Posted by: மீராபாரதி | July 18, 2014

தேர்தல் 2015: தமிழ் பேசும் மனிதர்கள் என்ன செய்ய வேண்டும்?

2010 ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை இது. தேசம் நெட் இணையத்தில் வெளியாகியிருந்தது.
இந்த முறை தேர்தலுக்கும் இந்தக் கட்டுரை பொறுத்தமானதாகையால் இங்கு மீள பதிவு செய்கின்றேன்.
தேர்தல் 2010: தமிழ் பேசும் மனிதர்கள் என்ன செய்ய வேண்டும்? : மீராபாரதி


Mahinda_Posterபுலித் தலைமையின் தனிமனித வழிபாட்டு மற்றும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இராணுவக் கண்ணோட்ட செயற்பாட்டாலும், பிரக்ஞையற்ற மற்றும் துரோநோக்கில் சிந்திக்காத ஆனால் உணர்ச்சிபூர்வமான வழிமுறையால் மனிதர்களின் உணர்ச்சிகளை சுரண்டி, மேலும் ஆயுத அதிகாரத்தின் மூலம் விடுதலைப் போராட்ட தலைமையைக் கைப்பற்றி, இறுதியாக தம்மை நம்பிய மனிதர்களை அரசியல் அநாதைகாளாக்கிவிட்டு போராட்டத்தையும் தோல்வியுறச் செய்துவிட்டு சென்றுவிட்டனர். மேலும் பல சிறுவர்களையும் இளம் தமிழ் சமூகத்தையும் சிறிலங்கா அரசினதும் அதன் இராணுவத்தின் பிடியிலும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். இவர்கள் எல்லாம் சிறிலங்கா அரசினால் எப்படி உருவாக்கப்படுவார்கள் என்று யாருக்கு தெரியும். இதனால் இன்று தமிழ் பேசும் இலங்கை வாழ் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மனிதர்கள், தமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அல்லது தற்காலிகமாகவேனும் விடுதலைப் போராட்டம் அடக்கப்பட்ட நிலையில் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே பிறரிடம் கையேந்தி நிற்கும் பரிதாப நிலை. இந்த நிலையில் இவர்கள் கேட்பதெல்லாம் தமது குடியிருப்புகளில் நிம்மதியாகவும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு பாதுகாப்பாகவும் பயமின்றி சுதந்திரமாகவும் வாழ்வதற்கான சூழலையே. இப்படி இவர்கள் எதிர்பார்க்கும் நிலையில் இதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாது சிறிலங்கா அரசினால் இவர்கள் மீது (ஜனாதிபதி) தொடர்ச்சியாக தேர்தல்கள் திணிக்கப்பட்டு வருகின்றது. இத் தேர்தல் தேவையில்லாத ஒரு தேர்தலாக இருந்தபோதும் விருப்பமின்றி எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் தமது அடிப்படைத்தேவைகளுக்காக குரல் கொடுக்கவும் அரசியல் அபிலாசைகைளை அடையவும் தம்மை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் தலைமையின்றியும் தமிழ் பேசும் மனிதர்கள் வாழ்கின்றனர். இதனால் ஒருவகையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.

இலங்கையில் வாழும் மனிதர்கள் குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்கள் இடம் பெயர்ந்தும் இராணுவ அதிகாரத்திற்குள்ளும் மனித உரிமைகள் அற்றும் வாழும் இந்த நேரத்தில் தேர்த்ல் ஒன்று அவசியமற்றது. மனித வாழ்வைப் பற்றி அரசியல்வாதிகளுக்கு என்ன கவலை. அவர்களைப் பொறுத்தவரை பதவி அதன் காலத்தை முடிந்தவரை நீட்டிச் செல்வது. எதிர்கட்சிக்கும் பதவியைக் கைப்பற்றுவது. தேர்தல் காலம் வந்துவிட்டால் சாதாரண மனிதர்கள் மீது என்றுமில்லாத அக்கறை அரசியல் வாதிகளுக்கு வந்துவிடும். எல்லாவிதமான வாக்குறுதிகளையும் அள்ளிவீசுவர். தாம் ஏன் தேர்தலில் நிற்கின்றோம் அல்லது ஏன் குறிப்பிட்ட ஒருவரை ஆதரிக்கின்றோம் என்பதற்கான தமது தர்க்கநியாயங்களை (அது மிக அநியாயமான நியாயங்களாக இருந்தபோதும்) முன்வைப்பர். அதற்காக உறுதியுடன் வாதிடுவர். இந்த அரசியல்வாதிகளால் எப்படி இப்படி மாறிமாறி முன்னுக்குப்பின் முரணாக கதைக்க முடிகின்றது என்பது எனக்குள் எப்பொழுதும் இருக்கின்ற ஒரு பெரிய கேள்வி. இந்த போக்குக்கு தமிழ் சிங்களம் பால் சாதி என்ற வேறுபாடுகள் இல்லை. அனைத்துபிரிவு அரசியல்வாதிகளும் ஒரே போக்குடையவர்களே. ஒரே குட்டையில் உறியவர்கள்.

தேர்தல் களத்திலோ குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில், பிரதானமாக தேர்தலில் எந்த சிங்கள பேரினவாத தலைவரை தெரிவு செய்வது என்பது தொடர்பான விவாதமே நடைபெறுகின்றது. சிலர் மகிந்தவை பலப்படுத்துவதே நமது (தமிழ் பேசும் மனிதர்களின்) தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும் எனக் கூறி ஏற்கனவே ஆதரவு வழங்கியுள்ளனர். மகிந்த புலிகளை தோற்கடித்தமை இவர்களது நன்றிக் கடனுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். வேறுசிலரோ இன்னும் ஒருபடி மேல் சென்று பொன்சேகாவை உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக ஆதரிக்கின்றனர். இதன்மூலம் ஒரு இராணுவ தலைவரின் ஆட்சியை இலங்கையில் முதன்முறையாக ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக நிற்கின்றனர் என்ற உண்மையை உணர மறுக்கின்றனர். இதுவரை புலிகளின் தலைமையின் வழிகாட்டலில் செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முதன் முதலாக தமது சொந்த புத்தியில் முடிவெடுக்கவுள்ளனர். இவர்களது முடிவும் இரண்டு கட்சிகளில் ஒன்றை ஆதரிப்பது அல்லது தனித்து தாமும் போட்டியிடுவது என்பதாகவே இருக்கின்றது. எந்த ஒரு தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் பேசும் மனிதர்களின் இன்றைய யதார்த்தத்தையோ அல்லது அவர்களது அரசியல் அபிலாசைகளை எதிர்காலத்திலாவது அடைவதற்கு ஏற்றவாறான அரசியல் முடிவுகளை எடுப்பதாக தெரியவில்லை.

இலங்கை சுந்ந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசிய கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் வாக்குறுதிகளை நம்பி இரண்டில் ஒரு கட்சிக்கே மாறி மாறி தமிழ் பேசும் மனிதர்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தலைமைகளுட் ஆதரவு செய்து வருகின்றனர். இதற்கான காரணம் இவர்களது சிந்தனை மற்றும் வர்க்கம் சார்ந்ததாகவே இருக்கின்றது என்பதை யாரும் புரிந்துகொள்ளலாம். இன்றும் சிறிலங்காவின பிரதான கட்சிகள் இரண்டின் தலைவர்களும் தமிழ் பேசும் மனிதர்களுக்கு பிச்சை கொடுப்போம் என வழங்கிய உறுதி மொழிக்காக சில தமிழ் தலைவர்கள் தமது ஆதரவை வழங்குகின்றனர். தேர்தலின் பின் அந்த பிச்சையைக் கூட வழங்காதுவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது நாம் கடந்தகால அனுபவத்தில் இருந்து கற்றது. ஆனால் இது தமிழ் தலைவர்களுக்கு இன்னும் புரியமால் இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது. ஏன் தமிழ் பேசும் தலைமைகள் புதிதாக சிந்திக்க மறுக்கின்றனர்.

மனிதர்கள் எந்த இழி நிலையில் வாழ்ந்தபோதும் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தீர்மானிக்கும் திணிக்கும் அரசியலில் தவிர்க்க முடியாதவாறு பங்குபற்ற வேண்டிய சூழல். நிர்ப்பந்தம். ஆரசியல் வாதிகளின் வாக்குறிதிகளை நம்பியும் ஊடகங்களின் பக்கச் சார்பான செய்திகளின் அடிப்படையிலும் மற்றும் ஆயுதபாணிகளின் மிரட்டலினாலும் தம்முள் குடியிருக்கும் பயத்தினாலும் போட்டிபோடுகின்றவர்களில் மோசமானவர்களில் அதாவது கெட்டவர்களில் நல்லவர்களை தேடுவர். ஓப்பிட்டளவில் நல்லவர்கள். அல்லது யார் குறைந்த கெட்டவர் என்று கணிப்பிட்டு தம் வாக்கையளிப்பர். இவ்வாறான முடிவுக்கு வருவதற்கு மேற்குறிப்பிட்டவாறு பல காரணிகள் இவர்களை நிர்ப்பந்திக்கின்றன. மறுபுறம் இந்த ஐனநாயக தேர்தல்கள் சிறுபான்மைக்கு எதிரானதாகவே என்றும் இருக்கின்றது. ஒப்பிட்டளவில் பிற அரசியல் அணுகுமுறைகளைவிட ஜனநாயக முறைமை நல்லதாக இருந்தபோதும் நியாயமானதாக இல்லை. ஏனனில் தேர்தல் வெற்றியின் பின் தோற்கடிக்கப்பட்ட சிறுபான்மையின் குரல்கள் ஏதோ ஒருவகையில் நசுக்கப்படுகின்றன. இருந்தபோதும் சிறுபான்மைக் குரல்களுக்கு தம்மை நியாயமாக பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய சிறந்த ஒரு முறைமை கண்டுபிடிக்கும்வரை இந்த தேர்தல்களில் பங்குபற்றுவதை தவிரவேறு வழிஇல்லை.

இந்தடிப்படையில் நீண்ட காலம் தமது பல உறவுகளின் உயிர்களை இழந்து தமது சுயநிர்ணைய உரிமைக்காக போராடிய தமிழ் பேசும் மனிதர்களுக்கு இந்த தேர்தல் முக்கியமானது. அரசியல் தலைமையற்ற தமிழ் பேசும் மனிதர்கள் குறிப்பாக இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமது அரசியல் செய்தியை உறுதியாக வெளியுலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய சூழலில் வாழ்கின்றனர். ஏனனில் இம் மனிதர்களை நீண்டகாலமாக எந்த ஒரு அரசியல் தலைமையும் உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சந்தர்ப்பவாத அரசியல்வதிகளும் ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களுமே அதன் தலைமையுமே தமிழ்பேசும் மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்தின. உண்மையான அரசியல் தலைமையற்ற அநாதைகளாகவே தமிழ் பேசும் மனிதர்கள் நீண்டகாலமாக வாழ்கின்றனர். அந்தடிப்படையில் இன்றைய தேர்தல் முக்கியமானது.

ஆயுதப் போராட்டம் தற்காலிகமாகவேனும் தோற்கடிக்கப்பட்டதால் (இனியும் ஒரு ஆயுதப் போராட்டம் வேண்டாம்) இனிவரும் காலங்களில் தமிழ் பேசும் மனிதர்கள் தமது ஐனநாயகபூர்வமான அரசியல் செயற்பாடுகளுடனையே தமது உரிமைகளுக்காக போராட வேண்டியுள்ளது. தேசங்கள் என்பது கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியல் வடிவம். இதனடிப்படையில் இலங்கையில் இனமுரண்பாடும் இன ஒடுக்குமுறையும் இருக்கின்றது என்பதுடன் ஒரு தேசம் இன்னுமொரு தேசத்தை ஆக்கிரமித்துமுள்ளது என்பதில் நியாயமாக சிந்திக்கின்ற எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இன்றைய தேர்தல் சிங்கள தேசம் தமிழ் தேசத்தின் மீது திணித்திருக்கும் ஒரு தேர்தல். இதில் தமிழ் பேசும் மனிதர்கள் தமது பிரதிநிதியாக ஐனாதிபதிபதிவிக்கு ஒருவரை போட்டிக்கு நிறுத்துவதில் அர்த்தமில்லை. மாறாக சிங்கள தேசத்தின் எந்த பிரதிநிதியுடன் நாம் சேர்ந்து வேலைசெய்தால் தமது அரசியல் அபிலாசைகளை சாதாரண சிங்கள மனிதர்களுக்கும் வெளி உலகுக்கும் புரியவைக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதே முக்கியமானது. ஏனனில் பெண்ணியவாதிகள் குறிப்பிடுவதுபோல் துரதிர்ஸ்டவசமாக அடக்கப்பட்ட மனிதர்கள் தம்மை அடக்கும் மனிதர்களுக்கு மீள மீள தம்மீதான அவர்களது அடக்குமுறையை புரியவைக்க வேண்டி நிலையிலையே தொடர்ந்தும் உள்ளனர். இவ்வாறு செய்வதற்கு எந்த சிங்கள தலைமைகளுடன் கூட்டு வைக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதே நல்லது.

சிறிலங்காவின் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகளையும் அவர்களது வாக்குறுதகளையும் இதுவரை நம்பியது போதும். இன்று அவர்கள் தருவதாக கூறும் பிச்சையும் தமிழ்பேசும் மனிதர்களுக்குத் தேவையில்லை. மேலும் இன்று தமிழ் அரசன் எல்லாளனை (பிரபாகரனை) தோற்கடித்த சிங்கள அரசனான துட்டகைமுனுவாக வலம் வரும் கருதப்படும் மகிந்தவே (சரத் அல்ல) இத் தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது சந்தேகமில்லை. தமிழ் பேசும் மனிதர்களின் பிரச்சனை தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதல்ல. மாறாக நமது அடிப்படைய உரிமைகளை யார் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள் என்பதே. தமிழ் பேசும் மனிதர்கள் கேட்பதெல்லாம் தமது அடிப்படை உரிமையையே. அதாவது சுயநிர்ணைய உரிமையையே. இதுவே தமிழ் பேசும் மனிதர்களை சுதந்திரமானவர்களாகவும் ஜனநாயக உரிமைகளுடனும் வாழ வழிவகுக்கும். இந்தக கோரிக்கைகளை எந்தக் கட்சி ஏற்கின்றதோ அவர்களையே தமிழ் பேசும் மனிதர்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் தமிழ் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறனா ஒரு கட்சி சிறிலங்காவில் இருக்கின்றது என்றால் அது விக்கிரமபாகுவின் தலைமையில் செயற்படும் நவசமசமாஜக் கட்சி மட்டுமே. இவர்கள் மட்டுமே தமிழ் பேசும் மனிதர்கள் அவர்களை தேர்தல் காலங்களில் கணக்கெடுக்காமல் தூக்கி ஏறிந்தபோதும் தமிழ் பேசும் மனிதர்களின் அடிப்படை உரிமைக்காகவும் சுயநிர்ணைய உரிமைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்துள்ளனர். தமிழ் பேசும் மனிதர்கள் பல தேர்தல்களில் தம்மை பல தடவைகள் நிராகரித்தார்கள் என்பதற்காக பிற கட்சிகளைபோல் (ஏன் தமிழ் பேசும் மனிதர்களுக்காக போராடிய இயக்கங்களைப் போல் கூட) தமது கொள்கைளை காவுகொடுக்காமால் தொடர்ந்தும் உறுதியாக முன்னெடுத்துச் செல்கின்றனர். சிங்களம் பேசும் மனிதர்கள் மத்தியில் அதற்காக உறுதியுடன் குரல் கொடுக்கின்றனர். வாக்குகளைப் பெறுவதற்காக கொள்கைகளை மாற்றி அரசியல் சமரசமோ வியாபாரமோ இதுவரை செய்யவில்லை. ஆகவே தமிழ் பேசும் மனிதர்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்காது அவர்களை அரசியலில் சம அந்தஸ்துள்ளவர்களாக மதிக்கும் அதற்காக குரல் கொடுக்கும் விக்கிரமபாகுவிற்கு தமிழ் பேசும் மனிதர்கள் வாக்களிப்பதே பொருத்தமானது. அவ்வாறு இவர்களுக்கு வாக்களிக்காது விடுவது தமது எதிர்கால அரசியல் அபிலாசைகளை மட்டுமல்ல இன்றைய சூழலில் தமது அரசியல் நிலைப்பாட்டையும் வெளியுலகுக்கு தெரியப்படுத்த முடியாத நிலைக்கு இட்டுச் செல்லும்.bahu

தமிழ் பேசும் மனிதர்களே இதுவரை சிங்கள மனிதர்களை இனவாதிகளாக முட்டாள்களாக மட்டும் பார்த்தது போதும். சிங்கள மனிதர்களிலும் முற்போக்கானவர்கள் உள்ளனர் என்பதை புரிந்துகொள்வதுடன் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். தமிழ் பேசும் மனிதர்களைவிட தேசிய இனப் பிரச்சனையையும் யுத்தத்தையும் ஆழமாகவும் விரிவாகவும் பார்க்கும் பல சிங்களம் பேசும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது தமிழர்களுக்கு வியப்பானதாக இருக்கலாம். ஆனால் அது உண்மையானது என்பதை அவர்களுடன் கூட்டாக வேலை செய்யும் பொழுது புரிந்துகொள்ளலாம். இவர்களது முற்போக்கான விரிவான சிந்தனைகளுக்கு அவர்களது எழுத்துக்களும் திரைப்படங்களும் சாட்சிகளாக உள்ளன. புல விடயங்களில் தமிழ் பேசும் மனிதர்களைவிட ஆழமாகவே சிந்திக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்வது தவிர்க்க முடியாதது. ஏப்படி இன்றைய தமிழ் அரசியல்வாதிகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் பேசும் மனிதர்களை மதிப்பீடு செய்ய முடியாதோ அதேபோல் சிங்களம் பேசும் மனிதர்களையும் இன்றைய சிங்கள அரசியல்வாதிகளைக் கொண்டு மதிப்பீடு செய்யமுடியாது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வது சிறந்தது. ஆகவே தமிழ் பேசும் மனிதர்களே சிங்களம் பேசும் மனிதர்களை எதிரிகளாக பார்த்ததுபோதும். இனி அவர்களை ஆகக் குறைந்தது சிங்கள முற்போக்கான மனிதர்களையாவது நட்புடன் பார்ப்போம். சிங்கள முற்போக்காளர்களுடன் கூட்டுவைப்போம். தமிழ் குறுந்தேசியவாத மற்றும் சிங்கள பேரினவாத சக்திகளைப் புறக்கணிப்போம். இவ்வாறன ஒரு கூட்டுச் செயற்பாடே அடக்கப்படும் தமிழ் பேசும் மனிதர்கள் மட்டுமல்ல சுரண்டப்படும் தமிழ் சிங்கள தொழிலாளர்களும், அடக்கி ஒடுக்கப்படும் பெண்களும், இருபால் உறவுக்கு அப்பாற்பட்ட மனிதர்களுக்கும், மற்றும் அடக்கப்படும் பால்களுக்கும், குழந்தைகளுக்கும் சாதிகளுக்கும் நன்மையளிக்கும். இவர்களின் விடுதலைக்கான சுதந்திரத்திற்கான ஆரோக்கியமான பாதைகளாக அமையும்.bahu1

இதனுடன் உடன்படாதவர்கள் இவ்வாறான இக்கட்டான சூழலில் இவ்வாறன ஒன்றுக்கு ஆதரவளித்து தொடர்ந்தும் எவ்வாறு ஆரோக்கியமாக செயற்படலாம் என்பது பற்றி சிந்திப்பதே நல்லது. இன்றைய உலகமயமாக்களில் தமிழ் பேசும் மனிதர்கள் பிற மனிதக் குழுக்களுடன் இணைந்து செயற்படுவதே சிறந்ததும் முற்போக்கானதுமாகும். இதற்கு தமிழ் பேசும் மனிதர்கள் பரந்துவாழ்வதும் ஒரு சாதகமான அம்சம். இதற்கான எனது முன்மொழிவு பின்வருமாறு. இன்று புலம் பெயர் புலி ஆதரவு தலைமைகளினால் மேலிருந்து திணிக்கப்படும் நாடுகடந்த அரசிற்கான கோரிக்கையை தமிழ் பேசும் மனிதர்களிடம் திணிக்கப்படும் முறைமையை நிராகரிப்பது. எந்த ஒரு அமைப்பும் அடிப்படையிலிருந்தே அதாவது கீழிருந்தே கட்டமைக்கப்பட்டு வரவேண்டும். மேலிருந்து திணிக்கப்டும் புலிகளின் குறுந்தேசியவாத இராணுவக் கண்ணோட்ட அரசியல் தமிழ் பேசும் மனிதர்கள் மீது திணிக்கப்பட்டதனாலையே ஒரு நியாயமான விடுதலைப் போராட்டம் இன்று தோல்வி கண்டுள்ளது. அல்லது அடக்கப்பட்டுள்ளது என்பதை என்றும் மறக்காமல் நினைவிலிருத்திக் கொள்வது அனைவருக்கும் நன்மையானது. ஆகவே கீழிருந்து எவ்வாறு ஒரு அமைப்பைக் கட்டுவது என்பது தொடர்பாக சிந்திப்பதே இன்றைய தேவை.

ஒவ்வொரு மனிதரதும் அடிப்படைக் கோரிக்கை அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டு தமது இடத்தில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் ஜனநாயக அரசியல் உரிமைகளுடன் வாழ்வதே. இதேவேளை இயற்கையையும் சுற்றுசூழலையும் பாதுகாப்பது அல்லது இனிவரும் காலங்களில் மனித வாழ்வே கேள்விக்குரியதாகிவிடும். ஆகவே தமிழ் மதம் சாதி பிரதேசம் தேசம் நாடு என்பவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு அரசியல் கட்சியை அல்லது ஒரு அமைப்பை கட்டமைப்பதுதான். இந்த அமைப்பானது “மனித நல மேம்பாட்டுக்கும் மற்றும் சுற்று சூழலை பாதுகாப்பதற்குமான கட்சி அல்லது அமைப்பு” என்ற அடிப்படையில் ஒரு பொதுவான பெயரை கொண்டு அனைத்து நாடுகளிலும் இயங்க வேண்டும். உலகில் பன்முக அடக்கு முறைகளை எதிர்கொள்ளும் சகல மனிதர்களுடனும் அடிப்படை கோரிக்கைகளுடன் உடன்பட்டு கூட்டுச் சேருவதுடன் எல்லா அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதாக இனிவரும் செயற்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறன ஒரு விரிந்த பார்வையும் பன்முகச் செயற்பாடுமே இனிவரும் காலங்களில் ஆரோக்கியமான ஒரு அரசியல் செயற்பாடாக அமையும். இது தொடர்பாக தொடர்ந்தும் உரையாடுவோம்.

இதற்கு முதல் படியாக எதிர்வரும் .ஜனாதிபதி தேர்தலில்…

முற்போக்காளர்களின் பிரதிநிதியான தமிழரின் அடிப்படை உரிமைகளுக்காகவும் சுயநிர்ணைய உரிமைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்துவரும் விக்கிரமபாகுவை ஆதரிப்பது.
இதன்மூலம் சிங்கள முற்போக்காளர்களுடன் கைகோர்த்து செயற்பாடுவதற்கான செய்தியை தெரிவிப்பதுடன்.
தமிழ் பேசும் மனிதர்களின் சுயநிர்ணைய உரிமைக்கான குரல் மீண்டும் உறுதியாக ஒலிக்கச் செய்வது.
உரிமைகளக்காக போராட ஆயுதவழி இல்லாத ஆரோக்கியமான வழிகளைக் கண்டுபிடிப்பது, சிந்திப்பது…

நன்றி தேசம்நெட்
http://thesamnet.co.uk/?p=17994

Advertisements

Responses

 1. நாம் இன்று மட்டுமல்ல ;அன்றிலிருந்து நடைபெறுவனவற்றுக்கு எதிர்வினையாற்றுக்கின்ற அரசியலையே முன்னெடுக்கின்றோம். அவ்வாறான சிந்தனைப் போக்கே இருக்கின்றது.
  இதற்கு மாறாக நமது அரசியல் நிலைப்பாடுகளை முன்வைத்து செயற்படுகின்ற அரசியல் வழிமுறைகளோ சிந்தனைகளே இல்லாது இருப்பது தூர்ப்பாக்கியமானதும் கவலையானதுமாகும்.
  ஆகவே இருக்கின்ற இரண்டு பிரதான பேரினவாதக் கட்சிகளில் எந்த ஒன்றைத் தெரிவு செய்வது என்பது பற்றி சிந்திக்காமல்…
  வெளியாரின் செயற்பாடுகளில் தங்கியிருக்காமல்…. அவர்களுக்காக காத்திருக்காமல்….
  நமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கருத்துக்களை விவாதங்களை உரையாடல்களை முன்வைப்போம்.
  ஒடுக்கப்பட்டவர்களாகிய நம் செயற்பாடுகளுக்கு அரசும் வெளியாரும் எதிர்வினையாற்றும் வகையில் நாம் செயற்படவேண்டும்.
  இந்தடிப்படயில் சிந்திப்போமா…?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: