Posted by: மீராபாரதி | September 15, 2014

பால், பாலியல் – காமம், காதல் – பெண், பெண்ணியம் – என் அனுபவங்கள் – ஒரு ஆண் நிலை நோக்கு…

adulthood12நான் ஏன் இப்படி இருக்கின்றேன்? சில பழக்கவழக்கங்களை ஏன் விடமுடியாமல் இருக்கின்றது? சில செயல்களை அல்லது பழக்கவழக்கங்களை ஏன் முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது? சிலவற்றை செய்த பின் ஏன் குற்றவுணர்வில் கஸ்டப்படுகின்றேன்? எனது சிந்தனைகள் ஏன் ஒன்றுக்கு ஒன்று எதிராக மாறி மாறி வருகின்றன? இப்படிப் பல பழக்கவழக்கங்கள் பிரக்ஞையின்மையாக தொடர்கின்றன. பல எண்ணங்கள் சிந்தனைகள் அடிக்கடி மனதில் ஒடுகின்றன. இவை தொடர்பாக சிந்திப்பதும் உண்டு. இதிலிருந்து விடுபட முயற்சிப்பதும் உண்டு. ஆனால் இவற்றிலிருந்து விடுதலை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் தேடல் தொடர்கின்றது…

இந்த உடல் உருவாவதற்கு யார் காரணமோ அவர்களே நான் இவ்வாறு இருப்பதற்கான முதல் காரணக் கர்த்தாக்கள் என்பேன். அந்த வகையில் எனது தந்தையும் தாயும் முதல் பொறுப்பாளர்கள். இவர்கள் ஒரு குழந்தையைப் பெறுவதற்காக அல்லது தமது காமத்தின் மீதான விருப்பத்திற்காக அல்லது தந்தையின் காமத்தின் மீதான விருப்பத்திற்காக மட்டும் பிரக்ஞையின்மையாக உடலுறவில் ஈடுபட்டிருக்கலாம். இந்த உறவின்போது அவர்கள் என்ன உணர்வு மற்றும் மன நிலையில் இருந்தார்களோ அவையும் என்னில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். தந்தை ஆண்தன்மையுடன் வன்மமாக செயற்பட்டிருக்கலாம். தாய் வலியினால் கஸ்டப்பட்டிருக்கலாம். மேலும் அவருக்கு விருப்பமில்லாமலும் கூட இருந்திருக்கலாம். இவ்வாறன ஒரு உறவின் விளைவுதான் நான். இதைவிட இவர்களுடைய விந்தும் முட்டையும் நான் இவ்வாறு இருப்பதற்கான இன்னுமொரு காரணமாகும். ஆம்! இவை இரண்டும் தம் மரபணுக்களை தம்முடன் கொண்டுவருகின்றன. இந்த மரபணுக்களில் நம் மூதாதையர்களின் வாழ்வும் அவர்களின் அனுபவங்களும் சிந்தனைகளும் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றினதும் இருபத்தைந்து வீதமாவது என் மீது தாக்கம் செலுத்தலாம். இவற்றைவிட நான் வளர்ந்த சமூகச் சுழலும் எனது தேர்வுகளும் முக்கியமான காரணங்களாகும். இவை அனைத்தும் என் மீது ஏற்படுத்திய தாக்கங்களின் விளைவே இன்று நானும் என் மனமும் உளவியலும் இப்படி இருப்பதற்கான காரணங்களாக இருக்கலாம்.

ஒரு மனிதரின் பால் அடையாளம் என்பது இரட்டைத் தேர்வல்ல. அது பன்முகத் தேர்வுகளைக் கொண்டது. ஏனெனில் ஒரு குழந்தை தாயின் வயிற்றில் உருவாகின்றபோது பெண் குறி உறுப்புதான் முதலில் உருவாகின்றது என விஞ்ஞானம் கூறுகின்றது. பின் நடைபெறும் இரசாயண மாற்றங்களால் ஆண் குறி வெளித்தள்ளுகின்றது. இந்த மாற்றங்களுக்கு இடையில் பல பால் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் நான் ஆண்குறியுடன் பிறந்ததனால் என்னை ஆண் என அடையாளப்படுத்தினர். அதேவேளை சிறுவயதில் எதற்கெடுத்தாலும் நான் அழுவேன். ஆகவே என்னை பெண் பாரதி என்றும் நக்கலடிப்பார்கள். ஆகவே இந்த சமூகம் எதிர்பார்க்கின்ற முழுமையான ஒரு ஆணாக நான் வளரவில்லை. மாறாக ஆண் பெண் தன்மைகளின் கலவையாகவே வளர்ந்தேன்.

நான் பிறந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களின் பின்பு அம்மாவின் வயிற்றில் இன்னுமொரு கரு அவர் விரும்பியோ விரும்பாமலோ உருவாகி இருந்தது. ஒரு குழந்தை பெறுவதை தீர்மானிக்கும் உரிமை (இன்று கூட) ஆண்களின் கைகளில் தானே உள்ளது. ஒரு குழந்தை ஆகக் குறைந்தது இரண்டு வருடங்கள் தாயின் பால் குடிக்க வேண்டும் என்கின்றார்கள். ஆனால் அம்மா கருவுற்றதால் நான் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே தாய்ப் பால் குடித்திருப்பேன் என நினைக்கின்றேன். ஏனெனில் அதன்பின் அம்மாவிடருந்து பால் வரவில்லை. இது ஒரு குழந்தையாக என்னை எந்தளவு பாதித்திருக்கும்? பெண்களின் மார்புகளை நோக்கி ஆண்கள் ஈர்க்கப்படுவதற்கு இவ்வாறான பற்றாக்குறை ஒரு காரணமா? அப்படி எனின் இரண்டு வருடங்கள் முழுமையாக தாய்ப் பால் குடித்தவர்கள் பெண்களின் மார்பை நோக்கி ஈர்க்கப்பட மாட்டார்களா? அல்லது அனைத்து அல்லது பெரும்பான்மையான ஆண்களும் பெண்களின் மார்பை நோக்கி ஈர்க்கப்பட வேறு காரணம் இருக்கின்றதா? நான் கண்ட ஒவ்வொரு ஆணும் பெண்ணின் மார்பை நோக்கி ஈர்க்கப்படுகின்றான். சிலர் நேரடியாகவும் சிலர் மறைமுகமாகவும் அதைக் கவனிக்கின்றனர். இதேபோல் தாய்ப் பால் குடிக்காத அல்லது என்னைப் போல அரைகுறையாக அல்லது திருப்தியாக குடித்த பெண் குழந்தைகளுக்கும் இப் பற்றாக்குறையினால் எவ்வாறான பாதிப்புகள் அல்லது தாக்கங்கள் ஏற்பட்டிருக்கும்? இவர்கள் ஆண்களைப் போல பெண்களின் மார்புகளை நோக்கி ஈர்க்கப்படுவதில்லையா?

பொதுவாக தமிழ் குடும்பங்களில் வீட்டின் மூத்த ஆண் குழந்தைகளுக்கு பல சலுகைகள், முன்னுரிமைகள், அதிகாரங்கள் மற்றும் அதிகமான அன்பும் கிடைக்கும். ஆனால் எனக்கு எனது வீட்டில் அவை கிடைக்கவில்லை. தங்கைகளுக்கு என்ன கிடைத்ததோ அதுவே எனக்கும் கிடைத்தது. இது எனது புரிதல். ஆனால் தங்கைகள் எனக்கு அதிகம் கிடைத்தாக கூறுவார்கள். ஒரு ஆதிக்க குழுமத்தைச் சேர்ந்தவனாக அதை நான் மறுக்க முடியாது. ஏனெனில் ஒரு ஆணாக சமூகம் எனக்களித்த சலுகைகளையும் அதிகாரத்தையும் குடும்பத்திற்குள்ளும் பொதுவெளியிலும் அனுபவித்தேன் பயன்படுத்தினேன் என்பதை மறுப்பதற்கில்லை. இதனால் தங்கைகள் மீதும் வளர்ந்த பின் தாயின் மீதும் பின் துணைவியார் மீதும் ஒவ்வொரு காலகட்டங்களில் அதிகாரம் செலுத்தினேன். வன்முறைகள் பயன்படுத்தினேன். எனக்குள் ஆணாதிக்கம் விதைத்த பல கூறுகள் நான் அறியாமலே வளர்ந்து வந்தது.

sex educationமனமும் உடலும் பாலியல் என்றால் என்னவென்று அறியாத உணராத நான்கு வயது. ஆனால் பாலியல் செயற்பாடுகளை கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறுவர் விளையாட்டாக மேற்கொள்வேன். இவற்றை எங்கிருந்து எப்படிக் கற்றேன் என்பது நினைவில் இல்லை. ஐந்து வயதில் பக்கத்து வீட்டு சின்னப் பெண் குழந்தையுடன் அம்மா அப்பா விளையாடினேன். ஆனால் என்னுடன் விளையாடிய சக குழந்தைகள் என் அம்மாவிடம் நான் “கெட்ட” விளையாட்டுக்கள் விளையாடுவதாக ஒவ்வொரு முறையும் போட்டுக் கொடுத்து விடுவார்கள். இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் அம்மாவிடம் அடி வாங்கத் தவறியதில்லை. இதேபோல் அப்பாவிடமும் பல்வேறு காரணங்களுக்காக அடி வாங்கியிருக்கின்றேன். இவ்வாறு பெற்றோரிடம் ஒவ்வொருமுறையும் ஏதோ ஒரு காரணத்திற்காக நான் வளர்ந்த பின்பும் அடிகள் வாங்கியிருக்கின்றேன். இந்த அடிகள் தந்த வலிகளினதும் வடுக்களினதும் விளைவாக நான் பயந்தவனாக, பொது இடங்களில் மட்டுமல்ல தனித்தும் பெண்களுடன் பேசவோ விளையாடவோ தயங்கியவனாக வளர ஆரம்பித்தேன். இது எந்தளவிற்கு இருந்தது எனில் எனது இருபத்தைந்து வயது வரை வீட்டில் அப்பாவிடம் மட்டுமல்ல அம்மாவிடமும் காதல் என்ற சொல்லை சாதாரணமாகக் கூடப் பயன்படுத்த முடியாதளவிற்குப் பயம் இருந்தது. இந்தப் பண்புகள் எனது படைப்பாற்றலுக்கும் விளையாட்டுத்தனத்திற்கும் சுய தேடலுக்கும் முட்டுக்கட்டை போட்டு என்னைக் கட்டிப் போட்டன என்றால் மிகையல்ல. இதனால் எனது இயற்கையான இயல்பு ஒடுங்கி மறைந்து போனது. என் மீது செயற்கையான இயல்புகள் ஒரு முகமூடியாக வந்து அமர்ந்து கொண்டன. சமூகம் விரும்புகின்ற எதிர்பார்க்கின்ற இயந்திர மனிதராக வளர ஆரம்பித்தேன்.

child abuseஎனக்கு ஆறு வயது இருக்கும் பொழுது பக்கத்து வீட்டுற்கு ஒருவர் வந்திருந்தார். அவர் என்னை வீட்டின் முன்பக்கம் அழைப்பார். அங்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். அவர் எனது கையை எடுத்து தனது ஆண்குறியைப் பிடிக்கச் சொல்லுவார். நானும் எந்த மறுப்பும் இல்லாமல் பிடித்துக் கொண்டிருப்பேன். இவ்வாறு செய்வது தவறு என எனக்குத் தெரியாது. அப்பொழுது நான் அப்படி நினைக்கவும் இல்லை. இப்படிப் பல நாட்கள் தொடர்ந்தன. இதற்காக எனக்கு இனிப்புகள் தருவார். அந்த இனிப்புகளுக்காக நான் என்ன செய்கின்றேன் என்பதை அறியாது செய்தேன். இதேபோல் பதின்மூன்று வயதிலும் ஒரு சம்பவம் நடந்தது. அப்பொழுது எனக்குத் திரைப்படங்கள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. நாம் வாழ்ந்த அறை திரை அரங்கு ஒன்றுடன் இணைந்திருந்தது. அங்கு வேலை செய்தவர் என் ஆர்வத்தை அறிந்து திரைப்படங்களைப் பார்க்க அழைப்பார். படம் காண்பிக்கும் அறைக்கும் அழைத்துச் சென்று எவ்வாறு திரையிடப்படுகின்றது என்பதைக் காண்பிப்பார். இவை எனக்கு மகிழ்ச்சியளிக்கும். பின் “பல்கனிக்கு” அழைத்துச் செல்வார். அங்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். இருட்டாகவும் இருக்கும். என்னை குனிந்து இருக்க சொல்லிவிட்டு பின்னால் நின்று என்னவோ செய்வார். பின் துடைத்துவிடுவார். இவை இன்று நினைப்பதற்கு அருவருப்பாக இருந்தபோதும் அன்று என்னை ஒன்றும் செய்யவில்லை. ஆகவே யாரிடமும் சொல்லவில்லை. அல்லது ஏதோ ஒரு இனம் புரியாத பயம் தடுத்தது. ஏன்? இவற்றைப் பற்றி எல்லாம் வீட்டில் இன்றுவரை கூறவில்லை. இதை வாசிக்கும் பொழுதே அறிந்து கொள்வார்கள். இவை சிறுவர்கள் மீதான பாலியல் தூஸ்பிரயோகம் என்பதை வளர்ந்த பின்பே அறிந்து கொண்டேன். இளமைக் காலங்களில் ஆண்களுடன் நித்திரை கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இரவில் படுக்கும் பொழுது அவர்களுடனான உடலின் தொடுகை சுகமாக இருந்தது. காமத்தின் பசியை தீர்க்க பெண்கள் தான் தேவையா என்பது கேள்வியானது? ஆனால் இது சந்தர்ப்ப சூழ்நிலையால் உருவானது எனப் பதில் கிடைத்தது. அதேவேளை சிலருக்கு ஒரே பால் அடையாளம் சார்ந்தவர்கள் மீது ஈர்ப்பும் காமமும் காதலும் பிறக்கலாம் என்பதைப் பிற்காலங்களில் அறிந்து புரிந்து கொண்டேன்.

நமக்கு கற்பித்த ஆசிரியர்கள் இருவர் பாடசாலை நேரத்தில் ஒரு இளம் ஆசிரியையைச் சுற்றிச் சுற்றி நிற்பார்கள். அவரின் பின் பக்கத்தில் ஒட்டிக் கொண்டு நிற்பதற்கு முயற்சிப்பார்கள். இன்னுமொரு ஆசிரியர் தான் கற்பிக்கும் மாணவி மீது விருப்பம் கொண்டார். மாணவிக்கும் அவர் மீது விருப்பம். படிப்பிக்கும் பொழுது மேசையில் அவர்கள் கைகள் கணக்குப் போட மேசையின் கீழ் அவர்கள் கால்கள் கட்டுண்டு இருக்கும். நாம் இவர்களை வேடிக்கை பார்ப்போம். என் மனதில் காம காதல் எண்ணங்கள் எங்கிருந்து வந்தன? திரைப்படங்களின் தாக்கமா? சுற்றியிருந்த சமூகத்தில் கண்டவற்றின் விளைவா எனத் தெரியவில்லை. ஆனால் அவை என்னை நாள்தோறும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. இந்த ஆக்கிரமிப்பின் விளைவுகள் இன்றுவரை தொடர்கின்றது…

பதினான்கு வயதில் ரஜனியின் இராணுவ வீரன் படம் “வீடியோவில்” காண்பிக்கின்றார்கள் என ஒரு நண்பன் என்னை அழைத்துச் சென்றான். நானும் திரைப்படம் பார்ப்பதற்காக மாலை நேர வகுப்பு என பொய் சொல்லிவிட்டு சென்றேன். நாம் சென்ற இடம் அட்டன் நகரிலிருந்த ஒரு கடையின் பின்பக்கம். இருட்டு அறை. சில ஆண்கள் வீடியோவில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் ரஜனி வருவார் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் வழமையாக இத் திரைப்படங்களில் என்ன நடக்குமோ அது நடந்து கொண்டிருந்தது. நிர்வாண ஆண்களும் பெண்களும் பல்வேறு செய்கைகளை மேற்கொண்டனர். எனக்கு வயிறு குமட்டியது. தொடர்ந்தும் பார்க்க முடியவில்லை. ஆகவே வெளியே வந்தோம். இரவு வீட்டுக்குச் சென்றபோது பசிக்கவில்லை. சாப்பிடுவதற்கும் அருவருப்பாக இருந்தது. சாப்பிடாமல் படுத்துவிட்டேன். ஏதோ தவறான படத்தைப் பார்த்து விட்டோம் என்ற பயம் மனதில் படபடப்பை உருவாக்கி இருந்தது. இந்தப் படத்தையே நீலப்படம் என பிற்காலங்களில் அறிந்து கொண்டேன். இதை ஏன் நீலப்படம் என்கின்றார்கள்?

ஜே.ஆர் ஆட்சியை கைப்பற்றிய பின் இலங்கைக்கு தொலைக்காட்சிப் பெட்டி வந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. அப்பொழுதுதான் “டெக்”கும் வந்திருந்தது. அதற்குள் இவ்வாறான அமெரிக்க ஐரோப்பிய திரைப்படங்கள் எல்லாம் இந்த சிறிய பின் தங்கிய நகரங்களுக்கே வர ஆரம்பித்துவிட்டன. இந்த திரைப்பட அனுபவத்தின் பின்பும் என் உடல் காமத்தை உணர்வில்லை. ஆனால் மனம் எதிர்பார்க்க ஆரம்பித்தது. இது நடந்து ஐந்து வருடங்களின் பின் ஒரு நாள் ஆண்களுடன் தங்கியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் இரண்டாவது தடவையாக நீலப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்து. அவர்கள் ஒரு இயக்கத்தில் இருந்தவர்கள். பயிற்சி எடுத்தவர்கள். ஆனால் இன்னும் சண்டையில் ஈடுபடவில்லை. பல்வேறு இயக்க வேலைகள் செய்து இரவில் சும்மா இருப்பார்கள். அவர்கள் ஒரு நாள் இரவு முழுவதும் இந்தப் படங்களைப் பார்த்தார்கள். இக் காலங்களில் நான் மிகவும் ஒழுக்கவாதியாக காந்தியவாதியாக இருந்தபோதும் அவர்களின் செயலை எதிர்க்கவில்லை. நானும் அவர்களுடன் சேர்ந்து பார்ப்பதைத் தவிர்க்கவில்லை அல்லது தவிர்க்க முடியவில்லை. இதன்பின் அரசியல் உறவுகள், ஈடுபாடுகள், வாசிக்க கிடைத்த நூல்கள், பல்கலைக்கழக அனுமதி அனைத்தும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால் தத்துவங்கள் என்னை ஆதிக்கம் செய்ய ஆரம்பித்தன. ஆகவே நண்பர்கள் அழைத்தபோதும் நீலப்படம் பார்ப்பதை மட்டுமல்ல பாலியல் தொழிலாளர்களிடம் கூட செல்வதைத் தவிர்த்தேன்.

பதின்மங்களில் மத்தியில் பாலியலுறவு எவ்வாறு கொள்வது எனத் தெரியாதபோதும் கனவுகள் அதைச் சுற்றி வந்தன. வயது வந்தவர்களுக்கான ஆங்கிலத் திரைப்படங்களின் மீது விருப்பம் ஏற்பட்டது. ஆகவே “வயது வந்தவர்களுக்கு” என்ற குறிப்புடன் வரும் திரைப்படங்களை எல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் பார்ப்பேன். அதில் நிர்வாண பெண்ணும் ஆணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். உடல் உறவு என்றால் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடிப்பதும் முத்தம் கொடுப்பது தான் என எண்ணுகின்ற அறிவு. இந்த எண்ணங்களுடன் மனம் பெண்களின் பின்னால் காம காதல் நினைவுகளுடன் இழுபட ஆரம்பித்தது. மனம் பெண்களை விரும்பியது. அவர்களைக் கட்டிப்பிடிக்க முத்தம் கொடுக்க விரும்பியது. ஆனால் நானோ சிறுவன். மனம் விரும்பியதோ என்னை விட சில வயது கூடிய இளம் வயதுப் பெண்கள். ஆகவே மனதில் பயமும் இருந்தது. என்னிடம் துணிவும் இல்லை. இதனால் எண்ணங்கள் எனது மனதுக்குள் பிறந்து இறந்து கொண்டே இருந்தன. இவை செயற்பாட்டு வடிவங்களாக மாறாது மறைந்தன. நமது அரசியல் தத்துவங்கள் போல…. நான்… இல்லையில்லை… என் மனம் மட்டும் அந்த எண்ணங்களின் பின்னால் அலைந்து கொண்டிருந்தது. என் கனவுகளில் பல விதமான சிறிதேவிகள் வந்தார்கள். நானும் கனவில் கமல் ஆனேன். வாழ்க்கையில் பெரும்பாலான நேரங்களில் கனவுகளில் வாழ்ந்தேன். வாழ்கிறேன்.

ஒரு நாள் எனக்கும் காதல் பிறந்தது. உள்ளாடை அணியாது அரைக் காற்சட்டைப் போட்ட எட்டாம் வகுப்பு படிக்கின்ற இந்த சிறுவனுக்கும் ஒரு சிறுமி மீது காதல் பிறந்தது. இதில் காமம் இருக்கவில்லை. ஏனெனில் உடல் அதை உணரவில்லை. ஆகவே இது அவள் உடல் மீதான ஈர்ப்பா அல்லது அந்த அழகான முகத்தின் மீதான ஈர்ப்பா எனப் புரியவில்லை. அவளைப் பார்ப்பது மகிழ்வாக இருந்தது. அவள் அருகில் வரும் பொழுது உடல் படபடத்தது. ஆனால் நமது உறவு காதலாக மாறாது நட்பாகவே பிறந்து இறந்தது. ஏனெனில் அவளிடம் என் விருப்பதைக் கூறுமளவிற்கு அன்று எனக்குத் தைரியம் இருக்கவில்லை. அதேவேளை அவளுக்கு சிரேஸ்ட வகுப்பு மாணவன் ஒருவருடன் உறவு இருந்ததாகவும் மற்றும் அவளைப் பற்றி பல்வேறு வதந்திகளும் வந்தன. அவற்றை அறிந்து எனது மனம் கவலை கொண்டது. ஆனால் ஒன்றும் செய்ய முடியாதவனாக இருந்தேன். ஒரிரு வருடங்களின் பின்பு அவள் பாடசாலைக்கு வராமல் நின்றுவிட்டாள். ஆனால் அவள் நினைவு மட்டும் இன்னும் அழியவில்லை.

எனது பதினைந்தாவது வயதில் 1983ம் ஆண்டு சிங்களப் பேரினவாத தாக்குதல்களின் விளைவாக குருநகர் அகதிகள் முகாமில் தங்கியிருந்தோம். அந்தக் காலத்தில் தான் எனது உடல் காமத்தை உணரத் தொடங்கியது. எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. அப்பொழுது அங்கிருந்த ஒரு நண்பன் இந்த வேளைகளில் தனது ஆண்குறியை தானே ஆட்டியதாக அதாவது கைதுய்மை (கையில் போடுவது) செய்வதாகக் கூறினான். அவன் கூறியதைக் கேட்டு நானும் செய்து பார்க்க விரும்பினேன். அது ஒரு பகல் வேளை. முதன் முதலாக சுய இன்பத்தில் ஈடுபட்டேன். ஆண் குறி பெரியதாகி சிறிது நேரத்தில் வெள்ளைத் திரவம் வெளியேறியது. உடலுக்கும் மனதிற்கும் இதமாக இருந்தது. ஆனால் அதன்பின் குறி சின்னதாக மாறவில்லை. பெரிதாகவே இருந்தது. பயந்து போனேன். நீண்ட நேரங்கள் குறியுடன் மல்லுக் கட்டி ஒருவாறு சின்னதாகிய பின் பயந்து பயந்து வெளியே வந்தேன். இதன் பின் காம எண்ணங்கள் மனதிலும் காம உணர்வு உடலிலும் மேலும் அதிகமாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. எந்த நேரம் என இல்லாது ஆண் குறி எழுந்து நிற்க ஆரம்பித்தது. இரவுகளில் எனது படுக்கைகள் நனைந்தன. வெட்கம் மற்றும் பயம் இரண்டும் என்னைப் பற்றிகொண்டன. ஏனெனில் இவற்றை மறைக்க முடியவில்லை. வெளிக்காட்டவும் முடியவில்லை. யாருடனும் உரையாடவும் முடியவில்லை. அப்பொழுதும் உள்ளாடை அணியும் பழக்கம் இருக்கவில்லை. அப்பாவுக்கு குழந்தை பெறுவதில் இருந்த அக்கறை இதையெல்லாம் குறிப்பிட்ட வயதில் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் இருக்கவில்லை. அம்மாவோ இதைப்பற்றி அறிந்திருக்கவில்லை எனலாம். ஆகவே யாரும் வாங்கித்தரவில்லை. நானாக வாங்குவதற்கு என்னிடம் பணமும் இல்லை. இதனால் நான் தான் மிகவும் கஸ்டப்பட்டேன். குறிப்பாக பொது இடங்களில் சக பெண் நண்பர்கள் இருக்கும் பொழுது வெட்கமாகவும் கஸ்டமாகவும் இருந்தது. இவ்வாறு நடந்து ஒரு வருடங்களுக்குப் பின்பே உள்ளாடையை அணிய ஆரம்பித்தேன். அது கூட ஒன்றிரண்டு உள்ளாடைகள் தான் இருந்தன. இவற்றுடன் நான் போராட வேண்டியிருந்தது. ஏனெனில் அவை காணமல் போயிருக்கும். அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் சிறு வயதிலிருந்தே உள்ளாடைகள் அணிய ஆரம்பிக்கின்றமையைப் பார்க்கின்றபோது மகிழ்ச்சியைத் தருகின்றது. உண்மையிலையே இவைபற்றி பதின்மங்களில் ஆரம்பத்தில் கற்பிக்க வேண்டும். இந்த வயதில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பயமின்றி தைரியமாக எதிர்கொள்ளவும் பெற்றோருடனும் ஆசிரியர்களுடனும் உரையாடவும் பழக வேண்டும். இதற்கு அனைவருக்கும் சரியான வழிகாட்டல் வேண்டும்.

இதன் பின் பெண்கள் மீது காதல் மட்டும் ஏற்படவில்லை. காம உணர்வும் இணைந்து ஈர்க்க ஆரம்பித்தது. என்னுள் மீண்டும் காமத்துடன் காதல் பிறந்தது. ஆனால் என்னிடம் இப்பொழுதும் துணிவு இருக்கவில்லை. தயக்கம், பயம் என்பன மட்டுமே இருந்தன. ஒருவாறு துணிவை வரவழைத்து அவளிடம் கூறச் சென்றால் பதிலில்லை. ஒரு ஏழையின் காதலை ஏற்கமாட்டார்கள் என்ற தாழ்வு மனப்பான்மையும் எனக்கு இருந்தது. இதனால் எனது பழைய கரல் பிடித்த (சைக்கிளை) தூவிச்சக்கர வண்டியை அவள் அருகில் போகும் பொழுது எல்லாம் மிக அவதானமாக ஒட்டப் பழகினேன். அல்லது அது சத்தம் போட்டு எனது ஏழ்மையை வெளிப்படுத்திவிடும் எனப் பயந்தேன். அகதிகள் முகாமில் கிடைத்த ஆடைகளை அலசி சுத்தமாக அணிய ஆரம்பித்தேன். அவளது பதிலுக்காக ஆறு ஆண்டுகள் காத்திருந்தேன். இதற்கு இளமைக் காலத்தில் காதல் தொடர்பாக என்னிடமிருந்த வரட்டு நம்பிக்கைகளே காரணம் என்பேன். அதாவது காதலித்தால் ஒரு பெண். மணந்தால் அதே பெண் போன்ற எண்ணங்கள் வேரூண்டிய காலமது. ஆறு ஆண்டுகளின் பின்பு பல்கலைக்கழகம் கிடைத்த தகுதியுடன் மீண்டும் முயற்சி செய்தேன். ஆனால் அந்தப் பெண் என்னை விரும்ப மாட்டாள் என்பது உறுதியானது. இதன் பின் சில காலம் பெண்களின் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை. இவ்வாறு காதல் மற்றும் பாலியல் உறவின் சுகம் அறியாது சுய இன்பத்திலும் கனவிலும் இருபத்தைந்து வயது வரையான எனது காலம் வீணாகக் கழிந்தது.

அரசியலில் ஈடுபட வேண்டும் என ஆர்வமாகச் சிந்தித்த, செயற்பட்ட வாலிப காலமது. அதேநேரம் மனதுக்குள் ஒரு போராட்டமும் நடைபெற்றது. காதலா? காமமா? அரசியலா? என பட்டி மன்றம் நடந்தது… இறுதியில் வென்றது என்னவோ காதல்தான். பழைய தத்துவங்கள் என்னை விட்டு ஓடிவிட்டன. புதிய அனுபவங்கள் புதிய தத்துவங்கள் ஆக்கிரமித்தன. முழுநேர அரசியல் செய்வதாயின் காதலிக்கவே கூடாது என இருந்த என்னை காம உணர்வும் காதல் உள்ளமும் மனமும் பெண்கள் பக்கம் இழுத்துச் சென்றன. ஆச்சரியப்படும் வகையில் ஒன்றன் பின் ஒன்றாகப் பல பெண்கள் மீது ஈர்ப்பு வந்தது. அவர்களைக் காணும் போதெல்லாம் என்னைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் பறந்தன. அவர்கள் அருகில் வந்தபோதெல்லாம் நெஞ்சம் படபடத்தது. இவை காதலா? காமமா? என்று இன்றுவரை தெரியாது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் மீது காதல் அல்லது ஈர்ப்பு வரும் என்பதை அனுபவம் கற்றுத் தந்தது. காதலித்த அல்லது திருமணம் செய்த பின் காமம் ஒரு பிரச்சனையாக எனக்கு இருக்காது என மனம் நினைத்தது. அல்லது அறிவு சொன்னது. ஆகவே காதலிப்பது என முடிவெடுத்து அதில் முழு மூச்சாக இறங்கி இறுதியில் வெற்றி கண்டேன். இதன்பின் புதிய அனுபவங்கள் பல கிடைத்தன. இவை என்னை மேலும் ஆச்சரியமூட்டின. ஏனெனில் உடல் உறவு அனுபவம் கிடைத்த பின்தான் காமம் முன்பு இருந்ததைவிட வீரியத்துடன் பீறிட்டு எழுந்தது. காமம் என்னைத் தொடர்ந்து கஸ்டப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

உடல் உறவு அனுபவத்தின் பின் காமத்தின் மீதான ஆர்வம் மட்டும் அதிகரிக்கவில்லை. நீலப்படங்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் மீதும் ஆர்வம் வந்தது. நீலப்படங்களில் இருவகை உள்ளன. ஒரு வகை ஆரோக்கியமானவை. எவ்வாறு ஒருவரை ஒருவர் மதித்து உறவு கொள்வது மற்றும் இருவரையும் திருப்பதி செய்வது என்பதைக் கற்பிப்பது ஒன்று. இன்னொருவகை ஆரோக்கியமற்றவை. இவை ஆண்களால் ஆண்களின் கனவுகளை ஆசைகளை மையப்படுத்திப் பெண்களைப் பண்டங்களாகக் கணித்து அவர்களைக் கஸ்டப்படுத்துபவை. பயன்படுத்துபவை. பாலியல் தூஸ்பிரயோகம் செய்பவை. ஆகவே இவ்வாறான படங்களை நாம் தொடர்ந்தும் பார்ப்பது பெண்களை இத் தொழிலை நோக்கி கடத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் சமூகத்தில் ஊக்குவிக்கின்றன. ஆகவே தவிர்க்கப்பட வேண்டியவை எனப் புரிந்து கொண்டேன்.women abuse

ஒரு பெண்ணுடன் மட்டும் தான் காதல், உடல் உறவு மற்றும் திருமணம் என்ற கொள்கை காற்றில் பறந்தது. ஏனெனில் திருமண உறவின் பின்பும் பல காதல்கள் மலர்ந்தன. அவையும் காமம் கலந்தவையாகவே இருக்கின்றன. மனதைக் கஸ்டப்படுத்துகின்றன. வாழ்க்கையை உறவுகளை கேள்விக்குள்ளாக்குகின்றன. இது ஒரு வகையான வதை. இந்த சித்திரவதையிலிருந்து எவ்வாறு விடுவடுவது? உணர்வுகளை அடக்கி இயந்திரமாக வாழ்வதா? அல்லது எதிர்கொள்ள முடியாமல் இறந்துபோவதா? அல்லது ஒரு சவாலாக எதிர்கொண்டு புதிய அனுபவங்களைப் பெறுவதா? விடை தேடுகின்றேன்.

திருமணமான பெண்களுக்கும் திருமணத்தின் பின் வேறு ஆண்களுடன் காதல் பிறந்ததை சிறுவயதில் இருந்து கண்டுள்ளேன். ஆனால் ஆண்கள் திருமணத்தின் பின்பான பிறிதொருவருடனான தமது காதலை மதிக்கும் ஏற்கும் அதேவேளை தமது துணைவியரின் காதலை ஏற்க மறுத்ததையும் எதிர்த்ததையும் கண்டேன். ஒரு ஆணாக இதற்காக வெட்கப்படுகின்றேன். ஆனால் இதை எவ்வாறு எதிர் கொள்வது என்பதை நானும் அறியேன். நாம், ஆண்கள், பெண்களுடனான உறவில் ஏன் எப்பொழுதும் நியாமில்லாமலே நடக்கின்றோம்? சரியான வழியில் செல்வதற்கு உண்மை, நேர்மை, என்றால் என்ன என்ற கேள்வி எழுகின்றது. யாருக்கு உண்மையாக இருப்பது? யாருக்கு நேர்மையாக நடப்பது? எனக்கா? காதலுக்கா? துணைவருக்கா? உறவுக்கா? சமூகத்திற்கா? இதுவெல்லாம் கேள்விகளாகவே என்னைச் சுற்றி வருகின்றன. இந்த அனுபவங்களினால் நான் இதுவரை கற்ற தத்துவங்களும் நடைமுறையும் முரண்பட்டன. நடைமுறையை சரியான பாதையில் அமைக்க இதற்கான காரணங்களைத் தேட வேண்டி இருந்தது. புதிய தத்துவங்கள் கருத்துக்கள் பதிலாக வந்தது.

நாம் ஒரு எண்ணத்தை அல்லது ஒரு செயலை அல்லது ஒரு சூழலில் மீள மீள தொடரும் பொழுது நமது மூளையில் குறிப்பிட்ட எண்ணத்திற்கான செயலுக்கான சூழலுக்கான புதிய நியூரோன்கள் உருவாகி தமக்கான ஒரு இடத்தைப் பிடிக்கின்றன. இவை மூன்றும் மாறி மாறி நடைபெறும் பொழுது அவை தொடர்ந்து செயற்பட ஆரம்பிக்கின்றன. நாம் பிரக்ஞையின்மையாக அதனுடன் இசைந்து சென்றால் அவை நமக்குள் ஆழமாக வேரூண்றுகின்றன. இதனால் இந்த எண்ணங்கள் மற்றும் செயற்பாடுகளிலிருந்து நம்மால் இலகுவாக விடுபட முடிவதில்லை. ஆகவே இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தண்டனைகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் இவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் மட்டும் கிடைக்கவில்லை. வழிகள் உள்ளன. அதை சமூகம் நமக்கு (சிறு வயதிலிருந்து) கற்பிப்பதில்லை.

எனது நண்பர்கள் பலர் இளமையிலையே பல பெண்களுடன் ஒரே நேரத்தில் அல்லது ஒன்றன்பின் ஒன்றாக உறவு கொண்டனர். சிலர் பெண்களைக் கையாண்டார்கள். அவர்களது ஒரே நோக்கம் காமம் என்றே நினைக்கின்றேன். ஆனால் அதற்கு காதல் என்ற மூகமூடி அணிய வேண்டி இருந்தது. ஏனெனில் நமது சமூகத்தில் காமத்தின் தேவையை நேரடியாக கேட்டுப் பெற முடியாது. அதற்கு காதல் என்ற ஒரு கவசம் தேவைப்படுகின்றது. அதேநேரம் ஒரு பெண்ணிடம் காமத்தின் தேவையை கேட்டுப் பெறுவது அவளை சிறுமைப்படுத்தியும் விடலாம். காதலைக் கூறுவதைப் போல காமத்தைக் கூறுவது அவ்வளவு இலேசான காரியமல்ல. ஏன் காமத்தின் மீது இந்தளவு சுமை கட்டப்பட்டுள்ளது? அதைச் சுற்றி ஏன் இந்தளவு பயம் இருக்கின்றது? காமத்தை இயல்பான ஒன்றாக, அதாவது உணவு உண்பதுபோல், கருதுவதில் பின்வற்றுவதில் இருக்கின்ற தயக்கம் என்ன? இந்தக் கேள்விகள் இன்று எனக்குள் எழுந்தபோதும் அன்று நண்பர்களின் செயற்பாடுகள் எனக்கு உடன்பாடானதாக இருக்கவில்லை. அது தவறு என உணர்ந்தேன். ஆனால் இப்பொழுது நான் படுகின்ற கஸ்டங்களையும் அவஸ்தைகளையும் பார்க்கும் பொழுது அன்று அவர்கள் செய்தது சரியோ என்ற எண்ணம் மேலிடுகின்றது.

பெண்களுக்கு ஒருவர் மீது உள்ளம் சார்ந்த ஈர்ப்பு காதல் தான் வரும் எனவும் ஆனால் ஆண்களுக்குத்தான் உடல்சார்ந்த ஈர்ப்பு ஏற்படுகின்றது எனவும் அறிந்தேன். ஆண்கள் பெண்களின் மனநிலையைப் பெருவது சாத்தியமா? அதேவேளை எல்லாப் பெண்கள் மீது ஈர்ப்பு, காதல் வருவதில்லை. அவ்வாறு காதல் வருகின்ற ஒவ்வொரு பெண்ணுடனும் உடலுறவு கொள்ளும் பொழுது புதிய அனுபவம் கிடைக்கலாம். ஆனால் அது அக் கணம் மட்டுமே. ஏனெனில் எந்தப் பெண்ணுடனும் பிரக்ஞையின்மையாக (இயந்தரத்தனமாக) தொடர்ந்து உறவு கொண்ட பின் எல்லாம் வழமைபோல பழக்கத்திற்கு வந்துவிடும். அதில் ஒரு கிளர்ச்சி புத்துணர்ச்சி இருக்காது என அறிவு நினைவூட்டும். ஆனால் இந்த அறிவை நடைமுறையில் அமுல்படுத்த முடிவதில்லை. ஏனெனில் சில பெண்களைக் கண்டவுடன் அறிவு மங்கிவிடும். பிரக்ஞையின்மையாக மனதில் காம எண்ணங்களும் உடலில் காம உணர்வுகளும் வந்துவிடும். இதற்கு காமம் தொடர்பாக நமது ஆழ் மனதில் இருக்கும் கனவுகளும் அதீத ஆசைகளுமே காரணம் என உணர்கின்றேன். ஆனால் இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான் என் முன் உள்ள பெரிய கேள்வி. மிகவும் சவாலானது. இதுவே இன்றைய எனது தேடல்.

ஆணாதிக்க சிந்தனையால் வழிநடாத்தப்படும் சமூக, கலாசார, மதக் கட்டுப்பாடுகளினாலும் அதன் நிர்ப்பந்தங்களினாலுமே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மட்டுமே இணைந்து வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கின்றது. இது சமூகத்தில் நிலவுகின்ற மிகவும் இறுக்கமான ஒரு கட்டுப்பாடு. இதன் மீது ஆழமான நம்பிக்கைகளும் உள்ளன. இதைப் பின்பற்றுவோர் பலர். இவர்கள் அதற்கு உண்மையாகவும் இருக்கின்றனர். இவர்களில் சிலர் பெண்களின் மீது மதிப்பும் வைத்திருக்கின்றனர். இவர்களைப் பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கும். நான் ஏன் அப்படி இல்லை என சிந்திப்பேன். ஆனால் சிலர் இவற்றை மதித்தபோதும் பெண்களை மிக மோசமாக பயன்படுத்துபவர்களும் உள்ளனர். ஆனால் இது பூட்டிய அறைகளுக்குள் வழமையாக நடைபெறுவதால் வெளியே தெரிவதில்லை. இவ்வாறான சமூக, கலாசார, மதக் கட்டுப்பாடுகள் மீது நம்பிக்கை வைக்காதவர்களில் இரு வகையினர் உள்ளனர். ஒருவகையினர் பெண்களைத் துன்புறுத்துவது பாலியல் வன்புணர்வு செய்வது என மிக மோசமான எதிர்மறையான வழிகளைப் பின்பற்றுகின்றனர். இவர்களைப் பார்க்கும் பொழுது கோவம் வரும். அதனுடன் நானும் சில கணங்களில் இப்படி இருந்திருக்கின்றேனே என நினைக்கும் பொழுது வெட்கமாக இருக்கும். குற்ற உணர்வு ஏற்படும். இன்னுமொரு வகையினர் எங்களைப் போன்றவர்கள். இந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பாளர்கள். அதனுடன் உடன்பாடு இல்லாதவர்கள். இவற்றை மாற்ற வேண்டும் என நினைப்பவர்கள். ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என விரும்புகின்றவர்கள். இவ்வாறானவர்களில் சிலர் தமது ஆளுமைகளால் சுதந்திரமான வாழ்க்கையை இப்பொழுதே வாழ்கின்றனர். ஆனால் என் போன்றோர் அவஸ்தைப்படுகின்றனர். ஆகவே ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் தான் இணைந்து வாழவேண்டும் என சமூகம் நம் மீது திணிக்கின்ற சிந்தனையின் அடி வேர் எது என்பது ஆராயப்பட வேண்டியது. இதை இன்னும் உடைக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

breathingஎனது திருமணம் சில தேவைகளுக்காக சட்டரீதியாக மட்டுமே நடந்தது. மத கலாசார சடங்குகளை மறுத்துவிட்டேன். அதேவேளை ஒரு பெண்ணுடன் மட்டும் வாழலாம் என்பதை மறுக்கவில்லை. அவ்வாறு வாழும் பொழுதுதான் அந்த உறவில் ஒரு ஆழம் இருக்கும். ஒருவரை ஒருவர் ஆழமாகவும் பல்வேறு தளங்களில் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும். இதுவே ஒரு உறவு உறுதியானதாக ஆரோக்கியமானதாக வளர்வதற்கு வித்திடும். அதுவும் இந்த உறவு பிரக்ஞைபூர்வமானதாக இருந்தால் அது ஆழமானதாகவும் உயர்வானதாகவும் இருக்கும். ஆனால் இவ்வாறான உறவு எக் காரணம் கொண்டு சமூக, கலாசார, மதக் கட்டுப்பாடுகள் மற்றும் இவற்றின் நிர்ப்பந்தங்களால் நடைபெறுவதாக இருக்கக் கூடாது. மாறாக குறிப்பிட்ட இருவரின் விருப்பத்தினால் மட்டுமே தீர்மானிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் இவ்வாறான ஒரு நிலையை அடைவதற்கு இருவரும் பலவகைகளில் பக்குவப்பட்டிருக்க வேண்டும். பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். பிரக்ஞைபூர்வமாக செயற்படுகின்றவர்களாக இருக்க வேண்டும். இதற்கு பதின்மங்களின் மத்தியிலிருந்தே சரியான வழிகாட்டல் மூலம் தியானம், காதல் மற்றும் காம அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும். இருபத்தியொரு வயது வரை அனுபவம் பெற்ற பின்னரே ஒருவர் இன்னுமொருவருடன் இணைந்து வாழ்வதற்கான தனது துணையைத் தேட வேண்டும். சமூக மாற்றம் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களும் இந்த அனுபவங்களைப் பெற்று, இந்த வயதின் பின் பங்குபற்றும் பொழுதுதான் அவர்களது சிந்தனைகள் செயற்பாடுகள் ஆரோக்கியமான முன்னேறிய பாதைகளில் செல்லலாம் என நினைக்கின்றேன்.

n880915323_4997காமத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என ஒசோ வழிகாட்டினார். தியானம் அதற்கான வழி என்றார். ஆகவே அதைப் பயின்றேன். தியானம் செய்ய முயற்சித்தேன். தியானம் செய்யும் காலம் நன்றாக இருக்கும். அதன் பின் மனதில் காமம் மீண்டும் குடி கொண்டு ஆட்டுவிக்கும். அதேநேரம் ஒரு பெண்ணிலைவாதியாக பெண்களை எவ்வாறு நோக்கக் கூடாது என்பது தொடர்பாகவும் பிரக்ஞையுடன் செயல்பட ஆரம்பித்தேன். ஆனால் ஒருபுறம் பிரக்ஞையின்மை ஒவ்வொருமுறையும் வெற்றி கண்டு பெண்களின் மீது எனது காமப் பார்வையை வீச வைக்கின்றது. மறுபுறம் குற்றவுணர்வும் இயலாமையும் சேர்ந்து என்னைப் பிழிந்து எடுக்கின்றன. இப்பொழுது காமத்தின் ஆற்றல் உடலில் குறைந்து வந்தபோதும் மனதில் அதன் ஆதிக்கம் நிறையவே இருக்கின்றது. ஒரு புறம் சமூகத்தின் ஆதிக்க எண்ணங்கள். ஆணாதிக்க கருத்துக்கள். காமத்தை அடக்கியதால் எழும் உணர்வுகளும் எண்ணங்களும். சமூகம் தந்த தவறான பாலியல் சிந்தனைகள். சாதிய, சமய நம்பிக்கைகள். மறுபுறம் இவற்றுக்கு எதிரான அல்லது சரியான நிலைப்பாட்டை நோக்கிய கேள்விகள், எண்ணங்கள், சிந்தனைகள். இவ்வாறு என்னைச் சுற்றி 360 திசைகளிலும் பல எண்ணங்களும் சிந்தனைகளும் ஒன்றுக்கு எதிராக ஒன்று சண்டைபோடுகின்றன. மல்லுக்கு நிற்கின்றன. நடுவில் நான். என்னை நல்வழியில் அல்லது சரியான வழியில் கொண்டுபோக பிரக்ஞையை மேல் நோக்கி வளர்க்க முயற்சிக்கின்றேன். ஆனால் பிரக்ஞையின்மை என்னைக் கீழ் நோக்கி கொண்டு செல்வதில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுகின்றது. இருப்பினும் நானும் விடுவதாக இல்லை. மனதின் எண்ணங்களைக் கடப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் தியானமே சிறந்த வழி. ஆனால் அதற்கு அதிகமான நேரத்தையும் வாழ்வில் ஒழுங்கையும் பங்களிப்பையும் பொறுப்புடன் கடைப்பிடுக்க வேண்டும். இதுவே என் (நம்) முன் உள்ள சவால்.

வாழ்வில் நான் மிக அருகில் அல்லது நெருக்கமாக வாழ்ந்த பெண்களை ஒரு கையில் எண்ணிவிடலாம். அம்மாவும் தங்கைகளுமே நான் கண்ட முதல் பெண்கள். அம்மா, அவரது அறியாமை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல் என்பவற்றுக்கு அப்பாலும், நான் முத்த ஆண் மகனாக இருந்தபோதும், என்னை ஒரு ஆணாதிக்க வாதியாக வளர்க்கவில்லை. சமூகம் ஒரு அண்ணனிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்குமோ அவற்றை எதிர்பார்க்காமல் என்னை விடுதலை செய்தார்கள் தங்கைகள். இருபத்தியைந்து வயது வரை இவர்களைச் சுற்றித்தான் என் வாழ்வு இருந்தது. இதேவேளை அப்பாவின் தங்கை மாமி மற்றும் சில குடும்ப பெண் உறவுகளுடன் மேலோட்டமான உறவு இருந்தது. இவர்கள் என் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள். இவர்களைவிட பாடசாலைகளில் பெண்களுடனான உறவு மிகவும் அரிதானது. எப்பொழுதும் பகைவர்களாகவே பார்ப்போம். நான் அவ்வாறு எதிர்நிலையில் இல்லாவிட்டாலும் அவர்களுடன் ஆழமான நட்புறவு இருக்கவில்லை. பல்கலைக்கழம், நாடகம், அரசியல் என எனது செயற்பாடுகள் விரிவானபோது பல பெண்கள் அறிமுகமானர்கள். யாழ் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழம், கைஸ் மாணவர் அமைப்பு, சரிநிகர், இலங்கை, கனடா என பல சூழல்களில் தளங்களில் பெண்களுடனான உறவு இருந்தது. இந்தவகையில் படுகொலை செய்யப்பட்ட செல்வி, மற்றும் தற்கொலை செய்து கொண்ட சிவரமணி மற்றும் ஈரோஸ் தோழி கௌரி ஆகியோரை இங்கு நினைவில் இருந்த விரும்புகின்றேன்.

இருபத்தைந்தாவது வயதில் காதலரும் துணைவியாரும் அறிமுகமானர். இவர் காதல் என்றால் என்ன என்பதை அனுபவத்தில் எனக்குப் புரியவைத்தார். அவ்வாறான ஒரு காதலை என்னால் இன்றும் உணர முடியாது இருக்கின்றேன். இதுவரை நான் மிகவும் நெருக்கமாக பழகிய ஒரே பெண் என்றால் இவர்தான். ஏனென்றால் இது உடல், உள்ளம், மனம், ஆன்மா என அனைத்தும் இணைந்து இயங்கும் ஒரு உறவு. நாளை நாம் பல்வேறு காரணங்களால் பிரிந்து போனாலும் இந்த வசனம் பொய்யாகிவிடாது. ஏனெனில் என்னைப் பற்றி அதிகமாகவும் ஆழமாகவும் அறிந்தவர் அவர். நானும் மிக ஆழமாக அறிந்த ஒரே பெண்ணும் இவரே. இதற்காக இலட்சிய உறவு என்று சொல்லமாட்டேன். முரண்பாடுகள் சண்டைகள் ஏற்படுவதும் உண்டு. ஆனாலும் மனம் திறந்து உரையாடி ஆனந்தமான உறவில் இருக்கின்றோம்.

அம்மா தங்கைகளுக்குப் பின் துணைவியாரின் தயாரும் சகோதரிகளும் மற்றும் அவரது சின்னம்மாவும் அவரது மகள்மாரும் தங்கையின் பெண் குழந்தைகளுமே நான் பழகிய பெண்கள். இவர்களைவிட நான் ஒரு தலையாக காதலித்த பெண்கள், நான் விரும்பியபோதும் என்னை விருப்பாத பெண்கள், அவர்கள் விரும்பியபோதும் நான் விரும்பாத பெண்கள் மற்றும் நான் பலவழிகளில் பல்வேறு காரணங்களுக்காக கஸ்டப்படுத்திய பெண்கள் என பலர் அல்லது சிலர் உள்ளனர். இந்தப் பெண்கள் ஒவ்வொருவரையும் எதோ ஒருவகையில் எனது ஆணாதிக்க சிந்தனையாலும் பிரக்ஞையின்மையாலும் கஸ்டப்படுத்தியிருக்கின்றேன் அல்லது கஸ்டப்படுத்தியிருக்கலாம். அதற்காக இன்று வெட்கப்படுவதுடன் இவர்களிடம் மன்னிப்பும் கேட்கின்றேன். ஒரு விடயம் தொடர்பாக மன்னிப்பு கேட்டால் அதை மீளவும் செய்யக் கூடாது. ஆனால் இது மிகவும் சவாலானது. இருப்பினும் அவ்வாறு செய்யாது இருக்க எனது பிரக்ஞை எனக்கு துணையிருக்கும் என நம்புகின்றேன். அதற்காக எனது பிரக்ஞையை மேலும் வளர்க்க முயற்சிக்கின்றேன்.adulthood12

பெண்களின் நட்பும் உறவும் பெண்ணிய செயற்பாட்டாளர்களின் அறிமுகமும் ஒவ்வொரு காலத்திலும் புதிய பார்வைகளைப், பாதைகளை எனக்குத் திறந்துவிட்டன. இதற்காக எப்பொழுதும் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். பெண்ணியம் என்பதை முதலில் பெண்களின் வீட்டு வேலைகளுடன் பகிர்வது என்பதே எனது புரிதலாக இருந்தது. இதன் பின் அவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது என்பதுவும் அதில் ஒன்று என்பதைப் புரிந்து கொண்டேன். மேலும் பெண்களை பண்டங்களாக குறிப்பாக பாலியல் பண்டங்களாகப் பார்க்கக் கூடாது என்பதையும், பாலியல் தூஸ்பிரயோகமோ அல்லது வன்புணர்வோ செய்யக்கூடாது என்பதையும் புரிந்து கொண்டேன். அதாவது பெண்ணியம் என்பது வெறுமனே பெண்களின் உடல் சார்ந்த விடுதலை மட்டுமல்ல. நமது சிந்தனைகளில் எழுத்துக்களில் உரையாடல்களில் இருக்கின்ற பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க சொற்களை நீக்கம் செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன். சமூகத்தில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும், அவர்கள் சுந்திரமாகவும் சகல உரிமைகளுடனும் நடமாடக் கூடிய ஒரு சமூக அமைப்பை, பண்பாட்டை, கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்பதை அறிந்து புரிந்து கொண்டேன். இவ்வாறான புரிதல்களின் அடிப்படையில் அவ்வாறான ஒரு சமூகத்தை உருவாக்குவது ஆண்களாகிய நமதும் பொறுப்பாகும். அதேவேளை இது பெண்களை மட்டும் சமூக அடக்குமுறைகளிலிருந்து விடுதலை செய்வதல்ல. மாறாக அது ஆண்களையும் விடுதலை செய்வதுடன் சமூக மேலாதிக்க சிந்தனைகளையும் இல்லாது செய்வதற்கான ஒரு நடைமுறை சிந்தாந்தமாகும். அந்தவகையில் பெண்ணியம் பன்முக சிந்தனையும் கூட.

இது எனது சொந்த அனுபவம். இப் பிரச்சனைகள் சமூகத்தில் நான் கண்டவைகள். இவற்றிலிருந்து கற்று பெற்ற தெளிவையும் அறிவையும் எனது பார்வையும் இங்கு பதிந்துள்ளேன். மேலும் நாம் பின்வரும் தலைப்புகளில் பால், பாலியல், காமம், காதல், பெண், பெண் உடல், உறவு, உடலுறவு, வன்புணர்வு, கருக்கலைப்பு, திருமணம், குழந்தை பெறுதல் மற்றும் வளர்ப்பு எவ்வாறு சமூகத்தில் பார்க்கப்படுகின்றன என்பதையும் அவை எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதையும் ஆராய வேண்டும். இப் பதிவு பெரும் மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தாவிடினும் சிறு விளக்காக ஒளிர்ந்தாலே மகிழ்ச்சி.

பி.கு: பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் – ஒரு ஆண் நிலை நோக்கு என்ற தலைப்பில் இதுவரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக ஒரு நூல் வெளிவர உள்ளது. இந்த நூலுக்கு எழுதிய என்னுரையே இது. இந்த நூலின் முன் அட்டையை உருவாக்க கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அறிமுகமும் வாய்ப்புகளும் இல்லாத ஆனால் ஆற்றலுள்ள ஒரு பெண் ஓவியருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க விரும்புகின்றேன். அறிந்தவர்கள் அறிமுகப்படுத்தவும்.

13.09.2014

எனது மின்னஞ்சல்: meerabharathy@gmail.com
படங்கள் நன்றி கூகுள். முகநூல்.
நன்றி ஏதுவரை – இதழ் 15 – http://eathuvarai.net/?p=4312

Advertisements

Responses

  1. அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. என் வாழ்க்கையை, என் எண்ணங்களை கார்பன் காப்பி போல் சித்தரிக்கிறது..

    • நன்றி ரகு சங்கரன்…
      பெரும்பான்மையான ஆண்களின் வாழ்வு இப்படித்தானே… கொஞ்சம் அப்படி இப்படி வேறுபடலாம்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: