Posted by: மீராபாரதி | November 7, 2014

தாய் வீடு – நாடக அரங்கு – ஒரு கோவப் பார்வை

தாய் வீடு – நாடக அரங்கு – ஒரு கோவப் பார்வை
dramaஅரங்கு என்பது ஒரு அழகியல் அனுபவம். படிப்பினை. நம்மை நாமே பார்க்கும் நிலைக் காண்ணாடி. நமது சிந்தனைகளின் எல்லைகளை கேள்விக்கு உட்படுத்தும் ஒரு விவாதக் களம். புதிய உலகுக்கான, சமூகத்திற்கான, கலாசாரத்திற்கான, பண்பாட்டிற்கான, சுய மாற்றத்திற்கான, வளர்ச்சிக்கான ஒரு பரிசோதனை முயற்சி. ஆனால் ஒரு பிரச்சார மேடையல்ல. மாறாக கலைத்துவமான படைப்பாற்றலினுடாக வெளிப்படுத்துவது. இதுவே ஒரு அரங்கு தொடர்பான எனது எதிர்பார்ப்பும் புரிதலும்.

2000ம் ஆண்டிற்குப் பின் அரசியலில் மட்டுமல்ல இவ்வாறன அரங்க நிகழ்வுகளைப் பார்ப்பதிலிருந்தும் ஒதுங்கியிருந்தேன்.ஏனெனில் எவ்வாறு அரசியல் செயற்பாட்டில் இருந்தவர்களுக்கு தன்முனைப்பும் மனிதர்களைக் கையாளுவதும் கோட்பாட்டின்மையும் நட்பு முரண்பாடுகளையும் பகை முரண்பாடுகளாக உருவாக்குவதற்கு வழியேற்படுத்துகின்றதோ அவ்வாறே அரங்க முயற்சிகளில் ஈடுபடுகின்றவர்களிடமும் காணப்பட்டன. இன்றும் அவ்வாறே இருக்கின்றன. இதன் விளைவுதான் கனடாவில் குறிப்பாக ரொரன்டோ நகரில் ஒரு அரங்கக் குழுவிலிருந்து பல அரங்கக் குழுக்கள் உருவானமைக்கான ஒரு காரணம் எனலாம். மேலும் நெறியாள்கை செய்பவர்களும் நடிப்பவர்களும் நமக்கு எல்லாம் தெரியும் நாம் சரியான பாதையில் தான் செல்கின்றோம். நாம் அரங்கேற்றுவது பார்வையாளர்களை மகிழ்விக்கவும் அவர்களுக்கு அறிவூட்டவும் அவர்களை மாற்றவும் மட்டும் தான் என நினைத்தால் அது அடிப்படைத் தவறு. ஆனால் இவ்வாறுதான் பலர் உணர்கின்றார்கள் என்பதை காணக் கிடைக்கின்றது. உண்மையிலையே அரங்கு என்பது ஒரு கூட்டு முயற்சியும் அதனுடான கற்றலுடன் சுய மாற்றத்திற்கும் சமூக மாற்றத்திற்குமான பாதையாகும். ஆனால் அவ்வாறான ஒரு நோக்கத்தில் அரங்க செயற்பாட்டாளர்கள் செயற்படுவதில்லை. ஆகவேதான் நீண்ட காலமாக “அரங்கு: தனிமனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்தை நோக்கி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதவேண்டும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் அதற்கான தருணம் இன்னும் வரவில்லை.

2008ம் ஆண்டின் பின் ஒதிங்கியிருந்தலிருந்து விடுபட்டு மீள அனைத்திலும் பங்குகொள்ள முயன்றேன். ரொன்டோவில் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் எல்லாவற்றுக்கும் போவதில்லை. நேரமின்மை ஒரு பக்கம் இருந்தாலும் பிரச்சார அரங்குகளுக்கும் சமூகத்தில் நிலவும் ஆதிக்க கருத்துகளை மீள மீளக் கூறி பார்வையாளர்களிடம் வேரூண்ட முயற்சிக்கும் அரங்குகளுக்கும் போவதில் ஆர்வமில்லை. இது எனது தெரிவு. அதற்கான உரிமை எனக்கு உள்ளது. அந்தவகையில் பல ஆண்டுகள் அனுபவமும் ஆற்றலும் உள்ள நம்பிக்கையான நெறியாளர்களும் நடிகர்களும் பங்குபற்றுகின்ற தாய்வீடு நாடாத்திய அரங்கியல் விழாவிற்குச் சென்றேன். இந்த நிகழ்வு தொடர்பான நேர்மறையான அம்சங்களையும் பாராட்டுக்களையும் புகழ்ச்சிகளையும் மற்றும் விமர்சனங்களையும் ப.சிறிஸ்கந்தனும் எஸ்.கே.விக்கினேஸ்வரனும் கார்த்திகை மாத தாய்வீடு சஞ்சிகையில் எழுதியுள்ளனர். இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்வைவே பார்த்துள்ளனர். இந்த நிகழ்வானது சனிக் கிழமை நிகழ்ந்த இரு நிகழ்வுகளையும் விட பல்வேறு திருத்தங்களை செய்து மேம்பட்டதாக இருக்கலாம். ஆகவே இவர்கள் எழுதிய சில விடயங்களை மீளக் கூறுவதை தவிர்த்து எனது விமர்சனங்களையும் கலைஞர்களின் ஆளுமைகளையும் அவர்கள் மீதான எனது மதிப்பை மட்டுமே இங்கு பதிவு செய்கின்றேன். வெறுமனே விமர்சனத்தை மட்டும் எழுதலாம். அவ்வாறு எழுதினால் நான் ஏதோ தனிப்பட்ட தாக்குதல்கள் செய்வதாக பலர் நினைத்துவிடலாம். ஆகவே எனது மன உணர்வுகளைப் பதிவு செய்கின்றேன்.darama

அரங்கிற்கு நூழைவதற்கான அனுமதிச் சீட்டை வாங்குவதிலிருந்தே ஒரு அரங்குடனான எமது அனுபவம் ஆரம்பிக்கின்றது. நான் இருபது டாலர்களை கொடுத்து இரண்டு அனுமதிச் சீட்டுக்களை கேட்டேன். ஒரு சீட்டு மட்டுமே தந்தார். எனக்கு இரண்டு சீட்டுக்கள் வேண்டும் எனக் கேட்க நூழைவுக் கட்டணம் ஒருவருக்கு 20 டாலர்கள் என்றார். எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வாறு பலருக்கும் இருந்ததை உள்ளே சென்று உரையாடியபோது உணரக் கூடியதாக இருந்தது. ஏனெனில் வழமையாக பத்து (அல்லது பதினைந்து) டாலர்கள் மட்டுமே அறவிடுவார்கள். அதேவேளை அனுமதிச் சீட்டின் விலையை தமது விளம்பரங்கள் எங்கேயும் குறிப்பிடாமல் விட்டதும் தவறு என பலரும் அபிப்பிராயப்பட்டார்கள். இருப்பினும் நாடகம் பார்க்கும் ஆர்வத்தினால் முரண்படாமல் தவிர்க்க முடியாது வாங்கவேண்டி இருந்தது. ஆனால் இது ஒரு தவறான ஒரு முன்னுதாரணமாகும். ஏனெனில் இவ்வாறான நிகழ்வுகளை செய்பவர்கள் இனிமேல் 20 டாலர்களே அனுமதிச் சீட்டுக்கு அறவிடுவது வழமையாகிவிடும். (தயவு செய்து அவ்வாறு விலையை உயர்த்தாதீர்கள் என சக நாடகக் குழுக்களிடம் வேண்டுகின்றேன்).இவ்வாறான ஒரு எதிர்மறை அனுவபத்துடன் அரங்கினுள் ஆர்வமாக சென்றோம்.

காலம் செல்வம் அவர்கள் நடைபெறவிருக்கும் நாடகங்கள் தொடர்பான ஒரு உரையை நிகழ்த்தினார். செல்வம் அவர்களின் இலக்கிய பேச்சு கேட்பதற்கு எனக்குத் தனிப்பட மிகவும் விருப்பமும் ஆர்வமும் உள்ளது. மிகவும் சுவாரசியமாகவும் பல அனுபவங்களையும் மற்றும் தான் வாசித்த பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தும் எடுத்து கோர்த்து உரையாற்றுவார். ஆனால் இந்த அரங்கில் அவர் ஆற்றிய உரை சுவாரசியமில்லாது இருந்தது. மிகவும் தொய்வானதொரு மனநிலையில் உரையாற்றியது போலத் தோன்றியது… ஒரு அரங்கின் ஆரம்பம் இவ்வாறு இருக்கக் கூடாது. நாம் அரங்கினுள் நூழைந்த உடன் புதிய ஒரு உலகத்திற்கு அரங்கத்திற்கு வந்தவர்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஏனெனில் அரங்கிற்குள் நூழைந்தவுடன் நாம் வெறும் பார்வையாளர்கள் அல்ல. நாமும் பங்காளர்களே. நாமும் இணைந்ததே ஒரு அரங்கு. ஆனால் செல்வம் அவர்கள் இவ்வாறான ஒரு உரையின் மூலம் நாம் அரங்குக்குள் நூழைவதைத் தடுத்தார். மன்னிக்க வேண்டும் செல்வம். இது உங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் அல்ல. நீங்கள் அன்று எனது கட்டுரை ஒன்று தொடர்பாக வாசலில் கண்ட போது புகழ்ந்தீர்கள். அந்தப் பாராட்டுக்காக இந்த விமர்சனத்தை தவிர்த்தால் நான் நேர்மையற்றவன் மட்டுமல்ல தவறிழைத்தவனுமாவேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

தடைகளைக் கடந்து செல்வது தானே வாழ்க்கை. முதலாவது நாடகம் ஞானம் இலம்பேட் நெறியாள்கை செய்ய திலீப்குமார் நடித்த “காத்திருப்பும் அகவிழிப்பும்”. இவர்கள் இருவரும் இருபதாண்டுகளுக்கு மேல் அரங்க அனுபவம் உள்ளவர்கள். ஞானம் இலம்பேட் சிறந்த நெறியாளர். திலீப்குமார் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல பத்திரிகையாளர் மற்றும் மரங்களில் சிற்பங்களை மிக அழகாக செதுக்குபவர் என பன்முக ஆற்றல்களைக் கொண்டவர். எனக்கு மிகவும் பிடித்தமானவர். மேலும் தனது குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புக்கு மத்தியிலும் இந்த நிகழ்வை நடாத்தியது மட்டுமல்ல தனி ஒருவராக நடித்ததையும் பாராட்டலாம்.

இந்த நாடகத்தில் நாய் ஒன்று மேடையின் இடப்புற மூலையில் குரைப்பதுபோல் ஒழுங்கு செய்திருப்பார்கள். ஆனால் நாய் குரைக்கும் சத்தம் மேடைக்கு வெளியே வலப்புறத்திலிருந்து வந்தது. இது அரங்கத்திற்குள் இருப்பவர்களின் பார்வையைக் குழப்பியது. சத்தமும் நாய் இருக்கும் இடத்திலிருந்து வந்திருந்தால் நன்றாகவும் தாக்கம் நிறைந்ததாகவும் இருந்திருக்கும். நண்பர் ஒருவர் கூறியதுபோல் இந் நாடகம் ஒரு தத்துவ விசாரணை. ஆனால் நம் அகம் விழிக்கவில்லை. ஆகக் குறைந்தது நெறியாள்கை செய்தவரதும் நடித்தவரதும் அகம் விழித்திருந்தால் வெற்றி எனலாம். இருப்பினும் அகவிழிப்பு என்பது தொடர்ச்சியான உரையாடலுக்கும் விவாதத்திற்கும் உரியது. ஆகவே நாம் காத்திருக்க வேண்டி உள்ளது.

daramமுதல் நாடகம் முழுமையான திருப்தியாக இல்லாதபோதும் காத்தரமான ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தது. ஆகவே அடுத்துவரும் நாடகங்கள் ஏறுவரிசையில் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் தூரதிர்ஸ்டவசமாக இறங்கு வரிசையிலையே அனைத்தும் இருந்தன. தரமான நாடகங்களாக இருக்கவில்லை. இவற்றின் தரங்கள் இருபது வருடங்கள் பின்நோக்கி நகர்ந்ததாகவே இருந்தது. நடித்தவர்கள், நெறியாளர்கள், எழுதியவர்கள் அனைவரும் ஆற்றல் மிகுந்தவர்கள். ஆனால் இவ்வாறான ஒரு நிகழ்வை இவர்கள் தந்தது மிகவும் ஏமாற்றமாகவே இருந்தது. இது எனக்கு கோவத்தையும் ஏற்படுத்தியது.

இரண்டாவது நாடகம் “சுமை”. பொன்னையா விவேகானந்தன் நெறியாள்கை செய்திருந்தார். நன்றாக வந்திருக்க வேண்டிய நாடகம் ஆனால் தொய்வாக இருந்தது. வாழ்க்கையில் சுமை என்பது பலதரப்பட்டது. ஒருவர் ஒன்றை விருப்பமின்றி செய்கின்றபோது தான் ஏற்கவேண்டிய பொறுப்புகள் கடமைகள் சுமையாக இருக்கலாம். ஆனால் ஒருவர் ஒரு செயற்பாட்டை விரும்பி ஈடுபாட்டுடன் செய்யும் பொழுது அப் பொறுப்புகள் சுமையல்ல. சுகமானது. இப் புரிதலானது அகவிழிப்புடன் தொடர்புடையது. ஆனால் இந்த நாடகமானது ஒவ்வொருவரும் சமூகம் விதித்த சுமையைத் தூக்கத்தான் வேண்டும் எனக் கூறியது போல் இருந்தது. இதுவும் விவாதத்திற்கும் உரையாடலுக்கும் உரியது.

இந்த நாடகத்தில் இடையில் பல நடனங்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந் நடனங்களை ஆடியவர்கள் மிக நன்றாக செய்தனர். ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் இடையிடையே வருகின்ற தொடர்பில்லாத பாடல்காட்சிகள் போல இருந்தன. இவை நாடகத்துடன் பொருந்தாதது மட்டுமல்ல பெரும் இடைஞ்சலாக இருந்தது. பலர் கூறியதுபோல இந்த நடனத்தை தனி ஒரு நிகழ்வாக அரங்கேற்றியிருக்கலாம். மேலும் நாடகங்களில் பயிற்சி இன்மை தெரிகின்றது. உதவி வாசிப்பாளரின் ஒலி நடிப்பவரின் ஒலியை மேவி வந்து அரங்கில் இருப்பவர்களுக்கு கேட்கின்றது. இவற்றைவிட சர்வதேச அடையாளத்தைக் காட்டுவதற்காகவோ என்னவோ ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் வேறு வேறு நாட்டிடை உடைகள் அணிந்திருந்தார்கள். இதுவும் நாடகத்துடன் பொருந்தவில்லை. இவ்வாறான ஒரு எதிர்மறை அனுபவத்தைப் பெற்று கே.கே. ராஜாவின் அடுத்த நாடகத்திற்காக இடைவேளையின் பின்பு காத்திருந்தேன்.

மூன்றாவது நாடகம் யமுனா ராஜேந்திரன் எழுதிய “தீவு”. இதை கே.கே ராஜா நெறியாள்கை செய்து பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். யமுனா நல்ல மனிதர் நண்பர். நன்றாக உபசரிக்கவும் உதவி செய்யவும் தெரிந்தவர். எனது மரணம் இழப்பு மலர்தல் நூலுக்கு சிறப்பாகவும் அதன் நோக்கத்தை சரியாகவும் அறிமுகம் செய்தவர். அதேபோல் ராஜாவும் நல்ல மனிதர். நண்பர். பல ஆண்டுகள் அனுபவமுள்ள ஆற்றலுள்ள நடிகர். ஓவியப்படைப்பாளி. சிறந்த புகைப்படக் கலைஞர். என்னை முதன் முதலாக அழகாக படம் எடுத்த புகைப்படக் கலைஞர். இவ்வாறன உங்களது ஆற்றல்கள் மீது நிறைய மதிப்புகள் உண்டு. இருப்பினும் மன்னிக்க வேண்டும் உங்கள் நாடகம் ஏமாற்றத்தையே தந்தது. இது ஆணாதிக்க பார்வையில் எழுதப்பட்ட நெறியாள்கை செய்யப்பட்ட ஒரு நாடகம். பெண்களை மிகவும் கொச்சப்படுத்தியது மட்டுமல்ல அவர்களுக்கு எதிரான ஒரு நாடகம்.

ஒருவர் குழந்தை பெறுவதா இல்லையா என்பது ஒருவரின் தெரிவு. சிலருக்கு இது ஒரு அரசியல் முடிவு கூட. இவ்வாறான தெரிவை, முடிவை எடுப்பவர் ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால் இந்த நாடகத்தில் ஒரு பெண் தான் ஏன் குழந்தை பெறவில்லை என்பதற்கு வலுவில்லாத ஆழமில்லாத மலிவான காரணங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் சமூகத்தில் நடைபெறுவதுபோல ஆணாதிக்க கருத்துக்கள் நிறைந்த காரணங்களை ஒரு பெண்ணினுடாகவே கூறினர். இதன் மூலம் குழந்தை பெறாத ஒருவரின் தெரிவை மலினப்படுத்திவிட்டார்கள். இன்னுமொரு படிமேல் சென்று தமிழ் பெண்கள் அறிவில்லாதவர்களாகவும்.. ஆற்றலில்லாதவர்களாகவும் சுயநல சிந்தனையை மட்டும் வெளிப்படுத்துகின்றவர்களாகவும் காட்டினர். ஆனால் வெள்ளைப் பெண்களை அறிவாளிகளாக ஆற்றலுள்ளவர்களாக காட்டினர். இது தவறான ஒரு பார்வை மட்டுமல்ல இன்னும் காலனித்துவ சிந்தனைகளின் எச்சங்களை நாம் சுமந்து செல்கின்றோம் என்பதற்கு உதாரணமாகும். இவ்வாறு நாடகம் முழுக்க பெண்களுக்கு எதிரானதாகவே இருந்தமை கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியது.

இப் பெண் பாத்திரத்தில் நடித்தவர் பவானி அவர்கள். இவருக்கும் நீண்ட கால அரங்க அனுபவம் உண்டு. கனேடிய ரொரொன்டோ தமிழ் நாடக சூழலில் தொடர்ந்து இயங்கி வருபவர். சிறந்த நடிகை. இப் பாத்திரத்திலும் சிறப்பாகவே நடித்திருந்தார். இந்த நாடகத்தில் நடைபெற்றவை சமூகத்தில் சதாரணமாக நடப்பவைதான். ஆனால் ஒரு படைப்பு என வரும் பொழுது ஒரு சம்பவத்தைப் பொதுமைப்படுத்துவது சரியானதல்ல. குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பின்னால் இருக்கின்ற சமூக காரணங்களை ஆராய வேண்டும். குறிப்பாக பால் பாலியல் பெண் மற்றும் சாதி இனம் மதம் போன்றவற்றால் அடக்கப்படுகின்றவர்களை பற்றிய அக்கறை வேண்டும். அதுவும் இவ்வாறானவர்களை எதிர்மறை பாத்திரமாக வடிக்கும் பொழுது நிறைய பொறுப்புணர்வும் அவசியமாகின்றது. ஆனால் அந்த அக்கறையும் பொறுப்பும் இல்லாமலே இப் பிரதி எழுதப்பட்டிருக்கின்றது. நெறியாள்கை செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த நாடகத்தின் இரு பாத்திரங்களையும் ஆற்றலும் ஆளுமையும் உள்ள பாத்திரங்களாக வடிவமைத்து தமது சிந்தனைகளின் எல்லைகளை கேள்விக்கு உட்படுத்தி இருக்க முடியும். சிறந்த விவாத உரையாடலுக்கான களத்தை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் பொறுப்பற்ற விதமாக எழுதப்பட்டும் நெறியாள்கை செய்யப்பட்டமையினால் ஆணாதிக்க சிந்தனை உடைய, பெண்களுக்கு எதிரானதொரு நாடகமாக நிறைவு பெற்றமை தூர்ப்பாக்கியமானது. மேலும் நவீன தொழில் நூட்பங்களை பயன்படுத்தியதாக குறிப்பிடுகின்றார்கள். இவை இந்த நாடகத்துடன் பொருந்தாதது மட்டுமல்ல எதிர்மறையான தாக்கத்தையே கொடுத்தது. இந்த நாடகத்தை எழுதியது யமுனா என அறிந்தபோது, நெறியாள்கை செய்தது ராஜா என உணர்ந்தபோது, இதில் நடித்தவர்கள் பங்குபற்றியவர்கள் ஒரளவாவது அரசியல் பெண்ணிநிலைவாதக் கருத்துக்களுடன் பரிச்சயமானவர்கள் எனக் கண்டபோது ஆச்சரியமே ஏற்பட்டது. இவ்வாறன ஒரு கதையை எவ்வாறு நாடகமாக்கினார்கள்? நடிகர்கள் எவ்வாறு நடிக்க ஒப்புக் கொண்டார்கள். பங்களிக்க உடன்பட்டார்கள். என்பது கேள்விகளாகவே இருக்கின்றன.

இந்த நாடகங்களில் நடித்தவர்கள் பங்குபற்றியவர்கள்…எழுதியவர்கள் அனைவரும் நாம் அறிந்தவர்கள்.. நமது நண்பர்கள்.. ஆகவே இவர்கள் மீதான இந்த விமர்சனத்தை தனிப்பட்ட தாக்குதல்களாகப் பார்க்காதீர்கள். இப்படி ஒரு நிகழ்வை பார்த்ததினால் ஏற்பட்ட கவலை கோவம் என்பவற்றின் விளைவே இப் பதிவு. பலர் நட்பில் உறவில் முறிவு ஏற்பட்டு விடும் என்பதற்காகவே இவ்வாறு விமர்சனங்களை முன்வைக்க தயங்குவதற்கான காரணமாகும். ஆனால் நான் முன்வைப்பது நமது சமூகத்தின் மீதான அக்கறையினாலும் பங்குபற்றிய நண்பர்கள் மீதான மதிப்பினாலுமே என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன். மனிதர்களின் பின்னால் கதைப்பதை நான் விரும்புவதில்லை. நேரடியாகவே விமர்சனங்களை வைக்க விரும்புகின்றவர். இருப்பினும் பொதுவெளியில் முன்வைக்க விரும்பவில்லை. ஆனால் யமுனாவும் ராஜாவும் பொதுவெளியில் விவாதிக்க விரும்புகின்றோம் என முகநூலில் யாமுனா பதிவிட்டதால் நானும் பொதுவில் பதிவிடுகின்றேன்.

எனது பதிவின் நோக்கம் நாடகத்தில் பங்குபற்றியவர்களை நோகடிப்பதல்ல. இதில் பங்குபற்றியவர்கள் ஒருவரும் எனக்கு எதிரிகளுமல்ல. மாறாக நான் நட்புறவு கொண்டாடுபவர்களே. ஆகவே நான் உணர்ந்ததை தயக்கமின்றி எழுதுகின்றேன். எனது கருத்து பங்குபற்றியவர்களை இழுத்துவிழுத்தாமல் நோகடிக்காமல் அடுத்த நிகழ்வை சிறப்பாக செய்வதற்கான ஒரு படிப்பினையாக அனைவருக்கும் இருந்தால் மகிழ்வேன். அவ்வாறு இருப்பதற்கு இவ்வாறான ஒரு விமர்சனம் குறிப்பு அவசியமானது என்றே நினைக்கின்றேன்.

இவ்வாறான கலை அரங்க நிகழ்வுகளை செய்கின்றவர்கள் ஒவ்வொருவரும் தமது நேரங்களை ஒதுக்கி பெரும் உழைப்பைச் செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. பல கஸ்டங்கள் பொறுப்புக்கள் மத்தியில் இதைச் செய்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றேன். அதற்காக தரமில்லாத பிற்போக்கான கருத்துக்களை கொண்ட நாடகங்களை நாம் பார்க்க வேண்டும் என்ற தேவையில்லையே. இவர்களைத் தவிர இவ்வாறு உழைப்பை செலுத்துகின்ற பல கலை நிகழ்வுகள் வருடந்தோறும் பல்வேறு குழுவினரால் ரொரன்டோவில் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாறான எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் செல்வதில்லை. எங்களுக்கும் தெரிவுகள் உண்டு. நாமும் நமது நேரத்தையும் பணத்தையும் நாம் தெரிவு செய்கின்ற நிகழ்வுகளுக்கு ஒதுக்கித்தான் நமது பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கி அதன் பயனையும் பெற முயற்சிக்கின்றோம். அந்தவகையில் எனக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். என் தேடல்களுக்கு எதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். புதிதாக ஒன்றைக் கற்றோம் என்ற திருப்பதி இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு நம்பிக்கையின் அடிப்படையில்தான் இவ்வாறான நிகழ்வுகளுக்கு நான் செல்கின்றேன். ஆகவே பல்வேறுபட்ட காரணங்கைளயும் இவர்களது அர்ப்பணிப்புகளையும் கூறி இந் நிகழ்வின் தரமின்மையையும் தவறான கருத்துக்களையும் நியாயப்படுத்த முடியாது.

ஒருவர் எவ்வளவு அதிகமான உழைப்பை ஒரு படைப்புக்கு கொடுத்தாலும் அதற்குடாக என்ன சொல்கின்றார் எப்படி சொல்கின்றார் என்பதே நமது அக்கறைக்கு உரிய விடயமாகும். அல்லது ஒவ்வொருவரும் தாம் வழங்கிய உழைப்பைக் காரணம் காட்டி தமது படைப்பை நியாயப்படுத்தலாம் அல்லவா. உதாரணமாக திரைப்படங்களில் ரவிக்குமார், சங்கர், பாலா, லெனின் சிவம் போன்ற இயக்குனர்கள் ஒவ்வொருவரும் பெரும் உழைப்பை வழங்குபவர்கள். இவர்கள் வழங்கும் உழைப்புக்கு அப்பாலும் நாம் இவர்களிடம் ஒன்றை எதிர்பார்க்கின்றோம் அல்லவா. அதுதான் இவர்களுக்கான வேறுபாடும் அவர்களின் தரமும். அல்லது போனால் ரஜனி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களுக்கும் மகேந்திரன், பாலுமகேந்திரா, அடூர் கோபாலகிஸ்ணன், மிர்னால் சென், சத்தியஜித்ரே போன்றவர்களின் திரைப்படைப்புகளுக்கு வித்தியாசம் இருக்காது. அனைவரும் பெரும் உழைப்பை வழங்குகின்றார்கள். ஆனால் மிகப் பெரும் வேறுபாடு படைப்புகளில் காணப்படுகின்றது. ஏன்?

இந்த நாடகங்களை இயக்கிய, நடித்த பல நெறியாளர்கள் நடிகர்கள் தொடர்பாக எனக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. இப்பொழுதும் இருக்கின்றது. ஆனால் என் எதிர்பார்ப்புகள் எதுவும் இந்த நிகழ்வில் நிறைவேறவில்லை. நிகழ்வு முடிந்தவுடன் விரக்தி நம்பிக்கையீனம் சோர்வு கோவம் போன்ற உணர்வுகளே இருந்தன. பின் நண்பர்களுடன் உரையாடியபோது அவர்களுக்கும் அப்படியே இருந்தமை எனது உணர்வு புரிதல் உண்மையானது நியாயமானது எனத் தோன்றியது.

இந்த நாடகங்களில் இரண்டு விதமான விமர்சனங்கள் உள்ளது…
முதலாவது அரங்க அளிக்கையின் தரம் தொடர்பானது. இதுவரை ரொரன்டோவில் மேடையேறிய நான் பார்த்த நாடகங்கள் இதைவிட தரமானவை எனக் கூறலாம். சில நண்பர்கள் பெரும்பாலானவை தரமானவை என்றனர். அதற்கு ஒரு வளர்ச்சி இருக்கின்றது. அந்தளவிற்காவது இந்த நாடகங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கவில்லையே.
இரண்டாவது கருத்தியல் அடிப்படையிலானது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான கருத்துக்களையும் ஆண் மையப் பார்வையைக் கொண்டதாகவும் இருந்தன. ஆகவேதான் இவற்றின் மீதான விமர்சனங்கள் அவர்களின் உழைப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கும் அப்பால் முக்கியமானவை. தீவு நாடகம் பெண்களுக்கு எதிரானதாக இருந்தது என்பதற்காகவே பலர் மெளனமாகவும் இருக்கின்றனர். இதற்குமாறாக சாதிய இனவாதக் கருத்துக்களை அல்லது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தால் பலர் என்னைவிட வேகமாக கொதித்து எழும்பியிருப்பார்கள் என நினைக்கின்றேன்.

இந் நிகழ்வு தாய் வீட்டின் முதலாவது அரங்க நிகழ்வாக இருந்தமை நாடகங்கள் தரமற்று இருந்தமைக்கு காரணம் அல்ல. ஏனெனில் இந்த நிகழ்வில் பங்குற்றியவர்கள் அணைவருக்கும் 20 வருடங்களுக்கு மேலாக ரொன்டோ தமிழ் நாடகங்களில் பங்காற்றிய வரலாறும் அனுபவமும் உள்ளது. இவர்கள் அனைவரும் ஆரம்பத்தில் ஒரு நாடக குழுவாக இயங்கி இன்று தனித்தனியாக நாடகம் செய்பவர்கள். அப்படி இருக்கும் பொழுது இவ்வாறான ஒரு நிகழ்வை தந்தமை ஏமாற்றமே. முதலாவது அரங்க நிகழ்வு என்பது இவர்களுக்குப் பொருந்தாது.

நான் எந்த ஒரு குழுவிலும் இல்லை. எந்த ஒரு குழுவினருடனான அடையாளமும் எனக்கு இல்லை. அதேவேளை எந்த ஒரு அரங்க குழு எனது பங்களிப்பை கேட்டாலும் மறுக்காமல் செய்வேன். செய்கின்றேன். ஆகவே எனது விமர்சனமானது இவர்களும் எனது நண்பர்கள் என்றடிப்படையிலையே முன்வைக்கப்பட்டது.

எனது விமர்சனம் மேலோட்டமானது எனவும் இன்னும் காறாராக வைத்திருக்க வேண்டும் எனவும் சொல்பவர்கள் உண்டு. எனது சுட்டிக்காட்டல் இவர்களது படைப்புகள் மேலும் நன்றாக வரவேண்டும் என்பதுவும் ஆனால் இந்த நிகழ்வு மிகவும் ஏமாற்றமானது என்பதை குறிப்பது மட்டுமே. மற்றும் படி நண்பர்களுடன் பகை உணர்வைத் தவிர்ப்பதில் அக்கறையாக இருக்கின்றேன். ஆகவேதான் அவர்களுடைய ஆற்றல்கள் எதனையும் மறுக்கவில்லை.

அன்றும் இன்றும் விமர்சனங்கள் பெரும்பாலும் தனிநபர் மீதான தாக்குதல்களாக விரோத மனப்பான்மையிலையே பார்க்கப்படுகின்றன. அதிலும் ஆண்கள் நிகழ்த்தும் நிகழ்வுகள் தொடர்பாக பெண்கள் விமர்சனம் முன்வைத்தால் அதற்கான மதிப்பே வேறு. இவ்வாறான சூழ்நிலையில் நாம் பெண்ணிநிலைவாத ஆண்களாக எமது விமர்சனங்களை கறாறாகவும் உறுதியாகவும் முன்வைக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன். இதில் நட்பையும் கருத்தியல் நிலைப்பாட்டையும் பிரித்து வைத்தே விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.

நட்புடன் ராஜா அவர்களுக்கு நீங்கள் இலன்டனிலிருந்து இங்கு வந்து அரங்கேற்றியதை வரவேற்கின்றோம். அத்துடன் நீண்ட காலத்திற்குப் பின்பு மேடையேறியதையும் வரவேற்கின்றோம். இங்கு இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உண்டு. இதை தடை செய்யவோ தடுப்பதற்கோ நமக்கு எந்த உரிமையும் இல்லை. அவ்வாறு செய்வது நமது கருத்துக்களுக்கும் புரிதல்களுக்கும் எதிரானது. ஆகவே நிகழ்வு தொடர்பாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் நீங்கள் தோற்றுப் போக வேண்டும் என்பதற்கானதல்ல. மாறாக மேலும் சிறப்பாகவும் சரியான கருத்தினடிப்படையிலும் உங்களிடமிருந்து படைப்புகள் வரவேண்டும் என்ற அக்கறையின் பாற்பட்டதே இந்த விமர்சனங்கள். அடுத்த முறை நீங்கள் வரவேண்டும். உங்களிடமிருந்து எல்லாவகையிலும் சிறந்த நாடகத்தை எதிர்பார்க்கின்றோம்.

எனது குரல் ரொன்டோவின் பல தமிழ் அரங்க ஆர்வலர்களின் குரல் என்றால் மிகையல்ல. பல காரணங்களால் பலர் அமைதியாக இருக்கின்றனர் என்பதை அறியக்கூடியதாக உள்ளது.

எனது கோவம் பொய்யல்ல…
எனது நேர்மை பொய்யல்ல..
எனது நட்பு பொய்யல்ல…
எனது அன்பு பொய்யல்ல
ஆனால்….
மீராபாரதி
06.11.2014

படங்கள் – நன்றி கே.கே.ராஜா மற்றும் தாய்வீடு

Advertisements

Responses

 1. Yamuna யமுனா எழுதிய பதில்…
  “மீரா பாரதிக்கு

  *பெண் எதிர்மறைப் பாத்திரமாகப் படைக்கப்பட்டது குறித்த கேள்வியிலிருந்து பெண்களுக்கும் பெண்நிலைவாதத்திற்கும் எதிரான பிரதியாக தீவு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. மீரா பாரதி மட்டுமல்ல இந்நாடகம் குறித்த விமர்சகர்களின் மையப் பிரச்சினையும் இதுதான். பெண்களை ஆக்கபூர்வமாகத்தான் படைக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மார்கரட் தாட்சர், கோல்டா மெயர், சந்திரிகா குமரணதுங்க, இமல்டா மார்க்கோஸ், இந்திரா காந்தி, அபுகாரிப் சித்திரவதையை முன்நின்று நடத்திய அமெரிக்க ராணுவப்பெண், பெரும்பாலுமான அரச படைகளில் செயல்படும் பெண்கள் என இவர்கள் அனைவருமே எனக்கு எதிர்மறைப் பெண்கள்தான். இலங்கை ராணுவத்தின் பாலியல் வல்லுறவு குறித்துப் பேசும்போதும் படையினரின் பாலியல் வறுமையைப் பரிவோடு பார்க்க வேண்டும் என்று ஒரு பெண்ணியவாதிதான் சொன்னார். இவர்களை ஆக்கபூர்வமாகப் பார்க்க என்னால் முடியாது.

  நாடகத்தில் அந்நியமாகும் கலைஞன், அவனது மணவாழ்வு, பொருளாதார நிறுவனங்கள், ஒழுக்க மரபு என அனைத்திலிருந்தும் அந்நியமாகியே இருக்கிறான். புகலிட நாடுகளில் நுகர்வுக்கு ஆளாகின, நுகர்வையே வாழ்வாகக் கருதுகிற ஒரு பெண்ணுக்கும், நுகர்வை வெறுக்கிற ஒரு கலைஞனுக்குமான உறவு வன்முறை நிறைந்ததாக ஆகிறது. குழந்தை பெற்றுக் கொள்வதும் குறிப்பிட்ட பெண்ணைப் பொறுத்து அவளது நுகர்வுக் கலாச்சார வாழ்வுக்கு எதிராக இருப்பதாலேயே அந்த முடிவை எடுக்கிறாள். துவக்கத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பான மனக்கிளர்ச்சி கொண்ட நம்பிக்கையை குறிப்பிட்ட பெண் கலைஞனுக்கு அளிக்கிறாள். அவளது நோக்கு அவளது நுகர்வுசார் பார்வையினால் மாற்றமடைகிறது. அவர்கள் இருவருக்குமான பதட்டத்தில் அந்தப் பிரச்சினை ஒரு சிறு கூறு. அவ்வளவே. இன்னும் அவளது நுகர்வுசார் பார்வையை அவள் நேர்மையாக முன்வைப்பதற்குப் பிரதியில் நிறைய இடம் தரப்பட்டிருக்கிறது. தீவு பிரதியின் கலைஞன், தமிழ்ப் பெண், பிரெஞ்சுப் பெண், தொலைக்காட்சி ஊடக முதலாளி, சாதி ஆதிக்கவாதிகள், நிறவெறியர்கள் என எத்தனையோ மனிதர்களை எதிர்கொள்கிறான். முழு சமூகத்திலிருந்தும் அவன் அந்நியமாகியே இருக்கிறான். ஏன் இதனை ஆண்பெண் பிரச்சினையாக மட்டுமே குறுக்கிப் பார்க்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை.

  திரைப்படத்திற்கும் நாடகத்திற்கும் உள்ள பொதுவான அம்சம் அதனது காட்சிப் புலம்தான். நாடகத்தில் நாங்கள் பிரெஞ்சுப் பெண் மற்றும் ஊடக முதலாளி போன்றவர்களுக்கும் பாத்திர வார்ப்புக்களோடு காட்சிகள் அமைக்கவே நினைத்தோம். நடைமுறைக் காரணங்களால் எம்மால் அது இயலவில்லை. அடுத்தடுத்த மேடையேற்றங்களில் அதனைச் சாத்தியப்படுத்த முயன்று கொண்டிருக்கிறோம். தமிழ்ப் பெண், மேற்கத்தியப் பெண் போன்ற குறுகிய பார்வைகள் எமக்கு இல்லை. கலைஞர்களுக்குரிய நாடோடி உணர்வு கொண்ட பெண் பாத்திரங்களை தமிழ் சமூகத்தை விடவும் மேற்கத்திய சமூகத்தில் நாம் அதிகம் காணமுடியும். மேலாக நவீன பெண்நிலைவாதத்தின் ஊற்று பிரெஞ்சு மண்ணாக இருக்கும் பொது எமது பெண் பாத்திரம் ஒன்றும் அவளாக இருப்பதில் தவறென்ன?

  இதற்கு மேல் நாடகப்பிரதி பற்றிச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. மீராவின் கட்டுரையில் எழுப்பப்பட்ட கனடியச் சூழல் பற்றிச் சொல்ல இயல்பாகவே என்னிடம் ஏதுமில்லை. நன்றி மீரா”
  Yamuna Rajendran நன்றி யமுனா


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: