Posted by: மீராபாரதி | September 6, 2014

நான் கண்ட ஆசிரியர்கள்….

இன்று ஆசிரியர்கள் தினமாம்….
இன்று நான் இப்படி இருப்பதற்கு எனது தவறுகள், பொறுப்பற்றதன்மைகள் என்பவற்றுக்கும் அப்பால் பெற்றோர்களினது  அதன் பிறகு ஆசிரியர்களினதும் பொறுப்பின்மையே காரணம் என்பேன்…
சில பேர் தங்கள் ஆசிரியர்களைப் பற்றி புகழ்கின்றபோது பொறாமையாக இருக்கும்….
எனக்கு அப்படி ஒருவர் கிடைக்கவில்லையே என…
ஏனெனில் இதுவரை நான் மதிக்கின்ற பின்பற்றக் கூடிய ஆசிரியர் ஒருவரைக் கண்டதில்லை… ஆகவே இன்னும் தேடல் தொடர்கின்றது…

இருப்பினும்….

எனது சிறுவயது முதல் பல ஆசிரியர்கள் எனது வளர்ச்சிக்குப் பங்களித்திருக்கின்றார்கள்….
முதலாவது அட்டன் கைலன்ஸ் கல்லுரியில் கற்பித்த கணேசன் மாஸ்டர் அவர்கள். ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை தனது மாலை நேரத் தனிப்பட்ட வகுப்புகளுக்கு என்னிடம் பணம் வாங்கியதில்லை. நான் கொடுக்கும் போது மட்டும் வாங்கிக்கொள்வார். மற்றும்படி கேட்டு கஸ்டப்படுத்தியதில்லை….

அட்டன் கைலன்ஸ் கல்லுரியின் கணேசன் மாஸ்டரைத் தவிர முருகையா மாஸ்டர் (சுடரின் தந்தை), தமிழ் கற்பித்தார்… இரத்தினசிங்கம் சேர் ஆங்கிலம் கற்பித்தார்… ….காலம் சென்ற இராமலிங்கம் சேரும் டீச்சரும் ( குகனின் பெற்றோர்) காலம் சென்ற சிற்றம்பலம் சேரும். தமிழ் மற்றும் சமயம் கற்பித்தனர்…. சமூக கல்வி கற்பித்த கந்தவனம் டீச்சர் (கோணேசின் உறவினர்). ஆறாம் வகுப்பில் பத்மா டீச்சர் (இப்பொழுது கனடாவில் இருக்கின்றார்) விஞ்ஞானம் கற்பிக்க ஆரம்பித்த பின்தான் எனக்கு கற்பதில் ஆர்வம் ஏற்பட்டது….
பின் வாங்கிலிருந்து படிப்படியாக முன்வாங்குக்கு முன்னேற காரணமானவர் இவர்…

இவர்களில் கணேசன் மாஸ்டரைத் தவிர மிகுதி அனைவரும் யாழைச் சேர்ந்தவர்கள்.
எல்லா வாத்தியார்களிடமும் அடி வாங்கியிருக்கின்றேன்… அடி என்றால் சும்மா அடி இல்லை…. கையில் தழும்பு ஏற்படுகின்ற அடி…. சிலர் நான் இன்னாரின் மகன் என்பதற்காக நன்றாகப் படிக்க வேண்டும் என்று அடிப்பார்கள்… சிலர் அவரின் மகனாக இருந்து இவ்வளவு மொக்காக இருக்கின்றாயே என்று அடிப்பார்கள்…

எங்களுக்கு வெளியே பிராக்குப் பார்ப்பதில்தான் அதிக அக்கறை…
இரண்டு இளம் வாத்தியமார்கள் ஒரு இளம் டீச்சரின் முன்னும் பின்னும் முட்டிக் கொண்டு அவருக்கு கொடுக்கின்ற தொல்லைகளை கஸ்டங்களை ரசிப்போம்… டீச்சரும் ஒரு நாளும் எதிர்த்து நாம் கண்டதில்லை…. சிரித்துக் கொண்டு இருப்பா…

அதிபருடன் நான் நெருக்கம்… ஆனால் அவர் என்னைப் கற்பதற்கு ஊக்குவிப்பதற்குப் பதிலாக…. அவரது வீட்டு வேலைகள் செய்வதற்கே என்னைப் பயன்படுத்தினார்… அந்த சிறு வயதில் கூட நீண்ட தூரம் நடந்து அவர் வீட்டுக்கு முட்டை வாங்கிவருவேன்… அவரின் பின்னால் இழுபட்டு அவர் வணக்கும் சாமியாருக்கு பணிவிடை செய்தேன்…

புதிய அதிபர் வந்தார்… பல கட்டுப்பாடுகள் விதித்தார்… மாலை நேர வகுப்புகளுக்கு செல்லவிடாமல் தடுத்தார்… மீறிச் சென்றவர்களை தண்டித்தார்…
நாம் அவருக்கு நேரம் பார்த்து பட்டாசு கொளுத்தி போட்டோம்…
பஞ்சலிங்கம் சேர் … ஜே ஆரின் ஓவியத்தை டைப்பிரைட்டரில் வரைந்து வாழ்த்துப் பெற்றவர்…. நாங்கள் தான் பாட்டாசு கொழுத்திப் போட்டோம் என அறிந்து எங்களை அடித்து தண்டித்தார்… இவர் அடிக்கும் பொழுது தொங்கித் தொங்கித்தான் அடிப்பார்… அதிகம் வலிக்க வேண்டும் என்பதற்காக இருக்கும்…

இதன் பின் யாழ் சென்றோம் அகதியாக….
கற்க வேண்டும்…. கையில் பணம் இல்லை… யாழ் பிரதான வீதியிலிருந்த பொன்ட் டீயுட்டரியில் சென்று கேட்டேன். பொன்ட் மாஸ்டர் எந்தப் பணமும் வாங்காமல் வந்து படி என அனுமதி தந்தார்… இதன் பின் உயர்தரம் முடிக்கும் வரை அவரது டீயுட்டரியில் படித்தேன்… பணம் கிடைக்கும் போது மட்டும் கட்டினேன்… ஒரு நாளும் பணம் தராமல் வரவேண்டாம் என்று சொன்னதில்லை…
இங்கு யாழ் இந்து ஆசிரியர் மகாதேவா சேரிடம் இரசாயணம் கற்றேன்… மிகவும் விளக்கமாக கற்பிப்பார்… தனது பாடசாலை மாணவர்களை இந்த வகுப்புகளில் அனுமதிக்க மாட்டார்….தான் பாடாசலையில் கற்பது விளங்கவில்லையா எனக் கேட்டு திருப்பி அனுப்புவார்.

இதற்கு மாறாக நான் தற்காலிகமா உயர்தரம் கற்ற யாழ் மத்திய கல்லூரியில் ஒரு வாத்தியார் இருந்தார்… இவரும் இரசாயணம் கற்பிப்பவர்.. பாடசாலையில் ஒழுங்காக கற்பிக்க மாட்டார்… தனது மாலை நேர வகுப்புகளுக்கு பணம் கொடுத்து வரச் சொல்வார்…அங்கு விரிவாக விளக்கப்படுத்துவதாக பாடசாலை நேரத்தில் வகுப்பில் வைத்துக் கூறுவார். நான் ஒரு முறைதானும் அவரிடம் சென்றதில்லை… அதனால் என்னுடன் அவருக்கு கோவம்… நான் சித்தியடைய மாட்டேன் என்று நம்பினார்… சித்தியடைந்ததை சொன்னபோது நம்மவில்லை.. ஆச்சரியப்பட்டார்….

உயர் தரம் இரண்டாம் தவணைக்காக படிக்கும் பொழுது பேராசிரியர் சிவத்தம்பியின் சிபார்சின் பெயரில் மாஸ்டர் ன்ஸ்டிடியுட்டில் கற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது… இங்கு நல்லையா மாஸ்டரிடம் கணிதம் கற்றேன்… அதிகம் கணக்குகள் கற்பிக்க மாட்டார்… ஆனால் கற்பிக்கும் நாளைந்து கணக்குகளும் எங்களுக்கு விளங்கிவிட்டால் சித்தியடைவதற்கு போதுமானது…. ஒரு கையில் சிகரட்டுடன் அழகாக கற்பிப்பார்… நான் நல்ல பரிட்சை முடிவுகள் எடுப்பேன் என எதிர்பார்த்தார்… ஆனால் அவரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியவில்லை…. என் மூளைக்கு சென்றது அவ்வளவு தான் …

பல்கலைக்கழகம் சென்றபோது… பல பேராசிரியர்கள் அறிமுகமானார்கள்… இராசாயணப் பேராசிரியர் மகேஸ்வரன் நான் மதிக்கின்ற ஒருவர்…. இதேநேரம் நான் மலையகத்தில் இருந்து வந்தவன்.. எங்களுக்கு மாஸ்டர் எனக் கூப்பிட்டே பழக்கம். பழக்க தோசத்தில் ஒரு பேராசிரியரை மாஸ்டர் எனக் கூப்பிட்டேன். அதற்காக என்னைத் திட்டினார்… இதைவிட என்னைப் பெயர் சொல்லி அழைத்திருக்கலாம் என்றார்… நான் முழித்துக் கொண்டு இருந்தேன்… பல பேராசிரியர்கள் மாணவர்கள் சித்தியடைவதில் அக்கறை கொள்ளவில்லை…. மாறாக தமது திறமையை வினாத்தாள்களில் காண்பித்து மாணவர்கள் சித்தியடையாமல் பார்த்துக் கொள்ளவதிலையே குறியாக இருந்தார்கள்… சில மாணவர்களைப் பழிவாங்கினார்கள்…..

கொழும்பு பல்கலைக்கழம் வந்தபோது பல இனவாத பேராசிரியர்கள் இருந்தார்கள்… குறிப்பாக ஜாதிக்க சிந்தனையின் போதகர் நளின்டி சில்வா மற்றும் இப்பொழுது மகிந்தவின் ஆலோசகராக இருக்கின்ற ஆப்பாசிங்க போன்றோர். இவர்கள் இனவாதிகளாக இருந்தபோதும் எங்கள் பரிட்சைத்தாள்களில் கை வைக்கவில்லை…. மேலும் அனைத்து மாணவர்களும் சதாரண சித்தியாவது அடைய வேண்டும் என்பதில் சிங்களப் பேராசிரியர்கள் அக்கறையாக இருந்தார்கள்… தமது திறமையைக் காண்பித்து மாணவர்கள் சித்தியடையாமல் இருப்பதற்கு வழி செய்யவில்லை…. ஆகவே அவர்கள் கற்பிப்பதை விளங்கிக் கொண்டாலே போதுமானது… மேலதிகமாக புள்ளிகள் பெற்று சித்தியடைய வேண்டுமானால் தான் மாணவர்கள் சிறு கடின முயற்சி செய்தால் போதுமானது…

ஆனால் கொழும்பிலும் தமிழ் பேராசிரியர்கள் மாணவர்களைக் கஸ்டப்படுத்தியதையே அறிந்தேன்….
ஒரு ஒடுக்கப்பட்ட ,விடுதலைக்காக போராடுகின்ற சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களிடமிருந்து மாணவர்கள் மீது அக்கறை கொண்ட முன்னுதாரணமான பேராசிரியர்களை நான் காணவில்லை…….
இது மிகவும் தூர்ப்பாக்கியமானது…
அவ்வாறு ஒருவர் இருந்தால் அது மறைந்த பேராசிரியர் ராஜினியாக இருக்கவேண்டும்… அல்லது பேராசிரியர் துரைராஜாவாக இருக்க வேண்டும்… அப்பொழுது அவர் துணவேந்தராக இருந்தார்.. ஒரு நாள் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அதன் பின் யாழில் தொடர்ந்து கற்பதற்கான சூழல் எனக்கு இருக்கவில்லை…. நல்லதொரு பேராசிரியரின் அறிமுகத்தை தவறவிட்டேன்.
05.09.2014

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: