Posted by: மீராபாரதி | December 17, 2014

முள்ளிவாய்க்கால் – ஒரு முடிவற்ற பயணம்…?

முள்ளிவாய்க்கால் – ஒரு முடிவற்ற பயணம்…?

mullivaikalமுள்ளிவாய்க்காளை நோக்கி ஒரு பயணத்தை நடையில் செல்ல விரும்பினேன். இது கொஞ்சம் அதிகம் இலட்சியத்தனமானது என உணர… தூவிச்சக்கர வண்டியில் செல்ல விரும்பினேன். ஆனால் அதுவும் சாத்தியப்படவில்லை. அதேவேளை முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்த நண்பர்களுடன் பயணம் செய்ய விரும்பினேன். அதுவும் பல காரணங்களால் நடைபெறவில்லை. இறுதியாக நண்பர் ஒருவர் தனது நண்பரை அறிமுகப்படுத்தி அவருடன் மோட்டார் வண்டியில் செல்ல ஒழுங்குபடுத்தினார். இந்த நண்பரும் முள்ளிவாய்க்கால் வரை சென்று தப்பி வந்த ஆசிரியர் ஒருவர்.

காலை ஆறரை மணிக்கு நெல்லியடியிலிருந்து பேரூந்தை எடுத்தேன். இப்பொழுது வடக்கு கிழக்குப் பகுதிகளிருந்த பல, குறிப்பாக வல்லை வெளி, பருத்துறை கொடிகாம வீதி வெளி, செம்மணி, நாவற்குழிசந்தி, இராணுவ காவலரண்களை எடுத்துவிட்டார்கள். அதேவேளை ஒரு புறம் அரசியல் கோசமாக இராணுவத்தை எடுக்க சொல்கின்றோம். மறுபுறம் இராணுவம் இல்லையென்றால் களவுகள் கொள்ளைகள் நடைபெறும் என மக்கள் பயப்பிடுகின்றார்கள் என்ற கருத்தும் நிலவுகின்றது. இந்தக் கருத்தை யார் முன்வைக்கின்றார்கள் என்பது கேள்விதான். இருப்பினும் இது ஒரு முரண்நகை. இப்பொழுது வீதிகளிலும் மறித்து சோதனைகள் நடைபெறுவதில்லை. இவையெல்லர் பெரிய நிம்மதிதான். ஆனால் இராணுவத்தினர் மாபெரும் இராணுவ முகாம்களை அமைத்து அதனுள் ஒரு கிராமாகவே தமிழ் பிரதேசங்கள் எங்கும் வாழ்கின்றனர். ஈழத்து தமிழ் சமூகத்தைப் பொருத்தவரை இது நீண்ட கால நோக்கில் ஆரோக்கியமானதல்ல. அதேவேளை நகரங்களிலும் கிராம வீதிகளிலும் தூவிச்சக்கர வண்டிகளில் அதிகமாக தம் பாட்டுக்கு எந்தப் பயமுமின்றி ஓடித்திரிகின்றனர். இவ்வாறுதான் சுற்றுவட்டாரங்களை தமது கண்காணிப்புக்குள் வைத்திருக்கின்றனர்.

காலை ஏழு மணியளவில் முகமாலையைக் கடக்கும் பொழுது நிலக் கண்ணி வெடிகளை அகற்றுகின்றவர்கள் ஏற்கனவே தமது பணியை ஆரம்பித்திருந்தனர். ஒரு வகையில் உயிராபத்தான இந்த வேலை இன்னும் தொடர்வது நல்லது. ஏனெனில் இவர்களுக்கு செய்வதற்கு ஒரு தொழில் இருக்கின்றது. அல்லது தொழில் தேடவேண்டிய நிலை ஏற்படும் என நண்பர் ஒருவர் சொன்னார். இருப்பினும் இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்த வேலைகள் முடிவுக்கு வரலாம் என்றே தோன்றுகின்றது. இந்த நிலக் கண்ணிவடிகளை அகற்றுகின்றவர்களைப் பார்க்கின்றபோது மிகவும் கஸ்டமாக இருக்கும். ஒரு புறம் சிறலங்கா அரசு நம் தேசத்தை முடமாக்கி விட்டது. மறுபுறம் நம் தேசத்தை நாமும் முடமாக்கி விட்டோமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. காலை எட்டு மணிக்கு பரந்தன் சந்தியில் புதிய நண்பரை சந்தித்தேன். இங்கிருந்த நமது பயணம் முள்ளிவாய்க்காலை நோக்கி ஆரம்பமானது.

புதிய காப்பட் வீதிகள். அகலமாக விரிவாக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான புதிய வீதிகள் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கவா அல்லது மக்களின் நலனில் அக்கறை கொண்டா மேற்கொள்ளப்படுகின்றன என்பது கேள்விக்குறி. ஏனெனில் வட இந்தியாவிலிருந்து தென் இந்தியா வரையும் வட இலங்கையிலிருந்து தென்னிலங்கை வரையும் புதிய வீதிகள் போடப்படுகின்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அல்லது செப்பனிடப்படுகின்றன. மேலும் சிறு சிறு வீதிகள் கூட கொங்கிறிட் கற்களால் போடப்படுகின்றன. இவ்வாறு கொங்கிறிட்டினால் போடுவது எந்தளவு பொருத்தமானது என்பதும் கேள்விக்குறியது. இந்த திட்டங்கள் வெறுமனே அபிவிருந்தியா அல்லது பெரும் பணத்தை சுருட்டும் திட்டமா அல்லது இதற்குப் பின்னால் அரசுகளினதும் பல் தேசிய கம்பனிகளின் பொருளாதார அரசியல் காரணங்கள் இருக்கின்றனவா என்பது ஆய்வுக்கு உரிய ஒரு விடயமாகும்.

நமது பயணம் சுதந்திரபுரம், தேவிபுரம், இரணைப்பாலை, புதுமத்தாளன், முள்ளிவாய்கால் என தொடர்ந்தது. நாம் தேவிபுரம் சுதந்திரபுரம் சந்தியிலிருந்து இரணப்பாலை நோக்கி செல்கின்ற மண்பாதையில் சென்றோம். வீடுகள் மிகவும் அரிதாக காணப்பட்டன. ஒரிருவரே நம்மை கடந்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் மிக உயர்ந்த மரங்கள். சோலையாக காட்டியளித்தன. இந்த இடத்தைப் பற்றி நண்பர் ஒருவருக்கு மிகவும் அழகாக இருந்தது எனக் கூறினேன். அவர் உடனடியாக நான் சொல்வதை மறுத்து அன்று அது எங்களுக்கு சோலையாக இருக்கவில்லை. அது ஒரு மரண சாலையாக இருந்தது என்றார். நாம் ஓடி ஒழிய முடியாதவாறு செல்களும் குண்டுகளும் நம் மீது விழ்ந்தன. பலர் மரணிக்க தப்பித்தவர்கள் மரண பயத்துடன் பகலில் கூட இரவுபோல கடந்து சென்ற பாதை இது என்றார்.

சில நிமிடங்களின் பின் வீதிகளின் இருமருங்கும் சுத்தம் செய்யப்பட்டு அழகாக இருக்கின்ற ஒரு இடத்திற்கு வந்தோம். இது ஒரு இராணுவ முகாம். இரண்டு பக்கமும் உயர்ந்த மரக் காடுகளுக்கிடையில் முகாம்கள் இருக்கின்றன. ஆகவே நாம் வந்தது பொதுப் பாதையா அல்லது இராணுவத்திற்கு மட்டும் உரிய பாதையா என்பதை தீர்மானிக்க முடியவில்லை. ஏனெனில் நம்மைத் தவிர. பொதுசனம் யாரும் இந்த வழியால் செல்லவில்லை. இராணுவத்தினர் மட்டுமே நின்றனர். மனதிற்குள் ஒரு பயம். திரும்பியும் செல்ல முடியாது. ஆகவே வேறு வழி இல்லாததால் நாம் வீதியை மட்டும் பார்த்தவாறு சென்றோம். முகாமின் முடிவிலும் இராணுவத்தினர் நின்றனர். அவர்களும் திசை தெரியாது மாட்டுப்பட்ட ஆடுகளைப் பார்ப்பதைப் போல எங்களை ஏதோ அதிசயமாகப் பார்ப்பது போல் இருந்தது. நாம் தொடர்ந்தும் அவர்களை கவனியாதது போல் கடந்து சென்றோம். நாம் செல்கின்ற பாதையின் எதிர்திசையிலிருந்து இராணுவத்தினர் மட்டுமே வந்து கொண்டிருந்தனர்.

நாம் செல்வதோ காட்டுப் பகுதி. இதற்குள் பிடிபட்டால் யாருக்கும் தெரியாது. இதனால் மேலும் கொஞ்சம் பயம் அதிகரித்தது. ஆனால் அவர்களை கணக்கெடுக்காதது போல் கடந்து சென்றோம். அந்த வீதி ஒரு திருப்பத்தை அடைந்தபோதுதான் மாடு மேய்பவர் ஒருவரைக் கண்டோம். அப்பொழுதுதான் மனம் சிறிது ஆறுதலடைந்தது. அவரிடம் இந்தப் பாதையால் போகலாமா எனக் கேட்க அவர் ஓம் என்றார். அதன் பின் இரு இளைஞர்கள் அந்தப் பாதையால் நம்மைப் கடந்து குறிப்பிட்ட முகாம் இருக்கின்ற பக்கம் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் எவ்வாறு பயமில்லாம் இந்தப் பாதையில் தனியாக செல்கின்றனர் என்ற கேள்வி என் மனதுக்குள் எழுந்தது.

நாம் “செந்தூரன்” சிலையடிக்கு சென்றோம். இந்த சந்தியில் சிலையில்லை ஆனால் அதன் பெயர் மட்டும் இன்றும் இருக்கின்றது. அதிலிருந்த கடையில் குளிர்பானம் குடித்துவிட்டு தண்ணி போத்தலும் வாங்கினோம். இந்தப் பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வரவில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பு மின்சாரம் வரப்போகின்றது எனக் கூறியுள்ளனர். ஆகவே அனைவரும் தம்மிடம் இருந்த பணத்தைக் கொண்டு தம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வேலைகளை செய்துள்ளனர். இப்பொழுது தேர்தலில் தோற்றுப் போனதால் மின்சாரம் கொடுப்பதற்கான கட்டளை இன்னும் வரவில்லை என சொல்கின்றார்கள் என்பதை அறிந்தோம். இதேநேரம் தேர்தலில் வென்றவர்களும் இதுபற்றிய அக்கறையற்று இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளாக ஏன் தான் இருக்கின்றார்களோ?

செந்தூரன் சிலையடி சந்தியிலிருந்த பிரதான பாதை புதுக் குடியிருப்பிலிருந்து புதுமத்தாளனை நோக்கி செல்கின்றது. இந்த வீதியின் இரு மருங்கிலும் உயர்ந்த மரங்களும் தென்னை மற்றும் பனங் காடுகளும் இருந்த இடத்தைக் கடந்தபோது பரந்த வெளி ஒன்று வந்தது. இரு மருங்கிலும் ஏரிகள் இருந்தன. இந்த வெளியைக் கடந்தபோது புதுமத்தாளன் வந்தது. சந்தியில் இராணுவத்தினர் நின்றனர். ஆனால் நம்மை விசாரிக்கவில்லை. இந்த வழியால் போகின்ற போது, போர்க்காலத்தில் இராணுவம் எங்கே இருந்தது. புலிகள் எங்கே இருந்தனர். மக்கள் எவ்வாறு இந்த வெளியை எரிக்கூடாக கடந்து புலிகளில் இருந்து தப்பித்து இராணுவத்திடம் வந்தனர் என என்னுடன் வந்தவர் விபரித்தார். அவர் விபரிப்பதை அந்த இடத்தில் இருந்து உணர்ந்த போது மிகவும் மனஊளைச்சல் ஏற்பட்டது. கவலை ஏற்பட்டது. ஒரு புறம் இந்த மக்களை அழிக்கின்ற அரச இராணுவம். மறுபுறம் மக்களுக்கு எதிராக துப்பாக்கிளைத் திருப்பிய தேசிய விடுதலைக்காகப் போராடிய போராளிகள். இவர்களுக்கிடையில் சிறு இடத்திற்குள் அகப்பட்ட மக்கள்.

மக்கள் தமக்காக போராடியவர்களை விட்டு வெளியேறியது ஈழத் தமிழர்களின் இயல்பான செயற்பாடா..? பொதுவான வழமையான உளவியலா? எப்போதும் போல் போராட்டத்தில் பங்குபற்றாது தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்ற போக்கா? பொடியன்கள் (மற்றவர்களின் பிள்ளைகள்) போராடி மரணித்து விடுதலையை பெற்றுத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பின் விளைவா? அல்லது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மக்கள் விரோத செயற்பாட்டின் விளைவா? … இக்கட்டான காலகட்டத்தில் கட்டாய இராணுவ சேவை தவறானதா? அரசுகளின் கட்டாய இராணுவ சேவை சரி எனின் போராளிகளின் கட்டாய ஆட்பிடிப்பு தவறா? அல்லது மக்களை அரசியல் மயப்படுத்தாத போராட்டத்தின் விளைவா? அவ்வாறன தலைமை இல்லாமையின் விளைவா? அரசியல் ஆய்வாளர் சோதிலிங்கம் அவர்கள் இக் கேள்விகளை அண்மைய நேர்காணல் ஒன்றில் எழுப்பியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. தம்மை அழிக்க விரும்புகின்ற ஆகக்குறைந்தது அடக்கி ஆள வருகின்ற ஒரு இராணுவத்திடம் மக்கள் ஏன் சென்றனர்? உயிரா? சுதந்திரமா? எது முக்கியம்? ஈழத் தமிழர்கள் விடுதலையடைய வேண்டும் எனின் விடை காணப்படவேண்டிய கேள்விகள் இவை.

புதுமத்தாளன், அம்பளவான்பொக்கனை, வலைஞர் மடம், ஊடாக முள்ளிவாய்க்காலை நோக்கி சுட்டெரிக்கும் வெய்யிலில் பயணம் தொடர்ந்தது. மீளக் குடியேறிய வறிய மக்கள் தமக்கான புதிய வீடுகளை நிவராண உதவியுடன் தாமே கட்டிக் கொண்டிருந்தனர். நமக்கு யாருடன் கதைக்கலாம் கதைக்க கூடாது என்ற தயக்கம் இருந்தது. ஏனெனில் யார் இராணுவம், புலனாய்வு வேளைகளில் யார் ஈடுபடுகின்றார்கள் என்பவற்றை அறிவதும் கஸ்டமாக இருந்தன. சில இளைஞர்கள் நன்றாக தமிழும் சிங்களமும் கதைக்கின்றார்கள். இவர்கள் தமிழர்களா சிங்களவர்களா என அடையாளம் காண்பது மிகவும் கஸ்டம். அதேவேளை சில மக்களும் முன்னால் போராளிகளும் இன்று இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுகின்றவர்களாக அவர்களுக்கு தகவல்கள் வழங்குகின்றவர்களாக இருக்கின்றனர். இது இவர்கள் இங்கு வாழ்வதற்கான தவிர்க்க முடியாத நிலையாக இருக்கின்றது. ஏனெனில் இவர்கள் இந்த சூழலிலிருந்து தப்பித்து வெளிநாடுகளுக்கு போக வசதி இல்லாதவர்கள். ஆகவே விரும்பியோ விரும்பாமலோ இதற்குள் சிக்குண்டு இருக்கின்றார்கள். இவர்கள் இதனை செய்யாவிட்டால் தம் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி கொடுமைப்படுத்துவார்கள் எனப் பயப்பிடுகின்றார்கள். ஆகவே மனிதர்களை கண்டவுடன் கதைப்பதை தவிர்த்தோம். தெரிவு செய்து சுற்றிவளைத்தே கதைக்க ஆரம்பித்தோம்..

நாம் போகின்ற வழியில் ஒரு சிறிய பெட்டிக் கடை எதிர்ப்பட்டது. கடையில் ஒரு பெண் மட்டும் நின்று கொண்டிருந்தார். அக் கடையின் பின்னால் பெரிய இராணுவ முகாம். இப்படி ஒரு இடத்தில் இந்தப் பெண் எப்படி தனித்து இருக்கின்றார் என ஆச்சரியமாக இருந்தது. இந்தப் பெண்ணுடன் கதைப்பதற்காக அவரது கடையில் குளிர்பானம் இருக்கின்றதா என விசாரித்தோம். இல்லை என்றார். ஒருவாறு நமது உரையாடலை ஆரம்பித்தோம். இவ்வாறு தனிய இருப்பது பிரச்சனையில்லையா..? பயமில்லையா? எனக் கேட்டோம். தான் பகல் வேளைகளில் மட்டுமே இங்கு நிற்பதாக கூறினார். மகன்மார் இரவில் வந்து தங்குவார்கள். இவரது கணவர் 1995ம் ஆண்டு செல்அடியில் கொல்லப்பட்டார். இதன்பின்பு பல கூலி வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இறுதியாக புலிகளின் காவல் துறையில் வேலை செய்துள்ளார். மகன் உடல் நலக் குறைவானவர். ஆகவே அவரை இயக்கத்தில் இணைப்பதைத் தடுப்பதற்கா தானே அவர்களுடன் இனைந்து செயற்பட்டதாக கூறினார்.

பணமுள்ள்ளவர்கள் எல்லாம் இயக்கத்திற்கு பணத்தையும் சொத்துக்களையும் எழுதிக் கொடுத்து விட்டு தம் பிள்ளைகளைக் பாதுகாப்பாக கொண்டு போய்விட்டார்கள். எங்களுடைய பிள்ளைகள் தான் இறுதியாக போராடுவதற்கு அகப்பட்டார்கள். இப்பொழுது கஸ்டப்படுவதும் நாம் தான். இருந்த ஒன்றிரண்டு பிள்ளைகளையும் போராட்டத்திற்கு கொடுத்து இறுதிப் போரில் கணவரும் காணமல் போக இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றோம் என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.

மதிய வேளைகளில் ரோந்து செல்கின்ற இராணுவத்தினர் ஆண்கள் இல்லாது பெண்கள் தனித்து வாழும் வீடுகளை கவனித்து இரவு வேளைகளில் சில நேரங்களில் புகுவது உண்டு. இதற்கு சில தமிழர்களும் உடந்தை. இதற்காக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வாழ்கின்ற பெண்கள் எல்லோரும் இராணுவத்தினரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அல்ல. இவ்வாறான செய்திகள் பெண்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றது. ஊடகங்கள் இவர்கள் பற்றிய எந்த அக்கறையுமின்றி செய்திகளை பரபரப்பிற்காக வெளியீடுகின்றனர். மறுபுறம் அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் தமது வாழ்வை புதுப்பித்துக் கொள்வதற்கு வழியுமில்லை. ஈழத் தமிழ் சமூகத்திற்கோ அரசியல்வாதிகளுக்கோ இவர்களில் அக்கறை இல்லை என்பதை அறியக் கூடியதாக இருந்தது. தம் உயிரைப் பயணம் வைத்து போராடிய போது போற்றப்பட்டவர்கள் இன்று போக்கிடம் இன்றி தவிக்கின்றார்கள். இவ்வாறு ஒரு புறம் இருந்தாலும் சிலர் முன்னால் போராளிகளிடமும் தனித்து வாழும் பெண்களிடமும் அக்கறையாகவும் இருக்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

இங்கிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்றோம். பல புதிய வீட்டுத் திட்டங்களால் கட்டப்பட்ட வீடுகள் இருந்தன. சில வீடுகள் ஓலைகளால் வேய்ந்த குடிசைகளாக இருந்தன. ஒரு இடத்தில் வீட்டுடன் தேவாலயம் ஒன்று இருக்க அதற்குப் போவதுபோல் சென்றோம். வயதான மனிதர். அவரை விட சிறிது வயது குறைந்த பெண். மற்றும் சிறுமி ஒருத்தியும் இருந்தனர். உங்களுக்கு வீட்டுத்திட்டத்தால் வீடு கிடைக்கவில்லையா எனக் கேட்டோம். அதற்கு அவர் எங்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் காணி உறுதி இல்லாததால் இழுபடுகின்றது. நாம் முன்பிருந்தது கடற்கரையோரத்தில். சுனாமியின் பின் உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தால் அங்கிருக்க முடியாது எனக் கூறி இந்தக் காணியை தந்துள்ளனர். தனது கணவருக்கும் அறுபத்தைந்து வயதுக்கு மேல். பிள்ளைக்கும் பதினாறு வயதில்லை. ஆகவே எங்களுக்கு வீடு கிடைப்பதற்கான புள்ளிகள் உண்டு. அப்படியிருந்தும் இழுபடுகின்றது. அறுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட பெற்றோருக்கு பதினாறு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பின் புள்ளிகள் குறைவானதாக இருக்கும். இவர்களுக்கு வீட்டு திட்டத்தில் முதிலிடம் இல்லை. அதேநேரம் சில கிராம சேகவர்களுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இந்த மக்களுக்கு உதவுவதில் அக்கறையும் இல்லை. அவர்கள் பக்க சார்பாகவும் நடக்கின்றனர் என்கின்றனர். இந்த இடைவெளியில் இராணுவத்தினர் ஆண் துணையில்லாத குழந்தைகள் உள்ள பெண்களுக்கு தாமாகவே வீடுகள் கட்டிக் கொடுக்கின்றனர் என அறியமுடிந்தது.

போர் நமது உயிர்களையும் சொத்துக்களையும் பறித்துச் சென்றது. இப்பொழுது வெளி நாட்டுக் காசுகளும் கம்பனிகளும் நமது வேலைகளையும் கொண்டு செல்கின்றனர். நாம் கூலி வேலை செய்து உழைப்பவர்கள். அறுவடை காலங்கள் முக்கியமானவை. ஆனால் நம்மை யாரும் இப்பொழுது அறுவடைக்கு கூப்பிடுவதில்லை. இயந்திரங்களை வைத்து செய்து கொள்கின்றார்கள். இந்த இயந்திரங்கள் மனிதர்கள் மூன்று நாட்கள் செய்த வேலையை ஒரு நாளில் முடிப்பது மட்டுமல்ல. குறைந்த செலவிலையே முடிகின்றன. இதனால் கூலி உழைப்பாளர்களின் வயிற்றில் பெரும் அடி. வேறு வேலைகளும் இல்லை. இருக்கின்ற சில வேலைகளையும் சிங்களவர்களுக்கு வழங்கப்படுகின்றன. வீதிப் புனரமைப்பு வேலைகள் மட்டுமல்ல புதிய புகையிரத நிலையங்களில் கூட சிங்களவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். எங்களுக்கு எல்லாப் பக்கத்தாலும் அடிதான். நமக்காக கதைக்கவும் ஒருவரும் இல்லை..

முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள கைவிடப்பட்ட கப்பல்கள் மற்றும் பயன்படுத்தப்படாத இரும்புகள் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனைக்காக வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இது ஒரு முக்கியமான வேலையாக இந்தப் பகுதிகளில் நடைபெறுகின்றன. இந்த வேலைகளை இராணுவத்திற்காக செய்பவர்கள் தமிழர்கள். முள்ளிவாய்க்காலுக்கும் வட்டுவாய்க்காலுக்கும் இடையிலுள்ள பகுதி அதாவது இறுதி போர் நடந்த பகுதி முழுவதுமாக தடைசெய்யப்பட்டு கடற்படையின் கண்காணிப்பிற்குள் இருக்கின்றது. இன்னும் இரகசியங்கள் புதைந்திருக்கும் நிலமாக இது இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இறுதியாக முல்லைத் தீவில் மதிய உணவருந்தி விட்டு மீண்டும் வந்தவழி சிலவற்றால் பயணத்தைத் தொடர்ந்தோம்.

இந்தப் பிரதேசங்களில் தேர்தல்களில் நிற்கின்ற கட்சிகளினதும் அதில் வென்ற கட்சிகளினதும் காரியாலயங்களை காணமுடியவில்லை. இந்தக் காலங்களில் இவர்கள் இங்கிருந்து; பணியாற்றுவது அந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளது. மேலும் பல தகவல்களை பெறுவதற்கும் பயமின்றி திரிவதற்கும் உதவலாம். அல்லது மக்கள் இராணுவத்திற்கு பயந்து பயந்தே கதைக்கவோ செயற்படவோ வேண்டியிருக்கின்றது. அல்லது அவர்களிடம் அனுமதி வேண்டி காத்திருக்க வேண்டியிருக்கின்றது. சில செயற்பாடுகளுக்கு வேலைத்திட்டங்களுக்கு அனுமதி கிடைக்குமா என்பதும் கேள்விக்குறி.

இராணுவத்துடனான முரண்பாட்டை தவிர்ப்பதற்காகவும் என்னை அழைத்து வந்தவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு படங்கள் எடுப்பதையும் பலருடன் உரையாடுவதையும் தவிர்த்தேன்.

இந்தப் பிரதேசங்கள் முழுவதும் ஒரு: அமைதி நிலவுகின்றது. இந்த அமைதி மாயான அமைதியாகவே இருக்கின்றது. இங்கு வீசுகின்ற காற்று உடலில் பட்டபோது, முள்ளிவாய்க்கால் ஒரு முடிவில்லா பயணமா என்ற கேள்வியை தாங்கி செல்வது போன்று உணரக்கூடியதாக இருந்தது. மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை தவிர்க்க வேண்டுமாயின் அரசியல் செயற்பாட்டாளர்களும் மக்களும் இணைந்தும் ஆரோக்கியமான முன்நோக்கிய அரசியலை முன்னெடுப்பதைத் தவிரவேறு வழியில்லை.

மீராபாரதி

பங்குனி 2014

நன்றி உரையாடல் 2

படம் நன்றி சயந்தன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: