Posted by: மீராபாரதி | September 29, 2014

ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் – ஈழத் தமிழர்களின் சிந்தனையின் எல்லையை கேள்வி கேட்கின்றது?

ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் –

ஈழத் தமிழர்களின் சிந்தனையின் எல்லையை கேள்வி கேட்கின்றது?

images5ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் திரைப்படம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு ரதன் அவர்களால் இன்று ரொரன்டோவில் ஒழுங்கு செய்யப்பட்டது. இக் கலந்துரையாடலில் திரைப்படத்தின் இயக்குனர் லெனின் சிவம் உட்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சில நடிகர்களும் பங்குபற்றினர். பல்வேறு கருத்தாளர்கள் பங்குபற்றியதுடன் ஒரளவு சபை நிறைந்ததாகவும் ஆரோக்கியமான கலந்துரையாடலாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பலர் பல கருத்துக்களைக் கூறியபோதும் நபர்களைக் குறிப்பிடாமல் பொதுவான கலந்துரையாடலை எனது நினைவிலிருந்தும் மற்றும் எனது கருத்துக்களையும் இணைத்துப் பதிவு செய்ய முயற்சிக்கின்றேன்.

முதலில் லெனின் சிவம் அவர்கள் திரைப்படம் தொடர்பான தனது நேர் மறை, எதிர் மறை பார்வைகளை முன்வைத்தார். ஈழத்தில் நடைபெற்ற இனப்படு கொலை தொடர்பான விவரண படங்களைப் பார்த்ததினால் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவே இத் திரைப்படம் என்றார். மேலும் மேற்குலகமும் கனேடிய அரசியலும் ஊடகங்களும் எமது போராட்டத்திற்கு அல்லது நாம் எதிர் நோக்குகின்ற இன ஒடுக்குமுறைக்கும் இன அழிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்காது நமது எதிர்மறைகளை மட்டுமே பெரிதாக்கி வெளிச்சம் போட்டுக் காட்டின. இதனால் ஏற்பட்ட கோவமும் இத் திரைப்படத்தை உருவாக்க ஊந்துதலாக இருந்ததாக குறிப்பிட்டார். நாம் அவ்வாறான காட்டுமிராண்டிச் சமூகமல்ல. நாமும் பல்வேறு கூறுகளையும் கொண்ட ஆனால் முன்னேறிய ஒரு சமூகம் என்பதை இந்த உலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்பதே தனது நோக்கம். இரண்டு வருடங்கள் இத் திரைக்கதையை தயாரிப்பதில் செலவழித்து இரண்டு வாரங்களில் திரைப்படத்தை ஒளி ஒலிப் பதிவு செய்து (சுரேஸ் ரோகின்) முடிக்கப்பட்டது.  இத் திரைப்படத்தில் சில சமரசங்களை நாம் தவிர்க்க முடியாது மேற்கொண்டோம். ஆனால் இந்த சமரசங்கள் இதன் ஆன்மாவை கொல்லவில்லை.images6

இத் திரைப்படத்தின் ஒளி ஒலி ஓவிய நெறியாளருக்கும் மற்றும் சக இனத்தவர்களுக்குமே ஊதியம் வழங்கப்பட்டது. தமிழ் நடிகர்கள் அனைவரும் தமது வேலையிலிருந்து விடுமுறை எடுத்தது மட்டுமல்ல எந்த ஊதியமும் வாங்காமலே நடித்தனர் என தயாரிப்பாளர் விஷ்னு முரளி கூறினார். இதுபோன்ற ஒரு திரைப்படத்தை தயாரித்தமைக்காக தாம் பெருமைப்படுவதாகவும்   இது போன்ற திரைப்படங்களை த் தயாரிக்க ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இத் திரைப்படத்தை மேலும் சிறப்பாக செய்திருக்க முடியும் என்றும் பல குறைகள் உள்ளன என இருவரும் ஒத்துக் கொண்டனர். அதேவேளை கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களின் கருத்துக்களை விமர்சனங்களை கேட்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் இதுவே தமது அடுத்த முயற்சிகளை மேலும் சீரமைக்கும் எனக் கூறி கலந்துரையாடலுக்கான தளத்தை நேர்மறையாகவும் ஆரோக்கியமாகவும் திறந்துவிட்டனர்.

இந்த கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைவரும் திரைப்படத்தின் பல ஆரோக்கியமான நேர்மறையான அம்சங்களுடன் உடன்பட்டனர். அதற்காகப் பெருமைப்பட்டனர். இது தென்னிந்திய மசாலாத் திரைப்படத் தயாரிப்புகள் போல நடிகர்களின் திரைப்படம் அல்ல. மாறாக ஒரு இயக்குனரின் திரைப்படமாகும். இயக்குனரே இதன் பிரதான கதாயநாயகர். இவ்வாறான திரைப்படங்கள் வெளிவருவது மிக அரிது. இத் திரைப்படமே ஈழத் தமிழர்களின் அல்லது யாழ்ப்பாணத் தமிழர்களின் உரையாடலை சரியாகவும் யதார்த்தமாகவும் முதன் முதலாகப் பதிவு செய்த திரைப்படம். மேலும் இத் திரைப்படத்தில் நடித்த அனைவரும் தம் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக இயல்பாக நடித்தனர். நாடகத்தனம் சிறிதும் இருக்கவில்லை. குறிப்பாக இயக்கப் பொறுப்பாளர் இரும்பனாக நடித்த கந்தசாமி கங்காதரன். இயக்கத்திலிருந்து தப்பிக்க முயன்ற மகேந்திரன் பாஸ்கர், ஏமாற்றப்பட்ட புலம் பெயர்ந்த பெண்ணாக நடித்த தேனுகா கந்தறாயா, மற்றும் ஒரினச் சேர்க்கையாளராக நடித்த செலி அந்தனி ஆகியோர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களுடைய பாத்திரமும் மிகவும் காத்திரமானது. இவர்கள் ஒவ்வொருவரின் பாத்திரங்களும் நன்றாக கட்டமைக்கப்பட்டிருந்தது என சிலர் குறிப்பிட்டனர். அதேவேளை சிலர் பாத்திரங்கள் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை என்றனர்.

images2இத் திரைப்படத்தில் ஆறு கதைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் நன்றாக இணைக்கப்பட்டு தாம் சொல்ல விரும்பியதை அழகாக சொல்லியிருக்கின்றன என ஒரு சிலர் கூறினர். ஆனால் சிலர் ஒவ்வொரு கதைகளும் வளர்ந்து வரும் பொழுது திடிரென முறிந்து அல்லது நின்று போனதாக குறிப்பிட்டனர். ஆகவே ஒவ்வொரு கதையும் தம் மீது தாக்கத்தை செலுத்தவில்லை என்றனர். ஆனால் அனைவரும் இத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இசையை (பிரவின் மணி) மெச்சினர். அதாவது எந்த இசையும் சத்தமும் இல்லாத அமைதியைக் கூட மிக அழகாகப் பயன்படுத்தி இருந்தனர்.

இத் திரைப்படம் தொடர்பாக சமூக அரசியல் அடிப்படைகளில் முக்கியமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது இத் திரைப்படமானது (புலம் பெயர்ந்த) தமிழ் சமூகத்தின் பல்வேறு சிந்தனைகளின் எல்லையை கேள்விக்குட்படுத்தியது மட்டமல்ல அதை மீறியும் உள்ளது. இதனை பெரும்பாலானவர்கள் வரவேற்றனர்.

முதலாவது தமிழ் சமூகத்தில் கருப்பர்களுக்கு எதிராக இருக்கின்ற சிந்தனையில் அதிர்ச்சி வைத்தியம் செய்தமையாகும். ஈழத் தமிழ் சமூகம்  இலங்கையில் மற்றும் தமிழகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த தேசங்களிலும் ஒடுக்குமுறைகளையும் புறக்கணிப்புகளையும் தாம் எதிர்கொள்கின்றனர். இருப்பினும்  சக இனத்தவர்களுக்கு (உதாரணமாக கருப்பு இனத்தவருக்கு) எதிரான சிந்தனைகளையும் போக்குகளையும் தாம் கொண்டுள்ளனர். அந்தவகையில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த ஒரு பெண் ஒருவர் கருப்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்வது என்பது சவாலான ஒன்றே. இது ஈழத் தமிழர்களின் சிந்தனையின் எல்லையை முறித்த மீறிய ஒரு கதை என்றால் மிகையல்ல. இவ்வாறு செய்தமை சிறந்தது என ஒரு சாரரும் இது தமிழ் சமூகத்தின் உறுதியான சமூகக் கட்டமைப்பை உடைப்பதாக சிலரும் கருத்துரைத்தனர். ஏன் ஒரு தமிழரே அவரை திருமணம் செய்திருக்க முடியாது என்றனர். அதேவேளை ஒரு வெள்ளையினத்தவரை திருமணம் செய்வதாக காட்டியிருப்பின் நமது அடிமைத்தனத்தை மீளவும் உறுதி செய்திருப்போம். மாறாக கருப்பினத்தவரை திருமணம் செய்ததாக காண்பித்தமை மிகவும் முக்கியமான மாற்றம் மட்டுமல்ல முன்னேற்றகரமான சிந்தனையுமாகும். இது நம் சிந்தனை எல்லையை உடைப்பதாகும்.index

இரண்டாவது ஈழத் தமிழர்களிடம் ஒரினப்புணர்வாளர்களுக்கு எதிராக இருக்கின்ற சிந்தனையின் எல்லையை கேள்விக்கு உட்படுத்தியதாகும். புலம் பெயர்ந்த இரண்டு தமிழ் குடும்பங்களின் ஆண் மகன்கள் இருவர் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். ஒரு ஆண் மகனின் தகப்பன் தனது கடுமையான கஸ்டங்கள் நிறைந்த கடந்த கால போர்க்காலக் கதைகளைக் கூறி இந்த உறவை முறிப்பதற்கு முயற்சிக்கின்றார். இவ்வாறான உறவுகள் ஒருவகையான மனநோய் எனவும் குறிப்பிடுகின்றார். மகனைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக தான் சுயநலமற்று மகன் மீது அன்பாகவும் அக்கறையாகவும் இருந்ததாக குறிப்பிடுகின்றார். ஒருவகையில் தான் மகனுக்கு செய்தவற்றுக்கான பிரதிபலனை எதிர்பார்க்கின்றார். ஆனால் மகனுக்கு தகப்பனுடன் உடன்பட முடியவில்லை. மாறாக இழந்த தனது துணையை காதலரை நினைத்து ஏங்குகின்றான்.  (புலம் பெயர்ந்த) ஈழத் தமிழ் சமூகம் ஓரிணப் புணர்ச்சியாளர்கள் தொடர்பான சரியான பார்வையை கொண்டிருக்காதது மட்டுமல்ல அதைப் பற்றிய எதிர்மறை பார்வை கொண்டவர்கள். ஆகவே இக் கதையானது ஈழத் தமிழர்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சி வைத்தியம். இதனால் இக் கதையும் ஈழத் தமிழர்களின் சிந்தனையின் எல்லையை மீறி உள்ளது அல்லது உடைக்க முயற்சித்துள்ளது என்றால் மிகையல்ல. ஆனால் சிலர் இக் கதையை இன்னும் உறுதியாகவும் வெளிப்படையாகவும் (உதாரணமாக இருவரும் கைபிடித்து செல்வது போன்று) அமைத்திருக்கலாம். இதுவே அவர்களது உறவை குழப்பமில்லாது ஆணித்தரமாக கூறி நம் சிந்தனையின் எல்லையை விரித்திருக்கும் என்றனர்.

சிலர் இக் கதையானது தமிழர்களின் அடையாளத்தை கேள்விக்குட்படுத்துகின்றது என்றனர். எங்களிடம் இவ்வாறான உறவுகள் கலாசாரம் இல்லாதபோது ஏன் அவசியமில்லாது வேண்டுமென்றே இவற்றைத் திணிக்க வேண்டும் என விமர்சித்தனர். இதற்குப் பதிலளித்த சிலர் தமிழர்களின் அடையாளம் என்ன என்பதை கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்றனர். மேலும் ஈழத்திலும் இவ்வாறான உறவுகள் இருக்கின்றன. ஆனால் சமூகத்தில் நிலவும் மேலாதிக்க சிந்தனைகளால் அவர்களால் வெளிவர முடிவதில்லை. அவ்வாறு வெளிவருபவர்களையும் மனநோயாளர்களாக சித்தரிப்பதுடன் நையாண்டி செய்வதே வழமை. ஆகவே அவர்கள் மறைந்து பயத்துடன் வாழ்கின்றனர். ஆனால் குறிப்பாக புலம் பெயர்ந்த தேசங்களில் வளர்கின்ற நமது குழந்தைகள் இவ்வாறான தமது பாலுணர்வு அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கான வெளிகள் இருக்கின்றன. இவர்களைப் புரிந்து கொண்டு ஏற்பதற்கு நாம் நமது சிந்தனைகளின் எல்லைகளை விரிக்க வேண்டும். இல்லையெனில் நமது வாழ்வு மட்டுமல்ல அவர்களது வாழ்வும் சீரழிவதற்கே வழிவகுக்கும். தூரதிர்ஸ்டவசமாக அவ்வாறுதான நடைபெறுகின்றன எனக் குறிப்பிட்டனர். ஆகவே நாம் நமது சிந்தனையின் எல்லைகளை விரிவாக்கம் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். அந்தவகையில் புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினர் இந்தப் படத்தை பார்க்க வேண்டியது மிக அவசியமானது.

imagesமூன்றாவது ஈழத் தமிழர்களின் வன்முறை கலாசாரம். இரும்பனின் கடந்த கால வன்முறைகளும் இன்றைய வன்முறைகளும் மற்றும் தப்பி வந்தவனின் வன்முறைகளும் ஒரினப் புணர்வாளரின் கோவமும் வன்முறை மூலமான எதிர்வினையும் தமிழ் சமூகத்தை வன்முறையான ஒரு சமூகமாகவே சித்தரிக்கும் என விமர்சித்தனர். மேலும் இது புதிய தலைமுறைக்கும் வன்முறை பாதையையே பரிந்துரைப்பதாக உள்ளது. ஆகவே திரைப்பட இயக்குனரின் நோக்கத்திற்கு எதிராகவே இது இறுதியில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். இதற்கு இயக்குனர் தனது நோக்கம் வன்முறைப் பாதையைப் பரிந்துரைப்பதல்ல மாறாக கடந்த கால தலைமுறைகளின் சிந்தனைகள் அழியவேண்டும் என்பதையே குறியீடாகப் பயன்படுத்தியதாக குறிப்பிட்டார்.

இயக்க வன்முறைகள் தொடர்பாக குறிப்பிடும் பொழுது எல்லா இயக்கங்களும் இவ்வாறன வன்முறைகளில் ஈடுபட்டனர் மற்றும் பல சித்திரவதைகளை தமது சக தோழர்களுக்கும் அங்கத்தவர்களுக்கும் செய்தனர். ஆனால் விடுதலைப் புலிகளை மட்டும் தவிர்த்து சக இயக்கங்களை மட்டும் அவ்வாறு காண்பித்தது பக்கச் சார்பானது. நியாயமற்றது. புலிகளையும் உட்படுத்தியிருப்பின் இது ஒடுக்கப்பட்ட ஈழ மக்களின் குரலாக வெளிப்பட்டிருக்கலாம் என்றனர். அதேவேளை இவ்வாறு செய்தமைக்கு புதியதோர் உலகம் நாவல் காரணமாக இருந்திருக்கலாம். ஆனாலும் இங்கு ஒரு சமரசம் மேற்கொள்ளப்பட்டதாகவே விமர்சித்தனர். சிலர் புலிகளே போராட்டத்தின் குறியீடு எனவும் ஆகவே அது சரியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர் வாதம் செய்தனர்.images4

போர் சூழல் மற்றும் சித்திரவதைகள் போன்ற அனுபவங்களுக்கு ஊடாக வருகின்ற ஒரு மனிதர் சக மனிதரை புரிந்து கொள்ளாதவராக எப்படி இருப்பார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இத் திரைப்படத்தில் வந்த மேற்குறிப்பிட்ட பல பாத்திரங்கள் அவ்வாறான அனுபவங்களைப் பெற்றிருந்தபோதும் ஒவ்வொருவரும் பொறுப்பற்றதனமாக பக்குவமற்றே தம் பிரச்சனைகளுக்கு எதிர்வினையாற்றினர். இவர்கள் பொறுப்பான பக்குவமான புரிந்துணர்வான எதிர்வினையாற்றி இருக்கமுடியாதா? தமது கடந்த காலம் தொடர்பான புரிதலில்லாதவர்கள் அதைப் பற்றி மேலும் தேடி அறியாதவர்கள் தம்மை மாற்ற முயற்சிக்காதவர்கள் மீள மீள இப்படியே செயற்படுவார்கள். இது ஒவ்வொருவரது தேடலும் அகமாற்றம் தொடர்பான அக்கறையுமாகும். அது இல்லாதவரை எந்த அனுபவங்களும் ஒருவரை ஆரோக்கியமானவராக மாற்றாது. இதற்கு இன்றைய ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த ஈழத்து தமிழ் சமூகத்தின் வாழ்வு நல்ல சாட்சியாகவே இருக்கின்றது. திரைப்படத்தில் வந்த இரும்பனின் கதாப்பாத்திரத்தைப் போல வெளி உலகில் நல்லவர்களாக அமைதியானவர்களா இருக்கின்றார்கள். ஆனால் அவர்களது மன ஆழத்தில் எரிமலை கொதித்துக் கொண்டிருக்கின்றது. அது எப்பொழுதும் வெடிக்கலாம். வெடிக்காமலும் இருக்கலாம். மறுபறும் இவர்கள் தலைவிதியை மாற்றுவதாக கூறுகின்ற அரசியல் வாதிகள் கூட கடந்த காலத்தில் இருந்து கற்று தமது சிந்தனைகளையும் செயல்களையும் மாற்றாதபோது பொது மக்கள் எம்மாத்திரம்.

நான்காவதாக பொலிஸ் புலனாய்வாளர் தனது கொலையை நியாயப்படுத்துவது தொடர்பான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக இன்றைய வட அமெரிக்க கனேடிய சூழலில் பல (குறிப்பாக வெள்ளையின) காவல் துறையினர் சக இனத்தவர்களை சிறு குற்றங்களுக்காகவும் அல்லது குற்றமே இல்லாதபோதும் அல்லது குறிப்பிட்ட நபர் ஆபத்தானவராக இல்லாதபோதும் கூட அவரை சுட்டுக் கொல்வதை வழமையாக கொண்டுள்ளனர். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் வெள்ளையின காவல் துறையைச் சேர்ந்த புலனாய்வாளர் தனது குற்றவுணர்வாலும் உணர்ச்சிமயமான தன்மையாலும் ஒரு குழந்தையைப் பாலியல் தூஸ்பிரயோகம் செய்து கொலை செய்தவரை கொலை செய்கின்றார். இக் காட்சியானது அந்தக் கொலையை நியாயப்படுத்துகின்றது. மேலும் தான் தன் இதயம் சொல்கின்ற வழிதான் நடந்தேன் எனவும் ஆனால் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் கவலை கொள்கின்றார். இவ்வாறு கூறுவதுகூட தான் குற்றவுணர்விலும் உணர்ச்சியிலும் செய்த கொலையை நியாயப்படுத்துவதாகவே உள்ளது. இக் காட்சியும் கூற்றும்  ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு வெள்ளையின காவல் துறையினர் இன்றும் செய்கின்ற அவசியமற்ற கொலைகளை நியாயப்படுத்துவதாகவே இருக்கின்றது. இங்கும் வெள்ளையின ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்யப்பட்டதாகவே உள்ளது. இதனை மாற்றியமைத்திருக்கலாம். எல்லாக் குற்றக்களுக்கும்  தண்டனை கொலையல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

எப்படி இருந்தபோதும் ஒரு கலைஞரின் பொறுப்பு தனது சமூகத்தின் சிந்தனையின் எல்லைகளைக் கேள்வி கேட்பது மட்டுமல்ல தனது படைப்பினுடாக அதை மீறுவதுமாகும். அதற்கான சுதந்திரம் ஒரு கலைஞருக்கு இருக்கின்றது எனவும் கூறினர்.

ஒரு_துவக்கும்_ஒரு_மோதிரமும்இறுதியாக இத் திரைப்படத் தயாரிப்புக்கு ஐம்பதாயிரம் டொலர்களே திட்டமிடப்பட்டது. ஆனால் மேலும் ஐம்பதாயிரம் டொலர்கள் தேவைப்பட்டது என தயாரிப்பாளர் குறிப்பிட்டார். அதேவேளை இன்றைய தொழில்நூட்ப வளர்ச்சியில் இதைவிட குறைந்த செலவில் தயாரித்திருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

இத் திரைப்படத்திற்கான ஆதரவை திரட்டுவதற்கு தமிழகப் பிரபல சிறு சஞ்சிகைகள், பத்திரிகைகள், எழுத்தாளர்கள் பலரிடம் பங்களிக்க கேட்டும் ஆதரவு கிடைக்கவில்லை. (காலச்சுவடு கடந்த வருடம் கருணாவின் கட்டுரை ஒன்றை பிரசுரித்தது) தமிழகத்தில் ஓடாத படத்திற்கு பங்களிக்க மாட்டோம் என்ற பதிலே கிடைத்தது. அல்லது ஈழத் தமிழர் ஒருவர் இவ்வளவு சிறந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றாரா என்ற பொறாமையும் அதை ஏற்க முடியாமையும் பங்களிக்காமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

இத் திரைப்படம் பல்வேறு அடையாளங்களை தன்னுள் கொண்டுள்ளது. அவையாவன, இது ஒரு கனேடிய இரு மொழித் திரைப்படம். கனேடிய தமிழர்களின் தமிழ்த் திரைப்படம். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் திரைப்படம். தமிழர்களின் திரைப்படம். இலங்கையர்களின் தமிழ்த் திரைப்படம். ஈழத்தவர்களின் திரைப்படம். யாழ்ப்பாணத்தவர்களின் திரைப்படம். உடுப்பிட்டி கிராமத்தவர்களின் திரைப்படம். என பல அடையாளங்களை இத் திரைப்படம் கொண்டிருக்கின்றது. அந்தடிப்படையில் இவர்களுக்கான ஆதரவுகள் (ஆதரவின்மைகளும்) கிடைக்கின்றன.

ஒரு இலங்கை, ஈழத்து, புலம்பெயர் தமிழராக நாம் பெருமைப் படக்கூடிய,  ஈழத்தவர் ஒருவர் இயக்கிய ஒரு தமிழ் சினிமா  ஒரு தூப்பாக்கியும் ஒரு மோதிரமும். இதில் நடித்த பெரும்பான்மையானவர்கள் எமது நண்பர்கள். இவர்கள் மிகவும் நன்றாக நடித்திருக்கின்றமை நமக்கு பெருமையாக இருக்கின்றது. இதற்காக திரைப்படத்தின் நெறியாளர் லெனின் எம். சிவம் பெருமைப்படலாம். இவர் நடிகர்களை மட்டும் திறம்பட நடிக்க வைக்கவில்லை. இலங்கை, ஈழம் மற்றும் புலம் பெயர் மக்களின் வாழ்க்கையை அவர்களின் பல கதைகளை ஒன்றினைத்து வெளிப்படுத்தியுள்ளது மட்டுமல்ல பல கோணங்களில் உரையாடியும் உள்ளார்.

முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தில் ஈழத் தமிழர்களின் உரையாடல் மிக யதார்த்தமாக வந்துள்ளது. ஈழத்து தமிழர்களை பாத்திரமாக தமது திரைப்படங்களில் கொண்டுவரும் தமிழக திரைப்பட நெறியாளர்களுக்கு எவ்வாறு ஈழத்து தமிழர்களின் உரையாடலை தமது திரைப்படங்களில் கொண்டுவருவது என்பதற்கு உதாரணமாக இந்தத் திரைப்படம் இனி இருக்கும் என நம்பலாம். எதுவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. இத் திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும் திரைப்படத்தின் இறுதியில் நிச்சயமாக ஒரு புலம் பெயர்ந்த தமிழராக நாங்கள் பெருமைப்படலாம்.
வாழ்த்துக்கள் ஒரு துப்பாக்கி ஒரு மோதிரம் திரைப்படக் குழுவினருக்கு.
இதைவிட சிறந்த அடுத்த படைப்பை எதிர்பார்த்து.

இத் திரைப்படம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கும்…
மற்றும் பல விமர்சனங்களுக்கும்.

http://tinyurl.com/o7yro25

மீராபாரதி

 1. தூங்கும் பனிநீரே தனது தளத்திற்காக சோபாசக்தி
 2. கடவுள் தந்த துப்பாக்கியும் ஒரு மோதிரமும் காலம் சஞ்சிகைக்காக யமுனா ராஜேந்திரன்
 3. ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும், குமுதம் தீராநதி சஞ்சிகக்காக அ. முத்துலிங்கம்
 4. A Gun and A Ring – எங்கட கதை சொல்லும் சினிமா, தென்றல் சஞ்சிகக்காக கானா பிரபா
 5. ஒரு துவக்கும் ஒரு மோதிரமும், ரமணன்
 6. ஒபுலம்பெயர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்: துப்பாக்கியும் கணையாழியும், காலசுவடு பத்திரிகைக்காக கருணா வின்சென்ற்
 7. ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள், எதுவரை சஞ்சிகக்காக தவ சஜிதரன்
 8. புதிய ஆரம்பம்!, 4TamilMedia தளத்திற்காக ஜீ உமாஜி
 9. இது எமது சினிமா இறுமாப்போடு சொல்லலாம்!, 4TamilMedia தளத்திற்காக புருஜோத்தமன் தங்கமயில்
 10. ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்,  தாய்வீடு  பத்திரிகக்காக மு.புஷ்பராஜன்
 11. ஒரு துப்பாக்கியும் மோதிரமும் திரைப்பட ரசனைக் குறிப்பு, கடவை தளத்திற்காக மெலிஞ்சிமுத்தன்
 12. “ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்” (Gun & Ring) சினிமா மீதான விமர்சனம், புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தளத்திற்காக பி.இரயாகரன்
 13. துப்பாக்கியும் கணையாழியும், தாய்வீடு பத்திரிகக்காக பொன்னையா விவேகானந்தன்
 14. நெகிழ வைக்கும் A Gun & A Ring (ஒரு துப்பாக்கியும் மோதிரமும்) – பார்வை, தமிழ்ஸ்.கொம் தளத்திற்காக அன்பு
 15. உலகத்தரத்தில் ஈழத்தமிழனின் திரைப்படம் தனது தளத்திற்காக சஞ்சயன்
 16. பார்த்து ரசித்த A GUN AND A RING திரைப்படம், தமிழ் முரசு அவுஸ்ரேலியா தளத்திற்காக செ .பாஸ்கரன்
 17. எ கன் அன்ட் ரிங் (ஒரு துப்பாக்கியும் மோதிரமும்), வணக்கம்லண்டன் தளத்திற்காக கலாநிதி ந இரவீந்திரன்
 18. என்-பார்வையில், மறுமொழி தளத்திற்காக சிவதாசன்
 19. A Gun & A Ring திரைப்பட விமர்சனம், தேசம் தளத்திற்காக நட்சத்திரன் செவ்விந்தியன்
 20. போருக்குப் பின்னான தமிழ்த் திரைப்படங்கள், நிழல் சஞ்சிகைக்காக ரதன்
 21. தமிழனின் திரைப்பாச்சல், சிந்துபுரம் இணையத்தளம்
 22. சிந்தனைத் தூண்டல்கள் நிறையவே தூவப்பட்டிருக்கின்றன, ஈழத்திரை  இணையத்தளத்திற்காக கணரூபன்
 23. கண்டிப்பாக பார்க்க வேண்டிய சினிமா, தனது Ideas of ஹாரி தளத்திற்காக ஹாரி
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: