Posted by: மீராபாரதி | December 29, 2014

சாதிகள் இல்லையடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பா

1978ம் ஆண்டு எனக்குப் பத்து வயது…
அம்மாவின் சாரியைப் போர்வையாக சுருட்டிப் போர்த்து படுத்திருந்த என்னை அம்மா அதிகாலை ஐந்து மணிக்கு எழுப்பினார்.

ஒரு பக்கம் அப்பா அம்மா கால் நீட்டி படுக்கவும் இன்னுமொரு பக்கம் நாம் மூவரும் கால் நீட்டிப் படுக்கவும் மற்றப் பக்கத்தில் சமான்கள் வைப்பதற்கான ஒரு மேசையையும் கொள்ளக் கூடிய சிறிய அறை. நமது சமான்கள் எல்லாம் ஒரு ரங்குப் பெட்டிக்குள் அடங்கிவிடும். இதுதான் நம் வீடு. நாம் வாழ்ந்த அறை.

அப்பா ஏற்கனவே எழும்பி கையில் தேநீருடன் நேற்றைய பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தார்…
அம்மா என்னை எழுப்பி விட்டு அப்பாவின் அருகில் உட்காட்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.
மலையகத்தின் மார்கழி மாதப் பனிக் குளிர் என்னை எழுப்பவிடாமல் தடுத்தது. ஆனால் அப்பா மீதிருந்த பயத்தினாலும் காலையிலையே பேச்சு வாங்க கூடாது என்பதற்காகவும் அம்மாவின் நச்சரிப்பாலும் கஸ்டப்பட்டு எழும்பினேன்.

தங்கைமார் இருவரும் அம்மாவின் சாரிகளால் தம்மைப் போர்த்து படுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை அம்மா எழுப்பிவிடவில்லை.

அட்டன் சென்றல் பேக்கரி சடையன் முதலாளியின் மகனுக்கு அப்பா ஆங்கிலம் கற்பிக்க போகின்றவர். அங்கிருந்து சிறுவர்களுக்கான ஆங்கில நூல் ஒன்றை எனக்கு கற்பிப்பதற்காக கொண்டு வந்திருந்தார்.
இந்த ஆங்கில நூலில் பின்வரும் கதை ஒன்று உள்ளது.

ஒரு அரசன் எதிரிகளுடன் ஆறு முறை போர் செய்து தோற்று ஒரு குகை ஒன்றினுள் ஓழிந்திருப்பான். இனி என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு முன்னால் இருந்த சுவரில் ஒரு சிலந்தி தனது வலை ஒன்றைக் கட்டுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும். ஆறு முறை முயற்சித்து தோற்றுப் போய் ஏழாவது முறையாக வென்றுவிடும். அரசனும் அதைப் பார்த்து நம்பிக்கை பெற்று மீண்டும் போர் செய்து வெல்வான்.

இந்தக் கதையை நான் பாடமாக்கி சொல்லவேண்டும். ஆனால் எனக்குத் தான் ஆங்கிலம் வராதே. ஏழாவது முறை முயற்சித்தும் என்னால் பாடமாக்க முடியவில்லை. அதனால் அதிகாலையிலையே அப்பாவிடம் குட்டும் பேச்சும் வாங்கினேன். இது சரிவராது என நிறுத்திவிட்டு மூன்றாம் வகுப்பு நூலிருந்து “தலைவாரிப் பூச்சூடி” என்ற பாடலை பாடமாக்கி சொல்லச் சொன்னார்.
நானும் தூங்கித் தூங்கி பாடமாக்கிக் கொண்டிருந்தேன்.

இன்று எனக்கு முக்கியமான நாள். ஆகவே எப்பொழுது விடியும், அப்பா எப்பொழுது வெளியே போவார் எனக் காத்துக் கொண்டிருந்தேன்.

அப்பா கடவுள் நம்பிக்கை இல்லாதவர். கோயிலுக்குப் போகாதவர். ஆகவே அம்மாவும்….
ஆனால் நாம் கடவுளைக் கும்பிடுவதையோ கோயிலுக்குப் போவதையோ தடுத்ததில்லை. ஆகவே எனக்கும் சாமிக்கும் நல்ல உறவு இருந்தது. பொங்கள் தீபாவளிக்கு வாங்கும் அல்லது கிடைக்கும் சாமிப்படங்களை பலகை ஒன்றில் ஒட்டி கும்பிடுவோம். அதனுடன் விளையாடுவோம். வீட்டில் சாப்பாடு இல்லாமல் பட்டினி இருந்தால் சாமி பாவம். ஏனெனில் அதைப் போட்டு அடிப்பேன். ஏன் எங்களைக் கஸ்டப்படுத்துகின்றாய் எனக் கேட்பேன். நான் அடிக்கும் அடியில் படங்கள் கிழிந்துவிடும். இதனால் நான் சொல்வது சாமிக்கு கடைசிவரைக்கும் கேட்காமலே இருந்தது.
ஆகவே நாம் பட்டினி இருப்பது மட்டும் தொடர்ந்தது.

இப்படி சாமியுடன் சண்டை பிடித்தபோதும் அவர் மீது அன்பு பயம் மதிப்பு இருந்தது. மண்ணை உருட்டி கூம்பு வடிவில் உருவாக்கி தும்பிக்கை வைத்து பக்கங்களில் காது இரண்டு ஒட்டி பிள்ளையார் செய்வது எனக்கு விருப்பமானது. அப்படி ஒன்றைச் செய்தபோது பக்கத்து வீட்டு பபி அம்மா என்னைப் பயமுறுத்தினார். இது கடவுள் சக்தி கொண்டதாக இருக்கின்றது. ஆகவே கோயிலில் கொண்டுபோய் வையுங்கள் என்றார். நானும் பயந்து போனேன்.

நாம் இருந்தது ஒரு பேலி (லயன்) வீடு. அதாவது பத்து வீடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு தொடர்ந்து இருக்கும். எங்கள் வீடு ஒரு தொங்கலில் இருந்தது. அது ஒரு முஸ்லிம் வீடு. ஒரு தாயும் (உம்மாவும்) மகனும் மட்டும் இருக்கின்றார்கள். இவர்களின் வீட்டில் முன்னறையே நமது வீடு. அடுத்த வீடு பபி அம்மா. இவருக்கு இரண்டு மகள் ஒரு மகன். அவன் பெயர் ராஜா, ஒரு மகளின் பெயர் பபி. ஆகவே அவர் பபி அம்மாவானார். இவரது அப்பா புடவைக் கடையில் கணக்காளராக உள்ளார். அதற்கு அடுத்த வீடு ஒரு முஸ்லிம் வீடு. அதற்கடுத்தது ரவி ராஜாவின் வீடு. இங்கும் இரண்டு பொடியன்களும் ஒரு பெண்ணும் உள்ளார்கள். இவர்களது அப்பா அட்டன் நகரில் முடியலங்காரம் செய்கின்ற கடை ஒன்று வைத்துள்ளார். இதற்கு அடுத்தது இன்னுமொரு முஸ்லிம் வீடு. இதற்கு அடுத்தது ஒரு கடை முதலாளியின் வீடு. ஒரு நாள் நான் பசி என பழைய சாப்பாடு கேட்டபோது பூசனம் பிடித்த சாப்பாட்டைத் தந்தவர். இதற்கு அடுத்த வீடு குமார், சேகர், மோகன் என மூன்று ஆண்கள் இருக்கின்ற வீடு. இவர்களது அப்பா ஆசாரியார். நகை செய்யும் தொழில் செய்கின்றவர். இற்கடுத்தது ஒரு சிங்கள வீடு. எப்பொழுதும் முன் கதவு மூடியே இருக்கும். அதற்கு அடுத்தது ஜாவா முஸ்லிம்களின் வீடு.

இவ்வாறு பல சாதி மதங்களைக் கொண்ட குடும்பங்கள் ஒரே நேர்கோட்டில் வாழ்ந்தோம். எல்லா சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து விளையாடுவோம். குமார் அண்ணன் தான் எங்களின் பெரியவர். அவர் மாலை வேலைகளில் எல்லாப் பிள்ளைகளையும் கூப்பிட்டு தன் வீட்டு முற்றத்தில் இருத்தி பல்வேறு நிகழ்வுகளை நடாத்துவார். பாடவும் மற்றும் கதைகள் சொல்லச் சொல்லுவார். நடிக்கச் சொல்லுவார். நாமும் உற்சாகமாக செய்வோம். இந்த அண்ணனுக்கு இந்த வீடுகளில் ஒன்றில் வாழ்ந்த அக்கா ஒருவர் மீது காதல் வந்தது. நான் தான் அதற்கு தூது சென்றேன். அவர் தந்த கடிதத்தை அந்த அக்காவிடம் கொடுக்க அவரோ தனது வீட்டில் கொடுத்துவிட்டார். இதனால் அண்ணனுக்கு மட்டும் பிரச்சனையில்லை. என் அம்மாவிடம் நானும் அடிவாங்கினேன். இதற்குப்பின் அவர் என்னுடன் கதைப்பதில்லை. ஆனால் இது நடப்பதற்கு முதல் நான் செய்த கடவுள் சிலையை கோயிலில் கொண்டுபோய் வைப்பதற்காக ஒரு நிகழ்வு செய்தோம்.

நல்ல அடை மழை பெய்தது. இருந்தாலும் ஒரு மேடை அமைத்து அதற்கு லைட் போட்டு நாடகம் ஒன்று போட்டோம். சிலர் பாட்டுப் பாடி நாடகமும் போட்டனர். பின் நான் செய்த சிலைக்குப் பூசை செய்தோம். இறுதியாக ரவி ராஜாவின் அம்மா செய்த பொங்கலை வீடு வீடாக கொண்டு சென்று கொடுத்தோம். முஸ்லிம் வீட்டில் உள்ளவர்கள் வாங்கினார்கள். ஆனால் கணக்காளர், ஆசாரியர், மற்றும் முதலாளி வீடுகளில் வேண்டாம் என்றார்கள். எனக்கு ஏன் என்று விளங்கவில்லை. நிறைய பொங்கல் மிஞ்சிவிட்டது.
இரவு படுக்கும் பொழுது அப்பாவிடம் கேட்டேன். “ஏன் இந்த மூன்று வீட்டாறும் பொங்கலை வாங்கவில்லை”

“பொங்கலை ரவி ராஜா வீட்டில் சமைத்ததால் அவர்கள் சாப்பிடவில்லை” என்றார் அப்பா.

இரவு கவலையுடன் நித்திரை கொண்டேன்.
…..
மீண்டும் காலை அம்மா எழுப்பிவிட்டார்.

இன்று அப்பா மூன்றாம் வகுப்பு புத்தகத்திலிருந்த பாரதியாரின் “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்திருக்கலாகாது பாப்பா……..” என்ற பாடலை பாடமாக்கும் படி சொன்னார்…. நானும் அந்த அதிகாலையில் சத்தம் போட்டு பாடமாக்கினேன்.

“சாதிகள் இல்லையடி பாப்பா….” என்ற வரிகளை பக்கத்து வீடுகளுக்கு கேட்கும்படி பாடினேன்.

அப்பாவுக்கு பாரதியார் மீது நிறைய மதிப்பு. அதனால் தான் தன் குழந்தைகள் மூவருக்கும் பாரதி என்ற பெயரை இணைத்து வைத்தார்.

அப்பா காலையிலையே வெளியே போய்விட்டார்.
நானும் அம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு ரவி ராஜா உடன் அவர்களின் கடைக்குச் சென்றேன்.

இரவுவரை அவர்களுடன் அவர்கள் கடையிலிருந்து விளையாடிக் கொண்டும் நகரைச் சுற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தேன்.

இந்தக் கடை அட்டன் நகரின் நடுப்பகுதியில் இருக்கின்றது. இதற்கு முன்னால் உள்ள வீதியால் அப்பாவின் நண்பர்கள் முக்கியமாக வழக்கறிஞர்கள் வழக்கு மன்றத்திற்கு செல்கின்ற வீதி.

வீட்டுக்கு வந்தபோது அப்பா ஏற்கனவே வந்திருந்தார்.
இரவு எட்டு மணியாகியிருந்தது.

“எங்கே இவ்வளவு நேரமும் சுத்திப் போட்டு வரா” எனக் கோவமாகக் கேட்டார்.

“ரவி ராஜாவின் அப்பாவின் கடையில் நின்றேன்” என்றேன்

நான் சொல்லி முடிவதற்குள் அவரது உள்ளங்கையால் என் கண்ணத்தில். “பளார்” ஒன்று ஒரு அறை விழுந்தது.

“… மாமா (அவரது முன்னால் தோழர் நண்பர் சட்டத்தரணி ஒருவர்) பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பார்”. எனக் கத்தினார்.

எனக்குத் தலை சுற்றியது.

மீராபாரதி

அப்பா கொல்லப்பட்டு இருபதாவது ஆண்டு நினைவாக…..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: