Posted by: மீராபாரதி | September 26, 2014

ஏழாவது ஊழி! தடுக்க முடியுமா?

ஏழாவது ஊழி! தடுக்க முடியுமா?

பொ.ஐங்கரநேசனின் சுற்றுச் சூழல் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பான ஏழாவது ஊழி நூலின் அறிமுகம்.

ikarnesan bookநான் அதிகமான நூல்களை வாசிக்கின்ற ஒருவரல்ல. ஆனால் வாசித்த வாசிக்கின்ற ஒவ்வொரு நூலும் என்னில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தின… ஏற்படுத்துகின்றன. அது பதின்மங்களில் வாசித்த காந்தியின் சத்திய சோதனையாக இருந்தால் என்ன, இருபதுகளில் வாசித்த மார்க் ஏங்கல்ஸ் லெனின் ஆகியோர்களின் நூல்களாக இருந்தால் என்ன, முப்பதுகளில் வாசித்த ஓசோவின் நூல்களாக இருந்தால் என்ன. இவை எல்லாம் என்னில் பல மாற்றங்களை ஏற்படுத்தின. அந்தவகையில் பொ.ஐங்கநேசன் எழுதிய சுற்றுச் சூழல் கட்டுரைகளைத் தொகுப்பாக கொண்ட ஏழாவது ஊழி நூல் முக்கியமானது. இதுவும் என்னில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

“டெனிம்” நீல நிற நீளக் காற்சட்டை ஒரு காலத்தில் என்னால் வாங்க முடியாதளவிற்கு எட்டாத உயரத்தில் தூரத்தில் இருந்தது. அதை அழகாக அணிந்து கொண்டுவரும் நண்பர்களைப் பார்த்து இரசிப்பேன். புலம் பெயரும் நேரம் (1996) வந்த பொழுதே இரண்டு “டெனிம்” காற்சட்டைகளை வாங்கக் கூடியளவிற்கு புலம் பெயர்ந்த தேசத்திலிருந்து வந்த பணம் உதவியது. புலம் பெயர்ந்த தேசங்களில் குளிர் காலத்திற்கு இந்த துணி நல்லது மட்டுமல்ல நீண்ட காலங்கள் கழுவாதும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த நூலை வாசித்த பின் இனிமேல் “டெனிம்” ஆடைகள் அணிவதில்லை என முடிவெடுத்தேன். ஆகவே என்னிடமிருந்த “டெனிம்” காற்சட்டைகளை வாங்க முடியாதவர்களுக்கு கொடுத்துவிட்டேன். அவ்வாறான ஒரு மாற்றத்தை இந்த நூல் என்னில் ஏற்படுத்தியது. “டெனிம்” துணி பற்றி அதாவது நீல நஞ்சு பற்றி மட்டுமல்ல இன்னும் பல விடயங்களையும் அறிவதற்கு நீங்கள் இந்த நூலை வாங்கி வாசிக்க வேண்டும்.ikaranesn

இதுவரை உலகத்தின் பூமியின் வரலாற்றில் ஆறு மாபெரும் அழிவுகள் நடந்துள்ளதாக கூறுகின்றனர். அவ்வாறான அழிவொன்று மீண்டும் வருமாயின் அதற்கு முதல் காரணமாக இருக்கப் போவது நாம் எந்தவிதப் பொறுப்புமில்லாது சுழலை மாசடையச் செய்வதே என்கின்றார் பொ.ஐங்கரநேசன். நாமும் அரசாங்கங்களும் சர்வதேச நிறுவனங்களும் எவ்வாறு சூழலை மாசடையச் செய்வதில் போட்டி போடுகின்றோம் என்பதை விரிவாக ஒவ்வொரு கட்டுரைகளிலும் விபரிக்கின்றார்.  மேலும் அரசும் அரசாங்கங்களும் மற்றும் இலாபம் ஒன்றே நோக்கமாகக் கருதி செயற்படும் நிறுவனங்களும் ஒருவருக்கு ஒருவர் எவ்வாறு பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருக்கின்றனர் என்பதையும் ஆதராங்கள் மற்றும் தரவுகளுடன் நிறுபிக்கின்றார்.

சுற்றுச் சூழலை மாசடையாது காப்பாற்றுவது நமது நாளாந்த பொறுப்பான செயற்பாடுகளினால் நடைபெறுவது என்பது ஒரு வகை. இது ஒரு அரசியல் செயற்பாடு என்பது இன்னுமொரு வகை என்கின்றார். இதனைத்தான் பேராசிரியர் சேரன் அவர்களும் இந்த நூல் வெளியீ கனடாவில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிட்டார். குறிப்பாக  தமிழர்கள் பழமைவாத கட்சிகளுக்கு ஏன் ஆதரவளிக்கக் கூடாது என்பதையும் அதனால் ஏற்படும் பாதகங்களையும் கூறினார். நமது தேசிய, பெண்ணிய, சாதிய, வர்க்க விடுதலைப் போராட்டங்கள் அர்த்தம் பெறுவதுகூட சுற்றுச் சூழலை நாம் காப்பதிலையே உள்ளது. இந்த பூமியை நம்மால் காப்பாற்ற முடியாது போனால் நாம் பல்வேறு விடுதலைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி என்ன பயன்? ஆகவே சுற்றுச் சூழலை எவ்வாறு நாம் மாசடையச் செய்கின்றோம் என்பதை இந்த நூலை வாசிப்பதனுடாகப் புரிந்துகொள்ளலாம். மேலும் இந்த நூலை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதனுடாக அவர்களும் அறிவதற்கு வழி செய்யலாம். அதேவேளை பூமியையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை அனைவரும் அறியலாம்.

images3கொதிக்கும் பூகோளம் என ஆரம்பிக்கும் முதல் கட்டுரையில் பச்சை வீட்டு விளைவு (green house effect) என்ன என்பது பற்றி விபரிக்கின்றார். குறிப்பாக 1990ம் ஆண்டுக்குப் பிறகு பூமியின் வெப்பமானது முன்பு எப்போதும் இல்லாததைவிட அதிகரித்திருக்கின்றது. இதற்கு காரணம் இயற்கையல்ல. மாறாக மனிதர்களின் தொலை நோக்கற்ற பார்வையும் செயற்பாடுகளுமாகும்.  அளவுக்கு அதிகமாக இயற்கை வளங்களை உறிஞ்சி பயன்படுத்துவதும் அதேநேரம் தேவைக்கு அதிகமாக அழிக்க முடியாத, மீளப் பயன்படுத்த முடியாத பொருட்களை நூகர்வதும் பூமிக்கும் மனிதர்களுக்கும் கேடுவிளைவிப்பவையே. இது பூமியையும் மனிதர்களையும் பாதிக்கின்றது. இதைத் தடுப்பதற்கு அரசாங்கங்கள் ஒன்றும் செய்யாமலிருப்பது மட்டுமல்ல முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகளுக்கும் குறிப்பாக வளர்ந்த நாடுகள்  தடையாக இருக்கின்றன. இதனை நாம் தடுப்பதற்கு அரசாங்கங்களை நிர்ப்பந்திக்காது போனால் அழிவு நிச்சயம். அதாவது ஏழாவது ஊழி தவிர்க்கப்பட முடியாதது என்கின்றார். இதைத் தடுப்பதில் ஒரு புறம் மரங்கள் வளர்ப்பது முக்கியமானதாகும். மறுபுறம் நூகர்வுக் கலாசாரத்திற்குள் இழுபடாமல் இருப்பதாகும். இவை முக்கியமான நிபந்தனைகள் என்கின்றார்.

நீரும் சுற்றுச் சூழலும் வாழ்வும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. குறிப்பாக வானம் பார்த்த பூமி எனப்படும் யாழ் குடாநாட்டில் இது மிகவும் முக்கியமானது. சுற்றிவர கடல் இருந்தபோதும் பூமியின் அடி சுண்ணாம்புப் பாறைகளால் ஆனபோதும் அந் நிலத்தில் நன்ணீர் காணப்படுகின்றது. ஆனால்  இன்றைய தண்ணீர் பாவனை அதிகரித்தமையாலும் திட்டமிடப்படாத முறைமைகளினாலும் நிலத்தடி நீர் வற்றிச் செல்கின்றது. மாரி மழையை மட்டும் நம்பி சேமிக்கப்டும் நீர் 0.48 அங்குலமே. ஆனால் மழை விழ்ச்சியில் 30 வீதமே நிலத்திற்குள்  செல்கின்றது. மிகுதி மழை நீர் விரயமாக்கப்படுகின்றது. இதைத் தவிர தோட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகளால் பல இரசாயணக் கலவைகள் உள்வாங்கப்பட்டு இந்த நீர் பயன்படுத்த முடியாதவையாகின்றன. இவ்வாறு பல்வேறு காரணங்களால் இந்த நீர் மாசடைகின்றது. இவற்றைத் தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்படும் பொழுது நோய்கள் உருவாகக் காரணமாகின்றன. இதைவிட சன நெருசல் நிறைந்த யாழ் நகர் வாழ்க்கை முறையால் மலசலக் கழிவுகளும் நிலத்தடி நீருடன் சேர்ந்து நோய்கள் உருவாக காரணிகளாகின்றன என எச்சரிக்கின்றார். இவை ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க இன்றும் யாழ்ப்பாண பொதுப்புத்தியானது எந்தவிதமான அக்கறையுமில்லாது நிலத்தடி நீர் தொடர்பான பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருக்கின்றனது என விமிர்சிக்கின்றார்.images8

யாழ்ப்பாணம் பாலையாகுமா? எனக் கேள்வி கேட்கின்றார்.
ஏனெனில் இன்று நாம் பாலைவனங்கள் எனக் கூறுகின்ற ஆபிரிக்காவின் சாகாரா, அவுஸ்ரேலியாவின் விக்டோரியா, சீனாவின் கோபி,  இந்தியாவின் தார் என்பன பல்லாண்டுகளுக்கு முன்னர் செழிப்பாகாவும் பசும்புல் வெளியாகவும் இருந்தவை (158).

இவை பூமியின் மேற்பரப்பில் 40 விழுக்காடு அளவு மழை வீழ்ச்சி குறைந்த வறண்ட வலையங்கள் எனப்படுகின்றன. இப் பகுதிகளில் ஏறத்தாள இரண்டு பில்லியன் பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  இவர்கள் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர்.  உலகளவில் 20 விழுக்காடு வறன்ட நிலங்கள் இப்படிப் பாலையாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது நீருக்குப் பதிலாக சிறுநிரைக் குடிக்கின்ற அவலநிலைக்கு கூட வந்திருக்கின்றனர் (159). இவற்றைக் கவனத்தில் கொண்டு யாழ் குடாநாடு பாலையாக மாறாது தடுப்பதற்கு முடியும். இதற்கான பல முயற்சிகள் காலம் காலமாக எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. குறிப்பாக குளங்கள் கட்டப்பட்டன. நன்னீர் தேக்கங்கள் நிறுவப்பட்டன. மழை நீர் சேகரிக்கப்பட்டது. இவ்வாறு நீர் சேமிப்பது மட்டும் போதாது. அவற்றைத் துய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். ஆனால் இவ்வாறான திட்டங்கள் முயற்சிகள் இன்று கவனிப்பாரின்றி கைவிடப்பட்டுள்ளன. இவற்றை மாற்றயமைப்பதற்கு இப் பிரதேசங்களில் அக்கறை உடையவர்களுக்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுவதும் ஒரு முன்நிபந்தனையாகும் (164).

images7நீரின் முக்கியத்துவத்தை நீரின்றி அமையாது உயிர் எனத் தலைப்பிட்டு எழுதியுள்ளார். நீருக்கும் உயிருக்குமான உறவு 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் உருவானது மட்டுமல்ல உயிர் என்பது தண்ணீரிலையே உருவானது என்கின்றது நவீன விஞ்ஞானம். ஒரு ஆணின் நிறையில் 70 வீதம் நீரினால் ஏற்படுகின்றளவுக்கு மனிதருக்கு நீர் முக்கியமானதாக இருக்கின்றது. அதாவது நடுத்தர வயதுள்ள மனிதரில் இருக்கின்ற நீரின் அளவு 45 லீற்றர்கள். ஆனால் நாள் தோறும் பல வழிகளில் மூன்றைரை லீற்றர் நீர் வெளியேறுகின்றது. இதை நாம் பருகுகின்ற நீரினால் சமப்படுத்துகின்றோம். ஆகவே தினமும் ஒருவர் இரண்டு லீற்றர்கள் தண்ணீரைப் பருகவேண்டும்.
கோப்பி, தேநீர், மென்பானம், மதுபானம் என்பன அதிகளவு நீரை சிறுநீருடாக வெளியேற்றுகின்றன. ஆகவே இதில் கவனமாக இருக்கவேண்டும். மனித வாழ்வில் தண்ணீர் இவ்வளவு முக்கியத்துவமாக இருப்பதற்கு அதன் பன்முகத்தன்மையே காரணம்.  தண்ணீருக்கு முன்னால் பிற பானங்கள் எல்லாம் பயனற்றது. ஏனெனில் இதற்கு மருத்துவக் குணம் உள்ளது. இதை விஞ்ஞான அடிப்படைகளில் விரிவாக விளக்குகின்றார்.

நீர்ப் போர் மூளுமா? எனக் கேள்வி கேட்பதன் மூலம் நீரின் முக்கியத்துவதையும் அதனால் முரண்பாடுகளும் போரும் மூள்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. பூமியில் உள்ள நீரில் 97.5 விழுக்காடு நீர் கடல் நீராக உப்பேறியிருக்கின்றது. மிகுதி நீர் பனிப்பாறைகளாக இருக்கின்றன. 0.26 நீரே இலகுவாக வசப்படும் நீராக இருக்கின்றது எனவும் இது மொத்த நீரின் .007 விழுக்காடு என்கின்றார். இந்த நீருக்காகத்தான் முரண்பாடுகளும் மற்றும் போரும் மூள்வதற்கான அபாயமும் காணப்படுகின்றது. 46 கோடி மக்கள் வறண்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக் குறையினால் அவதிப்படுகின்றனர் (170). இப் பகுதிகளில் பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும் தினமும் நீரைத் தேடி 15 கிலோ மீற்றர்கள் நடக்கின்றனர் (170). ஆனால் நீர் சதாரணமாக கிடைக்கின்ற இடங்களில் உள்ளவர்களுக்கு நீரின் மதிப்பு முக்கயத்துவம் புரிவதில்லை.2009-07-12envairnmentalday002

மென்பானங்களின் வன்முறைகள் என்ற கட்டுரை கொக்கோ கோலா, பெப்சி, பிரன்டா, பன்ரா … போன்ற பன்னாட்டு உற்பத்திகள் எவ்வாறு மனிதர்களையும் சுழலையும் பாதிக்கின்றன என்பதை விளக்குகின்றது. இவை பருகுவதற்கு நன்றாகத்தான் இருக்கும். மேலும் மேலும் பருக ஊந்தித்தள்ளும். அந்தவகையிலையே அவை தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இவை எல்லாம் இரசாயணக் கலவையின் விளைவுகள் (134). இவற்றில் மதுபானம் இல்லை என்பதால் மென்பானங்கள் வகைக்குள் அடங்குகின்றன. ஆனால் அவை பெயரளவில் தான். மாறாக இவையும் வன்முறையான செயற்பாடுகளையே மேற்கொள்கின்றன. இவை பற்களிலும் எலும்புகளிலும் உள்ள கல்சியத்தை கரைத்துச் செல்கின்றன. இவ்வாறு செல்லுகின்ற கல்சியம் சிறுநிரகத்தில் கற்களாகப் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  மேலும் இதனால் எலும்புகள் பலம் குன்றிவிடுகின்றன. இந்தப் பானங்களில் பல் ஒன்றை அமிழ்த்தி வைத்திருந்தால் பத்து நாட்களில் முழுவதுமாக கரைந்து விடுகின்றது. அந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது (135).

இந்த மென்பானங்களிலிருக்கின்ற சீனி வெள்ளை நஞ்சு எனப்படுகின்றது. இது இதய நோய், தோல் வியாதி மற்றும் நீரிலிவு நோய்களைத் தோற்றுவிக்கின்றன (136). இவற்றின் நிறத்திற்கு சேர்க்கப்படும் இரசாயண சாயங்கள் புற்றுநோய்க்கும் காரணமாக இருக்கின்றன.  அதாவது இதிலுள்ள தண்ணிரைத் தவிற மற்றவை எல்லாம் பயங்கரமான இரசாயண வகைகள். வளராத மற்றும் வளர்கின்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தப் பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளும் காணப்படுவதாக எச்சரிக்கின்றனர். ஆனால் வளர்ந்த நாடுகளில் பயன்படுதப்படும் பானங்களில் இவை காணப்படவில்லை என அறியப்படுகின்றது. இதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இவற்றைப் பற்றி யெல்லாம் அக்கறை இல்லை. இவர்களது ஒரே நோக்கம் வணிகமும் இலாமுமே. ஆகவே இதனை பரந்தளவில் விற்பனை செய்வதற்காக நடிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் பயன்படுத்துகின்றனர். இவர்களும் தமது விளம்பரத்திற்காகவும் வருமானத்திற்காகவும் எந்த அக்கறையுமின்றி அதில் நடித்துப் பணம் உழைக்கின்றனர். இதனால் தம் ரசிகர்களும் ஆதரவாளர்களும் படுகுழியில் தள்ளப்படுகின்றனர் என்பதைப் பற்றி அறியாது அல்லது அக்கறையின்றி இருக்கின்றனர். ஒரு புறம் இத் தயாரிப்புகளினால் ஏற்படும் கழிவுகள் சுற்றுச்சூழலை மாசடைய செய்கின்றன. மறுபுறம் இயற்கை பானங்களும் உள்ளுர் உற்பத்திகளும் பாதிக்கப்படுகின்றன.
indexஅனல் கக்கும் அமெரிக்காவும் புனல் தின்ற ஆர்லியன்சும் என்ற தலைப்பில் சூறாவளிகளுக்கும் மனித நடத்தைகளுக்குமான தொடர்பை விளக்குகின்றார். “புயல்களின் பிறப்பும் இறப்புதான் மனிதர்களின் கைகளில் இல்லையே தவிர, அவற்றை சினங்கொள்ளுமளவுக்குத் தூண்டிச் சீறவைப்பதில் மனிதர்களின் கைகரியம் நிறையவே இருக்கின்றது” என்கின்றார். “இப்படி அழிவுத்திறன் மிக்க சூறாவளிகள் அதிக எண்ணிக்கையிலும் அதிக மூச்சுடனும் வீச ஆரம்பித்திருப்பதை ஆய்வாளர்கள், மனிதர் பூமியைச் சூடுபோட்டு வருவதன், குறிப்பாக அமெரிக்க சக்திக் கொள்கையின் எதிர்விளைவாகக் குறிப்பிடுகின்றார்கள்.” இதனால் சாதாரண சூறாவளிகள் கூட பூமியின் வெப்பநிலை உயர்வால் பெரும் பிரளயமாக உருவெடுக்கின்றன. இவ்வாறு பூமியின் வெப்பநிலை உயர்வுக்கு மிதமிஞ்சிய எரிபொருட்களின் பாவனை காரணம் என ஐ.நாவும் எச்சரித்துள்ளது. இவ்வாறான பல ஆதாரங்கள், தரவுகள் என்பவற்றையும் மற்றும் அவற்றுக்கான விஞ்ஞான விளக்கங்களுடன் தருகின்றார்.

பூமி வெப்பமாவதை தடுப்பதற்காக உருவாக்கப்பட கியாட்டோ (Kyoto) உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல அது நடைமுறைக்கு வருவதிலும் பல தடைகளை அமெரிக்கா ஏற்படுத்துகின்றது. இதனால் உருவாகும் இயற்கை அழிவுகளிலிருந்து கூட தனது மக்களை காப்பாற்ற முடியாதளவிற்கு செயற்திறனற்றதாக அமெரிக்க அரசு இருக்கின்றது. ஆனால் பூமி மேலும் வெப்படைவதற்கு ஆதரவான பொருளாதார நலன்களுக்கே தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றது. இதனால் ஏற்படப்போகின்ற பாரிய அழிவுகளையும் போர்களையும் அதற்கான எச்சரிக்கைகளையும் கருத்தில் எடுக்காததாகவே அமெரிக்க அரசு இருக்கின்றது. அதாவது “எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் ஒட்டுமொத்த உலகையுமே அழிக்க கூடிய பெரும் சூழலியற் பயங்கர வாதத்தை நிகழ்த்திக் கொண்டே, உலகில் பயங்கரவாதிகளைத் தொடர்ந்தும் அமெரிக்கா தேடிக் கொண்டிருக்கின்றது” என்பது நகைப்புக்கிடமானது மட்டுமல்ல தார்மிக அறம் மீறிய செயலுமாகும்.images4
ஓசோன் குடையில் ஒரு ஓட்டை என்ன என்பதை விபரிக்கின்றார். அதனால் ஏற்படுகின்ற, ஏற்படப் போகின்ற பாதிப்புகளையும் குறிப்பிடுகின்றார். ஓசோன் வளி மண்டலத்தில் புற ஊதாக் கதிர்களின் துணை கொண்டு மூன்று ஒட்சிசன் அணுக்களின் இணைவில் கருக்கொள்ளும் ஸ்திரமற்ற ஒரு நச்சுவாயு இது. பூமியிலிருந்து 15 கிலோமீட்டர்களுக்கு மேல் 50 கிலோ மீட்டர் வரையான பகுதிகளில் படலாமாக படர்ந்திருக்கின்றது. இது சூரியனிலிருந்து வரும் ஆபத்தான புற ஊதாக்கதிர்களை உறிஞ்சித் தீங்கில்லாத ஒளியை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றது. இந்த வடிகட்டிப் படலத்தில் தான் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான ஓட்டையை உருவாக்குவதில் முக்கியபங்கு வகிப்பது குளிர்சாதனப் பெட்டிகள், தீயனைப்புக் கருவிகள், அலங்காரப் பூச்சுக்கள், கணினி சுற்றுக்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற துளோர புளோர காபன்கள். இவை தரையில் பாதுகாப்பானதாகவும் வளி மண்டலத்தில் ஆபத்தானதாகவும் செயற்படுகின்றது. இதனால் புற்றுநோய்கள், விளைச்சல் இல்லாமை, மறைமுக நோய்கள் என்பன துண்டப்படுகின்றன. ஆகவேதான் இதில் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து அதற்கான பயனும் பெறப்பட்டுள்ளது.  இதற்கு மொன்றியல் உடன்படிக்கை உதவியது. இதேபோல் கியோட்டோ (Kyoto) உடன்படிக்கையை அமுல்படுத்த நாடுகள் குறிப்பாக அமெரிக்க உடன்படுமாயின் பாரிய அழிவுகளைத் தடுக்கலாம்.  அல்லது பல மில்லியன் பேர் அமெரிக்காவில் மட்டும் தோல் புற்று நோய்க்கு உட்பட்டு மரணிக்கலாம் என எதிர்வு கூறுகின்றனர்.

images6பிளாஸ்ரிக்கின் பிடியில் பூமி என்கின்றார் இன்னுமொரு தலைப்பில். இன்று பிளாஸ்டிக் உற்பத்தியில் உருவாகாத பொருட்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு பிளாஸ்டிக் தவிர்க்க முடியாதா முக்கியதுவமான ஒன்றாகிவிட்டது. மண்ணோடு மண்ணாக மக்கிப் போகாத தன்மைதான் பிளாஸ்ரிக்கின் தனித்தன்மை. ஆனால் இந்த தனித்தன்மையே சுற்றுச் சூழலின் எதிரியாகவும் இருக்கின்றது. இந்தப் பிளாஸ்டிக் மண்ணையும் நீரையும் கடலையும் மனிதர்களையும் பலவகைகளில் பாதிக்கின்றன. இதற்கு எதிரான பரப்புரை சில மாற்றங்களை கொண்டு வந்தாலும் பெரியளவிலான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்கின்றார்.

நாம் உண்ணுகின்ற உணவும் அதனால் ஏற்படுகின்ற சுற்றுச் சூழல் மாசடைவது தொடர்பாகவும் சில கட்டுரைகள் உள்ளன. அதில் முதலாவது தாய்ப் பாலின் முக்கியத்துவம் தொடர்பாக குறிப்பிடுகின்றார். ஆனால் இன்று பலர் பல காரணங்களுக்காக தாய்ப் பாலுக்குப் பதிலாக செயற்கையான பால்களை குழந்தைகளுக்கு வழங்குகின்றனர். இது குழந்தைகளின் வளர்ச்சியை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக தாயினது ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன் சூழல் மாசடைவதையும் ஊக்குவிக்கின்றது. இதேபோல் மாமிச உணவு வகைகளின் உற்பத்தியும் சுழலை பல வகைகளில் பாதிக்கின்றது. இதிலிருந்து விடுபட மனிதர்கள் மரக்கறி உணவை உண்ணும் பழக்கத்திற்கு மாறுவதே ஆரோக்கியமானது என்கின்றார். மேலும் மனிதர்களின் உடலும் மரக்கறி உணவை உண்ணுவதற்கு ஏற்றதாகவே உள்ளதாகவும் அறியப்படுகின்றது எனக் கூறுகின்றார்.images

சுழல் மாசடைவது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் மேற்குறிப்பிட்ட பல விடயங்களுடன் மேலும் பல விடயங்களை ஆழமாகவும் விரிவாகவும் நாற்பத்தி ஒரு தலைப்புகளில் விளக்குகின்றார். எல்லாவற்றையும் இங்கு குறிக்கும் பொழுது கட்டுரை மேலும் நீண்டு விடலாம். ஆகவே அதை தவிர்த்திருக்கின்றேன். பொ. ஐங்கரநேசன் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுடன் முரண்பாடுகள், விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரின் சூழல் மீதான அக்கறை தொடர்பாகவும் அதற்கான அவரது பங்களிப்புகள் தொடர்பாகவும் நாம் சந்தேகம் கொள்ளமுடியாது. இவரின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நமது பங்களிப்பு அவசியமான ஒன்றாகும். இதற்கு இவரது நூலை ஒவ்வொருவரும் வாங்குவதுடன் தமது வீட்டு நூலகத்தின் ஒரு நூலாகவும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான கைநூலாகவும் பயன்படுத்துவது இன்றியமையாததாகும்.

கடந்த கால நமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் சூழல் தொடர்பான அக்கறை பெரிதளவில் காணப்படவில்லை. ஆனால் இனிவரும் காலங்களில் வர்க்க, தேசிய, சாதிய, பெண்ணிய, பிரதேச விடுதலைப் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் தமது செயற்பாடுகளிலும் வழிமுறைகளிலும் சூழல் மீதான அக்கறையைப் புறக்கணிக்க முடியாது. ஏனெனில் இதுவும் போராட்டத்தின் விடுதலையின் ஒரு பகுதியாகவே விளங்குகின்றது. ஆரோக்கியமான சூழல் இல்லையெனில் ஆரோக்கியமான மனிதர்கள் இல்லை. ஆரோக்கியமான மனிதர்கள் இல்லையெனில் ஆரோக்கியமான விடுதலைப்போராட்டமோ வாழ்வோ இருக்காது. ஆகவே “விடுதலைச் சூழலியல்” என்பதும் தவிர்க்க முடியாத ஒரு சிந்தனை(யும்) செயற்படாகின்றது. சிந்திப்போமா? செயற்படுவோமா? பங்களிப்போமா?ikarnesan book

மீராபாரதி

தொடர்புகளுக்கு : meerabharathy@gmail.com

நன்றி – குளோபல் தமிழ் செய்திகள்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111978/language/ta-IN/article.aspx

படங்கள் : கூகில் தேடல்

Advertisements

Responses

  1. அருமையான அறிமுகம்
    பல விடயங்களைத் தெரிந்து கொண’டேன்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: