்சியில் இருந்து கட்சிக்காக சமூகத்திற்காக செயற்பட்டவர். அப்படி வாழ்ந்தபோது சில உடல் நோய்க் காரணங்களால் உயிரிழந்துள்ளார். ஆகவே அவரின் குடும்பத்தைப் பார்க்க விரும்பினேன். ஆனால் அவரது வீட்டுக்குப் போய் பார்ப்பது நல்லதல்ல என்றார்கள். காரணம் அவர் குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கின்றமை மட்டும் காரணமல்ல. மாறாக மறைந்த தோழரின் மகள் ஒருவர் பாலியல் தொழிலாளியாகத் தன் குடும்பத்திற்காக உழைக்கின்றார் என்பதே காரணமாகும். இவர் இந்த தொழில் செய்வது தொடர்பாக பல கதைகள் உலாவுகின்றன. இதில் எது உண்மையானது என்பது முக்கியமல்ல. அவரை இத் தொழிலுக்கு தள்ளிய காரணங்களே முக்கியமானது. இதைக் கேட்டபொழுது அவர்களது வாழ்நிலையைக் கண்டபோது என் மனம் உடைந்துபோனது.
வாழ்நாள் முழுக்க கட்சிக்காக தனது சமூகத்தின் மாற்றத்திற்காக வளர்ச்சிக்காக உழைத்தவரின் மகளின் நிலை இதுதான். இதைக் கேட்ட பொழுது, கிடைத்த (தூர்)அதிர்ஸ்டமான சந்தர்ப்பத்தில் நாம் புலம் பெயர்ந்தது எவ்வளவு சரியான முடிவு என என் மனம் சொன்னது. அல்லது நமது நிலை என்னவாகியிருக்கும் என நினைத்துப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
இப் படைப்பு இவ்வாறு கைவிடப்பட்ட ஒரு குடும்பத்தைப் பற்றியது. இரண்டு போராளிகளை இழந்த ஒரு குடும்பத்தின் கதையிது. இவர்களது வறுமையான, அலைச்சல் நிறைந்த, குறுகிய காலத்தில் மரணங்கள் பலவற்றைக் கண்ட ஒரு பெண்ணினதும் அவளது உறவுகளினதும் வாழ்வின் பதிவு. தனது சின்னச் சின்ன ஆசைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் வாழ்கின்ற ஒரு அக்கா. ஆனால் அவரது இந்த சின்ன சின்ன ஆசைகள் கூட நிறைவேற முடியாதுபோன அவரது வாழ்க்கை. இந்தக் அக்காவின் ஆறுதலுக்காக குணா கவியழகனால் கட்டப்பட்ட ஏணைப்பிறை தான் நஞ்சுண்டகாடு என்ற படைப்பு.
இது இன்னுமொரு “ஆறாவடு” என்றால் மிகையல்ல. அந்த வடுவை தன்னால் முடிந்தளவு நீக்கம் செய்ய அல்லது அதிலிருந்து விடுதலை பெற அல்லது அதிலிருந்து ஆகக் குறைந்தது தான் அறிந்த தனது நண்பன் தோழன் மரணித்த போராளியின் அக்காவையாகவது விடுவிக்க முயன்றிருக்கின்றார் குணா கவியழகன். இன்று ஏணைப்பிறை தலைகீழாக கவிழ்ந்து இருப்பதாக வருந்துகின்றார். புலம் பெயர்ந்த தமிழர்களாக நாம் செய்யக் கூடியது ஒரு ஏணைப்பிறையாக இருந்து ஆறுதலையாவது இந்த சனங்களுக்கு வழங்க முடியுமாயின் அதுவே பெரும் பங்களிப்பாகும்.
மீராபாரதி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: