Posted by: மீராபாரதி | October 15, 2014

சமவுரிமை இயக்கம்: மீண்டும் ஒரு தற்கொலை முயற்சியா?

சமவுரிமை இயக்கம்:

மீண்டும் ஒரு தற்கொலை முயற்சியா?

equal rightsகனடாவில் டொரன்டோ நகரில் சமவுரிமை இயக்கத்தில் முக்கியமானவர்களும் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்களும் பங்குபற்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டதிற்கு வழமையாக வருகின்றவர்களே வந்திருந்தார்கள். அதிலும் வழமையாக வருகின்ற முக்கியமான சிலரைக் காணமுடியவில்லை. “சமவுரிமைக்கான இயக்கம் எனக் கூறப்பட்டபோதும் ரொரன்டோவில் வாழ்கின்ற சிங்கள முஸ்லிம் நண்பர்களைக் காணமுடியவில்லை. மாறாக கருத்துரை வழங்குவோராக சிங்களவர்களும் தமிழர்களும் இருந்தனர். கேட்போராக தமிழர்கள் மட்டுமே இருந்தனர்” என ஒருவர் குறிப்பிட்டார். ஆகவே இக் கூட்டமே இவர்களது அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றது. அல்லது தமிழர்களை மட்டும் உள்வாங்கும் இவர்களது வேலைத் திட்டமோ இது என சந்தேகம் கொள்ள வைக்கின்றது. இருப்பினும் வீக்கிரமாதித்தன் கதைபோல மீண்டும் நம்பிக்கையுடன் செயற்பட ஆரம்பித்திருப்பவர்களை நேர்மறையாக பார்த்து அவர்களது கருத்துக்களை கொள்கைகளை கோட்பாடுகளை நாம் விமர்சிப்போம். இதை அவர்கள் புரிந்து கொண்டு நல்லது நடந்தால் நமக்கும் மகிழ்ச்சியே.

சில காரணங்களால் கூட்டத்திற்கு தாமதமாகவே போக முடிந்தது. இருப்பினும் அங்கு உரையாற்றிய சில முக்கியஸ்தர்களின் உரையையும் கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் மற்றும் வழங்கப்பட்ட சமவுரிமை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் கையேடும் அவர்களைப் புரிந்து கொள்வதற்கும் இப் பதிவை எழுதுவதற்கும் போதுமானதாகும். இவற்றின் தொகுப்பாகவே இப் பதிவு இருக்கின்றது. விரிவான உரையாடலுக்கு அவர்களின் விரிவான கொள்கை விளக்க நூல் உள்ளதாகவும் அதை தருவதாகவும் கூறினார்கள். அது கிடைத்தவுடன் மேலும் விரிவாக உரையாடலாம். ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற நமக்கு பழகிப் பழசாகிப் போன பழமொழிபோல இவர்கள் தந்த கொள்கை விளக்க கையேட்டில் உள்ளவையும் பழசாகிப் போன கருத்துக்களே. இவை இவர்களைப் புரிந்து கொள்வதற்குப் போதுமானதாகும்.equal rights1

இவர்களது கருத்துக்கள் தொடர்பாக ஏற்கனவே பல கேள்விகள் கேட்டு பலர் எழுதிய கட்டுரைகள் இணையத்தில் உள்ளன. இக் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு அனைவராலும் வாசிக்கப்பட்டதாக கூறியபோதும் அதனால் ஒரு பயனும் இல்லை என்றே தெரிகின்றது. ஏனெனில் இக் கட்டுரைகளில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு இவ்வளவு காலத்தின் பின்னரும் கூட பதில் கிடைக்கவில்லை. இதற்கு இவர்களை சுற்றியிருக்கும் வர்க்க சிந்தனை என்ற சுவர் மிகவும் தடிப்பானதாக இருக்கலாம். இச் சுவரை உடைத்து கொண்டு அவர்களது காதுகளை நமது கேள்விகள் அடையுமா என்பதும் அல்லது அவர்கள் அச் சுவரை உடைத்துக் கொண்டு நாம் கூறுவதைக் கேட்பதற்கு வருவார்களா என்பதும் சந்தேகமே. ஆகவே இக் கட்டுரையானது சமவுரிமை இயக்கம் மற்றும் முன்னிலை சோசலிச கட்சியுடனும் இணைய ஆர்வமாக இருக்கின்ற தமிழ் பேசும் அரசியல் ஆர்வலர்களுக்கான எச்சரிக்கை மணியாகவே எழுதப்படுகின்றது.

சமவுரிமை இயக்கத்தில் உள்ளவர்கள் உண்மையிலையே மாற்றம் ஒன்றை நோக்கி தம்மை அர்ப்பணித்து செயற்படுகின்றார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் வெறுமனே நல்ல மனிதர்களாக நல்ல இதயம் உள்ளவர்களாக இருப்பது மட்டும் தமது நோக்கத்தை அடைதவற்கு போதுமானதல்ல என்பதை இவர்கள் புரிந்து கொண்டவர்களாக இல்லை என்பது துர்ப்பாக்கியமானது. ஏனெனில் நல்ல மனிதர்களிடம் சரியான கருத்துக்களும் கோட்பாடுகளும் தெளிவான வேலைத் திட்டங்களும் இருக்கவேண்டும். இவர்களிடம் அவ்வாறு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் தாம் சரியான கோட்பாடுகளையும் கருத்துக்களையும் கொண்டிருப்பதாகவும் இனி செயற்பாடு மட்டுமே தேவை எனக் கூறினர். இவ்வாறான ஒரு நிலைப்பாடு சமவுரிமை இயக்கத்தின் (மீண்டும் ஒரு) தற்கொலை முயற்சி என்றால் மிகையல்ல. ஏனெனில் ஏற்கனவே 1970களின் ஆரம்பத்திலும் 1988களின் இறுதியிலும் இவ்வாறு முயற்சித்து தற்கொலை செய்து கொண்டனர். அதன் தொடர்ச்சியும் மிச்ச சொச்சமுமே இவர்கள். இம் முறை தமிழர்களையும் இணைத்துக் கொண்டு அல்லது இழுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சிக்கின்றார்கள் போல இருக்கின்றது. தமிழர்களுக்கு ஏற்கனவே ஏற்பட்ட இழப்புகள் போதும். கொஞ்சக் காலம் அவர்களை மூச்செடுக்க விடுங்கள். அவர்களாகவே தங்களது விடுதலைக்கான பாதையைக் கண்டுபிடிக்கும் மட்டும் பொறுத்திருங்கள்.

equal rights2இவர்களின் முயற்சி ஒரு தற்கொலை முயற்சி எனக் கூறுவதற்கு காரணம் உண்டு. உதாரணமாக அரைகுறை அணுகுண்டு விஞ்ஞானி ஒருவர் தன்னிடம் அணுகுண்டு தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களும் கருவிகளும் இருக்கின்றன எனக் கூறுகின்றார். இவற்றை இணைத்து அணுகுண்டை உருவாக்குவதற்கான விஞ்ஞான அறிவும் தன்னிடம் இருக்கின்றது என நம்புகின்றார். ஆனால் தன்னிடமிருக்கின்ற பொருட்கள் தொடர்பான ஆழமான அறிவு இவரிடம் இல்லை. அவற்றின் தன்மைகள் மற்றும் இயல்புகள் தொடர்பாக தெளிவில்லை. இவ்வாறான ஒரு நிலையில் அணு குண்டை உருவாக்கும் இவரது செயற்பாடானாது ஒரு தற்கொலை முயற்சியாகவே இருக்கும். இது இவரை மட்டும் அழிக்காது. இவரை நம்பி செல்கின்றவர்களையும் உலகத்தையும் அழிக்கவல்லது. இதேபோல் மக்கள் சக்தி என்பது அணுச் சக்தியைப் போல. எவ்வாறான தலைமையின் வழியில் செயற்படுகின்றதோ அதற்கு அமைய ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியமற்ற வழிகளில் பயன்படுத்தப்படலாம். ஆனால் சமவுரிமை இயக்கத்தினர் தெளிவில்லாத தலைமையின் வழிகாட்டலில் இவ்வாறான ஒரு தற்கொலை முயற்சியையே  முன்னெடுக்கின்றனர்.

முதலில் நாம் அனைவரும் மனிதர்கள் என இவர்கள் கூறுகின்றார்கள். ஆம் நாம் அனைவரும் மனிதர்கள் தான். இது பொதுப்படையான ஒரு உண்மை. ஆனால் இவ்வாறு தம்மையும் நம்மையும் இணைத்து மனிதர்களாக அடையாளப்படுத்துவதன் பின்னாலுள்ள அரசியல் அலசப்பட வேண்டிய ஒன்று. எமது நோக்கமும் விருப்பமும் கூட நாம் அனைவரும் மனிதர்களாக உணரும் ஒரு காலம் வரவேண்டும் என்பதே. ஆனால் இன்றைய யதார்த்த நிலை அதுவல்ல. இன்று மனிதர்கள் இனம், மதம், சாதி, நிறம், மொழி, பெண், பால், பாலியல் எனப் பல்வேறு வகைகளில் ஒடுக்கப்படுகின்றனர். இவ்வாறான ஒரு அல்லது பல ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்கின்ற ஒருவருக்கு தான் மனிதர் என்ற அடையாளம் என்பது முதன்மையானதல்ல. மாறாக தனது அடக்கப்படுகின்ற அடையாளமே முதன்மையானதாக இருக்கின்றது. ஒருவர் இந்த அடையாளங்களுடன் தன்னை அடையாளப்படுத்தா விட்டாலும் அவர் மீது இது பல வழிகளில் திணிக்கப்படுகின்றது. ஆனால் அடக்குகின்ற சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு தனது அடையாளம் அவ்வளவு முக்கியத்துவமானதல்ல. இவர் தான் விரும்புகின்ற அடையாளத்தை, அது ஏதுவாகவும் இருக்கலாம், எப்பொழுதும் எங்கேயும் வெளிப்படுத்தலாம். பயன்படுத்தலாம். விரும்பிய இடத்தில் வியாபாரம், உற்பத்தி செய்யவும், காணிகள் வாங்கக் கூடியவராகவும் இருக்கின்றார். அதற்கான அதிகாரம் மற்றும் உரிமை அவருக்கு இருக்கின்றது. ஆனால் அடக்கப்பட்டவருக்கு அப்படியல்ல. தனது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான சுந்திரம் உரிமை என்பன இல்லாதவராக அல்லது வெளிப்படுத்துவதற்கு பயம் மற்றும் தயக்கம் உள்ளவராகவே இருப்பார். இதை அடக்குமுறைக்கு முகம் கொடுப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் அடக்குமுறையை மேற்கொள்கின்றவர்களுக்கு புரியுமா என்பது கேள்விக்குறியே. ஆகவே இவ்வாறான ஒரு புரிதல் ச.உ.இயக்கத்திடம் இருக்கும் என எதிர்பார்ப்பது நமது அறியாமையே. இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன.equal rights5

முதலாவது மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு வகைகளில் அடக்கப்பட்ட மனிதர்கள் தொடர்பான தெளிவான ஒரு பார்வை இவர்களிடம் இல்லை. பன்முக அடக்குமுறைகள் தொடர்பான புதிய கோட்பாடுகளுடன் பரிச்சயமும் இல்லை. இரண்டாவது வர்க்க சிந்தனையே பிரதான சிந்தனையாக இவர்களைச் சுற்றிச் சிறைபிடித்திருக்கின்றது. இது மிக நீளமானதும் அகலமானதுமான சுவராக இவர்களைச் சுற்றி இருக்கின்றது. இந்த நிலையில் இவர்களது செயற்பாடுகள் எந்தவகையிலும் சமவுரிமைக்கான போராட்டத்திற்கு வலுசேர்க்காது. ஆகவே இவர்கள் சரியான பாதையில் பயணிக்க முடியாது என்றால் மிகையல்ல.

இவர்கள் இவ்வாறு சிந்திப்பதற்கு முதன்மையான காரணம் இன்னும் வர்க்க சிந்தனைக்கு அப்பால் சிந்திக்க முடியாமல் இருப்பதே. இவர்கள் இப்பொழுதும் வர்க்க முரண்பாடே பிரதானமானதும் முதன்மையானதும் முக்கியமானதும் எனக் கூறுகின்றார்கள். சக (இன, தேச, மத, பால், சாதி, மொழி) அடக்குமுறைகளும் சுரண்டல்களும் இதற்கு கீழ்ப்பட்டது என்கின்றார்கள். சக அடக்குமுறைகள் அந்தளவு முக்கியத்துவமற்றவையாக இவர்களுக்கு இருக்கின்றன. அதாவது இவர்களுக்கு வர்க்க முரண்பாடு தவர்த்து அனைத்து அடக்குமுறைகளும் தம்மளவில் முக்கியத்துவமானவையல்ல. இவ்வாறு இவர்கள் தீர்மானிப்பதும் மதிப்பிடுவதும் ஆபத்தானது. ஆகவேதான் வர்க்க முரண்பாடுகளுக்கும் சுரண்டல்களுக்கும் எதிரான போராட்டத்தை சரியான வழியில் முன்னெடுக்கும் பொழுது இவ்வாறான பிற அடக்குமுறைகளும் சுரண்டல்களும் இல்லாது போய்விடும் என்பதே இவர்களது நிலைப்பாடாக இருக்கின்றது. அதேவேளை தேசிய விடுதலைப் போராட்டம் என்பதை ஒரு இனவாதப் போராட்டமாக, முதலாளித்துவ சக்திகளின் போராட்டமாக, அவர்களின் சதியாக பார்க்கின்ற நூறு ஆண்டுகள் பழமையான சிந்தனைப் போக்கே இன்னும் இவர்களிடம் இருக்கின்றது. ஆகவே சிங்கள பௌத்த பேரினவாத அரசால் அடக்கி ஒடுக்கப்படுகின்ற தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இவர்களால் புரிந்து கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே.

equal rights3இவர்கள் கையளித்த கையேடு என்பது தமிழர்களைத் திருப்தி செய்வதற்கான ஒரு கையேடாகவே இருக்கின்றது. இதில் இருக்கின்ற திட்டங்களும் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில்தான் இருக்கின்றன. பௌத்த மதத்திற்கு அரசியல் அமைப்பிலும் நாட்டிலும் வழங்கப்படும் விசேச அந்தஸ்து பற்றிய கேள்வி இவர்களிடம் இல்லை. அனைத்து (வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு) சிங்கள மக்களுக்கு தாம் சிங்களவர்களாக இருப்பதால் கிடைக்கின்ற சலுகைகள் அதிகாரங்கள் மேலாதிக்க சிந்தனைகள் தொடர்பான கேள்விகள் இவர்களிடம் இல்லை. இவை தொடர்பாக சிங்கள மக்களை அறிவூட்டும் திட்டங்களும் இல்லை. அதாவது சிங்கள மக்களிடம் இருக்கின்ற இனவாதத்தை அகற்றுவதற்கான எந்த வேலைத்திட்டமும் கருத்துக்களும் இவர்களிடம் இல்லை. இவர்களது கையேட்டிலும் இல்லை. ஆகவே இவர்களிடம் தமிழ் மக்களுக்கு எதிரான அதாவது தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட அடக்குமுறைகள் இன அழிப்புகள் தொடர்பான எந்தவிதமான சிந்தனைகளும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமானதல்ல. இந்த நிலையில் சமவுரிமையை இவர்களிடம் எவ்வாறு எதிர்பார்ப்பது?

இலங்கையின் பல்வேறு சமூகங்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் சுரண்டல்கள் தொடர்பான தெளிவான ஆழமான விரிவான பார்வைகள் இவர்களிடம் இல்லை. ஆகவே இவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்ற மனிதர்களை, மக்களை ஒன்றினைக்கும் சாத்தியமில்லை. இந்த நிலையில் இவர்கள் எவ்வாறு சரியான அரசியல் பாதையில் பயணம் செய்வார்கள். ஆகவே இவர்களது செயற்பாடு மீண்டும் ஒரு தற்கொலை முயற்சியே என்றால் மிகையல்ல.equal rights4

நாம் அனைவரும் மனிதர்கள். ஆகவே மனிதர்கள் அனைவருக்கும் இலங்கையின் எந்தப் பாகத்திலும் சென்று வாழ்வதற்கும் உழைப்பதற்கும் விவசாயம் செய்வதற்கும் காணிகள் வாங்குவதற்குமான உரிமை உள்ளது என்கின்றார்கள். இந்த சிந்தனையையே சிறிலங்கா அரசானது காலம் காலமாக பின்பற்றி வருகின்றது. இது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு சரியானது போலத் தோன்றலாம். ஆனால் இலங்கை போன்ற ஒரு நாட்டில் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலமைப்பு அதிகாரத்தில் இருக்கின்றபோது இவ்வாறான ஒரு சிந்தனை பொருத்தமானதுமல்ல சரியானதுமல்ல. சிங்கள பௌத்தர்களுக்கு அதிகாரம் அதிகமாக இருக்கின்ற சூழ்நிலையில் சக இனங்களிடம் அதிகாரம் இல்லாத நிலை மட்டுமல்ல அடக்கவும்படுகின்றனர். இந் நிலையில் இவ்வாறான ஒரு கருத்து யாருக்கு சாதகமானது என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்றாக விளங்கும். ஆனால் மு.சோ.கட்சிக்கும் அதன் வெகுஜன அமைப்பான ச.உ.இயக்கத்திற்கும் இதை விளங்குவதற்கு கொஞ்சம் அல்ல நிறையவே கஸ்டங்கள் உள்ளன. ஏனெனில் அவர்கள் சிங்கள பேரினவாத சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இதை புரிந்து கொள்வதற்கு அவர்கள் பல (கருத்துச்) சுவர்களை உடைத்துக் கொண்டு வெளியே வரவேண்டும். வருவார்களா என்பது சந்தேகமே?

மு.சோ கட்சியும் ச.உ. இயக்கமும் அடிப்படையில் சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள். ஆனால் சிங்கள மக்களிடம் செயற்படுகின்ற முற்போக்கான சக்திகள் அல்ல இவர்கள். இருப்பினும் இன்றைய நிலையில் அவ்வாறு எடுகோளாகக் கருதிக்கொள்வோம். அதேவேளை பல்வேறு அடக்குமுறைகளை முகம் கொடுக்கின்ற, அனைத்து தமிழ் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு கட்சி தமிழர்களிடம் இன்னும் இல்லை. அவ்வாறான கட்சிகள் வடக்கு கிழக்கு தமிழர்களிடமிருந்தும் முஸ்லிம்களிடமிருந்தும் மலையக மக்களிடமிருந்தும் உருவாக வேண்டும். அப்பொழுது இக் கட்சிகள் அனைத்தும் இணைந்து மனிதர்களினது மட்டுமல்ல இனங்களின் தேசங்களின் பெண்களின் பால் பாலியல் உறவுகளின் சாதிகளின் சம உரிமை தொடர்பாக உரையாடலாம். ஐக்கிய முன்னணி அமைத்துப் போராடலாம். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். அப்பொழுதுதான் சமூக விடுதலைக்கான பயணம் ஆரோக்கியமானதாகவும் சரியான பாதையிலும் பயணிப்பதாக இருக்கும்.

மேற்குறிப்பிட்ட சூழல் உருவாகும் வரை மு.சோ.க வும் ச.உ.இமும் சிங்கள மக்களிடம் தமது பணிகளை செய்வதே பயனுள்ளதாகும். குறிப்பாக மேலே குறிப்பிட்டவாறு எவ்வாறு சிங்கள மக்களிடமிருக்கின்ற இனவாத சிந்தனைகளை களைவது என்பது தொடர்பான வேலை திட்டத்தை முன்னெடுக்கலாம். இதைச் செய்யாது தமிழ் மக்களுடன் இணைந்து வேலை செய்ய இப்பொழுது முயற்சிப்பது பயனற்றதும் வீண் வேலையுமாகும். இல்லை தமிழ் மக்களுடன்  தான் வேலை செய்வோம், அவர்களுக்காகத்தான் செயற்படுவோம் என்ற அவா இருப்பின், அடம்பிடிப்பின், “வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருக்கின்ற இராணுவத்தை அகற்று”, “தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தாலாம். இக் கோரிக்கைகளை முன்வைத்து சிங்கள பகுதிகளில் சிறிலங்கா அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையாவது ஒழுங்கு செய்யலாம். இது அதிகம் பயனுள்ளதாகும். செலவிடுகின்ற நேரத்திற்கும் பிரயோசனாக இருக்கும். தமிழ் மக்களுக்கும் இவர்கள் மீது நம்பிக்கை ஏற்படலாம்.

இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற தேசங்கள், இவர்களது சுயநிர்ணைய உரிமை, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், சிறிலங்காவின் அரசியலமைப்பு, இந்திய விஸ்தரிப்பு வாதமும் மலையக மக்களும் மற்றும் தமிழ் இன அழிப்பு என்பவை தொடர்பாக பலர் கேட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை. இவ்வாறு பல கோட்பாட்டு, தத்துவார்த்த, செயல்முறை, நடைமுறை தொடர்பான கேள்விகளுக்கு பதில்கள் இல்லாதபோது இவர்கள் செல்லும் பயணமானது தற்கொலைக்கான முயற்சியே என்றால் மிகையல்ல.

பின்வரும் பல கட்டுரைகளில் இவர்களது கருத்துக்கள் நிலைப்பாடுகள் தொடர்பான விமர்சனங்கள் விரிவாக முன்பே முன்வைக்கப்பட்டுள்ளன. இக் கேள்விகள் தொடர்பான விரிவான பதிலை இவர்கள் முன்வைக்காத வரை இனிமேலும் இவர்களுடன் உரையாடுவதில் பயனில்லை. ஆகவே மு.சே.க மற்றும் ச.உ.இ தொடர்பாக எழுதப்படுகின்ற கடைசிக் கட்டுரையாக இது இருக்கும். அல்லது பதில்கள் முன்வைக்கப்படுமாயின் தொடர்ந்தும் உரையாடலாம்.

மீராபாரதி

15.10.2014

படங்கள்: நன்றி Ndp front

சம உரிமை யாருக்கு?- சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக தேசங்களுக்கா….?… அல்லது சிறிலங்கர்களுக்கா….?

http://tinyurl.com/ls5hhf9

ஐக்கிய முன்னணி: தேசங்களின் ஜனநாயக உரிமைக்கா….?

http://tinyurl.com/bnnglv2

இனவாத உப்பில் ஊறிய மிளகாய் சிவக்காது – நடராஜா குருபரன்

http://tinyurl.com/k3fdu63

காமினி பாஸ் தவறு செய்துவிட்டார் – சோபாசக்தி

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1030

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: