Posted by: மீராபாரதி | December 29, 2014

அப்பாவும் நானும்

அப்பாவும் நானும்

இன்று தந்தையர் தின நிகழ்வு ஒவ்வொருவரும் தமது தந்தையை நினைவு கூறுகின்றனர். இவ்வாறு சம்பிரதாயமாக ஒரு நாளில் நினைவு கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆகவே இந்த நாளுக்காக ஒரு பதிவை எழுதும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் நிலாந்தனின் “தமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்” என்ற கட்டுரை அதற்கான ஒரு நோக்கத்தை என்னுள் உருவாக்கிவிட்டது.

அதில், “மிதவாதத் தலைவரின் மகனும் சுவரொட்டி ஓட்டச் சென்ற தொண்டர்களும் சேர்ந்து உறங்கியிருக்கிறார்கள். சிறுது நேரம் கழித்து மகனைத்தேடிக் கொண்டு தலைவரின் மனைவி வந்திருக்கிறார். தொண்டர்கள் மத்தியில் மகன் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவரைத்  தட்டியெழுப்பி அழைத்துச் சென்றிருக்கிறார். அப்படி அழைத்துச் செல்லும்போது அவர் பின்வரும் தொனிப்பட மகனைக் கண்டித்திருக்கிறார். ”இதெல்லாம் உன்னுடைய வேலையல்ல. இதைச்செய்ய அவர்கள் உண்டு. இதற்கெல்லாம் நீ போகக் கூடாது அப்பாவுக்குத் தெரிந்தால் கோவிப்பார். வந்து  உள்ளே படு’ என்று” குறிப்பிடுகின்றார்….

என் தந்தை மீது அரசியலடிப்படையில் மட்டுமல்ல ஒரு அப்பாவாக பல விமர்சனங்கள் எனக்கு இருக்கின்றன. அவை சமரசத்திற்கு அப்பாற்பட்டவை. இருப்பினும்….

நான் சிறுவனாக இருந்தபோது, அப்பா ஆதரவு செய்த கட்சிக்கு அம்மா பசை கரைக்க நான் சுவரொட்டிகளை கொண்டு செல்ல அப்பா அதை வீதிகளில் ஒட்டினார்.

இருபத்தைந்து வருடங்களின் பின்பும் இன்றும் எனது காதலர் “உனக்கு போஸ்டர் ஒட்ட மட்டும் தான் தெரியும்” (உண்மையும் அதுவோ என சிலவேளைகளில் எண்ணுவேன்) என்று நக்கலடிக்கும்மளவிற்கு அதனுடன் எனக்கு உறவு உள்ளது. இளமைக் காலத்திலிருந்து நண்பர்களுடன் இரவிரவாக சுரொட்டி ஒட்டுவதை செய்துள்ளேன். வீதிகளிலையே உறங்கியுமுள்ளேன்.

ஒரு முறை தனியார் பல்கலைக்கழகம் யாழில் ஆரம்பிப்பதற்கு எதிராக நாம் ஐவரும் அப்பா அம்மா தங்கைகள் மற்றும் நான் (நாம் சிறுவர்கள்) ஊர்வலம் சென்றோம்….

அப்பா கோசம் எழுப்ப அக் கோசத்திற்கு ஆதரவுக் கோசம் எழுப்பினோம் நாம் மூவரும். அந்தக் கோசம் இப்பொழுதும் நினைவில் உள்ளது. ஊர்வலம் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த வீதியோரத்து மக்களைப் பார்த்து…

“பார்வையாளர்கள் வேண்டாம் பங்காளிகள் வேண்டும்” எனக் கத்தினோம்.

1984ம் 85ம் ஆண்டுகளில் உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அன்று அவருக்கு உடன்பாடில்லாத அல்லது விருப்பமில்லாத ஒரு இயக்கத்திற்காக நான் வேலை செய்தபோதும் அவர் எதிர்க்கவில்லை.

இதன் பின் உயர்தரம் முடித்தவுடன் 1987ம் ஆண்டு மீண்டும் அரசியல் செய்யும் நோக்குடன் இருந்த இரண்டு இயக்கங்களில் ஒன்றைத் தெரிவு செய்து மீண்டும் இணைந்தபோதும் மறுப்போ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.

இதன் பின் கொழும்பிற்கு வந்து மீண்டும் அரசியல் செயற்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு இடதுசாரிக் கட்சியுடன் 1991களில் இணைந்தபோதும் மறுப்புத் தெரிவிக்கவில்லை..

ஆனால் இவற்றுடனான தனது உடன்பாடின்மையை மட்டும் தெரிவித்தார்.

குறிப்பாக இரண்டு இயக்கங்களில் செயற்பட்டபோது, வீட்டில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு “தாம் திங்கிடத்தோங்” போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு நாளும் “இந்த அரசியல் வேலைகளை விட்டுவிட்டு ஒரு வேலைக்குப் போ” என்று ஒருபோதும் கூறியதில்லை. ஆனால் “நீங்கள் கற்கும் கல்விதான் உங்களுக்கான சொத்து ஆகவே படி” என்று மட்டும் தொடர்ந்து கூறி தன்னால் முடிந்தளவு உழைத்து உண்ணத் தந்தார். அவரால் முடியாதபோது அவரைத் திட்டிக் கொண்டு… நம் பொறுப்பை மறந்து நாம் பட்டினி இருந்தோம்..

நான் 1989யில் ஒரு இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டபோதும் மற்றும் 1993யில் ஒரு  கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டிருந்தபோதும் அப்பா வேறு ஒரு இயக்கம் சார்பாக தேர்தலில் நின்றார்.

ஆனால் நான் அவருக்கு ஆதரவாக செயற்படவும் இல்லை வாக்களிக்கவுமில்லை. மாறாக எதிர் நிலையில் நின்று செயற்பட்டேன்.

அதற்காக அப்பாவோ அம்மாவோ என்னுடன் கோவிக்கவுமில்லை. எதிர்க்கவுமில்லை.

எனது தெரிவுகளை செயற்பாடுகளை உடன்பாடில்லாதபோதும் அனுமதித்தனர்.

நாம் சிறுவர்களாக இருந்தபோது காதல் என்பது நமது வீட்டுக்குள் பேசாப் பொருளாகவே இருந்தது. தனது குழந்தைகள் காதலிக்க மாட்டார்கள் எனக் கூறுவது மட்டுமல்ல அதை அனுமதிக்க மாட்டேன். அவ்வாறு நடந்தால் வெட்டிக் கொல்வேன் என பிறரிடம் கூறக் கேட்டிருக்கின்றேன். காதல் மீது அவருக்கு ஏன் அவ்வளவு எதிர்ப்பு இருந்தது என நான் அறியேன். ஆனால் அவரும் இளமைக் காலங்களில் காதலித்திருந்தார் என்பதை அறிவேன். ஒரு இந்தியப் பெண் இவர் மீண்டும் வருவார் என திருமணம் செய்யாமல் இருந்ததாக கூறுவார். அதேவேளை பலரின் காதல் திருமணத்தில் முடிவதற்கும் பங்களித்திருக்கின்றார்.

அவர் இறப்பதற்கு …. இல்லை கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு எனது காதலரை அறிமுகப்படுத்திய போது எந்த மறுப்போ விசாரிப்புகளோ செய்யவில்லை.

ஏற்றுக் கொண்டார்…..

……..

அண்மையில் மூன்று திரைப்படங்கள் பார்த்தேன்… கேடி பில்லா ரவுடி ரங்கா.. தங்கமீன்கள் மற்றும் எதிர்நீச்சல் இவை அப்பாவிற்கும் குழந்தைகளுக்குமான உறவுகள் தொடர்பான திரைப்படங்கள்…

கேடி பில்லா ரவுடி ரங்கா அப்பாவிற்கும் மகனுக்குமான உறவு.

எதிர்நீச்சல் அப்பாவிற்கும் மகளுக்குமான உறவு.

தங்கமீன்கள் அப்பாவுக்கும் மகனுக்கும் அப்பாவுக்கும் மகளுக்குமான உறவுகள்.

…….

ராமின் தங்கமீன்கள் !
மன்னிக்க வேண்டும்… திரை அரங்கில் சென்று பார்த்திருக்க வேண்டிய தமிழ் படம் இது. ஆனால் வழமைபோல நம்மை ஏமாற்றிவிடுவார்கள் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் என்பதால் தவறவிட்டேன்.
ஐந்தாம் வகுப்பு வரை முட்டாளாக (?) படிக்காதவனாக இருந்த எனக்கு இந்த வலி புரிகின்றது…
ஆசிரியர்களிடம் அடியும் திட்டும் வாங்கியதால் அவர்களை வெறுத்த எனக்கு இந்தக் கோவம் புரிகின்றது..

வேலையில்லாத ஒரு அப்பாவிற்கு மகனாக இருந்ததனால் அந்தக் கஸ்டம் ஏற்படுத்திய வலி புரிகின்றது…
குழந்தைகளை வளர்க்கத் தெரியாத அப்பாவாக இருக்கின்றாரே.. நல்ல பொறுப்பான அப்பாவாக இருக்கமாட்டாரா என ஏதிர்பார்த்திருந்த எனக்கு இந்த ஏக்கம் புரிகின்றது….

கடன் வாங்குவதன் வலி புரிகின்றது….

வேலை இல்லாமல் இருப்பதன் வலி புரிகின்றது…

தவறு தந்தையர் மீது அல்ல… அவர்களும் அப்படித்தான் வளர்க்கப்பட்டார்கள்….
தவறு ஆசிரியர்கள் மீது இல்லை… அவர்கள் அப்படித்தான் உருவாக்கப்படுகின்றார்கள்……

உலகத்தில் யாருமே நூறு வீதம் சரியானவர்களாகவோ ஒழுங்கானவர்களாகவோ இல்லைதான்… அவ்வாறு எதிர்பார்க்கவும் முடியாது…. ஆனால் ஒரு தந்தையாக ஒரு குழந்தையை இந்த சமூகத்தில் ஒழுங்காக வளர்க்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் எப்பொழுதும் இருக்கின்றது…
குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிகின்றது ஆனால் எப்படி என்பது தெரியவில்லை…. ஆகவே அந்தப் பொறுப்பை எடுக்காமல் தள்ளிவைத்திருக்கின்றேன்.

தங்கமீன்கள் தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கியமான ஒரு திரைபடம். பல பிரச்சனைகளை அழகாக கோடிட்டு காட்டிய யதார்த்தவாத படம்….
சாட்டை என்ற திரைப்படத்தைவிட நல்ல படம்…..
ஆனால் இதைவிட குழந்தைகளின் பிரச்சனைகளை, கல்வி கற்பிப்பதில் இருக்கும் சிக்கல்களை, தந்தைகளின் பொறுப்பற்ற தனத்தை, இயலாமையை, ஆசிரியர்களின் குறைபாடுகளை இன்னும் அழகாகவும் யதார்த்தமாகவும் வெளிப்படுத்தியிருக்கலாம் என நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லைதானே?

இருப்பினும் ராம் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும்…. இதைவிட சிறந்த படத்தை அடுத்தமுறை உருவாக்க….

……

மேற்குறிப்பிட்ட திரைப்படங்களில் இரண்டு பகிடிப்படங்கள் என்றளவில் சிரிப்பதற்காகத்தான் பார்த்தேன்…
ஆனால் சிரிப்பு மட்டுமல்ல சில விசயங்களும் அதில் இருந்தன… இவையும் எனது அப்பாவுடனான எனது நினைவூகளை கிளரிவிட்டன…
கேடி பில்லா பார்த்தபின் …. எழுந்த உணர்வு…அப்பாக்களுக்கு தமது அன்பை வெளிப்படுத்த தெரிவதில்லை… ஆனால் அக்கறையுடன் ஏதோ செய்வார்கள்…
அப்படித்தான் எனது அப்பாவும்…
அப்பா இருக்கும் மட்டும் அம்மாவின் உதவியுடன் ஏதோ வேலை செய்து உணவளித்தார்…. நாம் வளர்ந்தபின்பு கூட எந்தக் கஸ்டம் வந்தபோதும் வேலைக்குப் போ என்று சொன்னதில்லை…
நான் உழைத்து ஒருபோதும் அவர் சாப்பிட்டதில்லை…

எதிர் நீச்சல் அப்பாவைப் பார்த்த பின்….
சிறுவயதில் மரதன் ஒடுவதில் விருப்பம் அதிகம் எனக்கு. அதற்காக நண்பர்களுடன் ஓடிப் பயிற்சி செய்வதுண்டு. பாடாசாலை விளையாட்டுப் போட்டிகளில் மரதன் ஒடுவதுண்டு.
ஒருபோதும்….வென்றதில்லை. ஆனால் ஓடி முடித்திருப்பேன்.
83க்கு முதல் நெஸ்டல் இலங்கையின் முக்கிய நகரங்களில் (கொழும்பு கண்டி யாழ்ப்பாணம்) மரதன் (26 மைல்கள்) ஒடுவதை ஒரு நிகழ்வாக நடாத்தியிருந்தது. அதில் பங்கு பற்றுவது அப்பொழுது எனது கனவாக இருந்தது. அனால் 83ம் ஆண்டிபின் அவர்கள் நடாத்தவில்லை. அதில் ஒருபோதும் பங்குபற்ற முடியவில்லை என்பது மிகவும் கவலையாக இருந்தது…

ஆனால் அட்டன் காவற்துறை 83ம் ஆண்டு புதுவருட நிகழ்வாக மரதன் ஒன்றை நாடாத்தியது. அதில் காவற்துறையினர் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர். நானும் சுயமாகப் பங்கு பற்றியிருந்தேன். ஆனால் நான் தான் வயதில் மிகவும் இளயவனாக இருந்தேன். அப்பொழுது எனக்கு 15 வயது.
இந்த மரதன் 15 அல்லது இருபது மைல்களாக இருக்கவேண்டும். நினைவில்லை. அட்டன் காவற்துறை நிலையத்தில் ஆரம்பித்து அட்டன் நகர் வழியாக டிக்கோயா நகரைக் கடந்து அந்த நகரின் முடிவில் இருக்கின்ற வாலி பிள்ளையார் கோயிலுக்கு அருகிலிருக்கின்ற நோட்டன் மஸ்கேலியா வீதிகள் பிரிகின்ற சந்திவரை சென்று திரும்பி மீண்டும் டிக்கோயா நகர் கடந்து அட்டன் நகருக்கு செல்லாமல் இடையால் திரும்பி செனன் தோட்ட வழியாக சென்றது. இந்த வழியினுடாக அட்டன் கண்டி அல்லது கொழும்பு பாதையில் மிதந்து மீண்டும் அட்டன் நகரிலிருக்கின்ற டன்பார் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது.

இந்த வீதிகளில் நானும் விடாது வெறுங்காலுடன் ஒடிக்கொண்டிருந்தேன்….
டிக்கோயா அட்டன் வீதியிலிருந்து செனன் வீதியில் ஏறியபோதே நான் தான் இறுதியாளாக ஓடிக்கொண்டிருந்தேன். நான் ஒருவரையும் முந்தவில்லை. ஆனால் எனக்கு முன் ஓடிக்கொண்டிருந்த காவற்துறையினர் உட்பட பலர் தம்மால் முடியாது ஒவ்வொருவராக வாகனங்களில் ஏறிக்கொண்டனர். நான் ஏறவில்லை. எனக்குப் பின்னால் வாகனம் மெதுவாக வந்துகொண்டிருந்தது. நானும் விடாது மெதுவாக ஓடிக்கொண்டிருந்தேன். அட்டன் நகர் வந்தபோது பிராங்கிளின் சாராய ஓட்டலுக்கு முன்னால் வழமைபோல நின்று கொண்டிருந்த அப்பா நான் ஓடிவருவதைக் கண்டுவிட்டார். அவருக்கு நான் கடைசியாக ஓடிக்கொண்டிருந்தாலும் இன்னும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருந்தது மகிழ்ச்சி அளித்திருக்க வேண்டும். அவரும் அங்கிருந்து என்னுடன் எனக்கு ஊக்கமளித்தவாறு மைதானத்தை நோக்கி ஓடிவந்தார். என்னிலும் விட மூத்தவர்கள் ஓட முடியாது இடையில் விட்டபோதும் சிறுவன் ஒருவன் ஓடி முடித்ததற்காக 50 ரூபாய் பணமும் ஒரு சான்றிதழும் தந்தார்கள்.
அப்பொழுது நாமிருந்த நிலைக்கு 50ரூபாய் பெரும் பணம்.

 

வெற்றி என்பது மற்றவர்களை முந்துவதல்ல. மாறாக பங்குபற்றிய ஒரு பயணத்தில் உறுதியுடன் இருந்து இறுதிவரை நேர்மையாக பயணித்தேனா என்பதே முக்கியமானது.
இப்பொழுது அப்படியான ஒரு பயணத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றேன்.
முடிவு மட்டும் தெரியவில்லை….

மீராபாரதி

அப்பா கொல்லப்பட்டு 20வது வருட நினைவாக

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: